காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Monday, February 24, 2014

பொங்கல் பண்டிகையும் தமிழ் முஸ்லிம் அடையாள அரசியலும்


எந்த ஒரு பிரதேசமும் அடையாளங்களை மீறி வாழ்வதில்லை. வாழ்வியலின் அடிப்படையே அடையாளம் தான். வரலாற்றில் உலகம் முழுவதும் நடைபெற்ற, நடந்து கொண்டிருக்கிற தேசிய இனப்போராட்டங்கள் அனைத்துமே அடையாள அரசியலின் எழுச்சியே. இந்நிலையில் பூகோளத்தின் எந்த பகுதியும் அடையாளம் மற்றும் அதனோடு இயைந்த கலாசாரம் இவற்றோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. இவற்றை துறந்துவிட்டு வாழ்வது சாத்தியமல்ல. அவ்வாறு வாழ்வதாக நினைப்பதே ஒரு பாவ்லா தான். இந்நிலையில் இந்திய தேசியத்தின் ஒரு பகுதியான தமிழ்நாட்டில் தமிழ் அடையாளமும், கலாசாரமும் எப்போதுமே இருந்து வந்துள்ளன. ஆதித்தமிழர்கள் மதமற்ற மனிதர்களாக (Materialist) வாழ்ந்ததாக வரலாறு பதிவு செய்கிறது. இந்நிலையில் தமிழ்ச்சமூகத்திற்கான எல்லாவித தனித்த கலாசார நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக இருந்து வந்திருக்கின்றன. அதன் ஒரு பகுதியான அறுவடைதிருநாளான பொங்கல் குறித்தும் அதனை தமிழ் முஸ்லிம் சமூகம் அடையாளமற்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது குறித்தும் நாம் விரிவாக ஆராய வேண்டியதிருக்கிறது.

தமிழர்களின் அறுவடை திருநாளான பொங்கல் சங்ககாலம் தொட்டே கொண்டாடப்பட்டு வருகிறது. எந்த ஒரு மத அல்லது பிராந்திய சமூகத்தின் பண்டிகைகளும் அதற்கான தகுந்த வரலாற்று காரணங்களோடும், முறையியலோடும் கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் தமிழர்களின் பொங்கல் பண்டிகையும் வரலாற்றுரீதியாக விவசாய செயல்பாடுகளோடு தொடர்புடைய ஒன்று.  தங்களின் நிலங்களில் விவசாயம் செய்துவிட்டு அதற்கான மகசூலை அவர்கள் தை முதல் நாளில் அறுவடை செய்கிறார்கள். அது இயற்கையின் வஸ்துக்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய பிற ஜீவன்களுக்கு  நன்றி சொல்லும் ஒன்றாக தொடங்கியது. இம்மாதிரி விவசாயத்தோடு தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக விழாக்கள் நடத்தப்படும் வழக்கம் உலகம் முழுக்கவே இருக்கின்றது. அதன் ஒரு பகுதி தான் தமிழ்நாட்டின் பொங்கல் பண்டிகை. காலத்தின் தொடர்ச்சியில் பல்வேறு பரிணாமங்களை எடுத்த  பொங்கல் பண்டிகையானது தற்காலத்திலும் பல வடிவ கொண்டாட்டங்களோடு தொடர்கிறது. உலகம் முழுவதுமே  பல நாடுகளில் இந்த அறுவடை சார்ந்த கொண்டாட்டங்கள் பல்வேறு பருவங்களில் நிகழ்த்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்தின் உருவாக்கம் என்பது கி.பி எட்டாம் நூற்றாண்டில் ஆரம்பமாகிறது.கேரளத்தில் தொடங்கி  ஏறத்தாழ சமகாலத்தில் அல்லது அதற்கு சற்று பிந்தைய நிலையில் இஸ்லாம் இங்கு அறிமுகமாகியது. இந்த இரு மதங்களுக்கும் தங்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நெருக்கடி காரணமாக மாறியவர்களில் பெரும்பாலானோர் இங்குள்ள தமிழ் பேசும் சாதி இந்துக்களே.  மானுடவியல் அடிப்படையில் பார்த்தால் இது உளவியல் ரீதியான நகர்வே தவிர உடல்ரீதியான நகர்வல்ல. காரணம் இரு மதங்களும் அவற்றை ஏற்றுக்கொண்டதற்கான அடையாளமாக ஆன்மீக ரீதியான நம்பிக்கைகளையும், செயல்பாடுகளையும் மட்டுமே முன்வைக்கின்றன. குறிப்பாக நம்பிக்கை தான் அதற்கு முக்கியம்.  இந்த இருமதங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் அறிமுகமாகி விட்ட  சமணமும், பௌத்தமும்  தமிழ் அடையாளத்தோடு தான் நகர்ந்து வந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் அது பெருந்தாக்கத்தை செலுத்தாவிட்டாலும் கணிசமானோர் இதற்கும் மாறி இருக்கின்றனர். தங்களை தமிழ் சமணர்கள் மற்றும் பௌத்தர்கள் என்று அழைத்த அவர்கள் தமிழ்பண்பாட்டோடு நகர்ந்தனர். பொங்கல் பண்டிகையும் அவர்களால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கிறிஸ்தவம்  அதற்கான வரலாற்று கூறுகளோடு தொடர்ச்சியாக பல தமிழ் இலக்கிய முயற்சிகளை முன்னெடுத்தது. ஜி.யு. போப், வீரமாமுனிவர் , வேதசகாயம் பிள்ளை மற்றும் தனிநாயகம் அடிகளார் போன்றவர்கள் பல அற்புதமான தமிழ் இலக்கியங்களை படைத்தனர். இது மாதிரியே இஸ்லாமில் உமறுபுலவர், வள்ளல் சீதக்காதி, சேகனா புலவர், குணங்குடி மஸ்தான், பீரப்பா, சதக்கதுல்லா அப்பா போன்றவர்கள் தமிழுக்கு பல அரிய  தத்துவம் மற்றும் வரலாறு சார்ந்த இலக்கிய படைப்புகளை அளித்துள்ளனர். இந்த மரபு தொடர்ச்சியாக பல புலவர்கள் மற்றும் கவிஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. நவீன தமிழ் இலக்கியத்திற்கும் இஸ்லாமியர்கள் பலர் பங்களிப்பு செய்திருக்கின்றனர். முதல் தமிழ் சிறுகதை என்று அறியப்படுகிற வ.வே.சு அய்யரின் குளத்தங்கரை அரசமரம் என்பதற்கு முன்பாகவே சிங்கப்பூரில் சிங்கை நேசன் ஆசிரியராக இருந்த  மக்தூம் கான்சாகிப் என்பவரால்  விநோத சம்பாஷணை என்ற பெயரில் சிறுகதை எழுதப்பட்டு விட்டது. ஆக தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பு மிகுந்த பக்கங்களை இஸ்லாமியர்கள் நிரப்பி இருக்கிறார்கள். கலைமரபிற்கு பலர் சிறந்த பங்களிப்பு செய்திருக்கிறார்கள். இசை அவற்றில் ஒன்று. இருந்தும் துரதிஷ்டவசமாக தமிழ் மையநீரோட்ட சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட அடையாளமற்ற சமூகமாக தமிழ் இஸ்லாமிய சமூகம் மாறி விட்டது. இதன் காரணங்கள் மிக நெடியவை. வரலாற்றுப்பயணங்களின் நுட்பங்களையும், நெழிவு சுழிவுகளையும் உள்ளடக்கியவை.

அடையாளம் (Identity) என்பது வெறுமனே செயற்கையான, உடனடியான மனிதவியல் மாற்றம் அல்ல. மாறாக அடையாளம் என்பது இயல்பான மண் சார்ந்தும் அதனோடு இயைந்த உடலோடும் உருவாகி விடுகிறது. பிரபல மேற்கத்திய உளவியல் அறிஞரான டெல்யூஸ் இதனை குறித்து விரிவாக ஆராய்ந்தார். மண் சார்ந்த அங்கங்களற்ற உடலாக அவர் தனிமனிதன் மற்றும் சமூகத்தின் அடையாள உருவாக்கத்தை முன்வைக்கிறார்.  மேலும் மனித உடல் இதன் உருவாக்கத்தில் முதன்மை காரணியாக இருக்கிறது. இந்திய தத்துவங்களில் இது பிரகிருதி என்றழைக்கப்படுகிறது. உலகம் முழுவதும் மனித உடலமைப்பு ஒரே சீரானதாக இல்லை. அது பிரதேசங்களுக்கு தகுந்த படி மாறுபடுகிறது. இதன் தொடர்ச்சியில் மொழியே முதன்மை பெறுகிறது. உலகில் உள்ள எல்லா பிரதேச மொழிகளும் அதன் மனிதர்களும் அடையாளங்களோடு தான் இயங்குகின்றனர். பிறக்கும் குழந்தையானது தன் சாதி, மதம், தெய்வம் இவற்றை அறிவதற்கு முன்பாகவே தன் மொழியை அறிந்து கொள்கிறது. அது மொழி மூலம் மட்டுமே தன்னியல்பை அறிந்து கொள்கிறது. அதன் உடலியல் மற்றும் உளவியல் அதன் மூலம் மட்டுமே அமைக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ் மொழியோடு, அதன் மண்ணோடு, அது சார்ந்த பண்பாட்டு நடவடிக்கைகளோடு இயங்கும் அனைவரும் தமிழர்களே. இங்கு சாதி, மத எல்லைகள் அனைத்துமே அடுத்த கட்டம் தான்.  பல்வேறு சாதிகள் பல்வேறு காலகட்டங்களில் தங்களின் சமூக, பொருளாதார, கலாசார காரணங்களுக்காக இஸ்லாத்திற்கு மாறினார்கள். அது உளவியல் மாற்றமே. ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் கலிமாவை மொழிந்த உடன் ஒருவர் இஸ்லாமியனாகி விடுகிறார். ஆக இங்கு உடல் ரீதியான மாற்றம் நிகழவே இல்லை. அந்த அடையாளம் எப்போதுமே விரிந்து பரவும் சூரிய நிழலாக பின்தொடர்கிறது  இதன் தொடர்ச்சியில் மொழியால், அதன் கலாசாரத்தால் பிணைக்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் அனைவருமே தமிழர்கள் தான். இதில் அடையாளமற்று தங்களை செயற்கையாக துண்டித்து கொள்வது அல்லது மற்றவர்களால் துண்டிக்கப்படுவது அபத்தமானது. துன்பியலும் கூட. முஸ்லிம்கள் தம்மளர்கள், தமிழ் ஆட்கள் என்று மற்றவர்களை அழைப்பதும், மற்றவர்கள் பாய், சாகிபு என்று உருது மொழிசார்ந்து இவர்களை அழைப்பதும் அடையாள விலக்கம் சார்ந்த சொல்லாடல்களே. வரலாற்று ரீதியாக இந்த பிளவு தமிழ்நாட்டில் சுல்தான்களாலும், நவாபுகளாலும் உருவான  உருது மொழி காரணமாக ஏற்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியில் தமிழ்நாட்டில் வடஆற்காடு  பகுதி  மற்றும் பிற மாவட்டங்களில் புலம்பெயர்ந்த உருது முஸ்லிம்கள் தமிழ் முஸ்லிம்களோடு சமூக ரீதியான உறவு கொண்ட தருணத்தில் இந்த சிக்கலான பிளவு ஏற்பட்டிருக்கிறது.  உருது முஸ்லிம்களின் வரலாற்று நகர்வில் ஒன்றை கவனிக்க வேண்டியதிருக்கிறது. நவாபுகளின் ஆட்சியதிகாரத்தால் வடக்கிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் ஒருபிரிவினர். இவர்களுக்கு தமிழ் சரியாக பேச வராது. அதிகமும் ஆந்திரா மற்றும் கர்நாடகாவுடன் உறவு வைத்திருப்பவர்கள். குறிப்பாக ஆந்திராவை ஒட்டிய எல்லையோரங்களில் வசிப்பவர்கள். இரண்டாம் பிரிவினர் சாதி இந்துக்களாக இருந்து இஸ்லாத்திற்கு மாறியவர்கள். இவர்கள் இங்குள்ள மரபார்ந்த உருது முஸ்லிம்களின் தாக்கத்தால் தாங்களும் உருதுமொழியை கற்றுக்கொண்டு தங்களை உருது  முஸ்லிமாக மாற்றிக்கொண்டவர்கள். இவர்களுக்கு தமிழ் உச்சரிப்பும், பேச்சும் சரளமாக இருக்கும். பள்ளிகளில் தமிழை தான் பாடமாக படிக்கின்றனர். உருது முஸ்லிம் வரலாற்றை ஆராயும் போது அவர்களிடையே இந்த இருவித வரலாற்று மாற்றத் தன்மை இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இரு பிரிவினரும் கலந்த தருணத்தில் இருவருக்குமான பொது அடையாளம் தேவைப்பட்டது. இதற்கு தமிழ் அடையாள விலக்கம் செய்வது அவசியமான ஒன்றாக இருந்தது. இதன் மூலம் முஸ்லிம் என்ற மத அடையாளத்தை உலமாக்கள் முன்னெடுத்தனர். அதுவே பிற்காலத்தில் முன்னிலை பெற்றது. தமிழர் என்பது முஸ்லிம் அல்லாதவர்களை குறிக்கும் சொல்லாக மாறியது. தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் உருது மேன்மை மனம் வலுப்பெற்றது. இந்த உருக்குலைவின் காலத்தொடர்ச்சியில் உருது தெரியாதவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் அல்ல என்பதும், முஸ்லிம்கள் என்றாலே உருது தெரிந்தவர்கள் என்பதும்  சமூக மனோபாவமாக தமிழ்நாட்டில்  இதன் மூலம் உருவானது. ஆனால் திராவிடமொழிக்குடும்பத்தை சார்ந்த  கேரளாவில் இது இல்லை. அங்கு எல்லோருமே தங்களை மலையாளிகள் என்று அழைத்துக்கொள்வதில் பெருமை கொள்கின்றனர். பல இஸ்லாமிய மத அறிஞர்கள் கூட தங்கள் பேச்சுகளில் நாம் மலையாளிகள் என்பதை அடிக்கடி உச்சரிக்கின்றனர்.  அவர்கள் மொழியை வைத்தும், வாழிடத்தை வைத்தும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றனர். அங்கு மலையாள அடையாளம் சார்ந்த விஷயத்தில் சாதி, மத எல்லையே கிடையாது. ஆனால் தமிழ்நாட்டில் உலமாக்கள் தங்கள் உரைகளில் கூட தமிழ் என்ற சொல்லை  உச்சரிக்க தயங்குகின்றனர். தமிழ் முஸ்லிம் என்று கூட குறிப்பிட அதிக தயக்கம் காட்டுகின்றனர். உருது சார்ந்த கொலாஜ் சிந்தனையே அதற்கு காரணம். மேலும் தமிழ் உச்சரிப்பு கூட இங்கு சிக்கல் தான். உதாரணமாக இருக்குகின்றது,எட்டி வைத்தல், எத்தி வைத்தல் போன்றவை.  இந்நிலையில் வங்கதேச வரலாறு நமக்கு பல பாடங்களை  வழங்குகிறது. வங்கதேசத்திற்கும், பாகிஸ்தானிற்குமான முரண்பாட்டின் மூலே காரணமே மொழி சார்ந்த தேசியம் தான்.  இருவருமே இஸ்லாமியர்களாக இருந்த போதும் நிலவியல் அடிப்படையிலான தேசிய இன அடையாளமே அங்கு முதன்மை பெற்றது.    இந்த அம்சங்கள் இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது முக்கியம்.

தமிழ் முஸ்லிம் சமூகம் பொங்கல் விலக்கலுக்கான காரணங்களாக சிலவற்றை முன்வைக்கிறது. 1. பொங்கல் என்பது இந்து மத பண்டிகை. அது சடங்குகள் மற்றும் வழிபாடுகளை கொண்டது. 2.  ரம்சான் மற்றும் பக்ரீத் ஆகிய இரு பண்டிகைகளை தாண்டி வேறு எதுவும் இஸ்லாத்திற்கு எதிரானது. இது குறித்து நாம்  விரிவாகவும், ஆழமாகவும்,  விவாதிக்க வேண்டியதிருக்கிறது.

இந்தியாவில் விவசாயம் சார்ந்து பல பிராந்திய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. கேரளாவில் ஓணம் மற்றும் பஞ்சாபின் வைசாகி இவற்றில் புகழ்பெற்றவை. கேரளாவின் உருவாக்கத்தோடு தொடர்புடைய ஓணம் சாதி மதம் கடந்து அங்குள்ள எல்லோராலும் கொண்டாடப்படுகிறது. கேரள முஸ்லிம்களில் கணிசமானோர் மரபார்ந்த சடங்குகள் அற்று ஓணத்தை  கொண்டாடுகின்றனர். அங்கு ஓண சந்தியா என்ற  மதிய விருந்து புகழ்பெற்றது.  அது மாதிரியே பஞ்சாபின் அறுவடை திருநாளான வைசாகி பண்டிகையை பாகிஸ்தானின் மேற்கு பஞ்சாபை சார்ந்த பஞ்சாபிகள் மதம் கடந்து கொண்டாடுகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் பொங்கல் மட்டும் காலங்காலமாக இந்து பண்டிகை என முஸ்லிம்களால் தவறாக நம்பப்படுகிறது. அது சூரிய வழிபாட்டை பிரதானமாக முன்வைக்கிறது என்பது தான் அது. இந்நிலையில் தமிழ் முஸ்லிம்களை வந்தேறிகள் என்று சித்தரிப்பதற்காக இந்துத்வ சக்திகளும் இதனை தங்களுக்கு சாதகமாக  எடுத்துக்கொள்கின்றன.இன்றைய நகரமயமாக்கல் காலகட்டத்தில் கிராமங்களில் மட்டுமே சாதி இந்துக்கள் சூரிய வழிபாட்டோடு இதனை கொண்டாடுகின்றனர். நகர்புறங்களில் பெரும்பாலும் இல்லை. இந்நிலையில்  பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சடங்குகள் மற்றும் வழிபாடுகள் என்பதை தாண்டி கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள், இடது சாரிகள் என அனைவராலும் வழிபாட்டுச்சடங்குகள் ஏதுமின்றி  அவர்களுக்கான வடிவத்தில் பல ஆண்டுகளாக கொண்டாடப்படுகின்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி இதனை கொண்டாடுகின்றனர்.  இஸ்லாமியர்களுக்கு அம்மாதிரியான வழிபாடு சார்ந்த கொண்டாட்டங்கள் தேவை இல்லைதான். ஆனால் வழிபாடு ஏதுமற்ற, சடங்குகள் ஏதுமற்ற ஒன்றாக இஸ்லாமியர்கள் அதனை கொண்டாட முடியும். வீடுகளில் விசேஷ உணவு வகைகளை தயாரித்தாலே அதுவே சிறந்த கொண்டாட்டம் தான். விருந்து உபசரிப்பு மற்றும் பகிர்ந்து உன்ணலை அந்த தினத்தில் முன்னெடுக்கலாம். ஜமாஅத்களில் செயல்படும் இளைஞர் அமைப்புகள் விளையாட்டுப்போட்டிகளை நடத்தலாம். உருது முஸ்லிம்களின் கலப்பு மேற்கண்ட விஷயத்தை மேலும் சிக்கலாக்குகிறது. உருது சார்ந்த தேவ்பந்த் உலமாக்கள் வட மாவட்டங்களில் பல ஜமாஅத்களை ஆக்கிரமித்து இருப்பதால் மேற்கண்ட அடையாள சிக்கல் மேலும் வலுபெறுகிறது. இரு பெருநாள் கொண்டாட்டங்களில் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படுவதை கூட பலர் ஹராம் என்கின்றனர். ஆரம்பகால இஸ்லாம் குறித்த, அதன் சமூக கட்டமைப்பு குறித்த வரலாற்று புரிதலின் குறைபாடு தான் இது. இந்நிலையில்  மத சார்பற்ற இந்தியாவில் பிராந்திய கொண்டாட்டங்களை மாநில அரசுகளே அதிகாரபூர்வமாக கொண்டாடுகின்றன. அப்படியிருக்க அது அந்த மொழிபேசும் மக்கள் தொகுதியினர் அனைவருக்குமானதாக தான் இருக்க முடியும். பொங்கல் பண்டிகை ஒட்டி  தமிழக அரசானது அரசு ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் பொங்கல் பை போன்றவற்றை எல்லோருக்குமே வழங்குகிறது. இங்கு எந்த வர்க்க பேதமும் இல்லை. எல்லோருமே அதனை வாங்குகின்றனர். மேலும் பண்டிகை கொண்டாட்டத்தையும் அரசு முன்னெடுக்கிறது. காரணம் இது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் பண்டிகையாக இருப்பதால் தான். பல அரபு நாடுகளில் இரு பெருநாள் கொண்டாட்டங்களை தாண்டி தேசிய தின கொண்டாட்டம் வெகுவாக அரபு நாட்டவரால் முன்னெடுக்கப்படுகிறது. தேசிய தினம் அரபிகளால் பண்டிகை போன்றே கொண்டாடப்படுகிறது. இதற்காக தேசிய தின கொண்டாட்டம் ஹராம் என்று அங்கு எந்த முப்தியும் பத்வா வழங்கவில்லை. பல இஸ்லாமிய நாடுகளில் இவற்றை தாண்டிய தனிப்பட்ட கொண்டாட்டங்கள், கலாசார நிகழ்வுகள் உண்டு. சவூதி அரேபியாவில் கூட பழங்குடி சவூதிகளின் கலாசார நிகழ்வுகள் வருடந்தோறும் நடைபெறுகின்றன. இந்நிலையில் தமிழ் முஸ்லிம் சமூகம்  தமிழ் அடையாளங்களை துறப்பதை தவிர்த்து விட்டு மற்றவர்களால் அடையாள நிராகரிப்பு செய்யப்படுவதிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டும். வாழும் பிரதேசத்திற்கான கலாசார நடவடிக்கைகளோடு தனக்கான வடிவத்தில் ஒன்றுபடுவதே பன்மயப்பட்ட சமூக வாழ்க்கைமுறை. சமூகத்தின் கலாசார நடவடிக்கைகளின் ஒரு பகுதியான உணவு பழக்கத்தில் பெரும்பாலும் வித்தியாசங்கள் இல்லை. இட்லி, தோசை எல்லோராலும் விரும்பி உண்ணப்படுகிறது. இந்நிலையில்  தமிழ்நாட்டில் தற்போது சில இஸ்லாமிய அரசியல் இயக்கங்கள் தமிழ் சார்ந்த பல்வேறுவிதமான போராட்டங்களுக்காக களத்தில் இறங்கியிருக்கின்றன. அவர்கள் இதனை வெறுமனே குறியீட்டளவிலான வெகுஜன அரசியல் பங்களிப்போடு நிறுத்திக்கொள்ளாமல் சமூக பண்பாட்டு இணக்கம் சார்ந்த நடவடிக்கையாக மாற்ற வேண்டும்.  இதன் தொடர்ச்சியில் தமிழ் அடையாளம் மற்றும் சமூக உறவாடல் குறித்து இவை ஆரோக்கியமான உரையாடலை முன்னெடுக்க வேண்டும்.  அதற்கான சரியான தருணமிது.

Tuesday, February 18, 2014

ராஜீவ்காந்தி படுகொலை மர்மங்களும் மரண தண்டனையும்
ராஜீவ் காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட  பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின்  மரணதண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மிக தாமதமாக தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் ராஜீவ் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டு இவர்கள் 23 வருட காலம் சிறையில் கழித்து விட்டனர். கரும்பிலிருந்து உறிஞ்சப்படும் சாற்றைப்போல் சிறைவாசம் இவர்களின் உடலை உறிஞ்சி இருக்கிறது. இதில் மிச்சமிருப்பவை சக்கைகள் தான். சந்தேகத்தின் பேரில் குற்றத்தை மனிதர்கள் மீது சாத்தும் சட்ட அமைப்பு அகோரமானது.

ராஜீவ் காந்தி 1991 ல் மே 21 ல் ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். மத்திய சிறப்பு புலனாய்வு துறை இதனை விசாரணை செய்து விடுதலை நாளிதழில் வேலை செய்து கொண்டிருந்த பேரறிவாளனை விசாரணைக்காக சி.பி.ஐ அலுவலகத்தில் அழைத்து சென்றனர். பின்னர் இவரின் எலக்ட்ராணிக்ஸ்  படிப்பை வைத்து நீதான் இந்த படுகொலைக்கு பேட்டரி வாங்கி கொடுத்தாய் என்பதாக குற்றம் சுமத்தி அவரை அடித்து கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினர். இந்த கட்டாய ஒப்புதல் வாக்குமூலம் காரணமாக இவரும்  ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டார். இதன் பின்னர் சிறை, நீதிமன்றம் என இவர்களின் வாழ்க்கை 23 வருடங்களாக அல்லாடியது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் இவர்கள் மூவருக்கும் குற்றம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று கூறி இருபது ஆண்டுகளுக்கு முன்னர் மரண தண்டனை வழங்கியது. இதன் தொடர்ச்சியில் இத்தனை கால பல்வேறு தரப்பினரின் நீதி போராட்டங்களின் பயனாக இன்றக்கு இந்த மாற்று தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.

ராஜீவ் கொலையில் ஏற்பட்ட நியாயமான, பகீரத சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. உண்மையில் அவரை விடுதலைப்புலிகள் தான் கொன்றார்களா? அல்லது சர்வதேச கூட்டுச்சதியின் மூலம் விடுதலைப்புலிகளை சர்வதேச குழுக்கள் தான் பயன்படுத்திக்கொண்டதா? விடுதலைப்புலி இயக்கத்திலிருந்து வெளியேறியவர்களை வைத்து இந்த கொலை நடந்ததா? என்பது தான் அந்த கேள்வி. காரணம் கொலை நடந்த அன்று சுப்பிரமணிய சுவாமி மற்றும் சந்திராசாமி ஆகியோரின் செயல்பாடுகள், நடமாட்டம் ஆகியவை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தின. மேலும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சிலரின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் போன்றவையும் கேள்விக்குள்ளாகுகின்றன. ஆனால் சிபிஐ இவர்களை தகுந்த முறையில் விசாரிக்க தவறி விட்டது. இந்நிலையில் ஜெயின் கமிஷன் விசாரணையில் சுப்பிரமணிய சுவாமி திணறியதும், பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் நழுவியதும் இங்கு கவனிக்கத்தக்கது. ராஜீவ் படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்படும் முன்பு டெல்லியில் இருந்த சுப்பிரமணியசுவாமிக்கு இந்த படுகொலை செய்தி எப்படி தெரிந்தது என்பது தான் இதில் மிக முக்கிய கேள்வி..மேலும் சந்திராசாமி வீடு புரோக்கரான பெங்களூர் ரங்கராத்திடம்  சிவராசன் மற்றும் சுபா ஆகியோர் தங்குவதற்கு வீடு ஏற்பாடு செய்ய சொன்னதும் இந்த வழக்கில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இவற்றை சிபிஐ மற்றும் பிற விசாரணை அமைப்புகள் கவனிக்க தவறின. அவர்களை கண்டுகொள்ளவில்லை. மாறாக ரங்கநாத் சந்திராசாமி பெயரை குறிப்பிட்ட போது அவரை அடித்து உதைத்து சாமியின் பெயரை குறிப்பிடக்கூடாது என்றனர் விசாரணை அதிகாரிகள். குறிப்பாக சந்திராசாமியிடம்  போதிய விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. மொத்த கேள்விகளும், மர்மங்களும் இன்னும் ராஜீவின் ஆன்மாவை குறிப்படுத்துகின்றன. இந்நிலையில் அன்றைய காலகட்டத்திலேயே இம்மாதிரியான சந்தேகங்களையும், மர்ம முடிச்சுகளையும் வெளிக்கொணர்ந்த திருச்சி மா. வேலுச்சாமியை தமிழ்நாட்டு தலைவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. மாறாக நெடுமாறன் மற்றும் வைகோ போன்றவர்கள் தங்களின் புலி பிம்பத்தை உயர்த்திக்கொள்வதற்காக விடுதலைப்புலிகள் தான் இதை செய்தார்கள் என்று மீண்டும் மீண்டும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தனர். இந்த கொலை வழக்கில் மூவர் மீதான கறை அதிக நாட்கள் படிந்திருக்க இம்மாதிரியான பேச்சுகளும் ஒரு காரணம். உலகில் நடந்த அரசியல் படுகொலைகளில் விடைகாண இயலாத மர்மங்களாக இன்னும் ராஜீவ் படுகொலை இருக்கிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் காலங்கடந்து அவர்களின் மரணத்தை காப்பாற்றி இருப்பது ஆறுதலான ஒன்று.

மூன்று பேரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மரண தண்டனை குறித்த  புரிதல் மற்றும் வரலாற்று ஆய்வில் நாம் கவனம் செலுத்த வேண்டியதிருக்கிறது. உலக வரலாற்றில் மனிதர்கள் தோன்றிய காலம் முதலே குற்றங்களும் தோன்றி விட்டன. புராதன கூட்டுக்குழுவாக வாழ்ந்த காலத்தில் மனிதர்கள் தங்களுக்குள் உணவுப்பங்கீட்டிற்காக சண்டையிட்டுக்கொண்டனர். பின்னர் அது பரிணாமம் கொண்டு வேட்டை, இருப்பிடம் இவற்றின் இயங்குதலுக்காக மாறிப்போனது. இந்நிலையில் மனிதர்கள் களம் மாறினார்கள். அவர்களுக்குள் உராய்வுகள், மோதல்கள் ஏற்பட்டன. புராணங்களும், தொன்மங்களும் பல மனித குற்றங்கள் குறித்து பேசுகின்றன. ஆபேல் காயின் மற்றும் கிரேக்க அரசர்களின் கதைகள் இவற்றின் குறிப்பிடத்தக்கவை.


மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சியில் குற்றங்கள் என்பவை  அந்த  சமூகத்திலிருந்து உருவாகும் சூழ்நிலை காரணி தான். காரணம் சூழ்நிலையின் கைதி தான் மனிதன். இவை பரஸ்பரம் சங்கிலித்தொடர் போன்ற பிணைப்பைக்கொண்டிருக்கின்றன. குற்றம் செய்பவனின் மீது உளவியல், சமூகவியல், மானுடவியல் போன்ற அனைத்துமே தாக்கம் செலுத்துகின்றன. இங்கு குற்றவாளிகள் என்பவர்கள் இயல்பாக உருவாவதில்லை. குறிப்பாக பிறப்பின் அடிப்படையில் அது நிகழ்வதில்லை. பிறக்கும் குழந்தைகள் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. மாறாக சமூகமும் அதனோடு இயைந்த சூழலும் தான் அவர்களை குற்றவாளி ஆக்குகிறது. மேலும் உளவியல் காரணியும் இதில் உள்ளடங்கி இருக்கிறது. உளவியல் என்பது சமூகத்தின் கூட்டு மனத்திலிருந்தோ, அல்லது பொது அறச்செயல்பாட்டிலிருந்தோ தொடக்கம் பெறுகிறது. ஆக இந்த அம்சங்கள் காரணமாக ஒருவர்  குற்றச்செயலில் ஈடுபடும் போது அவரின் மீது இந்த குற்றம் என்ற அடையாளம் விழுந்து விடுகிறது. இன்றைய உலகில் குற்றங்கள் என்பதன் மீதான விசாரணைகள் அனைத்தும் புறவய சாட்சியங்கள் அடிப்படையிலே நடைபெறுகின்றன. இங்கு நிரூபணம், குற்றவாளி, நிரபராதி என்ற மூன்று சொல்லாடல்களும் ஒன்றை ஒன்று தொடர்பு கொண்டதாக மாறுகின்றன. பல்வேறு தருணங்களில் குற்றங்கள் மறைபொருளாக இருப்பதுண்டு.

குற்றவியலின் வரலாற்றில் மனிதனின் குற்றச்செயல்பாடுகள் நாடோடி சமூகத்திலிருந்து நிரந்த வசிப்பிடமாக சமூகம் உருவாகிய தருணத்தில் ஏற்பட்டன. முதலில் சிறைச்சாலைகள் இல்லை. அன்றைய சிறை முறையானது சக மனிதனின் கழிவு வெளியேற்ற தடை முறையில் இருந்தது. மலமும், ஜலமும் அவன் கழிக்க மறுக்கப்பட்டான் அல்லது ஒரே இடத்தில் நகர முடியாமல் கழிக்க அனுமதிக்கப்பட்டான். இன்றைய கால கட்டத்தில் கூட ஆட்சியாளர்களால் பழிவாங்கப்படும் அரசியல் கைதிகளுக்கு  மேற்கண்ட விதமான தண்டனையை அதிகாரபூர்வமற்ற முறையில் காவல்துறை அளிக்கிறது. இதன் தொடர்ச்சியில் உலகில் ரோமானியர்கள் தான் முதல் சிறைச்சாலையை அமைத்திருக்கிறார்கள். வீடுகளே சிறைச்சாலைகளாக இருந்து சிறிய உலோக கூண்டுகளுக்குள் குற்றவாளிகள் அடைக்கப்பட்டார்கள். இது அரசு என்ற நிறுவனம் சமூக  நிறுவனமாக உருவான தருணத்தில் ஏற்பட்டது.  சமூகத்தின் ஒரு பகுதி குற்றவாளிகளாகவே இருந்தது. உலகில் மனித இனம் இயல்பான மற்றும் இயல்பற்ற, அசாதாரண முறைகளில் தன் இழப்பை தேடிக்கொள்கிறது. இந்நிலையில் குற்றச்செயல்பாடுகள் காரணமாக அவனின் உயிர் பறிக்கப்படும் போது தொடர்ச்சியான கட்டத்தில் மனித இனத்தின் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது. வன விலங்குகளின் பல்லுயிர் தன்மையை போன்றே மனித இனத்தின் பரவலாக்கத்திற்கும் மரண தண்டனை பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. சமூகத்தின் ஒழுக்கம் மற்றும் பிற அற மதிப்பீடுகள் சார்ந்த காரணிகள் இந்த தண்டனை முறையை நியாயப்படுத்துகின்றன. எல்லா மதிப்பீடுகளுமே ஒரு கட்டத்தில் மாற்றம் பெறுபவை தான். பழிவாங்கல் மனம் ஏற்படுத்தும் உச்சம் மரண தண்டனை சார்ந்த கருத்துக்கு வலுசேர்க்கிறது. சகமனிதனால் மற்றொரு மனிதனுக்கு ஏற்படும் பாதிப்பு அவனை இல்லாமல் செய்ய துடிக்கிறது.  இங்கு பாதிப்பிற்கான நிவாரணமே குற்றவாளியின் மரணம் என்பதாகி விடுகிறது. இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று ஒரே இனத்தை சார்ந்த மிருகங்கள் மற்றொன்றை கொல்வதில்லை. உதாரணமாக ஒரு நாய் மற்றொரு நாயை கொல்வதில்லை. காகம் மற்றொரு காகத்தை கொல்வதில்லை. விதிவிலக்கான தருணங்களில் மட்டுமே இது நிகழ்கிறது. பிணந்திண்ணி கழுகுகளிலிருந்து மனிதன் பிணத்தை புதைக்கவோ அல்லது எரிக்கவோ கற்றுக்கொண்ட தருணத்திலிருந்து மரண தண்டனை என்பது சட்டவடிவம் பெற்று விட்டது.

இன்றைய உலகில் 110 நாடுகள் அதாவது உலகில் பெரும்பாலான நாடுகள் மரணதண்டனையை ஒழித்து விட்டன. அரபு நாடுகள் தவிர மீதமுள்ள நாடுகள் அது பற்றி பரிசீலித்து வருகின்றன. அவ்வாறு மரண தண்டனை இல்லாத நாடுகளில் எல்லாம் மற்ற நாடுகளை விட குற்றங்கள் அதிகரித்து விடவில்லை. அங்கெல்லாம் குற்றங்கள் இயல்பாகவும், இயல்பற்றும் இருக்கின்றன. இருக்கின்ற அமைப்பை மாற்றுவதற்கு , அதுவும் குறிப்பாக  தொடர்ச்சியாக நிலபிரபுத்துவ மன்னராட்சி அமைப்பு மனோபாவத்துக்குள், அதன் எச்சங்களை கொண்ட இந்திய சமூகத்தில் மரண தண்டனை வேண்டும் என்பதே வெகுஜன உளவியலாக இருக்கிறது. இது மாறுவதற்கு இன்னும் சில காலங்கள் ஆகலாம். அதுவரை இது பற்றிய தொடர்ச்சியான உரையாடல்கள் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கான மாற்றுத்தண்டனை என்ன என்பதும் தெளிவாக முன்வைக்கப்பட வேண்டும்.  மேலும் மூவரின் தண்டனைக்குறைப்பு மகிழ்ச்சி அளிப்பதுடன் தமிழக அரசு அவர்களின் ஆயுள் தண்டனையை ரத்து செய்து அவர்களின் சிறை உடலை விடுவிக்க முன்வர வேண்டும். இதுவே தமிழ்நாட்டில் நடந்த நீதிப்போராட்டத்த கிடைத்த உண்மையான வெற்றியாக இருக்க வேண்டும்.

Monday, February 17, 2014

குழந்தை உடலும் சமூக பண்பாடும் -குழந்தை திருமணங்களை முன்வைத்து
ஒரு குழந்தை எப்போது குழந்தையாக அறியப்படுகிறது? அது எப்போது தன்னை உணர்ந்து கொள்ள ஆரம்பிக்கிறது. அதன் உளவியல் என்ன? பிறக்கும் குழந்தையின் மீது அதன் அடையாளம் எப்போது வரையப்படுகிறது? அது இயல்பான ஒன்றா? அல்லது திணிக்கப்படும் ஒன்றா? குழந்தைக்கும், பருவமடைவதற்குமான இடைவெளியில் குழந்தையின் நடத்தை மற்றும் சிந்தனை எவ்வாறு ஒருங்கிணைகிறது? அந்த குறிப்பிட்ட இடைவெளியில் சிந்தனையின் பங்கு என்ன? உடல் கூறு என்பது அநாத்மமான ஒன்றா? உளவியலுக்கும் உடலியலுக்குமான தொடர்பு என்ன? என்பது போன்ற கேள்விகள் குழந்தை உடல்,உளவியல் மற்றும் சமூக பண்பாடு குறித்து ஆராயும் போது நம்முன் எழுகின்றன. மனித நாகரீகத்தின் உருவாக்கம் சார்ந்தே இதன் பரிணாமத்தை நாம் ஆராய வேண்டியதிருக்கிறது.

மனித சமூக உருவாக்கத்தின் தொடர்ச்சியில் புராதன கூட்டுக்குழு சமூகத்தில் குழந்தை என்பதற்கும், வயது வந்தோர் என்பதற்குமான இடைவெளி மிகக்குறுகியதாக இருந்திருக்கிறது. அதற்கு பிந்தைய காட்டுமிராண்டிகள் (Barbarian)காலகட்டத்தில் அதன் இடைவெளி சற்று அதிகரித்திருக்கிறது. அதற்கும் பிந்தைய சமூக வளர்ச்சி கட்டத்தில் அதன் இடைவெளியின் அகலம் சற்று விரிவடைந்திருக்கலாம். பின்னர் நகரும் இனக்குழுக்களாக (Mobile tribe) மேய்ச்சல் குழுக்களாக பரிணமித்த சமூகத்தில் குழந்தை குறித்த பார்வை, இருப்பு சற்று மாறியிருக்கிறது. அந்த கட்டத்தில் அப்படியான சமூகத்தில் குடும்பம் என்ற சமூக நிறுவனம் உருவாகி இருக்கவில்லை. சற்று பின்னர் இனக்குழு சமூகம் நிலையான இருப்பிடம் கொண்ட, நகரா இனக்குழுவாக உருவான காலத்தில் தான் மனித இனத்தின் கலாசாரம் , குடும்பம், இயற்கை சார்ந்த அச்ச உணர்வு போன்றவை உருவாயின.

மனித நாகரீக உருவாக்கத்தில் இனக்குழு வாழ்வியல் மிக முக்கியமானது.. அதன் இயங்கியலில் இருந்து தான் எல்லா கிளைவுறுதலும் (branch out)நடந்திருக்கின்றது. உலகில் எல்லா பிரதேசங்களிலும் இந்த இனக்குழு வாழ்க்கை முறை இருந்திருப்பதாக தான் வரலாறு குறிப்பிடுகிறது. ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளில் இந்த வாழ்வியல் முறை இருந்திருக்கிறது... அதில் ஆசியா மற்றும் ஆப்ரிக்கா இனக்குழுக்களின் வரலாறு பல பொருளியல் மற்றும் கலாசார கூறுகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது... இந்தியாவில் ஆரியமும் , திராவிடமும் அடிப்படையில் மேய்ச்சல் இனக்குழுக்கள் தான். இதில் ஆரியம் மத்திய ஆசியாவின் உயர்தர மேய்ச்சல் இனக்குழு வகைமையை சார்ந்தது. அன்றைய காலகட்டத்தில் நாடோடியாக இயங்கிய இனக்குழுக்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட தூரத்தில் தங்களை இருப்பிடப்படுத்திக்கொள்ள தீர்மானித்தன.. அதன் பின் அவை அந்த குறிப்பிட இடத்தை நோக்கி தான் தங்கள் மேய்ச்சல் வாழ்வை அமைத்துக்கொண்டன. அதற்கு பிறகு தான் எதார்த்த இனக்குழு வாழ்க்கை முறை தொடங்குகிறது எனலாம். இனக்குழுக்களின் வாழ்க்கை முறையில் பிரதான உழைப்பு பிரிவினை (Divison of Labor)ஏற்பட்ட பிறகு அது முற்றிலுமாக தந்தை வழி சமூகமாக மாற்றம் பெறுகிறது. தந்தை வழியாக ஆண் ஒரு குடும்பத்தில் முன்னிலைப்படும் போதே அங்கு பெண் இரண்டாம் நிலைக்கு உட்படுகிறாள்... வீடு சார்ந்த வாழ்க்கை முறையில் வீடு என்பது பெண்ணுக்கு நிரந்தர இருப்பிடமாக, உழைப்பு கூடமாக மாறுகிறது. ஆக பெண்ணை வீடு சார்ந்து கட்டமைப்பது குறிப்பிட்ட இனக்குழுவிற்கு இருப்பு சார்ந்த பிரச்சினையாக மாறுகிறது.. ஆக வீடு என்பது குடும்பமாக பரிணமிக்கும் போது வீடு என்ற கட்டமைப்பு தகர்க்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது.... வீடு என்கிற போது அதன் காவலாளியாக, அதன் காப்பாளராக பெண் இருக்கிறாள். அதுவே குடும்பம், சமூகம், இனம் என்பதாக பரிணாமம் கொள்கிறது. இந்த தொடர்ச்சியான பரிணாம கட்டமைப்பு பின்னோக்கி செல்வதையோ அல்லது தகர்வதையோ தந்தை வழி சமூகம் ஒருபோதும்  அனுமதிக்காது. ஆக மேற்கண்ட சமூக நிர்பந்தங்கள், குடும்ப கட்டமைப்புகள் பெண்ணை கட்டுப்பெட்டியாக, ஒடுக்கும் ஜீவியாக மாற்றுவதை அனுமதிக்கின்றன. அங்கீகரிக்கின்றன. அதன் உடல் மற்றும் உளவியல் ரீதியான வடிவமே பெண் பருவமடைவதற்கு முன்போ அல்லது பருவமடைந்த உடனோ திருமணம் செய்து வைப்பது. அம்மாதிரியான குடும்ப அமைப்பில் சமூக பொறுப்புணர்வு (Social commitment) என்பது கிடையாது. ஆனால் அக்கறை என்பது இருந்திருக்கலாம். குடும்பத்தை மையமாக கொண்ட பொறுப்புணர்வு என்பதன் நீட்சியே நவீன சமூக பொருளாதார வளர்ச்சி முறையின் அடிப்படை. இது முழுமையாக இல்லாவிட்டாலும் அதன் பகுதியாக குடும்பம் இருக்கிறது. இதன் தொடர்ச்சியில் பண்டைய இனக்குழு சமூகத்தின் எச்சம் மற்றும் மரபார்ந்த தொடர்ச்சி தற்காலத்திலும் நிலவுவது அது முந்தைய சமூக கட்டமைப்பை குலைக்க விரும்பவில்லை அல்லது தொடர விரும்புகிறது என்று அர்த்தம்.குழந்தை குறித்த கருத்தாக்கம் அதன் திருமணம் குறித்து நாம் விவரிக்கும் முன் பண்பாடு அல்லது கலாசாரம் (Culture)என்ற சொல்லாடல் குறித்து நாம் பார்க்க வேண்டியதிருக்கிறது. இந்த சொல்லாடல் cultura என்ற லத்தீன் சொல்லிலிருந்து வந்தது. ஆரம்ப காலகட்டத்தில் இது விவசாயத்தை, நிலத்தை, உழுதலை குறித்தது.. இந்த சொல்லின் வேரிலிருந்து தான் விவசாயத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளும் culture என்ற பின்னொட்டை அடிப்படையாகக்கொண்டு பெயரிடப்பட்டன. இதன் தொடர்ச்சியும், பிரதிபலிப்பும் நிலத்தோடு தொடர்புடைய மனிதனோடும் இயைந்தது. காலத்தின் நகர்வில் இது மனித நடத்தைகள், சிந்தனைகள் அதன் அடிப்படையில் எழுந்த பழக்கங்கள், சமூக நடைமுறை ஆகியவற்றை குறிக்க பயன்படுத்தப்பட்டது. பிந்தைய கட்டத்தில் இது ஆன்மாவின் அல்லது மனதின் பண்படுத்தல் (Culture of soul or mind)என அறியப்பட்டது. மேலும் 18 ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவில் உருவாகிய  மறுமலர்ச்சிகால சிந்தனை மரபு culture என்ற சொல்லாடலை அதிகம் முன்னெடுத்தது. அதை சமூக மற்றும் அரசியல் தளங்களில் பிரதிநிதித்துவப்படுத்தியது. நிலத்தை உழுதல், பண்படுத்துதல் போன்ற விவசாய செயல்பாடுகள் மனிதனின் நேரடி செயல்முறைகளை பிரதிபலிக்கின்றன. இவை ஒவ்வொரு வட்டாரத்திற்கும் மாறுபடுகின்றன. எல்லா விவசாயமும் எல்லா பிரதேசங்களிலும் பொருந்துவதில்லை. அது மண் சார்ந்து வேறுபடுகிறது. ஆக மனித மனங்களும், சமூக நடவடிக்கைகளும் இதனை ஒட்டி மாறுபடுகின்றன. கலாசாரம் அல்லது பண்பாடு என்பது விவசாயம் மற்றும் மண் சார்ந்து பிரதிபலித்து உருவாகும் நிலையில் மனித நடவடிக்கைகளும் வட்டாரம் சார்ந்த ஒன்றாக மாறுகின்றன. 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறுமலர்ச்சி சிந்தனையாளர்கள் இதனை அதிகம் முன்னெடுத்தார்கள். குறிப்பாக இம்மானுவேல் காண்ட், ரூசோ போன்றவர்கள் கலாசாரம் மற்றும் பயிரிடுதல் ஆகியவற்றிற்கிடையேயான உறவுமுறையை வெளிப்படுத்தினர். ஆக பயிரிடும் முறை மற்றும் மண் சார்ந்த விவசாயம் மாறுபடும் நிலையில் அதன் கலாசாரமும் வேறுபடுகிறது. ஒரே மொழி சார்ந்த குறிப்பிட்ட தூர இடைவெளியிலான பிரதேசங்கள் கலாசார நடவடிக்கைகளில் மாறுபடும் தன்மையை நாம் மேற்கண்டவற்றின் அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டில் இம்மாதிரியான மாறுபட்ட கலாசார கூறுகள் அதிகம் இருக்கின்றன. ஒரே மாவட்டத்திற்குள்ளும் நாம் இதனை காண முடியும். ஆக மண் சார்ந்த கலாசாரமும் குழந்தையை, பெண்ணின் சமூக தகுதியை தீர்மானிப்பதில் முக்கிய இடத்தை வகிக்கின்றன.

கலாசாரம் அல்லது பண்பாடு மண்ணின் மீதான அடையாளமாக உருப்பெறும் தருணத்தில் அது குடும்ப கட்டமைப்பிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குடும்பம் என்ற நிறுவனம் பெண்ணின் இயக்கத்தை, உடல் கட்டமைப்பை தீர்மானிக்கும் பொழுது அதற்கு தன்னை இருப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய தேவையையும் அதன் மூலம் எடுத்துக்கொள்கிறது. குழந்தை என்ற கருத்தாக்கம் உடல்ரீதியான பருவமடைதல் (Physical maturity)மூலம் முடிவுக்கு வந்து விடுகிறது என்று சில கலாசார சமூகங்கள் நம்புகின்றன. உடல்ரீதியான பருவ கட்டமைப்புகள் உலகம் முழுவதும் ஒரே மாதிரி இல்லை. நாகரீகங்களை பொறுத்து, தேசங்களை பொறுத்து, கண்டங்களை தாண்டி இவை வேறுபடுகின்றன. இதனை மிக முக்கிய அடிப்படையாக வைத்து உலகில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மாதிரியான சட்டப்படியான வயது வந்தோர் (Majority age)வரம்பை நிர்ணயித்து வைத்திருக்கின்றன. இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த நாடுகளின் சமூக, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சியை பொறுத்து மாறி இருக்கின்றன. மாறிவரும் உணவு பண்பாட்டு பழக்கங்கள் மனித உடலை வெகுவிரைவாக பருவம் கொள்ள வைக்கின்றன. ஆனால் நவீன விஞ்ஞானம் உடல் வயது மற்றும் மன வயது என்று மனித நிலையை பிரித்தறிகிறது. ஒரு குழந்தை உடல்ரீதியாக பருவமடைந்தாலும் அதன் மனவயது உடனடியாக பருவமடைந்து விடுவதில்லை. அது காலத்தொடர்ச்சியிலும், சமூகத்தோடு அவன் கொள்ளும் உறவு முறையாலும் வளர்ச்சியடைகிறது. இந்நிலையில் இரண்டாம் உலகப்போருக்கு பிந்தையகால கட்டத்தில் காலனியத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகளில் குழந்தை, பெண் குறித்த புதிய புரிதல்கள் மற்றும் பார்வைகள் ஏற்பட்டன. அது  சார்பான மரபான உரையாடல்களை ஊடறுத்துக்கொண்டு அந்த கேள்விகள் எழுந்தன. ஆக குழந்தையை குழந்தையாக எப்படி நிர்ணயிப்பது? நாடுகளில் சட்டரீதியான வயதை எப்படி தீர்மானிப்பது? போன்ற கேள்விகள் அதனூடே எழுந்தன. குழந்தை விஷயத்தில் உலகம் பிரதேச வேறுபாடுகளை கொண்டிருந்த போது அறுபதுகளில் குழந்தையின் அல்லது குழந்தை பருவத்தை கடந்த ஒருவனின் எதார்த்த வயதை கண்டறியும் தடவியல் தொழில்நுட்பம் உருவானது.. இது அதுவரையிலான குழந்தை குறித்த லௌகீக சொற்மனங்களை கேள்விக்குள்ளாக்கியது... மேலும் இது குறித்த உரையாடலை, கேள்விகளை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தியது. இதன் தொடர்ச்சியில் உலகம் முழுவதும் குழந்தைகள் மீதான ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் குறித்த விழிப்பும், போராட்ட உணர்வும் மேலெழுந்தன. இதனைத்தொடர்ந்து ஐ.நா குழந்தைகள் உரிமை ஆணையம் குழந்தை குறித்த தெளிவான வரையறை, அவர்களுக்கான உரிமைகள் போன்றவற்றை வரையறை செய்து அறிவித்தது. இதை குழந்தைகள் உரிமைகள் சாசனம் என்பதாகவும் நிர்ணயம் செய்தது. இதில் உலகம் முழுவதும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் குழந்தைகளாக கருதப்பட்டு அவர்களுக்கான பாதுகாப்பு உரிமைகள் வரையறுக்கப்பட்டன. மொத்தம் 54 அம்சங்கள் அதில் சேர்க்கப்பட்டன. முக்கியமாக குழந்தைகளுக்கு வாழும் உரிமை, அவர்களுக்கு குடும்ப கட்டமைப்பில் , கலாசாரத்தில் நீடிக்கும் உரிமை போன்றவைகள் வழங்கப்பட்டன. மேலும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை தடைசெய்தல், அவர்கள் மீதான வன்முறைகள் மற்றும் அவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதை தடை செய்தல் போன்ற அம்சங்களும் சேர்க்கப்பட்டன. 1989 ல் வரையறுக்கப்பட்ட இந்த மரபு சாசனம் பெரும்பாலான நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஆனால் பெரும்பாலான நாடுகள் சில வரையறைகளை மீறி வருகின்றன. உதாரணமாக 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மரண தண்டனை அளிக்கக்கூடாது என்ற விதிமுறையை சில நாடுகள் மீறி வருகின்றன. மேலும்  சட்டப்படியான வயதை 18 ஆக சர்வதேச சமூகம் நிர்ணயிக்க சாதகமான கருத்தை எட்டிய அம்சம் என்பது கல்வி வயது (Age of education)தான். காரணம் உலகம் முழுவதும் பள்ளி இறுதி படிப்பிற்கான வயது என்பது 17 அல்லது 18 ஆக இருக்கிறது. தடவியல் தொழில்நுட்பத்தில் எந்த உலக மனிதனின் வயதையும் நாம் துல்லியமாக கணக்கிட இயலும்...இனக்குழு சமூக இயங்கியலில் இருந்து உலகம் நாகரீக சமவெளி சமூகமாக மாறி விட்டது. எப்போதுமே முந்தைய சமூக கட்டமைப்பிலிருந்து இன்னொரு கட்டமைப்பிற்கு மாறும் சமூகத்தில் அதன் முந்தைய கூறுகள் எச்சமாக தொடர்வது இயல்பே. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மரபுகள், எச்சங்கள் இன்னும் சில சமூகங்களில் தொடர்வது அதனை வரலாற்றுக்கு முந்தைய பயணத்தை நோக்கி நகர்த்துவது தான்... ஆப்ரிக்கா மற்றும் பின்தங்கிய ஆசிய நாடுகளில் இன்னும் அதன் தாக்கம் கடுமையாக இருக்கிறது.சமூகத்தை அதன் வளர்ச்சி நிலைகளை முன்னோக்கி நகர்த்துவதற்கான செயல்முறைகள் அவசியம்.

சாதிய சமூகமான கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்திய சமூகத்தில் சாதி என்பது இனக்குழு சமூகத்தின் பரிணாம வளர்ச்சியே என்கிறார் இந்திய வரலாற்றாசிரியர் டி.டி.கோசாம்பி. இனக்குழு சமூகங்கள் தொழில்பிரிவினைகளின்  படி சாதிய சமூகமாக கட்டமைக்கப்பட்ட இந்திய சமூகத்தில் சமூகத்தின் அலகுகள் மூன்றுவிதமாக இருந்திருக்கின்றன. 1. வர்ணம் 2. குலம் 3. கோத்ரா. இதில் வர்ணம் என்பது சாதியையும், குலம் என்பது குடும்பத்தையும், கோத்ரா என்பது குடும்ப பாரம்பரியத்தையும் குறிக்கிறது. இனக்குழுக்களின் எண்ணிக்கை பெருகி, அதுவே சிதறலாகி மற்றொரு சமூக கட்டமைப்பை ஏற்படுத்திய தருணத்தில் குழந்தை குறித்த கருத்தாக்கம் இன்னொரு வடிவத்தை எட்டியது. இங்கு பாரம்பரிய  சொத்துரிமை குறித்த பிரச்சினை எழுகிறது. சாதிய சமூகத்தில் பெண்களின் சொத்துரிமை மறுக்கப்பட்டது. ஆண் குழந்தைகள் மட்டுமே அதற்கு உரியதாக இருந்தன. இந்நிலையில் பண்டைய சாதிய சமூகங்களில் திருமணங்கள் சொத்துக்களின் பாத்தியதைக்காக நெருங்கிய உறவுகளில் அல்லது ஒரே கோத்திரத்தில் நடந்தேறின. மேலும் கோத்ர உறவு முறையை வலுவாக வைத்திருக்கவும், ஆண் இறப்பதற்கு முன் பேரக்குழந்தைகளை உருவாக்கவும் இளம்வயது திருமணங்கள் நடைபெற்றன. இந்த திருமண நடைமுறையில் சொத்துக்களின் பாரம்பரியம் காப்பற்றப்பட்டன. மேலும் பெண்குழந்தை பருவமடையும் முன்பு திருமணம் செய்து வைக்கப்படும் நடைமுறையும் இனக்குழு மற்றும் சாதிய சமூகங்களில் வழக்கில் இருந்தன. திருமணம் செய்து வைக்கப்படும் கட்டத்தில் அந்த பெண் பருவமடையும் வரை தாய்வீட்டிலே இருப்பாள். பருவமடைந்த கட்டத்தில் அவள் கணவனின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவாள். மேலும் திருமணத்திற்கு பிறகு பெண்கள் கருவுற்றால் அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டது. வருங்கால குழந்தைக்கு விருந்தினர் அந்தஸ்து அளிக்கப்பட்டது. அவள் முழு ஓய்வுக்கு அனுப்பப்பட்டாள். அவளின் ஒவ்வொரு அசைவுகளுமே கவனமாக கண்காணிக்கப்பட்டன. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான சடங்குகள் செய்யப்பட்டன. இந்நிலையில் அன்றைய காலகட்டத்தில் இளவயது திருமணங்கள் சமூக சடங்குகளின் , தங்கள் குல தெய்வங்களின் பகுதியாக கூட பார்க்கப்பட்டன. இதன் தொடர்ச்சியில் இந்திய சமூகங்களில் சாதியம் சார்ந்த பல சடங்குகள், சம்பிரதாயங்கள் ஏற்பட்டன. இந்நிலையில் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியில் 1929 ல் குழந்தை திருமண தடைச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும் இனக்குழு மற்றும் பண்டைய சாதிய சமூக மரபுகள் இன்னும் பல மாநிலங்களில் தொடர்கின்றன. ஹரியானா, பீகார், உத்திரபிரதேசம், ஆந்திரா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்கள் இதில் முன்னணியில் இருக்கின்றன. ஐ.நாவின் யுனிசெப் புள்ளிவிபரப்படி இந்தியாவில் 47 சதவீத பேர் குழந்தை திருமணத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலும் பெண் குழந்தைகள் இவ்வகையான திருமண நிர்பந்தங்களுக்கு ஆளாகின்றனர். அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மேலும் இந்திய மரபு சார்ந்த எச்சங்களாலும், மத அடிப்படை சார்ந்த பரம்பரை பார்வையாலும் இந்திய முஸ்லிம் பெண்களும் குழந்தை திருமணத்தால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவர்களின் இளவயது திருமணம் இயல்பான கல்வி உரிமையை மறுக்கிறது. இன்றைய இந்தியாவில் முஸ்லிம் பெண்களின் கல்வியறிவு மிக பலவீனமாக இருப்பதாக நிறைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அரபு நாட்டு பெண்களை விட மிகவும் பின்தங்கி இருக்கின்றனர். ஆக தொடர்ச்சியான சமூக பொருளாதார வளர்ச்சியே இதனை மாற்ற உதவும். ஆக குழந்தைகளை அவர்களின் இயல்பான போக்கில் அவர்களுக்கான பருவகால வாழ்க்கை சுதந்திரம் வேண்டும். இதுவே நவீன வாழ்க்கை முறையும், மாறி வரும் சமூக பொருளாயத கட்டமைப்பும் எதிர்கொள்ளும் சவால்.  இதனை தாண்டுவது மிகவும் அவசியம்.

Friday, February 14, 2014

பெண்ணுடல் மீதான வன்முறை
பெண்ணுடல் மீதான ஆணின் கண்காணிப்பும், அதனை தொடர்ந்த பலாத்காரமும், பாலியல் வதையும் இந்தியாவில் சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. ஆதி மனித சமூகம் தாய்வழி சமூக கட்டமைப்பிலிருந்து தந்தை வழி சமூக கட்டமைப்பிற்கு மாறிய நிலையில் இதற்கான தொடக்கம் குறிக்கப்பட்டு விடுகிறது. நிலப்பிரபுத்துவ சமூக கட்டமைப்பில் தான் பெண்கள் அதிகம் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டார்கள். அதற்கு முந்தைய அடிமை முறை சமூகத்தில் பெண்கள் அடிமைகளாக மாற்றப்பட்டு வன்புணர்விற்கு பிறகு கொல்லப்பட்டார்கள். வரலாற்றில் தந்தைவழி சமூக மாறுதலுக்கு பிந்தைய எல்லா சமூக கட்டமைப்பிலும் பெண்களின் உடல் என்பது ஆணின் அதிகாரத்திற்கு உட்பட்டது தான். இதன் தொடர்ச்சியில் இன்றைய நவீன காலகட்டத்தில் அதன் வடிவம் மாறியிருக்கிறது. அதே நேரத்தில் பெண்களின் சமூக இருப்பும் மாற்றமடைந்திருக்கிறது. இன்று சராசரி இந்திய பெண் எதிர்கொள்ளும் முக்கிய சவால் என்பதே தன் மீதான ஆணின் அதிகாரத்தை வெல்வது தான்.  சராசரி ஆண் போல்  பெண்களுக்கு 24X7 நடமாடும் சுதந்திரம் (Freedom of Mobility)என்பது ஆபத்தானதாகவும், நிச்சயமற்றதாகவும் இருக்கிறது. சூரிய மறைவிற்கு பின் நடமாடுவது என்பதே இந்தியாவின் பெரு நகரங்கள் தொடங்கி சிறு கிராமங்கள் வரை  பெண்களுக்கு மிக பாதுகாப்பற்றதாக இருக்கிறது. பல இரவு நேர பாலியல் வன்முறை சம்பவங்கள் மிக இயல்பான ஒன்றாக மாறி விட்டன. இந்தியாவில் பாலியல் வன்முறை என்பது அசாதாரண நிலையிலிருந்து சாதாரண நிலைக்கு மாற்றமடைந்து வருகிறது. இந்நிலையில் இதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதைப்பற்றி சமீபத்தில் ஐ.நா சபையின் சார்பில் தெற்காசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் ஆண்களிடம் சர்வே ஒன்று நடத்தப்பட்டது. அதில் பாலியல் வன்முறைக்கான காரணம் என்பதை குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் 70 -80 சதவீத ஆண்கள் பாலியல் வன்முறைக்கான காரணம் குறித்து பின்வருமாறு தெரிவித்தார்கள். முதலாவது ஆண்கள் தங்களுக்கு பெண்களின் ஒப்புதல் இல்லாமலேயே அவர்கள் மீது பலாத்காரம் செய்ய உரிமை இருப்பதாக நம்புகின்றனர். இரண்டாவது வெறும் வேடிக்கை, கோபம் அல்லது அவர்களுக்கான தண்டனை என்பதாக கருதுகின்றனர். இதில் மது உட்கொள்ளல் என்பது ஒரு சிறு காரணம் மட்டுமே. மேலும் பல பெண்களுடன் உறவு,பாலியல் தொழிலாளர்களுடன் உறவு, மனைவி மீதான உடலியல் வன்முறை போன்றவையும் இதற்கான கூடுதல் காரணங்கள் என்று அறியப்பட்டன. மேலும் ஆண்மையை நிரூபிக்கும்  சோதனைக்கூடமாக பெண்ணின் உடலை வக்கிர ஆண்களில் ஒருபகுதியினர் கருதுகின்றனர். இதன் நீட்சியில் மற்றுமொரு முக்கிய காரணமாக குழந்தை பருவத்தில் குடும்பத்தால், சமூகத்தால் தாங்கள் உளவியல் மற்றும் உடலியல் சித்திரவதைக்கு உள்ளானதன் பழிவாங்கும் செயல்முறை தான் இந்த பலாத்காரம் என்கின்றனர். அவர்களுக்கு ஆரம்பக்கல்வி  மறுக்கப்படுவது கூட  இதனை நோக்கி அவர்களை நகர்த்துகின்றது. மேலும் முக்கியமான ஒன்றாக பெரும்பாலான பாலியல் பலாத்காரங்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அறிமுகமான நபர்களாலே நிகழ்த்தப்படுகின்றன. இந்தியாவில் பாதிக்கப்படும் பெண்களில் நான்கில் மூன்று பேர் பாலியல் குற்றவாளிகளை சரியான அடையாளம் காண்கின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு நடந்த சம்பவம் குறித்து வெளிப்படுத்துவதில்லை. காவல்துறையில் புகார் அளிக்க முன்வருவதில்லை. மருத்துவ பரிசோதனைக்கும் அவர்கள் தயாரில்லை. காரணம் இந்திய சமூகம் காலங்காலமாக கட்டமைத்து அசைக்காமல் வைத்திருக்கும் பெண்ணிற்கு எதிரான ஆதிக்க மதிப்பீடு தான். இதனால் தங்களின் எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்று அவர்கள் அச்சங்கொள்கின்றனர். குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படும் போது போதுமான சாட்சியங்களுடன், மருத்துவ அறிக்கையும் அவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க ஆதார மூலங்களாக தேவைப்படுகின்றன. ஆனால்  பாதிக்கப்படும் பெண்கள் தங்களின் எதிர்காலம் கருதி சுய ஆதாரங்களை அழித்து விட்டு உடலை சுத்தம் செய்து விடுவதால் சில சமயங்களில் குற்றத்தை நிரூபிக்க ஆதார பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது. இதுவும் இன்றைய இந்தியாவில் பாலியல் வன்முறை வழக்குகளின் பலவீனத்திற்கு காரணமாகி விடுகிறது. பல சமயங்களில் குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள். இந்தியாவில் கிரிமினல் சட்ட நடைமுறைகளில் உள்ள பலவீனம் கூட ஒருவகையில் இப்படியான வன்முறைகள் திரும்ப திரும்ப நிகழ்வதற்கு காரணமாகி விடுகின்றன. குற்றத்திற்கான தண்டனை உறுதியாக, விரைவாக கிடைக்கும் என்ற நிச்சயமற்ற சூழல்  பலருக்கு சிறைச்சாலை குறித்த அசட்டுத்தைரியத்தை கொடுக்கின்றன. நடைமுறை இவ்வாறு இருக்க ஆண் பெண் இணைந்த சமூகத்தில் இதற்கான தீர்வு குறித்து ஆராய வேண்டியதிருக்கிறது.இந்தியாவின் சமூக கட்டமைப்பில் ஆண் பெண் உறவு குறித்த மதிப்பீடுகள், பெண் உடல் மற்றும் உடை ஆகியவற்றின் மறுசிந்தனை அவசியமாகிறது. கல்விமுறையில் மாற்றம் என்பது இதன் சிறுபகுதியே. குறிப்பாக பாலியல் குறித்த அறிவியல் பூர்வமான ஊட்டத்தை இளந்தலைமுறையினர் மத்தியில் அளிப்பது இன்றைய சூழலில் மிக அவசியமான ஒன்று. அதாவது அதனை பாலியல் கல்வியாக கல்விநிலையங்களில் போதிக்க வேண்டும். இதற்கான குரல்கள் பல காலமாக இந்தியா முழுவதும் எழுந்து வருகின்றன.  உலகில் பாலியல் குறித்தும், பாம்பு குறித்தும் தான் அதிகமான தவறான நம்பிக்கைகள் (Myth)நிலவுகின்றன. அறிவியல் பூர்வமான பாலியல் கல்வி முறை இதனை போக்கும் என்பது பலரின் எதிர்பார்ப்பு. அதாவது இருபாலர் இணைந்த கல்விக்கூடங்களில் இதனை தனித்தனியாகவோ அல்லது சூழலை பொறுத்து இருவருக்கும் சேர்த்தோ நடத்தலாம். இதன் மூலம் பெண் குறித்த ஆணின் பல தவறான பிம்பங்கள் உடைய வாய்ப்பிருக்கிறது. மேலும் ஆண் பெண் உறவு குறித்த முறையியல், மதிப்பீடுகள், வரைமுறைகள் மாற வேண்டும். இருபாலர் கல்வி மற்றும் இருபாலரும் இணைந்த பணி முறை ஆகியவை இம்மாதிரியான மதிப்பீடுகளை ஓரளவிற்கு மாற்றி இருக்கின்றன. ஆனால் இன்றைய நிலையில் ஒரு பெண் மற்றொரு பெண்ணுடனோ அல்லது ஓர் ஆண் மற்றொரு ஆணுடனோ தொடர்பு கொண்டால் அது நட்பாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஓர் ஆண் மற்றொரு பெண்ணுடனோ அல்லது ஒரு பெண் மற்றொரு ஆணுடனோ தொடர்பு கொண்டால் அது நட்பிற்கு அப்பால் கவர்ச்சியாக , உடலியல் ரீதியான தொடர்பாக பார்க்கும் மனோபாவம் நிலவுகிறது. இந்த தவறான மனோபாவம் கண்டிப்பாக மாற வேண்டியது அவசியம். நட்பு என்பது பரஸ்பர அறிமுகம் கொண்ட, உரையாடல் கொண்ட ஓர் ஆத்மார்த்த உளவியல் கூறே. இதன் எதார்த்த அர்த்தம் மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும். மேலும் பெண்ணுடல் குறித்த ஆணின் பார்வையாக இன்றைய நிலையில் பெண் அணியும் உடை முன்வைக்கப்படுகிறது. இனக்குழு சமூக காலகட்டத்தில் ஆணும் பெண்ணும் இடுப்புக்கு கீழே உடை அணிந்த காலத்தில் அது மேலும் பரிணாம வளர்ச்சி பெற்று உடல் முழுவதையும் மறைக்கும் ஒன்றாக மாறியது. நவீன சமூகம் உடையை தேர்வு செய்ய   காலநிலை, உடல்பொருத்தம் மற்றும் சௌகரியம் போன்ற பல வரைமுறைகளை வகுத்துக்கொண்டு செயல்படுகிறது. மேற்குலகை பொறுத்தவரை இது ஓரளவிற்கு சரியாக கடைபிடிக்கப்படுகிறது. அங்கு உடை ஒரு பெரும் விவாதப்பொருளே அல்ல. மாறாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உடை என்பது மேற்கண்ட வரைமுறைகளை தாண்டி நாகரீகம் மற்றும் தன்னை வெளிப்படுத்தல் என்ற அம்சங்களாக பார்க்கப்படுகிறது. அழகு சாதன பொருட்களுக்கு உலகில் இந்தியா மிகப்பெரும் சந்தை என்பதும் இதனோடு சேர்த்து கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது. உலகமயமாக்கலுக்கு பிறகு ஆடை சந்தைகளில் பெண்களுக்காக விதவிதமான வடிவங்களில், நிறங்களில், வகைகளில் உடைகள் வந்திறங்குகின்றன. இங்கு எல்லாவித உடைகளும் ஆணின் கண்காணிப்பிற்கும், கவனத்திற்கும் உட்பட்ட ஒன்றாகவே இருக்கின்றன. பெண்கள் தலைமுதல் கால் வரை முழுவதுமாக தங்களை மூடிக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் பிற்போக்கு ஆண்களும், உங்களுக்கு சுதந்திரம் கொடுக்கிறோம் என்று விதவிதமான வடிவங்களில் உடைகளை தயாரித்து பெண்களுக்கு வழங்கும் ஆண்களும் தங்கள் நோக்கத்தில் ஒன்றுபட தான் செய்கின்றனர். பெண்ணின் உடல் என்ற நோக்கம் தான் அது.  ஆனால் இன்றைய இந்தியாவில் எல்லாவிதமான உடைகளும் பெண்களுக்கு சவாலாக தான் இருக்கின்றன. காரணம் பெண்கள் மீதான வன்முறை என்பது அதை தாண்டியே இருக்கிறது. கண்முன் நிகழ்ந்து கொண்டிருக்கும் பல சம்பவங்களை நாம் மேற்கோள் காட்ட முடியும். ஆக இன்றைய இந்தியாவில் விவாதபொருளாகி இருக்கும் உடையை பொறுத்தவரை உடை தான் எல்லா பிரச்சினைகளுக்கான காரணம் என்பதோ அல்லது உடை தான் பெண் விடுதலைக்கான கூறு என்பதோ இரண்டுமே அபத்தமான வாதம் தான். வக்கிர ஆண்களுக்கு அது ஒரு பொருட்டே அல்ல. அவர்களின் கண்காணிப்பும், இச்சையும் பெண்ணுடல் என்ற இலட்சிய கருத்தாக்கத்தை நோக்கியே இருக்கின்றது. தோல்சுருங்கிய மூதாட்டிகள் கூட பலாத்காரத்திற்கு உள்ளாவது இதனால் தான். இன்றைய  கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார அம்சங்களில் இன்றைக்கு பெண்கள் படிப்படியாக சுதந்திர தேடலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில் உடையை தாண்டிய சிந்தனைகள் அதிகம் அவசியப்படுகிறது.  ஆண்- பெண் உடலை தாண்டிய சிந்தனை தான் அது.  எந்த சூழலிலும் அது பெண்ணுடலை வன்முறைக்கு உட்படுத்தாத ஒன்றாக இருப்பது அவசியம்.

காதலர் தினமும், சமூக கட்டமைப்பும்
Valenties day என்ற காதலர் தினம் மேற்கில் இருந்து வந்தது. பொதுவாக இன்றைய கட்டத்தில் எல்லா கொண்டாட்ட தினங்களும் மேற்கில் இருந்தே வருகின்றன. குறிப்பாக அந்த தினங்களில் பெரும்பாலானவை கிரேக்க புராண கதைகளோடு சம்பந்தப்பட்டவை. அதன் ஆட்சியாளர்களோடும் சம்பந்தப்பட்ட நிறைய கதைகள் உண்டு. அந்த அடிப்படையிலேயே இந்த காதலர் தினம் உருவாக்கப்பட்டு தற்போது இந்தியா போன்ற நாடுகளிலும் இது தொடர்கிறது. உண்மையில் காதல் என்பது என்ன? காலத்தை பின்னுக்கு தள்ளியே நாம் இதனை ஆராய வேண்டியதிருக்கிறது. இரு பாலினரும் ஒரே மனநிலையோடு ஈர்க்கப்படும் காதல் என்பது ஆதி உணர்வு தான். மனிதன் தோன்றிய நாளில்  காதல் என்பது நாம் அறிந்து கொண்ட அல்லது புரிந்து வைத்திருக்கிற அர்த்தத்தில் அல்ல. மாறாக இனக்குழு மற்றும் நாடோடி சமூக மனநிலையோடு சம்பந்தப்பட்டது. புராதன சமூகம் தாராள பாலுறவு ஒழுங்கோடு தான் நகர்ந்து வந்திருக்கிறது. இங்கு திருமண ஒழுங்கு இல்லை. கட்டுப்பாடு இல்லை. இங்கு நிர்ணயிக்கப்பட்ட, வரையறுக்கப்பட்ட குடும்ப வாழ்க்கை இல்லை. திருமணம் என்ற வரையறுக்கப்பட்ட வாழ்க்கை சூழலில் இருந்தே நடப்பு காதலின் பரிணாமம் தொடங்குகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடு வந்த பிறகு தனக்கு விருப்பப்பட்ட ஆணையோ அல்லது பெண்ணையோ தேர்ந்தெடுக்கும் உரிமையை , அதற்கான சுதந்திரத்தை தன்வயப்படுத்திய முறைமையே காதல்.. அதன் பிந்தைய கட்டத்தில் கீழை சமூகங்கள் (Eastern Societies)இந்த தேர்வு முறையை, உரிமையை தனிநபர் என்ற நிலையிலிருந்து குடும்பம் சார்ந்த ஒன்றாக மாற்றின. இதிலிருந்தே தற்போதைய முரண்பாடுகளும், நெருக்கடிகளும் தோன்றி விட்டன.

திருமணம் என்ற வாழ்க்கை முறையியல் உருவான தருணத்தில் இருந்தே காதலும் உருவாகி விட்டது.  நவீனத்துவமும் அதன் வாழ்க்கை ஒழுங்கும் ஊடுருவிய மேற்கத்திய சமூகங்களில் காதல் என்பது முழுக்க முழுக்க தனிநபர் தேர்வாகவே இருக்கிறது. அங்கு 18 வயது என்பது ஒரு மேஜின் நம்பர். அதை ஓர் ஆணோ அல்லது பெண்ணோ கடந்து விடும் போது அது அவர்களுக்கான காலமாக, சகாப்தமாக மாறி விடுகிறது. அங்கு 18 வயது வரை மட்டுமே ஓர் ஆண் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறான். அதன் பின்னர் தனக்கு விருப்பப்பட்ட ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ அவர்கள் உரையாட, நட்பு கொள்ள, காதலிக்க முழு சுதந்திரமும் அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆணும், பெண்ணுமே தங்களுக்கான இணை குறித்த அதிக பிரக்ஞையோடு இருக்கின்றனர். இந்த மரபு மேற்கில் Romantic literature உருவான காலத்தில் இருந்தே தொடங்கி விட்டது. அந்த இலக்கியங்கள் மேற்கின் தனிமனித வாழ்வை, அதன் அந்தரங்க புனிதத்தை அதிகம் பிரதிபலித்தன.  தனிமனித ஆன்மாவை அதிகம் பிரதிபலிக்கும், படிமப்படுத்தும் கவிதைகளை மேற்கத்திய இலக்கிய மரபில் நாம் காண முடியும். பல மேற்கத்திய கவிஞர்கள் காதல்வயப்பட்டவர்களே... வாழ்க்கையை அந்தரங்கப்படுத்தும், எதிர்பால் உறவை அகங்கொள்ளும் சூழலை பிரக்ஞைப்படுத்தியவர்கள். மேலும் குழந்தை என்ற கருத்துருவமும் அங்கு அதிக முக்கியத்துவத்தோடு பார்க்கப்படுகிறது. ஒரு குழந்தை அந்த பருவத்தின் சகல உரிமைகளையும் அனுபவிக்க வேண்டும் என்று மேற்கத்திய உலகம் வலியுறுத்துகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கான இயல்பான வளரும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதும் அதன் கோட்பாடு. மேலும் Walking bus என்ற குழந்தைகளுக்கான பிரத்யேக நடைபாதையும் பல மேற்கத்திய நாடுகளில் இருக்கின்றன.

கீழை நாடுகள் அல்லது இந்தியா போன்ற நாடுகள் குடும்பம் என்ற நிறுவனத்தை அதிகம் கட்டிக்காப்பவை. அதுவே அதற்கான பலம். அதனூடே அதன் விழுமியங்களும், மதிப்புகளும் உருவாகி இருக்கின்றன. குறிப்பாக சாதிய அடுக்குகளால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்திய சமூகத்தில் குடும்பம் அதிக அதிகாரம் செலுத்துகிறது. வணிக நிறுவனங்கள் கூட குடும்பத்தை மையப்படுத்தியே இருக்கின்றன. இந்த மதிப்பை குலையாமல் இவை பாதுகாக்கின்றன. இந்த அடிப்படையில் தான் காதல் என்பதும் குடும்ப தேர்வாக இருக்கிறது. காதலித்து திருமணம் செய்தவர்கள் கூட தங்கள் குழந்தைகள் காதலிப்பதை விரும்புவதில்லை. இங்கு சாதிகள் தான் காதலை தீர்மானிக்கின்றன. இந்திய புராண இதிகாசங்களில் காதல் சார்ந்த கதைகள் ஏராளம். மேலும் கீழை இலக்கியங்களில் அரபு, பாரசீகம் மற்றும் உருது மொழி சார்ந்த இலக்கியங்களில் காதல் காவியங்கள் ஏராளமாக காணக்கிடைக்கின்றன. அவற்றில் புகழ்பெற்றது லைலா மஜ்னூன் காவியம். தன் இலட்சிய காதலியை தேடி அலைந்த  பித்தன் என்னும் பொருள் கொண்ட மஜ்னு என்றழைக்கப்பட்ட குவைஸ் பின் அல் முலாவா பற்றிய கதை. தான் கனவு கண்ட காதலியை தேடி பிரதேசம் தாண்டி வந்த மஜ்னூ பின்னர் தன் காதலி இறந்து விட்டதை அறிந்து அவளின் கல்லறையில் போய் கவிதை பாடுவான்.

"நான் இந்த சுவரை கடந்து விடுகிறேன். இது லைலாவின் சுவர்

இந்த சுவற்றை முத்தமிடுகிறேன்

காதல் வீட்டை என் இதயத்திலிருந்து எடுத்துக்கொண்ட வீடல்ல

ஆனால் ஒன்று  குடிகொள்ளும் இந்த வீடு"


இதே போன்றே குவைஸ் - லுப்னா,  காதிர் - அஸ்ஸா,  மர்வா - அல் மஜ்னூ பர்னாஸி, அன்தாரா - அப்லா, மற்றும் இர்பான்  - ஷுபி ஆகியோரைப்பற்றிய பதிவுகள் இருக்கின்றன. மேலும் உருது மொழியின் கஸல்கள் என்பவை காதலன் மற்று காதலி ஆகிய இருவரிடையேயான உரையாடலின் இசை வடிவம்.இந்தியாவை பொறுத்தவரை தற்போதைய காலகட்டத்தில் காதல் என்பது  தனிமனித நிலைக்குள் வரவில்லை. சாதிய குடும்பங்கள் சார்ந்த அதீத கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது. சாதிய சமூகங்கள் இதற்காகவே பஞ்சாயத்துகளை அமைத்திருக்கின்றன. இதில் பெரும்பாலும் பெண்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். ஆணாதிக்க சமூகம் சாதியத்திற்குள் ஊடுருவி பெண்ணை காலி செய்கிறது. இதற்காகவே பல கௌரவக்கொலைகள் நடைபெறுகின்றன. பெரும்பாலும் பெண்கள் தான் இதன் பலியாடுகள். தமிழ்நாட்டில் இளவரசன் -திவ்யா சம்பவம் சாதிய குடும்பங்களின் அக்கிரமத்திற்கு பெரும் உதாரணமாக இருக்கிறது. ஒரே சாதியில் கூட தனிநபர்கள் காதலிக்க முடிவதில்லை. அங்கும் உட்சாதி, குல, கோத்திரம் மற்றும் ஜாதகம் குறுக்கே வந்து நிற்கிறது.  எல்லா நிலையிலும் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தனிநபர் சுதந்திரம் பறிபோகி வருகிறது. அதே நேரத்தில் பன்னாட்டு நிறுவன ஊழியர்களிடம் இந்த சாதி மற்றும் மதமறுப்பு சார்ந்த காதல் திருமணங்கள் எல்லாவித எல்லைப்பாடுகளை தாண்டி நடந்து வருகின்றன. இது ஒரு சிறிய மாற்றமே... அதே நேரத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமண முறையில் அதிகரிக்கும் விவாகரத்துகள் குடும்ப அமைப்பை சிதைத்து வருகின்றன. வாழ்க்கைக்கு மற்றொரு அர்த்தத்தை தேடும் நிகழ்வு இது. இந்நிலையில் தனிமனிதர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களுடன், அவர்களுடன் ஆத்மார்த்தமாக உரையாட, உளவியல் பிணைப்பை அதிகப்படுத்த ஒரு களம் தேவைப்படுகிறது. அது வெளியாக, காலமாக இருக்கலாம். ஆக இன்றைய இந்தியா போன்ற சாதியக் கட்டமைப்பை வலுவாகக்கொண்ட  நாடுகளில் காதல் என்பது சாதிய உடைப்பதாக, அதனை கடந்த ஓர் ஆரோக்கியமான, சமத்துவ சமூகத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும்... அது தான் இம்மாதிரியான தினங்களின் லட்சியமாக இருக்க வேண்டும்.

Monday, February 10, 2014

கலாசார காவலர்களும் பெண்களும்கலாசாரத்தை காப்பது எப்படி? உண்மையில் அதனை காவல் காக்கும் போது மட்டுமே அது தொடர்ச்சியாக காப்பாற்றப்படுமா? இந்த  சமூகத்தில் வெறும் பெண்கள் மட்டுமே காலாசார பாதுகாப்பின் அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது எதற்காக? என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை காண வேண்டியதிருக்கிறது. கலாசாரம் என்பது சமூக மனிதர்களின் கூட்டு செயல்கள், அனுபவங்கள் இவற்றின் அறம் சார்ந்த தொகுப்பு, அது தொடர்ச்சியாக தொடரப்படும் ஒரு செயல். இந்நிலையில் இதனை காப்பது என்பது அந்த சமூகத்தின் மேலாண்மை (Hegemony) சார்ந்த ஒரு செயல்பாடு.

உலகில் அதிகாரபூர்வமான கலாசார காவலர்களை கொண்ட நாடு சவூதி அரேபியா. அங்கு முத்தவா என்ற பெயரில் கலாசார காவலர்கள் செயல்படுகின்றனர். இவர்களின் பணி என்பது  மசூதிக்கு தொழுகைக்கு செல்லாமல் வீதியில் சுற்றும் முஸ்லிம் இளைஞர்களை தொழுகைக்கு செல்லுமாறு அறிவுறுத்துவது, தாடி வைக்காத இளைஞர்களுக்கு அதனை வைக்க அறிவுரை கூறுவது, வீதியில் ஆண் துணையில்லாமல் செல்லும் பெண்களை கண்காணிப்பது போன்ற பல பணிகளை சவூதி அரசாங்கம் அவர்களுக்கு அளித்திருக்கிறது. அடிப்படையில் வஹ்ஹாபிய இஸ்லாமிய கொள்கையை கொண்ட நாடான சவூதியில் இது இயல்பான ஒன்று. மேலும் மலேசியா மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில்  இம்மாதிரியான காவலர்கள் மிகக்குறைவான அளவில் அதிகாரபூர்வமற்ற முறையில் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்தியா என்பது பன்மய சமூகங்களை கொண்ட நாடு. இங்கு பல மதங்கள், சாதிகள், இனக்குழுக்கள் வாழும் ஒரு பெரும் ஜனநாயக நாடு. இதன் பலமே இந்த பன்மைத்துவம் தான். ஆனால் இந்து முஸ்லிம் என்ற பெரும் பிளவு ஏற்பட்ட பின், குறிப்பாக இந்துத்துவ சக்திகள் உயிர்பெற்ற இருபதாம் நூற்றாண்டில் இந்த கலாசாரத்தை காப்போம் என்ற கோஷம் வலுவாக முன்வைக்கப்பட்டது. பெண்கள் காலங்காலமாக ஒடுக்கப்பட்டு கிடந்த சாதிய சமூகத்தில் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், குறிப்பாக சுதந்திரத்திற்கு பிந்தைய கட்டத்தில் பெண்கள் கல்வியறிவு காரணமாக சமூக நகர்விற்குள்ளானார்கள். அவர்களின் நகர்வு இயல்பானதாக மாறியது. இந்நிலையில் சிறுபான்மை சமூகங்களை எதிர்நிலையாக நிறுத்தி அரசியல் செய்து பழக்கப்பட்டு போன இந்துத்துவ இயக்கங்களுக்கு கலாசாரத்தை குறிப்பாக பெண்களை பாதுகாப்பது என்ற பெயரில் கண்காணிப்பு அரசியல் செய்வது நிர்பந்தமான ஒன்றாக மாறியது.

பெண்கள் காதலிக்க கூடாது, காதலர் தினம் கொண்டாடக்கூடாது, பிற ஆண்களுடன் பேசக்கூடாது, அவர்கள் குடிக்க கூடாது, அவர்கள் வேலைபார்க்கக்கூடாது, அவர்கள் எந்த நிலையிலும் பிற மத ஆண்களுடன் பழகக்கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளைக்கொண்ட செயல்திட்டங்கள் இவர்களால் வகுக்கப்பட்டன. இதனடிப்படையில் தன் இயக்கத்தவர்களை கொண்ட படைகளை அமைத்து இவர்கள் கண்காணிக்கிறார்கள். அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வார்த்தை தான் லவ்ஜிஹாத். அதாவது இந்து பெண்களை முஸ்லிம் ஆண்கள் மயக்கி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். இதனை நாம் தடுக்க வேண்டும் என்பது தான் அது. அவர்களின் வாதப்படி பார்த்தால் இந்தியா முழுமைக்கும் சாதிய இந்து சமூகத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும். எதிரிடையாக முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் எதார்த்தம் அவ்வாறு இல்லை. இது ஒரு மதவாத அஜெண்டா என்பதை தவிர வேறில்லை. இம்மாதிரியான வெற்றுக்கருத்தியல் காரணமாக இந்தியாவில் பல இடங்களில் மோதல்கள் உருவாகி இருக்கின்றன. பல விவகாரங்கள் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்டன.

வட இந்தியாவில், கர்நாடகாவில், தமிழ்நாட்டில் இந்துத்துவ இயக்க  கலாசார காவல் படையின் செயல்திட்டத்தை போன்றே மறு பக்கத்தில் முஸ்லிம் தளத்திலும் அது செயல்படத்தொடங்கியுள்ளது மிகப்பெரும் அவலம். நம் பெண்களை காப்போம் என்ற கோஷத்துடன் தமிழ்நாட்டில் வஹ்ஹாபிய இஸ்லாமிய இயக்கங்கள் சமீப காலமாக இந்த ஆயுதத்தை கையில் எடுத்திருக்கின்றன. தமிழ்நாட்டைப்பொறுத்தவரை  முஸ்லிம் பெண்கள் காலங்காலமாக கல்வியறிவில் மிகவும் பின்தங்கி இருந்தனர். மற்ற சாதிய சமூகங்களில் பெண்கள் முன்னுக்கு வந்த பின்னரும் கூட உயர் கல்வியும், வேலைவாய்ப்பும் சொந்த சமூகத்திலிருந்து மறுக்கப்படும் சூழலே அவர்களிடம் இருந்தது. கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவும், இடஒதுக்கீடு காரணமாகவும் தமிழ்நாட்டு முஸ்லிம் பெண்கள் கல்வி கற்க நம்பிக்கையோடு வருகிறார்கள். அதுவும் தென்மாவட்டங்களில் மட்டுமே இந்நிலைமை அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண்களின் கல்வியை பாழடிக்க, அவர்களை தன்னம்பிக்கை அற்றவர்களாக மாற்ற , அவர்களை நோகடித்து எதிர்காலத்தை சீர்குலைக்க தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வஹ்ஹாபிய இயக்கங்களான தமுமுக, தவ்ஹீத் ஜமா அத் மற்றும் இந்திய (?)தவ்ஹீத் ஜமா அத் போன்ற இயக்கங்கள் தமிழ்நாடு முழுவதும் தன் இயக்கத்து ஆணாதிக்க வெறியர்களைக்கொண்ட படைகளை அமைத்து துப்பறியும் நிபுணர்கள் போன்று முஸ்லிம் பெண்களை கண்காணிக்கின்றன. ஏதாவது ஆண்களிடம் பெண்கள் பேசினால் கூட உடனே அந்த பெண் அவனை காதலிக்கிறாள் என்று கதைகளை பரப்புவது, அந்த ஆணிடம் தகராறு செய்வது, இருவரையுமே அடிப்பது போன்ற செயல்களை செய்து வருகின்றன. மேலும் முரண்நகையாக இதே இயக்கத்தவர்கள் முஸ்லிம் பெண்களை போராட்டக்களத்திற்கு கொண்டு வருகிறார்கள். இந்த அரசியலில் இது பெண்ணுரிமை சார்ந்த விஷயமல்ல. மாறாக கள போராட்டத்திற்கே உரிய பலத்தை காட்டும் நோக்கமே. இந்நிலையில் இவர்களின் பெண்கள் மீதான கண்காணிப்பு முழுக்க முழுக்க தனிநபர் உரிமையில் தலையிடுவதாகும். மேலும் குடும்பமாக கட்டமைக்கப்பட்டிருக்கிற இந்திய சமூகத்தில் குடும்பம் தான் ஆண் பெண் உறவை தீர்மானிக்கின்றது. உரிமையை கூட அது தான் தீர்மானிக்கிறது. அவ்வகையில் இது குடும்பத்தின் உரிமையில் மூன்றாவது சமூகம் தலையிடும் செயல்பாடும் கூட. மேலும் பெண்கள் தங்களை கவனிக்கவில்லை என்ற உளவியல் ஏக்கமும் இதற்கு ஒரு காரணம். எல்லா கலாசார காவலர்களும் பெண்களை குறிவைத்தே இயங்குகிறார்கள். அரசியல் செய்கிறார்கள். இரு மதங்கள் சார்ந்த இயக்கங்களில் எந்த கலாசார காவலரும் தன் இனத்தை சார்ந்த ஆண்களை கண்டுகொள்வதில்லை. மாறாக பாராட்டவே செய்கிறார்கள். இது முழுவதும் இந்திய சமூகத்தின் சாதிய ஆணாதிக்க மனோபாவமாகும். இந்திய சாதிய சமூகம் ஆணாதிக்க வெறியோடு தான் வரலாற்றில் கட்டமைக்கப்பட்டது. கல்வி ஆண்களுக்கானதாக மட்டுமே மாற்றப்பட்டது. மனுதர்மமும் அதைத்தான் வலியுறுத்தியது. இருபதாம் நூற்றாண்டில் தான் பெண்கள் தங்களின் சுயபிரக்ஞையை மீட்டெடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்தனர். அந்த போராட்டம் நீண்ட கால செயல்திட்டங்களை உள்ளடக்கி இருந்தது. அதன் விளைவு தான் தற்போதைய மாற்றங்கள்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் கலாசார காவலர்களின் செயல்பாடுகளும், ஆணாதிக்க வக்கிரர்களின் செயல்பாடும் நூலிழை வித்தியாசம் கொண்ட ஒன்று. அவர்கள் பெண்களை சதையாக கருதி வக்கிர செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவர்கள்  புனிதமாக கருதி கலாசாரத்தை பாதுகாக்க முயல்கிறார்கள். மனித உடலை புனிதப்படுத்துவது ஓர் அதிகாரச்செயல்பாடே. அதுவும் பெண்ணின் உடலை புனிதப்படுத்துவது ஓர் எதேச்சதிகாரம். இந்நிலையில் சமீபகாலமாக இருதரப்பிலும் அதிகரித்து வரும் கலாசார காவல் செயல்பாடுகள் சமூகங்களிடையே தேவையற்ற மோதல்களையும், பதட்டத்தையும் உருவாக்குகின்றன. தர்மபுரி சம்பவம் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. மேற்கு வங்கத்தில் நடந்த கொடூரம் இந்தியா முழுமைக்குமான பாடமாக இருக்கும் தருணத்தில் தமிழ்நாட்டு ஜனநாயக சக்திகள், பெண்ணிய இயக்கங்கள் இதில் கவனம் செலுத்தி இம்மாதிரியான அவலங்களுக்கு முடிவு கட்ட வேண்டும். எதிர்காலத்தில் அதன் விளைவுகள் இன்னும் உக்கிரமாக போகலாம்.