காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Sunday, July 12, 2009

மௌனமும் மொழியின் சுய உரையாடலும்- இஹாப் ஹசன் ஓர் அறிமுகம்



மேற்குலகம் சில சமயங்களில் மொழியின் சாத்தியபாட்டின் மீது பயணம் செய்கிறது. அதன் எல்லாவித நெளிவு சுழிவுகளையும் உள்வாங்கிய தடமாக அதன் பாதை இருக்கிறது. மௌனத்தின் சலனத்திற்கும் உரையாடல் வெளிக்குமான உறவு மிகவும் திடமானது. ஊடுபாவக்கூடியது. இதன் நீட்சியில் இலக்கிய படைப்பின் உருவாக்கத்திற்கும் மொழிக்குமான உறவை பற்றி அதிகம் ஆராய்ந்தவர் இஹாப் ஹசன். இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப்பகுதி காலகட்டத்தில் மேற்குலகிலும், சமீப ஆண்டுகள் வரை தமிழ் அறிவுத்துறை வட்டாரத்திலும் அதிகம் பேசப்பட்ட பின்நவீனத்துவ மோஸ்தரின் தூண்டுகோல் இவரே. இவரை பின் தொடர்ந்து தான் லியோதர்த் தன் பின்நவீன கோட்பாட்டை வடிவமைத்தார். பின் நவீன கோட்பாட்டின் வழியாதாரங்கள் இஹாபிடம் இருந்து தான் வெளிவந்தன. பின்நவீனத்துவ பிறப்பிடம் மேற்காக இருந்தாலும் இஹாப் காரணமாக கிழக்கிலிருந்து புலம்பெயர்ந்த ஒன்றின் சாயலாகவே இருக்கிறது. எகிப்தின் கெய்ரோ நகரில் ஓர் அமைதியான சூழலில் 1925 ஆம் ஆண்டு ஓர் அரசு ஊழியனின் மகனாக பிறந்தார் இஹாப் ஹசன். இவரின் குடும்பம் மரபான மத மரபுகளை மீறி கல்விப்பின்னணியும், முன்னோக்கிய பார்வையையும் கொண்டிருந்தது. பள்ளிக்கல்வியை கெய்ரோவில் முடித்த 1946 ல் கெய்ரோ பல்கலைகழகத்தில் மின்னியல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றார். இவரின் நுண்ணறிவு காரணமாக எகிப்து பல்கலைகழகம் கல்விசார்ந்த விருதை வழங்கியது. பின்னர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற இஹாப் அமெரிக்க பென்சில்வேனியா பல்கலைகழகத்தில் அறிவியல் உயர்பட்டம் பெற்றார். பின்னர் இலக்கியகோட்பாடு சார்ந்த அக்கறை காரணமாக தன் பொறியியல் வழித்தடத்தை விட்டு இஹாப் விலகினார்.அவரின் ஈடுபாடு இலக்கிய மற்றும் தத்துவ வாசிப்புகள் மீது திரும்பியது. குறிப்பாக நவீன மற்றும் செவ்வியல் இலக்கியம் சார்ந்த தேடலாக மாறியது.1950 களில் ஆங்கில இலக்கியத்தில் இரு முதுநிலைபட்டங்களை இஹாப் பெற்றார். பின்னர் இது சார்பான இஹாபின் தொடர்ச்சியான தேடல் ஒரு தேர்ந்த அறிவுஜீவியாக அவரை உருமாற்றம் அடைய செய்தது. பென்சில்வேனியாவின் அறிவுதுறை வட்டாரங்களில் தீவிரமான செயல்பாடுகளில் இறங்கினார். அதன் தொடக்க காலங்களில் அவரிடம் இருந்து Radical innocence : Studies in the contemporary american novel, The literature of silence : Henry miller and samuel beckett போன்ற இலக்கிய விமர்சன நூல்கள் அவரிடமிருந்து வெளிவந்தன. இந்நூலில் ஹசன் உலகப்போருக்கு பிந்தைய இலக்கிய படைப்புகளின் குணாதிசயங்கள் குறித்து வெளிப்படுத்தினார். அதில் படைப்பின் வடிவம் நவீனத்துவத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதை குறித்து அதிகமும் விவரித்தார். 1970 இல் விஸ்கோன்சின் பல்கலைகழகத்தில் ஆங்கில மற்றும் ஒப்பிலக்கியத்தில் ஆய்வுத்துறை பேராசிரியராக பொறுப்பேற்ற ஹசன், ஜப்பான், சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் பல்கலைகழகங்களில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றினார். இந்த கல்வித்துறை அனுபவம் இஹாபின் அனுபவ வெளியை விரிவடையச்செய்தது. அதனின் தொடர்ச்சியான நகர்வே இஹாபை உலகளாவிய அறிவுஜீவிகள் பட்டியலில் இணைத்தது. அவரின் பிந்தைய காலகட்டம் விதியொன்றின் வெளிப்பாடாகவே மாறியது.
மேற்கத்திய இலக்கிய படைப்புகளை விமர்சனபூர்வ நிலைபாட்டிற்கு உட்படுத்தியதில் இஹாபின் பங்கு கணிசமானது. படைப்பின் மொழி, மௌனம் இவற்றிற்கிடையேயான உறவு முறை குறித்து அதிகம் இஹாப் ஆராய்ந்தார்.
இஹாபை பொறுத்தவரை எதார்த்தம் என்பது மனிதனின் பிரக்ஞை பூர்வமான கட்டமைப்பு. அதை இலக்கிய வரலாறு உருவாக்குகிறது. நவீன படைப்பு சார்ந்த விவகாரங்களின் பிறப்பிடம் என்பது சிம்பாலிச இயக்கமே.சிம்பாலிசமும்,ரொமாண்டிசமும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இயல்புவாதத்துடன் முரண்பட்டு படைப்பாக்க முறையில் புதிய உத்திகளை அறிமுகப்படுத்தியது. அதன் நீட்சியே இருபதாம் நூற்றாண்டு நவீனத்துவ மற்றும் பின்நவீனத்துவ படைப்பின் உத்தி. இஹாபின் விமர்சன கோட்பாட்டில் மௌனம் குவியப்படுத்தும் ஒன்று. இஹாப் மௌனம் என்பதை மனிதனின் அகப்பிரக்ஞையில் உள்ளார்ந்து இருக்கிற எதிர்மறையான மொழியாக பார்த்தார். மௌனத்தின் குணாதிசயங்கள் பல வகைபாடுகளில் இருக்கின்றன. சாதே முதல் சாமுவேல் பெக்கட் வரையிலான மரபார்ந்த இலக்கிய படைப்புகள் எல்லாமே மௌனத்தின் வெளிப்பாடு தான். இந்த மரபை இஹாப் எதிர்மறை இலக்கியம் என்றார். மேலும் மௌனம் காரணம், சமூகம்,வரலாறு போன்றவற்றில் இருந்து விலகி நின்று, லௌகீக உலகின் அனைத்துவிதமான புறசெயல்பாடுகளையும் குறைக்க முயல்கிறது. மௌனம் இயற்கையிலிருந்து விலகி நிற்கிறது. கலையின் சுயமறுப்பையும் உள்ளடக்கி இருக்கிறது. மேலும் வடிவத்தின் குறிப்பிட்ட கால அளவிலான மாறுதலையும் கோருகிறது. அந்த மாறுதல்கள் எதிர் மொழியை உற்பத்தி செய்கின்றன. இங்கு இஹாப் மௌனத்தின் எதிர் குணாதிசயமாக பேச்சை கொண்டு வந்தார். மௌனம் நிரந்தரமானது, பேச்சு காலம் சார்ந்தது. நம் உள கட்டமைப்பில் மௌனமும் அதன் நிரந்தரதன்மையும் வெளிக்கு (Space)உரித்தான ஒன்றான மாறுகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பேச்சின் வினை வடிவமானது மனித குரலின் தற்காலிக தன்மையை மறுத்து வந்திருக்கிறது. குரல் என்பது வடிவ மாறுதலுக்குட்பட்டது. மேலும் நாம் காலத்தை பரவலாக்கம் செய்வது மாதிரியே குரலை பரவலாக்கம் செய்வதற்கு உள்ளாகி இருக்கிறோம். நாம் எங்கிருக்கிறோம் என்பதிலிருந்து இயல்பாக வார்த்தை புறப்பட்டு புதிய வடிவமாக வெளிக்குள் பரவுகிறது. நாக்கில் சுழலும் வார்த்தையானது இஹாபை பொறுத்தவரை அது எதிர் -கலை, எதிர்-மொழி, எதிர்-பிரக்ஞை இவற்றை உள்ளடக்கி இருக்கிறது. மாறாக மௌனமே இலக்கிய படைப்பாக்க வடிவத்திற்கு தூண்டுகோலாக இருக்கிறது. இஹாபின் சிந்தனைகள் பின்நவீனத்துவ படைப்பாக்க முறைகளில் புதிய மாறுதல்களை ஏற்படுத்தின. நவீனத்துவம் /பின்நவீனத்துவம் இடையேயான நுணுக்க வேறுபாடுகளை இவர் அட்டவணைப்படுத்தியது மேற்கத்திய தத்துவ
உலகில் குவியப்படுத்தும் ஒன்றாக மாறியது. மேற்கத்திய விமர்சகர்கள் இதையே தங்கள் விமர்சன கோட்பாட்டிற்கான அடிப்படையாக எடுத்துக்கொண்டனர். மேலும் இஹாப் தன் விமர்சன கோட்பாடுகளுக்காக சாதே, மல்லார்மே, எர்னஸ்ட் வேக்ஸ், ஜோசப் கன்ராட், ஆன்ட்ரூ பிரிட்டன், காப்கா, ஹெமிங்வே, சாமுவேல் பெக்கட் போன்றவர்களின் படைப்புகளை எடுத்துக்கொண்டார். அவர்களின் படைப்பாக்க முறைகளும், உத்திகளும் இஹாபின் சிந்தனையில் அதிகம் பாதிப்பை செலுத்தின. ஹெமிங்வே வாழ்க்கையை கலையாக பார்த்தார். அவரின் The sun also rises, A farewell to arms ஆகிய இருநாவல்கள் இஹாபை அதிகம் பாதித்தன. sun also rises நாவலானது வாழ்வின் இயக்கத்தில் தீவிர இழப்பிற்குள்ளாகும் ஒருவனின் வாழ்க்கை தடத்தை பற்றியது. ஆறுமாதங்கள் மின்விளக்கு வெளிச்சத்தில் உறங்கும் அவனின் வாழ்க்கை சூரிய உதயமும், அஸ்தமனமும் ஒருங்கிணைந்த ஒன்றாக இருக்கிறது. மேலும் அதன் ஊடாட்டத்தை குறித்ததான கதை வெளியையும் கொண்டது. Farewell to arms வாழ்க்கை போராட்டத்தைப்பற்றியது. போர்கள் என்பவை மனித போராட்டத்தின் பிரதிபலிப்பு அல்ல. மாறாக இரு அதிகார மையங்களுக்கு இடையே நடைபெறுபவை. ஒன்றை ஒன்று அழித்தலில் அதிக கவனமும், ஈடுபாடும் கொண்டவை. இஹாப் நவீனத்துவ மற்றும் அறிவொளிகால படைப்பாளிகள் அனைவரின் படைப்புகள் குறித்து ஆராய்ந்தார். மேலும் சார்த்தர் குறித்தும் அவரின் இருத்தலியல் கோட்பாடு குறித்தும் விமர்சனத்திற்கு உட்படுத்தினார். சார்த்தரின் "வார்த்தைகள்" என்ற அவரின் சுய குறிப்பில் இருக்கும் ஒரு வாக்கியம் இஹாப் ஹசனால் மேற்கோள்காட்டப்பட்டது. "பொய்யர்கள் தங்களுடைய உண்மையை அவர்களின் விரிந்த பொய்பரப்பின் மீது கண்டடைகிறார்கள்." இது எதார்த்தம் பற்றிய இஹாபின் நிலைபாட்டிற்கு முன் தரவான ஒன்றாக மாறியது. மேலும் post modernism என்ற சொல்லை இஹாப் தான் முதன் முதலாக உருவாக்கினார் என்பதை மேற்கத்திய சிந்தனாவாதிகள் வெளிப்படுத்துகிறார்கள். நேர்காணல் ஒன்றில் இதை மறுத்த இஹாப் அச்சொல்லின் மூலம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் ஓவியரான ஜாண் வாட்கின்ஸ் 1870 ல் முதன்முதலாக அச்சொல்லை பயன்படுத்தினார் என்றார். அதன் பின் பெர்னார்ட் ஸ்மித், சார்லஸ் ஒஸ்லன், இர்வின் ஹோவே போன்றோர் பல்வேறு காலகட்டங்களில் அதை பின்தொடர்ந்தனர். மேலும் பின்நவீனத்துவ கோட்பாட்டு முறைமையாக அவர் புனைந்த சொல்லான indeterminacy சமூக, கலாசார இயக்கத்தில் நிச்சயமற்ற சூழலை பிரதிபலித்தது. ஆனால் வேறொரு கட்டத்தில் இஹாப் இச்சொல்லை மேற்கத்திய கலாசாரத்தின் புவிஅரசியல் தன்மைக்கு போதாமையாக கருதினார். இது மேற்கத்திய கலாசாரத்தோடு மட்டுமே சம்பந்தமானதாக இருக்கவில்லை. மாறாக மையம்-விளிம்பு, விளிம்பு-விளிம்பு, மையம்-மையம் ஆகியவற்றுடன் உறவுடையதாக இருக்கிறது. இதன் நீட்சியான, திரிந்த வடிவமே வட்டாரமயமாக்கல்- உலகமயமாக்கல் (localization/globalization)என்றார் ஹசன். மேற்கத்திய இலக்கிய படைப்புகள் மீதான ஹசனின் மதிப்பீடுகள் மேற்குலகம் மற்றும் மத்தியகிழக்கின் அறிவுலகில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தன. இதற்காகவே Dismemberment of Orpheus: Toward a postmodern literature என்ற நூல் அவரிடமிருந்து வெளிவந்தது.
இஹாப் ஹசனின் எழுத்துக்கள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட நூல்களும் பல்வேறு பத்திரிகைகளில் இருநூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளும் வெளியாகி இருக்கின்றன. இஹாபின் சிந்தனைகள் மற்றும் எழுத்துக்களுக்காக அவருக்கு மேற்கின் பல்வேறு விருதுகள் அளிக்கப்பட்டன. கிழக்கிலிருந்து நகர்ந்து மேற்குலகம் சென்று தன் சிந்தனை ஆளுமையை உலகளாவிய நிலையில் விரிவுபடுத்திய இஹாப் தற்போது அமெரிக்க பல்கலைகழகம் ஒன்றில் ஆங்கிலதுறை சிறப்பு பேராசிரியராக இருக்கிறார்.
இஹாபின் நூல்கள்
1. Radical innocence: The Contemporary american novel (1961)
2. The literature of silence: Henry miller and samuel beckett (1967)
3.The dismemberment of orpheus: Toward a postmodern literature (1971)
4.Paracriticisms: Seven speculations of time (1975)
5.The Right Promethean Fire: Imagination, Science,andCulturalChange (1980)
6.The Postmodern Turn: Essays in Postmodern Theory and Culture (1987
7.Selves at Risk: Patterns of Quest in Contemporary American Letters (1990),
8.Rumors of Change: Essays of Five Decades (1995)
9.Out of Egypt: Scenes and Arguments of an Autobiography (1985)
10.Between the Eagle and the Sun: Traces of Japan (1996)

No comments: