பாலைவன மூளைகளும் பேரீத்தமரங்களும்- மத்திய கிழக்கை முன்வைத்து எச்.பீர்முஹம்மது (puthiya kaartu magazine july 2004)
மத்திய கிழக்கின் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு மத்திய கிழக்கைப்பற்றி எழுதுவது நல்ல அனுபவம் தான். வாழ்க்கை நம்மை சிலசமயங்களில் தவிர்க்க இயலாத படி தப்பிக்க வைத்து விடுகிறது. இன்றைய மிதக்கும் உலகில் நாம் மிதந்து கொண்டிருப்பது இயல்பானது. அவை நம்மை வெவ்வேறு திசைகளில் மிதக்க வைக்கின்றன. கரையை தாண்டுவது நம் சுய திறனை பொறுத்தது.
கல்லூரியில் சாதாரண நிலையில் பணிபுரிந்த எனக்கு வாழ்க்கை சூழலின் நிர்பந்தம் (இஸ்லாமிய குடும்பங்களுக்கே உரிய) என்னை இங்கு வர வைத்தது. காலச்சூழலின் வேகம் என்னை உள்நாட்டில் பணி புரிவது மாதிரியான உணர்வை ஏற்படுத்துகிறது. தகவல் தொடர்பு கூட அது மாதிரியே
இருக்கிறது.புல்வெளியில் மேயும் ஆடுகள் மாதிரி மனித தலைகள் நிரம்பி வழிகின்றன. இன்றைய உலகில் சந்தையில் பண்டங்கள் குவிந்து கிடக்கின்றன.அதை நாம் வாங்க முடிவதில்லை.இன்னொரு நீட்சியில் மனித பண்டங்கள் இங்கு முழுவதும் குவிந்து கிடக்கின்றன.அவை எல்லாம் விலைபோவதில்லை.மத்திய கிழக்கின் ஒரு பகுதியான வளைகுடா நாடுகளில் இந்தியர்களே அதிகம் பணிபுரிகிறார்கள். குறிப்பாக கேரளாவை சேர்ந்தவர்கள் தான் அதிகம். இந்நிலையில் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் மத்திய கிழக்கிற்கும் இடையே நெருங்கிய உறவு இருக்கிறது. பண்டபரிவர்த்தனையில் உபரிமதிப்பை திருப்பியளிப்பதில் அதற்கு மிகுந்த பங்கு உண்டு. இதன் மூலம் தங்கள் கோட்பாட்டில் அவர்கள் தோல்வியடைந்து விட்டதாகவே கருத முடிகிறது. இது சார்ந்த தத்துவார்த்த விளக்கங்கள் நீண்டு கொண்டே செல்லும். இதற்கு அடுத்தநிலையில் தமிழர்கள், பாகிஸ்தானியர்கள், இலங்கை, வங்காளதேசத்தவர்கள் இருக்கின்றனர்.இதில் மிகவும் மலிவாக கிடைப்பவர்கள் வங்காளிகளே. உடல் இயந்திரம் நாள்தோறும் இயக்கப்படுகிறது. அதன் தேய்மானத்தில் தான் அரபிகளின் வாழ்க்கை அடங்கியிருக்கிறது.மத்தியகிழக்கு என்ற சொல் புவியியல் அடிப்படையிலானது. நம் பார்வை எப்பொழுதுமே மத்தியிலிருக்கும் பொருள் மீது தான் திரும்பும்.அது மாதிரியே ஏகாதிபத்தியத்தின் பார்வை எப்பொழுதும்இதன் மீது படுகிறது. ஈரான் முதல் மொராக்கோ வரை நீண்டிருக்கும் மத்தியகிழக்கு அதற்கானதனித்துவம், பாரம்பரியம், கலாசாரமரபு இவற்றை உள்ளடக்கியது. விஞ்ஞான, மதரீதியிலான விளக்கங்களின்படி மனித உயிர்த்தோற்றமே இங்குதான் நிகழ்ந்திருக்கிறது எனலாம். அறிவின் தோற்றம், நாகரீக காலத்தின் தோற்றம் இன்னும் விரிவாகி கொண்டே போகும் அம்சங்களின் பிறப்பிடம் இதுதான். அதன் புவியியல் அமைப்பே வித்தியாசமாக தெரிகிறது. பாலைவனங்களின் மீது பயணம் செய்யும் போது ஆரவாரமற்ற தெருக்கள் ஞாபகம் வருகின்றன.ஆங்காங்கே பேரீத்தமரங்கள் வறண்டு நிற்கின்றன.இதற்கு ஜுன் முதல் அக்டோபர்வரை தான் வசந்தகாலம். மத்திய கிழக்கின் முக்கிய அம்சமே இஸ்லாம் இங்கு உருவானதுதான். இங்குள்ளவர்களின் வாழ்க்கை நடைமுறைகள், கலாசாரம், நகர்வுகள் இவற்றை வைத்து பார்க்கும்போது இஸ்லாத்தின் தோற்றம் காலச்சூழலின் நிர்ப்பந்தமாக இருந்திருக்கிறது.இன்னும் அதன் எச்சங்களை நாம் இவர்களிடையே காண முடியும்.பெரும் துயர சம்பவங்களுக்கிடையே இஸ்லாம் அதன் ஆட்சியை மத்திய கிழக்கு முழுவதுமாக நிலைநிறுத்தி கொண்டது. நபிகள்நாயகத்தின் காலத்திலேயே பல உள்நாட்டு கலகங்கள் வெடித்தன. அதிகாரத்திறகான மோதலாக அது இருந்தது.தாங்கள் எதற்காக போராடுகிறோம், அதன் இலக்கு என்ன என்பதை பற்றிய பிரக்ஞை அவர்களிடம் இல்லாமல் இருந்தது.அது தான் இப்பொழுதும் இம்மக்களிடையே வெளிப்படுகிறது.கல¦பாக்களின் ஆட்சிகாலத்திலேயே அது வெளிப்பட்டுவிட்டது.அதன்பிறகு உமய்யத்,அப்பாஸிட் என்ற இருபெரும் வம்சங்களின் கட்டுப்பாட்டில் பெரும்பிரதேசங்கள் வந்தன. உமய்யத் வம்ச தலைவரான முஆவியா என்பவரின் மகனான யசீதின் சர்வாதிகார ஆட்சி முறையே இன்று இஸ்லாமிய உலகில் பெரும் விவகாரமாக இருக்கும் ஷியாபிரிவின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. அதிகாரம் என்றுமே பிளவுபடாதது.யசீத் தனக்கு இருப்பே இதன் மூலம் என்று நினைத்தார். நான் பணிபுரியும் நாட்டில் கூட ஷியா மக்கள் தான் அதிகம் வசிக்கின்றனர். அவர்களுக்கே உரிய குமுறல், கலக உணர்வு போன்றவற்றை காணமுடிகிறது.தங்கள் தலைவரான இமாம் ஹுசைனின் நினைவுநாளன்று நெஞ்சில் அடித்து தங்களை பிரதிபலித்து கொள்கின்றனர்.
இம்மக்களிடையே ஒரளவு கல்வியறிவை காணமுடிகிறது. ஷியாபிரிவானது ஈரானின் அங்கீகரிக்கப்பட்ட மதமாக இருக்கிறது.ஈரானை பொறுத்தவரை இமாம் ஹாபிஸ், மௌலானா ரூமி, கல்லாஜ் மன்சூர், இபின் அரபி, உம்மர்கய்யாம் போன்ற சிறந்த அறிஞர்களை உருவாக்கியது. முன்பு துருக்கியின் ஆளுகையிருந்த ஈரான் பின்னர் ஷா வம்சத்தின் கட்டுப்பாட்டில் வந்தது.இதில் எகிப்து உள்ளடங்கிய சில பகுதிகள் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்தன.
மத்திய கிழக்கின் மொழியான அரபி மொழி கி.பி ஒன்பதாம் நூற்றாண்டுவாக்கில் தான் வரிவடிவம் பெற்றது.அதுவரை பேச்சு மொழியாக மட்டுமே இருந்தது.இப்பொழுது அது வேகமாக வளர்ச்சி பெற்று விட்டது. புதிய கலைச்சொற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொழியின் எதிரொலி அவற்றை பேசும் மக்களிடத்திலும் வெளிப்படுகிறது. சில சமயங்களில் இவை கலாசாரம் தாண்டியும் பிரதிபலிக்கின்றன.அரபிகளின் கலாசாரத்தில் பரிணாம வளர்ச்சி காணப்படுகிறது. உடை அமைப்பு முன்புபோல் இல்லை. லிப்ஸ் என்ற அவர்களின் பாரம்பரிய உடைமாறி பேண்ட்-சட்டைக்கு வந்து விட்டார்கள்.பெரும்பாலனவர்களின் முகத்தில் தாடியை எதிர்பார்க்கமுடியவில்லை.(தாடி வைத்தால் இங்குள்ள நிறுவனங்கள் அவர்களை வேலைக்கு எடுப்பதில்லை என்பது வேறுவிஷயம்.) வாழ்க்கை செலவிற்கான குறியீட்டு எண் ஏறக்குறைய ஐரோப்பியர்கள் மாதிரி உயர்ந்து காணப்படுகிறது. நாம் பயன்படுத்தும் எளிமை என்ற சொல்லாடல் இங்கு தன் அர்த்தத்தை இழக்கிறது.ஆனால் திருமணம் போன்ற வாழ்க்கைச் சடங்குகளில் செயற்கையான் எளிமையை பயன்படுத்துகிறார்கள். அன்றாட வாழ்க்கை அவசரகதியில் ஆடம்பரமாகி போகும்போது அரபிகளின் இம்மாதிரி நடவடிக்கைகள் வேடிக்கையாக இருக்கின்றன.(நான் என் அரபி நண்பர் ஒருவரிடம் இதுபற்றி நேரடியாகவே கேட்டேன். அதற்கு அவர் இது நபிவழி என்றார்.)இனப்பெருக்கத்தில் தாராளமயமாக்கல் கடைபிடிக்கப்படுகிறது.மத்தியகிழக்கின் மக்கள்தொகை அதிகரிப்பு குறித்து சமி¦பத்தில் நடந்த அரபுநாடுகள் மாநாட்டில் கவலைதெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது எண்னிக்கை அடிப்படையிலானதல்ல.மாறாக அச்சமூகம் பொருளாதார,கலாசாரரீதியில் எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பதே அதற்கு அடிப்படை. மதத்தை அதன் மரபார்ந்தரீதியில் புரிந்து கொண்டிருப்பதே காரணம்.இனத்தை பெருக்குவது, ஒருவர் நிபந்தனைக்குட்பட்டு நான்கு திருமணம் செய்வது போன்றவை அன்றைய காலத்தின் கட்டாயமாக இருந்தது. எந்தவொரு தத்துவார்த்தமோ, புதிய சமூகபோக்கின் ஆரம்பமோ தன்னை விரிவுபடுத்திக்கொள்ளலை தான் விரும்பும்.."உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" இதற்கு ஓர் உதாரணம்.
முஅத்தா என்னும் தற்காலிக திருமண முறை இங்கு வழக்கில் இருக்கிறது.இதனை பெண்ணியவாதிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். மதத்தை புரிந்துகொள்ளுவதில் வந்த விளைவு இது. இதற்கு கீறல்கள் விழுந்த சட்டத்தின் அனுமதி இருப்பதால் மிகவும் எளிமையான விஷயமாக மாறிவிட்டது.ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்யாமல் இருந்தாலோ அல்லது ஒருவருக்கு அதிக பிள்ளைகள் இல்லாமல் இருந்தாலோ துரதிஷ்ட நிகழ்வாக கருதப்படுகிறது. வாழ்க்கை அதன் போக்கில் வரம்பில்லாமல் செல்கிறது.பிந்தைய முதலாளித்துவத்தின் அவதாரமான உலகமயமாக்கல் மத்திய கிழக்கை தன் வர்த்தகமையமாக பார்க்கிறது.நம்மின் அசைவுகளுக்கு ஏற்பசெயல்படும் ரோபர்ட் மாதிரி அரபிகளின் மூளைகள் மேற்குலகிற்கு தேவைப்படுகின்றன.ஐரோப்பியர்களை பொறுத்தவரை வாழ்க்கை அவசரகதியிலானது. காலையில் எழும்புவார்கள்.முகத்தை அலம்பி கொண்டு கார்செட்டில் போய் காரை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு புறப்படுவார்கள் கார் சிக்னலில் நிற்கும். எங்காவது பாஸ்ட்புட் கடையில் காரைநிறுத்தி sandwitch வாங்கி கடித்து கொண்டே அலுவலகம்
செல்வார்கள்.மீண்டும் இரவில் வீடு திரும்புவார்கள்.இது மாதிரியே அரபிகளின் வாழ்க்கை இருக்கிறது.சிக்னல்களில் கார்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.மனிதர்களின் எண்ணிக்கையைவிட கார்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. sandwitch கடிப்பது life style ஆகவே மாறிவிட்டது.
அப்துல்வஹ்ஹாப் நஜ்தியின் (வஹ்ஹாபிய பிரிவின் தந்தை) வருகை இஸ்லாமிய உலகின் பெரும் அபத்தம். அப்துல் வஹ்ஹாப் நஜ்தியை உருவாக்கியதில் பெரும்பங்கு பிரிட்டனுக்கு உண்டு.இதனை வரலாற்று சான்றுகள் நிரூபிக்கின்றன. அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் பாலைவனமணல் வெளியில் அகழ்வாராய்ச்சி நடத்தியதில் கிடைத்ததாக சில ஆதாரங்களை (ஹதீஸ்கள்) எடுத்து இதுதான் தூயஇஸ்லாம் என்றார். இன்றைய இஸ்லாமிய உலகின் குறிப்பாக அரபுலகின் துயரத்திற்கு மூலகாரணம் இவர் தான். பிரிட்டன் இவர்மூலம் தன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டது.
இவர் வாரிசான இப்னு-சவூத் 1805 ஆம் ஆண்டு மதினாவை கைப்பற்றியதில் இருந்து இவர்களின் ஆளுகை தொடங்குகிறது. இவர்களின் நீட்சிதான் இன்று சவூதியை அதிகாரம் செய்கிறது. தூய்மை இயங்கியல் ரீதியிலானது. அது காலத்தை தாண்ட முடிவதில்லை. இந்நிலையில் தூய்மையான இஸ்லாம் என்பதற்கு சாத்தியமில்லை. அரபு நாடுகள் தூய்மையின் குறியீடாக Tissue paper யை பயன்படுத்துகின்றன. ஒரு காலத்தில் குளியலறையில் ஷவரில் குளிப்பதே ஹராம்(விலக்கப்பட்டது) என்று பத்வாக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஷவர் தற்பொழுது அரபிகளின் வாழ்வில் தவிர்க்க
இயலாத ஒன்றாக மாறிவிட்டது.சவூதியை தலைமையிடமாக கொண்ட நஜ்தி குழுவின் பிரசாரமையங்கள் எல்லாம் வளரும் நாடுகளை குறிவைத்தே இயங்கிவருகின்றன.குறிப்பாக இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் தீவிரமாக இயங்கிவருகிறார்கள். இவர்களின் கோட்பாடு சாதாரண மனிதனின் இயல்பான வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது.
இன்னொருபுறத்தில் அமெரிக்காவின் ஏகாதிபத்திய பார்வைக்கு இது சாதகமாக இருக்கிறது. இந்நாடுகளில் அது ஜனநாயகத்தை ஏற்படுத்த விடாமல் மன்னராட்சி முறையை தக்க வைப்பதற்கான செயல்தந்திரங்க ளை ஊக்குவிப்பதின் அரசியல் இதுவே. சமீபத்தில் அல்-கோபார் (நான் இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது)என்ற இடத்தில் புகழ்பெற்ற எண்ணை நிறுவனம் ஒன்றில் அல்குவைதாஅமைப்பின் தாக்குதல் நடைப்பெற்றது..இப்பொழுது வெளியில் நடமாடுவதற்கே பயமாக இருக்கிறது.கணப்பொழுதில் நிலைமைகள் மாறி வருகின்றன. இன்னொரு காரணம் இந்திய முஸ்லிம்களை பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் என ஒத்துக் கொள்வதில்லை. ஒருவேளை காபிர் என நினைத்து நம்மீதும் தாக்குதல் தொடுக்கலாம். தங்களின் கடந்தகால, நிகழ்கால செயல்பாடுகளுக்காக நஜ்திகள் தகுந்த விலையை கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.
அரபி பெண்களின் நிலை இந்திய முஸ்லிம் பெண்களின் நிலையை விட மேம்பட்டதாக இருக்கிறது.சாதாரணமாக கல்வி கற்கிறார்கள்.வேலைக்கு செல்கிறார்கள்.கார் ஒட்டுகிறார்கள்.ஆண்களுக்கு நிகரான அத்தனை செயல்பாடுகளும் பெண்களிடத்தில் காணப்படுகிறது.இஸ்லாமின் ஆரம்பகாலத்தில் சமூகத்தில் தாராளபாலுறவு(Liberal sexuality) காணப்பட்டிருக்கிறது.பெண்களின் முகத்தை மூடிக்கொள்ளும் பர்தாமுறை இதன்மூலம் அறிமுகப்படுத்தபட்டிருப்பதை அறிந்துகொள்ளமுடிகிறது.பாலைவனமணல் காற்றும் மற்றொரு காரணம்.இன்று மூடிய முகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. பெண்கள் சாதாரண முறையில் நடமாடுகிறார்கள். அவர்களின் வாழ்க்கைதரம் உயர்ந்து காணப்படுகிறது. ஆனால் இன்னொருபுறத்தில் முக்கிய பாலியல் சந்தையாக விளங்குகிறது.இதற்கான காரணமாக இஸ்லாமிய திருமண விதியான மஹர் சொல்லப்படுகிறது.இங்கு நம் நாட்டு வரதட்சிணை முறைக்கு மாறாக ஆண் பெண்ணுக்கு தட்சினை கொடுத்து திருமணம் செய்யும் முறை காணப்படுகிறது.பொதுவாக பெண்ணின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது.இதற்கு ஆண்களால்
இயலாமல் போகும்போது அவர்களின் வேட்கை மாற்று வழிகளை தேடுகிறது.இதுமேற்தோற்றத்தில் பார்ப்பதற்கு பெண்ணின் அதிகாரம் மாதிரியே தெரியும்.ஆனால் ஆணின் அதிகாரம் தான் நிலைநாட்டப்படுகிறது.நிரந்தர பொருளை என்னால் வாங்கமுடியவில்லை என்றால் தற்காலிகமாக வாடகைக்கு எடுத்துகொள்கிறோம் என்ற செயல்பாடாக பிரதிபலிக்கிறது.மஹர் பற்றிய அரபுலகின் நிலைபாட்டிற்கும் நம்நாட்டு வரதட்சணை முறைக்கும் எந்த வித்தியாசத்தையும் பார்க்க முடியவில்லை.
இந்திய முஸ்லிம் பெண்களை விட இங்குள்ள பெண்களின் கல்வியறிவு அதிகமாக இருக்கிறது.ஆனால் Walking bus ஆக இருக்கிறது.(இங்கிலாந்தில் பள்ளிகுழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிக்கூடம் செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள தனிநடைபாதை).இவர்கள் கற்ற கல்வி ஆக்கபூர்வமான, உணர்வுபூர்வமான செயல்பாடுகளுக்கு வழிவகுக்கவில்லை. மாறாக சார்புநிலையே உருவாக்குகிறது. பொறியியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஐரோப்பியர்களையே சார்ந்திருக்கிறார்கள். அமெரிக்காவுடன் பல நாடுகள் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி தங்களை வளர்த்து கொள்கின்றன. இதில் மிகவும் நெருக்கமாக இருப்பவர்கள் அப்துல் வஹ்ஹாபின் பின் தொடரலான சவூதிஅரேபியா தான். ஒருபக்கம் discover islam, guidence centre என்பதன் மூலம் பாலைவனங்கள், மணல்வெளிகள் பற்றி ஆராய்ச்சி நடத்தி கொண்டிருக்கிறார்கள்.மிகப்பெரும் சாபக்கேடான அப்துல்வஹ்ஹாப் பிறப்பின் மூலம் பெரும் உயிர்ச்சேதங்கள், கலகங்கள் ஏற்பட்டிருக்கின்றன.மத்திய கிழக்கில் எகிப்து,ஈரான், சிரியா, லிபியா
போன்ற நாடுகள் தனக்கான சுயதளத்தில் இயங்குவதற்கு கடுமையாக போராடிகொண்டிருக்கின்றன. ஏகாதிபத்தியம் உலகமயமாக்கல் மூலம் மத்தியகிழக்கை தனக்குள் கொண்டுவந்துவிட்டது. உலகவட்டாரமயமாக்கல்(Glocalization) என்ற சொல்லாடல் தற்பொழுது உலகம் முழுவதும் பரவிவருகிறது.அதாவது உலகளாவிய சிந்தனை, வட்டாரசெயல்பாடு. இது மத்திய கிழக்கிற்கும் பொருந்துகிறது.
வாழ்க்கை இயந்திரமயமாகிவிட்டது.ஸ்டார் ஓட்டலில் இருந்து கார்கள் வேகமாக பள்ளிவாசல் நோக்கி விரைகின்றன.கையில் தஸ்பீஹ் மணிகள் உருள்கின்றன.வணிகம் மூலம் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தி அதிகமாக சுரண்டிகொள்ளமுடிகிறது. இலாபம் இவர்களின் செலவுக்கு சரிசமமாக அமைந்து விடுகிறது.உழைப்பு என்பதே மிக மெதுவாக நடக்கும் மரணம்.இங்கு முழுவதும் அது பிரதிபலிக்கிறது. கூடவே போதிலாரின் இறந்த உழைப்பையும் புரிந்து கொள்ளமுடிகிறது.மூன்றாம் உலக வறுமை அரபுலகிற்கு செல்வமாக இருக்கிறது.
அரபிகளின் மூளைகள் மிகவும் மலிவானவை. ஓர் ஐரோப்பியர் அரபிகளை பற்றி சொன்ன விசயம் ஞாபகத்திற்கு வருகிறது."அரபிகளின் மூளைகள் எங்களுக்கு தேவைப்படுகின்றன.எங்கள் ஆய்வுகூடங்களில் வைத்து D.N.A சோதனை செய்வதற்காக" பேரீத்தபழங்கள் உதிர்ந்து விழுகின்றன.அதை பொறுக்குவதற்காக எல்லோரும் ஒடிக்கொண்டிருக்கிறார்கள்.நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன்.
No comments:
Post a Comment