காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Monday, June 8, 2009

அதிகாரம், அரசியல் மற்றும் கலாசாரம்- எட்வர்ட் செய்த் அறிவுலகில் ஒரு நெடும் பயணம்




எட்வர்ட் செய்த் மரணமடைந்து ஆறு வருடங்கள் கடந்து விட்டன. தமிழில் எட்வர்ட் செய்த் பற்றி பரவலான எழுத்தோட்டங்கள் இருக்கின்றன. இவரை பற்றிய எழுத்தோட்டங்கள் கோலப்புள்ளிகள் மாதிரி வெளிவந்திருக்கின்றன. கீழைச்சிந்தனை மரபில் எட்வர்ட் இன்றும் குவியமானவராக இருக்கிறார். காலனியத்திற்கு பிந்தைய கட்டத்தில் மேற்கின் அறிவுலகில் ஆதிக்கம் செலுத்திய கீழைத்தேய வாதி. பௌதீக உலகின் அறிவுத்தளம் என்பது மேற்காக புனையப்பட்ட தருணத்தில் தன் Orientalism நூல் மூலம் அதை தகர்த்தவர். உலகின் இரு திசைகளும் அறிவு தளத்தை நிர்மாணிப்பதில் இணையான பலம் உடையவை என்பதை வலுவாக வெளிப்படுத்தியவர். தற்போது அறிவுலகில் விவாதிக்கப்படும் பின்காலனிய சிந்தனைதளத்தின் பிதாமகர் இவரே. எட்வர்ட் செய்த்தின் இளமைக்காலம் பாலஸ்தீன் பகுதியில் ஆரம்பமானது.1935 ல் ஜெருசலமில் ஒரு நடுத்தர குடும்பத்தில் செய்த் பிறந்தார். 1948 ல் இஸ்ரேல் உருவாக்கத்திற்கு பிறகு பாலஸ்தீனில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இவர் குடும்பம் எகிப்துக்கு புலம்பெயர்ந்தது. அங்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த செய்த் பின்னர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து மேற்படிப்பை தொடர்ந்தார். பட்ட மேற்படிப்பு மற்றும் ஆய்வு பட்டங்களை பெற்ற செய்த் கொலம்பியா பல்கலைகழகத்தில் ஆங்கில பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தார். எட்வர்ட் செய்த் மேற்கத்திய வாழ்க்கை மூலம் தன் மொழிப்புலத்தை மிக வலுவாக்கிக்கொண்டார். ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இருமொழிகளில் வலுவான அடித்தளம் அவருக்கிருந்தது. மேலும் தாய்மொழியான அரபி அவரை பின்தொடர்ந்து வந்தது. மொழியின் சாத்தியபாடுகள் அவரை முன்னோக்கி இழுத்துச் சென்றன. இவரின் முதல் நூல் 1966 ல் Joseph conrad and fiction of autobiography என்ற பெயரில் வெளிவந்தது. ஜோசப் கன்ராட் படைப்புகள் பற்றிய மதிப்பீடாகவும், விமர்சன கோட்பாடாகவும் இருந்தது. மேலும் நவீனத்துவம் , சிந்தனை மரபில் அது ஏற்படுத்திய தாக்கம் குறித்த பதிவாகவும் இருந்தது.
எட்வர்ட் செய்த்தை மேற்கில் அதீதமாக கவனப்படுத்தியது அவரின் ஓரியண்டலிசம் நூலாகும். பின் காலனிய சிந்தனையின் மூலநூலாக அறிவு ஜீவிகளால் அளவிடப்படும் இது மேற்கு பற்றிய பெரும் பிம்பத்தை தகர்த்தது. ஐரோப்பா காலம் காலமாக கிழக்கத்திய பிராந்தியத்தை மதிப்பிட்ட முறையை செய்த் விமர்சித்தார். குறிப்பாக மேற்கு அரபுலகை அறிவு ரீதியாக அணுகிய விதம் வரலாற்று ரீதியாக மறு ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என்றார். அவரின் கருத்துப்படி ஓரியண்டலிசம் என்பது கிழக்கு (Oriental)மற்றும் மேற்கு (Occidental)ஆகியவற்றின் இயற்கை தத்துவம் மற்றும் அறிவுதோற்றவியல் அடிப்படையிலான சிந்தனா வகைமையே. அது ஆசிய கண்டத்தின் அல்லது கிழக்கின் புவியியல் , அறவியல் மற்றும் கலாசாரத்தை குறிக்கும்.இரு நிலப்பிளவுகளின் எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள், கவிஞர்கள், வரலாற்றாளர்கள், ஆட்சியாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் இந்த வித்தியாசத்தை வடிவமைக்கிறார்கள். நெப்போலியன் எகிப்தை கைப்பற்றியதை தொடர்ந்து ஓரியண்டலின் எதார்த்த வடிவம் தொடங்குகிறது. 19 ஆம் நூற்றாண்டில் எகிப்தை கைப்பற்றிய நெப்போலியன் படிப்படியாக அல்ஜீரியா, மொராக்கோ போன்ற நாடுகளை கைப்பற்றினார். இதன் தொடர்ச்சியில் மத்திய கிழக்கின் இந்த பிரதேசங்களில் மேற்கின் அரசியல் மற்றும் கலாசார ரீதியான மேலாதிக்கம் நிறுவப்பட்டது. தொடர்ந்து இந்த பிராந்தியங்களில் பிரிட்டனின் வருகையும் இந்த ஆதிக்கத்தை தொடர செய்தன. சிவில் மற்றும் அரசியல் சமூகம் சில வித்தியாசங்களை கொண்டிருக்கிறது. சிவில் சமூகம் பள்ளி, குடும்பம், மத நிறுவனங்கள் போன்ற அலகுகளை கொண்டிருக்கிறது. ஆனால் அரசியல் சமூகம் அரசு, ராணுவம், காவல்துறை, அதிகார வர்க்கம் போன்ற அலகுகளை கொண்டிருக்கிறது. இதில் அரசியல் சமூகத்தின் மீது நேரடியான ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால் கலாசாரம் மறைமுகமாக மற்றொன்றின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. கலாசாரத்தின் சில வடிவங்கள் சில தருணங்களில் கருத்தியல் ரீதியாகவோ, நடைமுறை ரீதியாகவோ மற்றொரு சிவில் சமூகம் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. இதை கிராம்சி சமூக மேலாண்மை (Hegemony) என்றார். கிராம்சி கூறிய இந்த மேலாண்மையே ஓரியண்டல் சொல்லாடல் மீதும் படிந்திருக்கிறது. இந்த இடத்தில் மேற்கத்திய உலகமானது ஆதிக்க கருவியாக செயல்படுகிறது. இங்கு கருத்தியல் உற்பத்தி கருவிகளின் பங்கு முக்கியமானது. ஒரு கலாசாரத்தின் அல்லது நாகரீகத்தின் கருத்தை உருவாக்கும் கருவியானது அது உருவாக்கும் பிரதியை அசலாக்க வேண்டும். அந்த அசல் முறைப்படியானதாக இருக்க வேண்டும். இதை அசலானது அல்லது போலியானது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மேற்கு இருக்கிறது என்கிறார் செய்த். கீழை சமூகத்தின் தொன்மங்கள், வரலாறுகள், நாகரீகங்கள், புராணங்கள், புனித பிரதிகள், ஆவணங்கள் போன்றவற்றை போலியானவையாக மேற்கு பார்த்து வந்திருக்கிறது. உலக நாகரீகத்தை கண்டறிந்தது மற்றும் அதை வியாபித்தது மேற்கு தான் என்பதான புனைவை உருவாக்கி இருக்கிறது. கீழை சமூகத்தின் குறிப்பாக மத்தியகிழக்கு அரபு சமூகத்தின் வரலாற்று ஆவணங்கள் எல்லாம் பொருட்படுத்த தகாதவை என்று மேற்கு காலம் காலமாக கருதி வந்திருக்கிறது. இதன் மூலம் மேற்கின் பிரதியாதிக்கம் தெளிவாக வெளிப்படுகிறது. மேலும் கீழைத்தேய கோட்பாடு அதன் எதார்த்த புறநிலையையை விட அதிகமும் கலாசார நடைமுறைகள் மீதே கவனம் செலுத்துகிறது. கீழை சமூகங்களில் குடும்பம், மதம் போன்ற முதல் நிலை மையங்கள் அதிக கட்டுப்பாட்டுடன் விளங்குவதை இதனடிப்படையில் புரிந்து கொள்ள முடியும். இவை இரண்டும் குறிப்பிட்ட கட்டத்தில் அரசியல்மயமாகும் என்றார் எட்வர்ட் செய்த். அதற்கு உதாரணமாக மத்தியகிழக்கு அரபு மற்றும் முஸ்லிம் சமூகத்தை எடுத்து கொண்டார். இவை சில கருதுகோள்களை கொண்டு ஸ்திரமற்றதாக இருக்கின்றன. 1.மேற்கின் இஸ்லாம் மற்றும் அரபுலகம் பற்றிய அவநம்பிக்கை. 2. அரபுகளுக்கும் இஸ்ரேலிய சியோனிஸ்ட்களுக்குமான போராட்டம். இது அமெரிக்க யூதர்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கம். 3. அரபுகள் அல்லது இஸ்லாம் குறித்த உணர்ச்சிபூர்வமற்ற முறையிலோ அல்லது அடையாள பூர்வமாகவோ விவாதிக்க மேற்கில் எந்த கலாசார நிலைமையும் இல்லாதது. மேலும் மத்திய கிழக்கு இன்று மிகப்பெரும் அதிகார அரசியல், எண்ணெய் பொருளாதாரம், இரட்டை அதிகார மனத்தை கொண்ட விடுதலை வேட்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கிறது. இவை அனைத்துமே மேற்கின் சாதகமான விஷயமாக மாறி இருக்கின்றன. இதற்கான மாற்றுகளை தேடுவதற்கான உபாயங்களை எட்வர்ட் செய்த் கண்டறிந்தார்.
எட்வர்ட் செய்த்தின் எழுத்து, சிந்தனை, அறிவுலக செயல்பாடு ஆகியவற்றில் முக்கிய கோடிடும் பகுதியாக பாலஸ்தீன் பிரச்சினை இருந்தது. இஸ்ரேல்-பாலஸ்தீன் விவகாரத்தில் செய்த்தின் நிலைபாடு தெளிவாக இருந்தது. அவர் சுதந்திர இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் அமைவதில் உடன்பாடாக இருந்தார். இனரீதியாக இணக்கமான பிரேதசமாக இரண்டும் அமைய வேண்டும் என்ற கனவே கடைசி வரை அவரிடம் இருந்தது. இந்த பிரதேசத்தை பொறுத்தவரை சுயநிர்ணய உரிமை என்பது பிளவுபடாதது. நெகிழ்வுதன்மை கொண்டது. பரஸ்பர புரிதல் அடிப்படையில் வரலாற்று ரீதியாக இரு யூத, அரபுகளின் எல்லை வரையறுக்கப்பட வேண்டும் என்றார். பாலஸ்தீன் தேசிய கவுன்சில் அதன் பிறகு பாலஸ்தீன் விடுதலை இயக்கம் போன்றவற்றில் இருந்த எட்வர்ட் செய்த் 1993 நார்வே தலைநகர் ஒஸ்லோவில் உருவான இஸ்ரேல் பாலஸ்தீன் ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்தார். அது பாலஸ்தீன் தன் சுயத்தை மேலும் இழக்க செய்வதற்கான அறிகுறி என்றார். காசா மற்றும் மேற்குகரை பகுதியில் இருந்து இஸ்ரேலிய படைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. ஆனால் அது கடைசிவரை நிறைவேற்றப்படவில்லை. மாறாக இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையேயான மோதலுக்கு வழிவகுத்தது. மேற்கத்திய வாழ்க்கையின் காலங்கள் முழுவதையும் பாலஸ்தீன் துயரம் குறித்த படிப்புக்கும், போராட்டத்துக்குமாக செய்த் கடந்து சென்றார். ஐரோப்பிய சூழலில் பல்வேறு அறிவுஜீவிகளிடம் இதுகுறித்த அவரின் வாதம் மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. அது இந்த விவகாரம் பற்றிய சர்வதேச அவதானத்துக்கு வழி ஏற்படுத்தியது. குறிப்பாக சார்த்தர், லியோதர்த், அலன்பதூ போன்றவர்களிடம் அதிகமாக விவாதித்தார். இதற்காகவே Question of palestine என்ற நூல் அவரிடம் இருந்து வெளிவந்தது. பாலஸ்தீன் குறித்த மிக விரிந்த வரலாற்று பார்வையையும், தேசிய இனம் பற்றிய விஞ்ஞான பூர்வ கண்ணோட்டத்தையும் உள்ளடக்கியதாக இந்நூல் இருந்தது. இஸ்ரேலுக்கு தொடர்ந்து இராணுவ மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை வழங்கி வரும் அமெரிக்காவின் நடவடிக்கையையும் செய்த் விமர்சித்தார். அதன் பின்னால் இருக்கும் அமெரிக்க அதிகாரவர்க்க நலனையும் வெளிக்கொணர்ந்தார். அமெரிக்க யூதர்களின் பணம் மற்றும் உடல்ரீதியான ஒத்தாசைகள் அமெரிக்க அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் தேவைப்படுகிறது. அவர்களின் பணமே அங்கு தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளின் முக்கிய பலமாக இருக்கிறது. இவர்களின் மூளைகள் தேர்தல் முடிவில் முக்கிய தளமாக செயல்படுகின்றன. இதனின் தூர பிரதிபலிப்பே அமெரிக்காவின் இஸ்ரேலிய ஆதரவு நிலைபாடு. ஒருபக்கம் எண்ணெய் பொருளாதார பலத்திற்காக அரபு நாடுகள் மீதான அதன் நேசப்பார்வை, மறுபக்கம் இஸ்ரேலுக்கு சகல அம்சங்களிலான உதவி இவை இரண்டும் அதன் இரட்டை சர்வாதிகார தன்மையை வெளிப்படுத்த போதுமானவை. தான் அமெரிக்க குடியுரிமையை பெற்றிருந்த போதும் பல்வேறு விஷயங்களில் செய்த் அமெரிக்க எதிர்ப்பு நிலைபாட்டை மேற்கொண்டார். செய்த்தின் பாலஸ்தீன் ஆதரவு நிலைபாட்டை அமெரிக்க வலதுசாரி இதழ் ஒன்று விமர்சித்தது. அவரை அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த அறிவார்ந்த அகதி என்று கிண்டலடித்தது. 1977 ல் சில பாலஸ்தீனிய தலைவர்கள் பாலஸ்தீன் நிலபரப்பு மீதான இஸ்ரேலின் உரிமையை ஒத்துக்கொண்டார்கள். இதை பற்றி செய்த் இவ்வாறு குறிப்பிட்டார்." நான் அதை மறுக்கவில்லை. ஆனால் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களின் நிலபரப்பு மீதான இறைமையை அங்கீகரிக்க வேண்டும். இஸ்ரேல் -பாலஸ்தீன் விவகாரத்தை பொறுத்தவரை செய்த் மற்ற எல்லா சிந்தனையாளர்களை விட சிறந்த காலனிய எதிர்ப்பு சிந்தனையாளராக இருந்தார். இஸ்ரேல் மற்றும் யூத விவகாரத்தின் வரலாற்று ரீதியான யதார்த்தத்தையும், ஐரோப்பாவில் ஏற்பட்ட யூத எதிர்ப்பு சிந்தனையின் தோற்றத்தை பற்றியும் விரிவாக ஆராய்ந்தார். ஒரு தேர்ந்த தத்துவார்த்த நிலைபாடு அவரிடமிருந்தது.பின் காலனியம் குறித்த எட்வர்ட் செய்த் சிந்தனைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. காலனியம் உலக வரலாற்றில், குறிப்பாக கிழக்கில் ஏற்படுத்திய பாதிப்புகளை விரிவாக ஆராய்ந்தார். 1815 க்கும் 1918 க்கும் இடைபட்ட கட்டத்தில் ஐரோப்பாவின் பிரதேச ஆதிக்கம் மொத்த உலக பரப்பில் 40 சதவீதத்தில் இருந்து 85 சதவீதமாக அதிகரித்தது. இங்கு மானுட மையவாதம் (Anthropocentrism)என்பது ஐரோப்பிய மையவாதமாக (Europocentrism)மாறிபோனது. இன்று பிரதேச கட்டுப்பாடு பொருளாதார மற்றும் சமூக கட்டுப்பாடாக மாறிவிட்டது. கீழை சமூகத்தின் நுண்தளங்களில் மேற்கின் இந்த தாக்கம் அங்கு நிலையான சமூக பொருண்மையை ஏற்படுத்தி விட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதி கட்டங்களில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகள் மத்திய கிழக்கில் பரவலாக ஆதிக்கம் செலுத்தின. இவை 14 ஆம் நூற்றாண்டு வரை கிறிஸ்தவத்தோடு அடையாளப்படுத்தப்பட்டன. இதற்கான எதிர்வினை இருபதாம் நூற்றாண்டில் மத்திய கிழக்கில் ஏற்பட்ட காலனிய விடுதலை போராட்டத்தின் வடிவில் வெளிப்பட்டது. பல தேசிய தலைவர்கள் வட்டார அரபு மொழியை தங்கள் விடுதலை பிரசார உணர்வு ஊடகமாக பயன்படுத்தினார்கள். குறிப்பாக எகிப்தின் அன்வர் சாதத், சிரியாவின் மிஷல் அப்லாக், சாதிக் ஏ ஆஸம் போன்றவர்கள் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிரான சொல்லாடல்களை அரபு மொழியில் உருவாக்கினர். வெகுஜன உளவியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இது மேற்கின் கலாசார ஊடுபாவலுக்கு எதிர் செயல்பாடாக அமைந்தது. இவ்வாறாக கிழக்கின் மொழி என்பது கடந்த நூற்றாண்டின் இடைக்கட்டத்தில் காலனிய விடுதலை கருவியாக செயல்பட்டது.


எட்வர்ட் செய்த் இயற்கையை மீறிய சக்திகளை விட மானுடத்துவத்தின் மீது அதிகமும் நம்பிக்கை வைத்திருந்தார். மனித சமூகத்தின் வரலாறு மற்றும் அதன் ஆக்கங்கள் மீது செய்த்திற்கு அதிக ஆர்வம் இருந்தது. இதன் தொடர்ச்சியில் 18 ஆம் நூற்றாண்டு இத்தாலிய தத்துவவாதியான விக்கோவின் கோட்பாடுகள் செய்த்தை அதிகம் ஈர்த்தன. விக்கோ புனிதங்களின் செயல்பாட்டு தளத்தை மனிதர்களின் செயல்பாட்டு தளத்தில் இருந்து பிரித்து பார்த்தார். மேலும் மானுட செயல்பாடுகள் சார்ந்த பகுப்பாய்வை தன் கோட்பாடுகளில் வெளிப்படுத்தினார். எட்வர்ட் செய்த் யூதர்கள் அல்லாத நாடற்றவர்கள், இனக்குழுக்கள் ஆகியோரின் வரலாற்றை அறிவதிலும், அதை அவதானிப்பதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டார். மேலும் காலனிய மேலாண்மை (Hegemony)என்பது வெறுமனே அரசியல் மற்றும் இராணுவ ரீதியான ஒன்றல்ல. மாறாக கலாசார பொருண்மையே. தந்திரபூர்வமாகவோ அல்லது அதந்திரபூர்வமாகவோ ஐரோப்பிய கலாசாரம் இனவாத கோடுகளாக காலனிய ஆட்சியாளர்களால் முன்னிறுத்தப்பட்டுள்ளதாக செய்த் குறிப்பிட்டார். மறுமலர்ச்சி கால மனித மதிப்பீடுகள் எவ்விதத்தில் இருந்தாலும் அவை காலனிய சொல்லாடல்களின் பிரதியாக்கமே என்றார் செய்த். மேலும் அவரின் இஸ்லாம் குறித்த ஆய்வுகள் முக்கியமானவை. மேற்கு இஸ்லாம் பற்றி வரலாற்று ரீதியாக புனைந்து வைத்திருக்கும் கருதுகோள்கள் மீது செய்த் சந்தேகம் கொண்டிருந்தார். அதற்காவே 1981 ல் Covering Islam என்ற நூலை எழுதினார். இது முழுமையாக அறிதல், பாதுகாத்தல் என்ற இரு அர்த்த பிரதிகளை உற்பத்தி செய்தது. இதில் இடைக்கால ஐரோப்பிய வரலாறு எவ்வாறு இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்திற்கு இடையேயான வெறுப்புணர்ச்சியின் நகலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை பற்றி செய்த் குறிப்பிட்டார். மேலும் கிறிஸ்தவ மற்றும் யூத அடிப்படைவாதிகள் இஸ்லாம் குறித்த பக்க சார்பான பார்வையை முன்னோக்குவது குறித்தும் அதில் கடுமையாக விமர்சித்தார். அமெரிக்க பத்திரிகையாளரான பிரான்ஸ் பிக்ஜெரால்ட் இந்நூலை ஒவ்வொரு மேற்கத்திய பத்திரிகையாளரும், அதன் ஆசிரியர்களும் படிப்பது அவசியம் என்றார். மேலும் செய்த்தின் சிந்தனையில் முக்கியமானது இலக்கிய பிரதிகளின் கால எல்லை மற்றும் எல்லையற்ற தன்மை. (Time bound and timeless of Text)பிரதியின் காலமற்ற தன்மை என்பது அது பல்வேறு கால கட்டங்களில் வெளிவந்த போதும், நடப்பு சூழலுக்கு பொருத்தமற்றதாக இருந்த போதும் அதை படிப்பது, அவதானிப்பது, ஜமாய்ப்பது. மாறாக கால எல்லை என்பது அந்த பிரதியின் உருவாக்க காலமும்,அந்த காலத்திய கலாசார சூழல் மற்றும் சமூக அழகியலின் குறுக்கான ஊடாட்டமும் கலந்த ஒன்று. மத சமூகங்கள் இந்த முரண்களின் ஊடாக தான் பயணம் செய்து வருகின்றன. இதை குறித்து மார்க்ஸ் தன் அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கான ஒரு பங்களிப்பு (A Contribution to the critique of Political economy ) நூலில் குறிப்பிட்டார். தொழில்மய சமூகத்தில் ஒரு மனிதன் எவ்வாறு கிரேக்க தொன்மங்கள் குறித்து உவகை அடைகிறான். அந்த அவதானமும் , உவகையும் என்பது அவனின் இளமை நோக்கிய ஏக்கமும் (Nostalgia)பழைய உற்பத்தி முறைமையின் தொகுப்புமாகும். செய்த் இந்த சிந்தனை முறைமையை இடைக்கால அந்தலூசிய சிந்தனையாளரான இப்னு ஹாசம் என்பவரிடமிருந்து நீட்சியடைய செய்தார். அதாவது நடப்பு எதார்த்தம் மற்றும் பிரதியாக்கம். இதன் அடிப்படையில் தான் செய்த் குர் ஆன் மற்றும் பைபிளை ஆராய்ந்தார். அதன் காலம் , சூழல் , சமூக அழகியல் போன்றவை புனித பிரதியின்அலகுகளாக பார்க்கப்பட வேண்டும் என்றார். மேலும் மத பூடகமாக்கலுக்கும், வெற்று வாதங்களுக்கும் எதிரான செய்த்தின் கோட்பாடுகள் முக்கியமானவை. தன் நேர்காணல்களில் பிரதி, உலகம், அதிகாரம், காலனியம், மதம் குறித்த கோட்பாடுகள் மீதான விமர்சனத்தையே அதிகமும் முன்வைத்தார் . செய்த்தின் இந்த நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு அரசியல், அதிகாரம் மற்றும் கலாசாரம் என்ற நூலாக வெளிவந்தது. கீழைத்தேயத்தில் இருந்து புலம் பெயர்ந்து மேற்கத்திய கல்விசார் அறிவுஜீவியாக செயல்பட்டு தன் சிந்தனையால் மேற்குலகிற்கு பெரும் சவாலாக இருந்த எட்வர்ட் செய்த் கிழக்கின் வரலாற்றில் முன்கோடாகவே இன்றும் இருக்கிறார்.
- உயிரோசை

No comments: