காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Tuesday, May 19, 2009

அடிப்படைவாத மோதல்கள் - தாரிக் அலி பற்றிய குறிப்புகள்







தனிமனிதன் அல்லது சமூகம் தன் நிலைபாட்டின் மீதான பொருண்மையின் மீது, அதன் சாராம்சங்கள் மீது காலத்தை கடக்க முடியாத நுனிமங்கள் மீது தொங்கி கொண்டிருப்பது தான் அடிப்படைவாதம். இது தனிமனிதர்களுக்கிடையே அல்லது சிவில் சமூகங்களுக்கிடையே கருத்தியல் ரீதியான, செயல்பாட்டு ரீதியான மோதல்களையும், அதிகார நவிற்சிகளையும் உருவாக்குகிறது. உலகம் அதை எதிர்ப்பவர்கள் இருப்பதால் மட்டுமே முன்னோக்கி நகர முடியும் என்ற கேதேவின் கோட்பாடு இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. உலக வரலாற்றில் மாபெரும் அரசுகள் எல்லாம் மதத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவை. அவற்றின் நம்பிக்கை, கலாசாரம், அரசியல் மீதே அதன் எதிர்செயல்பாடுகள் நிகழ்ந்தேறின. வரலாறு முன்னோக்கி செல்கிறது என்று அழுவதோ அல்லது சிரிப்பதோ அல்ல. மாறாக அதை புரிந்து கொள்வதே அவசியமான ஒன்றாகும் என்ற ஸ்பினோசாவின் கோட்பாட்டு அறிவுறுத்தல் அடிப்படைவாதம் வேர்கொண்டு நிற்கும் இந்த சூழலில் மிகப்பொருத்தமாக இருக்கிறது. இதன் தர்க்க ஒழுங்கை, கோட்பாட்டு பொருண்மையை மார்க்சிய தத்துவார்த்த மற்றும் வரலாற்று கண்ணோட்டத்தோடு நடப்பு உலகில் ஆராய்ந்து வருபவர் பாகிஸ்தான் புலம் பெயர் அறிவுஜீவியான தாரிக் அலி. ஒரு விசனகரமான அதே நேரத்தில் நாடகீயமான இளமைக்காலம் அவருக்குரியது. தற்போதைய பாகிஸ்தானின் லாகூரில் 1943 ல் நிலப்பிரபுத்துவ குடும்பத்தில் தாரிக் அலி பிறந்தார். இவருடைய தந்தை பிரிட்டிஷ் இராணுவத்தில் இருந்தவர். சிறந்த, விசாலமான வாழ்க்கை பின்புலத்தை கொண்டவர். நிலப்பிரபுத்துவ பின்னணியை கொண்ட போதும் மார்க்சிய கோட்பாட்டின் மீது ஆர்வமும், தாக்கமும் கொண்டவர். இவர் தந்தையின் திருமணமே மிகுந்த போராட்டத்திற்கிடையே தான் நடைபெற்றது. அதற்கு அன்றைய பாகிஸ்தானில் நிலவிய மாற்று சிந்தனைகள் மீதான வெறுப்பும், மன அயற்சியுமே காரணம். அதன் தொடர்ச்சியின் மீதான எதிர்செயல்பாடு மற்றும் சிந்தனையே தாரிக் அலியின் உருவாக்கம். அன்றைய காலத்தில் லாகூர் பல கலாசாரத்தை கொண்ட காஸ்மோபாலிட்டன் நகரமாக இருந்தது. இந்த நகரத்தின் நெளிவான நகர்வுகளுக்கிடையில் தாரிக்கின் இளமைகாலம் சவால் ஒன்றின் முன்னோக்கத்திற்காக காத்திருந்தது. பள்ளிப்படிப்பை லாகூரில் முடித்த தாரிக் அலி பஞ்சாப் பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். தன் தந்தையை போன்று இளமைகாலம் தொட்டே தாரிக் மத விவகாரத்தில் அவநம்பிக்கையாளராக இருந்தார். இதன் தொடர்ச்சி அவரை கல்லூரி பருவத்தில் முதிர்ச்சி பெற்ற அரசியல் மற்றும் தத்துவ சிந்தனையாளராக மாற வைத்தது. பஞ்சாப் கல்லூரி வாழ்க்கையின் தொடக்க காலங்களில் அவரின் பேச்சும், எழுத்தும் பாகிஸ்தானின் இராணுவ சர்வாதிகார வர்க்கத்தை உசுப்பி விட்டது. காலப்போக்கின் நகர்வில் தாரிக்கின் தத்துவார்த்த செயல்பாடுகள் அவரின் பாகிஸ்தான் இருப்பை கேள்விக்குறியாக்கின. அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட அக மற்றும் புற நிர்பந்தங்கள் காரணமாக தாரிக் பாகிஸ்தானை விட்டு லண்டனுக்கு செல்ல நேர்ந்தது. கீழைச் சிந்தனையாளர்கள் பலரின் வாழ்க்கை பின்னணியை நாம் நோக்கும் போது அவர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்தல் அல்லது புலப்பெயர்ச்சிக்குள்ளாகுதல் என்ற கட்டத்தில் இருந்து தான் அவர்களின் எதார்த்த வாழ்வின் இன்னொரு கட்டம் தொடக்கம் பெறுகின்றது. இதன் காரணங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டியவை. நேர்மாறான நிலையில் மேற்கத்தியர்கள் எவரும் தன் செயல்பாட்டிற்காக கீழைத்தேயத்திற்கு பெயர்ந்து வருவதில்லை. (விதிவிலக்கான தருணங்கள் தவிர) மேற்கு நாடுகளின் வட்டத்திற்குள் தான் அவர்களின் செயல்பாடுகள் அமைகின்றன. கீழை சிந்தனையாளர்கள் மேற்கை தங்கள் சிந்தனைக்கான சுதந்திர வெளியாக, செயல்பாடுகளுக்கான பரப்பிடமாக காண்பதே அதற்கு காரணம். அது மாதிரியே தாரிக்கின் லண்டன் வாழ்க்கை அவரின் ஆளுமை உருவாக்கத்திற்கான தொடக்க புள்ளி. அதற்கான விரிவான சாத்தியப்பாடுகளை அது உருவாக்கி விட்டிருந்தது. லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் பொருளாதாரம் படித்த தாரிக் படிக்கும் காலத்தில் வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். அவருக்கான போராட்ட கள செயல்பாடுகள் அதன் மூலம் தொடக்கம் பெற்றன. இளமைகால தத்துவார்த்த வாசிப்பும், செயல்பாடுகளும், பல்கலைகழக பொருளாதார படிப்பும் அவரை அறிவுஜீவி என்ற கட்டத்திற்கு நகர்த்தின. வியட்நாம் போர்காலத்தில் பெர்டிணான்ட் ரஸ்ஸல் மற்றும் ழீன் பால் சார்த்தர் ஆகியோரின் அறிமுகம் தாரிக் அலிக்கு கிடைத்தது. அவர்களுடனான உரையாடல்கள் மூலம் தாரிக் தன் சிந்தனைமுறையை விசாலமாக்கி கொண்டார். அவரின் அனுபவ வெளி மேற்கத்திய அறிவுஜீவிகளுடனான தொடர்ந்த உரையாடல்கள் மூலம் அக அனுபவ முதிர்ச்சியாக மாற்றியது. வியட்நாமுக்கு பல சிந்தனையாளர்கள், மனித உரிமை போராளிகள் இணைந்த குழுவாக சென்று நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார். அதிலிருந்து அமெரிக்க எதிர்ப்பு சிந்தனை அவரின் கோட்பாட்டு தளத்தில் மையம் கொள்ள தொடங்கியது. ஜியாவுல் ஹக் தலைமையிலான ராணுவ அரசின் அமெரிக்க ஆதரவு நிலைபாட்டை கடுமையாக விமர்சித்தார். இதன் காரணமாக அவருக்கு சில ஆண்டுகளாக பாகிஸ்தானிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்தது. இது இன்னொரு வகையில் மேற்கத்திய நாடுகளில் அவரின் பெயரை குவியப்படுத்தியது. வரலாறு, மறுமலர்ச்சிகால தத்துவம் சார்ந்த தொடர்ச்சியான, விசாலமான, ஆழ்ந்த வாசிப்பு காரணமாக தாரிக் அலி தன் பின்னால் கணிசமான வாசக வட்டத்தை இழுத்துக்கொண்டார். இதன் பின்னர் அவரின் முறைப்படியான எழுத்து வாழ்க்கை 1960 ல் லண்டனில் பிரட் ஹாலிடேயுடன் இணைந்து New left review என்ற கோட்பாட்டு சஞ்சிகையை தொடங்கியதில் இருந்து தொடங்குகிறது.இதே காலகட்டத்தில் சர்வதேச டிராஸ்கிய கட்சியின் உறுப்பினரானார். பிரிட்டனில் அதற்கு தலைமையும் வகித்தார். அப்போது கட்சியினருடன் இணைந்து trotsky for beginners என்ற நூலை எழுதினார். பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் தோல்வியை டிராஸ்கிஸ்டுகள் கையாள தவறியது குறித்த விஷயத்தில் தாரிக் அலிக்கு முரண்பாடு ஏற்பட்டது. அது குறித்து எழுதவும் செய்தார். இதை தொடர்ந்து டிராஸ்கிஸ்டுகளுக்கும் இவருக்கும் முரண்பாடு ஏற்பட்டது. இவரின் முதல் புத்தகம் இஸ்ரேல் குறித்த சித்திரமாக 1968 and after:Inside the revolution என்ற பெயரில் 1978 ல் வெளிவந்தது.அதன் பிறகு பாகிஸ்தான் வரலாறு, அதன் இராணுவ சர்வாதிகாரம் குறித்த புத்தகமாக Can pakistan survive: Death of a state வெளிவந்தது. தாரிக்கின் தொடர்ச்சியான எழுத்துக்கள் அவரின் அடுத்தடுத்த நூல்களை வெளிக்கொணர்ந்தன. 1984 ல் "இருபதாம் நூற்றாண்டில் ஸ்டாலினியம்" குறித்த நூல் ஒன்றை வெளியிட்டார். அது ஸ்டாலினியம் குறித்த கடும் விமர்சன ஆய்வுமுறையாக இருந்தது. இதன் சமகாலத்தில் தாரிக் புனைவு இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். இதன் பிரதிபலிப்பாக Shadow of pomegranate tree, Book of saladin, Stone woman போன்ற நாவல்கள் அவரிடம் இருந்து வெளிவந்தன. அவரின் ஆக்கங்களில் முக்கிய கோடிடும் பகுதியாக 2002ல் வெளியான The clash of fundamentalism இருந்தது. அடிப்படைவாதம் வேர்கொள்ளும் முறை, அதன் தர்க்கரீதியான தொடர்ச்சி, இருபதாம் நூற்றாண்டு மத்திய கிழக்கின் பிராந்திய முரண்பாடுகள், மோதல்கள், போர்கள், கலாசார தர்க்கவியல் போன்றவற்றை குறித்த விரிவான ஆய்வுமுறையாக இருந்தது. இதன் மூலம் மேற்கு மற்றும் மத்தியகிழக்கு வட்டாரத்தில் தாரிக் அலி குவியமான அறிவு ஜீவியாக முன்னிலைப்படுத்தப்பட்டார். அதற்கு பிந்தைய ஆண்டில் ஈராக் மீதான அமெரிக்க போரை முன்வைத்து, ஏகாதிபத்திய கருத்தியலையும், வரலாறையும் விளக்கும் Bush in Babylon வெளிவந்தது. இந்த நூலும் அறிவுத்துறை வட்டாரங்களில் குறிப்பிட்ட மாறுதலை ஏற்படுத்தியது. பின் மார்க்சிய, பின்காலனிய, எதிர் அடிப்படைவாத தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் தாரிக் அலி தற்போது லண்டனில் வசிக்கிறார்.


தாரிக் அலியின் அடிப்படைவாதம் குறித்த ஆய்வுமுறைகள் முக்கியமானவை. அடிப்படைவாதம் வரலாறு மற்றும் கோட்பாடு சார்ந்த நுனிமங்கள் மீது தொடக்கம் கொள்கிறது என்கிறார் தாரிக். லௌகீக உலகின் வளர்ச்சி போக்கில் சமூகத்தில் ஒவ்வொரு காலகட்டத்தில் தோன்றும் கோட்பாடுகள், நம்பிக்கைகள் அதன் மனக்கிடங்கில் ஆழ்ந்து பதிகின்றன. அந்த பதிதல் சார்ந்தே அதன் அரசியல் உருவாகிறது. நாகரீகங்கள் உருவான காலத்தில் இருந்து தொடங்கும் இவை சில வேளைகளில் காலத்தை மீற முடியாதவையாக இருக்கின்றன. மதம் அதன் தொடர்ச்சியில் உருவாகும் நம்பிக்கைகள் இதற்கு உதாரணங்கள். அவ்வகையில் உலகில் உருவான எல்லா குறு மற்றும் பெருமதங்கள் இந்த நெறிமுறையில் தான் இருக்கின்றன. இதில் குறுமதங்கள் பெரும்பாலும் வரலாற்றிலிருந்து அழிந்து போய்விட்டன. நிலைத்திருப்பவை எல்லாம் விதிவிலக்கான தருணங்கள் தவிர பெரும்பாலும் அடிப்படைவாதத்தின் உற்பத்திக்கூடங்களே. இதன் தொடர்ச்சியில் இஸ்லாமின் தோற்றத்தைப் பற்றி மதிப்பிடும் தாரிக் அலி அதை அக்காலகட்டத்தின் அதாவது கி.பி ஏழாம் நூற்றாண்டின் அரசியல், கலாசாரம் இருந்த நிலையில் அந்த சமூகத்தில் வலுவான நம்பிக்கை முறையை ஏற்படுத்தி ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது, வேறுபட்ட பழக்க வழக்கங்களை கொண்ட மக்களை ஒன்றிணைப்பது அல்லது இந்த இரண்டையும் செய்வதான நோக்கத்தில் உருவான அரசியல் இயக்கமே என்கிறார். இஸ்லாத்தின் முதல் இருபதாண்டுகளில் குர் ஆன் வெளிப்படுத்திய சொல்லாடல்கள் இந்த கருதுகோளை உறுதிப்படுத்துகின்றன. அதற்கு முந்தைய யூதம், கிறிஸ்தவம் போன்றவை இந்த கருதுகோளிலிருந்து பிறந்தவை தான். உலக பேரரசு கனவு என்பதில் இருந்தே இதன் வரலாற்று ரீதியான போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. கி.பி ஒன்றாம் நூற்றாண்டில் நடைபெற்ற யூத மற்றும் கிறிஸ்தவத்துக்கு இடையேயான போர்கள், 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற இஸ்லாம் -கிறிஸ்தவத்துக்கு இடையேயான சிலுவைபோர்கள் உலக பெருமதங்களின் பேரரசு நோக்கத்தை வெளிப்படுத்துபவை. இந்திய சூழலில் ஆரிய மற்றும் திராவிட நாகரீகத்திற்கிடையேயான போர்களை குறிப்பிடலாம். மேலும் சமண மற்றும் பௌத்த மதங்கள் அழிக்கப்படுதல், அதன் மீதான ஒடுக்குமுறை போன்றவை இந்த தர்க்க நீட்சிக்கு உதாரணங்கள். இஸ்லாம் ஏழாம் நூற்றாண்டு கால அரபுலகில் வலுவான அரசியல் மற்றும் கலாசார இயக்கமாக உருமாறிய பிறகு அதன் எல்லை விரிவாக்கம் படிப்படியாக அதற்கான செயல் தந்திரங்களோடும், புதுமையான யுக்திகளோடும் நடந்தேறியது. இக்காலத்தில் அரேபிய பாலைவனத்தில் முஸ்லிம் இராணுவத்தின் வெற்றி என்பது குறிப்பிடதக்கதாக இருந்தது. அந்த வெற்றியின் வேகம் மத்திய தரைக்கடல் உலகை நோக்கி சென்றது. முந்தைய கிறிஸ்தவத்துடனான முரண்பாடுகள் வெளிப்படுத்த முடியாத ஒன்றாக இருந்தன. நபியின் மரணத்துக்கு பிந்தைய இருபது ஆண்டுகளில் அவரை பின் தொடர்ந்தவர்கள் பிறைவள பகுதிகளில் (ஈராக், சிரியா, லெபனான், பாலஸ்தீன் போன்றவை)தங்களின் முதல் அரசை கட்டமைத்தார்கள். இந்த அரச கட்டமைப்பு மற்ற பகுதிகளில் உடனடியாக அதை விரிவுபடுத்துவதற்கான மன வேகத்தை அளித்தது. ஒவ்வொரு விரிவாக்கத்தின் போதும் அப்பிரதேசத்தின் இனக்குழுக்கள் இஸ்லாத்தை தழுவி கொண்டன. இதற்கிடையில் கி.பி ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டு காலத்தில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பைசாண்டிய மற்றும் பாரசீக பேரரசுகள் வலுவான சக்திகளாக இருந்தன. இந்த இரு பேரரசுகளிடையே அக்காலத்தில் பிரமாண்ட போர் மேகம் நகர்ந்து கொண்டே வந்தது. அதன் இழுப்பங்களுடன் கூடிய தொடர்ச்சியான நகர்வு இருவரையும் தங்கள் பிராந்தியத்தின் மீது புதிய வெற்றியாளர்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தது. சிரியாவும், எகிப்தும் பைசாண்டிய பேரரசின் பகுதிகள், ஈராக் பாரசீக பேரரசின் பகுதி. இவை அனைத்தும் பலம் பொருந்திய, நம்பிக்கையாளர்களான ஒருங்கிணைந்த இனக்குழு சக்தியின் முன் விரைவாக காணாமல் போயின. இரு பேரரசுகளின் உயர் திறன் வாய்ந்த, அனுபவம் மிக்க போர் இயந்திரங்கள் எண்ணிக்கை அடிப்படையில் அதிகமாக இருந்த போதும், நடைமுறையில் பலவீனமாக இருந்தன. அரேபிய முஸ்லிம் இராணுவத்தின் ஒட்டக மற்றும் குதிரைப்படைகள், மறைந்திருந்து தாக்கும் கொரில்லா யுத்த முறைகள், தீடீரென தாக்கி விட்டு மறையும் நாடோடி தாக்குதல் முறை போன்ற யுத்த உத்திகள் இரு பெரும் பேரரசுகளை தோற்கடித்தன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இந்த இரு பேரரசுகளின் வீழ்ச்சியோடு இஸ்லாமின் முறைப்படியான இருப்பு இங்கு தொடங்குகிறது. உலக வரலாற்றில் இவ்வாறு பலமான அரசுகள் பலவீனமாக மனிதர்களால் வெல்லப்பட்டிருக்கின்றன. ரோமானிய பேரரசை பலம் குன்றிய ஜெர்மானியர்கள் வென்றதும், மெக்சிகர்களிடமிருந்து யாங்கிகள் கலிபோர்னியாவை கைப்பற்றியதும் இந்த கருத்தாக்கத்தை மேலும் உறுதி செய்பவை. இவ்வாறான நிலையில் இஸ்லாமிய அரசுகள் பிராந்தியத்தில் வேர்கொண்ட பிறகு சமூக உற்பத்தி மற்றும் இயற்கையோடு இயைந்த செயல்பாடுகள் மீது கவனம் கொள்ள தொடங்கின. குறிப்பாக அறிவியல் மற்றும் மருத்துவ கண்டுபிடிப்புகள் மீது அதீத கவனமும், அவதானமும் அவர்களுக்கிருந்தது. அப்பாஸிட்கள் இதற்கான செயல்திட்டங்களை வைத்திருந்தார்கள். குறிப்பாக மருத்துவ துறையில் அவர்களின் பங்களிப்பு அபாரமாக இருந்தது. முதல் ஆயிரத்தாண்டு முழுவதும் மருத்துவ துறையின் வளர்ச்சி அறிவின் நீண்ட, குறுக்கு நெடுக்குமான பயணத்திற்கு உதாரணமாக இருந்தது. பாரசீகத்தின் பல நகரங்கள் இதற்கான வாயில்களாக இருந்தன. அரபுலகின் முதல் மருத்துவராக அறியப்பட்ட ஹாரித் இப்னு ஹலதா அக்கால பாரசீக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அக்காலத்தில் அவரின் மருத்துவ ஆலோசனைகள் புகழ்பெற்றவை. அதிக உணவு உண்பதை தவிர்த்தல், கலக்காத ஒயினை அருந்துதல், தினசரி அதிக தண்ணீர் பருகுதல், மது அருந்தி விட்டு உடலுறவு கொள்ளாமை, சாப்பிட்டு விட்டு குளிப்பதை தவிர்த்தல் இவை அரசவையிலிருந்து குடிமக்களுக்கு பரப்பப்பட்டன. அந்த ஆலோசனைகள் அதிகாரபூர்வ முறையில் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை தொடர்ந்து இப்னு ஸீனா மற்றும் அல் ராசி ஆகிய மருத்துவ தத்துவவியலாளர்கள் அரபுலகில் தோன்றினர். இவ்வாறாக மருத்துவ துறையின் விதை அன்றைய பாரசீகத்தில் விதைக்கப்பட்டு அரபுலகம் முழுவதும் வேர் கொண்டு மரமாக கிளைத்தது. இஸ்லாத்தின் தோற்றம் அதன் அரசியல், புவி பொருளாதார பார்வை குறித்து தன் அடிப்படைவாத மோதல்கள் (The Clash of Fundamentalism) நூலில் ஆராய்ந்த தாரிக் அலி அதன் முடிபுகளை நீண்டகன்ற முறையில் ஆழ்ந்து வெளிப்படுத்தினார். அவரின் சிந்தனை முறைகள் மரபான மேற்கத்திய சிந்தனையாளர்களிடமிருந்து வித்தியாசப்பட்ட ஒன்றாக இருந்தன. மரபாந்த முறையில் கீழைத்தேயவாதியாக இருப்பதால் மத்திய கிழக்கு சமூகம் குறித்த இந்த ஆய்வு முறை அவருக்கு விரிவான தளங்களை தொடுவதற்கான வாய்ப்பை வழங்கியது.மேலும் மேற்கத்திய நாகரீகம் மற்றும் இஸ்லாமிய நாகரீகம் குறித்த அடிப்படையான ஆய்வுமுறைகளை நிகழ்த்தியிருக்கிறார். மேற்கத்திய நாகரீகம் குறித்த ஆய்வில் தாரிக் பிரிட்டனின் காலனியாதிக்க நடவடிக்கைகள் குறித்து வெளிப்படுத்தினார். குறிப்பாக இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிப்பதில் இருந்து அதை தொடங்கினார். இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்த காலத்தில் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் காந்தியிடம் கேட்டார்." மேற்கத்திய நாகரீகம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?" அது ஒரு சிறந்த கருத்தாக இருக்கலாம்" காந்தி எள்ளல் முறையில் மிகச்சாதாரணமாக பதிலளித்தார். காந்தியின் இந்த பதிலை தற்போதைய கட்டத்துக்கு நகர்த்தும் தாரிக் அலி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஒடுக்குமுறையை, கண்ணுக்கு புலப்படாத ரீதியில் நாகரீகத்தின் மேல் படும் தாக்குதலாகவே காண்கிறார். குறிப்பாக ஈராக் மீதான அமெரிக்க போர் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார். மேற்கு ஈராக்கில் ஜனநாயகம் திரும்பும் என்ற மாயையை வெகுஜன மத்தியில் ஏற்படுத்துகிறது. இது உச்சபச்சமான மேல் திணிக்கப்படும் ஒடுக்குமுறை என்பதை அது உணராமல் இருக்கலாம். மேலும் நாகரீகம் அதன் எதிர்கொள்ளல் குறித்த யுக்திகளுக்கு அமெரிக்க ரெடிமேட் அறிவுஜீவிகளின் துணையை நாடுவதை தாரிக் குறிப்பிடுகிறார். குறிப்பாக சாமுவேல் காண்டிங்டனும், பிரான்சிஸ் புகாமாவும் இதன் வார்ப்புகள். அவர்களின் நாகரீகங்களின் மோதல் குறித்த கருத்தாக்கம் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கை வடிவமைப்பே. சாமுவேல் காண்டிங்டன் ஜாண்சன் ஆட்சியில் வியட்நாம் போர் குறித்த வழிமுறைகளை அரசுக்கு வகுத்து கொடுத்தவர். சிவிலியன்கள் ஆதரவு இல்லாமல் அந்நிய நாட்டின் மீது போர்தொடுப்பது வெற்றியை தராது என்ற கருத்தை அதிகார வர்க்கத்தின் முன்வைத்தவர். இந்த கருத்தாக்கத்தை தான் அமெரிக்க ஆப்கானிஸ்தான், ஈராக் போரின் போது பயன்படுத்தியது.சர்வதேச ஊடக சர்வாதிகாரம் இதற்கு துணைபுரிந்தது. பல தருணங்களில் சாமுவேல் காண்டிங்டனுக்கு கோட்பாட்டு ரீதியாக எதிர்வினையாற்றியிருக்கிறார். நாகரீகங்கள் குறித்த இந்த ஆய்வுமுறை தாரிக் அலியை மேற்கு மற்றும் கிழக்குலகின் தேர்ந்த அறிவுஜீவியாக ரூபம் கொள்ள செய்தது. கடந்த இருபதாண்டுகளில் மேற்குலகில் புனைவு மற்றும் புனைவு அல்லாத எழுத்துக்களின் எல்லையை கடந்த தாரிக் என்னை பாதித்த சிந்தனையாளராக இன்னும் இருக்கிறார். இவருடனான என் விரிவான நேர்காணல் இரு வருடங்களுக்கு முன்பு தமிழ்பத்திரிகை ஒன்றில் வெளியானது. ஓர் அறிவு ஜீவி மனிதசமூகம், வாழ்க்கை இவற்றை குறித்த ஆழ்ந்த அவதானங்களை உடையவன் என்பதற்கு தாரிக் இந்த நூற்றாண்டின் உதாரண புருஷர்.
- உயிரோசை

1 comment:

இளைய அப்துல்லாஹ் said...

மிகவும் அற்புதமாக எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்.

இளைய அப்துல்லாஹ்