தமிழ்நாட்டு அரசியலுக்கு
ஒரு நீண்ட மரபு உண்டு. காரணம் இந்திய சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திய, சமூகத்தையே
தன் காலடியில் வைத்திருந்த பார்ப்பனியத்திற்கு எதிராக இயக்கம் கண்ட வரலாறு தமிழ்நாட்டிற்கு
உண்டு. அது தொடக்கத்தில் பிராமணரல்லாதோர் இயக்கமாக, தென்னிந்திய நலவுரிமை சங்கமாக
பின்னர் நீதி கட்சியாக மாறியது. பின்னர் பெரியார் வரவிற்கு பிறகு சுயமரியாதை இயக்கம்,
பகுத்தறிவு கழகம் அதன் பின்னர் திராவிடர் கழகமாக உருவானது. அகில இந்திய அளவில் முஸ்லிம்லீக்
உருவான தருணத்தில் தமிழ்நாட்டிலும் அது திடமான பங்களிப்பை செலுத்தியது. காயிதேமில்லத்
இஸ்மாயில் சாகிப், திருப்பூர் மொய்தீன் போன்ற ஆளுமைகள் எல்லாம் அதில் இருந்தனர். இந்நிலையில்
முஸ்லிம் லீக்குடன் பெரியாரின் உறவு முப்பதுகளில் ஏற்பட்டது. முஸ்லிம்லீக்கின் மீலாது
விழா மேடைகளை பெரியார் சுயமரியாதை பிரச்சார தளமாக பயன்படுத்தினார். காரணம் பார்ப்பனத்திற்கு
எதிரான சரியான தளமாக இஸ்லாம் அன்று இருந்தது. வேறு எந்த அரசியல், வெகுஜன மேடைகளும்
அவருக்கு ஒவ்வாமையாக இருந்தன. காரணம் அவை எல்லாம் சாதிய அரசியல் மேடைகளாக இருந்தன.
சாதிகளாக இறுகி போயிருந்த அன்றைய தமிழ் சமூகத்தில் சாதிய அடையாளங்களை அழித்த இஸ்லாம்,
அதன் அரசியல் மேடை பெரியாருக்கு மிக சாதகமாக இருந்தது. இதன் தொடர்ச்சியில் திமுக தலைவர்
கருணாநிதியும் இந்த மீலாது விழா மேடை மூலம் தான் தமிழில் முதன் முதலில் அறிமுகமானார்.
முஸ்லிம் லீக் தலைவர் திருப்பூர் மொய்தீன் தான் அவரை முதன் முதலாக மேடை ஏற்றினார்.
இம்மாதிரியான தொடக்க கால உறவுகள் தான் தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கும் திராவிட இயக்கத்திற்குமான
உறவு தொடர காரணம். அதற்கு ஒரு இழையான தொடர்ச்சி இருந்தது. விடாது போய்க்கொண்டிருக்கும்
நூல்கண்டு மாதிரி இவை தொடர்ந்தன.
இந்திய சுதந்திர
வரலாற்றில் மாபெரும் துயரமாக அமைந்த பாகிஸ்தான் பிரிவினை முஸ்லிம்லீக் கட்சியை இந்தியாவை
மையப்படுத்திய கட்சியாக கட்டமைக்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. பெரும் சூறாவளி
ஒன்று ஏற்படுத்தி விட்டு போகும் ரண மிச்சங்கள் மாதிரி இந்தியாவில் எஞ்சியிருந்த முஸ்லிம்களின்
பிரதிநிதியாக காயிதேமில்லத் உருவானார். பிரிவினையின் ஆழமான காயங்கள் காரணமாக நம்பிக்கையற்று
போயிருந்த இந்திய முஸ்லிம்கள் மத்தியில் இது புதிய நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும்
ஏற்படுத்தியது. அதற்கும் தமிழ்நாடு தான் களம் அமைத்து கொடுத்தது. முஸ்லிம்லீக்கின்
இந்திய கிளை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1948 ல் சென்னையை தலைமையிடமாகக்கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உருவானது. அதே
நேரத்தில் கேரள கிளையும் உருவானது. இந்திய பிரிவினை தெற்கே குறிப்பாக தமிழ்நாடு, கேரளாவில்
எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இதுவும் இயக்கம் சார்ந்த நம்பிக்கையை கொடுக்க ஒரு
காரணம். இதன் பிந்தைய சூழலில் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து அண்ணா தலைமையில்
அரசியல் கட்சியாக மாறிய திமுகவுடன் முஸ்லீம் லீக் தொடர்ந்து கூட்டணி அமைத்து களம் கண்டது.
காயிதேமில்லத் இதில் முக்கிய பங்கு வகித்தார். பெரியார், அண்ணாத்துரை, காமராஜர் மற்றும்
ராஜாஜி போன்றோர்களுடன் அரசியல் செய்யும் நுட்பமான, அறிவார்ந்த பண்பட்ட மனநிலை
காயிதேமில்லத் அவர்களிடம் இருந்தது. எல்லோரையும் அரவணைக்கும் குணம், எளிமை, நளினம்,
அறிவார்ந்த தேடல், மையநீரோட்டம் குறித்த சிந்தனை, முற்போக்கான பார்வை இவற்றின் மொத்த
வடிவமாக காயிதேமில்லத் இருந்தார். அதனால் தான் பெரியாருடன் இணைந்து அவரால் அரசியல்
செய்ய முடிந்தது. அது மட்டுமல்ல பாராளுமன்றத்திலும் அவரின் குரல் ஓங்கி ஒலித்தது. சுதந்திரத்திற்கு
பிறகு வகுப்பு கலவரங்கள் நிகழ்ந்த தருணத்தில் பாராளுமன்றத்தில் அது குறித்து
மிகுந்த கவலையோடு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அது தொடர்பான கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
குறிப்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடன் பல தருணங்களில் நேருக்கு நேர் இது குறித்து
விவாதித்திருக்கிறார். இந்திய இஸ்லாமிய சமூகம் எதிர்நோக்கி வரும் நெருக்கடி குறித்தும்,
பிற விவகாரங்கள் குறித்தும் மற்றவர்களிடம் அதிகமும் கலந்துரையாடினார். மத சார்பான
தளத்தில் நின்று கொண்டு மதசார்பற்ற சமூகத்தோடு உரையாடல் நடத்துதல் மற்றும் இந்திய முஸ்லிம்களை
மையநீரோட்ட அரசியலில் இணைப்பது போன்றவைகளுக்கு அவரின் பங்களிப்பு கணிசமானது. இட ஒதுக்கீடை
நாங்கள் மைய நீரோட்டத்தில் இணைவதற்காகவே கேட்கிறோம் என்றார் ஒரு தடவை காயிதேமில்லத்.
ஒரு தெளிவான அரசியல்வாதிக்குரிய குணாதிசயங்களும், கூர்மையான அறிவுத்திறனும், சிறந்த
தலைமைத்துவ பண்பும், சரியான வழிகாட்டும் திறனும் ஒருங்கவிந்து உடையவராக இருந்தார் காயிதே
மில்லத். அதனால் தான் இவரின் மரணம் பெரியாருக்கு மிகப்பெரும் இழப்பாக இருந்தது. பெரியார்
மற்றவர்களின் மரணத்தை தாங்க முடியாமல் அழுதது வெறும் இரண்டு பேருக்கு மட்டும். ஒருவர்
இராஜாஜி மற்றொருவர் காயிதேமில்லத். இப்படியான அரசியல் இவரின் மரணத்திற்கு பிறகு தேக்கநிலையை
அடைந்தது.
காயிதேமில்லத்தின்
மரணம் தமிழ்நாட்டை பொறுத்தவரை முஸ்லிம்லீக்கை அடுத்த கட்ட பரிணாம அரசியலை நோக்கி நகர்த்தவில்லை.
ஊடுபாவ முடியாத தேக்கநிலையையும், எளிதில் மீட்க முடியாத அயற்சியையும், இட்டு
நிரப்ப முடியாத இடைவெளியையும் ஏற்படுத்தியது. சுதந்திரத்திற்கு பிந்தைய தமிழ் முஸ்லிம்
சமூகத்தின் பண்பாட்டு, சமூக மற்றும் பொருளாதாரம் சார்ந்த அரசியல் எதிர்பார்ப்புகளை,
தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத, குறைந்த பட்சம் அது குறித்த உடனடி கள பரிசோதனைகளை செய்ய
முடியாத நிலைமைக்கு காயிதேமில்லத்திற்கு பிந்தைய முஸ்லிம்லீக் மாறியது. அதற்கு
பின்வந்த அப்துல் சமதும், அப்துல் லத்தீபும் சுயசார்பு , தன்னம்பிக்கை
மற்றும் சமூகம் குறித்த சுய ஆளுமை திறன் எதுவும் இல்லாமல் திமுகவின் சிறுபான்மை அணி
தான் முஸ்லிம்லீக் என்ற தோற்றத்தை ஏற்படுத்தினர். இன்றுவரை அப்படியான ஒரு தோற்றம் உருவாவதற்கு
இருவரின் நடவடிக்கைகள் தான் காரணம். திமுக உடனான உறவு என்பது ஆரம்ப கால கட்டத்தில்
இருந்தே வந்ததாலும், தமிழ்நாட்டில் ஆளத்தகுதியான கட்சியாக அது இருந்ததாலும் அதனோடு
இணக்கமாக செல்லவேண்டியது அவசியம் என்றாலும் அதை மீறி சுய பிரக்ஞையை இழக்கும் ஒன்றாக
பின்னர் மாறியது பெருந்துயரம். ஆரம்பகாலத்தில் சமூகத்தில் அது பிடித்திருந்த வேர் கொஞ்சம்
கொஞ்சமாக அறுபட தொடங்கியது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு முஸ்லிம் ஊர்களிலும் கிளை பரப்பியிருந்த
லீக் நாளடைவில் மிக சுருங்கி போனது. இதன் போக்குகள் மற்றும் அரசியலில் நம்பிக்கையற்று
போன இளைஞர்கள் தங்களுக்கான தெரிவாக திமுகவை தேர்ந்தெடுத்தனர். தமிழக அரசியலில் எம்ஜிஆர்
முன்னுக்கு வந்த காலத்தில் பலர் அதிமுகவில் இணைந்தனர். இந்த அவநம்பிக்கையின் ஆரம்பம்
தான் இன்று வரை தொடர்கிறது. தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக முஸ்லிம்லீக்கின்
தலைவர்களான அப்துல் சமது மற்றும் அப்துல் லத்தீப் ஆகியோர் தனிப்பிரிவாக மாறியது மேலும்
பலரின் அதிருப்திக்கு கட்சி ஆளாக காரணமாக அமைந்தது. மேலும் பெரும் அபத்தமாக தங்கள்
கட்சி முன்னணியினர் அனைவருக்கும் மில்லத் பட்டத்தை கொடுத்தது பல நிதானமான சமூக சிந்தனையாளர்களின்
கோபத்தை மேலும் அதிகப்படுத்தியது. பல்வேறு தருணங்களில் தமிழ்ச்சூழலில் முஸ்லிம்லீக்
பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறது. இது அதன் பலவீனங்களையும், போதாமைகளையும் மீறி
நாம் வரலாற்றில் மறுக்க இயலாத ஒன்று. குறிப்பாக தமிழ்நாட்டில் எழுபதுகள் வரை லெப்பை
முஸ்லிம்கள் மட்டுமே பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் பட்டியலில் இருந்த நிலையை
மாற்றி முஸ்லிம்கள் அனைவரையும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைப்பதற்கு தனிப்பட்ட
முயற்சிகள் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்தது போன்ற பல்வேறு செயல்பாடுகளை குறிப்பிட
முடியும். திமுகவின் செயல்பாடுகள் மற்றும் அணுகுமுறைகள் பிடிக்காமல் சில காலகட்டங்களில்
அது அதிமுகவுடனும் கூட்டணி சேர்ந்திருக்கிறது. இதனை அதன் காலச்சூழல் சார்ந்த செயல்தந்திரம்
என்று கருதும் நிலையில் தன் கட்சியை கிராமங்கள் மட்டத்தில் வளர்த்த முடியாத நிலைக்கு
இதே செயல்தந்திரம் தான் காரணமாக அமைந்தது. உதாரணமாக சொந்த சின்னத்தில் போட்டியிட முடியாமல்
பல தருணங்களில் உதயசூரியன் மற்றும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது போன்றவை தமிழ்நாட்டு
இஸ்லாமியர்களிடையே பெரும் அவமதிப்பு உணர்வையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
இந்திய தேர்தல் சட்டப்படி கூட்டணி கட்சியை சேர்ந்த ஒருவர் வேறொரு கட்சியின் சின்னத்தில்
போட்டியிட்டால் அவர் அந்த கட்சியின் உறுப்பினராகவே கருதப்படுவார். காரணம் சின்னம் தான்
இங்கு முக்கியம். அந்த கட்சியின் கொறடா உத்தரவிற்கு கட்டுப்பட்டவராக மாறிவிடுவார்.
இதைப்பற்றி தெளிவாக அறிந்திருந்தும் பல தருணங்களில் முஸ்லிம்லீக் தவறு செய்தது. மேலும்
உலமாக்கள் பலரை தங்களின் உறுப்பினராக கொண்டிருந்த காரணத்தால் அவர்களின் அனைத்துவிதமான
சிந்தனைகளுக்கும், கருத்துகளுக்கும் உடன்படக்கூடிய கட்டாய நிலைக்கு ஒரு கட்டத்தில்
லீக் மாறியது. இது படித்த முஸ்லிம் இளைஞர்களிடையே லீக் ஒருகட்டத்தில் செல்வாக்கு
பெற முடியாமல் போனதற்கு மிக முக்கிய காரணம். மேலும் மையநீரோட்ட சூழலில் இயங்கும் அரசியல்
கட்சியாக இருந்த லீக் தமிழ் சமூகம் சார்ந்த பொதுவான பிரச்சினைகளில் பிற ஜனநாயக சக்திகளுடன்
இணைந்து போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. பிற அறிவுஜீவிகளை கூட அவர்களால் உள்வாங்க
முடியவில்லை. குறிப்பாக 2000 ல் அ.மார்க்ஸ் முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பக்கம் செல்லாமல்
தன் பக்கம் ஈர்த்திருக்கலாம். அதனை செய்யத்தவறியது லீக்.வெறும் முஸ்லிம் தளத்தோடு சுருங்கி
போன காரணத்தால் காயிதேமில்லத் கால அரசியல் அணுகுமுறை ஒரு தலைமுறையோடு வற்றிப்போனது.
பன்மய சமூகத்தில் எந்த ஒரு பிரச்சினையும் முஸ்லிம் சமூகத்தை சேர்த்தே பாதிக்கிறது.
குறிப்பாக அத்தியாவச பொருட்களின் விலை உயர்ந்து நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும் போது
அது முஸ்லிம்களையும் சேர்த்தே பாதிக்கிறது. பருவமழை தவறுதல், நீர் ஆதார பிரச்சினைகள்,
விவசாய பிரச்சினைகள் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் இவை எல்லாம் எல்லோரையும் பாதிக்கும்
பிரச்சினைகள். இதில் போதிய கவனம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வெறும் முஸ்லிம்
நலன், நலன் என்றே ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் துண்டிக்கப்பட்டனர். முஸ்லிம்களுக்கு
நல்லது செய்யும் கட்சி என்ற எண்ணம் தமிழ் முஸ்லிம் பொதுப்புத்தியில் மேலோங்கியதால்
பல அரசியல் கட்சிகள் இதை சாதகமாக எடுத்துக்கொண்டன. நாங்கள் முஸ்லிம்களுக்கு நல்லது
செய்திருக்கிறோம் என்று சொல்லி பள்ளிவாசல் கட்ட சிமிண்ட் கொடுத்த கதை, பிளாஸ்டிக் தொப்பி
விநியோகித்த கதை இப்படியாக எளிய பலன்களை காட்டி வாக்கு வங்கி அடிமைகளாக முஸ்லிம்களை
பிற கட்சிகள் மாற்றின. இதன் மூலம் மற்ற விஷயங்களில் முஸ்லிம்களின் கவனம் செல்லாமல்,
அவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படாமல் இவை பார்த்துக்கொண்டன.
தமிழக முஸ்லிம் அரசியல்
களத்தில் பழனிபாபாவின் வருகையும் முக்கியமானது. தனிநபராக கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும்
ராமதாஸ் உடன் அரசியல் செய்த பழனிபாபா 90 களின் தொடக்கத்தில் ஜிகாத் கமிட்டியை ஆரம்பித்தார்.
தன் ஆவேச பேச்சு மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்தார். தொடக்கத்தில்
முஸ்லிம்கள், ஒடுக்கப்பட்டவர்கள், தமிழ் தேசிய வாதிகள் போன்ற பலரை அரவணைத்து சென்ற
அவர் இறுதிகட்டத்தில் வெறும் முஸ்லிம்களோடு சுருங்கி போனார். மேலும் அவரின் பேச்சுகள்
பலமுறை வன்முறை மற்றும் தீவிரவாதத்தை தூண்டும்படியாக இருக்கின்றன என்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதன் காரணமாக பலமுறை சிறைக்கு சென்றார். சில தருணங்களில் அவர் மீது தேசியபாதுகாப்புச்சட்டம்
பாய்ச்சப்பட்டது. முஸ்லிம் லீக் அவரை கடுமையாக எதிர்த்தது. சமூகத்தை தவறாக வழிநடத்துகிறார்
என்றும் குற்றஞ்சாட்டியது. மார்க்க கொள்கைகளை பொறுத்தவரை எல்லோரையும் அரவணைத்து செல்லும்
நிலைபாட்டை உடையவர். வஹ்ஹாபிய கொள்கையோடு ஒத்துப்போனவர் அல்ல. ஆனால் அவரின் பலவீனம்
தன் ஆக்ரோச பேச்சை வரன்முறை இல்லாமல் கொண்டு போனார். அவருக்கு சரியான அரசியல் ஆலோசகர்கள்
இல்லாமல் போனது பெருந்துயரமாக அமைந்தது. ஆக இவரை உள்வாங்காமல் அல்லது தன் இயக்கத்தில்
சேர்க்க நடவடிக்கை எடுக்காமல் லீக் தவறு செய்தது. அவர் மீது தொடர்ந்து விமர்சனங்களை
மட்டுமே வைத்துக்கொண்டிருந்ததால் 90 களின் இளைஞர்களை லீக் அதிகம் ஈர்க்க முடியாமல்
போயிற்று. தங்கள் கட்சியில் அவரை சேர்த்து ஏதாவது பொறுப்பை அளித்திருக்கலாம்.
அதற்கு உட்கட்சி சிக்கல்கள் தடையாக இருந்தன. இதன் மூலம் ஒரு தலைமுறையோடு தமிழ்நாட்டில்
முஸ்லிம் லீக் தேக்கநிலையை அடைந்தது.
தமிழ்நாட்டில் வஹ்ஹாபிய
இயக்கங்களின் தோற்றம் முக்கியமானது. சமூக கட்டமைப்பை அப்படியே எதிர்மறையாக புரட்டிப்போட்டதிலும்
அதற்கு முக்கிய பங்குண்டு. 1984 ல் திருச்சியில் தொடங்கப்பட்ட அல் முபீன்,பின்னர் அந்நஜாத்,
பிந்தைய கட்டத்தில் மதனிகள் தலைமையிலான JAQH, அல்ஜன்னத் பத்திரிகை மூலம் வஹ்ஹாபிய கொள்கைகளை
பரப்பிய மௌலவி பி.ஜெய்னுலாப்தீன் உலவி இவர்களின் ஒட்டுமொத்த வரவு தமிழ்நாட்டில்
சவூதிய வஹ்ஹாபிய கோட்பாட்டை அறிமுகப்படுத்த காரணமாக அமைந்தது. அதற்கு சற்று பின்னர்
உருவாகிய பாக்கர், ஜவாஹிருல்லா, குலாம் முஹம்மது போன்றோர் அப்போது இந்தியாவில்
பிரபலமாக இருந்த சிமி அமைப்பில் இருந்தனர். அதே காலகட்டத்தில் குணங்குடி அனீபா சென்னையை
தலைமையிடமாகக்கொண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார். அப்போது அது
சென்னைக்கு வெளியே அதிகம் அறியப்படவில்லை. இந்நிலையில் எம்ஜிஆரை ஆதரித்த குணங்குடி
அனீபா எம்ஜிஆர் நடத்திய சில கூட்டங்களில் கலந்து கொண்டார். மேலும் 80 களின் இறுதியில்
ஆரம்பிக்கப்பட்ட பாமகவில் இணைந்து அதன் பொருளாளராக மாறினார் அனீபா. இதன்
தொடர்ச்சியில் 1992 டிசம்பர் 6 ல் அயோத்தியில் கரசேவகர்களால் பாபர்மசூதி இடிக்கப்பட்டது.
இது இந்திய முஸ்லிம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாட்டின் பல பகுதிகளில்
வகுப்பு கலவரங்கள் ஏற்பட்டன. தமிழ்நாட்டில் இதன் தாக்கம் அதிகம் இல்லையென்றாலும் சிறிய
அளவிலான வன்முறைகள் ஏற்பட்டன. ஆனால் அன்றைய தலைமுறை இளைஞர்களை இது பெரிதும் பாதித்தது.
அவர்களின் மனம் மாற்றுக்களை தேடியது. அப்போது தேசிய அளவில் முஸ்லிம்லீக் காங்கிரஸுடன்
கூட்டணி வைத்திருந்தது. குறிப்பாக இந்தியாவில் முஸ்லிம்லீக் வலுவாக வேரூன்றி இருக்கும்
கேரளாவில் அது காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தது. இதனால் காங்கிரஸை அது விமர்சிக்கவில்லை.
மௌனம் காத்தது. அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய தலைவராக இருந்த
சுலைமான் சேட் காங்கிரஸை விமர்சித்தார். இது முஸ்லிம் லீக் அகில இந்திய அளவில் பிளவுபட
காரணமாக அமைந்தது. சுலைமான் சேட் தலைமையில் இந்திய தேசிய லீக் உருவானது. தமிழ்நாட்டில்
அப்துல் லத்தீப் அதன் தலைவரானார். அப்போது தான் சிமி இயக்கம் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.
இதன் தமிழ்நாட்டு பிதாமகர்களாக இருந்த பாக்கர், ஜவாஹிருல்லா, குலாம் முஹம்மது
ஆகியோருக்கு இந்த தருணத்தில் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அவர்கள் தங்களுக்கான அரசியல்
மாற்றுக்களை தேடும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டனர். அப்போது தான் பாமகவிலிருந்து வெளியேறி
குணங்குடி அனிபா தன்னால் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை புத்தாக்கம் செய்யும்
பணியில் ஈடுபட்டிருந்தார். 1994 ல் மீண்டும் தமுமுக வை தொடங்கிய அவர் அதற்கு அடுத்த
ஆண்டில் ஒரு குண்டுவெடிப்பு வழக்கில் எதிர்பாரா விதமாக சிறைக்கு சென்றார். இந்த தருணத்தில்
குலாம் முஹம்மது தவிர மற்ற அனைவரும் இணைந்து தமுமுக வை கைப்பற்றினர். அல் ஜன்னத்
பத்திரிகை மூலம் மதனிகளுடன் இணைந்து வஹ்ஹாபிய பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த பி.ஜெய்னுலாப்தீன்
மற்ற சிமி பிரமுகர்களுடன் இணைந்து 1995 ல் தமுமுகவின் தலைவராக பொறுப்பேற்றார்.
அப்போது பழனிபாபா அவருக்கு பெரும் சவாலாக இருந்தார். பெருவாரியான இளைஞர்கள் அவர் பக்கம்
இருந்தனர். பின்னர் இரண்டு ஆண்டுகளில் அதாவது 1997 ஜனவரி 28 ஆம் நாள் பழனிபாபா அடையாளம்
தெரியாத சிலரால கொல்லப்பட்டார். இதன் பின்னர் அவருடன் இருந்த இளைஞர்கள் எல்லாம் பிஜே
பக்கம் வந்தனர். பெரும் உணர்ச்சியை தூண்டும் ஆவேசமான பேச்சால் இளைஞர்கள் எல்லாம் அவர்
பக்கம் வந்தனர். முஸ்லிம் சமூகம் அறிவார்ந்த மனம் என்பதை விட உணர்வு ரீதியான மனத்தால்
கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஆவேசமாக பேசும் திறன் உள்ளவர்களின்
பின்னால் மயக்க ரீதியில் இளைஞர்கள் செல்கின்றனர். ஆரம்பத்தில் நமக்குள் கருத்து வேறுபாடுகள்
இருக்கலாம். ஆனால் சமூக பிரச்சினைகளுக்காக எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று
கூறிய பிஜே அதை தன் வஹ்ஹாபிய பிரச்சாரத்திற்காக நுண்ணரசியலாக பயன்படுத்திக்கொண்டார்.
தமிழ்நாடு முன்னேற்ற
கழகம் ஆரம்பிக்கப்பட்டு சில வருடங்களில் அதனுள் பெருவாரியாக இணைந்து கொண்ட இளைஞர்கள்
எல்லாம் வஹ்ஹாபிய கொள்கைக்குள் கொண்டுவரப்பட்டனர். காரணம் அரசியல் என்பதை தாண்டி பி.ஜே
அவர்களுக்கு வஹ்ஹாபிய போதனை செய்தது தான். இதனால் பல குடும்பங்களில், ஊர்களில்
பிரச்சினைகள் ஏற்பட்டன. இதற்கு முன்பே மதனிகளின் வருகை காரணமாக பல ஊர்கள் பிளவுபட்டிருந்தன.
அந்த பிளவிற்கு ஓர் அரசியல் முகத்தை பிஜே தலைமையிலான முஸ்லிம்முன்னேற்ற கழகம் கொடுத்தது.
இதனிடையே கோவையில் பாஷா தலைமையில் அல் உம்மா தோற்றுவிக்கப்பட்டது. தொழிற்சங்க பூமியான
கோவையில் ஏற்கனவே சிறிய அளவில் இருந்த முரண்பாட்டை அல் உம்மா மேலும் கூர்மைபடுத்தியது.
அந்த அரசியலுக்குள் முஸ்லிம் முன்னேற்ற கழகமும் இணைந்து கொண்டது. நடைபாதை வியாபாரிகள்
சங்கம் என்ற ஒன்றை ஆரம்பித்து நடைபாதை வியாபாரிகளுக்காக அதிகாரவர்க்கத்திடம் பரிந்து
பேசும் நடைமுறையை ஆரம்பித்தது. இதன் பிந்தைய கட்டத்தில் அல் உம்மா அன்சாரியால் காவலர்
செல்வராஜ் கொல்லப்பட்ட நிகழ்வு அதற்கு பிந்தைய முஸ்லிம்களுக்கு எதிரான போலீஸ் வன்முறை,
அழித்தொழிப்பு இதெல்லாம் குண்டுவெடிப்புகளுக்கு காரணமாக அமைந்தன. காவலர் செல்வராஜ்
கொலைக்கு முந்தைய நிகழ்வுகளை நாம் ஆராய்ந்தால் இவர்களின் வருகை கோவையை எவ்வாறு ரணகளப்படுத்தி,
சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவித்தது என்பதை அறியலாம்.இங்கு குறிப்பிட வேண்டியது
அன்றைய காலகட்டத்தில் பிஜே தலைமையிலான முஸ்லிம் முன்னேற்ற கழகம் கோவை மாவட்டத்தின்
பெரும்பாலான ஜமாஅத்களின் ஆதரவை பெறவில்லை என்பது தான். இதனால் தான் கோவை குண்டுவெடிப்பிற்கு
சில காலத்திற்கு பிறகு கோவை முஸ்லிம்கள் அங்கு அமைதியாக வாழ முடிந்தது.
தமிழ்நாடு முஸ்லிம்
முன்னேற்ற கழகத்தின் மூலம் ஏராளமான இளைஞர்களை தன் பக்கம் ஈர்த்து தன் வஹ்ஹாபிய கோட்பாட்டை
அவர்களின் மூளைகளில் ஏற்றி இரு மாங்காய்களை அடித்த மகிழ்ச்சியில் இருந்த பிஜே
இன்னும் அதை பலப்படுத்த வேண்டும் என்று நினைத்தார். மேலும் கோவை குண்டுவெடிப்பை ஒட்டி
அரபு நாடுகளில் வசூலிக்கப்பட்ட தொகைக்கு கணக்கு பதிவு பிரச்சினை அவர்களுக்குள் பெரும்
தலைவலியாக இருந்தது. ஒருகட்டத்தில் இது முற்றி போக மாறி மாறி அடித்துக்கொண்டார்கள்.
அறியாமை சமூகத்தை மேலும் ஏமாற்ற இந்த தகிடு தத்தங்களை மறைத்து வஹ்ஹாபிய கொள்கையை
காரணமாக சொன்னார் பிஜே. இதனால் 2004 ல் பெரும் ரத்த களறியுடன் முஸ்லிம் முன்னேற்ற கழகத்திடம்
இருந்து பிரிந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் ஆரம்பமானது. வெறுமனே அ ஆ மற்றும்
ஙே....ஙே என்று ஆவேசத்துடன் பேசத்தெரிந்த பிஜேவை இயக்கத்து தலைவராக அந்த
திறனோடு வளர்த்து விட்ட சிமி பிரமுகர் பாக்கர் அப்போது பிஜேவுடன் சேர்ந்து அவரை மேலும்
வளர்த்து விட்டார். தவ்ஹீத் ஜமா அத் ஆரம்பித்தவுடன் பிஜேவின் ஆட்டம் மேலும் அதிகரித்தது.
பெரும்பான்மை முஸ்லிம்களை காபிர்கள் என்று திட்டிக்கொண்டே பொது அரங்கில் அவர்கள் சார்பான
அரசியலை முன்னெடுத்தார். மேலும் ஊடகங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மிரட்டுவது
என்ற விஷயங்களையும் கையிலெடுத்தார். இந்நிலையில் அவரை வளர்த்து விட்ட பாக்கர்
பாலியல் புகார் காரணமாக 2010 ல் கடும் புற அழுத்தம் ஏற்பட்டு பிஜே வால் நீக்கப்பட்டார்.
இந்நிலையில் தன் வின்டிவி ஊழியர்களை வைத்து இந்திய தவ்ஹீத் ஜமா அத் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்
பாக்கர். இப்போது அனைத்து முஸ்லிம்களுடன் நல்லிணக்கம் என்று நாடகம் ஒன்றின் முக்கிய
கதாபாத்திரமாக மாறி இருக்கிறார். இவர்களை பற்றிய வரலாறுகள் மேலும் முடைநாற்றம் எடுப்பவை.
புகையும் நெருப்பை போன்றவை.
இரு பெரும் வஹ்ஹாபிய
இயக்கங்கள் தங்களின் மனிதநேய நடவடிக்கைகளாக ஆம்புலன்ஸ் மற்றும் இரத்ததானத்தை அடிக்கடி
குறிப்பிடுவதுண்டு. இந்தியாவில் முதன்முதலாக ஆர்.எஸ்.எஸ் தான் இம்மாதிரியான
நடவடிக்கைகளை தொடங்கியது. இன்றளவும் இந்த விஷயத்தில் தாங்கள் மட்டுமே முன்னணியில் இருப்பதாக
ஆர்.எஸ்.எஸ் சொல்லிக்கொள்கிறது. இதை அப்படியே நகலெடுத்த சிமிக்கு பின்னர் முஸ்லிம்
முன்னேற்ற கழகம் நகலெடுத்தது. இதை அப்போதைய புதிய காற்று இதழ் நேர்காணல் ஒன்றில் அதன்
தலைவர்களில் ஒருவரான ஹைதர் அலியே ஒத்துக்கொண்டார். இப்போதும் இதனை மறந்து விட்டு அதிகமும்
மார்தட்டி கொள்கிறார்கள். மேலும் 2004 ல் பிஜே பிரிந்த சமயத்தில் தமுமுகவினர் மிகுந்த
மகிழ்ச்சியில் இருந்தனர். காரணம் பிஜே இனி மதனிகள் செய்யும் வேலையை மட்டுமே செய்வார்.
இதே இயக்கத்தை வைத்து நம் அரசியலை முன்னெடுக்க முடியும் என்று நம்பினார்கள். ஆனால்
தங்களின் நம்பிக்கைக்கும், எதிர்பார்ப்பிற்கும் மாறாக பிஜேவும் வஹ்ஹாபிய பிரசாரத்துடன்
அரசியல் செயல்திட்டங்களையும் முன்னெடுத்தார். இது பெரும் நெருக்கடியாக மாறியது.
இரண்டு இயக்கங்களும் ஒரே அரசியலை செய்தால் தன் இயக்கத்து தொண்டர்கள் அந்த பக்கம் சென்று
விடுவார்களோ என்றும் தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ என்றும் பயந்தார்கள்.
விளைவாக 2009 ல் மனிதநேயக்கட்சியை தோற்றுவித்தார்கள். அதற்கு முன்னர் தாங்கள் நுண்ணளவில்
தொடர்ந்த வஹ்ஹாபியத்தை முன்னெடுக்க மதனிகளை வைத்து இஸ்லாமிய பிரச்சார பேரவையை ஆரம்பித்தார்கள்.
இது பிஜே, ஜாக் செய்யும் அதே வேலையை தான் தற்போதும் செய்து வருகிறது. அரசியலில் வந்த
பிறகு பொதுசமூகத்தின் ஆதரவை பெறுவதற்காக நாங்கள் வஹ்ஹாபிகள் இல்லை என்பதை மெல்லிய உதட்டால்
அடிக்கடி , முனகல் சப்தத்தில் அறிவித்துக்கொள்வார்கள். மேலும் இரு இயக்கங்களின் தொண்டர்களும்
பெரும்பாலும் ஒன்றாக தான் இயங்குகின்றனர். பிஜே கட்டிய பள்ளிவாசல்களின் தான் தொழுகின்றனர்.
பல ஊர்களில் இரு இயக்க தொண்டர்களும் இணைந்து தான் பிரச்சினைகளை உருவாக்குகின்றனர்.
பெண்களுக்கு எதிராக இந்துத்துவ இயக்கங்கள் செய்யும் அதேவேலையை தான் இவர்கள் இருவரும்
செய்து வருகிறார்கள். சமீபத்தில் புதுக்கோட்டையில் நடந்த சம்பவம் அதற்கு ஒரு சான்று.
மேலும் தமிழ்நாட்டு புதுப்பணக்காரர்கள் பலர் வஹ்ஹாபிய சிந்தனை கொண்டவர்களாக இருக்கின்றனர்.
இவர்கள் நமக்குள் மோதல் வேண்டாம் என்று இரு இயக்கங்களையும் இணைப்பதற்கான தரகு வேலைகளையும்
செய்து வருகின்றனர்.மேலும் தாங்கள் ஆரம்பித்த மமக மூலம் நீண்டகால நோக்கம் நிறைவேறிய
திருப்தியில் இருந்தார்கள். இதன் மூலம் பிஜே நேரடியான தேர்தலில் பங்கேற்க முடியாது
என்றும் நம்பினார்கள். தற்போது திமுக அதிமுக என்ற வழக்கமான சவாரிகளை தான் இவர்களால்
செய்ய முடிகிறது. திமுகவின் அல்லக்கைகள் என்று ஒரு காலத்தில் முஸ்லிம் லீக்கை விமர்சித்த
இவர்கள் தற்போதும் அதே அரசியலை தான் செய்து வருகிறார்கள். அரசியலில் ஈடுபடமாட்டேன்
என்று பகிரங்கமாக அறிவித்த பிஜே தற்போது ஒவ்வொரு தேர்தல்களிலும் கழகங்களுக்கு ஆதரவளிப்பதன்
மூலம் சமூகத்தின் பிரதிநிதி மாதிரி வெளிப்படுத்திக்கொள்கிறார். ஆனால் நடைமுறையில்
அப்படியல்ல என்பதே உண்மை. ஆனாலும் கழகங்கள் தங்களின் சிறுபான்மை ஓட்டரசியலுக்காக இரு
இயக்கங்களையும் மாறி மாறி பயன்படுத்திக்கொள்கின்றன. தமிழக அரசியலில் இந்த அபத்தங்கள்
தொடர்ந்து நடக்கின்றன. ஒவ்வொரு தேர்தல்களிலும் திமுக அதிமுக என்று மாறி மாறி ஆதரிக்கிறார்கள்.
அரசியல் பற்றிய எவ்வித புரிதலும் இல்லாமல் அந்த கட்சிகளின் நிலைபாடுகள் குறித்த எவ்வித
தெளிவும் இல்லாமல் தங்களின் நலன்களுக்கான அரசியலை சவாரி செய்வதன் மூலம் செய்து வருகிறார்கள். இப்போதைய
தேர்தல் கூட்டணியில் கூட எங்களுக்கு அதிகம் தொகுதிகள் வேண்டும் என்று ம.ம.க திமுகவிடம்
கோரிக்கை வைத்த போது அவர்கள் பிஜே திமுகவிற்கு எழுதிய கடிதத்தை காட்டி இருக்கிறார்கள்.
உடனே சுதாரித்துக்கொண்டுஒரு தொகுதிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள்.
இது தான் இவர்களின் அரசியல் அங்கதம். மேலும் இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம் என்பது தமிழ்நாட்டில் எத்தனை இயக்கங்கள்
இருந்தாலும் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவில் தான் அதிக முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.
ஜமா அத் மட்டங்களில் இது தான் எதார்த்தம். இது மொத்த இயக்கவாதிகளின் எண்ணிக்கையை விட
அதிகம்.
வஹ்ஹாபிய இயக்கங்களின்
வருகை தமிழ்நாட்டு அரசியலில் , முஸ்லிம் சமூக மட்டத்தில் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது
என்பதை பார்க்க வேண்டியதிருக்கிறது. வஹ்ஹாபியம் ஒரு சமூகத்தில் நுழைந்தால் எம்மாதிரியான
விளைவுகளை ஏற்படுத்துமோ அது தமிழ்நாட்டில் நடந்தது. சடங்கு, சம்பிரதாயங்கள் என்பதை
மீறி சமூக நல்லிணக்கத்தை பெருமளவில் சீர்குலைத்தது என்பது உண்மை. ஜமா அத்கள் செய்து
கொண்டிருந்த அதிகாரமட்ட அரசியல் முழுவதுமே காலியானது. தேவையற்ற பல பிரச்சினைகளில் மூக்கை
நுழைத்தார்கள். மதனிகளின் ஜாக் ஏற்படுத்திய தாக்கத்தை விட அதிக தாக்கத்தை இது ஏற்படுத்தியது.
இந்த இயக்கத்தில் நுழையும் பதின்பருவ இளைஞர்கள் எல்லோரும் மூளை வசியத்திற்கு உள்ளானார்கள்.
ஏற்கனவே உணர்வு மயப்பட்டவர்கள் இஸ்லாமிய இளைஞர்கள். இதன் காரணமாக பல வழக்குகளில்
சம்பந்தப்பட்டோ அல்லது படாமலோ தமிழ்நாட்டு அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பலர் சிறைக்கு
சென்றார்கள். கோவை சம்பவம் இதன் தொடர்ச்சி தான். அது பெரும் துன்பியல். இஸ்லாத்தில்
தாடி பற்றிய தெளிவில்லாமல் இவர்களின் வஹ்ஹாபிய கோட்பாட்டை அந்த இளைஞர்கள் மீது திணித்தார்கள்.
இதன் காரணமாக மிக நீளமாக தாடியை வளர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதுவும் சமூக
அந்நியபாட்டை ஏற்படுத்த காரணமாக இருந்தது. பிற சமூகங்களோடு இருந்த குடும்ப உறவு
முறைகள் எல்லாம் படிப்படியாக துண்டிக்கப்பட்டன. பல மாற்றுமத பண்டிகைகளில் பங்கு கொண்ட
பலர் இவர்களின் வருகைக்கு பிறகு விலகி கொண்டனர். ஏற்கனவே நொறுங்கி போயிருந்த தமிழ்
அடையாளம் இவர்களின் வருகைக்கு பிறகு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சவூதியில் மழை பெய்தால்
மண்ணடியில் குடைபிடித்தார்கள். மற்றவர்களும் பிடிக்க வற்புறுத்தப்பட்டார்கள். பாலைவன
மிருகமான ஒட்டகம் குர்பானிக்காக இங்கு கொண்டுவரப்பட்டது. அதை கின்னஸ் சாதனை போன்று
மார்தட்டிக்கொண்டார்கள். மேலும் பல குண்டுவெடிப்புகளில் நீதிமன்றத்தால் விடுதலை
செய்யப்பட்டு வெளியே வந்த பலர் பிஜே தான் தங்களை தூண்டி விட்டு காட்டிக்கொடுத்தார்
என்று வெளிப்படையாக பேட்டிக்கொடுத்தனர். தற்போது கோவை குண்டுவெடிப்பு வழக்கில் நடந்து
வரும் விசாரணையில் பிஜேவையும் அவர்களது கூட்டாளிகளையும் விசாரிக்க வேண்டும் என்று எதிர்
தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். எல்லோரையும் என்னோடு மோத தயாரா என்று
சவால் விடும் பிஜே பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பலர் சவாலுக்கு அழைத்த போது அலறினார். வஹ்ஹாபியம்
என்பது என்ன ? அதன் வரலாற்று அடிப்படை என்ன? யார் உருவாக்கினார்கள்? தற்போது உலக நாடுகளில்
அரசியல் இஸ்லாம் என்ற அடிப்படையில் அது ஏற்படுத்தும் தாக்கம் என்பது என்ன? சவூதின்
வீடு (House of Saud)அதனை பரப்புவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் என்ன? உலகின் அரசியல்
விமர்சகர்கள் மற்றும் அறிவு ஜீவிகள் வஹ்ஹாபியத்தை எப்படி பார்க்கிறார்கள்? உலக ஊடகங்கள்
வஹ்ஹாபியத்தை எவ்வாறு அணுகுகின்றன? மரபார்ந்த இஸ்லாத்தில் வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்கள்
என்ன? அரபு நாடுகளில் எப்படியான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன? சூபிசம் என்பது என்ன?
உலக வரலாற்றில் பன்மயசமூக அமைப்பில் அது ஏற்படுத்திய தாக்கம் என்பன போன்ற விஷயங்களை
விவாதிக்க வேண்டியதிருக்கிறது. இதற்கு நிதானமான, ஆழமும் அகலமும் சார்ந்த வாசிப்பும்,
சிந்தனையும் தேவை. இந்நிலையில் சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் தற்போது அரசியல்
நடத்தும் வஹ்ஹாபிய இயக்கங்களின் வரலாற்று செயல்பாடுகளை, தற்போதைய நிலைபாடுகளை தமிழ்நாட்டு
இளைய சமூகம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தங்களின் எதிர்காலத்திற்காகவும், தலைமுறைகளின்
எதிர்காலத்திற்காகவும் இதனை அவர்கள் புரிந்து கொள்வது நல்லது.