காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Wednesday, March 25, 2009

கருப்பு நிறத்தின் கூடுகையிலிருந்து -அரபு நாவலாசிரியர் தயிப் சாலிஹ் பற்றிய குறிப்புகள்




ஒரு திசையை நோக்கி செல்லும் கோடு ஒன்று திரிந்து செல்கிறது. ஒர் இளைஞன் மிகச்சரியாக ஏழாம் வருடத்தில் அதை நோக்கி செல்கிறான். நான் ஐரோப்பாவில் படித்து கொண்டிருந்தேன். அதன் பிறகு என் மக்களை நோக்கி திரும்பினேன். என்னை விட்டு கடந்து போனவைகளை மிக அதிகமாக கவனிக்க தொடங்கினேன். அது வேறொரு கதை. முக்கிய விஷயம் நான் நைல் நதியின் வளைந்த பகுதியிலுள்ள சிறிய கிராமத்திற்கு என் மக்களுக்காக பெரும் ஏக்கத்துடன் திரும்பி கொண்டிருந்தேன். ஏழு வருடங்களாக நான் அங்கிருந்தேன். அவர்களை பற்றி கனவு கண்டு கொண்டிருந்தேன்.அது ஓர் அசாதாரண தருணமாக இருந்த போது நான் அவர்களுக்கிடையில் இருப்பதை எனக்குள் உணர்ந்து கொண்டேன். அதன் விகசனத்தில் நான் ஒரு புள்ளியாக இருந்தேன்.


தயிப் சாலிஹின் பிரபல நாவலான வடதிசை புலம்பெயர்தலின் பருவம்
(Season of migration to the north)என்பதன் தொடக்க வரிகள் இவை. அரபுலகின் நவீன எழுத்தாளர்களில் தயிப் சாலிஹ் முக்கிய கட்டத்தை அடைந்தவர். தனித்துவமான ஆளுமையால் அரபுலகில் தனக்கென பிரத்யேக இடத்தை அமைத்து கொண்டவர். சூடானின் வட மாகாணத்தில் சாதாரண கறுப்பின விவசாய குடும்பத்தில் 1929 ல் பிறந்தார் தயிப் சாலிஹ். இவரின் குடும்பம் இஸ்லாமிய அடிப்படைகளில் தீவிர பற்றுறுதி கொண்டிருந்தது. தன் பள்ளிபடிப்பை சொந்த கிராமத்தில் நிறைவு செய்த தயிப் சாலிஹ் சூடானின் கார்தோம் பல்கலைகழகத்தில் பட்ட படிப்பை முடித்தார். அதன் பிறகு லண்டன் பல்கலைகழகத்தில் மேற்படிப்பும் ஆராய்ச்சி படிப்பும் படித்தார். அவரின் இளமைக்கால ஆர்வம் விவசாயத்தின் மீதிருந்தது. பின்னர் உருமாற்றம் அடைந்து அறிவு துறை விஷயங்கள் மீது திரும்பியது. படைப்பு துறையின் ஒருங்கிணைவு தயிப் சாலிஹின் இளமைத்தொகுதி மீது மிகுந்த தாக்கத்தை செலுத்தியது. லண்டனிலிருந்து தன் புலத்திற்கு திரும்பும் முன் சிறிது காலம் ஒளிபரப்பு துறையில் சாலிஹ் பணிபுரிந்தார். அதன்பிறகு ஆசிரியராக சில காலம் பணிபுரிந்தார். இவரின் படைப்புலகம் காலனியம் மற்றும் பாலியல் தன்மையை அடிப்படையாக கொண்டது. காலனியம் ஏற்படுத்தும் வன்மம் மற்றும் அந்நியமாதலின் குணாதிசயங்களை பிரதியலை செய்யும் பிம்பமாக இவரின் எழுத்தமைப்பு இருந்தது. இதன் காரணமாக தேர்ந்த படைப்பாளி- படைப்பு என்ற அவதானத்திற்குள் தயிப் சாலிஹ் வந்தார். இவரின் முதல் சிறுகதை தொகுப்பு A handful of Dates என்ற பெயரில் ஐம்பதுகளின் பிற்பகுதியில் வெளிவந்தது. அது இவரை அரபு மற்றும் ஆப்ரிக்கா எழுத்துலகில் படைப்பார்ந்த குவியத்துக்குள் வர வைத்தது. ஊடகத்துறையில் அப்போது பணிபுரிந்த சாலிஹ் இந்த தொகுப்பு மூலம் தன் படைப்பு செயல்பாட்டின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார்.
தயிப் சாலிஹ் அரபு மற்றும் மேற்குலகில் அடையாளம் குவிக்க காரணமாக இருந்தது வடதிசை புலம்பெயர்தலில் பருவம் (Season of migration to the north)என்ற நாவல். இது 1966 ல் ஒரு வசந்த காலத்தில் அரபு மொழியில் வெளியானது. இரு பிரதேசங்களிடையே வாழ்க்கை சார் நெருக்கடி காரணமாக புலம் பெயரும் ஒரு மனிதனின் வாழ்வியல் சித்திரமாக அது இருந்தது. அந்த நாவல் வெளிப்படுத்திய விரிந்து நீண்ட கதைத்தளம் சக மனிதனின் பெயர்தல் நிலை பற்றிய பதிவாக இருந்தது. கதையில் முன்னிறுத்தப்படும் மனிதன் பெயர் முஸ்தபா சயீத் . கல்வி கற்கும் நோக்கத்திற்காக இங்கிலாந்து சென்று ஏழாண்டுகள் அங்கிருந்து விட்டு தன் சொந்த கிராமத்திற்கு செல்கிறான் அவன். அவனை சொந்த கிராமம் அரவணைக்கவில்லை. மாறாக அந்நியப்பட்ட கலாசாரத்தை கொண்டவனாக பார்க்கிறது. சொந்த கிராமத்து இயற்கையும் அவனை வெறுப்பாக பார்க்கிறது. மேற்கின் எல்லாவித அடையாளங்களும், உடல் மொழிகளும் அவனிடம் இருக்கின்றன. சமூகம் அவனை ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது வாழ்விலிருந்து அந்நியப்பட்டு போன தவிப்பாளனாக அவன் உணர்கிறான். ஒரு கட்டத்தில் பைத்தியநிலைக்கு சென்று மாற்று ஈகோ மனிதனாக மாறுகிறான். அந்த சமகாலத்தில் அவனின் இங்கிலாந்து அனுபவங்கள் அனைத்தும் நினைவுக்குள் நகர்கின்றன. இதன் பிறகு நைல் பிரதேசத்திற்கு நகரும் அவன் மரணம் வரை ஆளுமைமிக்க தனிமனிதனாக மாற போராடுகிறான. மஹ்பூஜ், ஆன் ஹமத், பிந்த மஹ்மூத், ழீன் மோரிஸ், இசபெல்லா சைமூர் போன்ற பிற கதை மாந்தர்களை இந்நாவல் இணைத்து கொண்டு காற்று வீசும், நீரின் சலனம் ஏற்படும் திசையை நோக்கி நகர்கிறது. வாழ்க்கை என்பது கூட்டு மற்றும் தனிமனித ஆளுமைகளுக்குள் நிகழும் இடையறாத போராட்டம் என்பதை இந்நாவல் குறியிடுகிறது. எழுபதுகளில் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. அதன் பிறகு மேற்கின் அதீத கவனத்தை ஈர்த்தது. 2001ல் அரபுலகின் முக்கிய நாவலாக சிரியாவை சேர்ந்த சாகித்ய அமைப்பு ஒன்றால் இந்நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் பல மேற்கத்திய விருதுகளை இந்நாவல் பெற்றது. உணர்வியல் மற்றும் பாலியல் பற்றிய சித்திரங்களுக்காக இந்நாவல் சூடானில் அந்நாட்டு அரசால் சிறிதுகாலம் தடைசெய்யப்பட்டிருந்தது.


20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் அரபு , ஆப்ரிக்கா படைப்பு வெளியில் தயிப் சாலிஹ் தவிர்க்க முடியாத ஆளுமை. தேர்ந்தெடுக்கப்பட்ட ரசனையான வாசகர்கள் மட்டுமே கொண்ட அரபுலகில் தயிப் எல்லோரின் கவனத்தை ஈர்த்தார். சர்வதேச அளவில் விவாத பொருளாக மாறிய சாமுவேல் காண்டிங்டனின் நாகரீகங்களின் மோதல் என்ற சொல்லாடலுக்கு முன்பே தயிப் சாலிஹ் தன் படைப்புகளில் நாகரீகங்களின் மோதல் மற்றும் சக வாழ்வு குறித்து எழுதினார். உலக நாகரீகங்கள் அவற்றின் இணக்கம் குறித்த தெளிவான பார்வை அவருக்கிருந்தது. வடதிசை புலம் பெயர்தல் நாவல் கூட இன்னொரு வாசிப்பு அனுபவத்தில் நாகரீகங்கள் குறித்த கதையாக வெளிப்படுகிறது. சாலிஹின் அடுத்த நாவல் The wedding of zein 1969 ல் வெளிவந்தது. சூடானின் கிராமம் ஒன்றை பற்றிய கதை சித்திர வெளியாக இந்நாவலின் கட்டமைப்பு இருந்தது. கிராமத்தவர்களின் வாழ்க்கை ஒட்டம், சுக துக்கங்கள், அவர்களின் சிரிப்புக்கும்,அழுகைக்குமான இடைவெளி, அன்பு நிரம்பிய மனித வாழ்வின் கனம், அதற்கும் சமூகத்திற்குமான உறவு இவற்றின் கூட்டுப்பதிவாக இது இருந்தது. இந்நாவல் லிபியாவில் நாடகமாக அரங்கேற்றப்பட்டது. குவைத்தில் திரைப்பட இயக்குநரான சாகித் சித்தீக் என்பவரால் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. எழுத்தாளர் என்ற நிலையில் தயிப் சாலிஹ் கடந்த பத்தாண்டுகளாக லண்டனிலிருந்து வெளிவரும் அரபி பத்திரிகையான "அல்-மஜல்லாவில்" பத்தி எழுதி கொண்டிருந்தார்.அது அவரின் படைப்பு திறனை வெளிப்படுத்தியது. சில காலம் பி.பி.சி வானொலியில் பணியாற்றிய தயிப் சாலிஹ் பின்னர் யுனெஸ்கோவில் வேலைக்கு சேர்ந்தார். அதன் தொடர்ச்சியில் வளைகுடா நாடுகளுக்கான யுனெஸ்கோ பிரதிநிதியாக பொறுப்பேற்றார். சூடான் மற்றும் அரபு எழுத்துலகத்தால் நோபல் பரிசுக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அது எகிப்திய எழுத்தாளரான நகுப் மஹ்பூஸுக்கு மட்டுமே கிடைத்தது. இவருக்கு இணையாக பேசப்பட்ட, முன்னிலைப்படுத்தப்பட்ட தயிப் சாலிஹ் கடந்த பிப்ரவரி 18 ஆம் நாள் மரணமடைந்தார். மஹ்மூத் தர்வீஸ் இறந்த போது இருந்த ஆர்ப்பரிப்பும், சோகமும் இவர் மரணமடைந்த போது அரபுலகில் இருக்கவில்லை. இதன் பின்னணியில் உள்ள அரசியல் ஆராயத்தக்கது. தயிப் சாலிஹின் நாவல்கள் மற்றும் பிற படைப்புகள் உலகின் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. அரபு மற்றும் ஆப்ரிக்க உலகின் தேர்ந்த ஆளுமையான தயிப் சாலிஹ் மரணமடைந்த போதும் அவரின் எழுத்துக்கள் உயிரோட்டமாக இன்றும் நம் முன் நிற்கின்றன.

1 comment:

ஜமாலன் said...

உங்கள் அறிமுகப்பணி தொடர வாழ்த்துக்கள்.