பௌதீக உலகின் இயக்க போக்கில் மனித இனம் முதன்மை பெறுகிறது. இந்த முதன்மை தன்மை அதன் வளர்ச்சி நிலையோடு வெளிப்படுகிறது. நாகரீகம் என்ற சொல்லாடல் இந்த வெளிப்பாட்டோடு இணைந்த ஒன்றே. மனிதர்கள் தேவை என்பதற்கான பிரக்ஞையை அடையும் போது தேர்வு என்ற கருத்துரு உருவாகிறது. ஆதி மனிதனின் இந்த தேர்வு என்ற கருத்துருவின் காலம் சார்ந்த தர்க்க ரீதியான தொடர்ச்சியே நாகரீகம். நாகரீகம் என்பது வரலாற்றுக்கு முந்திய தொன்ம வகையில் வருகிறது. தொன்மம் மற்றும் வரலாறு ஆகிய இரண்டின் அடிப்படையிலும் செமிடிக் நாகரீகமே முந்திய நிலையில் இருக்கிறது. செமிடிக் என்ற சொல் ஆப்ரோ-ஆசியா மொழிக்குடும்பத்தில் இருந்து வந்தது. அம்காரிக், அராமிக், அக்கடிக், அராபிக், ஹிப்ரு, பொனிசியன் போன்றவை இந்த குடும்பத்தில் வரக்கூடியவை. இந்த மொழித்தொகுதியே செமிட்டிக் மக்கள். செமிடிக் என்ற சொல் நோவாவின் மகனான செம் என்பவரின் பெயரிலிருந்து தொடர்ந்து வந்தது என்றும், கிரேக்க மொழிக்கூறின் திரிந்த வடிவம் என்றும் இரு வேறுபட்ட கருத்துக்கள் வரலாற்று உலகில் நிலவுகின்றன. உலகின் மனித இருப்பு ஒன்றுக்கு தொடக்கமிட்டவர்கள் அவர்கள். செமிடிக் மக்கள் மெசபடோமியா பள்ளத்தாக்கோடு இயைந்தவர்கள் என்பதை முந்தைய வரலாற்றுப்பதிவுகள் வெளிப்படுத்துகின்றன. இது கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முந்தைய மூன்று நூற்றாண்டுகள் தொடர்ச்சியை கொண்டது. இதன் அசைவியக்கம் அவ்வப்போது மாற்றங்களுக்குள்ளாகி இருக்கிறது. மேலும் செமிடிக் நாகரீகத்தின் ஒரு பகுதியில் மெசபடோமியா நாகரீகமே அறிவார்ந்த சமூகத்தின் முன்பு நிற்கிறது. 19 ஆம் நூற்றாண்டின் பாதி காலகட்டம் வரை இதைப் பற்றிய தகவல்கள் ஆய்வாளர்களுக்கு மிகக்குறைவாகவே கிடைத்தன. அதன் நீள் எல்லை மிகக்குறைவாக இருந்தது. அவர்கள் பைபிள் மற்றும் பயணக்குறிப்பாளர்களிடமிருந்து தகவல்களை எடுத்துக் கொண்டனர்.கி.பி.1850 ல் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியே முதன் முதலாக செமிட்டிக் நாகரீகம் குறித்த தகவல்களை உலகின் கவனத்திற்கு கொண்டு வந்தது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட கோயில்கள், சிற்பங்கள், சிதிலமடைந்த கட்டடங்கள், அரண்மனைகள், பிற இடங்கள் போன்றவை மெசபடோமியா என்ற நாகரீகத்தின் காலத்தை ஒரே நேரத்தில் பின்னால் நகர்த்தியது.
வரலாற்றில் எல்லா பெரிய நாகரீகங்களும் அலைந்து திரிதலை அடிப்படையாக கொண்டவை என்பார் பிரெஞ்சு சிந்தனையாளரான ழீன் பார்னர். இதே கோட்பாடு மெசபடோமியா நாகரீகத்தோடு சரியாகவே பொருந்துகிறது. அது ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கு இணையான நாகரீகத்துடன் அலைந்து திரிந்திருக்கிறது. சுமேரிய, பாபிலோனிய, அசிரிய போன்ற இணைகளுடன் மனித வரலாற்றில் பெரும் சமூகத்தை கட்டியெழுப்பியது. மேலும் செமிடிக் நாகரீகத்தின் பகுதியான எகிப்து முதல் நாகரீகமாக அறியப்படுகிறது. பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியரான ஹெரொடட்டஸ் எகிப்தை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். " எகிப்தை பொறுத்தவரை நான் இப்போது விரிவாக பேச வேண்டும். எங்கும் கண்டிராத அதிசய பொருட்கள் மற்றும் பூமியில் எங்கும் இல்லாத வெளிப்படுத்த முடியாத மிகப்பெரும் வேலைப்பாடுகள் நிரம்பியதாக அது இருக்கிறது." பண்டைய நாகரீகம் என்ற கருத்தாக்கம் வித்தியாச வகைப்பட்ட சமூகத்தை உடையதாக, மனித வரலாற்றின் பரிணாம பார்வையை வெளிப்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. சமூக பரிணாம வாதம் தொன்மம் என்ற வகையில் கடந்த நூற்றாண்டின் தசாப்தங்களில் மேற்கத்திய கல்வியாளர்களால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தது. இது மேற்கத்திய நாடுகளில் காலனிய சுரண்டலை நியாயப்படுத்தும் ஒன்றாக மாறியது. மத்திய கிழக்கு- மேற்கு முரண்பாட்டின் தொடக்கம் இந்த தாக்குதல்களின் பிரதிபலிப்பே. மேலும் பண்டைய நாகரீகங்கள் வர்க்க அடிப்படையிலான சமூகத்தை அடிப்படையாக கொண்டவை.அவை உயர்தரத்திலான சமூக, பொருளாதார சமத்துவமின்மையை பிரதிபலிக்கின்றன. அதிகாரம் என்பது விவசாய, அல்லது வேட்டைத்தொழிலின் உபரியை கட்டுப்படுத்துவதிலும், உருவாக்குவதிலும் இருந்தது. இந்த சமூகங்களிடையே தொழில்நுட்ப வளர்ச்சி மிகக்குறைவாகவே இருந்தது. மனித உழைப்பு கூட சில சமயங்களில் சிக்கலாக இருந்தது. இந்த சமூகங்கள் அவற்றிற்கிடையே படிநிலைகளையும், உள்விதிகளையும் கொண்டிருந்தன. மேலும் அவை சுரண்டலின் அப்பட்டமான வடிவமாக விளங்கின.அரசன் மற்றும் சிறிய ஆளும் வர்க்கம் போன்றவை அடித்தள வர்க்கத்தினரிடமிருந்து விவசாய உபரியை உறிஞ்சி கொண்டன. இது இன்னொரு நிலைக்கு நீட்சி அடைந்து எஜமான் -அடிமை கட்டமைப்பை ஏற்படுத்தியது. மேலும் கடந்த கால நாகரீகம் என்பதை எழுத்தறிவோடு இணைந்த ஒன்றாக மானுடவியலாளர்கள் காண்கிறார்கள். இந்த வாதத்திற்கு உதாரணமாக அக்காலத்தில் உருவான நகர்புற அரசு என்னும் கருத்தை அவர்கள் முன்வைக்கிறார்கள். நகர்புறத்தில் உருவான மக்கட் தொகுதி மொழியறிவுமிக்கதாக, எழுத்துக்களை வரையும் திறன்மிக்கதாக விளங்கியது. செமிடிக் நாகரீகத்தின் பகுதியான எகிப்து, மெசபடோமியா ஆகியவை கி.மு பத்தாம் நூற்றாண்டு காலத்தில் வளர்ச்சியடைந்த எழுத்து முறையை கொண்டிருந்தன. அவை ஒலியியல், தொடரியல் போன்றவற்றையும் உள்ளடக்கி இருந்தன. மேலும் நகர்புற அரசுகள் மற்ற நகர்புற அரசுகளுடன் போட்டியிட்டுக் கொண்டன. எகிப்து, ஹிப்ரு, மெசபடோமியா ஆகியவை நகர்புறங்களையும், அகால பாலைவனங்களை உடைய கிராமப்புறங்களையும் கொண்டிருந்தன. மேலும் செமிடிக் நகர்புறங்கள் கைவினை பொருட்கள் உற்பத்தியை ஊக்கப்படுத்தின. அவை தனக்காக மட்டுமின்றி மற்ற சமூகங்களின் தேவைக்கும் ஏற்றவாறு உற்பத்தி செய்யப்பட்டன. இவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் கிராமங்கள், உற்பத்தி நகரம், அண்டை நகரம் ஆகியவற்றிற்கு விநியோகம் செய்யப்பட்டன. பண அலகு என்பது அப்போது வழக்கத்தில் இல்லை. பண்ட மாற்று முறைப்படி பொருட்கள் பரிமாறப்பட்டன. இந்த முறை குறிப்பிட்ட இடங்களில் சந்தை முறையின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. எகிப்து, சிரியா, மெசபடோமியா (ஈராக்) ஆகியவை இவ்வாறான சந்தை பரிமாற்றத்திற்கு உட்பட்டன. அவை அக்காலத்தில் சாத்தியமான பொருளாதார அலகுகளை உருவாக்கக்கூடியவையாக இருந்தன. செமிட்டிக் நாகரீகத்தின் இந்த நடவடிக்கைகளில் பெண்களின் பங்கு முக்கியமானது. அவர்கள் எகிப்திலும், சிரியாவிலும், அரேபிய தீபகற்பத்திலும் பொருளாதார அடிப்படையில் வலுவான சக்தியாக விளங்கினார்கள். உணவு சாரா உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடதக்கதாக இருந்தது. மேலும் அக்காலகட்டத்தில் நிலவிய சந்தை முறையின் எச்சங்கள் மெசபடோமியா நாகரீகம் குறித்து அகழ்வாய்ந்த ஆய்வாளர்களுக்கு காண கிடைத்தன. அகழ்வாய்வு மூலம் கிடைக்கும் தரவுகள் நாகரீகம், அக்கால கலாசார நடைமுறை ஆகியவை குறித்த விரிவான முன்னோட்டத்திற்கு உதவுகிறது.
செமிட்டிக் நாகரீகத்தின் உச்ச வெளி என்பது கிராமபுறங்களை அடிப்படையாக கொண்ட பதூயீன் என்ற நாடோடி மக்கட்தொகுதி. இவர்கள் எகிப்து, சிரியா, ஈராக், அரேபிய தீபகற்பம் ஆகிய இடங்களில் பரந்து விரிந்திருக்கிறார்கள். நாடோடிகளில் மேய்ச்சல் தொழில் செய்பவர்கள், விவசாயம் செய்பவர்கள், வேட்டையாடுபவர்கள் என்ற மூன்று வகையினர் இருக்கிறார்கள். இவர்களில் பதூயீன்கள் பெரும்பாலும் மேய்ச்சல் தொழில் உடையவர்களாக இருந்தார்கள். கானான்கள், சமாரியன்கள் இவ்வகைக்குட்பட்டவர்கள். இவர்களின் மேய்ச்சல் நடவடிக்கைகள் கால்நடைகளின் வகைகளை வைத்து ஒட்டகம் மேய்ப்பவர், செம்மறி ஆடுகளை மேய்ப்பவர் மற்றும் ஆடுகளை மேய்ப்பவர் என்றவாறாக பிரிக்கப்பட்டன. முதலாம் வகையினர் சிரியா, சகரா மற்றும் அரேபிய பாலைவனங்களில் இருந்தார்கள். இரண்டாம் வகையினர் ஜோர்டான், சிரியா, ஈராக் ஆகிய இடங்களில் இருந்தார்கள்.மூன்றாம் வகையினர் தெற்கு அரேபியா மற்றும் சூடான் ஆகிய இடங்களில் இருந்தார்கள். இவர்களில் ஒட்டகம் மேய்ப்பவர் உயர்ந்த இடத்தில் இருந்தார். அரேபிய தீபகற்பத்தை சார்ந்த பதூயீன்களுக்கு வரலாற்றில் தனித்த இடம் பதிந்தது இந்த அடிப்படையில் தான்.அரேபிய தீபகற்பத்தை சார்ந்த பதூயீன்களில் ஒரு பகுதியினர் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டார்கள்.பேரீத்த பழ விவசாயம், பார்லி போன்ற விவசாய முறைகள் நடைமுறையில் இருந்தன. இவர்கள் விவசாயம் மற்றும் உடல் உழைப்பாளர்களாக இருந்த போதும் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் முன்பு செயலற்று முடங்கி போனார்கள். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் இவர்களின் மேய்ச்சல் நிலங்கள் அரசுகளின் கட்டுப்பாட்டில் வந்தன. 1950 ல் சவூதி அரேபியா மற்றும் ஜோர்டான் ஆகியவை பதூயீன்களின் நிலத்தை தேசியமயமாக்கின. ஜோர்டான் மேய்ச்சல் தொழிலுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் பதூயீன்களுக்கும், அரசுகளுக்கும் மோதல் ஏற்பட்டன. இது விவசாய நிலத்தில் பயிரிட்டவர்கள் வரை நீண்டது. பதூயீன்களின் சமூகம் ஆணாதிக்கத்தை அடிப்படையாக கொண்ட தந்தைவழி சமூகமாகும். அகமண முறை, பலதாரமணம் அவர்களிடையே வழக்கில் இருந்தன. இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து தங்களுக்குள் ஒரு தலைவனை தேர்ந்தெடுத்து கொண்டார்கள். அவர்களின் குடும்ப அலகு நிரந்தர நிலமக்களிடமிருந்து வேறுபட்டு இருந்தது. சராசரியான குடும்ப வாழ்க்கை முறையில் இருந்து மிக வித்தியாசப்பட்ட ஒன்றாக, எவ்வித நிறுவனத்தன்மையற்றதாக பதூயீன் வாழ்வியல் அமைப்பு முறை இருந்தது. இனக்குழுக்களாக தொடங்கிய இவர்களின் வாழ்முறை காலத்தின் நகர்வில் இனத்தோற்றத்திற்கு வழி வகுத்தது. இந்தியாவின் சாதிய சமூக அமைப்பை குறித்து ஆராய்ந்த டி.டி.கோசாம்பி சாதிய சமூகம் என்பது இனக்குழு சமூகத்தின் (Tribal society) பரிணாம வளர்ச்சி முறையே என்றார். இனக்குழுக்களின் நாடோடி குணாதிசயம் அவர்களை நிலத்தோடு நிரந்தரப்படுத்தும் போது குறிப்பிட்ட சமூக அமைப்பை ஏற்படுத்துகிறது. இதே விஷயம் தற்போதைய அரபு சமூகத்திற்கும் பொருந்துகிறது. அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு அரசுகளின் கையில் வந்த பிறகு அவர்களின் சமூக அமைப்பு குலைக்கப்பட்டிருக்கிறது. சிரியா, லெபனான், ஈராக், ஜோர்டான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் பதூயீன் நாடோடிகளின் நடப்பு வாழ்நிலை இதை பிரதிபலிக்கிறது.
செமிடிக் நாகரீகம் பரிணாமமடைந்து மதங்களாக ஒழுங்கமைத்த போது மேற்கத்திய நாகரீகத்தோடு உராய்வு ஏற்பட்டது. குறிப்பாக யூதத்துக்கும், கிறிஸ்தவத்துக்குமான உராய்வை குறிப்பிடலாம். முதன் முதலான உராய்வு என்பது ரோமானியர்கள் கி.பி 70ல் ஜெருசலத்தை கைப்பற்றி அங்குள்ள புனித ஆலயத்தை இடித்ததில் இருந்து தொடங்குகிறது. ஏராளமான யூதர்கள் கொல்லப்பட்டனர்.இதனை ரோமானியர்கள் யூதர்களுக்கான புனித தண்டனையாக குறிப்பிட்டனர். இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்கு காரணமான யூதர்களின் மேல் எதிர்செயல்பாடாக இது பார்க்கப்பட்டது. இதனின் காலந்தொடர்ந்த நீட்சியே 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட யூத வெறுப்பு (Anti-semitism). இதை குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட சொல்லான anti-semitism முதன் முதலாக 1879 ல் ஜெர்மானிய இனவாதியும், இதழியலாளருமான வில்லியம் மாரால் முன்வைக்கப்பட்டது. இதற்காகவே அவர் யூதர்களின் மேல் ஜெர்மானியர்களின் வெற்றி (The victory of germandom over jewry) என்ற நூலை வெளியிட்டார். யூதர்கள் மேற்கின் முதல் அதிகார மையம் என்றும், வேர்களற்ற சுதந்திரர்களாக அலைந்து திரிந்து ஜெர்மனியை யூத மயமாக்க முயல்கிறார்கள் என்றும் மார் குறிப்பிட்டார். இதன் பின்னர் ஜெர்மனியில் அவர் யூத எதிர்ப்பு அமைப்பு ஒன்றை தொடங்கினர். இதன் தொடர்ச்சியே இருபதாம் நூற்றாண்டில் ஹிட்லரின் இன அழிப்பு கோட்பாடு. இவ்வாறான காலநிலைகளால் செமிடிக் என்பது நவீன கால ஐரோப்பாவில் யூதர்களை குறிக்கும் சொல்லாக மாறிப்போனது. உலக நாகரீகத்தின் முதன்மையாக, ஆசிய-ஆப்ரிக்க மொழிக்குடும்பத்தின் மிகப்பெரும் தொகுதியாக இருக்கும் செமிடிக் நாகரீகம் உலகின் பெரு மதங்களை உருவாக்கிய உற்பத்தி கூடமுமாகும். இங்கிருந்து தான் அவை கிளைத்து பிற பிரதேசங்களில் வியாபித்தன. வரலாற்று பாரம்பரியமும், நெடிய மரபையும் உள்ளடக்கிய எகிப்தும், பசுமை வளத்தை கொட்டி கொழித்த யூப்ரடீஸ் , டைக்ரிஸ் , மற்றும் நைல் நதிகளும் , அசிரிய, சுமேரிய, மெசபடோமிய பிரதேசங்களும் செமிடிக் நாகரீகம் உலகிற்கு தந்த பெரும் கொடை. இதன் தொடர்ச்சியில் 21 ஆம் நூற்றாண்டு என்பது நாகரீகங்களின் மோதலாகவே இருக்கும் என்ற சாமுவேல் கான்டிங்டனின் வாதம் 19 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய யூத வெறுப்பு அரசியலின் இன்றைய திரிக்கப்பட்ட வடிவம். செமிடிக் என்ற சொல் வெளிப்படுத்தும் பிரதியின் எல்லையை நாம் இந்த நூற்றாண்டின் இயக்க போக்கில் அறிந்து கொள்ள முடியும். 9/11 நிகழ்வு நம்மை அதை நோக்கி நகர்த்தி கொண்டிருக்கிறது.