டாரஸ் மற்றும் சக்ரோஸ் மலைகளுக்கு நடுவே-- குர்து தலைவர் அப்துல்லா ஒசலான் ஓர் அறிமுகம்
இன்றைய குர்து தேசிய போராட்டத்தை இராணுவ ரீதியாக கொண்டு சென்று அதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தவர்களில் அப்துல்லா ஒசலான் முக்கியமானவர். குர்து தொழிலாளர் கட்சியை ஆரம்பித்து அதன் மூலம் துருக்கிய அரசுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார். உலகின் வழக்கமான அரசியல் தலைவர் போல் அல்லாமல் வித்தியாசமான சிந்தனை, குறிப்பாக மார்க்சிய அடிப்படையிலான கோட்பாட்டு சிந்தனைகள், வேறுபட்ட இராணுவ யுக்திகள், இராணுவ செயல்தந்திரங்கள் போன்றவை அவரை மிகப்பெரும் தலைவராக உலகின் முன் நிறுத்தின.
குர்து தேசிய போராளியான ஒசலான் தென்கிழக்கு துருக்கிய பகுதியான சான்லிஉர்வாவில் 1949 ல் ஒரு வசந்த காலத்தில் பிறந்தார். துருக்கியின் அங்காரா நகரில் பள்ளிப்படிப்பை முடித்த ஒசலான் சிறிது காலம் அரசு ஊழியராக பணியாற்றினார் . அதன் பிறகு அங்காரா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியை முடித்தார்.இளமைகாலத்தில் குர்துகள் மீதான துருக்கிய அரசின் அடக்குமுறையை கண்டித்து மற்ற தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களை நடத்தினார். அந்த போராட்டங்கள் அவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தின. ஏற்கனவே கோட்பாடுகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக அவருக்கு தேசியம் குறித்த பிரக்ஞை ஏற்பட்டது. இதன் நீட்சியில் 1984 ல் குர்து தொழிலாளர் கட்சியை ஆரம்பித்த ஒசலான் துருக்கிய குர்து பிரதேசங்களில் துருக்கிய இராணுவத்திற்கு எதிராக மிகப்பெரும் போராட்டத்தை ஆரம்பித்தார். அவர் கட்சியின் கோட்பாடாக மார்க்சியம்-லெனினியம் இருந்தது. சுமார் பதினைந்து ஆண்டுகள் நீடித்த இராணுவ ரீதியான இந்த போராட்டத்தில் முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஏராளமான கிராமங்கள் அழிக்கப்பட்டன. அநேக குர்துகள் புலம்பெயர நேரிட்டது. இதன் தொடர்ச்சியில் சிரியாவை தன் இயக்கத்தின் மையமாக கொண்டு இயங்கிய ஒசலான் 1998 ல் நிர்பந்தம் காரணமாக அங்கிருந்து வெளியேற நேர்ந்தது. அதாவது ஒசலானை வெளியேற்றாவிட்டால் சிரியா மீது போர் தொடுக்க போவதாக துருக்கி மிரட்டியது.
இந்நிலையில் ஐரோப்பாவில் அரசியல் புகலிடம் தேட ஆரம்பித்த ஒசலான் அங்குள்ள அரசியல் தலைவர்களிடம் குர்து பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து விவாதிக்க ஆரம்பித்தார். ஆனால் அதுவும் அவருக்கு எதிர்பார்த்த பலனை தரவில்லை. இதன் இன்னொரு கட்டத்தில் துருக்கியானது இவர் மீது பல்வேறு வழக்குகளை தொடுக்க ஆரம்பித்தது. இது நீதிமன்ற விசாரணை வரம்புக்கு உட்படுத்தப்பட்டது. பின்னர் 1999 ல் துருக்கியின் அங்காரா நீதிமன்றமானது தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் இவருக்கு மரண தண்டனை விதித்தது. இதனை தொடர்ந்து துருக்கி இவரை தீவிரமாக தேடி வந்தது. இந்நிலையில் சர்வதேச அழுத்தம் காரணமாக 2002 ல் சமாதான காலத்தில் துருக்கிய அரசானது இவரின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதனை எதிர்த்து ஒசலான் ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேலும் ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க போன்ற பல்வேறு நாடுகள் இவரின் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தன.
குர்து தேசிய விடுதலைக்கான ஒசலானின் தீவிர இராணுவ போராட்டம் ஒரு கட்டத்தில் துருக்கியை நிலைகுலைய செய்தது. இதை நிர்மூலமாக்க துருக்கிய அரசாங்கம் தீர்மானித்தது. இதற்காக ஒசலானை தீர்த்து கட்ட முடிவு செய்து அவரை தீவிரமாக தேடியது. மேலும் ஒசலான் சைப்ரஸ் நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்திருப்பதாக துருக்கி குற்றஞ்சாட்டியது. இதை சைப்ரஸ் கடுமையாக மறுத்தது. இதன் தொடர்ச்சியில் ஒசலான் 1998 ல் சிரியாவுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நிர்பந்தம் காரணமாக் ரஷ்யாவுக்கு சென்றார். பின்னர் இத்தாலி மற்றும் கிரீஸுக்கு சென்றார். அந்நேரத்தில் துருக்கியானது ஒசலானை ஒப்படைக்குமாறு இத்தாலியிடம் கேட்டுக்கொண்டது. ஆனால் அங்கு ஜெர்மனியின் பிரபல வழக்கறிஞரான பிரிட்டா போக்லர் அவருக்கு உறுதுணையாக இருந்தார். ஒசலான் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவதாகவும், ஆகவே அவரை துருக்கியிடம் ஒப்படைக்கக்கூடாது எனவும் இத்தாலியிடம் கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து ஒசலான் கென்யாவுக்கு சென்றார். இந்நிலையில் 1999 ல் கென்யா தலைநகர் நைரோபியில் அவரை துருக்கிய உளவுத்துறையினர் கடத்தி துருக்கிக்கு கொண்டுவந்தனர். அவர் துருக்கியின் கடற்கரை பகுதியான இம்ராலியில் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டார். அந்த கடற்கரை பிரதேசம் முழுவதும் கண்காணிப்பு கேமராவால் கண்காணிக்கப்பட்டது. அதன் வான்பகுதியில் பறக்கும் விமானங்கள் மற்றும் கடல்பகுதிகள் இராணுவத்தின் முழுக்கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டன. அங்கு வரும் பார்வையாளர்கள் அனைவரும் முழுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பாதுகாப்பிற்காக அந்த பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஒசலானின் தனிமைச்சிறை மிகக்கொடூரமாக இருந்தது. 13 சதுரமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட அந்த சிறையானது குளிரூட்டப்பட்ட , 24 மணி நேரமும் விளக்கு எரியும் கண்ணாடி அறையை கொண்டிருந்தது. இதனால் ஒழுங்கான தூக்கம் என்பது சாத்தியமற்ற ஒன்றாக இருந்தது. அந்த அறையானது 24 மணிநேர கண்காணிப்பு கேமராவால் கண்காணிக்கப்பட்டு, ஒசலானின் ஒவ்வொரு அசைவுகளும் பதிவு செய்யப்பட்டன. 24 மணிநேரமும் சுழற்சி அடிப்படையில் வேலைப்பார்க்கும் இராணுவ வீரர்கள் சிறையை சுற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தனர். அவரின் வழக்கறிஞர்களை சந்திக்க ஒரு மணி நேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஒருநாளைக்கு இரு தடவை ஒசலான் சிறைவளாகத்தில் நடைப்பயிற்சி செய்ய அனுமதியளிக்கப்பட்டது. அதுவும் ஒரு மணிநேரம் மட்டுமே அனுமதியளிக்கப்ட்டது. உறவினர்கள் கூட மாதத்திற்கு ஒரு தடவை மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அவரின் வெளியுலக தொடர்புகள் மட்டுப்படுத்தப்பட்டன. தொலைக்காட்சி வசதி செய்யப்படவில்லை. பத்திரிகைகள் அனுமதிக்கப்படவில்லை. அவருக்கு கிடைத்த ஒரே தொலைதொடர்பு சாதனம் என்பது வானொலி. அதுவும் துருக்கிய அரசின் சானல் மட்டுமே கிடைத்தது. வழக்கறிஞர்கள் மூலம் கிடைக்கப்பட்ட புத்தகங்கள், பத்திரிகைகள் எல்லாம் கண்காணிப்புக்குட்பட்டிருந்தன. ஒரு நாளைக்கு மூன்று புத்தகங்களுக்கு மேல் கையில் வைத்திருக்க அனுமதியில்லை. இது இத்தாலிய மார்க்சிய அறிஞரான அந்தோணியா கிராம்சியின் துயர வரலாற்றை நமக்கு நினைவுப்படுத்துகிறது. கிராம்சியை சிறையில் அடைத்த இத்தாலிய பாசிச முசோலினி அரசானது அவர் சிறைக்குள் எதுவும் படிக்ககூடாது, சிந்திக்க கூடாது என்று தடை போட்டது. ஆனால் அதையும் மீறி அவர் படித்தார். சிந்தித்தார். எழுதினார். அதுவே பிந்தைய காலகட்டத்தில் சிறைக்குறிப்புகள் என்ற மிகச்சிறந்த நூலாக , இரு தொகுதிகளாக வெளிவந்தது. ஒசலானும் தன் ஆதர்சனராக கிராம்சியை உட்கிரகித்தார்.அவர் மீது மிகுந்த ஈர்ப்பு ஒசலானுக்கு இருந்தது.
பின்னர் ஐரோப்பிய சமூகவியல் கோட்பாட்டாளர்களான முர்ரே போக்கின், இம்மானுவேல் வாலர்ஸ்டீன், பெர்ணான்ட் பிராடெல் ஆகியோரின் கோட்பாடுகள் மீது அதிக தாக்கமுற்றார். பின்னர் குர்திய பிரச்சினைக்கு சமாதான தீர்வு காணுமாறு துருக்கிய அரசிடம் கேட்டுக்கொண்டார். மார்ச் 2005 ல் குர்திய பிரச்சினைக்கான முன்மொழிவாக ஜனநாயக கூட்டாட்சி என்ற முக்கிய கொள்கை பிரகடனத்தை வெளியிட்டார். அதாவது கிழக்கு துருக்கி, வட ஈராக், கிழக்கு சிரியா, மேற்கு ஈரான் ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கியதாக அந்த பிரகடனம் இருந்தது. மேலும் 2006 ல் துருக்கிய அரசுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ள விரும்பியது. அதாவது துருக்கியில் வசிக்கும் குர்துகளுக்கு துருக்கியர்களுடன் ஜனநாயக ரீதியான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த அது விரும்பியது. ஆனால் துருக்கி முழு சமரசத்திற்கு மறுத்தது. 1998 ல் ஒரு நேர்காணலில் ஒசலான் துருக்கி தான் வரலாற்றடிப்படையில் உண்மையான பயங்கரவாதி என்றார். மேலும் துருக்கிய அரசானது துருக்கிய குர்துகளை அடையாளமழித்து, இனக்கலப்பு செய்ய விரும்பியது. இதன் தொடர்ச்சியில் 1960 ல் துருக்கிய அதிபராக இருந்த சிமல் குர்சல் குர்துகள் தங்களை குர்துகள் என்றழைப்பவர்களின் முகத்தில் காரி உமிழ வேண்டும் என்றார்.
அன்றைய துருக்கியில் ஜனநாயக ரீதியான உரிமைக்காக போராடியவர்கள் சிறையில் அல்லது சித்திரவதைகூடங்களில் தள்ளப்பட்டார்கள். இந்த போராட்ட உணர்வே ஒசலானின் இயக்கத்தை இராணுவபோராட்டத்திற்கு தள்ளியது. மேலும் ஒசலானுக்கு போராட்ட யுக்தியில் லௌகீக தத்துவங்களின் மீது நம்பிக்கை இருந்தாலும் இஸ்லாத்தின் மனிதத்துவ கோட்பாடுகளின் மீது நம்பிக்கை இருந்தது. இஸ்லாம் ஒரு மதம் என்ற அளவில் மனித சமூக முன்னேற்றத்திற்கு வழி வகுக்கவும், எல்லா சமூகத்தினருக்கும் உரிமை அளிக்கவும் செய்கிறது. அது முந்தைய மத்தியகிழக்கு சமூகம் அளித்ததை விட உயர்வானது. மேலும் உமய்யத்கள் ஆட்சியில் தான் அவை அனைத்தும் பறிக்கப்பட்டன.
மனித உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இஸ்லாத்திற்குள் சர்வாதிகாரம் உள் நுழைய தொடங்கியது. மேலும் ஒசலான இஸ்லாத்திற்குள் எதிர் புரட்சி என்ற கோட்பாட்டை முன்வைத்தார். அதன் மூலம் மற்ற எதிரிகள் மீது போர்தொடுக்க முடியும் என்று நம்பினார். குர்துகளில் வாழ்வில் தீர்க்கமான, இலட்சியவாதியாக, கோட்பாட்டு பிரக்ஞையோடு இயங்கி வரும் ஒசலான் இன்றைய குர்துகளின் தவிர்க்க முடியாத தலைவராக இருக்கிறார். 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய ஒசலான் மிகச்சிறந்த தேசிய சிந்தனையாளராகவும் இருக்கிறார். இவரின் நூல்களில் சிறைக்குறிப்புகள் முக்கியமானவை. மூன்று தொகுதிகளாக வெளிவந்திருக்கும் அவை துருக்கியின் இம்ராலி சிறையில் இருந்து மிகப்பெரும் மரண போராட்டங்களிடையே, வழக்கறிஞர் உதவியுடன் எழுதப்பட்டதாகும். இவற்றில் உலக நாகரீங்களின் தோற்றம், மத்தியகிழக்கு நாகரீகங்கள், குர்துகளின் தோற்றம்,நிலப்பிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவம் போன்ற பல வேறுபட்ட விசயங்கள் குறித்து விவாதிக்கிறார். இதனின் தொடர்ச்சி அவரை மிகப்பெரும் அரசியல் கோட்பாட்டாளராக உருமாற்றியது. வரலாறு என்றுமே சுதந்திர போராளிகளை கைமறைப்பதில்லை என்பது இதன் மூலம் புலனாகிறது.
ஒசலானின் நூல்கள்
Prison Writings III: The Road Map to Negotiations (2012) ISBN 3-941012-43-6
Prison Writings Volume II: The PKK and the Kurdish Question in the 21st Century (2010) ISBN 0-9567514-0-7
Prison Writings: The Roots of Civilisation (2007) ISBN 0-7453-2616-1
Defending a civilisation
Sumer rahip devletlerinden demokratik uygarliga volumes 1 and 2
No comments:
Post a Comment