உலகில் நாகரீகங்கள் மதங்களின் வரலாற்றுக்கு முன்னால் இறந்தவர்களின் உடல்கள் மீதான சடங்குகளோடு ஆரம்பிக்கப்பட்டன. இறந்தவர்களின் உடல்கள் முதலில் மண்ணில் சிறிய துளை ஏற்படுத்தபட்டு கற்களின் துண்டுகள் மீது வைக்கப்பட்டன. இது பழைய கற்காலம் என்றழைக்கப்பட்டது. காலங்களில் நீட்சியில் இது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. இப்போது உடல்கள் முழுமையான அழுகுதலுக்கு உட்படுத்தப்பட்டு எலும்புகள் மட்டும் புதைக்கப்பட்டன. இந்த காலகட்டம் நவ கற்காலம் என்று வரலாற்றாசிரியர்களால் அழைக்கப்பட்டது. இவைகள் தனிமனித அந்நியபாடு காரணமாக வழிபாட்டு பொருளாக ஒரு கட்டத்தில் மாற்றப்பட்டன. மண்டை ஓடுகள் இந்த வழிபாட்டில் முக்கிய இடம் பிடித்தன. கி.மு ஏழாம் நூற்றாண்டில் எகிப்து, பாலஸ்தீன் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்த வழிப்பாட்டிற்கான தடயங்கள் தற்போது கிடைத்திருக்கின்றன. இவ்வாறாக நாகரீகம் என்ற சொல் மனிதனின் கலாசார நடைமுறை நிகழ்வுகளோடு பரிணாமம் கொள்கிறது. புராதன மனிதனுக்கு உணவு தேவைக்கு வெளியே அதனை தக்கவைப்பதற்கான சூழல்கள் மிகுந்த சவாலான ஒன்றாக இருந்தன. மாபெரும் உழைப்பு பிரிவினை இந்த இடத்தில் தான் ஏற்படுகிறது. சமூகத்தில் இந்த பிரிவினை ஏற்பட்டு விட்ட பிறகு சுய தேவைகள் என்ற கருதுகோள் அதனில் நின்று வெளியாகிறது. சுய தேவைகள் என்ற இந்த கருதுகோளின் நீட்சியே குழுக்களுக்கிடையே முரணாக, பின்னர் போராக ஏற்படுகிறது. புராதன நாகரீகங்களை வரலாற்றாசிரியர்கள் சிந்து சமவெளி நாகரீகங்கள், அஜியன் நாகரீகங்கள், மெசோமெரியன் நாகரீகங்கள், கிரேக்க நாகரீகம், மினோயன் நாகரீகங்கள், கம்போடிய நாகரீகம் என்ற வகைப்பாட்டிற்குள் உட்படுத்துகிறார்கள். இந்த நாகரீகங்கள் ஒரு கட்டத்தில் புதிய சமூக மற்றும் பொருளாதார நிறுவனங்களை தோற்றுவிக்கும் சூழலுக்கு செல்கின்றன. மனித ஆற்றலின் பெரும் சுரண்டல், ஆளும் வர்க்கத்தின் தோற்றம், புதிய படிநிலை சமூகம் ஆகியவை இதனை பின்தொடர்ந்து ஏற்படுகின்றன. சமூக ஒழுங்குகள் அதன் பிரதிபலிப்பு நிலையில் நகர, கிராம மற்றும் அரச கடவுள்கள் வடிவில் வெளிப்படுகின்றன. அதிகாரம் மற்றும் மக்கள் இவற்றின் கூட்டுத்தொகையே அரச மதங்கள். உலக வரலாற்றில் கிறிஸ்தவம் காண்ஸ்டான்டைனால் இவ்வாறாக அரச மத வடிவில் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகான இஸ்லாத்தின் வருகை நாகரீகத்தின் இன்னொரு பரிணாம கட்டத்திற்கு சென்றது. இது அன்றைய அரேபிய பாலைவனத்தில் பழங்குடியினரின் சமூக, பொருளாதார, கலாசார நலன்கள் மீதான ஏற்றத்தோடு மேலெழுகிறது. பலகடவுள் வழிபாடு என்பதற்கு மாறாக ஓரிறை வழிபாடு முன்வைக்கப்பட்டது. இவை எல்லாமே மனித இயல்புகளுக்கு இயற்கையை மீறிய அற்புதத்தை கொடுத்த மறுபிரதிகளே.ஆக மதங்கள் நாகரீகங்களின் பிரதிபலிப்பே. கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் ஆகியவற்றுக்கிடையேயான முரண்கள் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை நடைபெற்றிருக்கின்றன. மாபெரும் சிலுவைபோர்கள் இதற்கு முக்கிய உதாரணம்.
சாமுவேல் கண்டிங்டனின் " நாகரீகங்களின் மோதல்கள்" (Clash of civilizations) என்ற நூலுக்கு பிறகு இங்கிலாந்தின் Independent பத்திரிகையின் மத்தியகிழக்கு நிருபரான ராபர்ட் பிஸ்கின் The Great war for civilization என்ற நூல் கடந்த ஆண்டு வெளியானது. ராபர்ட் பிஸ்க் லெபனானில் கடந்த முப்பது ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர். மத்தியகிழக்கு சமூக உள்ளமைப்பு குறித்து அதிகம் படித்தவர். மத்திய கிழக்கில் நடந்த பல போர்களுக்கு பத்திரிகை நிருபராக களத்துக்கு சென்று தகவல்களை சேகரித்தவர். ஒசாமா பின்லேடன், சதாம் உசேன், கொமைனி, யாசர் அரபாத் போன்றவர்களுடன் நேர்காணல் நடத்தியவர். மரபான பத்திரிகையாளர்களிடமிருந்து வேறுபட்ட பிஸ்க் 1946 ஆம் ஆண்டு பிரிட்டனில் பிறந்தவர். லேன்கஸ்டர் பல்கலைகழகத்தில் மொழியியலில் பட்டம் பெற்றவர். மேலும் டப்ளின் கல்லூரியில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார். இவரின் முதல் பத்திரிகை பணி Sunday Express ல் ஆரம்பிக்கிறது. அப்பத்திரிகை ஆசிரியரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து விலகி டைம்ஸ் பத்திரிகையில் இணைந்தார். அப்போது 1974 ஆம் ஆண்டைய புரட்சி உட்பட பல நிகழ்வுகளில் சிறந்த செய்தியாளராக பிஸ்க் இருந்தார். அதன்பின்னர் 1976 ல் டைம்ஸ் பத்திரிகையின் மத்திய கிழக்கு செய்தியாளராக பிஸ்க் நியமிக்கப்பட்டார். 1976 முதல் லெபனானில் வாழ்ந்து வரும் ராபர்ட் பிஸ்க் அர்மேனியா முதல் ஈரான் வரையிலான செய்தியோட்டத்தின் கருவியாக இருக்கிறார். நிகழ்வுகளை விமர்சன ரீதியாக அணுகக்கூடியவர் பிஸ்க். குறிப்பாக 1979 ஆம் ஆண்டைய ஈரானிய புரட்சி குறித்து டைம்ஸ் பத்திரிகையில் இவர் எழுதிய விமர்சன கட்டுரை மேற்குலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஈரான் புரட்சியின் போது நேரடியாக களத்திற்கு சென்றவர். 1980-1988 ஆம் ஆண்டின் ஈரான் -ஈராக் போரின் போது அதன் எதார்த்த நிலைமை குறித்து அதிகம் விபரங்களை வெளிக்கொணர்ந்தார். 1991 ஆம் ஆண்டில் வளைகுடா போரை வானொலி விமர்சன தொகுப்பாக கொண்டு வந்தார். அது பலரின் கவனத்தை ஈர்த்தது.அந்த தருணத்தில் ஈராக் தலைநகரான பாக்தாதில் இருந்த ராபர்ட் பிஸ்க் சதாம் உசேனை சந்தித்தார். மேலும் 2003 ஆம் ஆண்டைய ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு போரை பிஸ்க் கடுமையாக எதிர்த்தார். இதனால் மேற்கத்திய போர் ஆதரவாளர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். அந்த போரின் போது நேரடியாக ஈராக்கின் பல பகுதிகளுக்கு சென்று பல நேரடி சாட்சியங்களை பதிவு செய்தார். இதற்காக மற்ற பத்திரிகையாளர்களை பிஸ்க் விமர்சனம் செய்தார். அவர்களின் செயல்பாடு வெறும் ஹோட்டல் இதழியல் என்பதாக வர்ணித்தார். அவரின் விமர்சனம் மரபான உலக இதழியல் நடைமுறையின் மீது இருந்தது. லெபானின் உள்நாட்டு போரின் போது அங்கு நடந்த நிகழ்வுகளை சரியான முறையில் ஆவணப்படுத்தினார். 1982 ஆம் ஆண்டு லெபனானை இஸ்ரேல் ஆக்கிரமித்த போது இஸ்ரேல் அங்கு நடத்திய படுகொலைகளை ஆதாரங்களோடு வெளிப்படுத்தியவர். இதில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய இடங்களுக்கு சென்ற முதல் மேற்கத்திய பத்திரிகையாளர் பிஸ்க். மேலும் லெபனான் உள்நாட்டு போரை பற்றிய இவரின் நூல் Pity the nation, lebanon at war என்ற பெயரில் 1990 ல் வெளியானது.ராபர்ட் பிஸ்க்கின் The Great war for civilization என்ற நூல் அவரின் முப்பது ஆண்டுகால மத்தியகிழக்கு வாழ்க்கையின் பதிவார்ந்த கருவி. இந்நூலில் பிஸ்க் தேர்ந்த அறிவுஜீவியாக நின்று நாகரீகங்களையும் அதன் போர்களையும் அணுகுகிறார். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் துருக்கிய உதுமானிய பேரரசின் அர்மேனிய கிறிஸ்தவர்கள் மீதான இன ஒடுக்குமுறை தொடங்கி 2003 ன் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு வரை பதிவு செய்து விட்டு செல்கிறார். அர்மேனியர்கள் மீதான துருக்கிய ஒடுக்குமுறையை பிஸ்க் ஒரு விமர்சன கண்ணோட்டத்தில் அணுகுகிறார். சுல்தான் அப்துல் ஹமீதின் ஆட்சியில் இதற்கான தளம் வகுக்கப்பட்டது.துருக்கியின் கிழக்கு பகுதியில் இருந்த அர்மேனியர்கள் மத்தியில் இன ரீதியாகவும், மத ரீதியாகவும் தனித்துவ உணர்வு ஏற்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் சுமார் இருபது லட்சம் அர்மேனியர்கள் துருக்கிய உதுமானிய பேரரசில் வாழ்ந்தனர். இவர்களிடையே ரஷ்ய ஜாரிய தூண்டுதல் காரணமாக ஏற்பட்ட உணர்வு நிலை The bell, The union ஆகிய இரு இன அடிப்படையிலான கட்சிகளின் தோற்றத்திற்கு வழி வகுத்தது. இதனை அடக்குவதற்காக சுல்தான் அப்துல் ஹமீத் அர்மேனியர்கள் மீது தனிப்பட்ட முறையில் வரிவிதித்தார். இது அவர்களின் இன உணர்வை மேலும் அதிகப்படுத்தியது. சசான் பகுதியில் உள்ள அர்மேனியர்கள் இதற்கு எதிராக வரி மறுப்பு இயக்கத்தை நடத்தினர். இதனால் 1894 ல் அவர்களின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். அவர்களின் கிராமங்கள் பல எரிக்கப்பட்டன. இதன் எதிரொலியாக அதற்கு பிந்தைய ஆண்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அர்மேனியர்கள் திரண்ட பிரமாண்ட பேரணி இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. விளைவாக அரசுக்கு சொந்தமான வங்கி ஒன்று கைப்பற்றப்பட்டது. இந்த நிகழ்வை தொடர்ந்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட அர்மேனியர்கள் துருக்கிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்த இனப்படுகொலையின் இறுதிபகுதி முதலாம் உலகப்போர் காலகட்டத்தில் நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் காகஸ் பகுதி அர்மேனியர்களின் ஒரு குழு ரஷ்ய ராணுவத்தில் இணைத்து கொள்ளப்பட்டது. துருக்கிக்கு எதிரான ரஷ்யாவின் நிலைபாடாக அன்று அது இருந்தது. இதனால் துருக்கிய அரசானது 1,75,000 அர்மேனியர்களை நாடுகடத்த உத்தரவிட்டது. அவர்களில் ஒருபகுதியினர் சிரியாவிற்கும், மற்ற பகுதியினர் ஈராக்கிற்கும் நாடுகடத்தப்பட்டனர். இதனால் ஏற்பட்ட பஞ்சம், பட்டினி காரணமாக நாடுகடத்துலுக்கு உள்ளான பெரும்பகுதி அர்மேனியர்கள் உயிரிழந்தனர். இருபதாம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலையாக இதனை வர்ணிக்கும் பிஸ்க் இனப்படுகொலைக்கு உள்ளான அர்மேனியர்களின் சந்ததியினருடன் லெபனானில் நடத்திய உரையாடல்களை பதிவு செய்திருக்கிறார். அர்மேனிய கிராமங்களில் உள்ள ஒவ்வொரு ஆணும் , பெண்ணும் துருக்கிய காவல்துறையால் பிடித்து செல்லப்பட்டு வீதிகளில் நிறுத்தி சுட்டுக்கொல்லப்பட்டதை பலர் விவரிக்கின்றனர். லெபனானில் 91 வயதான பெண் ஒருவர் பிஸ்கிடம் முதல் உலகப்போர் காலகட்ட நிகழ்வு ஒன்றை விவரிக்கின்றார். 1915 ல் துருக்கி ராணுவத்தில் இருந்த அர்மேனியர்கள் பதவியிறக்கம் மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதில் அந்த பெண்ணின் தந்தையும் ஒருவர். 1915 ல் துருக்கிய காவல் துறை எங்கள் வீட்டில் நுழைந்தது. என் தந்தை அப்போது ராணுவ உடை அணிந்திருந்தார். துருக்கிய ராணுவத்தில் சிறந்த முறையில் பணியாற்றியவர். அந்த தருணத்தில் ராணுவத்தில் தனக்கு கிடைத்த பதக்கங்களை எல்லாம் அவர் அணிந்திருந்தார். அவர் எங்களையெல்லாம் அழைத்துக்கொண்டு கொன்ய ரயில் நிலையத்திற்கு சென்று பெய்ரூட் செல்லும் ரயிலில் எங்களை அனுப்பி வைத்தார். நாங்கள் தப்பித்தோம். அவர் அங்கேயே தங்கினார். பின்னர் அவர் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை துருக்கிய காவல்துறை கண்டுபிடித்து அவரை கொன்றது. இது மாதிரியான நிறைய வரலாற்று பதிவுகளை செய்திருக்கும் பிஸ்க் அர்மேனிய படுகொலையை மத்திய கிழக்கு வரலாற்றின் இடறாக காண்கிறார்.இந்த படுகொலைகளை நோபல் பரிசு பெற்ற ஒர்கன் பாமூக் தன்னுடைய எழுத்துகளில் விமர்சித்ததால் துருக்கிய அரசின் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேர்ந்தது.ஒசாமா பின் லேடனுடன் தனக்கான அனுபவத்தை பிஸ்க் இந்நூலில் விவரிக்கிறார்.ஒசாமாவை நேர்கண்ட ஒரு சில மேற்கத்திய பத்திரிகையாளர்களில் பிஸ்க் ஒருவர். ஜிஹாதிகளின் பாதுகாப்புடன் ஒசாமாவை சூடானின் குகைப்பகுதி ஒன்றில் சந்தித்த நிகழ்வை பிஸ்க் விமர்சகராக நின்று மதிப்பிடுகிறார். ஒசாமா மத்திய கிழக்கின் அவசரகாலகட்டத்தில் தோன்றியவர். சவூதி அரேபியாவில் பிறந்தவர். இவருடைய குடும்பம் ஏமன் பின்னணியை கொண்டது. 1979 ல் சோவியத் ராணுவம் ஆப்கானிஸ்தானை தாக்கியபோது அமெரிக்க சி.ஐ.ஏ அரபு பகுதி இளைஞர்களை ஆப்கானில் போரிடுவதற்காக அணிதிரட்டலை ஏற்படுத்த தூண்டலாக இருந்தது. சவூதி அரேபிய மன்னர் குடும்பம் இதற்கான முயற்சிகளில் இறங்கியது. அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சவூதிய உயர்குடியை சார்ந்த இளைஞரே ஒசாமா பின்லேடன். சவூதியில் பெரிய கட்டுமான மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு அதிபதி. இவரின் தலைமையில் இளைஞர்கள் ஆப்கானிற்காக தயார்படுத்தப்பட்டனர். ஒருகட்டத்தில் போர் மற்றும் ஜிஹாத் கோட்பாடு சம்பந்தமாக இவருக்கும் சவூதிய அரச குடும்பத்துக்கும் முரண்பாடு ஏற்படுகிறது. ஆப்கானில் முஸ்லிம் சமூகம் ரஷ்யாவால் கொல்லப்படுவதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்ட ஒசாமா தன் கட்டுமான நிறுவன பணம் மூலம் ஏராளமான ஆயுதங்களை வாங்கி குவித்தார். இதனால் ஒரு கட்டத்தில் சவூதிய மற்றும் மற்ற அரபு நாட்டு இளைஞர்கள் மத்தியில் ஒசாமா ஓர் ஐகானாக மாறினார்.இதனால் எகிப்து, அல்ஜீரியா, சவூதி, எமன்,குவைத், டுனிசியா, அல்ஜீரியா, பாலஸ்தீன் ஆகிய பகுதிகளை சார்ந்த அரபு இளைஞர்கள் அவர் பின்னால் திரண்டனர். இந்த கட்டத்தில் ஒசாமா ஆப்கானுக்கு நான்கு முறை பயணம் செய்திருக்கிறார். இவரின் அடுத்த கட்ட புனித போர் பற்றிய கருதுகோள் 1990 ல் சதாம் குவைத்தை ஆக்கிரமித்த போது வலுப்பட்டது. அந்த நேரத்தில் சவூதியிடம் ஒசாமா அமெரிக்காவை அழைக்க வேண்டாம். தான் சதாம் உசேனை பார்த்து கொள்வதாக சொன்னார். அதற்கு மாறாக சவூதிய அரசு அமெரிக்காவை அழைத்தது. இதனால் அவருக்கும் சவூதிக்குமான முரண்பாடு முற்றியது. மேலும் முஸ்லிம் நாடுகள் முஸ்லிம்களால் மட்டுமே பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணமே ஒசாமாவிடம் உறுதியாக இருந்தது. பிஸ்க்கு ஒசாமாவை பார்க்க தூண்டுதலாக இருந்தவர் சவூதிய பத்திரிகையாளரான ஜமால் கசோகி. இவரின் ஏற்பாட்டால் 1993 டிசம்பரில் பிஸ்க் ஒசாமாவை முதன் முதலாக சந்தித்தார். ஒசாமாவிடம் ஜமால் கசோகி ராபர்ட் பிஸ்கை அறிமுகம் செய்த போது ஒசாமா அவரிடம் "என்னுடைய சகோதரர்கள் நான்கு பேர் பற்றி நான் கனவு கண்டேன் . அதில் நீங்கள் ஒருவர் என்றார். அதற்கு ராபர்ட் பிஸ்க் மன்னிக்கவும். நான் ராபர்ட் பிஸ்க் . independent பத்திரிகையின் மத்தியகிழக்கு நிருபர். லெபனானில் வாழ்ந்து வருகிறேன் என்றார். உடனே எதுவும் பேசாமல் சுதாரித்து கொண்ட ஒசாமா அவரிடம் மேற்கொண்டு உரையாட தொடங்கி இருக்கிறார். ராபர்ட் பிஸ்க்குடன் ஒசாமாவின் உரையாடல் முழுவதும் ஆப்கான் குறித்தே இருந்தது. நான் எங்குமே நூறு வருடங்கள் வாழ முடியாது. ஆப்கானில் அந்த மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இந்த உலகில் யார் கையில் அதிகாரம் இருக்கிறதோ அவர்கள் பல்வேறு பெயர்களில் அதை பயன்படுத்தி மற்றவர்களை தன் பக்கம் திருப்புவதற்கு சாதகமாக்குகிறார்கள். இதை நான் தெளிவாக உணர்ந்து கொண்டு வீர இளைஞர்களோடு அங்கு சென்றேன். அதற்காக என்னுடைய கட்டுமான நிறுவன இயந்திரங்களும் தேவைப்பட்டது. ரஷ்ய துருப்புகளுடனான என் போரில் பலர் கொல்லப்பட்டனர். நான் மட்டும் தப்பி பிழைத்தேன். இதை அவர் சொன்ன போது அவரின் கண்கள் மிகுந்த உணர்ச்சி மயத்தில் இருந்தன. தன் நீண்ட தாடியை அவர் கையால் வருடி விட்டார். தான் இதை முஸ்லிம் உலக வரலாற்று கடமையாக செய்ய போவதாக ஒசாமா பிஸ்கிடம் சொன்னார். ஒசாமாவுடனான தன் அனுபவத்தை பிஸ்க் உணர்வு பூர்வமான நிலையோடு இந்நூலில் குறிப்பிடுகிறார். அமெரிக்க நியூயார்க் இரட்டை கோபுரம் தகர்ப்பை தான் அனுமானித்திருந்ததாகவும், அமெரிக்காவில் இவர்களின் ஊடாட்டம் காலபோக்கில் நிகழக்கூடிய ஒன்று என்பது பிஸ்க்கின் கருத்து. எந்த மத பிரக்ஞையும் இல்லாத இளைஞர்கள் நியூயார்க் இரட்டை கோபுர தகர்ப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தான் ஒசாமாவுடன் நிகழ்த்திய உரையாடலின் தர்க்க ரீதியான தொடர்ச்சி என்கிறார் பிஸ்க். மேலும் சதாம் உசேனை பிஸ்க் ஒருதடவை சந்தித்தார். 2003 ல் ஈராக் மீதான அமெரிக்க போரை வன்மையாக கண்டித்த பிஸ்க் இதற்கான விலை அமெரிக்காவின் கைகளில் இருக்கிறது என்றார். நாகரீகங்களுக்கான பெரும் போர் என்ற அவரின் இந்த நீண்ட பக்கங்களை கொண்ட நூல் பிஸ்கின் 30 ஆண்டுகால பத்திரிகை அனுபவத்தையும், மத்தியகிழக்கு வாழ்க்கை நுட்பங்களையும் காட்டுகிறது. தன்னுடைய ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைபாடுகளுக்காக பிஸ்க் ஏகாதிபத்திய சார்பு ஊடகங்களிடமிருந்து கடும் விமர்சனங்களை எதிர் கொண்டார். அவற்றையெல்லாம் பிஸ்க் ஒரு தேர்ந்த பத்திரிகையாளராகவும், அறிவு ஜீவியாகவும் நின்று எதிர்கொண்டார். பிஸ்கின் பத்திரிகை துறை மற்றும் போர்கள் தொடர்பான பார்வை அறிவார்ந்த துறையில் இன்னும் மதிப்பீடு செய்யத்தகுந்தது.