காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Monday, April 16, 2012

இலக்கியத்தை கொல்லாதவனின் சாட்சியமாக -ரியாஸ் குரானாவின் நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு கவிதை தொகுப்பு குறித்து

கவிதையின் இயங்கு திறன், அதை உட்கிரகித்தல், அதன் தொடர்ச்சியான வாசிப்பனுபவம், அதன் வீச்சு குறித்ததான பார்வை எனக்குள் இருக்கிறதா என்று என்னை நானே அடிக்கடி கேட்பதுண்டு. அவ்வாறு கேட்பதன் மூலம் எனக்கு நானே அதற்குள் ஊடுபாய முயற்சிக்கிறேன். கவிதை சார்ந்த விமர்சனம் எழும் சூழல், அதை வாசிக்கும் போது அதனூடே ஸ்பரிசிக்கும் போது எழும் உணர்வுநிலைக்குள் நம்மை கொண்டு செல்கிறது. ஆதிகால மனித சமூகத்தில் வார்த்தைகள் உருவானபோது அது கவிதையாகவே இருந்தது. ஓவியமும், கவிதையுமே ஆதிகாலத்து அவதானங்கள். வரலாற்றின் போக்கில் கவிதை நேர்கோடாகவும் நேரற்ற கோடாகவும் பயணித்து வந்திருக்கிறது. லௌகீக உலகில் மொழி எவ்வாறு கிளைத்தது என்பதில் இருந்து இது தொடங்குகிறது.மொழியின் சலனம், அதன் அசைவூட்டம் அதன் ஒவ்வொரு கிளையையும் பிடித்து உலுக்கியவாறே வரலாற்றில் பயணம் செய்திருக்கிறது. ஆக உலகின் ஒவ்வொரு மொழியிலும் கவிதை என்பது சொற்கள் ஒவ்வொருவிதமான வடிவத்தில், திசையில் வந்து விழுந்ததன் தொடர்ச்சியே. இந்த இடத்தில் கவிமனமும் அதனை தீர்மானிப்பதில் முக்கிய பங்களிப்பு செய்கிறது.மரத்திற்கு மரமாக இருப்பதை தவிர வேறொன்றுமில்லை. ஆக கவிதைக்கு கவிதையாக இருப்பது தவிர வேறு ஏதாவது இருக்குமா என்பதை யோசிக்க வேண்டியதிருக்கிறது. தமிழ்ச்சூழலில் கவிதைகள் அதிகப்பட்டு வரும் நிலையில் கவிதைக்கு இந்த குணாம்சம் இருக்குமா என்பது இங்கு முக்கிய கேள்வி.




ரியாஸ் குரானாவின் கவிதைகளை நான் கடந்த மூன்று ஆண்டுகளாக கவனித்து வந்திருக்கிறேன். அதற்கு முன்பே தீபச்செல்வன், ரிஷான் செரீப், அனார், பஹீமா ஜஹான் போன்றவர்களின் கவிதைகள் மீது எனக்கு அதிக பரிச்சயம் உண்டு. இதில் ரிஷான் செரிபின் கவிதைகள் புலம் பெயர் தன்மை குறித்த அதிக உள்ளுணர்வு கொண்டவை. இவர்கள் எல்லோருமே அந்த வாழ்க்கை குறித்த நுண்ணுணர்வு கொண்டவர்கள் தான். இந்நிலையில் ரியாஸின் நாவலின் ஒன்றின் மூன்றாம் பதிப்பு என்ற இந்த தொகுப்பு அந்த நுண்ணுணர்வுகளை குறியீட்டுக்கொண்டு செல்கிறது. "எனது எழுத்துக்கள் இலக்கியத்தை கொல்பவனின் சாட்சியம் மட்டுமே" என்ற அவரின் வரிகளோடு இந்த தொகுப்பின் மொத்த கவிதைகளும் கணம் மாதிரி விரிந்து செல்கிறது.

"தனது கவிதைக்குள் என்னை அழைத்துச் செல்ல
அவன் விரும்பியிருக்க வேண்டும்
சொற்களை திறந்த போது எதையுமே காணவில்லை
பலமுறை இப்படித்தான் நிகழ்ந்தது என்னை கூட்டிச் செல்லும் போது
மட்டும் கவிதைக்குள் எல்லாமே நிகழ்ந்து விட்டதாக சொன்னான்."

கவிதையை வடிவமைக்கும் சொற்கள் மாய எழுத்தட்டை போன்று செயல்படுவதை இது சொல்லாமல் சொல்கிறது. துயர் மிகுந்த மனித வாழ்வின் ஒவ்வொரு கணங்களும் இப்படியே மாய்ந்து போகின்றன. பின்னர் மிச்சமிருப்பவை அனைத்தும் ஏதுமற்ற வெளிச்சிதறல்களா?

"சொற்களுக்குள் நெடுநேரம் கவிதையை அடைத்து வைக்க முடியாது என்றேன்.
அவன் நம்புவதாக இல்லை.
எழுதும் போது சொற்களுக்குள் கவிதை இருப்பதில்லை.
வாசிக்கும் ஒவ்வொரு முறையும் புதிய சிந்தனைகள் நுழைந்து கவிதையாகி
வாசித்து முடிக்கும் போது வெளியேறிவிடுகின்றன என்றேன்."

கவிதை ஒவ்வொரு முறையும் சொற்களால் உருவாக்கப்படும் போது கைவிரல்கள் வழியே சில நேரங்களில் நழுவி விடுகிறது. எல்லா கவிதைகளும் பிறக்கும் தருணத்தில் இந்த சிக்கலில் மாட்டி விடுகின்றன. கவிதை தரும் வாசிப்பர்த்தம் அந்த அனுபவத்தின் பகுதியாக மாறும் சாத்தியம் இருக்கிறதா? இதை வேறொரு விதத்தில் பிரமிளின் கவிதை பிரதிபலிக்கிறது.

"சொல்லுக்குள்ளே
குடிசை எழும்புது.
குடிசை திறந்து
இருளின் மணி
இருந்த விழி.
விழியின் உள்ளே
கூரை கிழிந்து
உதிர்ந்த கதிர்த்தூள்.
கதிர்த்தூள் சேர்ந்து
கனன்று குதித்து
குடிசை?
வானில்
புகையின் வடுக்கள்..."
சொற்கள் திறந்து அதன் போக்கில் செல்வதும், உருமாறுவதும் கவிதையின் போக்கில் இடையறாது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சொற்கள் வடிவம் பெறுவதும், கவிதையாக அது வெளிப்படுவதும் சில நேரங்களில் ஒன்றுக்கொன்று முரண்பாடானதாக, வெட்டிச்சென்று வெளியேறி விடுவதாக மாறுகிறது. எல்லா நேரங்களிலும் சொற்கள் கவிதையாக வெளிப்படுவதில்லை. எழுத்து வெளியை விட்டு நழுவிச்செல்வதும் உண்டு. கவிதையின் பன்முக இயங்குதளம், அதன் அர்த்த தளம் இதிலிருந்து தான் தொடங்குகிறதா என்று கூட நான் சில நேரங்களில் யோசிப்பதுண்டு. அது பிரதியாக மாறி விட்ட பிறகு தரையில் வீழ்ந்து கிடக்கும் காகிதம் காற்றின் வேகத்தினால் வேறொரு திசையில் பயணம் செய்வது மாதிரி அர்த்த பிரதியும் மாறி விடுகிறது. அம்மாதிரி மனித வாழ்வின் துக்ககரமான பிரிவை, தவிப்பை, ஏக்கத்தை குறிப்பாக உணர்த்தும் கவிதை ஒன்று இந்த தொகுப்பில் முக்கியமானது.

" உசுப்பி விட்டால் தான் அசையக்கூடிய நிலையில்
இன்றிரவு காற்று வீசிற்று சுவாசிக்க விரும்புகிறவர்கள் கூட

வேறெங்காவது தான் போக வேண்டும்
என்னருகில் நின்ற அவன் ஒரு முக்கிய விஷயத்தை பலமாக கத்தியும்
என்னிடம் சேர்ப்பிக்க காற்றுப்போதவில்லை.
மரத்திலிருந்து உதிர்ந்த இலைகள் பாதித்தூரம் பயணித்தப்படி
அந்தரத்தில் நின்று விட்டன. கையசைத்து
காற்றை அழைத்துச் சென்ற அவள் திரும்பி வந்து
இமைக்கும் வரை நிலைமை வழமைக்குத் திரும்ப போவதில்லை."

சமீபத்தில் ஈழத்தில் நடந்து முடிந்து, தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கும் கொடூர செயல்பாட்டையும் மேற்கண்ட கவிதை குறிப்புணர்த்துகிறது. தற்போதைய நிலையில் துயர வாழ்க்கை என்பதன் ஆகச்சிறந்த உதாரணம் இலங்கை. லௌகீக உலகில் போராட்டங்கள் தொடர்ச்சியான இயக்கமாக மாறி இருக்கும் நிலையில் ஈழம் அதன் பெரும்பகுதியாக மாறி இருக்கிறது. மரத்திலிருந்து உதிர்ந்து இலைகள் பாதித்தூரம் பயணித்தப்படி அந்தரத்தில் நிற்பது மாதிரியான வாழ்க்கையே தற்போதைய ஈழ வாழ்க்கை. இதையே ரிஷான் செரிபின் மற்றொரு கவிதையும் வெளிப்படுத்துகிறது.


'ஓ பரமபிதாவே'
துளி நம்பிக்கையும் சிதறிப்போன அன்று
ஆச்சியின் அழுகை ஓலம்
ஆஸ்பத்திரி வளாகத்தை
அதிரச் செய்திருக்கக் கூடும்

சளி இறுகிச் சிதைத்த நெஞ்சுக் கூட்டோடு
வசதிகள் குறைந்த வவுனியா வைத்தியசாலை
பல நூறு கிலோமீற்றர்கள் தொலைவில் அவளை
கண்டிக்கு அனுப்பியிருந்தது
வானமும் அதிர்ந்த நாளதில்
உயர் மருத்துவம்
மகளை எப்படியும் காப்பாற்றிடும்
நம்பிக்கையும் ஜெபமாலையும் துணையாக
ஆச்சியும் வந்திருந்தாள்
-----------------------------------------------------
--------------------------------------------------------
தெரியாத மொழி பேசும் சூனியப் பூமி
நெரிசல் மிக்க பெருநகரம் அவளை
எந்த வாய் கொண்டு விழுங்கியதோ....
எங்கே போனாளென
எவர்க்கும் தெரியாத இருளை ஊடறுத்து
தளர்ந்த பாதங்களினால்
அழுதபடி நடந்தாளோ....

ஆரோக்கியமேரி என்றழைப்பட்ட மேரி ஃபிலோமினா
மரணித்தவேளையில்
'ஓ பரமபிதாவே'
துளி நம்பிக்கையும் சிதறுண்ட அந் நாளில்
ஆச்சியின் அழுகை ஓலம்
ஆஸ்பத்திரி வளாகத்தையே
அதிரச் செய்திருக்கும்

எல்லாவித ஒடுக்குமுறைகளும் பத்து வரிகளுக்குள் அடைக்கப்பட முடியாதவை. அதனை உடைத்து விட்டு செல்பவை. வார்த்தைகள் அது கொண்டிருக்கும் துயரத்தை எவ்வாறு பங்கிட்டு கொள்ளப்போகின்றன என்பதை குறித்தும் அதிக கவிதைகள் இந்த தொகுப்பில் காணப்படுகின்றன.மேலும் இஸ்லாம் குறித்த குறியீட்டு விமர்சனமும் இதில் இருக்கிறது. ஆதிகாலம் , உலகதோற்றம் குறித்த செமிடிக் மதங்களின் மனித நடத்தையை குறிப்புணர்த்தும் சிந்தனைகளான இறைவன், சாத்தான் குறித்த ஒப்பீடும் இதில் இருக்கிறது. சாத்தான் என்பதே மனித சமூகத்தின் நடத்தை சார்ந்த அறவியல் குறியீடு. அதற்கு இயற்கையை மீறிய அற்புதத்தை கொடுத்ததன் பிரதி தான் சாத்தான் பற்றிய கருத்துரு. ஆதி மனிதன் தன் கையை உணர்ந்து கொண்டதன் வெளிப்பாடாக வேட்டையாடுதல் தொடங்குகிறது. அதனிலிருந்து அவனின் ஒவ்வொரு செயல்பாடுகளுமே வடிவம் கொள்ள தொடங்குகிறது. முரண்பாடுகள், மோதல்கள், போட்டி, குரோதம், விரோதம், வேறுபடுத்தல், பொறாமை, கோபதாபம், வன்மம், வக்கிரம், அன்பு, பாசம் , நட்பு, கருணை போன்ற மனித இயலின் மொத்த அம்சங்களும் காலப்போக்கில் சமூக நடைமுறையாக வெளியாகத் தொடங்குகின்றன. இதை இந்த தொகுப்பின் முக்கிய விமர்சன கவிதையாக பார்க்கிறேன். நான் அதிகமும் வாசித்து ரசித்த கவிதை அது. ஒருவேளை எனக்குள்ளும் அந்த சாத்தான் குடியிருக்கலாம்.
"அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்
அலிப்லாம் மீம் இப்படித்தான் தொடங்குகிறது
அந்த புனித நூல் அங்கிருந்தபடிதான் நம் மக்களை கண்காணிக்கிறான். போதிக்கிறான்.அவன் பேசும் சிறு வாக்கியங்கள் கூட முடிவடைவதற்குள் நாம் சாத்தானை சந்தித்து விடலாம். இறைவனை விட அதிகமான இடங்களை அங்கு சாத்தான் கைப்பற்றி வைத்திருக்கிறான். எல்லா கடவுளர்களையும் கலங்கடிப்பதும் அவர்களுக்கு சவால் விடுவதும் சாத்தான் ஒருவன் மாத்திரமே
.............................................
........................................
ஒரே நேரத்தில் எல்லா கடவுளர்களின் முன்பும் தோன்றக்கூடிய அவனின் ஆற்றல்
பற்றிய கதைகள் இங்கு சொல்லப்படவில்லை. எல்லா புனித நூல்களின் ஒவ்வொரு பக்கத்திலும் காதலின் இனிய செய்தி போன்ற அழகிய வரவேற்புப்பாடலை
சாத்தான் பாடிக்கொண்டேதான் இருக்கிறான். பலகோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து பாடப்பட்டு வரும் இந்த வரவேற்பு பாடல் 2003 ஆம் ஆண்டு 03 மாதம் 06 தேதி பின்னிரவு 2 மணி 55 நிமிடம் 33 வினாடியில் என் பிரதியிலிருந்து அவனால் திருடப்பட்டது தான். இந்த திருட்டு சாத்தானால் மட்டுமே முடிகிற விசயம் என்பதை இன்று அவனை சந்தித்த போதுதான் தெரிந்து கொண்டேன். சில பொழுதுகளில் கடவுளர்களும் இந்த பாடலை ரசிப்பர்.
வேறொரு வடிவத்தில் வேறொரு சூழலில் எச்.ஜி.ரசூலின் கவிதை ஒன்றையும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.
"நபாஸ்காலமென தடுத்தும் விடுகிறாய்
ஹைளுவென்று சொல்லி விலக்கியும் வைக்கிறாய்
என் மழலையை பெற்றெடுத்த குருதியிலும்
மாதந்தோறும் சிந்தும் மாதவிடாய் குருதியிலும் என் கவிதைகளை நனைத்தெடுத்து உன் மூஞ்சியில் விசிறி அடிக்கிறேன்.
சொர்க்கவாசி ஆணை மகிழ்விக்க ஹுருலீன் கண்ணழகிகள் நரகின் பெண்வாசிகளுக்கு கிடைத்தது நிம்மதி இப்போதாவது இவன்களிடமிருந்து தப்பித்தோமே."
இந்த தொகுப்பின் கவிதையில் மற்றொன்று கள்ளத்தோணி பற்றியது. தோணி என்பதே பண்டைய மனிதனின் அல்லது இடைக்கால மனிதனின் கடல்வாகனம். அதை குறித்த கதைகள் உலக இலக்கியங்கள் எங்கும் விரவி கிடக்கின்றன. தோணியின் வடிவமைப்பு, கடல்காற்றில் அதன் அசைவூட்டம், இயக்கம் போன்றவை வாசித்து உள்வாங்கும் வித்தியாச அனுபவத்தை நமக்கு அளிக்கின்றன. இன்று இலங்கையோடு அச்சொல்லாடல் அதிகமும் அர்த்தப்படுத்தப்படுகிறது. காரணம் இலங்கையின் வரலாற்றில் மக்கள் தொகுதியினர் என்பவர்கள் மூன்று வகையாக இருக்கின்றனர். ஒன்று பூர்விக தமிழர் மற்றும் சிங்களர்கள், இரண்டாம் வகையினர் பிரிட்டிஷாரால் தோட்டவேலைக்கு கொண்டுசெல்லப்பட்ட மலையக தமிழர்கள் , மூன்றாம் வகையினர் இந்தியாவிலிருந்து பிழைப்பு தேடி 30 மற்றும் 40 களில் தோணி வழியாக இலங்கைக்கு சென்றவர்கள். இதன் தொடர்ச்சியில் தான் இந்தியாவிலிருந்து வந்தேறியவர்களுக்கு தோணி என்பதுடன் கள்ளம் என்ற முன்னொட்டு கிடைத்தது. இந்த தொகுப்பில் இது மூன்று அத்தியாயங்களாக வருகிறது.
"கடலில் கண்ணுக்கெட்டிய தொலைவில் அசைகிற பிறையை தனது கொடியாய் பறக்கவிடும் தோணியை அறியாதவர் எவருமிருக்க முடியாது.
தோணியில் அமர்ந்த வண்ணம் உணவு தேடும் கடற்பறவைகளின் சாகசங்களை நினைவுகூரும் குழந்தைகள் இன்றுமிருக்கின்றனர்.
....................................................................................
.....................................................................................
இன்னுமது கடலின் பயங்கரம் நிறைந்த கொந்தளிப்புகளுக்கிடையேயும்
சீறி பெருகும் பெருங்காற்றிடையேயும் நிலை குலைந்து விடாமல் கம்பீரமாகவே
நிற்கிறது. ஒவ்வொரு பயணியின் நெஞ்சிலும் ஆறாத காயத்தின் வரலாறு புதிது புதிதாய் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது."
இவ்வாறு தோணிகள் பற்றிய சொல்லாடல்களும் , கதைகளும் ,குறியீடுகளும் பேரினவாத இலங்கையின் வரலாற்றில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டும், தக்கவைக்கப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன.
இதை இன்னொரு ரீதியில் பிரதி செய்யும் மஹ்மூத் தர்வீஷின் கவிதை ஒன்றையும் இங்கு குறிப்பிட வேண்டியதிருக்கிறது.
"என் உயிரிடத்தில் நான் சொல்வேன். மெதுவாக செல்லவும்.
நான் குடிக்கும் கண்ணாடி டம்ளர் உலரட்டும்.
நான் என்னவாக இருக்கிறேன் அல்லது யாராக என்பதில் எந்த பங்குமில்லை. ஒரு வாய்ப்பின் பிறப்பு தவிர"
இந்த தொகுப்பில் உள்ள எல்லா கவிதைகளும் ஒன்றை ஒன்றை கலைத்துபோடுபவை. தமிழின் நடப்பு கவிதைகளிலிருந்து வேறுபடுபவை. வாழ்வின் துயரங்களை, பிரிவை, ஏக்கத்தை, மனித வாழ்வின் போராட்டங்களை அக, புற காரணிகளோடு வெளிப்படுத்துபவை. மேலும் கவிதையின் வடிவங்கள், உருவகங்கள், சாரம், உன்னதம் குறித்த சிக்கல்களும் இதன் தொடர்ச்சியில் எழலாம். கவிதைக்கு மனச்சலனம் ஒரு காரணமாக இருந்தாலும் அதனைத்தாண்டி புறச்சூழலும் அதன் உருவாக்க காரணியாக இருக்கிறது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டியதிருக்கிறது. எல்லா மொழியிலும் கவிதை என்பது ஒரே மாதிரியான தனித்த கூறுபாட்டோடு வெளியாவதில்லை. ரோலான் பர்த் கவிதை என்பது மொழி தனக்குள் உரையாடி கொள்வது என்பார். அவை மொழியின் இயங்குநிலை சார்ந்த அலகுகளோடு தொடர்பு கொண்டவை. உலகின் ஒவ்வொரு தீவுகளுமே இலக்கிய ஆக்கங்களை பொறுத்தவரை அதன் வெவ்வேறு வெளிப்பாடுகள் தான். இது பற்றிய விவாதங்கள் தொடக்க காலம் முதலே இருந்துவருகின்றன. பாப்லோ நெருதா கவிஞனா ? மஹ்மூத் தர்வீஷ் கவிஞனா? இல்லை.. லத்தீன் அமெரிக்க கவிஞர்கள் மட்டுமே கவிஞர்கள் என்பதாக நீண்டு கொண்டே செல்கின்றன. தமிழ்ச்சூழலிலும் அவ்வாறான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் கையை கடித்து இரத்தம் சிந்தும் போராக கூட மாறிக்கொண்டிருக்கின்றன. இதுவும் ஒருவகை மொழிப்போராட்டம் தானா? எல்லா சூழல்களிலும் எல்லா மொழிகளிலும் எப்போதும் கவிதைகள் எழுவதில்லை. அது ஒவ்வொரு விதமான உணர்வுநிலைகளையும், வெளிப்பாடுகளையும், கவிஞனின் மனத்தையும் பொறுத்தது. கவிதையின் மொழிபெயர்ப்பு பற்றிய சிக்கல்களும் இங்கிருந்து தான் எழுகின்றன. கவிதையை மொழிபெயர்ப்பது என்பது அதன் அசலை கொல்வது தான். நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு என்ற தலைப்போடு வெளிவந்திருக்கும் ரியாஸ் குரானாவின் இந்த தொகுதியானது தமிழ்க்கவிதை வாசிப்பு குறித்த புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும். அதன் தொடர்ச்சியில் ஈழக்கவிஞர்களின் கவிதை தொகுதிகளின் வரிசையில் இந்த தொகுப்பும் குறிப்பிடத்தக்கது.

(ஒசூரில் நடைபெற்ற ரியாஸ் குரானாவின் நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு கவிதை தொகுப்பு குறித்த விமர்சன கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை)