காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Tuesday, February 28, 2012

கழகங்களும் திராவிட மடமும் - 1969 தொடங்கி (இரண்டாம் பகுதி)

தமிழ் வெகுஜன உளவியல் வெறும் வறட்டு ரசனையும், பிழைப்புவாதத்தையும் கொண்டதாக மாறி இருக்கும் நிலைக்கு இந்த மொண்டு கூவித்தனமே முக்கிய காரணம். இதில் தீவிர அறிவுஜீவிகள் என்பவர்கள் கூட பணம் மற்றும் பிற சலுகைகளுக்காக தங்களை முற்றிலும் சமரசப்படுத்திக்கொண்டது மிகப்பெரும் துயரம்.
அவர்களை பற்றியும் நாம் விமர்சிக்க வேண்டியதிருக்கிறது. சென்னை சங்கமத்தில் கவிதை வாசிப்பதையும், செம்மொழி மாநாட்டில் கட்டுரை வாசித்ததையும் ஏழாவது சொர்க்கத்திற்கு இணையாக நினைத்து சுய மகிழ்ச்சி அடைந்தவர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களில் சிலர் இடதுசாரிகளாக இருந்தது தான் ஆச்சரியமற்ற கொடூரம்.

தமிழ் அரசியல் களத்தை உதிரிகளாகவும், கும்பல்களாகவும் மாற்றியதில் கருணாநிதிக்கு மிக்க பங்குண்டு. இன்னும் அதை விரித்து சொன்னால் திராவிட இயக்கத்தை பெரும் மடாலயமாக உருமாற்றி பரிணமிக்க வைத்தவர்கள் இந்த உதிரிகள். சென்னை, திருச்சி, சேலம், விழுப்புரம், மதுரை போன்ற நகரங்களில் திமுகவில் பெரும் அதிகார மையங்கள் உருவானது இந்த உதிரி அரசியலின் பரிணாம தொடர்ச்சியே. இந்த இரு கழகங்களையும் ஸ்தாபனரீதியாக முட்டுக்கொடுப்பவர்கள் இந்த கும்பல்களே. எம்ஜிஆர் காலத்திலும் அதற்கு பிறகும் இது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. எம்.ஜி.ஆரின் மரணத்திற்கு பிறகு தமிழ்நாட்டை இரு கழகங்கள் மாறி மாறி ஆட்கொள்ள இந்த முட்டுக்கொடுப்பாளர்களின் செயல்பாடே காரணம். வரலாற்றோடு ஆழ்ந்து பின்னோக்கி பயணித்தால் இது நன்றாக புரியும். ஒரு கட்டத்தில் திமுக ஸ்தாபனரீதியாக பலவீனப்பட்டதாக தோன்றும். வேறொரு கட்டத்தில் அதிமுக பலவீனப்பட்டதாக தோன்றும். ஆனால் இவையெல்லாம் வாகனத்தின் பக்க ஆடிகள் போன்ற தோற்ற மாயைகளே. இரு கழகங்களின் உதிரிகள் தொழில்முறை பங்காளிகளாகவும், அதிகார கூட்டு கண்ணிகளாகவும் இருக்கும் பட்சத்தில் தேர்தல் காலங்களில் இது காற்றை திசைமாறி வீச செய்கின்றது. மேலும் தமிழ் வெகுஜன மனோபாவத்தை கட்டமைத்து வைத்திருக்கிற ஒரு முறை மட்டுமே பதியும் நினைவகம் மாதிரியான மறதி நோய் திசை மாறி வீசும் காற்றிற்கு அதிக வேகத்தை கொடுக்கிறது. இது காலங்காலமாக ஊடகங்கள் உருவாக்கி வைத்திருக்கிற, தக்க வைத்து கொண்டிருக்கிற பிம்பம். இம்மாதிரியான வெகுஜன மனத்தை உடையாமல் பாதுகாப்பதில் இரு கழகங்களும் மிகக்கவனமாக இருக்கின்றன. இந்த இடத்தில் நான் குறிப்பிடும் விஷயம் எம்.ஜிஆர் காலகட்டத்திற்கு ஏன் பொருந்தவில்லை என்ற கேள்வி எழலாம். எம்.ஜி. ஆரை பொறுத்தவரை திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர். அக்காலகட்டம் என்பது திரைப்படத்துறை தொழில்நுட்ப ரீதியாக அதிகம் வளராத காலகட்டம். இன்றைய கோடம்பாக்கம் குவியல் போன்ற பெருங்குவியல்கள் அன்று இல்லை. அன்றைய சராசரி தமிழனை பொறுத்தவரை திரைப்படம் மட்டுமே ஒரே ஆறுதல். அந்நிலையில் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தார். திரைப்படங்களில் எல்லாவிதமான , சகலதளங்கள் சார்ந்த வேடங்களில் நடித்தார். மேலும் அவரின் உடை, கருப்பு கண்ணாடி, வெள்ளை தொப்பி போன்றவை திரை ரசிக மனங்களில் அழியாத உருவத்தை ஏற்படுத்தின. அன்றைய கட்டத்தில் தமிழ் வெகுஜன உளவியலை அதிகம் பாதித்திருந்த இந்த பிம்பம் அதற்கு தொடர்ச்சியை கொடுத்தது.மேலும் அரசியல் ரீதியாக அவரின் அணுகுமுறை, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரிடம் இல்லாத மக்கள் அணுகுமுறை, கிராமங்கள் நோக்கிய கருணை சார்ந்த திட்டங்கள், கிராம சாலைகளை நகர்புறங்களோடு இணைத்தல் போன்றவற்றை குறிப்பிடலாம். இன்றும் தமிழ் கிராமங்களில் எம்.ஜி.ஆர் உயிரோடு இருப்பதற்கு மேற்கண்டவைகளே காரணம். ஆனால் அன்றைய கட்டத்திலும் இந்த முட்டுக்கொடுக்கும் கும்பல் அதிமுகவில் ஸ்தாபனரீதியாக வலுவாக தான் இருந்தது. சந்தைமயமாகி போன இன்றைய இந்திய கல்விமுறையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் தற்போது பொறியியல் மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்களை நடத்தும் சில கல்வித்தந்தைகள் எம்.ஜி.ஆர் வளர்த்த உதிரிகளே. ஆக தமிழ் அரசியலை திராவிட கழகங்கள் தக்க வைத்துக்கொண்டிருப்பதற்கு இதுவே காரணம். இன்னொரு சூழலில் திராவிட கருத்தியலின் தற்போதைய வீச்சு குறித்தும் அவதானிக்க வேண்டியதிருக்கிறது. திராவிடத்தின் முக்கிய கருத்தாக்கங்கள் 1. பிராமணிய எதிர்ப்பு 2. இந்தி எதிர்ப்பு 3. சாதி எதிர்ப்பு 4. பகுத்தறிவு 5.பெண்ணியம்

நீதிக்கட்சியின் ஆரம்பமே பிராமணிய எதிர்ப்பில் தான் ஆரம்பித்தது. ஆனால் காலத்தின் எல்லையில் அவை சமரசத்திற்கு ஆட்பட்டன. அந்த எதிர்ப்பே குழப்பமானது. பிராமணர் - பார்ப்பனர் என்பதை வித்தியாசப்படுத்துதலில் இன்றும் அவர்களுக்கிடையில் தெளிவு இல்லை. இறுதி கட்டத்தில் திராவிடம் அவைகளை உள்வாங்க தொடங்கியது என்பது தான் வரலாற்று எதார்த்தம். எம்.ஜி.ஆர் (இவர் மேனன் என்ற பிராமணர் போன்ற உயர்ஜாதி குழுமத்தை சேர்ந்தவர்)தொடங்கி ஜெயலலிதா வரையிலான உள்கிரகிப்பு தொடர்கிறது. தி.மு.கவில் சின்னக்குத்தூசி முதல் முரசொலி மாறன் மனைவி வரை தொடர்ந்தது. இந்த இடத்தில் முரசொலி மாறனைப்பற்றி குறிப்பிட்டாக வேண்டும். கருணாநிதியின் மருமகன் என்ற தகுதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு திமுகவில் இணைந்தவர். அண்ணாத்துரை காலகட்டத்தில் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தன. அதன் காரணமாக அண்ணாத்துரை இவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க மறுத்த வரலாறும் உண்டு. இவையெல்லாம் அண்ணாவின் மறைவுக்கு பின்னர் மறக்கடிக்கப்பட்டு விட்டன. மேலும் தமிழ்நாட்டில் ஊழலை முறைப்படியாக தொடங்கி வைத்த கருணாநிதி அதற்கு துணையாக முரசொலி மாறனைத் தான் அதிகம் பயன்படுத்திக்கொண்டார். வீராணம் திட்டத்தில் பல நிறுவனங்களிடம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் இவர் மூலமாக தான் நடைபெற்றது. இன்னொரு படியாக திராவிட சிந்தனை மரபில் கருத்தளவில் இருந்த அவருக்கு திராவிட மனோபாவத்தை தக்க வைக்க முடியவில்லை. ஆறாயமுத அய்யங்காரின் மருமகனாக பிராமண குடும்பத்தில் இருந்து தான் அவரால் திருமணம் செய்ய முடிந்தது. அது மட்டுமின்றி இன்று கே.டி பிரதர்ஸ் என்றழைக்கப்படும் அவரின் இரு மகன்களும் தந்தையை ஒட்டியே நடந்து கொண்டனர். தன்னை ஒத்த படித்த, வசதிவாய்ப்பானவர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்தும் சராசரி மனோபாவத்திற்கு உட்பட்டவராகவே முரசொலிமாறன் இருந்தார். திமுகவில் அப்போது அதிகம் வாசிக்கக்கூடியவர் அவர் தான். (இரு கழகங்களும் வரலாற்றில் அறிவுஜீவிகளுக்கு என்றுமே அவர்களுக்குரிய இடத்தை அளித்ததில்லை. பழ.கருப்பையா, தமிழ்குடிமகன்,ஆலடி அருணா, வலம்புரி ஜான் ஆகியோரின் உதாரணங்களை குறிப்பிடலாம்.)அந்நிலையில் திமுகவிற்கு அன்றொரு திராவிடத்தை தாங்கும் அறிவார்ந்த முக அடையாளம் தேவைப்பட்டது. அதுவும் குடும்ப உறுப்பினராக இருப்பதில் கருணாநிதிக்கு மிக்க கவனம் இருந்தது. அதன் வெளிப்பாடு தான் முரசொலிமாறனின் திராவிட இயக்க வரலாறு என்னும் புத்தகம். இதை எந்த வரைமுறை, விமர்சன அளவுகோல்களுமற்று புகழ்ந்த அறிவுஜீவிகள் தமிழில் இருக்கிறார்கள். அவர்களில் இடதுசாரி சிந்தனையாளர்களும் உண்டு. குறிப்பாக அதில் எஸ்.வி.ராஜதுரை குறிப்பிடத்தக்கவர். தமிழுக்கு மேலைச்சிந்தனைகள், மார்க்சியத்தின் புதிய வரவுகள் குறித்து அறிமுகப்படுத்தியவர் அவர். ஆனால் திமுகவையும், முரசொலி மாறனையும் எவ்வித நேர்மையான விமர்சன அளவுகோல்களுமற்று புகழ்ந்தவர்களில் முக்கியமானவராக இருந்தார். அதன் காரணமாக அநுகூலங்களை அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. இவருக்கு அடுத்தபடியாக கோ.கேசவன். தலித் சிந்தனை மற்றும் மார்க்சியத்தின் புதிய பரிமாணங்களை முன்னெடுத்தவர். இவரும் அக்காலத்தில் திமுக சார்பான மனச்சாய்வையே கொண்டிருந்தார். குறிப்பாக திமுகவில் இருந்து வைகோ நீக்கப்பட்ட நேரம் இவரிடமிருந்து திராவிட இயக்கத்தில் பிளவு என்ற தலைப்பில் புத்தகம் ஒன்று வெளிவந்தது. அதில் வைகோ மீதான இவரின் விமர்சனம் அதிகமிருந்தது. ஆனால் 1993 நடந்த வைகோ நீக்கமும் அதன் பிறகு மதிமுகவின் உதயம் என்பதும் திராவிட இயக்க பிளவல்ல. மாறாக திமுகவில் இளவரசர் முன்னிறுத்தப்படலும், குடும்ப ஆதிக்கத்தின் தோற்றமுமாகும். ஆக கோ.கேசவன் அந்த புத்தகத்தின் தலைப்பை திராவிட இயக்கத்தில் குடும்ப ஆதிக்கத்தின் தோற்றம் என்பதாக வைத்திருக்க வேண்டும். இயக்கத்தில் பிளவு என்பது இயக்கத்தின் ஒரு பிரிவினர் அந்த இயக்கத்தின் மைய போக்கிற்கு மாறான கருத்தியலை கொண்டு தனித்தீவாக செயல்பட முற்படும் போது ஏற்படுவதாகும்.1964 ஆம் ஆண்டு இந்தியாவில் இடதுசாரி இயக்கங்களுக்கிடையே ஏற்பட்டது கருத்தியல் அடிப்படையிலான பிளவாகும். அண்ணாதுரை 1949 ல் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திமுகவை தொடங்கியதும் அடிப்படையில் கருத்தியல் பிளவு தான். ஆனால் மதிமுகவின் தோற்றம் என்பது தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேற்றப்பட்ட ஒருவரின் கோபத்தின் வெளிப்பாடு. வைகோவை அவர் போக்கில் வளர விட்டால் பிற்காலத்தில் தனக்கும் தன் வாரிசுக்கும் மிகப்பெரும் சவாலாக இருப்பார் என்பதை முன்கூட்டியே கருணாநிதி நன்றாகவே யூகித்திருந்தார். அதன் தர்க்க முடிவு தான் 1993 ஆம் ஆண்டில் வைகோ வெளியேற்றப்பட்டது. வரலாறு இன்னும் அதன் வடிவில் மிகத்தெளிவாக தான் இருக்கிறது. இருந்தும் இந்த அறிவுஜீவிகள் திராவிடம் என்ற பெயரில் திமுகவிற்கு முட்டுக்கொடுப்பவர்களாக மாறியது தமிழ் அறிவுலகின் மாபெரும் துயரம். பார்ப்பனியம் திராவிடத்தின் மாபெரும் எதிர் கருத்தாக்கமாக இருந்தாலும் தமிழ்நாட்டின் அறிவுத்துறையின் பெரும்பகுதியை பார்ப்பனமே ஆதிக்கப்படுத்துகிறது. இன்றும் தமிழ் திரைப்பட துறையில் எதிர் பார்ப்பன அரசியலை முன்னெடுக்க முடியாது. காரணம் முன்னெடுத்தால் துறையில் அவர் நிலைக்க முடியாது. ஆக எதிர்பார்ப்பன கருத்தாக்கம் மூலம் திராவிடம் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மட்டுமே அடைய முடிந்தது. மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது முற்போக்கு இயக்கங்களிடையே அகில இந்திய அளவில் ஏற்பட்ட கோரிக்கையும் அதனால் ஏற்பட்ட போராட்டத்தின் விளைவுமாகும். தமிழ்நாட்டில் ஆனைமுத்து அதை முன்னெடுத்தார். ஆக தமிழ்நாட்டில் இன்னும் பார்ப்பனியம் பல வடிவங்களில் ஆழமாகவும், நுணுக்கமாகவும் வேர்கொண்டிருப்பதற்கு காரணம் திராவிட கருத்தியலின் வீச்சு பலவீனமானதாகவும், நிறுவனமயப்படுத்தப்பட்டதாகவும் மாறியதே. அடுத்ததாக இந்தி எதிர்ப்பை எடுத்துக்கொள்வோம். பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் 1938 ல் அன்றைய சென்னை மாகாணத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்றது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அப்போராட்டத்தின் பெரும்பகுதி தமிழ்நாட்டில் மட்டும் தான் நடைபெற்றது. அன்றைய சென்னை மாகாணத்தின் மற்ற பகுதிகளான ஆந்திரா, வட கேரளா, கர்நாடகா போன்ற பகுதிகளில் அவ்வளவாக போராட்டம் நடைபெறவில்லை. அதற்கான பிரக்ஞை அங்கிருக்கவில்லை. காரணம் தமிழ் தவிர மற்ற தென்னிந்திய மொழிகள் ஹிந்தி போன்ற உச்சரிப்பை கொண்ட வரிவடிவத்தை தன்னுள் கொண்டிருப்பதே. ஆக அவர்கள் ஹிந்தி மொழி மீதான அனுதாப பார்வையை கொண்டிருந்தனர். மேலும் நீதிக்கட்சியின் உள்ளாட்சி அரசாங்கங்கள் தங்கள் ஆட்சி வரம்பிற்குட்பட்ட பள்ளிகளில் இந்தியை விருப்ப பாடமாக அறிவிக்க ஆர்வம் கொண்டிருந்தன. நீதிக்கட்சியின் சில தலைவர்கள் கூட (தமிழ் சாரா பகுதியில் இருந்த)இந்தி மொழியின் மீது ஆர்வம் கொண்டிருந்தனர். இந்த போராட்டம் 1965 ல் உருமாறியது. மிகப்பெரும் குட்டிக்கரணங்களை இட்டது. அந்த கட்டத்தில் பெரியார் காமராஜர் சார்பு நிலைப்பாட்டை கொண்டிருந்ததால் அப்போது நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிரான மனோபாவத்தில் இருந்தார். ஒரு கட்டத்தில் இவற்றை நிறுத்துவதற்கு நானே களத்தில் இறங்க வேண்டியது வரும் என்றும் எச்சரித்தார். இதற்கான அரசியல் காரணங்கள், தர்க்க நியாயங்கள் போன்றவை இன்று பெரியாரிஸ்டுகள் என்று கூறப்படுபவர்களால் முன் வைக்கப்படுகிறது. ஆனால் இது பெரியாரை பொறுத்தவரை பெரும் சறுக்கலே. அவர் 1938 ல் தான் எடுத்த நிலைபாட்டில் உறுதியாக இருந்திருக்க வேண்டும். மேலும் ஹிந்தியை பொறுத்தவரை சுதந்திர போராட்டத்தில் பல மொழிகளை பேசும் இந்தியர்களுக்கிடையே தகவல் தொடர்பிற்கான ஒருங்கிணைவை ஏற்படுத்தும் நோக்கத்தில் காங்கிரஸின் ஒரு பிரிவினரால் முன் மொழியப்பட்ட மொழி. பின்னர் சுதந்திர இந்தியாவில் அந்த பிரிவினரின் நிர்ப்பந்தமும், தந்திரமும் காரணமாக இந்தியாவின் தேசிய மொழியாக முன்னிறுத்தப்பட்டது. அதை தென்னிந்தியவர்கள் கற்று கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னையில் இந்தி பிரசார சபா ஏற்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் வட இந்திய தலைவர்கள் தென்னிந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸில் இருந்த தலைவர்கள் சிலராலும் காந்தியாலும் முன்வைக்கப்பட்டது. அப்போது தான் பரஸ்பர புரிதல் ஏற்படும் என்று வாதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் யாரும் இதை பொருட்படுத்தாமல் இந்தியை எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நிர்பந்தித்தார்கள். இந்த விஷயம் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்டு விட்டது. இன்றைய கட்டத்தில் இந்தியை தமிழ்நாடு தவிர மற்ற எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொண்டு விட்டன. தங்களின் ஆரம்ப பள்ளி வரை அதை கட்டாய பாடமாகவோ அல்லது விருப்ப பாடமாகவோ வைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் கூட தனியார் நர்சரி பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை இந்தி கற்றுத்தரப்படுகிறது. திராவிடத்தனம் தமிழ்நாட்டில் எவ்வளவு தூரம் தாக்கம் செலுத்துகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். மேலும் இந்தி பேசும் வட மாநிலங்கள் தவிர இந்தி பேசாத மாநிலங்களின் கிராமபுறங்களில் பலருக்கு இன்றும் இந்திமொழி பேச வராது. ஆக இந்திய சமூகத்தின் அடிப்படையான தொடர்பு கருதுகோள் மிகத்தெளிவாக தான் இருக்கிறது. இந்தி பேசாத மாநிலங்கள் தங்கள் மொழியின் தனித்தன்மையோடு தான் இன்றும் இயங்கி வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டு திராவிட லேபிள்களை கொண்ட கழக தலைவர்கள் தங்கள் பிள்ளைகள் இந்தியை கற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே மத்திய அரசு பள்ளிகளில் அவர்களை படிக்க வைக்கின்றனர். 1965 ல் காங்கிரஸை ஆட்சியிலிருந்து விரட்டும் மிகப்பெரும் கருவியாக திமுகவிற்கு இந்தி பயன்பட்ட நிலையில் அதற்கு மாற்றாக இருந்த ஆங்கிலம் இன்று தமிழை சிதைத்த கதையை நாம் எதார்த்தமாக கண்டுணர்ந்து வருகிறோம். இந்தி இல்லாத நிலையில் ஆங்கிலம் தமிழுக்கு மிகப்பெரும் துணைக்கருவி. ஆனால் அதை அதன் இடத்தில் தான் வைத்திருக்க வேண்டும். மாறாக கழகங்களின் வர்க்க நலன்கள் அதில் மிகப்பெரும் ஊடுபாவலை செலுத்தின. அதன் தர்க்க ரீதியான தொடர்ச்சி தான் இன்றைய பெரும் அவலம். இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே அதிகம் ஆங்கில சொற்கள் கலந்து தமிழ் பேசப்படுகிறது. வேறெந்த மொழிகளிலும் இந்த நிலைமை இல்லை. அதனால் அவர்கள் ஆங்கில புலமை இல்லாமல் இல்லை. கழகங்களின் திரை மறைவான வலுவாக்கத்தோடு இது மேலும் அதிகரிக்க செய்யப்படுகிறது. சன் என்பதில் தொடங்கி முடிவற்ற ஒன்றாக அது நீண்டு கொண்டிருக்கிறது. மேலும் மிகப்பெரும் துயரமாக தமிழ் மொழிக்கிடங்கில் ஆங்கில கலப்பு என்பது இயல்பான ஒன்றாக மாற்றப்பட்டு விட்டது. இன்றைக்கு தமிழ் மத்தியதர வர்க்கம் முதல் மேட்டுகுடி வர்க்கம் வரை முன்வைக்கும் வாதம் என்பது ஆங்கிலம் கலந்து பேசுவது எங்களுக்கு மிக இயல்பான, எளிதான ஒன்றாக மாறி விட்டது. நாங்கள் அதிலிருந்து மீள முடியாது என்பதே. இது மொழிக்கிடங்கு பாதிக்கப்பட்டதன் பிரதிபலிப்பே. பொதுவாக எந்த மொழியையும் பிறமொழி கலந்து பேசினால் அந்த மொழி முழுமையடையாது. கலக்கும் மொழியை முழுமையாக பேசி விட வேண்டும். இந்த வழக்கம் உலகின் எல்லா மொழிகளிலும் இருக்கிறது. குறிப்பாக Like பண்ணி என்பதை I like it என்பதாகவும், Call பண்ணி என்பதை I will call you என்பதாக முழுமைப்படுத்த வேண்டும். உலகின் மொழி கலப்பின் வரலாற்றை நாம் நோக்கும் போது எல்லா மொழிகளும் பரஸ்பரம் அண்டை மொழிகளை உள்வாங்கி கலந்து கொண்டு தான் முன்னகர்ந்திருக்கின்றன. ஆங்கிலம் அதிகமும் லத்தீன், கிரேக்கம், இத்தாலி போன்ற மொழிச்சொற்களை உள்வாங்கி கொண்டு தான் வளர்ந்தது. ஆனால் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் கலப்படசொற்களில் பெரும்பான்மையானவை பெயர்சொற்களே. வினைச்சொற்கள் அல்ல. தமிழில் வினைச்சொற்களே ஆங்கிலம் கலந்து உச்சரிக்கப்படுகிறது. இது மிகப்பெரும் துயரம். adjust பண்ணி Cross பண்ணி என்பதிலிருந்து தொடங்கி தற்போது Send பண்ணி வரை தொடர்கிறது. இது மேலும் தொடரும். புதிய கலப்பு சொற்கள் வந்து கொண்டேதான் இருக்கும். இங்கு ஆங்கிலமும் தமிழும் என்றைக்குமே முழுமையடைய போவதில்லை. இன்று வெறும் ஐந்து நிமிடம் தமிழில் எவராலும் பேச முடியவில்லை. குறைந்த பட்சம் ஆங்கில பெயர்சொற்களை கலந்து கூட தமிழில் பேசமுடியவில்லை. ஆங்கில வினைச்சொற்கள் கண்டிப்பாக கலந்தாக வேண்டியதிருக்கிறது. ஆக தமிழை தாங்கி பிடிப்பதற்காக இந்தியை எதிர்த்ததாக சொன்ன கழகங்கள் இன்று ஆங்கிலத்தை வைத்து தமிழை காலி செய்திருக்கின்றன. செம்மொழி திருவிழாக்கள் எல்லாம் மடியை நிரப்புவதற்காகவும், சிலருக்கு ஆய்வு கட்டுரை சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பாகவும் மட்டுமே அமைந்தன. இன்று வரைக்குமான வரலாறு இதை தெளிவாக்குகிறது. மேலும் தமிழில் பேசுவது என்பது சாதிய கட்டுமானத்தோடும் தொடர்பு படுத்திக்கொள்ளப்படுகிறது. ஆங்கிலம் கலந்து பேசினால் அவன் படித்தவன் என்றும் கலக்காமல் வட்டாரமொழியில் பேசினால் அவன் படிக்காதவன் என்றும் தராதரம் முன்வைக்கப்படுகிறது. இந்தி வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இன்றும் தமிழ்நாட்டு மத்தியதரவர்க்க, மேட்டுகுடியினர் மத்தியில் தாங்கள் இந்தியை கற்றுக்கொள்ளவில்லை என்ற ஆதங்கமும், கழகங்கள் மீதான கோபமும் இயல்பாகவே இருக்கிறது. இந்தி வேண்டுமா? என்று ஒருவேளை தமிழ்நாட்டில் கருத்து வாக்கெடுப்பு நடத்தினால் அதற்கு பெரும்பான்மை ஆதரவிருக்கலாம். அப்படியாக தமிழ் வர்க்கங்களின் உளவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆக தமிழ்நாட்டில் வரலாற்றடிப்படையில் இந்தி எதிர்ப்பு என்பது கழகங்களின் இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்கான கருவியாக மட்டுமே மாறியிருக்கிறது. தமிழை வளர்ப்பதற்காக அல்ல.

திராவிட இயக்கத்தின் சாதி எதிர்ப்பு சொல்லாடல் பார்ப்பனியம் மரபு ரீதியில்கட்டமைத்து வைத்திருக்கிற சனாதன தர்மத்தையும், சாதிய கட்டுமானத்தையும் உடைப்பதற்கான பெரும் முயற்சியே. இதன் தொடர்ச்சியில் பெரியார் பல போராட்டங்களை முன்னெடுத்தார். வைக்கம் கோயில் நுழைவு போராட்டம் கூட இதனடிப்படையில் தான் நடைபெற்றது. ஆனால் பிராமணியத்திற்கு எதிராக பிற்படுத்தப்பட்டவர்களை முன்னிறுத்தி தங்கள் உணர்வுகளை முன்னிறுத்த தவறியதாக திராவிட இயக்கங்களை தலித் அறிஞர்கள் விமர்சிக்கின்றனர். குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தலித் சிந்தனைகளை தீவிரமாக முன்னெடுத்த அயோத்தியதாசர், எம்.சி ராஜா, இரட்டைமலை சீனிவாசன் போன்ற தலைவர்கள் திராவிட நீரோட்டத்தில் தவிர்க்கப்பட்டார்கள். மிக பிந்தைய கட்டத்தில் தான் அவர்களின் உலகம் தெரிய ஆரம்பித்தது. திராவிடம் சாதி எதிர்ப்பை முன்னெடுத்த போதும் கூட இந்தியாவின் சில மாநிலங்கள் போன்று சாதியக்கூர்மை தமிழ்நாட்டில் அதிகரிக்க திராவிட கருத்தியலின் தள்ளாட்டமும் ஒரு காரணம். வெறும் பிராமண எதிர்ப்பை மட்டுமே முன்வைத்ததின் விளைவு இது. பிராமண கருத்தியல் ஊடுபாவிய தளங்கள் குறித்தும் அது பரிமாற்றப்பட்ட விதங்கள் குறித்தும் அறிவார்ந்த ரீதியில் கவனிக்க தவறியதன் விளைவே உத்தப்புரம், கொடியங்குளம், பரமக்குடி, பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, திண்ணியம் போன்றவை இன்றும் உயிர்ப்புடன் தக்க வைக்கப்பட்டிருப்பதற்கான காரணம். இன்று தமிழ் அடையாளம் திரட்சியாக இல்லாமல் வெறும் சாதியமாகவே அடையாளமிடப்படுகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் காலங்களில் தொகுதிகள் அனைத்தும் அங்குள்ள பெருவாரியான சாதியின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன.வேட்பாளர்களும் அதன் பின்னணியில் தான் தெரிவு செய்யப்படுகிறார்கள். மற்ற மாநிலங்களில் கூட இது ஓரளவிற்கு உடைந்திருக்கிறது. கேரளாவில் கூட நாராயண குரு இயக்கம் மற்றும் இடதுசாரி போராட்டங்களால் அது பெரும்பாலும் உடைந்து விட்டது.ஆனால் இன்று தமிழ்நாட்டு சாதிய கிராமங்கள் ஒடுக்குமுறை மரபுகளை தக்க வைக்க தான் போராடுகின்றன. இன்னும் பல பரமக்குடிகள் உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கிராமபுறங்களுக்கு பேருந்துகள் கூட சாதிய வர்ணம் தீட்டியே அனுப்பப்படுகின்றன. மேலும் இங்கு ஒரு விஷயத்தைப்பற்றி குறிப்பிட்டாக வேண்டும். கடந்த திமுக ஆட்சிகாலத்தில் தன்னுடைய தமிழ் முக வாரிசாக கருணாநிதியால் முன்னிறுத்தப்பட்ட கனிமொழி தன் தாய் சார்ந்த சாதி மாநாட்டில் பங்கெடுத்து தன் இனப்பற்றை வெளிப்படுத்தினார். இது அவரின் மிகப்பெரும் அவலம்.மரபான தந்தை வழி சமூக முறைப்படி அவர் கருணாநிதி சார்ந்த சாதி மாநாட்டில் தான் பங்கெடுத்திருக்க வேண்டும். ஒரு வேளை இது அவரின் பெண்ணிய சிந்தனையின் அடிப்படையிலான மாற்று எனலாம். அந்த மாநாட்டில் கலந்து கொண்டு இனி இது போன்ற நிகழ்ச்சிகளில் என்னை மட்டும் அழைக்காமல் நம் சாதி சார்ந்த படைப்பாளிகளையும் அழைக்க வேண்டும் என்றார். திராவிடத்தின் சாதி எதிர்ப்பு சார்ந்த மிகப்பெரும் குழப்பம் இது. ஆக இவ்விதமான ஒடுக்குமுறை, படிநிலை கடந்த இனமாக தமிழை முன்னெடுப்பதில் திராவிடம் தோல்வி அடைந்தது அல்லது கருத்தியல் ரீதியான தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. இன்றும் கழகங்களில் தலித் தலைவர்கள் எல்லாம் ஒடுக்கப்பட்ட ஜீவிகளாக தான் இருக்கிறார்கள்.

திராவிடத்தின் பகுத்தறிவு கருத்தியலை பொறுத்தவரை பார்ப்பனியம் முன்வைத்த வைதீகம், சனாதன தர்மம் ஆகியவற்றிற்கு எதிராக அமைந்த ஒன்று. வேறு வார்த்தைகளில் சொன்னால் பெரியார் முன் வைத்த கடவுள் மறுப்பு கொள்கை என்பதே பார்ப்பனியத்திற்கான மாற்று முயற்சி தான். ஆனால் திராவிட கழகங்களின் பரிணாம வளர்ச்சியில் அது கரைக்கப்பட்டு விட்டது. கழகங்களில் கருணாநிதி, அன்பழகன் தவிர மற்ற எல்லோரின் பகுத்தறிவும் வேள்விகள் நடத்தப்படாத குறையாக தான் இருக்கிறது. இரு கழகங்களில் உதிரிகளாகவும்,அதிகார மையங்களாகவும்., ஸ்தாபன ரீதியாக முட்டுக்கொடுக்கும் கும்பல்களாகவும் மாறி இருப்பவர்கள் எல்லோருமே மிகப்பெரும் வைதீக, சனாதன சடங்குகளை கடைபிடிப்பவர்களாக தான் இருக்கிறார்கள். அவர்களின் திருமண நிகழ்ச்சிகளே முகூர்த்த சடங்குகளுக்கு பிந்தைய ஒன்றாக தான் இருக்கிறது. அதன் பிறகு தான் கழக தலைவர்களின் நீட்டி முழங்கும் ஆவேச உரை தொடங்கும். இன்று இது மாதிரியான சம்பவங்கள் கழகங்களில் மிக லாவகமாகவும், நுணுக்கமாகவும் நடைபெற்று வருகின்றன. இதற்கு தமிழ்நாட்டு அரசு அலுவலகங்கள் கூட விதிவிலக்கல்ல. பெரும்பாலான அலுவலகங்களில் ஊழியர்களை பிள்ளையார் தான் காப்பாற்றுகிறார். ஆயுதபூஜை உட்பட எல்லா பூஜைகளும் அங்கு நடைபெற்று கொண்டிருக்கின்றன. மதசார்பின்மை பேசும் திராவிட கழகங்கள் தங்கள் முகத்தில் சுயமாக காறி உமிழக்கூடிய ஒன்று இது.இந்த இடத்தில் தனிநபர் நம்பிக்கை பற்றிய கேள்வியே எழவில்லை என்பதையும், அதற்கு இது பொருந்தாது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஆக திராவிட கழகங்களை பொறுத்தவரை பகுத்தறிவு என்பது தற்போது ஒரு வெற்று குறியீட்டு நிலையே.

பெண்ணியம், பெண் ஒடுக்குமுறையை பொறுத்தவரை பெரியார் அதற்கான வலுவான போராட்டங்களை முன்னெடுக்காத போதும் அது தொடர்பான தீவிர எழுத்தாக்க முயற்சிகளை எடுத்திருக்கிறார். பெண் ஏன் அடிமையானாள்? என்ற அவரின் நூல் அதற்கு உதாரணம். இது தொடர்பான அவரின் எழுத்துக்கள் குடியரசு, விடுதலை போன்ற பத்திரிகைகளில் காணக்கிடைக்கின்றன. மேலும் அவர் காங்கிரஸில் இருந்த காலத்தில் தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் கருத்துக்களோடு பெரும் மாறுபாடு கொண்டிருந்தார். சத்தியமூர்த்தி தேவதாசி முறை தக்கவைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை கொண்டிருந்தார். அதற்கு ஆதரவாக பல இடங்களில் பேசினார்.இந்நிலையில் அன்றைய சென்னை மாகாணத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி முறைக்கு எதிராக மிகப்பெரும் போராட்டங்கள் நடத்தினார். விளைவாக 1929 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டப்பேரவையில் இது குறித்த சட்டம் கொண்டு வரப்பட்டு தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. இருந்தும் இன்றும் இந்தியாவில் சில பகுதிகளில் அதன் எச்சம் நிலவுகிறது. கழகங்களை பொறுத்தவரை தங்கள் அமைப்பின் மகளிர் இயக்கத்தை என்றுமே சுதந்திரமாக இருக்க அனுமதித்ததில்லை. அவைகளுக்கு தீவிர பெண்ணிய சிந்தனைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்த கற்றுக்கொடுக்கவில்லை. பெண் ஒடுக்குமுறைக்கான எத்தனிப்புகளை முன்வைக்க தூண்டவில்லை.இன்று வரை உருப்படியான எந்த போராட்டங்களையும் அவை முன்னெடுக்கவில்லை. (விதிவிலக்கான தருணங்கள் கூட இடதுசாரி இயக்கங்களின் தாக்கம் சார்ந்த விளம்பர நோக்கங்கள் தான்.)மாறாக அவை அனைத்தும் அதிகார மையங்களாலும், கழக முண்ணனியினரின் கேளிக்கை பண்டமாகவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இது வெளிப்படையான ரகசியம். அண்ணாத்துரை காலகட்டத்தில் இருந்தே இது தொடங்கி விட்டது. "நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவரும் அல்ல. அவள் ஒன்றும் படிதாண்டா பத்தினியுமல்ல " என்ற வாக்கியம் அக்காலத்தில் பிரபலம். அது இன்றும் தொடர்கிறது. மேலும் கழகங்களின் மகளிரணி சேவைக்கு மதுரை முதல் கொடைக்கானல் ரோடு வரையிலான ரயில் வழித்தடம் மிகச்சிறந்த உதாரணம். சில காலம் வரை இது தொடர்ந்தது. இந்த விவகாரம் தமிழ் புலனாய்வு பத்திரிகைகளிலேயே வெளிவந்திருக்கிறது. கனிமொழி தலைமையேற்று விட்டார் என்பதற்காக திமுக பெண்ணியம் சார்ந்த சிந்தனைகளை நோக்கி நகர்ந்ததாக அர்த்தம் இல்லை. கனிமொழியின் நண்பர்கள் மட்டுமே அதன் மூலம் பலனடைந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் அதிமுகவில் ஜெயலலிதா தலைமையேற்றிருக்கிறார் என்பதற்காக அங்கு பெண்ணியம் மேலோங்கி விடவில்லை. மாறாக அதுவும் பெண் சார்ந்த குறியீடாக தான் இருக்கிறது. அந்த வகையில் திராவிட கழகங்கள் என்பவை தேவதாசி முறையை மறு உற்பத்தி செய்யும் நிறுவனங்களாக மாறி விடும் அபாயம் இருக்கிறது. ஒரே வித்தியாசம் என்னவென்றால் அந்த நிறுவனத்தில் கடவுளர்கள் இல்லை.மாறாக மனிதர்கள் இருக்கிறார்கள். ஆக திராவிட இயக்க கருத்தியல்கள் அதன் பரிணாம வளர்ச்சியில், இயக்க போக்கில் தமிழ்ச்சமூகத்தில் எந்த குறிப்பிடத்தக்க மாறுதலையும் (இட ஒதுக்கீடு தவிர)ஏற்படுத்தவில்லை என்பது வரலாற்றிலிருந்து நகர்ந்து வரும் தெளிவான விஷயம்.