காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Friday, November 14, 2014

சதாமின் ஆவி ---- ஐ.எஸ். ஐ.எஸ் யும் , ஈராக் அரசியலும்ஈராக் கிளர்ச்சியாளர்களின் தலைவரான அபுபக்கர் அல் பஹ்தாதி ஈராக் மற்றும் சிரியாவில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை இணைத்து புதிய இஸ்லாமிய நாடொன்றை பிரகடனம் செய்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் மேலும் பகுதிகளை கைப்பற்ற அவரின் இயக்கம் தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருக்கிறது. உள்நாட்டுப்போர் மூலம் ஒரு நாட்டின் பகுதிகளை கைப்பற்றி தனிநாடாக சுயமாக பிரகடனம் செய்யும் போக்கு வரலாற்றில் நிகழ்ந்து வந்திருக்கிறது. இது ஒருவகையில் புவி அரசியல் கூட. உதுமானிய பேரரசின் வீழ்ச்சிக்கு பிறகு முதன்முதலாக தங்களை கலீபாவாக (இஸ்லாமிய அரச பிரதிநிதி) ஒருவர் தன்னை முன்னிலைப்படுத்தி இருக்கிறார். இவர்கள் கைப்பற்றிய சிரியாவின் வடக்கு மற்றும் ஈராக்கின் மத்திய வடக்கு ஆகியவை கி.பி 8 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை இந்த பகுதியை ஆட்சி செய்த அப்பாஸிய அரசை மறு பிரநிதித்துவம் செய்வதாக அரபு அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த கால அரசியல் வரலாறு எப்படி நிகழ்காலத்தோடு வாழ்கின்றது என்பதற்கு இன்றைய ஈராக் ஓர் உதாரணம்.மத்திய கிழக்கின் வரலாற்றில் ஈராக் தனக்கான இடத்தை பாரம்பரியமாக தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. ஈராக் என்ற பெயர் அராகி அதாவது சூரியனின் நிலம் என்ற அர்த்தத்தில் இருந்து உருவாகி இருக்கலாம் என்றொரு கருத்து நிலவுகிறது. இதனால் தான் இதன் அதிகாரபூர்வ குறியீடாக சூரியன் மாறியது. சூரியனின் நாடாக பண்டைய மெசபடோமிய ஆவணங்களில் குறிப்பிடப்படுகிறது. ஈராக் பற்றிய மற்றொரு விளக்கம் அரா என்ற சொல்லில் இருந்து இந்த வார்த்தை உருவாகி இருக்கலாம் என்பது. அரா என்பது கடற்கரை என்று அர்த்தம். அதாவது இரு நதிகள் கடலில் சங்கமிக்கும் நாடு என்ற அர்த்தத்தில் வருகிறது. நீண்ட நாகரீக மற்றும் அறிவு பாரம்பரியம் அதற்கு உண்டு. வரலாற்றில் மெசபடோமியா என்று அழைக்கப்பட்ட ஈராக் பல மாகாணங்களின் தொகுப்பாகவே இருந்து வந்திருக்கிறது. யூப்ரடீஸ் மற்றும் டைக்ரீஸ் ஆகிய இரு புகழ்பெற்ற நதிகளின் பெரும் நீரோட்டமாக, கடல் சார் பிராந்தியமாக, முக்கிய வர்த்த மையமாக தன் வரலாற்று நகர்வை தொடர்ந்து கொண்டே வந்தது. முதல் உலகப்போர் வரை ஈராக், பல நூற்றாண்டுகளாக மத்தியகிழக்கின் பலம் வாய்ந்த பேரரசாக விளங்கிய துருக்கிய உதுமானிய பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. முதல் உலகப்போருக்குப்பின்னர் ஈராக் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் வந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்பது இன்றைய குவைத் இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிட்ட காலம் வரை ஈராக்கின் பஸ்ரா மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மேலும் துருக்கிய கட்டுப்பாட்டில் இருந்து மற்ற அரபு நாடுகளை தன் காலனிய வகைமைக்குள் உட்படுத்த ஆரம்பகாலம் முதலே பிரிட்டன் முயன்றது. ஈராக்கின் அபரிதமான எண்ணெய் வளத்தை அபகரிக்க துருக்கிய பகுதிகளில் இருந்து ஈராக்கை வர்த்தக ரீதியாக பிரிக்க முயன்று, உள்ளூர் ஷேக்குகளை அணுகியது. பின்னர் அம்முயற்சி தோல்வியுற்ற காரணத்தால் வேறு விதமான உபாயங்களை கையாண்டது. இதன் மூலம் ஒரு நூற்றாண்டின் காலனியத்துவத்தை தனக்குள் உள்வாங்க பிரிட்டன் தீர்மானித்தது. இதன் தொடர்ச்சியில் 1932 ல் பிரிட்டன் பிடியில் இருந்து ஈராக் விடுதலை பெற்றது. அதன் பிறகு சர்வாதிகார ஆட்சி நடைபெற்றது. பைசல் என்பவரின் தலைமையில் ஆட்சி அமைந்தது. இவர் ஈராக்கை வளப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்தார். முதல் உலகப்போர் காலகட்டத்திலேயே பிரிட்டன் பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஈராக்கின் பல பகுதிகளை கூறு போட்டுக்கொண்டது. பைசல் பிரிட்டனுக்கு விசுவாசமாக இருந்து கொண்டு ஈராக்கை ஆட்சி புரிந்து வந்தார். அவருக்கு பின் அவரின் மகன் காசி ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். அது நீண்டகாலம் நிலைக்கவில்லை. இந்நிலையில் மன்னராட்சி முறையின் தோல்வி காரணமாக ஈராக் 1958 ல் பைசல் குடும்பத்தின் பிடியில் இருந்து விடுதலை பெற்றது. அதன் பிறகு ஜனநாயக ஆட்சி முறைக்கு வந்தது. துரதிஷ்டவசமாக அதன் பிந்தைய ஈராக் ஸ்திரமற்ற நிலைக்கு மாறியது.ஐ.எஸ்.ஐ.எஸ் குறித்து நாம் பார்க்கும் முன்னர் ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் குறித்தும் பார்க்க வேண்டியதிருக்கிறது. அங்கிருந்தே அதன் தொடக்கத்தை ஒருவேளை நாம் அறிந்து கொள்ள முடியும். அறுபதுகளில் அரபு நாடுகளில் ஏற்பட்ட சோசலிச எழுச்சியானது சிரியாவில் மிஷல் அப்லாக் தலைமையில் பாத் சோசலிச கட்சியின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. அரபு தேசியவாதம் மற்றும் அரபு சோசலிசம் ஆகியவற்றை ஒருங்கிணைந்த கொள்கையாக இந்த கட்சி உள்ளடக்கி இருந்தது. எகிப்தின் அதிபராக இருந்த நாசர் இதற்கு முக்கிய தூண்டலாக இருந்தார். அரபு தேசியவாதத்தை முன்னெடுப்பதன் மூலம் அனைத்து அரபு அரசுகளையும் ஒன்றிணைக்க முடியும் என்று அவர் நம்பினார். ஈராக்கின் நெடிய ஆட்சியாளரான சதாம் உசேன் இதன் பின்தொடரலே. அதன் முக்கிய தலைவர்களுள் ஒருவராக அவர் இருந்தார். மேலும் ஈராக்கில் அந்த கட்சியின் கிளையை உருவாக்கிய முக்கிய ஆளுமைகளில் ஒருவர். 1968 ல் ஈராக்கில் அதன் கிளையை சதாம் ஏற்படுத்தினார். மேலும் அஹ்மத் ஹசன் அல் பக்ர் தலைமையிலான அரசில் துணை அதிபராக இருந்த சதாம் தனியார் வசம் இருந்த ஈராக்கின் எண்ணெய் கிணறுகள் அனைத்தையும் நாட்டுடமை ஆக்கினார். வங்கிகளையும் அவ்வாறே செய்தார். மேலும் பல தொழிற்சாலைகள் கூட பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றப்பட்டன. சதாமின் இந்நிலைபாடு ஈராக்கில் மிகுந்த கவனம் பெற்றது. அது மட்டுமல்லாமல் உலகளாவிய கவனத்தையும் பெற்றது. அதற்கு முன்பே இந்தியாவில் நேரு சோசலிசத்தை நடைமுறைப்படுத்தி இருந்தார். இந்நிலையில் 1979 ல் ஈராக்கின் தலைமை பொறுப்பை ஏற்றார் சதாம் உசேன். அவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற காலத்தில் இலவச கட்டாய கல்வி முறையை ஏற்படுத்தினார். எழுத்தறிவின்மையை ஒழிப்பதற்கு தேசிய அளவில் செயல்திட்டத்தை ஏற்படுத்தினார். மேலும் இலவச கல்வி முறையை உயர்கல்வி வரை விரிவுபடுத்தினார். பொது சுகாதார திட்டத்தை அறிமுகப்படுத்தி அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி கிடைக்குமாறு செய்தார். இதனால் ஈராக்கிய மக்கள் பலரும் பயன்பெற்றனர். இவரின் திட்டங்கள் பிற மத்திய கிழக்கு நாடுகளுக்கு முன்மாதிரியாக இருந்தன. தொடர்ந்த நலத்திட்டங்கள் மூலம் யுனெஸ்கோ விருது சதாமுக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் அவரின் போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பலஅரசியல் பொருளாதார சீர்திருத்தங்களை செய்தால் அவரின் அரசியல் நிலைபாடு விமர்சனத்திற்குள்ளானது. குறிப்பாக ஈராக்கின் சிறுபான்மையினரான ஷியாக்கள் மற்றும் குர்துகள் மீதான அவரின் அடக்குமுறை உள்நாட்டிலேயே அவருக்கு பல எதிரிகளை உற்பத்தி செய்வதற்கான காரணியாக மாறியது. ஒரு கட்டத்தில் பாத் கட்சியின் முக்கிய உறுப்பினர்களையே கைது செய்யும் சூழலுக்கு சென்றார். இவரின் அடக்குமுறைக்கு பயந்து பலர் சிரியாவுக்கு தப்பி சென்றனர். இதற்கு முன் ஈராக்கின் அதிபராக இருந்த காசிமை கொல்ல முயன்றதான குற்றச்சாட்டு சதாமின் மேல் உண்டு.


சதாமின் ஆட்சி காலம் மத்தியகிழக்கின் புவி அரசியலை உலகுக்கு உணர்த்திய காலம். குறிப்பாக மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தை பிற நாடுகள் கட்டுப்படுத்தக்கூடாது என்பதில் சதாம் உறுதியாக இருந்தார். இதுவும் மேற்கத்திய நாடுகள் அவர் மீது கோபம் கொள்ள காரணமாக அமைந்தது. இந்நிலையில் ஈராக் மற்றும் ஈரான் இடையே பாயும் சத் உல் அரப் என்ற நீர்வழிபாதை தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஏற்கனவே ஈராக்கில் பெரும்பான்மையாக வாழும் ஷியா மக்கள் சதாமுக்கு எதிராக கலகம் புரிய தொடங்கினர். 1979 ல் ஈரானில் நடந்த புரட்சியானது  சர்வாதிகார ஷா அரசுக்கு பதிலாக மத அடிப்படைவாத கொமைனி அரசை அதிகாரத்திற்கு கொண்டு வந்தது. அவர் ஈராக்குடன் பல விஷயங்களில் முரண்பட்டார். இந்நிலையில் சத் உல் அரப் நீர்வழிப்பாதை மற்றும் ஈரானில் உள்ள அரபு சிறுபான்மையினரை காப்பதற்காகவும் ஈரான் மீது 1980ல் சதாம் இராணுவத்தாக்குதலை தொடுத்தார். இதற்கு வளைகுடா நாடுகள் மற்றும் பிற மத்தியகிழக்கு நாடுகள் உதவி புரிந்தன. இதனால் சதாம் அரபு நாடுகளின் காப்பாளர் என்றழைக்கப்பட்டார். மேலும் அமெரிக்காவும் ஈராக்கிற்கு ஆயுத உதவி அளித்தது.  பதிலுக்கு ஈரானும் எதிர்தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான் – ஈராக் போர் மூண்டது. இது கிட்டதட்ட எட்டு ஆண்டுகள் நீடித்தது. இதனை குறித்து 1918 ல் சவூதி அரேபியாவில் நடந்த அரபு நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் சதாம் பின்வருமாறு கூறினார்.
“ஈரான் மற்றும் ஈராக் பிரச்சினை என்பது கடந்த 450 வருட கால பிரச்சினை. இது வெறும் எல்லை பிரச்சினையோ அல்லது நீர்வழி பிரச்சினையோ அல்ல. மாறாக விரிந்த பார்வையின் அடிப்படையில் ஈரானின் அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கும் எண்ணம் கொண்ட விவகாரம். 1847 ஆம் ஆண்டைய ஒப்பந்தத்தின் படி இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் நாடுகளின் எல்லைப்பகுதிகளுக்கு உரிமை கொண்டாடும் போக்கை கைவிட வேண்டும். மேலும் அண்டை நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது. ஆனால் தற்போது  ஈரான் இவற்றை மீறுகிறது. அதனால் தான் இந்த தவிர்க்க முடியாத போர்”. என்றார் சதாம் உசேன்.

இதன் தொடர்ச்சியில் இந்த போர் எட்டு ஆண்டுகளாக தொடர்ந்தது. இரு தரப்பிலும் பெரும் அழிவுகளுக்கு பிறகு 1988 ல் போர் முடிவுக்கு வந்தது. இந்த காலகட்டத்தில் சதாம் ஈராக்கின் தனித்த இனக்குழுவான குர்துகள் மீது விஷவாயு தாக்குதலை நடத்தி பல குர்து இன மக்களை கொன்றார். இதன்  காரணமாக சதாம் உசேன்  மீது உலக அளவில் பெரும் அதிருப்தி உருவானது. பின்னர் வரலாற்று அடிப்படையில் குவைத் தங்களுக்கு தான் சொந்தம் என்று சதாம் உரிமை கோரினார். மேலும் எண்ணெய் விலை நிர்ணயம் தொடர்பாக ஈராக்கிற்கும், குவைத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில்  1990 ல் குவைத் மீது படையெடுத்தார் சதாம் உசேன். அதனை கைப்பற்றிக்கொண்டு தன் மாநிலத்தில் ஒன்றாக மாற்றினார். இதனை தொடர்ந்து அது வரை சதாமுக்கு ஆதரவளித்த வளைகுடா நாடுகள் சதாம் உசேனை எதிர்க்கத்தொடங்கின. தங்கள் மீதும் சதாம் விரைவில் படையெடுக்கலாம் என்ற அச்சமே அதற்கு காரணம். அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக புஷ் பதவியேற்றிருந்தார். வளைகுடாவின் எண்ணெய் நலன்களுக்காக அதனை வசப்படுத்தி வைத்திருக்கும் அமெரிக்கா இதனால் குவைத்திற்கு ஆதரவாக ஈராக் மீது போர் தொடுக்க முடிவு செய்தது. ஈராக் அதன் பிடியிலிருந்து குவைத்தை விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொண்டது. ஈராக் அதனை மறுக்கவே அமெரிக்கா மற்றும் பன்னாட்டு படைகள் இணைந்து 1991 ஜனவரியில் ஈராக் மீது போர் தொடுத்தன. சுமார் ஒரு மாதம் நடந்த போரின் முடிவில் குவைத்தை விடுவிக்க ஈராக் சம்மதம் தெரிவித்தது. பின்னர் ஈராக் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதனால் ஈராக் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் தாக்கத்தால் அங்கு பிறக்கும் குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து இல்லாததன் காரணமாக இறந்து பிறந்தன. இந்நிலையில்  செப்டம்பர் 11 நிகழ்வை தொடர்ந்து அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. பின்னர் 2003 ல் புஷ் இன் ஆயுத வியாபார நலன்களுக்காக அமெரிக்கா ஈராக் மீது போர்தொடுத்தது. சதாம் பேரழிவு ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறார் என்று மொண்ணையான காரணம் சொல்லப்பட்டாலும் அதனை மீறிய எதார்த்தம் என்பது அமெரிக்க ஜனாதிபதியான புஷ் தேர்தலின் போது அங்குள்ள ஆயுத வியாபாரிகளுடன் செய்து கொண்டிருந்த ஒப்பந்தம் தான். பொதுவாக அமெரிக்கா ஒரு நாட்டின் மீது தொடுக்கும் போர் என்பது எப்போதுமே அதன் ஏகாதிபத்திய நலன்களுக்காக மட்டுமே இருக்கும். ஈராக்கின் பெரும்பான்மை ஷியா பிரிவு அரசை கொண்டு வந்து தன் நலன்களை பிரதிபலிக்கவும், அங்குள்ள எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்தவும் அமெரிக்காவிற்கு சதாமை அகற்ற வேண்டிய அவசியம் இருந்தது. அதனை வெற்றிகரமாக நிறைவேற்றிய அமெரிக்கா அங்கு தனக்கு ஆதரவான ஷியா அரசை ஏற்படுத்தியது. அரபு நாடுகளில் நிலவும் ஷியா- சுன்னி மோதல் என்பது அமெரிக்காவின் விருப்புணர்வில் ஒன்று. அது மட்டுமல்ல அதன் புவி அரசியல் நலனும் கூட. அரபு நாட்டில்  அந்த மோதல் எப்போதும் ஒரே நாட்டிற்குள் அல்லது பிற நாடுகளுக்கிடையே இருந்து கொண்டிருக்க வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

1988 ல் அரபு நாட்டில் உலகம் முழுவதும் தூய இஸ்லாமிய அரசு மற்றும் முஸ்லிம் அல்லாத நாடுகளில் முஸ்லிம் மக்களை அந்த அரசுகளிடம் இருந்து விடுவித்தல் என்ற செயல்திட்டத்தோடு ஆரம்பிக்கப்பட்ட அல்கொயிதா ஈராக்கிலும் கிளை ஆரம்பித்து செயல்பட்டது. அதற்கு 1979ல் நடந்த சம்பவங்கள் தூண்டலாக இருந்தன. அதாவது 1979 ல் ஆப்கானில் இருந்த அரசுக்கு ஆதரவாக சோவியத் யூனியன் தன் படைகளை ஆப்கானுக்கு அனுப்பியது. அதே காலகட்டத்தில் தீவிர அடிப்படைவாத குழு ஒன்று மெக்காவை கைப்பற்றியது. ஈரானின் அதிபர் ஷாவிற்கு எதிராக புரட்சி நடந்தது. இவ்வாறு  இஸ்லாமிய உலகம் முழுக்க நடந்த மாற்றங்கள் அதன் நிறுவனர் ஒசாமா பின்லேடனை கவலை கொள்ள செய்தன. அதனின் தொடர்ச்சி தான் அல்கொய்தா என்ற அவரின் இயக்க உருவாக்கம். அதன் தாக்கம் ஐ.எஸ்.ஐ.எஸ்  இடத்திலும்  உண்டு. ஐ.எஸ்.ஐ.எஸ் என்பது அரசியல் வேர்தேடலின் அடிப்படையில் பார்த்தால் ஈராக்கின் ஷியா-சுன்னி மோதலின் வெளிப்பாடு தான். 1999 ல் முதன் முதலாக ஈராக்கில் சுன்னி முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இனக்குழுக்களை உள்ளடக்கி ஜமாஅத் உல் தவ்ஹீத் வல்ஜிஹாத். அதாவது ஏகத்துவ மற்றும் ஜிஹாதிய இயக்கம் என்ற பெயரில் போராட்ட இயக்கமாக தொடங்கப்பட்டது. அதன்பின்னர் அந்த இயக்கத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தொடர்ச்சியான உட்மோதல்களுக்கு வழிவகுத்தன. இந்நிலையில் 2003 ல் சதாம்உசேனை அகற்றுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஈராக் மீது போர்தொடுத்தார். அமெரிக்காவுடன் இணைந்து பிரிட்டனும் ஈராக் மீது தாக்குதல்   தொடுத்ததன் விளைவாக ஈராக் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து இந்த இயக்கத்தினர் அமெரிக்காவிற்கு எதிராகவும், போருக்கு பின்னர் அமைந்த பெரும்பான்மை ஷியா அரசிற்கு எதிராகவும் உள்நாட்டு கலகத்தில் ஈடுபட்டனர். பின்னர் 2004 ல் ஒசாமா பின்லேடனுடன் இணைந்து இந்த இயக்கத்தின் தலைவர் அபுமுஸப் அல்ஷர்ஹாவி இதனை தன்சிம் காயிதே அல்ஜிஹாத் பி பிலாத் அல்ரபிதயின் அதாவது இருஆறுகள் பாயும் நாட்டின் புனிதப்போர் இயக்கம் என்று பெயர்மாற்றம் செய்தார் இது மற்றொரு வகையில் ஈராக்கின் அல்காயிதா என்று அழைக்கப்பட்டது. இது பலஅவதாரங்களை எடுத்த பின் 2006 ஜனவரியில் மற்ற உள்நாட்டு கலகக்கார இனக்குழுக்களுடன் இணைந்து முஜாஹிதீன் சுரா கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் இந்த அமைப்பு ஈராக்கில் ஷியா அரசிற்கு எதிராக போராடியது. அங்குள்ள சுன்னி முஸ்லிம்களின் உரிமைக்காக அந்த அரசை எதிர்த்து நின்றது.இதன் தொடர்ச்சியில் ஆறுமாதங்கள் கடந்து அதே ஆண்டு அக்டோபரில் இந்த அமைப்பு தவ்லத்துல் இஸ்லாமியா (இஸ்லாமியஅரசு) என்று பெயர்மாற்றம் செய்தது. இதன் குறிக்கோள்  இரு  முக்கிய விஷயங்கள்  சார்ந்ததாக இருந்தது.   அதாவது  ஷியாக்களின்  பிடியில்  இருந்து  சுன்னி முஸ்லிம்களை விடுவித்தல்  மற்றும் அந்நிய  ஆக்கிரமிப்பிலிருந்து ஈராக்கை  காப்பாற்றுதல்.  இந்த  இலக்கை அடைந்தே தீரவேண்டும் என்று அதன் தலைவர் தலைவர் அப்துல்ரஷீத் அல்பஹ்தாதி தலைமையில் உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சிரியாவில் அதிபர் பஷருல் ஆசாத் அரசிற்கு  எதிராக ஏற்பட்ட கலகம்  ஈராக்கிலும் எதிரொலித்தது. காரணம் சிரியா என்பது ஈராக்குடன் எல்லை ரீதியாகவும்,  புவியியல் வரலாற்று ரீதியிலும் நீண்டநெடிய உறவை கொண்டது. இதனைத் தொடர்ந்து இந்த அமைப்பானது  2013 ஏப்ரல் 8 ல் தன் சிரியா கிளையை  ஆரம்பித்து Islamic  state of Iraq and Levant என்று தன் பெயரை மாற்றிக்கொண்டது. அன்று முதல் சிரியாவிலும், ஈராக்கிலும் தன் ஆயுதபோராட்டத்தை நடத்திவருகிறது. இதற்கு  நிதி உதவி  அளிப்பவர்கள்  எல்லாம் வளைகுடா நாடுகளின் பெரும் பணக்காரர்களே. உலகில் சர்வாதிகார,எதேச்சதிகார அரசுகளை எதிர்த்தும், பல்வேறு விதமான  அடக்குமுறைகளை  எதிர்த்தும்  பல ஆயுதமேந்திய குழுக்கள் போராடி வருகின்றன. இந்த போராளி குழுக்களுக்கெல்லாம் ஒவ்வொரு விதமான செயல்திட்டமும், போராட்ட வழிமுறைகளையும் இருக்கின்றன. ஆனால் நீண்டகால நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு, சமூகம் குறித்த விரிவான அக்கறையை கொண்ட, மனிதஇனத்தின் விடுதலையை மீட்டெடுக்கக்கூடிய அமைப்பாக  அவை இருக்க வேண்டியது  அவசியம். உலகில் பயங்கரவாதம் என்பது பலவீனர்களுக்கும், பலமான அரசுகளுக்கும் இடையேயான போராட்டமாக இருக்கிறது. அது  அரசுகளை பொறுத்தும், காலத்தை பொறுத்தும் மாறுபடுகிறது. நிகழ்காலத்தில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ஒன்று  பிற்காலத்தில்  போராளி  இயக்கமாக  அறியப்பட்டிருக்கின்றது. ஆனால் மத அடிப்படையில், அதனை மட்டுமே  செயல்திட்டமாக வைத்து இயங்கும்  அமைப்புகள் மிக ஆபத்தானவை . மனிதகுல விரோதமானவை . காரணம் மதம் என்ற பெயரில் அது தன் இனத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துவது தான். அதன் நோக்கங்கள் எப்போதும் மட்டுப்படுத்தப்பட்டவையாகவும், மிக குறுகிய நலன்களை பிரதிபலிக்ககூடியதாகவும்  இருக்கின்றன. இது எல்லா மத அமைப்புகளுக்கும் பொருந்தும். ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ பொறுத்தவரை அது 1920 ல் எகிப்தில் தோன்றிய அரசியல் இஸ்லாமிய இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் கருத்தியலை அடிப்படையாகக்கொண்டது. மேலும் மேற்கத்திய உலகை இஸ்லாமிய விரோதியாக சித்தரித்து அதனை கடுமையாக எதிர்ப்பது  அதன்  முக்கிய  நோக்கங்களுள்  ஒன்று.அபுபக்கர் அல் பஹ்தாதி தலைமை ஏற்ற போது இந்த இயக்கத்தின் ஆயுத போராட்டம் தீவிரமானது. ஈராக்கின் சுன்னி முஸ்லிம்களுக்கு எதிரான  அநீதிகளை எதிர்த்து போரிடுவதாக ஐ.எஸ்.ஐ.எஸ் அறிவித்தது. இதன் படி ஈராக்கின் முக்கிய பகுதிகளான அல் அன்பார், நினேவா, கிர்குக் மற்றும் சலாதீன் போன்ற பகுதிகளை ஈராக் இராணுவத்தினரிடமிருந்து கைப்பற்றியது.  மேலும் பிற அடிப்படைவாத இனக்குழுக்களுடன்  இணைந்து பிற பகுதிகளையும் விரைந்து கைப்பற்றியது. மேலும் சிரியாவின் அர் ரஹா, இத்லிப், தேர் எ ஷர் ,அலப்போ போன்ற பகுதிகளையும் கைப்பற்றியது. கடந்த ஒரு வருடமாக சிரியா மற்றும்  ஈராக்கில் உள்நாட்டுப்போரில் ஈடுபட்டு வரும் இந்த இயக்கம் மிகக்கொடூரமான முறையில் தங்கள் எதிரிகளை வேட்டையாடியது. மிருகங்களை அறுப்பது போன்றே அவர்களின் கழுத்துகளை அறுத்தது. மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் அல்கொய்தாவுடன் கடந்த பிப்ரவரி வரை தொடர்பு வைத்திருந்தது. பின்னர் அவர்களுக்கிடையே எழுந்த மனச்சிக்கல்கள், பரஸ்பர போட்டி மனோபாவம் ஆகியவை இருவருக்குமான உறவை துண்டிக்க காரணமாக அமைந்தது. பின்னர் ஈராக் இராணுவத்துடன் மிகத்தீவிரமாக போரிட்டு பல பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ் சமீபத்தில் தன்னை கிலாபத் எனப்படும் அகில உலக இஸ்லாமிய அரசாக பிரகடனப்படுத்தி இருக்கிறது. தங்கள்  அறிவிப்பை உலக முஸ்லிம் சமுதாயம் முழுமையாக ஏற்றுக்கொள்ளா விட்டாலும் அதற்கு ஓரளவு ஆதரவு கிடைக்கும் என்பது அதன் எதிர்பார்ப்பு. ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவம் இவற்றை ஏற்றுக்கொள்ளாமல் அமைக்கப்படும் தூய மத அடிப்படைவாத அரசுகள் உலக வரலாற்றில் நிலைப்பதில்லை. தலிபான்கள் அதற்கு ஓர் உதாரணம். இந்நிலையில் அடிப்படையில் தூய்மைவாத  வஹ்ஹாபிய கொள்கையை கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் ஈராக்கில் தான் கைப்பற்றிய பகுதிகளில் இருந்த எல்லா  வரலாற்று பாரம்பரியம் மிக்க  கலாசார சின்னங்களை அழித்தது. அவை எல்லாம் மதவிரோதமானவை என்ற அதன் கருத்தியலே அதற்கு காரணம். மேலும் தன் எதிரிகளை மிக கொடூரமான முறையில் கழுத்தை அறுத்துக்கொன்றது. அறுக்கப்பட்ட தலைகளை பெரும் தியாகமாக கருதியது. அது மட்டுமே உண்மையான , மத ரீதியான அரசு என்று தன்னைத்தானே அறிவித்துக்கொள்வதால் பிற இஸ்லாமிய அரசுகள் அனைத்தையுமே அதன் எதிரியாக பாவிக்கிறது. மேலும் ஜிஹாத் என்ற புனிதப்போர் குறித்து அது மரபார்ந்த விளக்கத்தை அளிக்கிறது. குர் ஆனின் வசனங்களான அநியாயக்கார ஆட்சியாளர்கள் மீது போர்தொடுத்தல், நம்பிக்கையற்றவர்கள் மீது போர்தொடுத்தல், எதிரிகளின் கழுத்துகளை அறுத்தல் போன்ற ஏழாம் நூற்றாண்டு கால நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து, அதன் அடிப்படையில் சொல்லப்பட்ட குர் ஆனின் வசனங்களை முன்வைத்து ஈராக்கில் தன் பயங்கரவாத செயல்களை நிகழ்த்தி வருகிறது. திம்மித்துவம் என்ற ( மதம் மாறுதல், வெளியேறுதல், மரணித்தல்) அதன் தீவிர அடிப்படைவாத கோட்பாட்டை ஈராக்கில் நடைமுறைப்படுத்துவதால் குர்துகள், யசீதிகள்,கிறிஸ்தவர்கள் போன்ற சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்களை இஸ்லாமுக்கு மாற அவர்கள் நிர்பந்திக்கிறார்கள். மேலும் யசீதி இனப்பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் இந்திய நர்சுகளை அவர்கள் விடுவித்த விவகாரம். எல்லாவித போர்களத்திலும் நர்சுகள் முக்கியமானவர்கள். மேலும் உலகில் உள்ள பெரும்பான்மையான போராளி அமைப்புகள் பெண்களை பலாத்காரம் செய்வதில்லை. உலகில் இராணுவம் மட்டுமே தன் எதிரிகளின் பெண்களை பலாத்காரம் செய்து கொல்லும் வழக்கத்தை கையாளுகிறது. ஆனால்  ஐ.எஸ்.ஐ.எஸ் யை பொறுத்தவரை அவர்கள் கைப்பற்றிய பகுதியில் இருந்த மருத்துவமனையை  குண்டுவெடித்து தகர்ப்பதற்காக இந்திய நர்ஸ்களை அங்கிருந்து வெளியேற்றினார்கள். பின்னர் அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து, அதன் பின்னர் இந்திய தூதரக அதிகாரிகளின் முயற்சி காரணமாக அவர்களை ஒப்படைத்தார்கள். உள்நாட்டு போர் தருணத்தில் இது ஒரு தற்செயலான, வழக்கமான ஒன்றே. இதனை அறியாமல் தமிழ்நாட்டில் பல அடிப்படைவாதிகள் , அந்த  இயக்கத்தினரை இஸ்லாமை உய்விக்க வந்த காவலர்கள் போன்று துள்ளிக்குதித்தது, இன்னும் அதிகப்படியாக இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சில இளைஞர்கள் டி ஷர்ட் அணிந்து புகைப்படம் எடுத்து அதனை இணையதளத்தில் வெளியிட்டு காவல்துறையில் மாட்டிக்கொண்டது என பல காமெடிகள் நிகழ்ந்தன. அரபி மொழி மீதான புனித மனோபாவம் சில நேரங்களில் அரபு நாட்டவரின் பண்பாட்டை, அவர்களின் நடவடிக்கைகளை அரபு அல்லாத நாடுகளை சேர்ந்தவர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் நிலைக்கு செல்கிறது. அதன் வெளிப்பாடே இது. ஊடக வளர்ச்சி பெற்ற உலகில் எல்லா அமைப்புகளையும், அதன் நடவடிக்கைகளையும் மதிப்பிடுவது எளிதான விஷயம் தான். ஆனால் வலிந்து திணிக்கப்படும் அறியாமை சார்ந்த விஷயங்கள் இளைய தலைமுறையிடம் இதற்கு தடையாக இருக்கின்றன. இதன் காரணமாக அரபு நாட்டில் அரபி பெயருடன் எந்த செயல் நடந்தாலும் அதற்கு அனுதாபம் கொள்ளும், ஆதரிக்கும் நிலைக்கு இந்தியா போன்ற முஸ்லிம் அல்லாத பன்மைத்துவம் கொண்ட நாடுகளின் முஸ்லிம்கள் பலியாகி விடுகின்றனர். அதனைப்பற்றி ஆராயும் அவகாசம் கூட அவர்களுக்கு இருப்பதில்லை. எல்லாவற்றையும் ஊடகங்கள் மீது பழிபோட்டுக்கொண்டு தப்பிக்கும் மனோபாவம் காரணமாக இது மாதிரியான நிகழ்வுகள் அதிக ஆபத்தை விளைவிக்கின்றன. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மேலாதிக்க ஊடகங்கள் அவ்வப்போது புனைவுகளையும் உற்பத்தி செய்கின்றன.
தான் வாழும் சமூகம் பற்றிய பிரக்ஞை எல்லா மனிதர்களுக்கும் இருப்பது அவசியம். ஆனால் தன் சமூகத்தை தாண்டிய, எல்லை தாண்டிய ஒரு பிராந்தியத்தின் போராட்டம் குறித்த நியாயத்தையும், நியாயமின்மையையும் மதம் சார்ந்த மனிதர்கள் உணர்வது அவசியம். 

ஈராக்கின் ஐ.எஸ்.ஐ.எஸ் குறித்த விரிவான, நிதானமான  பார்வை அவசியம் தேவை. தமிழ்நாட்டை பொறுத்தவரை சமூக வலைத்தளங்கள் அப்பாவி இளைஞர்களை மதரீதியான மூளைச்சலவை செய்வதால் இம்மாதிரியான ஆதரவு நடவடிக்கைகளுக்கு அவர்கள் பலியாவது மிகவும் அசாதாரணமான ஒன்றாக மாறி விட்டது. பேஸ்புக்கில் சிலர் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவு பக்கங்களை உருவாக்கி அதற்கு 2000 க்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். இது மிகவும் ஆபத்தான போக்கு. காரணம் தனிப்புத்தியே பொதுப்புத்தியாக மாறிக்கொண்டிருக்கும் சமூகத்தில் இம்மாதிரியான எண்ணிக்கை விரைவில் பொதுப்புத்தியாக மாறும் அபாயம் இருக்கிறது. இந்தியாவின் பெரும்பான்மையான முஸ்லிம் அமைப்புகள் ஐ.எஸ். ஐ.எஸ் எதிர்ப்பு நிலைபாட்டை எடுத்திருக்கும் தருணத்தில் இளைஞர்கள் கருப்பு நிறத்தால் கவரப்பட்டு இதில் வீழ்வது தடுக்கப்பட வேண்டும். மேலும் அரபுநாட்டின் ஷியா- சுன்னி மோதல், முரண்பாட்டை விட இந்தியாவில் இந்து – முஸ்லிம் மோதல் மற்றும் முரண்பாடு மிகவும் குறைவானதே. அதன் இடைவெளி குறைவு. ஐ.எஸ்.ஐ.எஸ் தற்போது ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி தன்னை தனி நாடாக பிரகடனப்படுத்தி இருக்கும் நிலையில் அது சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தை பெற போவதில்லை.  ஆக மத அடிப்படைவாத கொள்கையை உட்கொண்டு ஆயுதப்போராட்டம் நடத்தும் அமைப்புகள் இந்த நவீன உலகில் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அதுவே காலத்தின் தேவையும் கூட