காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Wednesday, August 6, 2014

சமூக வலைத்தளங்களும் முஸ்லிம் இளைஞர்களும் - தமிழ்நாட்டை முன்வைத்து
உலகம் முழுக்க சமூக வலைத்தளங்கள் தன் வலையை வலுவாக பின்னிக்கொண்டு வருகின்றன. நவீன உலகில் இணையம் பயன்படுத்துவோரின் ஆறாவது மற்றும் ஏழாவது விரலாக சமூக வலைத்தளங்கள் மாறிவிட்டன. சமீபத்தில் பேஸ்புக்கில் சிவாஜி, பால்தாக்கரே போன்றவர்களைப்பற்றி அவதூறான படங்களை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு புனேவை சார்ந்த தகவல் தொழில்நுட்ப பணியாளரான முஹ்சின் சாதிக் என்ற இஸ்லாமிய இளைஞர் இந்துத்துவ வெறியர்களால் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இம்மாதிரியான கருத்துப் பதிவு படுகொலைகள் பாசிசத்தை நோக்கியே இட்டுச்செல்லும். அதே நேரத்தில் பரஸ்பர கருத்துகள் மற்றும் உணர்வுகளை பரிமாறிக்கொள்ளும் வழி திறப்பாக நவீன உலகில் பரிணமித்திருக்கும் சமூக வலைத்தளங்களை முஸ்லிம் இளைஞர்கள் எவ்வாறு பயன்படுத்தினார்கள்?, பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள், இதன் பின்னால் நிகழும் உளவியல், சமூகவியல் ,அரசியல் பின்னணியை ஆராய வேண்டியதிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டு இளைஞர்கள் குறித்து அதிகம் கவலை கொள்ள வேண்டியதிருக்கிறது.

அல்ஹம்துலில்லாஹ், மாஷா அல்லாஹ், சுபுஹானல்லாஹ், அல்லாஹ் அக்பர், அஸ்ஸலாமு அலைக்கும், நவூதுபில்லாஹ், தவக்கல்து அலல்லாஹ், ஷைத்தான்................. இப்படியான வார்த்தைகள் தான் காலையில் பேஸ்புக்கை திறக்கும் போது அதிகமும் நம்மால் காண முடிகிறது. பள்ளிவாசல்கள் படத்தையோ அல்லது மக்கா மதீனா படத்தையோ போட்டால் போதும். விழாமல் எழுந்து நின்று கம்ப்யூட்டரின் மவுசை சொடுக்கிறார்கள் நம் இளைஞர்கள். குறைந்தது ஆயிரம் லைக்குகள் விழுகின்றன. இதை பார்த்து பரவசப்படும் பதிவேற்றியவர் மேலும் மேலும் படங்களை இணையத்திலிருந்து நகல் செய்து அப்படியே ஒட்டித்தள்ளுகிறார். இம்மாதிரியான படங்களை லைக் செய்வதன் மூலம் சொர்க்கம் நமக்கு நிச்சயப்பட்டு விடும் என்ற அதீத நம்பிக்கை பலரின் நனவிலி மனத்தில் ஆழமாக பதிந்திருக்கிறது. மேலும் எந்த புகைப்படமும் கிடைக்காவிட்டால் அஸ்ஸலாமு அலைக்கும், அல்லாஹ் அக்பர் என்று விசைப்பலகையில் அப்படியே தட்டி விடுகிறார்கள். இதனை லைக் செய்தால் இன்னும் சொர்க்கம் உறுதியாக நிச்சயிக்கப்பட்டு விடும் என்றும் கருதுகிறார்கள். பண்டைய பொழுது போக்கு விளையாட்டிற்கு கொஞ்சமும் குறைவில்லாத இம்மாதியான செயல்பாடு சைபர் வெளியில் நம்மை அதீத கற்பனாவாதியாக சஞ்சரிக்க வைக்கிறது. வெளியுலகம் தெரியாமல் கம்ப்யூட்டரில் பலவகையான விளையாட்டுகளை விளையாடும் குழந்தையின் மனநிலைக்கு கொஞ்சம் கூட குறையாமல் இருக்கின்றன இளைஞர்களின் இம்மாதிரியான செயல்பாடுகள். சமூக வலைத்தளம் என்பது என்ன? அதன் வீச்சு என்ன? தான் சார்ந்திருக்கிற மதத்தை அல்லது நம்பிக்கையை நேரடியாக மூர்க்கத்தனமாக பிரதிபலித்தால் சமூகங்களிடையே என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைத்துப்பார்க்க தவறி விடுகிறார்கள். அப்பாவி இளைஞர்களின் மூளைகளிலும் அரசியல் விளையாடுகிறது என்பது தவிர்க்க முடியாத உண்மை. ஏற்கனவே உணர்ச்சிபூர்வமாக கட்டமைக்கப்பட்டிருக்கும் மூளைகளில் இது மேலும் நீர்மமாக உட்புகுந்து கொள்கிறது.

முதன்முதலில் இணையதளத்தில் கருத்துப்பதிவு என்பதை கூகுள் தான் தொடங்கி வைத்தது. இணையம் பயன்படுத்தும் எல்லா மனிதர்களும் தங்களின் கருத்துகளை, வலிகளை, உணர்வுகளை, சமூகத்தை பாதிக்கும் துயரங்களை பரஸ்பரம் இணையத்தில் வெளிப்படுத்திக்கொள்ளும் நோக்கத்தோடு கூகுள் நிறுவனம் 2003 ல் Blog என்னும் வலைப்பூவை அறிமுகப்படுத்தியது. (வேறொருவரால் வடிவமைக்கப்பட்ட அதை கூகுள் நிறுவனம் விலைக்கு வாங்கியது) அதில் கணக்கு வைத்திருக்கும் எவருமே வலைப்பூவை தொடங்கி தங்களின் எண்ணங்களை பத்திகளாக அல்லது நீள கட்டுரைகளாக வெளிப்படுத்த முடியும் என்ற நிலை உருவானது. அதுவரை வெறும் மின்னஞ்சல்களில் மட்டுமே தங்கள் கருத்துகளை பலரும் வெளிப்படுத்தி வந்தார்கள். அது மிக குறுகிய வட்டங்களில் தான் போய் சேர்ந்தது. மின்னஞ்சல் சோதனையின் இயல்பான அவசரம் கருதி பலரும் அதை படிக்காமல் தவற விடுவதுண்டு. இதனை இன்னும் பரிணாமப்படுத்தி தனிமனிதனை மையப்படுத்திய ஓர் இணைய அடையாளமாக வலைப்பூக்கள் இருந்தன. இதன் காரணமாக பலர் வலைப்பூவை பயன்படுத்தி எழுத ஆரம்பித்தனர். இதன் மூலம் இணையத்தில் ஒரு கட்டற்ற கருத்துவெளி உருவானது. அன்றைய கட்டத்தில் பிராந்திய மொழிகள் இணையத்தில் அவ்வளவாக நுழையவில்லை.தொடக்கத்தில் ஆங்கில தெரிந்தவர்கள் மட்டுமே அதனை பயன்படுத்தி வந்தார்கள். பின்னர் யுனிகோட் என்னும் ஒருங்குறி எழுத்துரு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பலரும் பிராந்திய மொழிகளுக்கு மாறினார்கள். இதில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், பிரபலங்கள், வணிகர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் போன்றவர்கள் தங்கள் கருத்துகளை பதிந்தார்கள். பல தரப்பட முஸ்லிம் ஆளுமைகள், தனிப்பட்டவர்கள் போன்றவர்கள் அதனை பயன்படுத்த ஆரம்பித்தனர். ஆனால் இணையதளம் போன்றே ஒருவருக்கு அந்த தளத்தைப்பற்றி அறிமுகம் இருந்தால், அல்லது ஏற்கனவே அறிந்திருந்தால் மட்டுமே அவரின் கருத்துகளை அறிய முடியும். சிலர் அதனை மின்னஞ்சல் வாயிலாக விளம்பரப்படுத்தினர். பிரபலமானவர்கள் தங்கள் இணையதளம் மூலமாக அதனை பகிர்ந்தனர். ஒருவகையில் குப்பைக்கூளங்களுக்கிடையே இது சிறந்த ஒன்றாக இருந்தது. அதன் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியே பேஸ்புக் ,டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள்.

கூகுள் இணையதளத்தின் வலைப்பூக்களின் வருகை தான் பேஸ்புக் மாதிரியான சமூக வலைத்தளங்களுக்கு தொடக்கமாக மாறியது. வலைப்பூக்களை ஒரே நேரத்தில் பலர் பார்க்கும் வசதியை உருவாக்கி, ஒளியை விட வேகமாக பரவும் தகவல் முறையாக, காட்டுத்தீயை விட இன்னும் விசாலமாக பரந்து விரிந்து பிணைந்து கொள்ளும் கருத்து கூடமாக ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இரண்டாயிரம் ஆண்டில் தொடக்கத்தில் அமெரிக்க ஹார்வர்டு பல்கலைகழக மாணவர்களிடையே உருவானது. அதன் விளைவாக மார்க், சாவரின், ஆன்ட்ரூ காலம் டஸ்டின் மோஸ்கோவிஸ், கிரிஸ் ஹக்ஸ் போன்ற பல்கலைகழக மாணவர்கள் விளையாட்டாக இணையதளம் ஒன்றை வடிவமைத்தனர். இந்த வடிவமைப்பு 2004 ல் செயல்வடிவம் பெற்றது. முதலில் அது விளையாட்டு இணையதளமாக இருந்தது. ஒரு புகைப்படத்தை வைத்து அது Hot அல்லது Not என்று தெரிவு செய்யும் முறையாக இருந்தது. அது பல்கலைகழகங்களுக்கிடையேயான கண்ணியாக இருந்தது. பின்னர் இதனை மார்க் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியதில் 2006 ல் அது Facebook ஆக பிரபலமானது. இப்போது ஒருவர் ஏதாவது பதிவு செய்தால் அவரின் நண்பர் பட்டியலில் இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்கள் என தெரிவை பொறுத்து அந்த தகவல் மிக வேகமாக பரவுகிறது. காற்றை விட வேகமாக பரவும் தொழில்நுட்பம் இது. இதே காலகட்டத்தில் கூகுள் நிறுவனமும் Orkut என்ற சமூக வலைத்தளத்தை தொடங்கியது. முந்தைய காலத்தில் அச்சு ஊடகங்களே முன்னிலை பெற்றன. அதில் கருத்துகள் என்பவை வரையறை செய்யப்பட்டவை. எல்லா நபர்களும் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள முடியாது. அதே நேரத்தில் இணையதளங்கள் அதை இன்னும் எளிமைப்படுத்தின. சமூக பங்கேற்பு இல்லாதவர்கள் தங்களை அதில் பங்கேற்றிக்கொள்ள முடியும். சமூக வலைத்தளங்கள் இன்னும் அதனை எளிமைப்படுத்தின. இணைய இணைப்போடு கையில் லேப்டாப், ஐபேட், டேப் போன்ற நவீன கையடக்கக் கருவிகள் இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முடியும். அவர்களின் கருத்து வெளிப்பாடு அதி வேகத்தில் இணையத்தில் பரவி விடும். இப்போது எல்லோருமே அதில் பங்கேற்பாளர்களாக மாறி விடுகிறார்கள்.

சமூக வலைத்தளங்கள் உருவாகிய காலகட்டத்தில் அரபு நாடுகளில் பணிபுரியும் பல இஸ்லாமிய இளைஞர்கள் தங்களின் பொழுது போக்கிற்காக அதனை பயன்படுத்தினர். இன்றும் கூட பெரும்பாலானோர் அதற்காக தான் பயன்படுத்துகின்றனர். கையில் ஒரு லேப்டாப்பை வைத்துக்கொண்டு பணிமுடிந்து வரும் மாலைவேளையில் தங்கள் அறையில் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு மேய ஆரம்பித்தனர். நீண்டகால ஆபத்தின் தொடக்கம் இங்கு தான் உருவானது. காலப்போக்கில் எல்லா இளைஞர்களும் பேஸ்புக் மற்றும் டுடிவிட்டரில் தங்கள் கணக்கை தொடங்க ஆரம்பித்தனர். ஆப்பிள் நிறுவனம் பல கையடக்க கருவிகளை வடிவமைக்க ஆரம்பித்த தருணத்தில் அலைபேசிகளிலும் இது பரவ ஆரம்பித்தது. இது தான் பழங்கள் பழுக்க தொடங்கும் காலம் என்பது போல தமிழ்நாட்டை மையம் கொண்ட வஹ்ஹாபியம் இந்த ஊடக முறையை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டது. குறிப்பாக 2004 ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்திலிருந்து பிரிந்த பி.ஜெய்னுலாப்தீன் தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் இதனை தன் வளர்ச்சிக்கான ஊடகமாக பயன்படுத்தியது. அதில் ஓரளவு வெற்றியும் கண்டது. இந்த உத்தியை பிஜேவிடம் தெரிவித்தவர்கள் அவர்களின் தொழில்நுட்ப அல்லக்கைகள். பனைமரத்தில் நெறி கட்டிய கதை மாதிரி மண்ணடியில் தொடங்கிய இந்த செயல்பாடு அரபு நாடுகள் வரையும் நீண்டது. பேஸ்புக்கில் எப்படி செயல்பட வேண்டும் என்ற மறைமுக பயிற்சியை அவர்கள் அளித்தார்கள். அதற்கான வேர் அவர்களின் இணையதளம் மூலம் போடப்பட்டது. இதன் விளைவு தான் தமிழ்நாட்டு முஸ்லிம் இளைஞர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கூட மதவெறியர்களாக தங்களை அடையாளப்படுத்தியதற்கு காரணம். ஒரு பெரும் மரத்தின் வேர் எங்கோ ஓர் இடத்தில் தன் இருப்பை ஆரம்பிப்பது மாதிரி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு முஸ்லிம் இளைஞர்களின் பொதுப்புத்தி சமூக வலைத்தள ஜிஹாதில் இருந்து தொடங்கி இருக்கிறது.தமிழ்நாட்டில் தற்போது பொறியியல் கல்வியின் பெருக்கம் காரணமாக ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் பொறியியல் பட்டம் பெற்று வெளியே வருகிறார்கள். இவர்களில் குறிப்பிட்ட சதவீதம் பேர் உள்நாட்டிலே வேலைவாய்ப்பு பெற்றாலும் பெரும்பாலானோர் அரபு நாடுகளுக்கு சென்று விடுகின்றனர். அரபு நாடுகளின் வருமானத்தில் தங்களின் இயக்கத்தை நடத்தும் சில இயக்கங்கள் இந்த இளைஞர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் தூண்டில் இடுகின்றன. ஏற்கனவே பல இளைஞர்கள் சரியான வழிகாட்டல் இல்லாமல், உலக அறிவு குறித்த தேடல் எதுவும் இல்லாமல், இந்திய பன்முக சமூக அமைப்பு குறித்த புரிதலும் இல்லாமல் தங்கள் மூளைகளில் எஞ்சியிருக்கும் இஸ்லாம் என்ற உள்ளடக்கத்தின் மீது அதிக ஆர்வம் கொள்கிறார்கள். அதை இணையதளத்தில் காணும் போது இன்னும் ஆர்வம் அதிகமாகிறது. மாய எழுத்தட்டை (Mystic Pad)போல் நகரும் இணையத்தை பள்ளிவாசல்களாக, தாவா சென்டர்களாக, திக்ரு மஜ்லிஸ்களாக, இயக்க கொள்கை பிரசார கூடமாக இளைஞர்கள் பார்க்கும் தன்மை வேடிக்கையானது. அபத்தமானது. சமூக வலைத்தளங்களை தங்களின் சுய அவலத்தை, துயரத்தை, சமூகம் பற்றிய தங்களின் கருத்துகளை, தேசம் குறித்த அரசியல் பார்வையை பதியும் இடமாக அவர்கள் கருத வேண்டும். குறிப்பாக வளைகுடா நாடுகளில் பலர் அனுபவிக்கும் துயரங்கள், அங்கிருக்கும் பிரச்சினைகள், அரசுகளின் செயல்பாடுகள், இந்தியா குறித்த பார்வை, அரசியல் சமூக மற்றும் கலாசார அம்சங்கள் போன்ற ஏராளமான அம்சங்கள் பதிவதற்கு இருக்கின்றன. இதை விட்டு விட்டு தேவையற்ற படங்களை பதிவேற்றுவதால் ஏற்படும் விளைவுகளை யாருமே சிந்திப்பதில்லை.

சமூக வலைத்தளங்களில் முஸ்லிம் இளைஞர்களின் செயல்பாடுகளை மூன்று விதமாக வகைப்படுத்தலாம். 1. பேஸ்புக் என்பது பள்ளிவாசல் போன்று மிகவும் புனிதமானது என்று கருதி அதில் தொழ நினைப்பவர்கள், தஸ்பீஹ் எண்ணுபவர்கள், திக்ரு உச்சரிப்பவர்கள். (அல்ஹம்து லில்லாஹ், சுபுஹானல்லாஹ், மாஷா அல்லாஹ் போன்றவை)2. இஸ்லாம் எங்களால் மட்டுமே இந்த பூமியில் நிலைபெறும் என்று கருதி தாவா செய்பவர்கள். அம்மாதிரியான பதிவுகளை இடுபவர்கள். இது ஒருவகையான சமூக வலைத்தள சுவிஷேச பிரசாரம். (Social network evangelism)இதை தமிழ்நாடு மற்றும் அரபு நாடுகளில் வாழும் வஹ்ஹாபிய போதகர்கள் திட்டமிட்டே செய்து வருகின்றனர். இதில் அவ்வப்போது வரம்பு மீறுபவர்களும் இருக்கிறார்கள். இதனை அவர்கள் பாணியில் நியாயப்படுத்தும் பல வசனங்கள் மற்றும் ஹதீஸ்களை அள்ளிவிடுகிறார்கள். ஆனால் நேர்மையும், உண்மையும் இதற்கு வெளியில் தான் இருக்கிறது. 2. ஒருவர் இஸ்லாம் குறித்து ஏதாவது ஆதரவாகவோ அல்லது எதிராகவோ பதிவேற்றும் போது ஆதரவாக எழுதினால் அவரை உச்சி மோந்து புகழ்வது, இதனோடு அவருக்கும் சேர்த்து தாவா செய்வது, மற்ற மதங்களை இகழ்வது போன்றவற்றை செய்வது. அதே நேரத்தில் எதிராக எழுதினால், அல்லது எதிரானது மாதிரி தோன்றினால் உடனே எவ்வித வரம்பும் இல்லாமல், குறைந்த பட்ச வார்த்தை நாகரீகம் கூட இல்லாமல் அவர்களை மிகவும் கேவலமாக திட்டுவது, வசைபாடுவது, இதனை கருத்து ஜிஹாத் என்று தன்னைத்தானே புகழ்ந்து கொள்வது போன்றவை நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் பலருக்கு விமர்சனத்திற்கும், திட்டுவதற்குமான வித்தியாசம் தெரியவில்லை. இஸ்லாம் பற்றிய கருத்திற்காக மற்றவர்களை படுகேவலமாக திட்டியே சுகங்காணும் பலர் இருக்கின்றனர். இதனை அதிகாரபூர்வமாக சமூக வலைத்தளத்தில் தொடங்கி வைத்தது பிஜேவின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத். கடந்த வருடம் ரிசானா நபீக் விவகாரத்தில் நடந்து கொண்டது முதல் கமலஹாசன் விவகாரம் வரை பிஜேவின் அதிகாரபூர்வ ஆசீர்வாதம் இதற்கு எப்போதும் உண்டு. குறிப்பாக கமலஹாசன் விஷயத்தில் அவரே நம் எதிரிகளை எவ்வித வரம்பும் இல்லாமல் எப்படி வேண்டுமானாலும் திட்டலாம் என்று பத்வாவே கொடுத்து விட்டார். பேஸ்புக்கில் இயங்குவதே தன்னை தூய வஹ்ஹாபியாகவும், நேர்மையான இயக்கவாதியாகவும் வெளிக்காட்டிக்கொள்ளும் அடையாள அரசியல் என்பதை அபத்தமாக புரிந்து கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தினர் பேஸ்புக்கில் செயல்பட்டு வருகின்றனர். 3. இம்மாதிரியானவர்கள் நிஜவாழ்க்கையில் நனவிலியில் பின்தொடரும் தங்களின் ஆணாதிக்க மனோபாவத்தை சமூக வலைத்தளத்திலும் வெளிக்கொணர்கின்றனர். குறிப்பாக பேஸ்புக்கில் இயங்கும் முஸ்லிம் பெண்களை இவர்கள் படுத்தும்பாடு மிகவும் அகோரமானது. தங்களின் சொந்த புகைப்படத்தை வைத்துக்கொண்டால் அதற்கு போய் அவர்களிடத்தில் உன் கைகளை வெட்டி விடுவார்கள், கால்களை வெட்டுவார்கள், முகத்தை வெட்டுவார்கள் என்பது போன்ற அறிவுரை கூறுவது, கொஞ்சம் மீறினால் அதட்டுவது, மிரட்டுவது, மேலும் பிற பெண்களின் கருத்துகளுக்கு முஸ்லிம் பெண்கள் யாராவது ஆதரவாக கருத்து சொன்னால் அல்லது லைக் சொடுக்கினால் அவர்களை மிரட்டுவது , அறிவுரை கூறுவது போன்ற விநாச செயல்களையும் ஒரு பிரிவினர் செய்து வருகின்றனர். இதில் வேடிக்கை கலந்த விநோதம் என்னவென்றால் இப்படி அறிவுரை கூறும் அல்லது மிரட்டும் ஆண்கள் அத்தனை பேருமே தங்களின் நட்பு பட்டியலில் ஏராளமான பெண்களை இணைத்து வைத்திருக்கிறார்கள் என்பது தான். அவர்களுடன் அரட்டை அடிப்பவர்கள் இன்னும் அதிகம்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பேஸ்புக்கில் இயங்கி வரும் எனக்கும், சில நண்பர்களுக்கும் வஹ்ஹாபிய அல்லது விநாச மடத்தனம் கொண்ட முஸ்லிம் இளைஞர்களிடம் இருந்து கசப்பான அனுபவங்களே கிடைத்திருக்கின்றன. என்னால் அதிகம் பிளாக் செய்யப்பட்டவர்கள் அந்த இயக்கத்தவர்களே. அந்த அனுபவங்கள் சில சமயங்களில் இம்மாதிரியான இளைஞர்களின் மனநிலையை துல்லியமாக அறிந்து கொள்வதற்கும், அவர்களின் அரசியல் காரணங்களை புரிந்து கொள்வதற்கும், அதன் நதிமூலத்தை தேடுவதற்குமான வாய்ப்பாகவும் அமைந்தன. பெரும்பாலும் பிஜேவின் இயக்கத்தினர் தான் இதனை இறைவனுக்காக செய்யும் மிகப்பெரும் புனிதப்போர் என்று கருதுகின்றனர். மற்றொரு வகையில் தங்கள் இயக்க தலைமைகளை திருப்திப்படுத்தவும், இயக்க கடமையை நிறைவேற்றவும் இதனை வாய்ப்பாக பயன்படுத்துகின்றனர். தலிபான், சவூதி அரேபியா, வஹ்ஹாபியம், முஸ்லிம் பெண்கள் மற்றும் இயக்கங்கள் குறித்த கருத்துப்பதிவுகளுக்கு எல்லாம் மிக மோசமான, அருவருப்பான, வெறித்தனமாக கருத்துகளை பதிவேற்றுவது, இன்னும் ஒரு கட்டத்தில் தனிச்செய்தி பெட்டியில் வந்து மிரட்டுவது, ஆபாசமாக குடும்பத்தினரை இழுப்பது இப்படியான பல விஷயங்களை இவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். அதே நேரத்தில் இவை சாராத பல அரசியல், சமூக விஷயங்களை பதிவேற்றும் போது இவர்கள் யாருமே எட்டிப்பார்ப்பதில்லை. தனியான தீவு ஒன்றை கட்டி எழுப்பும் முயற்சி இது. இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால் சில மாதங்களுக்கு முன்பு சன் நியூஸ் தொலைக்காட்சியில் தேர்தலில் வாக்காளர் பங்களிப்பு குறித்த விவாதத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதை செய்தியாக பேஸ்புக்கில் போட்டிருந்தேன். உடனே ஒருவர் இஸ்லாம் பற்றி ஏதாவது பேச நேர்ந்தால் உங்களுக்கு தெரிந்ததை பற்றி மட்டுமே பேசுங்கள் என்று அறிவுரை கூறி இருந்தார். தலைப்பிற்கும் தான் சொல்வதற்கு என்ன சம்பந்தம் என்பது பற்றி கூட அவர் யோசிக்க தயாரில்லை. இப்படியான அப்பாவிகளுக்கும் கூட பேஸ்புக் இடமளிக்கிறதே என்று நினைத்துக்கொண்டேன். நான் எங்கு விவாதத்திற்கு சென்றாலும் இஸ்லாமிய மார்க்கம் குறித்து கருத்து சொல்ல வேண்டும் என்பது அவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மரத்தில் இலையொன்று உதிர்ந்து விழுந்து நகர்ந்து செல்வது மாதிரி நான் இவற்றையெல்லாம் கடந்து செல்கிறேன். எண்களின் சரியான கூட்டுத்தொகையை பிடிவாதமாக மறுப்பவர்களிடத்தில் நாம் கடந்து செல்வதே மேல். பல நேரங்களில் மௌனமே சிறந்த பதிலாக இருக்கிறது. மற்றொரு நண்பருக்கும் இது மாதிரி நிகழ்ந்திருக்கின்றது. அவர் திரைப்பட துறையில் பணியாற்றுபவர். அதனை தன் விவரக்குறிப்பாக பேஸ்புக்கில் வைத்திருக்கிறார். அதனை வைத்து அவரை மிக மோசமாக காபிர் என்று திட்டியிருக்கிறார்கள். ரிசானா விஷயம் குறித்த கருத்து பதிவிற்காக அவரை மிகக்கேவலமாக விளக்கு பிடிக்கும் மாமா என்ற அளவிற்கு திட்டினார்கள். எந்த கருத்தையும் அதற்கே உரிய தர்க்கத்தோடு, அறிவார்ந்த ரீதியிலான கேள்வியாக முன்வைப்பதற்கு பதிலாக பேஸ்புக் அளிக்கும் கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி அதனை நாசம் செய்யும் வேலையில் தமிழ்நாட்டு முஸ்லிம் இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் காமெடி என்னவென்றால் தாங்கள் செய்வது அநாகரீகம் என்று தெரிந்தும் என் கேள்விக்கு பதில் இல்லை, என்னிடத்தில் தோற்று விட்டார் என்று சுயமாக சொரிந்து கொண்டு சிலர் புலம்புவதும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. பிஜேவின் இயக்கத்தினர் நடிகர்கள் மீது ரசிகர்கள் காட்டும் வெறித்தனமான ரசனையை விட அதிகம் பிஜேவிடம் வெளிப்படுத்துகின்றனர். நபிக்கு அடுத்த படியாக பிஜே தான். இறைவன் பிஜேவையே நபியாக அனுப்பி இருக்கலாம் என்று கூட சுயத்தை மறந்து, தன்னியல்பை இழந்து பிஜே வெறி காரணமாக பதிவிடுகின்றனர். உடல் மண்ணுக்கு உயிர் பிஜேவுக்கு என்ற வெறி காரணமாக யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் திட்டலாம் என்பதன் அடிப்படையில் இயங்கி வருகிறார்கள். இது பல தருணங்களில் பிற சமூக ஆளுமைகளிடம் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் படித்த முஸ்லிம் இளைஞர்கள் தான் தீவிரமாக இயங்கி வருகிறார்கள். அரபு நாடுகளில் கையடக்க கருவியோடு ஓய்வு நேரத்தில் அல்லது வேலை நேரத்தில் பேஸ்புக்கில் தங்கள் பொழுதை ஓட்டுவது எப்படி தீவிர சமூக விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். இதன் பின்னரசியலை தீவிரமாக ஆராயும் போது உலமாக்களின் உப்புசப்பற்ற, சமூக அக்கறை சாராத உள்ளடக்கமற்ற பேச்சுகளும் இதற்கு ஒரு காரணமாக இருக்கின்றன. சமூகத்தோடு அவர்கள் நடத்தும் முக்கிய உரையாடல் களமான வெள்ளிக்கிழமை உரைகளில் பெரும்பாலும் சடங்கார்த்தமான பேச்சுகளே வெளிப்படுகின்றன. பெரும்பாலும் எவ்வித லௌகீக விஷயங்களோ, சமூக, அரசியல், பொருளாதாரம் சார்ந்த பார்வைகளோ அதில் வெளிப்படுவதில்லை. இது சாதாரண இளைஞர்களின் மூளைகளை வெற்றிடமாக்கி, இஸ்லாம் பற்றி வெறுமனே ஒரு இயந்திரத்தனமாக புரிதலுக்கு அவர்களின் மூளையை தயார்படுத்துகிறது. இது தான் நான் குறிப்பிட்ட முதல் வகையான பிரிவினர் உருவாக காரணம். வெறும் படங்களை பதிவிட்டு லைக் வாங்குவது. அதில் சுகம் காண்பது. இரண்டாம் வகையான விநாச விபரீத இளைஞர்கள் உருவாக வஹ்ஹாபிய இயக்க தலைமைகள் காரணம். தங்களின் ஆட்பலத்திற்காக இப்படியான இளைஞர்களை உருவாக்கி விடுகிறார்கள். சமீபத்தில் நடந்த சென்னை சென்ட்ரல் ரெயில் குண்டுவெடிப்பைப் பற்றி திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்த கருத்திற்காக பிஜேவின் தவ்ஹீத் ஜமா அத் இயக்கத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் கருணாநிதியை மிகவும் ஆபாசமாக கிராபிக்ஸ் செய்து பதிவிட்டிருந்தார். இதனை தெரிந்தோ அல்லது அப்பாவித்தனமாகவோ பல முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் பக்கங்களில் பகிர்ந்தார்கள். விளைவு இணையதள திமுகவை சார்ந்த பலர் சம்பந்தப்பட்ட நபரை விமர்சிப்பதற்கு பதிலாக இஸ்லாத்தை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். இணையத்தில் திமுக மீதான விமர்சனம் பரவலாக இருப்பதால் திமுகவினர் இதனை மிக தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. இல்லையென்றால் மும்பை மாதிரியான சம்பவத்திற்கு இது வழிவகுத்திருக்கும். இந்துத்துவ அமைப்புகள் நிஜவெளியில் செய்வதை இவர்கள் சமூக வலைத்தளத்தில் செய்கிறார்கள். இருவருக்குமான வித்தியாசம் அவ்வளவே. அதே நேரத்தில் பேஸ்புக்கில் இயங்கும் இந்துத்துவ இயக்கத்தினர் கூட தமிழ்நாட்டை பொறுத்தவரை இவ்வளவு மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதை நான் பார்த்ததில்லை. நாளுக்கு நாள் அப்படியாக போய்க்கொண்டிருக்கிறது சமூகம். மேலும் பிஜேவின் இயக்கத்தினர் நடிகர்கள் மீது ரசிகர்கள் காட்டும் வெறித்தனமான ரசனையை விட அதிகம் பிஜேவிடம் வெளிப்படுத்துகின்றனர். நபிக்கு அடுத்த படியாக பிஜே தான். இறைவன் பிஜேவையே நபியாக அனுப்பி இருக்கலாம் என்பதாக சுயத்தை மறந்து, தன்னியல்பை இழந்து பிஜே வெறி காரணமாக பதிவிடுகின்றனர். உடல் மண்ணுக்கு உயிர் பிஜேவுக்கு என்ற வெறி காரணமாக யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் திட்டலாம் என்பதன் அடிப்படையில் இயங்கி வருகிறார்கள். இது பல தருணங்களில் பிற சமூக ஆளுமைகளிடம் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்கள் சில தருணங்களில் இஸ்லாம் குறித்து விமர்சனமாகவோ அல்லது கரிசனம் சார்ந்தோ ஏதாவது பதிவிட்டால் ஜிஹாத் லேபிளை தாங்கி மார்க்கபந்துவாக உடனே புறப்பட்டு விடுகிறார்கள். இது முக்கிய ஆளுமைகளை கூட இந்துத்துவா நோக்கி நகர்த்த முயற்சிக்கிறது. இது ஒருபுறமிருக்க பல அப்பாவி இளைஞர்கள் மூளைச்சலவை காரணமாக இன்றைய கட்டத்தில் தீவிரவாதத்தில் போய்க்கொண்டிருப்பது கவலையளிக்கும் அதே நேரத்தில் சமூக வலைத்தளங்கள் அந்த வேலையை மிகவும் எளிதாக செய்யும் அபாயம் இருக்கிறது. இரண்டிற்குமான சலவையின் வித்தியாசம் நூலிழை தான். அதற்கு சில இயக்கங்களே எண்ணெய் வார்ப்பது மிகவும் துயரம்.

சமூக வலைத்தளத்தில் ஈடுபடும் பல இளைஞர்களுக்கு சரியான மார்க்க அறிவு இருப்பதில்லை. எங்கிருந்தோ கேட்ட தலைவர்களின் உரை, யாரோ ஒருவர் பதிவிட்டதன் நகல் மற்றும் தமிழில் குர் ஆன், ஹதீஸ் இவற்றின் நகல் போன்றவற்றை தங்கள் தகவல் சுவரில் ஒட்டிக்கொள்வதன் மூலம் தான் மிகப்பெரும் இஸ்லாமிய அறிஞர் என்ற போலியான பிம்பத்தை கட்டமைக்க பலர் முயலுகின்றனர். அவர்களை பின்தொடர ஓர் அப்பாவியான கூட்டம். இப்படியாக பலவிதத்தில் தமிழ்நாட்டு முஸ்லிம் இளைஞர்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தாலும் அவர்களின் சுவரில் போய் மிகவும் கேவலமாக, ஆபாசமாக நடந்து கொள்வது, கொன்று விடுவேன் என்று மிரட்டுவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இதன் விபரீதம் குறித்தோ, பன்மய சமூக அமைப்பில் அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தோ எவ்வித புரிதலோ, சிந்தனையோ இல்லாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது தமிழ் முஸ்லிம் இளைய சமூகம். இது நூல்கண்டின் பின்தொடரலாக தொடர்ந்து கொண்டிருப்பது தான் பெரும் வேதனை. மேலும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் வழக்கத்தை விட தமிழ்நாட்டில் பிஜேபிக்கு 2.5 சதவீதம் வாக்குகள் அதிகமாக கிடைத்ததற்கு படித்த மத்திய தரவர்க்க இந்து இளைஞர்களே காரணம். அதற்கு மூலமாக இருவிதமான காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று ஊடகங்கள் இந்தியா முழுவதும் ஊதி பெருக்கிய மோடி அலை. இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் பேஸ்புக்கில் நடந்து கொள்ளும் விதம். இது சாதாரணமான படித்த சாதிய இந்து இளைஞர்களை பிஜேபி பக்கம் சாய வைத்திருக்கிறது. இவை எல்லாம் மிக எளிதாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விஷயங்கள் அல்ல.

சமூக வலைத்தளங்களை மதபிரசாரங்களுக்கு பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் எதிர்மறையானது. அது சமூகம் பற்றிய அதீத வெறுப்பையும், ஒவ்வாமையையும் பிற சமூகத்தினரிடம் ஏற்படுத்தும். யாராவது ஒருவர் இஸ்லாத்திற்கு வரும் போது சம்பந்தப்பட்டவருக்கு இருக்கும் மகிழ்ச்சியை விட இவர்கள் தான் அதிகமும் மகிழ்கிறார்கள். துள்ளிக்குதிக்கிறார்கள். அவரின் புகைப்படத்தை போட்டு அவர் முன்பு சார்ந்திருந்த மதத்தை திட்டுவதை பலர் தங்களின் தொடர்ந்த செயல்பாடாக செய்து வருகின்றனர். அது மற்றவர்களின் கோபத்திற்கு ஆளாகிறது. இஸ்லாத்திற்கு ஒருவர் வருவதால் கருத்து போடும் தங்களுக்கு தனிப்பட்ட எந்த பயனும் இல்லை என்பதை அவர்கள் உணரத்தயார் இல்லை. மேலும் இஸ்லாத்திற்கு கூட நன்மையளிப்பது இல்லை. எண்ணிக்கை எப்போதும் வளர்ச்சி ஆகாது. மனித வளர்ச்சி குறியீடு தான் உண்மையில் சமூக வளர்ச்சி. மேலும் மேற்கத்திய நாடுகளில் யாராவது ஒருவர் இஸ்லாத்திற்கு வந்து விட்டால், அந்த தகவலின் உண்மைத்தன்மையை கூட பரிசோதிக்காமல் வழக்கமான புராணத்தை ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் பலர் முஸ்லிம் இளைஞர்களை கோமாளிகளாக கூட பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர். சமூக வலைத்தளத்தின் நோக்கம் என்பது பரஸ்பர ஆக்கபூர்வ கருத்து பரிமாற்றமே. இந்திய சமூகத்தை பொறுத்தவரை பரிமாறுவதற்கு, பதிவிடுவதற்கு, பரஸ்பரம் விவாதிப்பதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் வெறுமனே இஸ்லாமிய வட்டத்திற்குள் நின்று கொண்டு மதபிரசாரம் மற்றும் இயக்க தாங்கு பிரசாரம் செய்வது சமூக துண்டிப்பையே நிகழ்த்தும். மேலும் ஒரு கட்டத்தில் வன்முறைக்கே வழிவகுக்கும். ஆக சமூக வலைத்தளங்களில் முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் போக்கை, செயல்பாட்டை மாற்றிக்கொண்டு, சமூக அக்கறை சார்ந்த, ஆக்கபூர்வமான விஷயங்களை பதிவிடுவது அவர்களுக்கும் நல்லது. சமூகத்திற்கும் நல்லது. எதிர்கால தலைமுறைக்கும் நல்லது. இதனை உணர்ந்து கொள்வதில் தான் பல படிப்பினைகள் இருக்கின்றன. இது தான் ஜிஹாத் என்று போலியாக நம்பி மிக பிடிவாதமாக இதனை தொடர்ந்தால் அதன் பின்விளைவுகள் தலைமுறைகளை கடந்து கூட போய்க்கொண்டிருக்கும். இறுதியில் பேரழிவு சமூகத்திற்கு தான்.