காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Saturday, June 28, 2014

உலகமயமாக்கலில் சமூகம் மற்றும் கலாசாரம் - மேற்கும் கிழக்கும் ஓர் ஒப்பீடு



கலாசாரம் என்பது சமூகத்திலிருந்து பிரிக்க முடியாதது. அதன் தவிர்க்க முடியாத ஓர் அங்கம் கூட. உலகில் எந்த சமூகமும் அதற்கான சொந்த கலாசாரங்களை கொண்டே இயங்கி வருகிறது. கலாசாரமற்ற சமூகங்களை வரலாற்றில் நாம் காண்பது அரிது. பனிப்போருக்கு பிந்தைய காலகட்டத்தில் சமூகங்களின் கலாசாரம் என்பது உலக அரசியலை வடிவமைக்கும் சக்தியாகவும் மாறி இருக்கிறது. தேசங்களிடையே, நாகரீகங்களிடையே, இரு மதங்களிடையே கலாசார யுத்தங்கள் அகவய மற்றும் புறவய நிலையில் நடந்து வருகின்றன. மனித வாழ்க்கையின் இயக்கத்திற்கு கலாசாரம் முக்கிய இயங்கு சக்தியாக இருக்கும் நிலையில் உலகமயமாக்கல் சூழலில் அது ஏற்படுத்தும் பாரிய தாக்கத்தை அவதானிக்க வேண்டியதிருக்கிறது. இங்கு கலாசாரம் என்பது குறிப்பிட்ட மக்கட்தொகுதியினர் தங்களின் மனோபாவம், நம்பிக்கைகள், மதிப்புகள் மற்றும் நடத்தைகள் போன்றவற்றை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது  என்பதாகும். இது கலாசாரம் குறித்த விளக்கமாக சில மேற்கத்திய அறிவுஜீவிகளால் பயன்படுத்தப்படுகிறது. அது எப்படி அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது, பகிரப்படுகிறது என்பதற்கான அரசியல் ஆராயப்பட வேண்டும்.


உலகமயமாக்கல் உலக மக்களிடையே செயற்கையான உள்பிணைப்பையும், கூட்டிணைவையும் உருவாக்க முயல்கிறது. அதனை விரிவாகவும், ஆழமாகவும் நிகழ்த்த நம்மை எத்தனிக்கிறது. இந்நிலையில் உலக கிராமம் என்ற கருதுகோள் மேற்கண்டவற்றிற்கு  தீவிர உயிரோட்டத்தை அளிக்கிறது.
மேலும் அறுபதுகளில் நிலாவை கண்டறிந்த நிகழ்வானது மூடியிருந்த உலகின் கண்களை திறப்பதற்கு காரணமாக அமைந்தது. நிலவின் பயணம் உலகம் ஒன்றோடொன்று வலைப்பின்னலாக இருக்கிறது என்பதை உணர வைத்தது. அடுத்த நூற்றாண்டிற்கான உலகத்தை தயார் செய்ய அது ஒரு தொடக்கத்தை அளித்தது. மேலும் தேசங்களில் சமூக மாற்றத்திற்கான தொடக்கமும் அதன் மூலம் குறிக்கப்பட்டது. மேலும் நாடுகளில் அதிகரித்த மக்கள்தொகையானது பூமியின் வளங்கள் எல்லாம் வரம்பிற்கு உட்பட்டவை என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தியது. அதுவரையிலும் மனித சமூகம் வளங்கள் குறித்த பேராசையை மட்டுமே தன் இயல்பான நம்பிக்கையாக வைத்திருந்தது. இந்நிலையில் உலகமயமாக்கல் மனிதனின் அசல்தன்மையை வலிமைப்படுத்தும் ஒன்றாக மாறியது.  அதே நேரத்தில் தகவல் மற்றும் தொலை தொடர்பு துறையில் அது நிகழ்த்திய வேக பாய்ச்சல் சக மனிதனின் அசல்தன்மையை இழக்கும் ஒன்றாகவும் மாறியது என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். மேலும் பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாசார ஊடுபாவல்களுக்கு பெரும் வழிவகுத்தது. அந்த ஊடுபாவல் இயங்கும் வகையிலான சந்தை வடிவத்தில் தான் இருந்தது. முன்னை விட அதிக வர்த்தக போக்கு, மூலதனம், நிதி, சுற்றுலா, புலப்பெயர்வு, தகவல் மற்றும் அறிவு ஆகியவை  உலகம் பின்னலுக்கு நெருங்கி வருவதை வெளிப்படுத்தின. மேலும் உலக கிராமம் (Global Village)என்ற கருத்தாக்கமும் சீன கன்பூசிய கருதுகோளான பெரும் ஒற்றுமை என்பதன் மறுவடிவம் தான். சீனாவின் கன்பூசியம் உலகம் பற்றிய சில பார்வைகளை வெளிப்படுத்தி விட்டு சென்றது.

உலகமயமாக்கல் மேற்கு மற்றும் கீழை உலகங்களை ஒருங்கிணைய செய்ய மேற்கொண்ட முயற்சிகள் இரு துருவங்களிலும் சமூக மற்றும் கலாசார ரீதியாக சில தகர்வுகளை நிகழ்த்தி இருக்கின்றன. அதன் அரசியலானது சமூகங்களிடையே தொடர்பு, வலைப்பின்னல், பரிமாற்றம், கூட்டிணைவு போன்ற அம்சங்களில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியில்  மேற்கின் பகுத்தறிவு தாக்கத்தால் உருவான தொழிற்துறை, நகரமயமாக்கல், மேற்கத்திய மயமாக்கல் மற்றும் நவீன மயமாக்கல் போன்ற கருத்தாக்கங்கள் கீழைநாடுகளின் கலாசார, நிறுவன மற்றும் கட்டமைப்பு வித்தியாசங்களை பெருமளவில் தகர்த்தது. ஒரே சீரான உலகம் என்பதை செயற்கையாக முன்வைக்க தொடங்கியது. இதன் காரணமாக ஏகாதிபத்திய கருத்தாக்கம் வலுப்பெற்று ஆங்கிலம் உலக சொல்லாடலாக, அமெரிக்க வகையான கேளிக்கை முறை, துரித உணவு முறை, அவசர முறை மற்றும் இளைய தலைமுறை கலாசாரம் போன்றவை  கீழை நாடுகளை ஆக்கிரமிக்க தொடங்கின. இதனால் உலகம் ஒரு முனையை நோக்கி குவிவது ஏற்பட்டது. கீழை சமூகம் மற்றும் அதன் கலாசாரமும் ஒரு முனையை நோக்கிய குவியமாக மாறியது. அதுவே கீழை சமூகத்தினரை அமெரிக்க கனவை நோக்கி நகர்த்தியது. 90 களில் இந்தியாவின் படித்த மத்தியதரவர்க்கத்தினரிடையே   உருவான   அமெரிக்க கனவு இதன் நீட்சி தான். இதன் எதிரிடையாக கீழைநாடுகளின் சமூக அறிவுஜீவிகள் ஆசிய மதிப்புகள், வலைப்பின்னல் முதலாளித்துவம் மற்றும் ஆசிய பசிபிக் நூற்றாண்டு போன்ற கருத்தாக்கங்களை முன்வைத்தனர். ஒரே சீரான உலகம் என்ற பெயரில் மேற்குலகம் கீழைநாடுகள் மீது தொடுக்கும் சமூக கலாசார யுத்தத்திற்கு பதிலடியாக இதனை முன்வைத்தனர். கிழக்காசிய நாடுகளில் இது பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அறிவார்ந்த மற்றும் ஆன்மீக தளங்களில் இது அதிகமும் ஊடுருவியது.  குறிப்பாக சீனாவில் வெகுஜன மக்களிடையே இது பற்றிய உரையாடல்கள் அதிகம் நடந்தன. 1919 ல் சீனாவில் உருவான அறிவியக்கம் நவீன மேற்குலகம் பற்றிய கருத்தாக்கத்தினை அறிந்து வைத்திருந்தது. அது பற்றிய தொலைநோக்கு உரையாடல்களையும் முன்வைத்தது. மேலும் உச்சகட்ட கலாசார புரட்சியே சீனாவின் நாகரீக வளர்ச்சிக்கு உதவும் எனவும் அறிவித்தது. இந்நிலையில் பிரெஞ்சு தத்துவமேதைகளான ழீன்பால் சார்த்தர், தெரிதா மற்றும் மிஷல் பூக்கோ போன்றவர்கள் மாவோயிசம் 1968 ல் நடந்த பிரெஞ்சு மாணவர் புரட்சிக்கு உதவியது என்று மாவோவை சிலாகித்தார்கள். மாவோயிசம் நீண்டகால புரட்சிக்கான சாத்தியபாடுகளை உள்ளடக்கி இருக்கிறது என்று சார்த்தர் ஒருமுறை குறிப்பிட்டார்.

மேற்குலகில் சமூக புரட்சிக்கு காரணமாக இருந்த கோட்பாடுகளில் மத சார்பின்மை (Secularism)முக்கியமானது. திருச்சபையின் ஆதிக்கத்திற்கு எதிராக 16 ஆம் நூற்றாண்டில் உருவான புரோட்டஸ்டண்ட் இதற்கான தொடக்கம் அளித்தது எனலாம். இந்த சொல்லை முதன்முதலாக உருவாக்கியவர் பிரெஞ்சு தத்துவமேதை பெர்டிணான்ட் பூஷன். 1841 ல் பாரிஸில் பிறந்த அவர் ஆரம்பக்கல்வி கற்று தத்துவம் மீதான ஆர்வம் காரணமாக பிரெஞ்சு பல்கலைகழகத்தில் தத்துவ படிப்பு படித்தார். அப்போதே அவருக்கு தாராள அரசியல் மீதான ஈர்ப்பு அதிகமானது. மேலும் திருச்சபையின் ஆதிக்கத்திற்கு எதிராக போராடினார். திருச்சபையும் அரசும் பிரிக்கப்பட வேண்டும் என்பது  அவரின் நீண்டநாள் கனவாக இருந்தது. அதற்காகவே Secular என்ற சொல்லாடலை பிரெஞ்சில் உருவாக்கினார். அதாவது Laicite என்ற பிரெஞ்சு சொல் இவரின் கண்டுபிடிப்பாகும். அதனைத்தொடர்ந்து இதன் பயன்பாட்டு அர்த்தத்தை விரிவாக்குவதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டார். பிரெஞ்சு தத்துவமேதையான ரூசோவின் சிவில் மதம் என்ற கோட்பாட்டின் மீது இவருக்கு அதிகம் ஈர்ப்பு இருந்தது. மேலும் இதற்காக மதசார்பற்ற மனித உரிமை அமைப்பொன்றை ஏற்படுத்தினார். இதன் தொடர்ச்சியில் 1882 ல் பிரான்சு அரசு பள்ளிகளில் மதசார்பற்ற கல்வி முறையை அறிமுகப்படுத்தியது.  பூஷன் உருவாக்கி விட்ட இந்த சொல்லாடலானது ஆரம்பகாலகட்டத்தில்  சில புரட்சிகர புரோட்டஸ்டண்ட் பிரிவை குறித்தாலும் கால போக்கில் பகுத்தறிவு இயக்கத்தை குறிப்பதாக மாறியது. மேலும் பிரெஞ்சு புரட்சி காலத்தில் மதத்திற்கும் அரசியலுக்குமான மோதல் உருவாகி இந்த சொல்லாடல் அரசு மற்றும் மதத்தை பிரிப்பதை குறித்தது. அதாவது தனியான சிவில் சமூகம் மற்றும் மத சமூகம் என்பதை குறித்தது. இருபதாம் நூற்றாண்டில் Secular இன்னும் பரிணாமமடைந்து முழு முதலான சிவில் சமூகத்தை குறித்தது. மேலும் மனிதர்களை மோசமான மனசாட்சி மற்றும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது. குடிமக்கள் அனைவருக்கும் சமமான உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் முன்வைத்தது.  இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் மதசார்பின்மை மேற்கத்திய நாடுகளில்   மத சமூகத்திடமிருந்து முற்றிலும் விலகிய சிவில் சமூகத்தை அதனை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசை குறித்தது. அரசானது எல்லா மதத்தையும் சமமாக நிராகரிக்க வேண்டும் என்ற மேற்கத்திய அரசுகளின் கோட்பாடு இதன் தொடர்ச்சி தான். ஆனால் கீழை நாடுகள் இவற்றிலிருந்து வித்தியாசப்படும் ஒன்றாக இருக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகள் மதத்தை பின்பற்றும் நாடுகளாக, அதே நேரத்தில் மதசார்பின்மை  கோட்பாட்டை பின்பற்றும் பிற நாடுகள் எல்லா மதத்தையும் சமமாக பாவிக்கும் விதமாக அதனை அர்த்தப்படுத்திக்கொண்டன. காரணம் இங்கு மதமே சிவில் சமூகத்தை தீர்மானிப்பதில் முக்கிய அம்சமாக  இருப்பதால் தான். இந்தியா அதற்கு சரியான உதாரணம்.


மதசார்பின்மை கோட்பாடானது அதன் தொடர்ச்சியில் லௌகீக சமூகத்தின் மீது  மதசார்பற்ற அறம் (Secular Morality)என்ற கோட்பாட்டை முன்வைத்தது. அதாவது மனித பிறப்பின் அடிப்படையிலான பொருளாயத மற்றும் அறிவார்ந்த சொத்துகளுக்கு  அதிக முக்கியத்துவம் அளிப்பது. உதாரணமாக வீடு, உணவு, கருவிகள், தொழில்நுட்பம், புத்தகங்கள் மற்றும் பிற அறிவு மூலங்கள் அனைத்தையும் இறப்பின் பலனாக கண்டது. இறப்பு என்பது இறப்பை தவிர  வேறொன்றுமில்லை என்றது. மனிதர்கள் நற்செயல்கள் எப்போதும் அழிவதில்லை என்றது. இது பௌத்தம் மற்றும் கன்பூசிய கோட்பாட்டை அடிப்படையாகக்கொண்டது. இரண்டுமே இதனை வேறுவடிவத்தில் முன்வைத்தன.

கலாசாரம் சமூகத்தின் வளர்ச்சியில் அல்லது அதன் இயக்கத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அபரிதமானது. சமூக மனிதர்களின் நடத்தை, நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் இவற்றின் ஒவ்வொரு நிலையிலும் இது ஊடுருவுகிறது. இன்னும் இதனை ஆழ அகலங்களுடன் ஆராய்ந்தால் தனிமனித அல்லது சமூகத்தின் உடல் மற்றும் மன உணர்வு நிலை முக்கிய இடத்தை வகிக்கிறது. இது தனிமனித/சமூகம் பற்றிய விழிப்பு நிலை, கமுக்கத்தனம் மற்றும் உள்ளார்ந்த நடவடிக்கைகள் இவற்றின் மொத்தமாக இருக்கிறது.  தனிமனித நிலையில் மேற்கத்திய நாடுகளை பொறுத்தவரை இம்மாதிரியான தன்மை வெட்கத்தனம், பயம் மற்றும் சமூக தகுதியின்மை போன்றவற்றை பிரதிபலிக்கும் ஒன்றாக இருக்கின்றன. அதே நேரத்தில் கிழக்காசிய நாடுகளில் அல்லது தென்கிழக்காசிய நாடுகளில் இம்மாதிரியான தன்மை அடக்கம், பணிவு, சமூக தகுதி, சிறந்த நடத்தை போன்றவற்றை பிரதிபலிக்கும் ஒன்றாக இருக்கின்றன. மேற்கத்தியர்களை கூர்ந்து அவதானித்தால் நாம் மேற்கண்டவற்றை உறுதிப்படுத்த முடியும். அதே மாதிரியே சீனர்களையும், ஜப்பானியர்களையும் அவதானித்தால் மேற்கண்ட உடல் உளவியல் தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

சமூக சார்பு நடத்தை (Prosocial behavior) என்பது சமூக கலாசாரத்தின் ஒரு பகுதி. அதாவது உதவி செய்தல், பகிர்தல், பராமரித்தல் மற்றும் விநயம் இவை அனைத்தும் சமூக சார்பு நடத்தையில்  உட்படும் விஷயங்கள். பெற்றோர் -குழந்தை உறவு முறை மற்றும் குழந்தைகளின் செயல்பாடுகள் சார்ந்து இவை மதிப்பிடப்படுகின்றன. மேலும் மேற்கத்திய குழந்தைகளை விட கிழக்காசிய நாடுகளின் குழந்தைகள் சமூக சார்பு நடத்தையில் தீவிரமாக இருக்கின்றன. மேலும் தங்கள் குழந்தைகள் சமூக சார்பு நடத்தை உடையனவாக இருக்க வேண்டும் என்று கிழக்காசிய நாடுகளின் அன்னையர்கள் விரும்புகிறார்கள். இது கூட்டு உணர்வின் விளைவாகும். மேலும் இந்தியா போன்ற நாடுகளில் கூட நாம் கிராமம் மற்றும் நகரத்து குழந்தைகளிடம் இந்த பகிர்தல் மற்றும் உதவுதலை காண முடியும். உதாரணமாக சாக்லேட் சாப்பிடும் குழந்தையிடம் எனக்கு கொஞ்சம் கொடு என்று சொல்லும் போது பெரும்பாலான குழந்தைகள் கொடுத்து விடுகின்றன. இது இந்திய சமூகத்தில் காணப்படும் சமூக சார்பு மனோபாவத்தின் தொடர்ச்சி.

மேற்குலகம் மற்றும் கீழைத்தேய பிரதேசங்களின் சமூக கலாசார அம்சங்களில் சுதந்திரமும்,  கூட்டிணைவும் (Independent and Interdependent) முக்கிய இடத்தை வகிக்கின்றன. சுதந்திரம் அதிக போட்டி மனோபாவத்தையும்,  குறைந்த சமூக உறவாடல் மனோபாவத்தையும் உட்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கூட்டிணைவு என்பது குறைந்த போட்டியையும், அதிக சமூக உறவாடலையும் உட்கொண்டிருக்கிறது. மேலும்  குறுக்கு கலாசாரத்தின் முக்கிய காரணியாகவும் கூட்டிணைவு இருக்கிறது. இந்நிலையில் மேற்குலகம் சுதந்திரத்திற்கும், கிழக்குலகம் கூட்டிணைவிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இரண்டிற்குமான தர்க்க மற்றும் நடைமுறைரீதியான வித்தியாசங்களை நாம் கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

பிரிவு  
சுதந்திர சமூக நோக்கு நிலை
கூட்டிணைவு சமூக
நோக்கு நிலை


மதிப்பு மற்றும் நம்பிக்கைகள்
தனிமனிதன்
தனித்துவம்
கூட்டுநிலை
சமூக இணக்கம்       
சுயம்

சுதந்திர சுயகட்டுப்பாட்டை கொண்ட சமூக அடையாளம்


சுயம் எல்லைக்குட்பட்டது


கூட்டிணைந்த சுய கட்டுப்பாடு

உறவு முறையிலான சமூக அடையாளம்

சுயம் என்பது மற்றவர்கள் மீது நெருக்கத்துடன் இணைந்திருக்கிறது.

  உணர்ச்சிகள்
சமூக செயற்பாடற்ற உணர்ச்சிகரமான நாட்டம்

மகிழ்ச்சி என்பது செயற்பாடற்ற உணர்ச்சியாக


சமூகசெயற்பாட்டுடன் கூடிய உணர்ச்சிகரமான நாட்டம்


மகிழ்ச்சி என்பது செயற்பாடான உணர்ச்சியாக

நோக்கம்

தனிப்பட்ட சாதனை

சுய வளர்ச்சி

ஈகோ

குழு சாதனை

சுய விமர்சனம்

சுயம் - மற்றவர்களுடன் உறவாடல்



மேற்கண்ட வித்தியாசங்களை நாம் இன்னமும் இரு கோளங்கள் சார்ந்த மக்கட்தொகுதியினரை அவதானிக்கும் போது அறிந்து கொள்ள முடியும். மேலும் இன அடிப்படையில் மேற்கு மற்றும் கிழக்கிற்கு அதிக வித்தியாசங்கள் இருக்கின்றன. மொழியியல் அடிப்படையும் கூட. ஐரோப்பிய மொழிகள் அனைத்துமே  பெரும்பாலும் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சார்ந்தவை. கிழக்கத்திய மொழிகளில் இருந்து கட்டமைப்பு ரீதியாகவே மாறுபடுகின்றன. மேலும் இரு பூகோள பகுதிகளுக்கும் மிகப்பெரும் கலாசார வித்தியாசங்கள் இருக்கின்றன. கிழக்கு ஆசியா நாடுகளில் கன்பூசியமும், தெற்காசிய நாடுகளில் பௌத்தமும் அதிக தாக்கத்தை செலுத்தின. அதே நேரத்தில் மேற்கு நாடுகளில் கிரேக்க தத்துவம் அதன் வழிமுறைகள் அதிக தாக்கத்தை செலுத்தியது. கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளின் சமூக வேறுபாடுகள் அதன் கால அளவை பொறுத்து மாறுபடுகின்றன. உதாரணமாக மேற்குலக நாடுகள் கீழைத்தேய நாடுகளை விட முன்னரே தொழில்மயமாகி விட்டன. மேலும் அரசியல் நிறுவனங்களின் உருவாக்கத்திலும் இவை முந்திக்கொண்டன. மேற்கண்ட இரண்டும் கீழை நாடுகளை வந்தடைய வெகுகாலம் பிடித்தது. மேலும் உடல் மற்றும் முக மொழி கூட இரண்டிற்கும் வேறுபடுகின்றது. கண்ணோடு கண்ணாக பேசுவது என்பது மேற்கத்திய சமூகங்களை பொறுத்தவரை இயல்பானதாக, நேர்பேச்சாக,தைரியத்தின் வெளிப்பாடாக இருக்கிறது. அதே நேரத்தில் கிழக்காசிய சமூகங்களில் வெட்கம், பயம், இயல்பின்மையின் வெளிப்பாடாக இருக்கிறது. சீனர்களில் பெரும்பாலானோர் கண்களை சற்று தாழ்த்திக்கொண்டு தான்  உரையாடுவார்கள்.

கீழை மற்றும் மேற்கின் சமூக கலாசார வேறுபாட்டில் மிக முக்கியமானது தனிநபர்வாதமும், கூட்டுவாதமும் (Individualism and Collectivism). மேற்கு அதிகமும் தனிநபர் வாதத்தை முன்வைக்கிறது. குடும்பம் என்ற நிறுவனம் அங்கு அதிக வலுவானதாக, முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. காதல் என்பதும், திருமணம் என்பதும் பெரும்பாலும் தனிநபர் சார்ந்த விஷயமே. மேலும் தனிநபர்வாதம் தனிநபரின் சாதனை, படைப்பாற்றல், கலைத்திறன், வாழ்வியல் வெற்றி போன்றவற்றிற்கு சமூக அந்தஸ்தை அளிக்கிறது. மேற்குலகம் பெரும்பாலும் இதனை சார்ந்திருக்கிறது. கீழை நாடுகளை ஒப்பிடுகையில் மேற்குலகில் அறிவியல் மற்றும் பிற அறிவுத்துறை செயல்பாடுகள் அதிகம் நிகழ இந்த தனிநபர் வாதமும் ஒரு காரணம். கூட்டு வாதம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஆப்ரிக்காவை நாம் சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும். அங்கு தனிநபர்கள் சந்தேகத்தோடு பார்க்கப்பட்டார்கள். அவர்களின் உணவு பகிர்தல் இனக்குழுக்களோடு இணைத்துக்கொள்ளப்பட்டது. கூட்டுத்தண்டனை முறையும் அமலில் இருந்தது. மேலும் சமூக ஒதுக்கல், தகுதி இழப்பு போன்றவையும் அங்கு வழக்கில் இருந்தன. இந்திய சமூகங்களில் சாதிய பஞ்சாயத்து முறைகள் மற்றும் சாதிவிலக்கம் போன்ற தண்டனை முறைகள் இப்போதும் வழக்கில் இருக்கின்றன. இது கீழைத்தேய கூட்டுவாதத்தின் பின் தொடர்ச்சியாகும்.

கலாசார உளவியல் (Cultural Psychology)என்பதில் மேற்கண்ட தனிநபர் மற்றும் கூட்டு வாதத்தின் வித்தியாசங்கள் ஆழமான நிலையில் மிகுந்த தாக்கத்தை செலுத்துகின்றன. அது நடத்தை மற்றும் அறிவார்ந்த செயல்பாடுகள் மீது மனித சமூகத்தில் பல வித்தியாசங்களை உருவாக்குகிறது. மேலும் மனிதனின் சுயம் (Self)மீதும் தாக்கம் செலுத்துகிறது. மேற்கு மற்றும் கீழை சமூகங்களிடையே ஒரே மாதிரியான சமூக பொருளாதார தகுதியை கொண்ட மனிதர்களை அல்லது குடும்பங்களை நாம் அவதானிக்கும் போது அவை தங்களுக்குள் தனிநபர் மற்றும் கூட்டுவாதம் சார்ந்த கலாசார வேறுபாடுகளை கொண்டிருப்பதை கண்டறிய முடியும்.

சமூகங்களிடையே பேஷன், மரபு மற்றும் பழக்கவழக்கங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை பற்றி பிரபல சமூக விஞ்ஞானியான மாக்ஸ் வெபர் ஆராய்ந்தார். பயன்பாடு (Usage)தான் இதன் தொடக்கம் என்றார். மனிதனின் அன்றாட செயல்பாடு சார்ந்த பயன்பாடு தொடர்ச்சியாக நிகழும் போது அது ஒழுங்குமுறையாகிறது. உதாரணமாக கடலில் மீன் பிடிக்கும் மீனவர் மீன் அதிகம் இருக்கும் இடங்களில் தன் வலையை விரிக்கிறார். விற்பனையாளர் தன் வாடிக்கையாளரை தொடர்ந்து தொடர்பு கொள்கிறார். நாம் அன்றாடம் உடையை இயல்பாக உடுத்திக்கொள்கிறோம். இம்மாதிரியான செயல்பாடுகள் தொடர்ந்து நிகழும் போது அதுவே ஒழுங்குமுறையாகி ஒரு சமூகத்தின் பழக்கவழக்கமாகிறது (Custom). மேலும் ஒழுங்குமுறையானது  அதன் புதுமைக்காக பகுதியாக பின்பற்றப்படும் போது அது பேஷனாக மாறுகிறது என்றார் மாக்ஸ் வெபர். இதன் அடிப்படையில் இந்திய சமூகம் அல்லது சில கீழை சமூகங்களை பொறுத்தவரை உடை என்பது பேஷனாக, நவமயப்பட்டதாக இருக்கிறது. ஆனால் மேற்கத்திய சமூகத்தில் அது தட்ப வெப்பத்தோடு இயைந்த பழக்கவழக்கமாக இருக்கிறது.

குடும்பம் என்ற நிறுவனம் மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய சமூகங்களில் வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமான மாறுதல்களை அடைந்திருக்கிறது. பருண்மையான அறம் என்பதிலிருந்து உருவான பழிவாங்குதல் முறை உலக சமூகங்களிடையே குடும்பம் என்ற நிறுவனத்தின் உள்ளிருந்து பல்வேறு வித மோதல்களையும், போர்களையும் உருவாக்கி இருக்கிறது. குடும்ப கௌரவம் என்பதாக இது அர்த்தப்படுத்தப்பட்டது. அதாவது குடும்பத்தில் உள்ள ஒருவர் தன் பலத்தை நிரூபிக்க மற்றவர்களுடன் மோதுவது அல்லது பழிவாங்குவது என்பது இதன் விரிவாக்கம்.கிரேக்கத்தின் ஒடிசியஸும், இந்தியாவின் மகாபாரதமும் இதற்கான சரியான உதாரணங்கள். காலத்தின் நகர்வில் இது பல நூற்றாண்டுகளை கடந்து பரிணாமம் அடைந்து குடும்பம் என்ற நிறுவனம் மேற்குலகில் கருத்தளவில் சிதையும் நிலைக்கு சென்றிருக்கிறது. தனிநபர்வாதம் மற்றும் சுதந்திரம் முன்வைக்கப்படும் நிலையில் கீழை சமூகங்களில் இது இன்னும் வலுவாக இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் குடும்பம் என்ற கட்டமைப்பு மேலும் வலுப்பெற்று வருகிறது. குறிப்பாக சாதிய சமூக அமைப்பின் பின்புலத்தோடு அறுபடாத சங்கிலி போன்று பின்னி பிணைந்திருக்கிறது. அது நேரற்ற வேர்களாக குறுக்கு மடுக்குமாக அமைந்திருக்கிறது. மேலும் இந்திய சமூகத்தில் கலாசாரம் என்பது சில தருணங்களில் தட்பவெப்பத்தோடும், புவியியல் அமைப்போடும் இயைந்திருக்கிறது. இந்தியாவின் பெரும்பாலான வீடுகளில் கழிவறை இல்லாமல் திறந்த வெளியாக இருப்பது இதற்கு உதாரணம். பாரம்பரிய விவசாய நாடான இந்தியாவில் சக மனிதன் தன் விவசாய நிலத்தோடு இணைந்தே தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டான். தண்ணீரும் அதனோடு இணைந்து இருந்த காரணத்தால் அதனோடு அவன் பயணம் செய்தான். அதன் தொடர்ச்சியும் எச்சம் தான் இன்றைய கழிவறை அற்ற நிலை. மேலும் வற்றாத ஜீவநதிகளை, அதன் இயல்பான ஓட்டத்தை கொண்டிருக்கும் இந்தியாவில் தண்ணீர் சார்ந்த கலாசாரங்கள் பல வழக்கில் இருப்பதை கவனிக்க முடியும். மேற்குலகில் இதனை நாம் பார்க்க முடியாது.

சமூகமும் கலாசாரமும் ஒரே தடத்தில் பயணம் செய்யும் போது அது தனிமனிதனை அல்லது ஒரு பலவீனமான குழுவை பாதிக்காமல் நகரும் போது இங்கே மோதல்கள் இல்லை. ஆனால் அதுவே ஆதிக்கமாக, அதிகாரமாக மாறும் போது மனித இனத்தை பாதிக்கிறது.  மிதிக்கப்படும் வஸ்துக்கள் போன்று குழுக்கள் விளிம்பு நிலை குழுக்களாக மாறுகின்றன. பொருளாதாரரீதியாக உலகை ஒருமைப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகமயமாக்கல் சமூக கலாசாரங்களையும் அதன் ஓட்டத்தையும் தடை செய்ய முயல்கிறது. இது மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய சமூகங்களை அதிகம் பாதித்திருக்கிறது. இரு கோளங்கள் சார்ந்த கலாசார மோதல்கள் இன்னும் நடந்து வருகின்றன. இலக்கிய பிரதிகள் வேறுபட்ட கலாசாரத்தை தாண்டும் போது வாசகனை பாதிப்பது மாதிரி, மேற்கும், கிழக்கும் இன்று உள்வாங்கலுக்கும், மோதலுக்குமான இடைவெளியில் போராடிக்கொண்டிருக்கின்றன. இதுவும் ஒருவகையான உலக இயங்கியலே..


Wednesday, June 11, 2014

தத்துவமும் அறிவியலும் - ஓர் ஒப்பீடு


ஆரம்ப உலகில் அறிவியலும் தத்துவமும் ஒன்றாகவே இருந்தன. நாடோடியாக அலைந்த மனிதன் இயற்கையை நேசிக்க, அவதானிக்க தொடங்கியதிலிருந்தே தத்துவம் பிறந்து விட்டது. இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு, இயற்கைக்கு அப்பால் உள்ள உறவு, உலகின் தோற்றம், மனிதனின் பரஸ்பர உறவுகள் குறித்த தேடல் இவை அனைத்தும் தத்துவத்தின் பிறப்பிற்கு ஆதாரமாக அமைந்தன. அறிவியல் உலகை நிரூபணமான உண்மைகளால் அறிய முயற்சித்தது. கடந்து போன அனுபவத்தை தற்கால மனிதன் பரிசோதனை செய்யும் போது அறிவியல் பிறக்கிறது என்றார் விஞ்ஞானி பெய்மென் ஆரம்பகாலத்தில் தத்துவாதியும், அறிவியலாளரும் ஒருவரே. அவர்களுக்குள் பெரிய வித்தியாசங்கள் இல்லை. இந்நிலையில் சாக்ரடீஸ், அரிஸ்டாடில், பிளாட்டோ, தைலமி, ஹெரோடடஸ் போன்றவர்கள் விஞ்ஞானிகளாகவும் , தத்துவவாதிகளாகவும் இருந்தனர்.


முதல் தத்துவ கோட்பாடு எது என்பதில் தெளிவான தரவுகள் இல்லை. இருந்தும் உலகம் என்பது தண்ணீரை தவிர வேறில்லை என்பதே முதல் கோட்பாடாக அறியப்படுகிறது. இதனிலிருந்து தான் அறிவியலே பிறந்தது என்கின்றனர் சிலர். அறிவியலானது உலகை நிரூபணமான உண்மைகளால் அறிய முயற்சித்தது. எதையும் நடைமுறை உண்மைகளோடு பொருத்தி பார்ப்பதே அதன் வேலை. இதனடிப்படையில் ஒரு விஞ்ஞானி தான் உத்தேசிக்கிற கோட்பாட்டை , அதற்கே உரிய நிரூபண செயல்முறைகளோடு, அவதானத்தின் அடிப்படையில் விளக்குவார். தத்துவம் போன்று வெறும் தர்க்கத்தை வெளிப்படுத்தி விட்டு அது நகர்ந்து விடுவதில்லை. இயற்கையின் இயக்கத்தை,  சில தர்க்கங்களாக விவரித்து விட்டு சென்றது. இந்நிலையில் ஆரம்பகால அறிவியலில் வானவியலே முக்கிய இடம் பிடித்தது. இடி, மின்னல்,மழை, வெயில் போன்ற இயற்கையின் அனிச்சை செயல்பாடுகளை மனிதன் ஆராயத்தொடங்கிய போது வானவியல் பிறந்தது. இந்த வானவியல்  உலகில் தோன்றிய எல்லா நாகரீகங்களிலும்  அதிக தாக்கம் செலுத்தியது. மேலும் மருத்துவம், கணிதம், வேதியியல் ஆகியவையும் ஆரம்பகால அறிவியல் சிந்தனைகளில் அதிக தாக்கம் செலுத்தின. அறிவியலின் ஒரு பகுதியான கணிதத்தை மனித கருத்தாக்கத்தின் வரைவியல் என்றனர் கிரேக்கர்கள். மேலும் அரேபியர்களும் வரலாற்றில் அறிவியலுக்கு கணிசமான பங்களிப்பை செலுத்தி இருக்கின்றனர். குறிப்பாக வானவியல், மருத்துவம் மற்றும் கணிதம் ஆகிய துறைகளுக்கு அவர்களின் பங்களிப்பு அபாரமானது. கி.பி 9 ம் நூற்றாண்டு முதல் 13 ம் நூற்றாண்டு வரை  ஈராக் தலைநகர் பாக்தாதில் அறிவியல் ஆராய்ச்சி மையம் அமைத்து மேற்கண்ட துறைகளை வளர்ச்சி பெற செய்தனர். அவ்வகையில் கணிதத்தில் இயற்கணிதமும், ஒழுங்கணிதமும் அவர்களின் கண்டுபிடிப்பே. அங்கிருந்து அவர்கள் மேற்குலத்தோடு தங்கள் கண்டுபிடிப்புகளை விரிவுபடுத்திக்கொண்டனர். இந்நிலையில் அறிவியலுக்கும், தத்துவத்திற்கும் வேறுபாடு இல்லாத காலத்தில் அறிவியலாளர்கள் எல்லாம் இயற்கை தத்துவவியலாளர்கள் (Natural philosophers)என்றழைக்கப்பட்டனர். மேலும்  ஒவ்வொரு செயல்பாடும் மகிழ்ச்சியையும் அதற்கான விலையையும்  உட்கொண்டிருக்கிறது என்ற சாக்ரடீஸின் கோட்பாடு அன்றைய காலகட்டத்தின் சமூக எதார்த்தம். மாறிவரும் காலநிலைகளுடன் கூட அதனை தொடர்பு படுத்த முடியும். இது  அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வழி வகுத்தது.

நவீன அறிவியல் மற்றும் தத்துவம் என்பது மத்தியகிழக்கு மற்றும் ஐரோப்பாவுடன் தொடர்பு கொண்டது. 16 ஆம் நூற்றாண்டு ஐரோப்பா நவீன அறிவியலுக்கான சிறந்த தொடக்கத்தை அளித்தது. நியூட்டன், கோபர்நிகஸ் மற்றும் கலிலியோ போன்றவர்கள் அதற்கான தொடக்கத்தை அளித்தனர். மரங்களிலிருந்து பழங்கள் கீழே விழுவதையும், கீழிருந்து மேலே எறியப்படும் பொருள் கீழே விழுவதையும அடிப்படை கேள்வியாகக்கொண்டு அதற்கான விடையை தேடிய அறிவு தோற்ற செயல்பாடு நியூட்டனால் புவிஈர்ப்பு விசையாக அறியப்பட்டது. அதுவரை மனிதர்கள் அவையெல்லாம் கீழே விழுந்து ஓய்வெடுத்துக்கொள்கின்றன என்று நினைத்தார்கள். ஆனால் அவை ஓய்வெடுத்துக்கொள்வதில்லை. மாறாக இயங்கிக்கொண்டிருக்கின்றன என்ற உண்மையை நியூட்டன் போன்றவர்கள் வெளிக்கொணர்ந்தார்கள்.எல்லா பொருட்களுமே இயக்கநிலையை உடையவை தான். அவை குறிப்பிட்ட கட்டத்தில் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுகின்றன. மேலும் அளவு மாறுபாடே தர மாறுபாடாகிறது. (Quantity will become as quality)  இந்நிலையில் கோபர் நிகஸின்  அறிவியல் கோட்பாடுகள் அதுவரை பிரபஞ்சம் குறித்த ஐரோப்பாவின் நம்பிக்கையை பெருமளவில் தகர்த்தன. சூரியன் பூமியை சுற்றி வருகிறது என்றும், உலகம் தட்டை என்றும் நம்பியிருந்த மனிதர்களின் சிந்தனையை கோபர்நிகஸின் கோட்பாடுகள் பெருமளவில் மாற்றின. உலகம் உருண்டை என்றும், பூமி தான் சூரியனை சுற்றி வருகிறது என்றும் உறுதியாக கோபர்நிகஸ் முன்வைத்தார். இதன் காரணமாக ஐரோப்பிய மத ஆதிக்கவாதிகளால் கொல்லப்பட்டார். பிந்தைய கட்டத்தில் இதனை அடிப்படையாக வைத்து மெகல்லன் கடல்வழி பயணம் மேற்கொண்ட போது உலகம் தட்டையாக இருப்பதால் எப்படி இவர் திரும்பி வர முடியும் என்று ஒருசாரார் கேள்வி எழுப்பப்பட்டதையும் இங்கு குறிப்பிடவேண்டியதிருக்கிறது.  கலிலியோ இதன் தொடர்ச்சியே. நவீன இயற்பியலின் தந்தையாக கலிலியோ அறியப்படுகிறார். வானவியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியதில் கலிலியோவிற்கு பங்குண்டு. தொலைநோக்கி மற்றும் கோள்களின் இயக்கம் குறித்த முக்கிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். எல்லா உண்மைகளும் ஒரு தடவை கண்டுபிடிக்கப்பட்டால் அவை புரிந்து கொள்வதற்கு மிகவும் எளிதான ஒன்று என்றார். கலிலியோ தொடங்கி வைத்த இயற்பியல் மற்றும் வானவியல் சிந்தனை முறைகள் உலகம் முழுவதும் நவீன அறிவியலில் பெரும் புரட்சியை நிகழ்த்தின. மேலும் டார்வினின் உயிரியல் கோட்பாடும் உலக அளவில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. மனித உயிர்கள் எவ்வாறு உருவாயின? எவ்வாறு அவை பெருக்கமடைகின்றன? தனி உயிர் எவ்வாறு பல்கி பெருகுகிறது என்பன போன்ற சிந்தனைகளை டார்வின் முன்னெடுத்தார். அறிவியல் சிந்தனைமுறை உருவான சமகாலத்தில் ஐரோப்பாவில் தத்துவவியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. அறிவொளிகாலம் என்றழைக்கப்பட்ட தருணத்தில் அறிவுவாதமும், அனுபவவாதமும் உருவானது. கணிதவியலாளரான தெகார்தே  மற்றும் தத்துவவாதியான பேகன் ஆகியோர் மேற்கண்ட சிந்தனை முறைகளை உருவாக்கினர். நான் சிந்திக்கிறேன். அதனால் இருக்கிறேன் என்று அறிவுவாதிகளும், புலன் அனுபவங்கள் தான் மனித அறிவை, செயல்பாட்டை தீர்மானிக்கின்றன என்று அனுபவவாதிகளும் முன்வைத்தனர். இன்றைய ஐரோப்பாவின் பகுத்தறிவு சார்ந்த நவீன சிந்தனைமுறைகளுக்கு தொடக்கம் இது தான்.



 அறிவியல் கோட்பாடுகளின் நடைமுறை ரீதியான பயன்பாடு தான் பொறியியலாகவும், தொழில்நுட்பமாகவும் அறியப்படுகிறது. வரலாற்றில் கற்காலம் என்றழைக்கப்பட்ட தருணத்தில் கற்கள், மரங்களை கொண்ட கைக்கருவிகள் மற்றும் நகர்வை அடிப்படையாகக்கொண்ட சிறிய இயந்திரங்கள் போன்றவை மனிதனால் உருவாக்கப்பட்டன . இது மேலும் பரிணாமடைந்து கற்கள் மற்றும் மரத்தால் ஆன பல்வேறு கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது நவகற்காலமாக அறியப்பட்டது. நவீன அறிவியலின் தொடக்கம் 18 ஆம் நூற்றாண்டில் நவீன தொழில்நுட்பத்தின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. தொழிற்புரட்சியானது அதுவரை நிலவிய சமூக கட்டமைப்பை மாற்றியது. அச்சு இயந்திரத்தின் வருகை மனித சமூகத்தின் அறிவு தளத்தில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது.   பொறியியல் என்பது ஆரம்பகாலத்தில் கட்டுமான துறையில் தான் பயன்படுத்தப்பட்டது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை பொறியியல் என்பது கட்டுமானத்தை குறித்தது. அதே நேரத்தில் தகவல் தொடர்பு என்பது போக்குவரத்தை குறித்தது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் இது பல்வேறு துறைகளுக்கும் பரவியது. இதில் கம்ப்யூட்டரின் வரவு மிக முக்கியமானது. உலகின் போக்கை தீர்மானித்ததிலும், சராசரி மனித வாழ்க்கையின் பாங்கை மாற்றியதிலும் கம்ப்யூட்டர்  பெரும் பங்களிப்பை செய்திருக்கிறது. இன்றைய காலத்தில் உலகம் இதனடிப்படையில் தான் இயங்கி வருகிறது.

தத்துவம் மற்றும் அறிவியலுக்கு இந்தியா புராதன காலத்திலிருந்தே மிகப்பெரும் பங்களிப்பை செலுத்தியிருக்கிறது. ஆரியபட்டர் தொடங்கி, ஹோமிபாபா மற்றும் அப்துல் கலாம் வரை அதற்கு ஒரு நெடிய மரபு இருக்கிறது. ஆனால் பிரிட்டனின் காலனியாதிக்க காலகட்டத்தில் இது பெரும் தேக்கநிலையை அடைந்தது. சர்.சி.வி ராமன் மற்றும் ராமாநுஜம் போன்றவர்கள் இருந்தும் உலக அளவில் காத்திரமான அறிவியல் பங்களிப்புகளை செய்யமுடியவில்லை. தற்போதைய இந்தியா வெறும் தொழில்நுட்ப மூளைகளை மட்டுமே உற்பத்தி செய்கிறது. தொழில்நுட்ப மூளைகள் எப்போதுமே தர்க்க ரீதியான மனத்திற்கு அப்பாற்பட்டவை. ஓர் இயந்திரத்தை விட அதிகம் உயர்ந்ததல்ல. அதே வேலையை மனித வடிவில் செய்யும் தன்மை கொண்டவை. மனிதனின் படைப்புத்திறனை அழித்து விட்டு இயந்திரமயமான வாழ்க்கைக்கு அவனை மாற்றும் திறன் கொண்டது.  ஆக இன்றைய இந்தியாவில் இயற்கை மற்றும் உயிரியல் அறிவியல் அனைத்துமே பயன்பாட்டு அறிவியலாக  (Applied Science)மாறி விட்டன.  கல்வித்துறையும் இதையே ஊக்குவிக்கிறது. பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் பெருகி விட்ட நிலையில் அறிவியல் சார்ந்த படைப்புத்திறன் குறைந்து வருகிறது.  சுதந்திரத்திற்கு பிந்தைய 50 வருடங்களில் சொல்லும்படியான கண்டுபிடிப்புகள் எதுவுமே நிகழ்த்தப்படவில்லை. மிகப்பெரும் தொழில்நுட்பதிறன்களுக்கு, கண்டுபிடிப்புகளுக்கு  சுதந்திரமான இயற்கை அறிவியலே மிகப்பெரும் ஆதாரம். ஒரு நாட்டில் கணிசமான அளவிற்கு நிகழ்த்தப்படும் அறிவியல் கண்டுபிடிப்புகள் அந்நாட்டின் மனிதவள குறியீடு அதிகரிப்பிற்கு காரணமாக அமைகின்றன. மனிதவளர்ச்சி நிலையின் அடிப்படையாகவும் அறிவியல் இருக்கிறது.

 தத்துவத்தில் கடந்த நூற்றாண்டு வரை இந்தியா குறிப்பிடதக்க நிலையை அடைந்தது. இன்றைய காலகட்டத்தில் ஐரோப்பாவை ஒப்பிடும் போது இன்னும் நிறைய தூரம் கடக்க வேண்டியதிருக்கிறது. ஐரோப்பிய வாழ்க்கைமுறையை நகலெடுத்து நாம் அவர்களின் இயந்திரவாழ்க்கையை உள்வாங்கிகொண்டிருக்கிறோம். மேம்போக்கான மனிதர்களாக படித்த மத்திய தரவர்க்கத்தினரை மாற்ற இவை துணைபுரிகின்றன. இங்கு மனிதவள அடிப்படையே தகர்ந்து விடுகிறது.  இந்நிலையில் இந்தியாவில் தத்துவம் வெறும் ஆன்மீக தளத்தோடு சுருங்கி விட்டது நம்மை பொறுத்தவரை பின்னடைவு தான். தத்துவம் என்பது ஒரு நாட்டில் அறிவு வளர்ச்சிக்கு, அதன் மனிதவள மேம்பாட்டிற்கு மிகவும் துணைபுரிகின்றது. இந்திய அரசானது அறிவியல் மற்றும் தத்துவ வளர்ச்சிக்கு போதிய நிதியை ஒதுக்க வேண்டியது அவசியம். அதன் மூலம் மட்டுமே அறிவு வளர்ச்சி பெற்ற, இந்திய சமூகத்தை உருவாக்க முடியும்.





  



Thursday, June 5, 2014

காயிதேமில்லத் வாழ்வும் அரசியலும்


(ஜுன் 5 காயிதே மில்லத் பிறந்த நாள்)



தமிழ்நாட்டின் மிகப்பெரும் சமூக புரட்சியாளராக இருந்த பெரியார் தன் வாழ்நாளில் அதிகம் அழுதது இருவரின் மரணத்திற்கு மட்டும் தான். அதில் ஒன்று காயிதேமில்லத்தின் மரணம். மற்றொன்று இராஜாஜியின் மரணம். தன் போராட்டத்தின் சக பயணியாக பெரியார் நேசித்தவர்களில் காயிதேமில்லத் முக்கியமானவர்.


காயிதேமில்லத் என்னும் இஸ்மாயில் சாகிப் 1896 ஜுன் 5 ல் திருநெல்வேலியில் நடுத்தரகுடும்பத்தில் பிறந்தார். அப்போது இந்தியாவில் சுதந்திர போராட்டம் மிகத்தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. நாங்கள் 1000 வருடங்கள் இந்தியாவை ஆண்ட பரம்பரை என்று இந்திய முஸ்லிம்கள் பலர் ஆங்கிலேயர்களை எதிர்த்து தீவிரமாக போராடிய தருணம். இஸ்மாயில் சாகிப் அவர்களின் வரவு தமிழ்நாட்டை பொறுத்தவரை இதனை மேலும் கூர்மைப்படுத்த உதவியது. கல்லூரி படிப்பை செயின்ட் ஜோசப் திருச்சி மற்றும் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் முடித்தார். தன் தந்தையோடு இணைந்து தோல் பொருட்கள் வணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இந்நிலையில் 1918 ல் நெல்லையில் இஸ்லாமிய கல்வியாளர்களின் கூட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். அப்போது தமிழ்நாட்டில் வேர்கொண்டிருந்த திராவிட, நீதிகட்சி அரசியலுக்கு ஒரு  வழிதிறப்பை ஏற்படுத்துவதில் காயிதேமில்லத் உறுதுணையாக இருந்தார்.




சுதந்திர இந்தியாவில் முஸ்லிம் லீக்கின் தோற்றம் அசாதாரண சூழலில் ஏற்பட்ட மாற்றமாகும். இந்திய முஸ்லிம்கள் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் சகல உரிமைகளும் இழந்து நிர்கதியாக இருக்கின்றனர். மேலும் அவர்களுக்கு சமூக  மற்றும் பொருளாதார பாதுகாப்பு அளிப்பது குறித்து பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்க அமைப்பு ரீதியாக திரள்வது அவசியம் என்ற சிந்தனை பலரிடம் உருவானது. இது முந்தைய முகலாய ஆட்சியின் தாக்கத்தினாலும், 1885 ல் அகில இந்திய காங்கிரஸ் உருவாக்கத்தினாலும் ஏற்பட்ட ஒன்று.  இந்நிலையில் நவாப் விகர் உல் முல்க் தலைமையில் 1906 ல் வங்கதேச தலைநகர் டாக்காவில் இந்தியாவின் சகல பகுதிகளிலிருந்தும் முஸ்லிம் தலைவர்கள் ஒன்று கூடி விவாதித்தனர். அந்த கூட்டத்தின் முடிவில் உருவானது தான் அகில இந்திய முஸ்லிம் லீக். நவாப் சலிமுல்லா கான் அது பற்றிய செயல்திட்டத்தை முன்மொழிந்தார். அது இந்திய முஸ்லிம்களுக்கு அவர்களுக்கான உரிமைகளை, வாழ்வியல் பாதுகாப்பை ஆங்கிலேயர்களிடம் உறுதி செய்வதை முக்கிய செயல்திட்டமாக வைத்தது. லக்னோவை தலைமையிடமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்லீக்கின் முதல் தலைவராக ஆகா கான் நியமிக்கப்பட்டார்.  இதன் தொடர்ச்சியில் இருபதுகளில் முஸ்லிம் லீக் கட்சியில் இணைந்த காயிதேமில்லத் அதில் தீவிரமாக இணைந்து பணியாற்றினார். அவரின் வரவு சென்னை மாகாண முஸ்லிம்களுக்கும், மற்றவர்களுக்கும்  சுதந்திர இந்தியா குறித்த பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒன்றாக அமைந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரியாருடன் அவருக்கிருந்த உறவு , பிந்தைய நாட்களில் முஸ்லிம் லீக் மேடைகளை பெரியார் தன் சுயமரியாதை பிரசாரத்திற்கு பயன்படுத்தும் உச்சத்திற்கு சென்றது. முஸ்லிம் லீக்கின் பல மீலாது விழா மேடைகளை பெரியார் தன் பிரசாரத்திற்காக பயன்படுத்தினார். திராவிட இயக்க செயல்திட்டங்களுக்கு முஸ்லிம் லீக் மேடைகள் ஓரளவிற்கு சிறந்த வடிகாலாக இருந்ததே அதற்கு காரணம். மேலும் சுதந்திர போராட்ட காலத்தில் காயிதே மில்லத் தன் ஆற்றல் மிக்க உரைகளால் பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்ட மனோபாவத்தை உருவாக்கினார்.


 இந்திய பிரிவினையின் நதி மூலம் அனைத்துமே ஜின்னா என்ற தனிநபரின் மீதே ஒட்டுமொத்தமாக சாத்தப்பட்டு அதுவே வரலாறாக கற்பிக்கப்படுகிறது. ஆனால் எதார்த்தம் இதற்கு வெளியே தான் இருக்கிறது. காயிதேமில்லத் மீதும் அந்த குற்றச்சாட்டு முன் வைக்கப்படுவதையும் இங்கு கவனிக்க வேண்டும். முஸ்லிம் லீக் உருவாக்கத்திற்கும், பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கை தீர்மானத்திற்கும் இடையே 34 ஆண்டுகள் இடைவெளி இருந்தன. பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கையானது 1940 மார்ச் 23 ல் லாகூரில் நடந்த முஸ்லிம் லீக் மாநாட்டில் முதன் முதலாக தீர்மான வடிவில் முன்வைக்கப்பட்டது. அதுவரை கூட்டாட்சி முறையை ஏற்றுக்கொண்ட ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக் பிரிவினையே தீர்வு என்பதை முன்வைத்தது. ஆனால் காந்தி இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. என் பிணத்தின் மீது தான் இந்திய பிரிவினை நடக்கும் என்றார். அவர் கனவு கண்ட சுதந்திர இந்தியாவிற்கு இம்மாதிரியான கோரிக்கைகள் மிகப்பெரும் தடையாக இருப்பது அவருக்கு வேதனையளித்தது. ஆனால் பிரிவினை கோரிக்கையின் முந்தைய காலகட்டங்களில் காங்கிரஸின் வலதுசாரி தலைவர்கள் சிலரின் எதிர் செயல்பாடுகள், நடவடிக்கைகள்  முஸ்லிம் லீக்கை பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கையை நோக்கி நகர்த்தியது. இந்நிலையில் ஜின்னாவை பற்றி ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். அவர்  ஷியா பிரிவை சேர்ந்தவர். தாராள சிந்தனை கொண்டவர். அடிப்படைவாதி அல்ல. மேலும் தாதாபாய் நௌரோஜி மற்றும் திலகரின் உதவியாளராக பணியாற்றிவர். இதைத்தான் அத்வானி பாகிஸ்தான் சென்ற போது வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டார். மேலும் பாகிஸ்தான் கோரிக்கை வலுவடைந்த பின்னர் பல்வேறு கட்ட சமரச முயற்சிகளின் விளைவாக முஸ்லிம் லீக்கும், ஜின்னாவும் அந்த கோரிக்கையை கைவிடும் முடிவிற்கு வந்தனர். இதில் மௌலானா அபுல்கலாம் ஆசாத் முக்கிய பங்காற்றினார். மந்திரிசபை தூதுக்குழு திட்டத்தை ஏற்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன் விளைவாக சுதந்திர இந்தியாவின் இடைக்கால அரசின் அமைச்சரவையில் இடம் பெற லீக் சம்மதித்தது.  இந்நிலையில் 1946  ஜுலை 10 ல் மும்பையில் நடந்த நேருவின் பத்திரிகையாளர் சந்திப்பு தான் இந்திய வரலாற்றின் போக்கை மாற்றும் ஒன்றாக இருந்தது. அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நேரு காங்கிரஸ் நினைத்தால் மந்திரிசபை தூதுக்குழுவின் ஒப்பந்தத்தை மாற்றி அமைக்கும் என்று நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதிலாக இதனை கூறினார். ஏற்கனவே அதிருப்தியிலும், அரை மனநிலையிலும் இருந்த லீக் நேருவின் இந்த கருத்தால் கொந்தளித்தது. உடனடியாக கட்சியின் பொதுக்குழுவை கூட்டி நேரடி நடவடிக்கை தினம் என்று ஒன்றை அறிவித்து மேற்கு வங்கத்தில் அதனை செயல்படுத்தியது. இதன் விளைவாக வங்கத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது.  மேலும் பிந்தைய கட்டங்களில் இதன் விளைவாக முன்னெச்சரிக்கை இல்லாத சூறாவளியாக வட இந்தியா மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணங்கள் அனைத்தும் கலவர காடுகளாக மாறின. இரு தரப்பிலும் நிகழ்ந்த  படுகொலைகள் இந்திய வரலாற்றில் மாறாத சிதிலமாக இன்னும் இருக்கிறது.

இந்திய பிரிவினைக்கு பின் எஞ்சியிருந்த முஸ்லிம்களின் நலனிற்காக சென்னையை மையமாக வைத்து 1948 ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உருவானது. அகில இந்திய முஸ்லிம் லீக் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்பதாக மாற்றப்பட்டது.  அதன் அகில  இந்திய தலைவராக காயிதேமில்லத்  பொறுப்பேற்றார். அதற்கு முந்தைய கட்டத்தில் 1945 ல் சென்னை மாகாண முஸ்லிம் லீக்கின் தலைமை பொறுப்பில் காயிதே மில்லத் இருந்தார்.  அந்த கால கட்டத்தில் அவரின் செயல்பாடு மிக சிறப்பாக இருந்தது. மேலும் திராவிட இயக்கத்தோடு நல்லுறவை பேணிய காயிதேமில்லத் அதனை இறுதிவரை கடைபிடித்தார். பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் ஒரு தடவை ஜின்னா இவரை பாகிஸ்தான் வருமாறு அழைத்தார். அந்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் சென்ற காயிதே மில்லத்திடன் விருந்தின் போது ஜின்னா பின்வருமாறு கூறினார். " இந்திய முஸ்லிம்களுக்கு பெரும்பான்மையினரால் பிரச்சினை இருக்கிறதா? சொல்லுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்றார். உடனே கோபங்கொண்ட காயிதேமில்லத் அது பற்றி கவலைப்பட நாங்கள் இருக்கிறோம். என்றைக்கு நீங்கள் எங்களை விட்டு பிரிந்தீர்களோ அப்போதே நீங்கள் எங்களுக்கு அந்நியர்களாகி விட்டீர்கள். ஆகவே நீங்கள் அது குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை. எங்களின் உள்நாட்டு விவகாரங்களை குறித்து பேச வேண்டியதில்லை என்றார்.  அவரின் பரந்துபட்ட, நாட்டு நலன் குறித்த சிந்தனைக்கு இது ஓர் உதாரணம். மேலும் அவரின் நாடாளுமன்ற , சட்டமன்ற உரைகள் மிகவும் கூர்மையாகவும், பிரச்சினையின் ஆழ அகலங்களை பிரதிபலிப்பவையாகவும் இருந்தன. குறிப்பாக இலங்கை குடியுரிமை சட்டம் பற்றிய தமிழ்நாடு சட்டமன்ற விவாதம், ஆலயபிரவேசம் குறித்த சட்டமன்ற விவாதம் ஆகியவற்றில் காயிதேமில்லத்தின் விவாத பங்களிப்பு குறிப்பிடும் படியாக இருந்தது. மேலும் வகுப்புகலவரங்கள் மற்றும் மதசார்பின்மை கோட்பாடு குறித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்கள் மிகவும் குறிப்பிடதக்கவை. அலுவல்மொழி குறித்த விவாதம் அரசியல் நிர்ணய சபையில் நடந்த போது இந்தியாவின் அலுவல் மொழிக்கான அனைத்து தகுதிகளும் தமிழுக்கு இருக்கின்றன என்றார். இந்திய அரசியலில் காயிதேமில்லத் சிறுபான்மையினரின் நலன்களுக்காக, அவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் , இந்திய மதசார்பின்மை கோட்பாட்டிற்கும் எவ்வித களங்கமும் ஏற்படாமல் தன் அரசியல் வாழ்க்கையை இறுதிவரை நகர்த்தினார்.