காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Saturday, May 17, 2008

சமீர் அமீனுடன் ஒரு நேர்முகம்


நைல் நதியின் சலனத்தில் - சமீர் அமீனுடன் ஒரு நேர்முகம்
- எச்.பீர்முஹம்மது

உயிர்மை (அக்டோபர் 2007)


சமீர் அமீன் சர்வதேச நிலையில் கவனம் பெற்றிருக்கும் நவ மார்க்சியவாதி. அரசியல் பொருளாதார நிபுணர்.எகிப்தின் தலைநகரான கெய்ரோவில்
பிறந்தவர். பாரிஸ் பல்கலைகழகம், ஆப்ரிக்க வளர்ச்சி மையம் போன்றவற்றில் பணி புரிந்திருக்கிறார். Specters Of Capitalism:A critique of current intellectual patterns, The arab nation, Obsolescent Of Capitalism: Contemporary Politics and global disorder, Europe and the Arab World, Beyond US Hegemony :Assessing the prospects for a multipolar world, The Liberal Virus, Imperialism and unequal development போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். மூன்றாம் உலக நாடுகள் மீதான ஏகாதிபத்திய பல்முனை தாக்குதல்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து வருபவர். உலக சமூக மாமன்றத்தின் ஆலோசகராக செயல்படுகிறார். தற்போது செனிகலில் உள்ள
மூன்றாம் உலக பேரவையின் இயக்குநராக உள்ளார். நான் பணிபுரியும் வளைகுடா நாட்டில் உள்ள அரபு பல்கலைகழகத்திற்கு அரபுலகமும் ஐரோப்பாவும் என்ற தலைப்பிலான கருத்தரங்கிற்கு சில மாதங்களுக்கு முன் வந்திருந்தார். தாரிக் அலி போன்றே இவரை நேர்காண தீர்மானித்தேன். என்னுடைய புலம் பெயர் வாழ்க்கையின் எழுத்து செயல்பாடுகளுக்கு துணையாக இருக்கும் பல்கலை கழக ஆங்கில துறை பேராசிரியர் முனீர் ஹசன் மஹ்மூத் இதற்கு உதவிகரமாக இருந்தார். நேர்காணலில் அவரும் உடனிருந்தார். அரைமணி நேரத்திற்கும் மேலாக நீண்ட இந்த நேர்காணல் பல்கலைகழகத்தில் வைத்து எடுக்கப்பட்டது. அறிவு ஜீவிகளை புத்தகத்திலிருந்து
நேரடியாக ஆகர்சிக்கும் நிலை உணர்வு பூர்வமானது. புலம் பெயர் வாழ்க்கையின் வெளிப்பாடாக இது உருவாவது திருப்திகரமான மனநிலையை அளிக்கிறது. ஆங்கிலத்தில் அமைந்த என் கேள்விகளுக்கானஅவரின் பதில்கள்
பிரெஞ்சு கலந்த ஆங்கிலத்தில் அமைந்திருந்தன. அரபு மொழியின் கலப்பும் உண்டு.


எச்.பீர்முஹம்மது:- சமீர், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இணைய தளத்தோடு என்னை இணைத்து கொண்ட போது Monthly Review இதழ் வழியாக உங்களை அறிந்து
கொண்டேன். மனித நாகரீக பிறப்பிடமாக அறியப்படும்
எகிப்து தான் நீங்கள் பிறந்த இடம். நைல் நதியின் முன்னோட்டத்தில் ஒரு புலம் பெயர் மார்க்சிய அறிவு ஜீவியாக எவ்வாறு உருவாக முடிந்தது? சமீர் அமீன் மிஸ்ரி என்று சொல்ல வேண்டியதிருக்கிறது...

சமீர் அமீன்:- நீங்கள் சொன்னது போன்று நான் மிஸ்ரி
தான். கெய்ரோவில் 1931 ல் பிறந்தேன். எகிப்துக்கே உரிய சில பாரம்பரிய மரபுகளின் தாக்கம் என் குடும்பத்தாரிடம் உண்டு. என் தாயார் பிரான்சை சேர்ந்தவர். இருவருமே மருத்துவர்கள் தான். கெய்ரோவில் உள்ள பிரெஞ்சு பள்ளி ஒன்றில் படிப்பதற்காக சேர்ந்தேன். அது முதல் உலகப்போர் முடிந்த கட்டம். எகிப்து அப்போது உதுமானிய பேரரசின்
பிடியிலிருந்து பிரிட்டனின் கட்டுப்பாட்டில் வந்தது.
பிரிட்டிஷ் கலாசாரத்தின் எச்சங்கள் எகிப்தை பின்தொடர்ந்தன. பள்ளி படிப்புக்கு பின் மேற்படிப்புக்காக பாரிஸ் சென்றடைந்தேன். அது முறைப்படியான தத்துவார்த்த வாழ்க்கையின் துவக்கம் எனலாம். பிரான்சு கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்பு ஏற்பட்டது. அந்த காலகட்டத்தில் பிரான்சு கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாட்டை ஒத்திருந்தது. ஒரு விதத்தில் எனக்கு அது சாதகமானதும் கூட. நான் அன்றைய கட்டத்தில் சோவியத் பாணியிலிருந்து விலகியே இருந்தேன். மாவோயிஸ்டுகள் எனக்கு அறிமுகமாயினர். அப்போது சோவியத்துக்கும் மாவோவுக்குமான உராய்வு இருந்து கொண்டிருந்தது. பிந்தைய நாட்களில் அது பிளவை நோக்கி சென்றது. பாரிஸ் பல்கலைகழகத்தில் அரசியல் அறிவியல் பாடம் எனக்கு ஒரு தூண்டலாக இருந்தது. மார்க்சிய கோட்பாடுகளை அதிலிருந்து உட்கிரகித்து கொண்டேன். அதனை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் நண்பர்கள் பலர் அறிமுகமாயினர். பொருளாதாரத்தை குறித்து அதிகம் படிக்க தொடங்கினேன். ஆதம்ஸ்மித், ரிக்கார்டோ போன்ற மரபான பொருளியலாளர்களின்
கோட்பாடுகள் எனக்கு ஒரு நிரப்ப முடியாத வெறுமையை ஏற்படுத்தின. பல்கலைகழகத்தில் என் ஆய்வுரையை சமர்பிக்க வேண்டிய கட்டம், அரசியல் பொருளாதார
கோட்பாடுகளை நோக்கி என் சிந்தனை ஓட்டத்தை செலுத்தியது. எர்னஸ்ட் மண்டேல், அல்தூஸர் ஆகியோர் என்னை அதிகம் பாதித்தனர். 1957 ல் பல்கலைகழக ஆய்வேட்டிற்காக நான் சமர்பித்த ஆய்வுரையானது பின்னாளில் Origins of under development: Capitalist accumulation on a world scale என்ற புத்தகமாக வெளிவந்தது. ஐரோப்பிய
வட்டாரங்களின் கவனத்திற்கு அந்நூல் சென்றது. அது ஏற்படுத்திய சலனத்துக்கான இடைவெளியில் எகிப்து வந்து விட்டேன். மாலியில் திட்ட அமலாக்க அமைச்சரவையில்
சிறிது காலம் பணிபுரிந்தேன். 1970 ல் மீண்டும் பாரிஸிற்கு வந்தேன். பாரிஸ் பல்கலைகழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பணி புரிந்தேன். அப்போது தான் நிறைய அறிவு ஜீவிகள் எனக்கு அறிமுகமானார்கள்.அவரில் சார்த்தரும் ஒருவர். அவரிடம் முதலாளித்துவம் அடைந்து வரும் மாற்றங்களை பற்றி விவாதித்தேன். சோவியத்திலிருந்து துண்டிக்கப்பட்ட உலகம் எவ்வாறாக இருக்கும் என்றெல்லாம் விவாதித்தோம். தொண்ணூறுகளில் ஒரு கட்டத்தில் அது பற்றிய சிந்தனைகளை பின்னோக்கி நினைவு கூர்ந்தேன். சார்த்தருடன் சரியாகவே இருந்திருக்கிறோம் என்பது
மாதிரி இருந்தது.

எச்.பீர்முஹம்மது:- உங்கள் நூல்களில் Eurocentrism மற்றும் Europe and the Arab world ஆகியவை நான் ஆர்வமாக படித்த நூல்கள். அரபுலகம் மீதான ஐரோப்பாவின் தலையீடு சிலுவை போர்கள் முதல் துவங்குகிறது எனலாம். அரபுலகையும் ஐரோப்பாவையும் அரசியல் இஸ்லாம்- லெளகீக கிறிஸ்தவம் என்ற வகையறாக்குள் உட்படுத்த முடியுமா? நவ ஏகாதிபத்தியத்திலிருந்து நாம் இதை
தொடங்கலாம்.

சமீர் அமீன்:- சிலுவை போர்கள் அரபுலகின் மீது குறிக்க தகுந்த மாறுதலை ஏற்படுத்தின. ரோம் அதன் வழி தான் அரபு காலனியத்திற்கான கல்லை ஸ்தாபித்தது. காலனியம் வேர்கொண்ட நிலையில் அரபுலகில் அரசமைப்பு சர்வாதிகாரமாக மாறியது. ஜனநாயகத்தன்மை அறவே அற்ற ஆணாதிக்கம் நிறைந்த ஒன்றாக அது இருந்தது. மேற்குலகம் அந்த காலகட்டத்தில் தான் மறுமலர்ச்சிக்குள் புகுந்தது. அது
நவீனத்திற்கு முந்திய கட்டம். மதநீக்கம் (Secularism) கோட்பாடு அதனோடு இணைந்து கொண்டது. மேற்கின் வரலாற்றில் secularism அரசு மற்றும் மதம் ஆகிய இரண்டின் பிரிவினையாக தான் அர்த்தம் கொண்டது. அரபுலகம் அதை மேற்கின் தனிப்பட்ட குணமாக கருதியது. நவீன சமூகம் என்பது அதன் மூலம் மட்டுமே சாத்தியப்படும் என்பதை புரிந்து கொள்ள தவறியது. பிந்தைய கட்டத்தில் அரபுலகில் அரசியல், கலாசார அடிப்படையில் இரு பிரிவினர் இருந்தார்கள். மம்லூக் என்ற இராணுவ வாத இஸ்லாமியர்கள். இவர்கள் இஸ்லாமின் குறிப்பிட்ட சட்டபிரிவுகளை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டனர். மற்றொரு பிரிவினர் இவர்களை விட சற்று தீவிரம் குறைந்தவர்கள். தாருல் இஸ்லாம் என்றறியப்பட்டனர். பதினெட்டாம் நூற்றாண்டைய அரபுலகின் அரசுகள் ராணுவ பிரபுத்துவ தன்மை கொண்டதாக இருந்தன. அதே நேரத்தில் ஐரோப்பா நிலப்பிரபுத்துவத்தை ஒழித்து விட்டு நவீன சமூக படைப்பில் இறங்கியது. அது முதலாளித்துவம் வேர்கொள்ளும் தருணமாக இருந்தது. அவர்களின் நோக்கம் வெற்றியடைய கூடிய ஐரோப்பாவாக இருந்தது. இங்கு பலமான-பலம் குன்றிய அரசுகள் என்ற கருத்துருவம் இருந்தது. சில தருணங்களில் பலவீனமானவர்கள் வெற்றி பெற்றார்கள். ரோம பேரரசை ஜெர்மானியர்கள் வெற்றி கொண்டது இதனடிப்படையில் தான்.மம்லூக்களின் அரசுகள் முந்தைய நாகரீகத்தை அழித்து விட்டு இஸ்லாத்துக்கு ஒருமை விளக்கத்தை அளித்தன. சாதாரண விவசாயிகளின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டன. பொருளாதார வாழ்க்கை அவர்களின் ராணுவ அரசியலுக்குள் வந்தது. தாங்கள் எம்மாதிரியான ஏமாற்றத்துக்குள் இருக்கிறோம் என்பதை அரசின் கீழிருந்தவர்கள் அறிய முடியாதவர்களாக இருந்தார்கள். பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஆங்கிலம், மற்றும் லத்தீன் மொழிகள் கிறிஸ்தவத்தோடு ஒன்றியதாக இருந்தன. அரபு-ஆங்கிலம், லத்தீன் மொழிகளுக்கான மோதல்கள் சிலுவை போர்களுக்கு பிந்தைய ஏழு நூற்றாண்டுகள் வரை நீடித்தன.மம்லூக்கள் அரசை மதத்திலிருந்து பிரிப்பதை விரும்பவில்லை. அந்தலூசியர்களின் பரிதாபமான முடிவுக்கும் இது தான் காரணம். உதுமானிய பேரரசு இந்த விவகாரத்தைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளவில்லை. எகிப்தை பொறுத்தவரை மதநீக்கம் அதன் மீது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அரசியல் இஸ்லாம் தரகு முதலாளித்துவத்தின் சில கூறுகளை உள்வாங்கியிருந்தது.இப்னுதைமிய்யா வரலாற்று அடிப்படையான பரிணாம இஸ்லாம் என்பதை மறுத்தார். இவரை மம்லூக்கள் பின் தொடர்ந்தனர். இரு நூறாண்டுகளின் தேய்மானத்திற்கான தொடக்கம் அதில் இருந்தது. எகிப்தில் கமால்அப்துல் நாசர் தேசியவாத அரசியல் நிலைபாட்டை எடுத்தார். கல்வி முறை நவீனமயமாகியது. அல்-அஸ்கர் பல்கலைகழகம் கூட அந்த முறைக்கு உள்ளானது. விவசாய முறைகள் தாராளவாதத்திற்கு உட்பட்டன. ஒரு வகையில் ஐரோப்பிய பிரதிபலிப்பாக இருந்தது. 1967 ல் இஸ்ரேலுடனான ஆறு நாட்கள் போரின் போது எகிப்து சிலவற்றை இழந்தது. அந்த இழப்பின் தொடர்ச்சியே அரபு ஐரோப்பாயிடையேயான முரண்பாடாக இருந்து
கொண்டிருக்கிறது. நடப்பு காலத்தில் அரபுலகம் கீழ்கண்ட சவால்களை எதிர்கொள்ள முயல்கிறது.

1.அமெரிக்காவின் உலகளாவிய செயல்தந்திரமும், அதன் பரிணாமமும்.

2.சோவியத் தகர்விற்கு பிந்தைய உலகின் எதிர்காலம்.

3. புதிய உலகமயமாக்கல் சூழலில் வளர்ச்சி பற்றிய கேள்வி

4. பாலஸ்தீன் பிரச்சினையும், மேற்கத்திய அரசியல் மற்றும் சமூக சக்திகள் மீதான சியோனிச தாக்கம்.

5. அரபுலக அரசுகளின் புற மற்றும் உள் சலனங்கள்.

எச்.பீர்முஹம்மது:- அரபு பிராந்தியத்தின் ஸ்திரமற்ற தன்மைக்கு பாலஸ்தீன் விவகாரம் காரணமாகிறது. ஓர் இனப்படுகொலை மற்றொரு கொலைக்கான பதிலீடாக முடியுமா? லெபனான் இப்போது தான் அமைதியாகி இருக்கிறது. மேற்குலகின் யூத அறிவு ஜீவிகள் பாலஸ்தீன் விஷயத்தில் ஏன் மாற்று நிலைபாட்டை எடுக்கிறார்கள்? கலாசார சார்புவாதம் என்று இதை எடுத்து கொள்ளலாம்.


சமீர் அமீன்:- அரபு பிராந்தியம் நெகிழ்வற்ற தன்மையில்
நகர்ந்து கொண்டிருக்க இஸ்ரேல் வாகனம் தெளிவாக செல்கிறது. நூறாண்டுகளாக ஒரு விவகாரம் அதன் திசையில் போய் கொண்டிருப்பது கவலையளிக்கக்கூடியது. இஸ்ரேல் என்ற சொல்லாடலின் அர்த்தவிரிவு என்பது என்ன? யூத பிரதிகளிலிருந்து அது எடுக்கப்பட்டது. இஸ்லாமிய மூல நூல்களிலும் உண்டு. கானான்களிலிருந்தே இவர்கள் உருவாயினர். தீர்க்கதரிசிகள் இவர்களை பங்கிட்டு கொண்டார்கள். இஸ்ரேல் பகுதி என்பது வரையறுக்கப்பட்டதல்ல. எகிப்திலிருந்தே இதை நாம் தொடங்க முடியும். சாலமன் மற்றும் டேவிட் ஆகியோரின் ஆட்சியில் தான் பல கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. ஜெருசலம் அன்று மிகப்பெரிய நகரமாக இருந்திருக்கிறது. இவர்களின் டயஸ்போராவிற்கான காரணம் என்பது தன்னிலையானதே. இனக்குழுக்களிடையேயான மோதல் இயல்பான ஒன்றாக இருந்தது. அதிகாரத்திற்கான போட்டியில் இவர்கள் பின்னடைவுக்குள்ளானார்கள். பல்வேறு கட்ட அதிகார தொடரல்களுக்கு பிறகு பதினாறாம் நூற்றாண்டில் உதுமானிய பேரரசின் கீழ் இஸ்ரேல் பகுதி வந்தது. உதுமானிய பேரரசில் நிலப்பகுதி விவசாயத்திற்கு தகுந்ததாக
மாற்றப்பட்டது. மக்களில் அறுபது சதவீதம் பேர் விவசாயிகள். நகர மற்றும் நாடோடி வர்க்கமாக ஜனங்கள் பிரிந்து கிடந்தனர். 1882 க்கு பிறகு தான் யூதர்களின் வருகை அதிகமானது. அது திடீரென அதிகரித்ததல்ல. அவர்கள் எல்லோரும் ஒரே ஆண்டாக குடியேறினர் என்ற புனைவை நாம் கடக்க வேண்டும். 19 ஆம் நூற்றாண்டு வரை அந்த பகுதியில் வாழ்ந்த யூதர்களின் வாழ்வனுபவம் மதமாக இருந்தது.1882 க்கு பிறகே அரசியல் அனுபவமாக மாறியது. சியோனிச தலைவரான அஹத் ஹாம் எழுதினார் " அரபுகளுக்கு நாம் இப்போது எதை செய்கிறோம் அல்லது எதை நோக்கமாக கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாக புரிந்திருக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் சில அரபுகளிடமிருந்து நிலத்தை விலைக்கு வாங்கிய மேற்கத்திய யூதர்கள் மலைப்பகுதிகளிலும் பள்ளதாக்குகளிலும் தங்கியிருந்த அரபு குடியானவர்களை அங்கிருந்து நகர கேட்டுக்கொண்டனர். அவர்கள் மறுத்தனர். மேலும் ஏற்கனவே குடியிருந்த யூதர்கள் அரபுகளுடன் எந்த முரண்பாட்டு உருவாக்கத்திற்கும் தயாராகவில்லை. அவர்களுக்கு தனி அரசு என்பது தேவையில்லாததாக இருந்தது. நிலங்கள் குடியானவர்களால் விவசாயத்துக்குட்பட்டிருந்தன. மத்திய காலகட்டத்தில் வட ஆப்ரிக்காவும் மத்திய கிழக்கும் ஸ்பெயின் மற்றும் ஐரோப்பாவின் மற்ற பகுதிகளிலிருந்து விரட்டப்பட்ட யூதர்களுக்கு புகலிடமாகவும், பாதுகாப்பானதாகவும் இருந்தது என்பதை
நீங்கள் கவனிக்க வேண்டும். இறுதிகாலகட்டத்தில் சியோனிச தலைவர்கள் ரஷ்ய யூதர்களை பாலஸ்தீன் செல்ல கேட்டுக்கொண்ட போது அவர்கள் அதை மறுத்ததையும்
நினைவில் வைக்க வேண்டும். விவசாய நிலங்கள் பெரும் முதலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. இதனோடு தான் மக்களற்ற நிலம், நிலமற்ற மக்களுக்காக என்ற பாரதூர வாக்கியம் உருவாக்கப்பட்டது. இதனின் தொடர்ச்சி உலகின் அதிக எண்ணிக்கையிலான அகதிகளாக அம்மக்களை உருவாக்கியிருக்கிறது.

ஹிட்லரின் யூத அழிப்பின் எச்சங்கள் இன்னும் சில
அறிவுஜீவிகளிடத்தில் தொற்றி இருக்கின்றன. ஒரு பத்தாண்டுகளில் பெரும் தொகையிலான மக்கள் அழிக்கப்பட்டது சார்பு நிலைக்கான நியாயப்பாட்டை உருவாக்கும் காரணி தான். ஆனால் இன்னொரு சூழலில் மறுபிரதிபலிப்பாக மாறுவது நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று. 19 ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்கிய யூத எதிர்ப்புணர்வு இருபதாம் நூற்றாண்டின் மையப்பகுதியில் கொண்டு போய் முடிந்தது. வியன்னா இதழியலாளரான
தியோடர் ஹெர்ஸ் தேசிய இருப்பிடம் என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார். ஐரோப்பிய யூதர்களை இந்த வளையத்திற்குள் நுழைய வைப்பதற்கான அனைத்து
நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். அதன் பின்னர் தான் இதற்கான தேவை அதிகரித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெரும்பான்மையான அறிவுஜீவிகளிடத்தில் இதற்கான எந்த தாக்கமும் இல்லை. மார்க்சிய மூலவர்களான மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் போன்றவர்கள் இதற்கு வெளியில் தான் இருந்தார்கள் என்பதை நினைவில் வைக்க வேண்டும். யூத எதிர்ப்பு தீவிரப்பட்டு ஹிட்லரின் கையில் சென்றது தான் இருபதாம் நூற்றாண்டு மார்க்சிய/ பின்
நவீனத்துவ அறிவுஜீவிகளை இஸ்ரேல் சார்பு நிலைபாட்டை எடுக்க வைத்தது. இஸ்ரேல்-பாலஸ்தீன் முரண்பாடுகளின் நீட்சி அறிவு ஜீவிகள் தங்கள் நண்பர்களை கூட எதிரிகளாக கருத வேண்டிய நிலைக்கு கொண்டு போய் முடிந்தது. பூக்கோxடெல்யூஷ், சார்த்தர்xரஸ்ஸல், எரிக்ஹாப்ஸ்வாம்x டெரி ஈகிள்டன் போன்றவர்கள் இந்த வகைப்பாட்டிற்குள் வரக்கூடியவர்கள். நான் சார்த்தரிடத்தில் வெளிப்படையாக இந்த விஷயங்களை விவாதித்திருக்கிறேன். அவரிடம் அனுதாப உணர்வுகளை மீறிய அற்புதங்களை காண முடிந்தது. பூக்கோ தன் ஈரான் பயணத்திற்கு பிறகு இதை பற்றிய சில சமரசங்களுக்கு வந்தார். எல்லாவித சமரசங்களை மீறி இந்த மோதல் அதன் போக்கில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

எச்.பீர்முஹம்மது:- ஈராக் அமெரிக்காவின் புதிய காலனியமாக உருவாகி உள்ள சூழலில் நவ ஏகாதிபத்தியத்தின் வேர்கொள்ளும் தன்மை எத்தகையது? ஷியா- சுன்னி பிரிவினரிடையேயான முரண்பாடாக மட்டும் நாம் இதை எடுத்துக்கொள்ள முடியுமா? இம்மோதல் பிரதேசம் தாண்டி எதிரிகளை வேறுபடுத்துகிறது. சதாமின் மரணத்திலிருந்து அது நீள்கிறது...

சமீர் அமீன் :- ஈராக்கின் பாரம்பரியம் சில அனுபவங்களை நமக்கு அளிக்க கூடியது. யூப்ரடீஸ் டைக்ரீஸ் நதிகள் இன்னமும் அதை கொண்டு செல்கின்றன. சலாதீன் ஆட்சி காலம் வரை ஈராக்- சிரியா- எகிப்து ஆகிய மூன்றும் தான் இணைந்திருந்தன. அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்த மூன்றையுமே தனித்தனியாக பிரித்து அதற்குரிய சொந்த முரண்பாடுகளை உருவாக்கி விட்டிருக்கிறது. பாத்திசம் இந்த மூன்று பகுதிகளிலும் சோசலிச உணர்வை ஏற்படுத்தியது. சாதிக் ஏ ஆஸம் சிரியாவில் இதை முன்னெடுத்தவரில் முக்கியமானவர். என்னிடத்தில் ஒரு முறை சொன்னார் " சோவியத் கூட்டமைப்பு மாதிரி அரபுலகத்தை வடிவமைப்பது அதற்கான சுய பாதுகாப்பான விஷயம். நாம் இன்னமும் சிந்திக்க, செயல்பட வேண்டியதிருக்கிறது". அவர் சொன்னதை திரும்ப அழைக்கிறேன். ஈரானுடனான போர் ஈராக்கின் முதல் தோல்வி. சதாம் தன் நண்பரால்
பழிவாங்கப்படுவோம் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார். சதாமுக்கு ஆயுதங்கள் வழங்கியதன் மூலம் ஈரானை பலவீனப்படுத்த முடியும் என்று அமெரிக்கா
கருதியது. ஈரான் புரட்சி அதற்கு நடுக்கமாக இருந்திருக்க கூடும். சதாம் எவ்விதமான சிக்கலில் விழுந்தார் என்பது அமெரிக்காவிற்கு புரிந்திருக்கும். குவைத்துடனான சதாமின் மோதல் போரில் போய் முடிந்தது. இதன் வழி வளைகுடாவின் ஒரே நண்பரான ஐக்கிய அரபு எமிரேட்டையும் இழக்க நேர்ந்தது. அது சோவியத் தகர்ந்த நேரம். இன்னொரு உலகம் என்ற எதிர்பார்ப்பையும், மரபான மார்க்சியர்களின் கவலையையும் இணைந்ததான சூழல் அப்போதிருந்தது. ஈராக்-ஈரான் போர் சமயத்தில் நான் ஈரான் சென்றிருந்த
போது ஈரான் மார்க்சியரான மன்சூர் ஹிக்மத் என்னிடத்தில் சொன்னது நினைவுக்கு வருகிறது. " அமெரிக்கா சதாமிடமிருந்து எல்லாவற்றையுமே எதிர்பார்க்கிறது. சதாம் அதை எவ்வளவு தூரம் நிறைவேற்றுவார் என்பது தெரியவில்லை." சுன்னி-ஷியா உள்மோதல்களை இன்னும் தீவிரப்படுத்துவதன் மூலம் மூன்றாம் உலக முஸ்லிம்
நாடுகள் மீது அதிகாரத்தனத்தை செலுத்துகிறது. சதாம் ஒரு ராணுவ அதிகாரியாக இருந்து ஆட்சிக்கு வந்தவர் என்ற நிலையில் ராணுவ உத்திகள் அவரை செல்வாக்கு செலுத்தின. எட்வர்ட் செய்த் கூட சதாம் விஷயத்தில் பாலஸ்தீன் தேசிய கவுன்சிலில் இருந்து விலக நேரிட்டது. ஈராக்கின் துயரங்கள் இன்னும் ஒரு நூற்றாண்டிற்கான அடையாள
பதியங்களை ஏற்படுத்தி சென்றிருக்கின்றன. அமெரிக்க பல சர்வதேச போர் விதிமுறைகளை மீறி இருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய உலகில் ஓர் அரசு மற்றொரு அரசை ஆக்கிரமிக்க கூடாது என்பதும் விலக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய உலகம் அல்லது அரபுலகம் அரசியல் வகைப்பட்ட இஸ்லாமியத்திற்குள் விழுந்து கிடக்கிறது. சதாமின் மரணத்தண்டனை காட்சி ரோமானிய சிலுவை போரின் பிம்பங்களை மீட்டெடுத்தது.

எச்.பீர்முஹம்மது:- ஈராக் சம்பந்தபட்ட வகையில் 1991ல் அமெரிக்காவின் போர் சோவியத் தகர்ந்த காலகட்டமாக இருந்தது. பெருங்கனவை தகர்த்த ஒன்றாக சோவியத் மாறியது. பிந்தைய மார்க்சியம் அல்லது மூன்றாம் உலக மார்க்சியம் குறித்து ஆராய்ந்து வரும் நீங்கள் சோவியத் தகர்வின் பின்னணியை எவ்வாறு மதிப்பீடு செய்கிறீர்கள். எங்கள் இந்தியாவில் இரு கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இருக்கின்றன. அதில் மார்க்சின் பெயரை கொண்ட ஒன்று சகலவிதமான சாபங்களையும் தங்கள் ரெடிமேட் அறிவுஜீவிகள் மூலமாக கோர்பசேவ் மீது இட்டு விட்டு சென்று விடுகிறது. இன்னொன்று சோவியத் பற்றிய கனவில் மிதந்து கொண்டிருக்கிறது.

சமீர் அமீன்:-சோவியத் குறித்து அறுபதுகள் காலத்தில் எனக்கு அவநம்பிக்கை இருந்தது. இதற்கு தன்னிலை மற்றும் புறநிலை ஆகிய இரண்டு காரணங்களை நாம் சொல்ல முடியும். ரஷ்ய புரட்சி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டு முடிந்து விடுகிறது. அன்று ரஷ்யா என்பது தனித்துவமான ஒன்று. அதற்கும் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கும் சமத்துவ வளர்ச்சிக்கான ஒப்புமைகள் குறைவாக இருந்தன. புரட்சிக்கு பிந்தைய ரஷ்யாவில் அமைந்த அரசானது ரஷ்யாவின் மற்ற பகுதிகளை பேரரசின் கீழ் இணைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானது. புரட்சி ஏற்பட்டது ரஷ்யாவில் அதாவது மாஸ்கோவில். ஆனால் பேரரசின் பகுதிகள் துர்மேனிஸ்தான் வரை விரிந்திருந்தன. பேரரசின் மற்ற பகுதிகளில் புரட்சி பற்றியோ, அதன் தன்மைகள் பற்றியோ எவ்விதமான பிரக்ஞையும் இருக்கவில்லை. அப்போது தான் இந்த நடைமுறைகள் அங்கு போய் சேர்ந்தன. அப்போது அங்குள்ளவர்களுக்கு ரஷ்ய வகைப்பட்ட அரசியலை புரிந்து கொள்ள சிக்கலாக இருந்தது. ரஷ்யாவில் விவசாயம் வளர்ச்சியடையாத ஒன்றாக இருந்தது. கனரக தொழில்கள் குறைபட்டு கிடந்தன. எல்லாவற்றையும் ஒருங்கிணைப்பதில் சிக்கல் இருந்தது. இதனால் சோவியத் அரசின் தன்மை
மாறத்தொடங்கியது. இரண்டாம் உலகப்போருக்கு பின் ஒரு வகையாகவும் அதற்கு முன்பு மற்றொரு வகையாகவும் இருந்தது. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஸ்டாலின் வந்து விட்டார். அவரின் இயல்பான குணாதிசயம் ரஷ்யாவை வேறொரு ரீதியில் நகர்த்தியது. லெனின் காலத்தில் இருந்த உட்கட்சி விவாதம் என்பதை ஸ்டாலின் இல்லாமலாக்கினார். ஆக கட்சியின் கருத்து என்பது நிறுவனத்தின் கருத்தாக மாறியது. மாற்று கருத்து உடையவர்கள்
அரசியல் ரீதியான காரணங்களுக்கு உட்பட்டதாக கொல்லப்பட்டனர். இதனிடையில் ஸ்டாலின் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் அதாவது 1939 ல் ஹிட்லருடன் ஏற்படுத்திய ஒப்பந்தம் அவர் ஒரு வீழ்ச்சியை தொடங்கி வைக்கிறார் என்பதை அறிவுறுத்தியது. கிழக்கு ஐரோப்பாவை பங்கிட்டு கொள்வதிலும், ஜெர்மனியும், ரஷ்யாவும் தங்களுக்குள் எவ்வித போரும் இல்லை என்பதாகவும் அந்த ஒப்பந்தம் உறுதியளித்து கொண்டது. அது முக்கியமாக போலந்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக இருந்தது. ஸ்டாலின் இதற்காக எதிரிகள் யார் என்பதை கூட தெளிவாக வரையறுக்கவில்லை. மாஸ்கோ இறுதி விசாரணைகள் நமக்கு அதை வெளிப்படுத்துகின்றன. நான் அறுபதுகள் காலகட்டத்தில் அர்மேனியா, கஜகஸ்தான், மாஸ்கோ போன்ற இடங்களுக்கு சென்றிருக்கிறேன். அங்கு கண்ட காட்சிகள் தானாக நம்பமுடியாதவையாக இருந்திருக்கின்றன. உணவு பொருட்கள் தட்டுப்பாடு, குவிமயமாக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் ஆகியவை ரஷ்ய ஆதிக்கத்தின் பிரதிபலிப்பாக தாங்கள் இருக்கிறோம் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தின. இது அவர்களுக்கு மாற்று ஒன்றை தேடுவதற்கான அவசியமாக இருந்தது. புறநிலையில் பனிப்போராக இருந்து வந்த முதல் உலகிற்கு அல்லது முதலாளித்துவத்திற்கு ரஷ்யாவை தவிர்த்த ஒன்றை தங்கள் முகாமிற்குள் கொண்டு வர சாதகமான ஒன்றாக இது மாறிப்போனது. இதை பற்றிய எவ்வித சிந்தனையும் ரஷ்ய தலைமைக்கு இருக்கவில்லை. குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாக ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மற்ற பகுதிகளின் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இது சார்ந்த மோதல்கள் உருவாயின. கட்சிக்கும் அறிவுஜீவிகளுக்குமிடையே எவ்வித உறவும் இருக்கவில்லை. கலைஞர்கள் ஓரங்கட்டப்பட்டனர். கார்க்கி, செகாவ் இவர்களை தவிர வேறு யாரையுமே அவர்கள் முன்னெடுக்கவில்லை. கோர்பசேவை பொறுத்தவரை அவர் வீழ்ச்சியின் இறுதி தான். தொடக்கமல்ல. ரஷ்ய கப்பலான மார்க்சிம் கார்க்கியில் கோர்பசேவ்- ஜார்ஜ்புஷ் ஆகிய இருவரும் இணைந்து பனிப்போர் முடிவுக்கு வந்ததை அறிவித்த போது நினைத்தேன். "இன்னொரு உலகத்திற்கான தேவையின் அரசியல் வெளிப்படுகிறது". அந்த காட்சி பிரான்சு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. மூன்றாம் உலகத்தின் துயரத்திற்கான முடிவு அதில் பரிணமித்தது.
ராணுவவாத இஸ்லாமின் குழுக்கள் அதிலிருந்து தற்போது பாடம் கற்றிருக்கின்றன.

எச்.பீர்முஹம்மது:- ஏழாம் நூற்றாண்டு கால இஸ்லாம் பல்வேறுபட்ட குழுக்களாக பிளவுபட்ட நிலையில் அரபுலகம் முழுவதுமாக அது நிறைந்து இருக்கிறது. இத்தகைய பிளவுகளுக்குமிடையேயும் இஸ்லாமின்
அறிவுத்துறை தரிசனமாக சூபிசம் வளர்ந்து வந்தது. அவர்கள் நீங்கள் சொன்ன மம்லூக்குகளால் மிகுந்த தாக்குதலுக்கு உள்ளானார்கள். சூபிசத்தில் பெண்களின் பங்கும் குறிப்பிடத்தக்கது. ராபியத்துல் அதவியா, மைமூனத்துல் மிஸ்ரிய்யா, ராபியத்துல் பஃதவியா என்பதாக நீள்கிறது. என்னுடைய பெயரே எங்கள் பகுதியிலுள்ள சூபி அறிஞர் ஒருவரின் பெயரை குறிப்பீடு செய்தது தான் என்பதை உங்களிடம் குறிப்பிட விரும்புகிறேன்.

சமீர் அமீன்:- உங்கள் பெயர் சூபியின் பெயரை குறிப்பீடு செய்கிறது என்பதை கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கிறது. (சிரிக்கிறார்). எகிப்திலும், ஈரானிலும் இம்மாதிரி பெயர்களை நான் கேட்டிருக்கிறேன். மனித ஆளுமைகள் இன்னொருவரை பாதிப்பதன் விளைவு இது. சூபிசத்தை பொறுத்தவரை இஸ்லாமின் பரிணாம தன்மையில் குறிப்பிடத்தக்க போக்காக உருவாகி வளர்ந்தது. அவர்கள் லெளகீகம் -அலெளகீகம் என்பதற்கிடையே தொடர்பு ஏற்படுத்த முயன்றனர். முஹம்மது நபி லெளகீகத்தை உட்கிரகித்து கொண்டு நித்திய பயணத்தைப் பற்றி சிந்தித்தார். அரபு பழங்குடியினரிடையே இந்த பயணம் அவசியமாக இருந்தது. அவர்கள் உலகத்தோடு வாழ்ந்தனர். வாழ்வது பற்றிய பிரக்ஞை கூட இயற்கையை மீறிய புதினமாக இருந்தது. நபியின் காலத்திற்கு பிறகு பாரசீகத்திலும், மத்திய தரைக்கடல் பகுதிகளிலும் தத்துவவாதிகளாக இவர்கள் உருவானார்கள். இந்த மரபு யூத மற்றும் கிறிஸ்தவத்திலும் வழக்கில் இருந்தது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். ரபியா எட்டாம் நூற்றாண்டு காலத்தவர். ஈராக்கிலுள்ள பஸ்ராவை சேர்ந்தவர். சூபி தத்துவத்தில் மனித மதிப்பு, அன்பு என்ற கருத்தாக்கத்தை புகுத்தியவர். ஆனால் அவர் அந்த காலகட்டத்தில் குறிப்பிடும்படியான எந்த கவனத்தையும் பெறவில்லை. மைமூனத்துல் மிஸ்ரிய்யா
எகிப்தை சார்ந்தவர். ரபியாவுக்கு சற்று பிந்தியவர். அவரை போன்றே சிந்தித்தவர். நனவிலி நிலையிலும் காதல் வரும் என்று நம்பியவர். ஈரானை பொறுத்தவரை ரூமி முக்கியமானவர். மனிதமன மாற்றத்திற்கான கவிதைகளை அதிகமாக வெளிக்கொணர்ந்தார். ஒரு வகையில் இந்த போக்கின் பரிணாம வளர்ச்சி ஈரான் என்று கூட சொல்லலாம். ஆனால் அங்கு பல சூபிகள் ஆட்சியாளர்களாலும், அறிய முடியாத சமூக மனிதர்களாலும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த நடைமுறை சில நூற்றாண்டுகள் வரை நீடித்தது. இஸ்லாமிய பேரரசு அந்தலூசியா வரை விரிந்த போது இதன் போக்கு வெறும் அநுபூதத்திலிருந்து,
கிரேக்க மற்றும் கிழக்கு தத்துவங்களை நோக்கி திரும்பியது. அல்பராபி, இப்னஸீனாபோன்றவர்கள் இந்த வகைப்பாட்டில் வரக்கூடியவர்கள். அது ஒருவகையில் இஸ்லாமுக்கு இன்னொரு வடிவத்தை கொடுத்தது. மற்றொரு வகையில் கிறிஸ்தவத்துடனான உரையாடலாகவும் இருந்தது.

எச்.பீர்முஹம்மது:- அரபுலகை பொறுத்தவரை நிசார் ஹப்பானி, மஹ்மூத் தர்வீஷ், அப்துல் ரஹ்மான் அல்முனீப், அப்துல் வஹ்ஹாப் அல் பைத்தி, அனஹிதா பிரோஸ், நஜிப் மஹ்பூஸ் போன்ற கலைஞர்கள் முக்கியமானவர்கள். அந்நியமான தவிப்புகளை உடைய, ஏதோ ஒன்றோடு ஒன்றக்கூடிய படைப்பு வெளி அவர்களுக்கானது. அரசியல், சமூக சிக்கல்களில் இருக்கும் நீங்கள் அரபுலக படைப்புகளை எவ்வாறு மதிப்பீடு செய்கிறீர்கள்?

சமீர் அமீன்:- கலை, இலக்கியத்தில் அரபுலகம் மேற்கத்திய, லத்தீன் அமெரிக்க படைப்புகளை ஒப்பிடும் வகையில் வலுவாக இல்லை. ஆனால் அதை மீறிய வகையில்
நெடியும், ஆழ்மையும் அதற்கு உண்டு. அரபு வெளியில் ஒரு மகோன்னதமாக சிலரின் படைப்புகள் அமைந்தன. உதாரணமாக நிசார் ஹப்பானியின் கடலுக்குள் நுழைகிறேன், அப்துல் ரஹ்மான் அல் முனீபின் உப்பு நகரம் (Cities of salt) போன்றவை குறிப்பிடதக்கவை. நஜீப் மஹ்பூஸ் நல்ல கதைகளையும், கவிதைகளையும் கொடுத்தார். அவரின் கதைகள் நெருக்கடியான துருவத்தில் இருக்கும் மனிதனின் மனப்பதிவாக இருந்தது. பஹ்ரைன் கவிஞர் ஹிசாம் ஹத்தாத் இன்னொரு உலகம் சார்ந்து வரைபவர். அவரின் தீவுகளின் மனிதர்கள் என்ற கவிதை என்னை அதிகம் பாதித்த ஒன்று. பெண்களில் நதவியும் , அனஹிதா பிரோஸும் முக்கியமானவர்கள். அரபுலகின் படைப்புகள் இப்பொழுது தான் மேற்கத்திய உலகிற்கு அறிமுகமாயிருக்கின்றன. வளைகுடாவிலிருந்து அதிகம் கலைஞர்கள் உருவாக முடியாமல் போனதற்கு அகச்சூழலும் காரணம். அடிப்படைவாத மன்னர்களின் நிலைபாடு இது. தற்போது சவூதியை தவிர மற்ற நாடுகளின் போக்கில் மாற்றம் தெரிகின்றது. சவூதியை சேர்ந்த அப்துல் ரஹ்மான் அல் முனீப் அவரின் நாவலை சவூதிக்கு வெளியே தான் எழுத முடிந்தது. சமூக வரையறைகளை மாற்றும் கலைஞனின் உலகில் இது சாதாரணமானதே. அதை எதிர்கொள்வதற்கான உறுதிபாடு என்பதும் அவசியம். அரபு மொழியின் மெதுவளர்ச்சிக்கிடையே கலையும் வளர்வது தவிர்க்க இயலாதது. இந்த
போக்குகள் மதத்திற்கு புறம்பானவை என்று காட்டும் நிலைபாடும் இருக்கதான் செய்கிறது. கிறிஸ்தவ விஷயத்தில் ஆரம்பகால திருச்சபை இப்படிதான் சொன்னது. மாற்றங்கள் அளவிலிருந்து பண்பை நோக்கி திரும்புகின்றன.

Mr. Sameer, Thank you so much for your valuable time and revolving around your world.

Mr. Mohammed , Thanks for your excellent questions as a expatriate.

1 comment:

ஜமாலன் said...

நண்பருக்கு..

ஆழந்த வாசிப்பைக்கோரும் கட்டுரைகள். சிறுபத்திரிக்க அற்ற சூழலில் உங்கள் பதிவுகளில் எழுத்தை பார்ப்பது சந்தொஷமாக உள்ளது. பதிவின் தலைப்பும் அருமை.

தமிழ் மணத்தில் கதிவை இணைத்தவிட்டீர்களா? பரவலாக பலரும் பார்வையிட அது அவசியம்.

தொடருங்கள்.