காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Monday, June 20, 2011

புரட்சியின் விளிம்பில் அரபுலகம் - டுனிஷியா தொடங்கி
அரபுலகில் சமீபகாலமாக வெகுமக்கள் கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. டுனிசியா தொடங்கி கடல் அலையின் சுற்றுபரப்பு மாதிரி பக்கத்து நாடுகளும் கிளர்ந்து வருகின்றன. இதைப்பற்றி இந்திய ஆங்கில மற்றும் பிற ஊடகங்களும், தமிழ் தினசரி மற்றும் தொலைக்காட்சிகளும் தினச்செய்திகளை அளித்து வருகின்றன. உலகச்செய்திகள் என்ற அடிப்படையில் ஒரு பத்தியில் செய்தியை வெளியிடும் பத்திரிகையும் உண்டு. பருவகாலங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் தமிழ் சிற்றிதழ்களில் அரபுலக புரட்சியை பற்றிய செய்தி துணுக்குகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் ஏராளமாக வெளிவந்து விட்டன. அவற்றில் பெரும்பாலானவை தொலைக்காட்சி செய்திகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை. அரபுலகம் குறித்து அதிகம் அவதானித்து எழுதியவன் என்ற அடிப்படையில் நானும் அதற்குள் விழுந்து விடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்தேன். அதனால் தான் பல பத்திரிகைகளில் இருந்து அரபுலக புரட்சியை குறித்த கட்டுரைகள் என்னிடத்தில் கேட்கப்பட்ட போது மறுத்து வந்தேன். ஒரு தினசரியின் நிருபர் என்ற தகுதிநிலையை தாண்ட வேண்டும் என்பதே என் காத்திருப்புக்கு காரணம். எவ்வித நிகழ்வுகள் குறித்த எழுத்துக்கும் ஆழ்ந்த அவதானமும், தேடல் சார்ந்த மனமும் தேவை. அது குறித்த விரிந்த பார்வையும் அவசியமாகிறது. அப்பொழுது தான் துல்லியதன்மையும், எழுத்திற்கு முழுமையும் கிடைக்கும். ஈழப்போர் நடைபெற்ற காலத்தில் பல பத்திரிகைகள் இதற்கு மாறாக நடந்து கொண்டன. தமிழ் சிற்றிதழ்கள் மற்றும் இடைநிலை இதழ்கள் ஈழம் குறித்த கட்டுரைகளை தங்கள் பக்கங்களில் நிரப்பித் தள்ளின.அவை எல்லாமே ஹிட். பதிப்பகங்கள் ஈழம் குறித்த புத்தகங்களை வெளியிட்டன. அவை குறைந்தது ஆயிரம் பிரதிகளாவது விற்றிருக்கும். இதன் தொடர்ச்சியில் தமிழ் இடைநிலை இதழ் ஒன்று அச்சமயத்தில் தான் வெளியிட்ட கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து புத்தகமாக வெளியிடுவதற்கு பிரபல ஆங்கில பதிப்பகத்துடன் ஒப்பந்தமே செய்து கொண்டிருக்கிறது. ஈழப்போர் முடிந்த நிலையில் தற்போது அதைப்பற்றியே பேச்சே (ஒரு சில குரல்களை தவிர)எழவில்லை. ஒலிவாங்கிகளின் முன்பு நீட்டி முழக்கும் அரசியல்வாதிகள் கூட மறந்து விட்டார்கள். இப்போது அதைப்பற்றி எழுதினால் அதை வெளியிடுவதற்கு எந்த சிறுபத்திரிகையும் தயாரில்லை.ரேட்டிங் குறைந்து விட்டது என்பார்கள். இடைநிலை இதழ்களுக்கு யாராவது ஈழம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை அனுப்பினால் "உங்கள் கட்டுரை தேர்வாகவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். தங்களின் ஆர்வத்திற்கு நன்றி" என்று தபால் அட்டை வீட்டுக்கு வரும்.அன்றாடம் நம் முன் செய்திகள் கொட்டிக்குவிக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில் எல்லாவித மக்கள் போராட்டங்களும், கிளர்ச்சிகளும் வரலாற்றின் முன் வெறும்செய்தி என்ற அந்தஸ்தை பெற்றிருப்பது பெரும் துயரமே. அதற்கு சிற்றிதழ்களும் பலியாகி இருப்பது மிகப்பெரும் சாபக்கேடு.

அரபுலக புரட்சியின் வேர்களை இஸ்லாத்தின் வரலாற்று ரீதியிலான ஆட்சி அமைப்பு முறையில் இருந்தே நாம் அணுக வேண்டும். நபியின் காலத்தில் அரபுலகில் வலுவான,முறைப்படியான அரசமைப்பு எதுவும் இருக்கவில்லை. அது பதூயின் என்ற அரபு பழங்குடிகளையும், குரைஷ் என்ற உயர்குல குழுக்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. தன்னுடைய இறுதிகாலத்தில் நபி இதற்கான கட்டமைப்பை ஏற்படுத்தினார். ஆனால் அது ஆட்சி நிர்வாகம் என்ற கட்டமைப்பை சரியாக உட்கொண்டிருக்கவில்லை. அது இந்தியாவின் கிராம பஞ்சாயத்து முறையின் திரிந்த வடிவமாக இருந்தது. அதன்பின் கி.பி 632 ல் இஸ்லாமிய வரலாற்றில் முதன்முதலாக கலிபாக்கள் உருவானார்கள். நபிக்கு பிறகு அபுபக்கர், உமர், உதுமான் மற்றும் அலி ஆகியோரின் தலைமையில் இஸ்லாமிய ஆட்சி நடைபெற்றது. இது அரேபிய தீபகற்பம் முதல் மொராக்கோ வரை நீண்டிருந்தது. வரலாற்றாசிரியர்கள் இதை ராஷிதுன் காலம் என்கிறார்கள். இஸ்லாமிய வரலாற்றில் பெரும் உள்நாட்டு மற்றும் அயல் போர்கள் இக்காலத்தில் தான் தொடங்கின. மதத்திற்கு தங்கள் சுயம் சார்ந்த விளக்கீட்டை கொண்ட பல இஸ்லாமிய குழுக்கள் இக்காலகட்டத்தில் தான் உருவாயின.அரபுலகைப்பற்றி ஆராய்ந்த ஆங்கில வரலாற்றாசிரியரான பிரட் டோனர் தன்னுடைய " The early Islamic Conquests " என்ற நூலில் அரபுலகின் தற்போதைய மன்னராட்சி முறைக்கு ராஷிதுன் கலிபாக்களின் காலத்திலேயே தொடக்கமிடப்பட்டு விட்டது என்கிறார். அப்போது சரியான தேர்ந்தெடுப்பு முறைகள் இல்லை. நிர்வாக கவுன்சில் முறையும் இல்லை. இவற்றின் தர்க்க ரீதியான தொடர்ச்சி தான் தற்போதைய அரபுலக ஆட்சி கட்டமைப்பு என்கிறார். இதை முற்றிலும் மறுப்பதற்கில்லை. காரணம் இஸ்லாமின் ஆரம்பகாலம் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முடிவுக்கு வந்த உதுமானிய பேரரசு காலம் வரையிலும் அத்தகைய தாக்கத்தை காண முடியும். ராஷிதுன் காலத்திற்கு பிறகு உமய்யத்கள் ஆட்சிக்கு வந்தார்கள். இது கி.பி 661 ல் தொடங்கி கி.பி 750 வரை நீண்டது. பிறகு நபியின் வழித்தோன்றல்களான அப்பாஸிட்கள் அவர்களிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். இந்த யுகம் இஸ்லாமிய வரலாற்றின் பொற்காலம் என வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகிறது. இவர்களின் காலத்தில் தான் அரபுலகில் அறிவியல், கணிதம்,தத்துவம், இலக்கியம், கட்டிடக்கலை மற்றும் மருத்துவ துறைகளில் பெரும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. அறிவியல் ஆய்வுக்காக ஈராக்கில் தனி ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. அந்த வகையில் இஸ்லாமை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர்கள் இவர்களே. அப்பாஸிட்களான இவர்களின் ஆட்சி கி.பி 1513 வரை நீண்டது. அதன்பிறகு இஸ்லாமிய நவீனயுக ஆட்சியாளர்களான துருக்கிய உதுமானிய பேரரசின் கீழ் அரபுலகம் வந்தது.இவர்களின் ஆட்சி 1922 ல் முதல் உலகப்போரை ஒட்டி முடிவுக்கு வந்தது. உலக வரலாற்றில் பேரரசு என்ற கோட்பாட்டிற்கு சரியான வடிவம் கொடுத்தவர்கள் இவர்கள். இதனடிப்படையில் துருக்கிய உதுமானிய பேரரசு, ஈரானிய சபாவித் பேரரசு, முகலாய பேரரசு இம்மூன்றும் வரலாற்று ரீதியாக உலகின் பெரும் பேரரசாக தன்னை நிலைநிறுத்தியவை. இதன் தொடர்ச்சியில் இருந்து தான் நாம் அரபுலகின் தற்போதைய கிளர்ச்சியை அணுக வேண்டும்.

கடந்த டிசம்பரில் டுனிஷியாவில் ஏற்பட்ட இப்புரட்சியானது தற்போது அரபுலகின் எல்லா இடங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது.தலைநகர் டுனிஸில் நடைபாதை வியபாரியான முகமது பயாஸி என்ற இளைஞன் ஒருவன் போலீஸால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு தீக்குளித்து தற்கொலை செய்ததன் எதிரொலியே இதற்கான தொடக்கம். ஜனநாயக நாடுகளில் இம்மாதிரியான தீக்குளிப்பு மரணங்கள் வெறும் தற்கொலை என்ற வரையறுப்போடும் அது சார்ந்து எழும் கண்டனம் என்ற எதிர்வினையோடும் அடங்கி விடும். ஆனால் அரபுலகில் இது ஒரு புரட்சிக்கான தொடக்கமாக மாறி இருப்பது கீழைநாடுகள் புரட்சி பற்றிய புதிய அர்த்தப்பாட்டை உலகிற்கு வழங்கும் முயற்சியே. இருபதாம் நூற்றான்டில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்ட அரபு நாடுகள் அப்போது மேற்கின் அரசியல் கோட்பாடுகளாக இருந்த மதசார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றில் மீது அவநம்பிக்கையை கொண்டிருந்தன. அதன் விளைவாக தங்களுக்கான ஆட்சியமைப்பை அவை இஸ்லாமிய வரலாறுகளிலிருந்தும், பேரரசுகளிடமிருந்தும் எடுத்துக்கொண்டன. கிளர்ச்சி எழுந்த காலகட்டத்தில் டுனிஷிய அதிபராக இருந்த பென் அலி சுமார் 25 ஆண்டுகளாக தொடர்ந்து அப்பொறுப்பை வகித்து வந்தார். சர்வாதிகார ஆட்சி முறையின் முக்கிய அம்சமே அது கருத்துரிமையை அனுமதிக்காது. எல்லா குரல்களுமே ஆட்சியாளரின் டம்மி குரலாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும். தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்ற பிரக்ஞை அந்நாட்டு மக்களிடம் எழாமல் பார்த்துக்கொள்ளும். இதனடிப்படையில் டுனிஷியாவில் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், கல்வியறிவின்மை, பேச்சுரிமை இல்லாமை போன்றவை தொடர்ந்தன.அரசுக்கு எதிரான பேச்சுக்கள் மற்றும் எழுத்துகள் எல்லாம் ராஜதுரோகமாக பார்க்கப்படும். இந்நிலையில் அரபு இளைஞர் ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு என்னிடத்தில் சொன்னது ஞாபகத்தில் வருகிறது."உங்கள் நாட்டு அரசு மீது உங்களுக்கு உருவாகும் வெறுப்புணர்ச்சி என்பது ஜந்தாண்டுகள் மட்டுமே நீடிக்கும். அதன் பிறகு நீங்கள் அவர்களை மாற்ற முடியும். ஆனால் நாங்கள் காலம் முழுவதும் அதை உள்ளிருத்திக்கொள்ள வேண்டியது தான். எங்களுக்கு வேறு தேர்வுகள் இல்லை" ஆனால் ஜனநாயக அமைப்பு முறை கொண்ட இந்தியாவிலும் தற்போது கட்சி அரசியல் என்பது கிரிமினல்மயமாக்கப்பட்ட ஒன்றாகவும், பிழைப்புவாதமாகவும் மாறி இருக்கிறது. ஒவ்வொரு ஐந்தாண்டுகளும் இதையே நாம் திருப்பி திருப்பி நிகழ்த்துகிறோம். இந்நிலையில் டுனிஷிய முழுவதும் தொடங்கிய கிளர்ச்சி அந்நாட்டு அதிபரான பென் அலி பதவியை துறக்கும் நோக்கத்தை வென்றது. இது மல்லிகை புரட்சியாக வர்ணிக்கப்பட்டது. மல்லிகை என்பது அந்நாட்டு தேசிய மலர். டுனிஷிய கிளர்ச்சியை தொடர்ந்து அதன் தாக்கம் எகிப்திலும் ஏற்பட்டது. எகிப்து வரலாற்று அடிப்படையில் பண்டைய நாகரீகங்களின் தொடக்கம். அரபு மக்கள் தொகையில் பாதிக்கும் மேலான எண்ணிக்கையை கொண்டது எகிப்து. பரப்பிலும் பெரியது இதுவே.புகழ்பெற்ற பிரமிடுகளின் இருப்பிடம். கெய்ரோ, அஸ்வான், அஸ்யூத், அலெக்சாண்டிரியா, சினாய் போன்ற அதன் நகரங்கள் புகழ்பெற்றவை. உலகின் முக்கிய நதியான நைல் இங்கு தான் உருவாகி பாய்ந்தோடுகிறது. அதன் வனப்பு மனபிரதிபலிப்புக்குட்பட்டது. பிரெஞ்சு பேரரசரான நெப்போலியன் 1798 ஆம் ஆண்டு எகிப்தை கைப்பற்றியதை தொடர்ந்து அங்கு தேசியவாதத்திற்கான கரு விதைக்கப்படுகிறது. பின் தொடர்ந்த வருடங்களில் உதுமானிய பேரரசு துணையுடன் முஹம்மது அலி எகிப்தை நெப்போலியனிடமிருந்து மீட்டெடுத்தார். பிந்தைய கட்டத்தில் எகிப்து பிரிட்டனின் மறைமுக கட்டுப்பாட்டில் வந்தது.அதனை தொடர்ந்து முதல் உலகப்போருக்கு பின் நடந்த தேர்தலில் ஷாத் சஹ்லுல் அவரின் வப்த் கட்சி பெரும்பான்மை பெற்றது. ஆனால் அப்போது பிரிட்டன் அதை ஏற்றுக்கொள்ளாமல் ஷாத் சஹ்லுல் மற்றும் அவரது ஆதரவாளர்களை மால்டோவிற்கு நாடு கடத்தியது. இதனை தொடர்ந்து எகிப்து பெரும் அளவில் கிளர்ந்தது. இதுவே வரலாற்றில் முதல் நவீன அரபு புரட்சியாக வரையறுக்கப்படுகிறது.அதனை தொடர்ந்து 1923 ல் எகிப்தில் முறைப்படியான அரசியலமைப்புச்சட்டமும், நாடாளுமன்றமும் ஏற்படுத்தப்பட்டது.ஷாத் சஹ்லுல் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஆதரவுடன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பிரிட்டன் ஆதரவுடன் நடந்த தொடர்ச்சியான உள்நாட்டு மோதல்களுக்கு பிறகு எகிப்து 1953 ல் குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டது. முஹம்மது நஹுப் எகிப்தின் முதல் அதிபரானர். இதனிடையே 1923 ல் ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அறிஞரான ஹசனுல் பன்னா 1928 ல் இஸ்லாமிய சகோதரத்துவ (Islamic brotherhood)அமைப்பை ஏற்படுத்தினார். இது வஹ்ஹாபியம் என்ற தூய்மைவாத கோட்பாட்டால் அதிகமும் தாக்கமுற்றிருந்தது. பின்னர் மற்ற நாடுகளுக்கும் கிளைபரப்பியது. இது நஹுப்பிற்கு எதிராக களத்தில் இறங்கியது. பின்னர் நஹுப் எகிப்திய தேசிய இயக்கத்தலைவரான கமால் அப்துல் நாசரால் 1954 ல் பதவியிறக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் 1956 ல் கமால் அப்துல் நாசர் எகிப்திய அதிபராக பொறுப்பேற்றார். இவரின் ஆட்சிகாலம் எகிப்தின் மறுமலர்ச்சி யுகமாகும். கல்வித்துறையில் புகழ்பெற்ற நவீனத்துவ சிந்தனையாளரான தாஹா உசேன் அமைச்சராக இருந்து பெரும் சாதனைகளை நிகழ்த்தினார்.விவசாய புரட்சிக்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. பல அணைகள் கட்டப்பட்டன. வட ஆப்ரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் பாலமாக இருந்த செயற்கை நீரோட்டமான சூயஸ் கால்வாய் தேசியமயமாக்கப்பட்டது. அதன் முன்னர் சூயஸ் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்தது. பிரிட்டன் அதை நாசருக்கு எதிரான நிலைகுலையும் குறியீடாக பார்த்தது.1956 ல் அங்கு பிரிட்டன் படைகளுக்கும் நாசரின் படைகளுக்கும் மோதல் ஏற்பட்டன. அதன் பிறகு சோவியத்யூனியனின் தலையீட்டிற்கு பின் பிரிட்டானிய படைகள் அங்கிருந்து முழுமையாக வாபஸ் பெற்றன. 1956 ல் நடந்த இப்போர் வரலாற்றில் முதல் எண்ணெய் போராக வர்ணிக்கப்படுகிறது. இதன் பின்னர் 1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் எகிப்தின் சினாய் மீது தாக்குதல் தொடுத்து அதனை கைப்பற்றியது. இதன் காரணமாக இஸ்ரேலுக்கும் மற்ற அரபு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்றது. முதன் முதலாக அரபு நாடுகள் இணைந்து போரிட்டது இந்த போரில் தான். ஆனால் அது தோல்வியில் தான் முடிவடைந்தது. நாசரின் மரணத்திற்கு பின் 1970 ல் அன்வர் சாதத் அதிபராக பொறுப்பேற்றார்.அவர் இஸ்ரேலிடம் இழந்த பகுதியை மீட்பதற்கு கடுமையாக போராடினார். பின்னர் சினாய் மலைப்பகுதி தொடர்பாக எகிப்து-இஸ்ரேல் ஒப்பந்தம் ஏற்பட்டது. அன்வர் சாதத் சோவியத் சார்பு நிலையிலிருந்து அமெரிக்க சார்பு நிலை எடுத்தார். நாசரின் காலத்திய கொள்கைகள் மற்றும் நிலைபாடுகள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து எகிப்தின் நூறாண்டுகளின் தனிமை முடிவுக்கு வந்தது. அன்வரின் மரணத்திற்கு பின்னர் 1981 ல் தற்போது பதவி விலகிய ஹுஸ்னி முபாரக் அதிகாரமேற்றார். அவரின் நிலைபாடும் அமெரிக்க சார்பாகவே இருந்தது. ஏற்கனவே நீர்த்து உறை கொண்டிருந்த வேலையின்மையும், வறுமையும் இம்மக்களை கிளர்ந்தெழ செய்தன. டுனிஷிய புரட்சி முடிவடைந்த சூழலில் தலைநகர் கெய்ரோவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். தொடர்ச்சியான பல போராட்டங்களுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி கெய்ரோவில் உள்ள தஹ்ரிர் சதுக்கத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டு முபாரக் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர். வரலாற்றடிப்படையில் சதுக்கங்கள் புரட்சியின் குறியீடாக இருந்திருக்கின்றன. உலகளாவிய நிலையில் சதுக்கங்களின் தோற்றம் என்பது நகரம் என்ற கட்டமைப்பின் வெளிப்பாடே. இது ஆறாயிரம் ஆண்டுகள் முந்தைய வரலாற்றைக்கொண்டது. நகர அமைப்பின் தோற்றத்தில் சதுக்கங்கள் முக்கிய வர்த்தக பரிமாற்ற ஸ்தலமாக இருந்திருக்கின்றன.அன்றைய கட்டத்தில் தகவல் தொடர்பு என்பது போக்குவரத்தாக இருந்த நிலையில் சதுக்கம் என்பது தகவல் தொடர்பு மையமாக இருந்தது.சுருக்கமாக குறிப்பிட்டால் நகர கட்டமைப்பின் உயிர்நாடியே இந்த சதுக்கங்கள் தான். மேலும் மனித வளர்ச்சியின் குறியீடாகவும் இருந்தன. இவ்வகையில் பொனிஷிய சதுக்கம், லண்டன் சதுக்கம், மாஸ்கோ பீட்டர்ஸ் சதுக்கம், சீனாவின் தியாமென் சதுக்கம் ஆகியவை முக்கியமானவை.

தற்போது கிளர்ச்சி நடைபெற்று வரும் லிபியா வட ஆப்ரிக்கா மற்றும் அரபு நாடுகளிலேயே மிக அதிக மனித வளர்ச்சி குறியீட்டை கொண்டது.(Human development index)இந்த குறியீடு தான் அதன் பெரும் பலம். மேலும் உலகின் எண்ணெய் தேக்கத்தில் லிபியா முக்கிய இடத்தை வகிக்கிறது.தற்போதைய கடாபி அரசுக்கு எதிராக அமெரிக்காவின் தலையீட்டிற்கு இந்த எண்ணெய் அரசியலே காரணம். எண்ணெய் என்பது அமெரிக்காவின் உயிர்நாடியாக இருப்பதே அதற்கு மற்றொரு காரணம்.நிலவியல் அடிப்படையில் லிபியா அதிகமான மலைகளையும், சமவெளியையும் கொண்டது.இஸ்லாமுக்கு முந்தைய கட்டத்தில் இது கிரேக்கர்களாலும், ரோமானியர்களாலும் ஆளப்பட்டது. இஸ்லாத்தின் தோற்றத்திற்கு பிறகு கி.பி 1551 வரை லிபியா அரபு மன்னர்களான உமய்யத்களாலும், அப்பாஸிட்களாலும் ஆளப்பட்டது. பின்னர் துருக்கிய உதுமானிய பேரரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. உதுமானிய பேரரசு லிபியாவை முதல் உலகப்போர் வரை ஆளுகை செலுத்தியது. பின்னர் 1911 ல் இத்தாலி அதை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. லிபியா என்ற பெயரே இத்தாலிய புவியியல் அறிஞர் ஒருவரால் தான் வழங்கப்பட்டது. இதனிடையே இதன் நிலப்பரப்பின் குறிப்பிட்ட பகுதிகளை பிரிட்டனும், பிரான்சும் தங்களுக்குள் கூறு போட்டுக்கொண்டன. மேற்கத்திய காலனியமயமாக்கலுக்கு எதிராக கீழை நாடுகளில் மக்கள் புரட்சி ஏற்பட்ட போது லிபியர்களும் கிளர்ந்தார்கள். உமர் முக்தார் தலைமையிலான தேசிய இயக்கம் லிபியாவின் விடுதலைக்காக போராடியது. பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு 1951 ல் லிபியா இத்தாலியிடமிருந்து விடுதலை பெற்றது. இந்நிலையில் எண்ணெய் வளத்தை கைப்பற்றுவது தொடர்பாக அங்கு உள்நாட்டு போர் ஏற்பட்டது. அதன் பிறகு இத்ரிஸ் தலைமையிலான ஆட்சி ஏற்பட்டது.இத்ரிஸ் லிபியாவை முன்னெடுத்து செல்லும் நிலையில் மீண்டும் உள்குழப்பங்கள் ஏற்பட்டன. அவரிடமிருந்து 1969 ல் 27 வயது ராணுவதளபதியான முஹம்மது கடாபி ஆட்சியை கைப்பற்றினார். பின்னர் கடாபி லிபியாவின் பெயரை சோசலிச அரபு குடியரசு லிபியா என்பதாக மாற்றினார். கடாபி தனக்கான கோட்பாட்டு தளத்தை நிறுவ முயற்சித்தாலும் அங்கு மேற்கத்திய ஆதரவோடு செயல்பட்டு வரும் எதிர் குழுக்களை சமாளிப்பது கடாபிக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது.1973 ல் நிலவில் இருந்த சட்டத்தை மாற்றி விட்டு இஸ்லாமிய அடிப்படையை சட்டமாக அமல்படுத்தினார். தனக்கு எதிராக செயல்பட்ட குழுக்களின் பிரதிநிதிகளை எல்லாம் தன் இராணுவத்தை பயன்படுத்தி கொலை செய்தார். எகிப்து- இஸ்ரேல் உடன்பாட்டை கண்டித்த கடாபி அது அரபுலகிற்கு மிகப்பெரும் அவமானம் என்றார். பிந்தைய கட்டத்தில் எல்லை பிரச்சினைக்காக எகிப்துடன் நான்கு நாள் யுத்தத்தை நடத்தினார்.அரசினுடைய கொள்கை பரப்பிற்காக தனி தொலைக்காட்சி சேனலை நிறுவினார். ஆனாலும் கடாபியின் எதேச்சதிகார போக்கு, சமூக பொருளாதார பார்வையின் குறைபாடு காரணமாக ஆப்ரிக்க பிராந்தியத்தில் லிபியா இன்று வறுமையையும், ஸ்திரமற்ற தன்மையையும் உட்கொண்டிருக்கிறது. எண்ணெய் வளம் மிகுந்திருந்தும் வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை வகுக்க முடியாதது அதன் பெரும் சறுக்கலே.தற்போது அதன் மீது போர் தொடுத்து வரும் அமெரிக்க தலைமையிலான பன்னாட்டுப்படைகளின் நோக்கம் என்பதே வளைகுடா பிராந்தியத்திற்கு பிறகு ஆப்ரிக்க பிரதேசத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே. சதாமிற்கு பிறகு கடாபி அமெரிக்காவிற்கு பெரும் சவாலாக இருக்கிறார். ஒருவகையில் இது அமெரிக்காவின் புவி அரசியல் வெளிப்பாடே. லிபியாவின் தற்போதைய உள்நாட்டுச்சூழல் என்பது பிழைப்புக்காக வளைகுடா நாடுகளில் பரந்து விரிந்திருக்கும் கேரளாவை சேர்ந்த மலையாளிகள் ஒட்டுமொத்தமாக கேரளாவிற்கு திரும்பினால் அதன் விளைவு எப்படி இருக்குமோ அது மாதிரியே.

டுனிஷியாவில் தொடங்கி வளைகுடா நாடான பஹ்ரைன் வரை நீண்டிருக்கும் இக்கிளர்ச்சி இருபத்தோராம் நூற்றாண்டில் பதியமிடப்போகும் ஒன்று. பல்வேறு புரட்சிகளை சந்தித்த இருபதாம் நூற்றாண்டு உலகின் ஒழுங்கை வெகுவாக மாற்றியது. தகவல் தொழில்நுட்ப புரட்சியின் ஆழ்பிரதிபலிப்பு பிரதேச கிளர்ச்சியில் மக்களை ஒருங்கிணைக்கும் பெருங்கருவியாக மாறி இருக்கிறது. குறிப்பாக மேற்கத்தியர்களால் விளையாட்டிற்காக ஆரம்பிக்கப்பட்ட Facebook மற்றும் Twiiter ஆகிய சமூக வலைத்தளங்கள் அரபு நாடுகளில் மக்களை திரட்டிய ஒருங்கிணையாக மாறியது ஆச்சரியமே. தகவல் தொழில்நுட்பத்தில் உலகிலேயே உயர்ந்த இடத்தில் இருக்கிறோம் என்று கூறிக்கொள்ளும் இந்தியாவில் இது சாத்தியமா என்பது சந்தேகமே.காரணம் பெரும்பான்மையான இந்தியர்களுக்கு குறைந்த பட்ச அடிப்படையான வாக்களிப்பது பற்றியவிழிப்புணர்வே ஏற்படவில்லை. இந்தியாவில் வாக்கு என்பது பண்டமாகி விட்ட இச்சூழலில் சமூக வலைத்தளங்கள் அதற்கு அந்நியமே.உலகில் ஒரே மொழியை பேசக்கூடிய வேறு கண்டங்களில் வாழும் மக்கள் தொகுதியை கொண்டவர்கள் அரேபியர்கள். டயஸ்போராவாக பல்வேறு மேற்கத்திய நாடுகளில் பரந்து வாழ்கிறார்கள்.ஆனால் அவர்கள் தாங்கள் அரேபியர்கள் என்பதை விட குறிப்பிட்ட பிரதேசத்தை சார்ந்தவர்கள் என்பதில் தான் பெருமை கொள்கிறார்கள் என்கிறார் மார்க்சிய பொருளாதார நிபுணரான சமீர் அமீன். அரபு தேசியவாதம் மொழி என்பதைவிட பிரதேச நலன் சார்ந்து தான் முன்னிலைப்படுத்தப்பட்டது என்கிறார் சமீர். அரபு பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்லப்பார்வையாக இருந்த வளைகுடா நாடுகளிலும் இப்புரட்சி தொடர்கிறது. பஹ்ரைன், சவூதி, ஓமன் நாடுகளில் இது தொடங்கிய நிலையிலேயே அடக்கப்பட்டு விட்டது. பஹ்ரைன் மட்டும் அடக்குவற்கு மிகுந்த சிரமப்படுகிறது. எல்லாவித புரட்சிகளும் வரலாற்றை மாற்றி எழுதவும் , திருப்பி எழுதவுமே செய்ய வேண்டும். அரபுலகை பொறுத்தவரை இந்த சாத்தியபாட்டின் எல்லை வளைநெளிதலாகவே இருக்கிறது. அரபு நாட்டின் எதேச்சதிகார ஆட்சியமைப்பும், வாரிசு முறையும் அது வேர்கொண்ட அடிப்படையை மாற்ற முயன்றால் மட்டுமே நடப்பு புரட்சியின் இலக்கு நிறைவேறும்.

No comments: