சாலைகள் வளைந்து செல்கின்றன- பாரசீக வளைகுடாவிலிருந்து அரபிக்கடலுக்கு (மனைவிக்கு ஓர் கடிதம்)
எச்.பீர்முஹம்மது
என் பிரியத்திற்கு,
நலமாய் இருப்பாய் என சற்று முன் உன்னோடு மொபைலில் உரையாடிய போது அறிய முடிந்தது. என் உடல் நலம் பற்றி நீ அறிந்து கொள்ள ஆர்வமாய் இருப்பாய் என்பது எனக்கு தெரியும்.இங்கு உடல் எவ்வளவு அவசியமானது என்பதை நான் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.உன்னை விட்டு பிரிந்து ஒரு வருடம் கடந்து விட்டது. இது எனக்கு சமீபத்தை தாண்டாத தூரமாக தெரிகிறது. தப்பி அலையும் விலங்கு மாதிரியான அனாயச உணர்வோடிருக்கிறேன். கோடையில் பழுத்து உதிரும் பேரீத்தப்பழங்கள் என் காலால் உதைபடும்போது உன் ஞாபகம் வருகிறது. அந்த மரத்தின் நிழலை தாண்ட முயற்சிக்கிறேன்.
வாழ்க்கை அதன் போக்கில் நகர்கிறது. நான் இங்கு வர வேண்டியது அவசியமானதும், தற்செயலானதாகும். நான் முதன்முதலாக விமானம் ஏறுவதற்கு முந்திய நாள். என் முழு மனநிலையுமே மரண தண்டனை கைதியின் மறுநாள் மாதிரி இருந்தது. உம்மா, வாப்பா, மற்ற சகோதரிகள் என்னை சூழ்ந்து கொண்டு என் சலனங்களை கவனித்துக் கொண்டிருந்தார்கள். இரவு சிறிது நேரமே தூங்கியிருப்பேன். புறப்படும் கணத்தில் மற்றவர்கள் சூழ்ந்து கொண்டு கண்ணிலிருந்து நீரை வரவழைத்துக் கொண்ட போது நானும் வரவழைத்துகொண்டேன். அது என்னை மீறிசென்றது. சிரிப்புக்கும் அழுகைக்குமான எல்லை எவ்வளவு விஸ்தாரமானது. விமான நிலையத்தினுள்ளிருந்து என் கைஅசைவு எதையோ வெளிப்படுத்தியது. சிவப்பு விளக்கு சமிக்ஞையை உணர்த்திக் கொண்டு விமானம் நகர்ந்து மேலேறிய போது நான் வேறொரு உலகை நோக்கிச் சென்றேன். வான்வெளியில் அது சென்ற வேகம் வீட்டோடு நான் உரையாடுவது மாதிரி இருந்தது. விமான நிலையத்தில் நீண்டநாள் நண்பரை தற்செயலாக சந்தித்த போது தொலைந்து போன சாவி மறுபடியும் கிடைத்த உவகையில் இருந்தேன். துபாயில் ஒரு பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிபவர் அவர். விமானத்தில் நாங்கள் ஒரே இருக்கையில் அருகருகே அமர்ந்து கொண்டோம். அவரோடு உரையாடிச் சென்றது மனைவி இல்லாத குறையை போக்கியது. அபுதாபி விமான நிலையத்தில் நாங்கள் பிரிய நேர்ந்தபோது கண்களில் ஏற்கனவே தேங்கி நின்ற நீர் வழிய தொடங்கியது.எங்களை அறியாமலே கைகள் ஆலிங்கனம் செய்து கொண்டன. நாங்கள் இருவரும் இருவேறு நாடுகளில் இருவேறு திசைகளில் இருக்கும் நிலையில் மீண்டும் சந்திப்பது அபூர்வம் தான். 0,1 என்ற இருமை நிலையில் நாங்கள் இருக்கிறோம். நண்பர்களை கொண்டவர்களின் நண்பர்கள் வளைகுடாவில் இருவேறு திசையில் இருக்கும் நிலையில் அவர்களின் மனவோட்டம் வாசித்தறிய முடியாதது.
நீ எனக்கு வாழ்க்கை துணையாக வருவாய் என்பது என் நனவிலி நிலையில் மட்டுமே இருந்தது. நீ படிக்கும் காலத்தில் நான் உன்னை பின்தொடர்ந்தோ தொடராமலோ இருந்தேன்.ஒருவேளை நான் உன் படிப்பின் கவனத்தை சிதறடிக்கிறேனோ என்ற
அவநம்பிக்கை கூட என்னிடமிருந்தது. என் முகம் கண்டால் கூட உன்னால் பேச முடியாத சூழல். பிரியப்படுவதின் மொழி அது. "சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது" என்ற பிரமிளின் கவிதை வரியாக உன்னை நான் எழுதிக்கொண்டு வந்தேன். இயல்பான குடும்ப எதிர்ப்புணர்வு இருந்தும் நாம் கல்யாணம் செய்து கொண்டோம். நீண்ட கால குறிக்கோளை சமீபத்தில் எட்டியது சின்ன சாதனை தான். ஒன்றை செய்யும் போது மற்றொன்றை அனுபவிப்பது இயல்பு மீறல். வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் எதிர்கொள்ள துணியும் போது நாம் அதில் சில சமயங்களில் சறுக்கி விழுகிறோம். அதை தாண்டி எத்தனித்து விட்டால் அதுவே வாழ்வின் வெற்றி. உன் உருவத்தின் முழு எதிரொளிப்பு என் மீது பட்டுத்தெறிக்கும் போது நான் உடைபடாத கண்ணாடித்துண்டாகிறேன்.வாழ்க்கையை நாம் எதிரொளிக்கிறோம் அல்லது பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். இதுவே எதார்த்த வாழ்க்கை. ஆனால் நான் அதனை தாண்டி விட்டேன். ஒருவித மாயஉலகம் எனக்கானது. hyper reality யின் உலகம் இது.அதில் என் உடல், மனம், சுயம் ஆகியவற்றை எழுதிச்செல்கிறேன். உடலை குறித்து நான் உன்னிடத்தில் ஏற்கனவே சொல்லியிருந்தேன். தாந்திரிகர்கள் இதை குறித்தே சிந்தித்தனர். இதை
சொல்லி நான் உன்னை குழப்ப விரும்பவில்லை. அங்கு கால நிலை எப்படி இருக்கிறது? இங்கு மிகக்கடுமையான வெப்பம். பெட்ரோல் இல்லாமலேயே உடல் அடிக்கடி தீப்பற்றிக்கொள்கிறது. இது ஜெட்டிக்ஸின் பவர் ரேஞ்சர் அல்ல. அறையில் ஏ/சி இயங்கி கொண்டிருக்கும் போது என் உடல் தணுமையாகிறது. அப்போது மட்டுமே அப்படி மாறும். அனல் காற்றில் நான் அடிக்கடி மிதந்து வருகிறேன்.என்னால் பாரசீக வளைகுடா கடலில் கூட மிதக்க முடியவில்லை. மிதந்ததின் இழப்பீடாக மாதந்தோறும் எனக்கு
ஏதாவது கிடைக்கிறது. அதில் உனக்கு ஏதாவது கொடுத்தது போக மீதியை நான் வைத்துக்கொள்கிறேன். இருந்தும் என் ஏ.டி.எம் '0' வை வரைந்து காட்டுகிறது. என் தாய் கேட்டால் கூட உனக்கு தெரியாமல் தான் அனுப்ப வேண்டியதிருக்கிறது.
அதற்காக என்னை மன்னித்து விடு. உன் அறிவுக்கு எட்டிய நிலையில் நான் இதை செய்யும் போது உனக்கு ஏற்படும் கோப உணர்வுக்கு நான் பலியாகி விடக்கூடாது என்ற சிடுக்கம் தான். கருப்பு நிற பர்தாவும், தணுமை கண்கண்ணாடியும் வைத்துக்
கொண்டு நீ என்னுடன் நண்பன் வீட்டு திருமணத்திற்கு வந்தது என் கண் முன் மாயபிம்பமாய் இன்றும் நிற்கிறது. உன்னை நான் கண்கண்ணாடியற்ற சுடிதாரோடு பார்க்க ஆசை. ஒருவேளை வெளிநாட்டு கணவனின் மனைவி ஆனதால் நீ அப்படி செய்கிறாய் என்பது எனக்கு தெரியும். உன்னின் சுதந்திரம் உனக்கானது. நாம் திருமணம் முடிந்து தேனிலவுக்காக உதகமண்டலம் சென்ற போது ஏற்பட்ட அனுபவம் நெடியது. எளிதில் என்னை விட்டு விலகாதது. அது ஒவ்வொரு நாளும் என்னை உறுத்திக்கொண்டிருக்கிறது. சில நேரங்களில் தூக்கத்திலே ஸ்கலிதமாகிறது. நான் சிரமப்பட்டு தூங்க முயலும் போது அது கனவாக என்னில் வந்து ஒட்டிக்கொள்கிறது. விழிக்கும் நிலையில் சில நொடிகள் அது என்னுள் தங்கி நிற்கிறது.கனவை நாம் உண்மையன கருதும் இடம் இது தான்.உள்மூச்சே அதற்கு காரணம். ஆக நீ என் உள்மூச்சாக இருக்கிறாய். உன்னை நினைத்தே நான் சுவாசிக்கிறேன்.
மின்காந்த அலைகள்(electro magnetic waves) நம்மை எவ்வளவு சமீபித்திருக்கிறது. இருந்தும் உன்னை நேரடியாக
காணமுடியாதது எனக்கு பெரும் துயரம். நம் வீட்டில் இணைய வசதி இல்லாதது பெரும்குறை. நான் வரும் போது அதற்கான ஏற்பாட்டை செய்கிறேன். நான் உன்னை விட்டு பிரிவதற்கு முந்திய நாள். உறக்கமற்ற இரவின் துயரத்தை நாம் உள்வாங்க வேண்டிய நிர்பந்தம். கரைந்து போகும் நீரின் சுவை எத்தகையது. நாம் ஒவ்வொரு இடைவெளியிலும் வெளியிட்ட கண்ணீர் துளியின் நெடி மாறாதது. கரைதலையும், கரைத்தழித்தலையும் பற்றி நான் நிறையவே படித்திருக்கிறேன். அதை அனுபவபூர்வமாக காணும் போதே நான் முழுமையடைகிறேன். விமான நிலையம் சமீபத்திற்கும் தூரத்திற்குமான இடைவெளியில் இருந்தும் நீ
வருகிறாய் என்றாய். நீ சொன்ன போது நான் அதை மறுக்கவில்லை.மறுப்பதற்கான மனநிலையிலும் நான் அப்போது இல்லை. விமான நிலையத்தில் நீ உன்னை உடும்பாக பாவித்தது எனக்கு மிகுந்த வருத்தம் தான். நான் அதை பொருட்படுத்தாமல் உள்நுழைந்து விட்டேன். இப்போது விமானத்தில் எனக்கு பக்கத்தில் யாருமே இல்லை. நான் அடுத்த இருக்கையை பார்த்த போது பழைய நண்பர் உட்கார்ந்து கொண்டிருந்ததன் மீள் வெளிப்பாடாக இருந்தது. விமானம் இங்கு தரையிறங்கிய போது நான் புதிய
மனிதனாக இருந்தேன். உன் முகம் முன்னை விட வித்தியாசமாக இருக்கிறது என்று நண்பர்கள் சொன்னபோது உன்னை நினைத்து வெளிவந்த சிரிப்பு அப்படியே வாய்க்குள் அடங்கி கொண்டது. நேராக என் அறைக்குள் சென்று கட்டிலில் படுத்துக்கொண்டேன். உன்னை மொபைலில் தொடர்பு கொண்ட போது நீ பேசும் எல்லைக்கு வெளியில் இருக்கிறாய். இந்த மொபைல் உன்னை எவ்வளவு பாதித்திருக்கிறது. உன்னிடமிருந்து வரிசையாக என்னில் வந்து விழுந்த எஸ்.எம்.எஸ் கள் என்னை நானே மறுவாசிப்பு செய்ய வைத்தன. மீண்டும் உன்னை தொடர்பு கொண்ட போது நீ மறுபடியும் பேசும் எல்லைக்கு வெளியில் இருக்கிறாய். அது
எதார்த்தம் தானே. இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. ஒரு யுகம் முடியும் போது விஷ்ணு புரண்டு படுப்பது மாதிரி கட்டிலில் புரண்டு படுத்துக் கொண்டேன். உன்னை போலவே இரவு எதையும் சாப்பிட மனம் வரவில்லை. அடுத்த நாள் கம்பெனியில் என் வருகை பற்றி தகவல் சொல்ல வேண்டும். அதற்கான தயாரிப்போடு தூக்கமற்ற இரவின் அதிகாலையிலேயே எழும்பி விட்டேன். முந்தைய நாள் நாம் இப்படி தான் இருந்தோம். ஒரே அனுபவம் வேறுபட்ட சூழலில் வேறுபட்ட காலத்தில் வெளிப்படுத்தும் உள்ளுணர்வு சலனிக்க தகுந்தது. இங்கு வந்து நான் உன்னோடு மொபைலில் நிகழ்த்திய முதல் உரையாடல். உன் நாவு பேச்சின் வேகத்தையும், சுருதியையும் குறைத்த போது நானும் குறைக்க வேண்டியதாக இருந்தது. நமக்கு உண்ணாமல் உறங்காமல் எதுவுமே இல்லை. அதற்கு தானே நான் இங்கு வந்திருக்கிறேன்.உன் நினைவின் சலனத்தில், அதன் ஓட்டத்தில் என்னை நானே கடந்து செல்கிறேன்.
அனல் காற்று வீசுகிற, ஈரப்பதம் பிசுபிசுக்கிற மாலைப்பொழுது அது. வாகனங்கள் கக்கும் புகை காற்றைப் நிறைத்தது. பெட்ரோல் மற்றும் தாரின் வாசம் மூக்கின் மீதேறிச் சென்றது. கடலுக்கடியில் சூரியன் இறங்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் தணிய மறுக்கிற வெப்பம். நானும் நண்பருமாக நகர வீதிகளில் நடந்து சென்றோம். அந்த சாலைகள் வளைந்து சென்றன.அது எங்களுக்கு வித்தியாசமானதாக இருந்தது. பாலைவனத்தில் ஒட்டக கூட்டத்தை பற்றி யுவனின் புகைச்சுவருக்கு அப்பால் தொகுதியில் ஒரு கவிதை உண்டு. அதை இப்போது என்னால் திரும்ப அழைக்க முடியவில்லை. நாங்கள் நடந்து வந்த வழிகளில் பேரங்காடிகள் தென்பட்டன. நீ ஆசையோடு கேட்ட கிளியோபட்ரா சோப் இருக்கிறது. உலக பேரழகியை குறிக்கும் சோப் அது. பன்னாட்டு சோப்கள் உன் அலமாரி சுவர்களை அலங்கரிக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாய். பாவனைகளில் யுகத்தில் சோப்புக்கான குறியீடு எது? நான் தேர்ந்தெடுப்பது எது? கிளியோபட்ராவா? அல்லது டவ்வா? உன் உடல் நரம்புகள் முழுக்கவுமே விளம்பர காட்சி பிம்பங்களால் ஆனவை. நாம் அதனூடே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ரிமோட்டை கையில் வைத்துக் கொண்டு டி.வி முன் நீ உட்கார்ந்து இருக்கையில் அதன் பிம்பம் காட்சி வெளியை தாண்டி என்னையே பிரதிபலிக்கிறது. பாஸ்மதி அரிசி பற்றி மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறாய். டில்டா என்ற பாஸ்மதி அரிசி ஒன்று இருக்கிறது. மின்சார அடுப்பில் வைத்தால் உன்னை போலவே ஐந்து நிமிடத்தில் சோறாகி விடுகிறது. நம்மை சோறாகத்தானே சமூகம் மாற்றியிருக்கிறது. கே.எப்.சி களும், மெக் டொனால்ட்களும் அதிகமாகவே கண்ணில் தென்படுகின்றன. இந்த hot spot களில் உன்னோடு உரையாட ஆசை. மால்களை குறித்து நீ ஒருவேளை கேள்விபட்டிருக்கலாம். அந்த மால்களின் வடிவமைப்பை என்னால் புரிய முடியவில்லை. அது முக்கோணமாகவோ, சதுரமாகவோ, நாற்கரமாகவோ இருக்கிறது. அதனுள்ளிருந்து கூட என்னால் மற்றவர்களை மொபைலில் தான் தொடர்பு கொள்ள முடிகிறது. நான் கண்காணிப்பு கேமராவிற்குள் உட்படுத்தப்படுகிறேன்.என் அசைவுகள் ஒவ்வொன்றும் கண்காணிக்கப்படுகின்றன. மாறி வரும் உலகில் நீ தொடர் நிலப்படமாக இருக்கிறாய். அதில் எனக்கான வழியை தேட விரும்புகிறேன்.
நகர வீதிகளில் அங்காடிகளிலிருந்து ட்ரோலிகளில் உருட்டிச்செல்லப்படும் குழந்தைகளை கண்டால் என்னை நானே அவநம்பிக்கைக்கு ஆளாகிறேன்.நான் ஊரில் மூன்று மாதங்கள் இருந்தும் நமக்கு இன்னும் சந்ததி உருவாகவில்லை. வெளிநாட்டு
வாழ்க்கையின் தண்டனை இது தானா? இது இயற்கையின் சாபமா அல்லது இறைவனின் சாபமா? காலம் இன்னும் நம்மை முந்திக் கொள்ள வில்லை. என் முதல் ஞாபகமே தொட்டிலில் என் தாயின் தாலாட்டு கேட்டது. நம் குழந்தையின் முதல் ஞாபகமாக ஸ்பிரிங் தொட்டிலில் உன் குரல் கேட்க வேண்டும் என்பது தான். வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களை விட சோகமான தருணங்களே ஆழ்மனதில் பதிகின்றன. நம்மின் பிரிவு ஒரு சோகமான தருணம். அது என்னுள் ஆழமாக பதிந்து விட்டது. இதை உனக்கு நான் எழுதும் போது வெளியே ஈரப்பதம் பிசுபிசுத்து கொண்டிருக்கிறது.அதை உள்வாங்கி காகிதத்தில் படியும் நிழலாகிறேன். அடுத்த விமானம் இன்னும் தயாராகவில்லை. அரபிக்கடல் மேல் அது விசாலமான கோட்டை கிழித்துக்கொண்டு தரையிரங்கும் நாளுக்காக என் கடிகாரத்தை திருப்பி கொண்டிருக்கிறேன்.
1 comment:
நண்பரே..
ஒவ்வொரு வளைகுடாவாசியும் எழுதும் இக்கடிதத்தை எப்படி களவாடிப் போட்டீர்கள். அருமை. குறிப்பாக மீயதார்த்தம் (hyper reality) பற்றிய வாசகங்கள்.
வாழ்த்துக்கள்.
Post a Comment