மௌலானா வஹீதுத்தீன் கான் இந்தியாவின் மிக முக்கியமான முற்போக்கு இஸ்லாமிய அறிஞர். ஆங்கில ஊடகங்களில் அடிக்கடி இவரின் உரையாடல் வெளிப்படும். அல் ரிஸாலா என்ற உருது மாத இதழின் ஆசிரியர். மத நல்லிணக்கத்திற்கான பத்மபூஷன் விருதை பெற்றவர். இந்தியாவில் சமூகங்களிடையே நல்லிணக்கத்திற்காக பாடுபடுபவர். அதற்காக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறுபட்ட சமூக தலைவர்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறார். மதங்களிடையே பரஸ்பர உரையாடல் நிகழ்த்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்கான பல முயற்சிகளை முன்னெடுத்து வருபவர். இது தொடர்பான நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். பல துறை அறிவு பெற்றவர். கேரளாவிற்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்த அவரிடம் நான் நடத்திய நேர்காணல் தொகுப்பு சமநிலை சமுதாயம் இதழில் வெளிவந்தது. நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வலைத்தளத்தில் மீள்பதிவு செய்கிறேன்.
தொண்ணூறு வயதை எட்டியுள்ள நீங்கள் உடல் நலத்துடன் வாழ முதலில் எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்?
நான் (இஸ்லாமிய மதக்கல்விக் கூடம்) மத்ரஸாவில் படித்து வந்து இருக்கிறேன். நான் மத்ரஸா தயாரிப்பு எனில் மிகையில்லை. கல்வி கற்று முடித்த பின் சமுகத்தோடு தொடர்பு கொண்ட போது எனது கல்வியின் போதாமைகளை உணர்ந்தேன். ஆகவே ஆங்கிலம் கற்க முடிவு செய்து, மேற்கத்திய சிந்தனைகளைப் பற்றிய புரிதல் அனைத்தையும் உள் வாங்கினேன். அதன் பிறகு எனது ஊழியப் பணியை துவங்கினேன். எனது பணி மிகவும் பழையது. “அல் மக்தபுல் தஃவதுல் இஸ்லாமி - இஸ்லாமிய அழைப்பு மையம்” என்ற அமைப்பை 1970-ல் நான் புது டில்லியில் தொடங்கினேன். அந்த அழைப்பு மையத்தின் அடிப்படை நோக்கம் ஒன்று மட்டுமே. நவீன ஊடகத்தில் இஸ்லாத்தை கொண்டு போய்ச் சேர்த்தல். அதன் மூலம் மட்டுமே நவீன மனங்களை எதிர்க் கொள்ள முடியும். ஆகவே நானும் எனது சக தோழர்களும் இதில் முழுமையாக எம்மை ஈடுபடுத்திக் வருகிறோம். அந்த வகையில் நாம் இரு நூறுக்கும் மேற்பட்ட நூல்களை உருது, ஆங்கிலம், அரபு என பல்வேறு மொழிகளில் வெளியிட்டு இருக்கிறோம். அதேப் போல் நாம் கருத்தரங்குகளை ஒழுங்கு செய்கிறோம். இதற்காக நான் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்திருக்கிறேன். நாம் அமைதியான முறையில் அரசியல் சார்பற்ற ஊழியப் பணியாற்றி வருகிறோம். திருக்குர்ஆன் மற்றும் நபிவழியில் அமைந்த அரசியல் சார்பற்ற நிலைப்பாடே எமது கொள்கை. அந்த முறையில் எமது நம்பிக்கைகளை, ஊழியப் பணியை அறிமுகப்படுத்தி வருகிறோம்.
நீங்கள் உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர். தாங்கள் ஒரு காலத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தில் செயல்பட்டு பின்னர் அதிலிருந்து விலகி விட்டதாக அறிகிறோம். மௌலானா மௌதூதியுடன் இருந்து பிரிந்து வர எது உங்களை தூண்டியது? இது தொடர்பாக உருது மொழியில் தாங்கள் எழுதியுள்ள தஃபீர் கீ கல்தி (புரிதலின் தவறுகள்) என்ற நூலை நாம் வாசித்து இருக்கிறோம். இருப்பினும் உங்களின் இளமைக் காலம் தொடர்பான விஷயங்களைப் பற்றி இந்த தலைமுறை வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வீர்களா?
ஒருங்கிணைப்பு என்ற அளவில் மட்டுமே நான் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புடன் தொடர்ப்பு வைத்திருந்தேன். காரணம் அதனிடம் வலுவான கிளைகளை கொண்ட பரந்த அமைப்பாக இருந்தது. அந்த காலங்களில் என்னிடமும் கோட்பாட்டு ரீதியான, அதாவது அரசியல் கொள்கை முடிவுகள் எதுவும் இருந்தது இல்லை. அப்பொழுது என்னிடமும் அரசியல் நிலைப்பாடு இல்லாமல் இருந்தது. அதே நேரம் நான் அரசியல் ரீதியான கோட்பாட்டை ஒரு போதும் ஆதரித்தது இல்லை. எனது அரசியல் நிலைப்பாடு அந்த காலக் கட்டத்தில் என்னவாக இருந்தது என தெரிந்துக் கொள்ள விரும்பினால் “குர்ஆன் கா மத்லூப் இன்ஸான் - திருக்குர்ஆன் விரும்பும் மனிதன்” என்ற நூலை வாசிக்கவும். அந்த நூலின் அத்தியாயங்களும், சொற்பொழிவுகளும் நான் ஜமாத்-இ-இஸ்லாமியுடன் தொடர்பில் இருந்த போது எழுதியவை.
அதேப் போல் எனது நிலைப்பாடுகளில் அன்றும், இன்றும் பெரியளவில் எந்த ஒரு மாற்றமும் அடையவில்லை. ஜமாத்-இ-இஸ்லாமியுடன் எனது சுய விருப்பத்தின் பேரிலேயே நான் இணைந்து செயல்பட்டேன். ஒவ்வொரு அமைப்புக்கும் என்று சில கட்டுப்பாடுகள் உள்ளன, சில வருட அனுபவத்தில் அவற்றோடு என்னால் ஒத்துப் போகவில்லை. எங்கு பார்த்தாலும் மனச்சார்புகளும், ஒரு தலைப்பட்சமான விருப்பு, வெறுப்புகளும் உள்ளன. சுதந்திர வெளி காணப்படவில்லை. ஜமாத்-இ-இஸ்லாமியை தவிர்த்து ஜமியத்துல் உலமா, ஜமியத்து தப்லீக் உட்பட மேலும் வேறு சில அமைப்புகளுடன் நான் செயல்பட்டு இருக்கிறேன்.
சில வருடங்களுக்கு பின், அழைப்பு பணியாற்ற அங்கெல்லாம் வழியில்லை என்பதை என் அனுபவத்தில் கண்டு கொண்டேன். எனது அடிப்படை இலக்கு அரசியல் சார்பற்ற இஸ்லாமிய அழைப்பு பணி. அரசியல் அழைப்பு பணியில் எனக்கு உடன்பாடில்லை. ஆகவே எந்த ஒரு ஜமாத்தும், அமைப்பும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டவில்லை என்பதை உணர்ந்தேன். அழைப்பு பணியென்பதே அரசியல் சாய்வுகளற்ற பணி. ஆகவே எந்த ஒரு குழுவின் தொடர்பும் இன்றி, அத்தனை அமைப்புகளையும் கைவிட்டு நானே ஒரு புதிய அமைப்பை நிறுவினேன்.
பெண்கள், இந்திய முஸ்லிம்கள், மதமும் இஸ்லாமும் என பல்வேறு நூல்களை எழுதியுள்ளீர்கள். நீங்கள் ஒரு புறமும் இன்ன பிற மார்க்க அறிஞர்கள் ஆற்றின் மறுகரையிலும் இருப்பதாக உணர்கிறோம். உண்மையைச் சொன்னால் அவர்களுடன் எங்களைப் போன்றவர்களால் ஒரிரு நிமிடங்களுக்கு மேல் உரையாடலை தொடர முடிவதில்லை. ஆனால் அதில் ஒரு புதிய நம்பிக்கையின் ஒளிக்கீற்றை காண முடிகிறது. 2013 ஆண்டு முழுவதும் உங்களின் நேரடி மேற்பார்வையில் செயல்படும் CPS ஊழியர்களுடன் நேருக்கு நேர் என தனி அமர்விலும், குழு உரையாடலிலும் ஈடுபட்டோம். அவர்களை புதிய வகைமையாக இனங்கண்டோம். கிட்டத்தட்ட 300 மணி நேரங்களுக்கும் மேல் இருந்தும், நடந்தும், இரவு, பகல் என்று பல அமர்வுகள் நீடித்த ஆழ்ந்த கருத்துப் பரிமாற்றம் அவர்கள் மரபை பேணக்கூடியவர்களாக இருந்த போதிலும் நவீன புரிதல் கொண்டவர்களாக சிந்தனையாளர்களால் அடையாளம் காணப்படுகிறார்கள். இது மகத்தான சாதனை என்பது நிச்சயம். அதன் இரகசியம் என்னவென்று சொல்ல முடியுமா?
மனித மனங்களின் இயல்பை ஒட்டி செயல்படுவதே எமது ஊழியப் பணியின் வெற்றி என்பது அடங்கியுள்ளது. ஒவ்வொரு மனிதனும் கேள்வியுடன் பிறக்கின்றான். நான் யார்? எதற்காக நான் படைக்கப்பட்டிருக்கிறேன்? என் வாழ்வின் நோக்கம் என்ன? இஸ்லாம் இதற்கான பதில்களை தன்னுள் வைத்திருப்பதாக நான் நம்புகின்றேன். ஆகவே அந்த முறையை நாம் கடைப்பிடிக்கிறோம். நாம் அரசியல் செய்வதில்லை, அதில் ஒரு போதும் ஆர்வம் காட்டுவதுமில்லை. பிரிவினை எண்ணங்கள், வகுப்புவாத பாகுபாடுகள் அதனால் எழும் மோதல்களை நாம் அறவே தவிர்க்கிறோம். அதைப் போல் எண்ணற்ற பிரச்சனைகள் உள்ளன. நாம் செய்வதெல்லாம் திருக்குர்ஆனிய வழிகாட்டுதலுக்கு ஏற்ப மனித மனங்களை நோக்கி பேசுவதை மட்டும் தான். நீங்கள் மனித மனங்களை நோக்கி அழைப்பு விடுக்கும் போது எந்த கருத்து வேறுபாடும் எழ வாய்ப்பில்லை. எப்பொழுதெல்லாம் நீங்கள் அரசியல் பிரச்சனைகள், வகுப்புவாத சாய்மானங்களை கொள்கின்றீர்களோ உடனே சச்சரவு ஆரம்பமாகி விடும். இயற்கையில் எந்த முரண்பாடும் இருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொருவரும் ஒன்றைப் போன்ற பிறிதொன்று, அவ்வளவு தான்.. இதுவே எங்கள் வெற்றியின் இரகசியமாக இருக்க கூடும்.
திருக்குர்ஆன் உண்மையில் இஸ்லாமிய அரசு என்பதை வலியுறுத்துகிறதா என்ன? சமகால நவீன உலகம் அரசும், மதமும் தனியாக பிரித்து வைக்கப்பட வேண்டும் என கருதுகிறது. அதைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
இந்த மாதிரியான எண்ணங்கள் சரியில்லை என்பதாக உணர்கிறேன். அரசு மற்றும் மதம் என்பதை தனித்தனியாக பிரித்து வைக்க வேண்டும் என்பதும் பின்னர் அதே போன்றது தான். மத நிறுவனங்கள், அரசு அமைப்புகள் என இவைகளை தனித்தனியே மனிதன் எங்கு கொண்டு போடுவான்? மதம் இருக்கும் வரை அரசு என்பதும் இருக்கும். அதிகாரத்துக்கான அரசியல் என்பது தான் இங்கு இருக்கும் பிரச்சனை. ஆகவே அரசியல் என்பதே ஒதுக்கியும், விலக்கியும் வைக்க வேண்டிய ஒன்று. அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற விரும்பினால் தான் பிரச்சனையே உருவாகிறது. ஆகவே அரசியலையும், மதத்தையும் பிரிக்க முடியாது. அரசியல் கோட்பாடு என்பதில் எந்த விவகாரமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற விரும்பினால், குறிப்பிட்ட அந்த பதவியில் எவரேனும் ஒருவரை அங்கு காண்பீர்கள். அவர்களோடு மோதல் ஏற்படுகிறது. என் ஆய்வின் படி, அரசுக்கும் மதம் என்பதற்கும் எந்த வேறுபாடுகளும் இல்லை, இருப்பதெல்லாம் மதத்துக்கும் அதிகாரத்துக்கும் தான்.
தாங்கள் எழுதியுள்ள இரண்டு நூல்களில் இஸ்லாம் ஒரு போதும் பெண்களை ஒடுக்குவதில்லை என்ற வாதத்தை முன் வைக்கின்றீர்கள். ஆனால் முஸ்லிம் சமுக நடத்தை எதார்த்தத்தில் வேறு மாதிரியாக உள்ளது. ஆணாதிக்கம் இந்திய முஸ்லிம் சமுகத்தில் பரவலாகவும், மத குருமார்களிடம் மிக அதிகமாகவும் உள்ளது. இதை எப்படி பார்க்கின்றீர்கள்? அதற்கான காரணம் என்ன?
இஸ்லாமிய வரலாற்றின் பிற்காலங்களில் உருவான பாகுபாடுகளே இவை. முஹம்மத் நபிகள் மற்றும் அவரின் தோழர்கள் காலத்தில் இவ்வகை பிரிவினைகள் இல்லை. இஸ்லாமிய வரலாற்றின் முதல் நூற்றாண்டின் பிற்சேர்க்கைகளே இவை. இஸ்லாத்தில் பெண்களின் உண்மை நிலையை அறிந்துக் கொள்ள மிகப்பெரும் மார்க்க மேதை அல்லாமா நாசருத்தீன் அல்பானி தொகுத்து எழுதியுள்ள “ஹிஜாப் அல்மிராஃஅ லில் இஸ்லாம் - இஸ்லாத்தில் பெண்களின் நிலை” என்ற நூலை வாசித்துப் பார்க்கவும். என்னுடைய கருத்தின் படி, இந்த துறையில் எழுதப்பட்டிருக்கும் நூல்களில் இது மிகச் சிறந்தது. அதனுடன் நான் முழுவதும் உடன்படுகிறேன். ஆகவே என் அறிவுக்கு எட்டியவரை ஆண், பெண் என எந்த வேறுபாடு இல்லை. ஆனால் நிர்வாணத்தை ஊக்குவிக்கும் கட்டற்ற சமுகத்தை நான் ஆதரிக்கவில்லை. முழுமையான சுதந்திரம் என்கிற தான் தோன்றித்தனத்தை நான் ஆதரிக்கவில்லை. அவை தடை செய்யப்பட வேண்டியவை. ஆனால் எந்த ஒரு பெண்ணாவது எளிமையான, இயல்பான, இயற்கையான முறையில் வாழ விரும்புவது எந்த பிரச்சனையுமல்ல. முஸ்லிம் பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டும், நிறைய படிக்க வேண்டும். மேற்கில் உள்ளது போல் இல்லாத வகையில் சமுக வாழ்வின் ஒவ்வொரு துறைகளில் பணியாற்ற பெண்களை அனுமதிக்க வேண்டும். மேற்கு கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை பற்றி பேசுகிறது. அவர்கள் சுதந்திரம் என்பதை வரையறுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது என்கின்றனர். நான் ஒழுக்க விழுமியங்களுடன் கூடிய கட்டுப்பாடான சுதந்திரத்தை ஆதரிக்கின்றேன். இது தான் வேறுபாடு. இதை ஏற்றுக் கொள்ளும் பெண்கள் சுதந்திரமாக இருப்பதை உணரலாம். இதுவே இஸ்லாம் முன் வைக்கும் அளவுகோல். இந்திய சமூகத்தில் இந்த சுதந்திரம் முஸ்லிம் பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கருதுகிறேன்.
சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா குழு பரிந்துரைகளின் படி, இந்திய முஸ்லிம்களின் சமூக மற்றும் பொருளாதார நிலை இந்து மதத்தின் தாழ்த்தப்பட்ட தலித்களை விட மிகவும் பின் தங்கி இருப்பதை சுட்டிக் காட்டுகிறது. ஒரு அறிவு ஜீவியாகவும், மார்க்க மேதையாகவும் இதை எப்படி அணுகுகின்றீர்கள்? இதற்கான புறக் காரணங்களை விட அகக் காரணங்கள் இருப்பதாக நினைக்கின்றீர்களா? சிலர் இதற்கு காரணம் தேவ்பந்த் என குற்றம் சாட்டுகின்றனர். உதாரணமாக அந்த பழமைவாத மத்ரஸா ஆங்கிலம் கற்பது தடை செய்யப்பட்டது என்ற அளவுக்கு மிதமிஞ்சிய ஃபத்வா (மார்க்க தீர்ப்பு) கொடுத்தும், இன்ன பிற வளர்ச்சி சார் விஷயங்களில் படு பிற்போக்காக நடந்து கொண்டதும் காரணம் என்கின்றனர்? அதைப் பற்றி உங்களின் கருத்து என்ன?
நான் சச்சார் குழு பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த காலங்களில் இதைப் போன்ற எண்ணற்ற குழுக்கள் தங்கள் பரிந்துரைகளை அளித்திருந்தன.
"மனிதனுக்கு அவன் செய்த செயலை தவிர வேறொன்றும் கிடைக்காது" திருக்குர்ஆன் 53:39
சலுகைகளால் வளர்ச்சி என்பது சாத்தியமல்ல. நமது தலைவிதியை நாமே உருவாக்கி கொள்ள முடியும். நீதிபதி சச்சார் குழு பரிந்துரை என்பது புகார்களின் அடிப்படையிலும், குறைகளை சுட்டிக் காட்டியும் பேசுகிறது. சச்சார் குழு மதிப்பீடுகள் எதிர்மறையானவை. அது முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு போன்ற சில சலுகைகளை அளிக்க வேண்டும் என்கிற பரிந்துரை செய்கிறது. இதனால் முஸ்லிம்களுக்கு பலன்கள் கிடைக்கும் என நான் நம்பவில்லை. நான் கடும் முயற்சியிலும், சவால்களை எதிர்க்கொள்வதிலும், அயராத உழைப்பிலும் உறுதி கொள்கிறேன். ஆகவே நான் முஸ்லிம்களுக்கு அளிக்கும் அறிவுரை, இது போன்ற குழுக்களை பொருட்படுத்தாதீர்கள். குறை கூறும் வகையில் உள்ள பேச்சிலும், செயலிலும் ஈடுபடாதீர்கள். உடலளவில், அறிவார்ந்த ரீதியில் இறைவன் உங்களுக்கு ஆற்றலை வழங்கியுள்ளான். உங்களால் எதையும் சாதிக்க முடியும். இதற்கான நிறைய எடுத்துக்காட்டுகளை என்னால் அளிக்க முடியும். உதாரணமாக டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமை எடுத்துக் கொள்வோம். அவர் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தார். கடும் உழைப்பால் அவர் இந்திய நாட்டின் குடியரசு தலைவராகவே அவரால் வர முடிந்தது. கஷ்ட காலத்தில் அவரை தூக்கி விட எந்த சச்சார் குழுவும் வந்து உதவவில்லை. இது போன்ற உதாரணங்களால் உத்வேகம் கொள்ளவும். இதைப் போன்று பலர் வாழ்க்கையில் எத்தனையோ துறைகளில் பெரும் சாதனை செய்திருக்கின்றனர். நான் கடும் முயற்சி, கடின உழைப்பில் நம்பிக்கை கொள்கிறேன். சச்சார் குழு அல்லது எந்த ஒரு குழுவின் பரிந்துரைகளின் மீதும் எனக்கு நம்பிக்கையில்லை. முஸ்லிம்கள் விரும்பினால் தங்கள் தலை விதியை தாங்களே மாற்றிக் கொள்ள முடியும். சச்சார் குழு அல்லது வேறு ஏதோ ஒரு குழு வந்து இதை மாற்றப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.
தேவ்பந்த் சிந்தனைப் பள்ளி பற்றி உங்களின் நிலைப்பாடு என்ன? குறிப்பாக ஒரே நேரத்தில் மும்முறை மணவிலக்கு கூறுதல் தொடர்பான விஷயங்கள். மிக மோசமாக கையாளப்பட்ட உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இம்ரானா என்ற அபலைப் பெண்ணின் வழக்கை அவர்கள் கையாண்ட முறை சரிதானா?
இந்த கேள்வி சட்டப் பிரச்சனை தொடர்பானது. ஸலஃபி (முன் சென்ற மூத்த தலைமுறையை பின் தொடரும் முன்னணியாளர்)களுக்கும் ஹனஃபி (இஸ்லாமிய சிந்தனைப் பள்ளியை மரபார்ந்து பின் தொடர்வோர்)களுக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளதை ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். நான் ஹனஃபி பிரிவு குடும்பத்தில் பிறந்து, அதை கடைப்பிடித்துக் கொண்டும் வருகிறேன். இருப்பினும் இந்த விவகாரத்தை பொறுத்தளவில் ஸலஃபி கொள்கையே சரியானது என நினைக்கிறேன். பொதுவாக ஹனஃபி கோட்பாடு “(தஷதுத்) கடுமையான போக்கு மற்றும் தீவிரத்தன்மை (குலுஃ) அடிப்படையாக கொண்டது. இந்த விஷயத்தில் ஸலஃபி கோட்பாடே சரியானது. இது தொடர்பாக நான் சில கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். நான் ஹனஃபி பிரிவு முஸ்லிமாக இருந்தாலும் முத்தலாஃக் (மும்முறையாக ஒரே அமர்வில் செய்யப்படும் விவாகரத்து) விஷயத்தில் ஸலஃபி கொள்கையை நான் ஆதரிக்கிறேன்.
தேவ்பந்த் மதரசா ஆங்கிலத்திற்கு எதிராக கொடுத்த பத்வா குறித்து என்ன நினைக்கிறீர்கள். மேலும் பல உலக விவகாரங்களில் அவர்களின் நிலைபாடு குறித்து உங்கள் கருத்து என்ன? பலர் தேவ்பந்திகளின் இம்மாதிரியான நிலைபாடுகள் தான் இந்திய முஸ்லிம் சமூகத்தின் பின்னடைவிற்கு காரணம் என்கிறார்கள்.
தேவ்பந்த் உலமாக்கள் ஆங்கிலத்திற்கு எதிராக கொடுத்த பத்வாவை நான் ஆதரிக்கவில்லை. இஸ்லாம் எந்த மொழிக்கும் எதிரானதல்ல. மேலும் உலக விவகாரங்கள் மற்றும் அறிவியலுக்கு எதிராக இஸ்லாமிய பிரதிகள் கருத்து சொல்லவில்லை. தேவ்பந்த்களின் உலகியலுக்கு எதிரான பல விஷயங்களில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு.
இந்திய மத்ரஸாக்களை நவீனமயமாக்க வேண்டும் என்கிற கோரிக்கை, அது இந்திய முஸ்லிம் சமுகம் வளர்ச்சி நோக்கி பயணிக்கும் தீர்வு என கருதப்படுகிறதே - சரியா?
மத்ரஸாக் (இஸ்லாமிய மத கல்வி நிலையங்) களை நவீன மயமாக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. மத்ரஸாவின் தன்மை, வகைப்பாடு என்பது சரியாகவே உள்ளது. மத்ரஸாக்களில் இருந்து தான் ஷிப்லி நௌமானி, செய்யத் சுலைமான் நத்வி போன்ற மாபெரும் ஆளுமைகள் உருவாகி வந்தனர். இது போல் இன்னும் எத்தனையோ பேர்கள்? மத்ரஸாக்களில் ஏதோ கோளாறு இருப்பதாக நான் எண்ணவில்லை. மத்ரஸாவின் தோன்றியதன் மூலக் காரணம் அறியாதவர்கள் தான் அதை நவீனப்படுத்த வேண்டும் என்கிற மாதிரி பேசி வருகின்றனர்.
மத்ரஸா முறை சரியாகவே உள்ளது. ஆனால் எது தேவைப்படுகிறது என்றால், அது நவீன மயமாக்கம் என்பது அல்ல. அதிக எண்ணிக்கையில் தகுதியான மாணவர்களை மத்ரஸாவில் சேர்ப்பதை ஊக்குவிக்க வேண்டும். திறமையான மாணவர்கள் இப்பொழுதெல்லாம் மத்ரஸாவுக்கு செல்வதில்லை. மத்ரஸாக்கள் இம்மாதிரியான துடிப்பான இளைஞர்களை தன் பக்கம் கவர்ந்து இழுப்பதில் தோற்றுப் போய் விட்டன. இது தான் இங்கிருக்கும் கேள்வி. அதை விட்டுப் பார்த்தால் உள்ள அமை.ப்பு சரியானதே. மத்ரஸாவில் பெரிய குறைப்பாடு எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. நவீன மயமாக்கல் என்பது வெறும் ஒரு சொல். மத்ரஸா என்பதை நவீன மயமாக்க வேண்டும் என்பவர்களிடம் நான் கேட்டிருக்கிறேன். அது என்னவென்று திட்டவட்டமாக ஏதும் சொல்ல முடியுமா?. அவர்களில் எவருமே நவீன மயமாக்கல் என்பதை தெளிவாக எனக்கு சொல்லித் தரவில்லை. ஆகவே இது முஸ்லிம் சமுகம் சரியான போட்டியாளரை, தன்னம்பிக்கை உள்ளவரை மத்ரஸாவில் கொண்டு போய்ச் சேர்த்தால் மறுபடியும் மத்ரஸா ஷிப்லி நௌமானி,, செய்யத் சுலைமான் நத்வி போன்றவர்ளை அதனாலும் உருவாக்க முடியும். இது மத்ரஸாவில் உள்ள மிக முக்கியமான பிரச்சனை.
ஷரியா சட்ட இஜ்திஹாத் பற்றி உங்களின் நிலைபாடு என்ன? சிலர் இஸ்லாமிய நூற்றாண்டின் முதல் இரு நூற்றாண்டுகளுக்குள் இஜ்திஹாதுக்கான கதவு நிரந்தரமாக மூடப்பட்டு விட்டது என்கின்றனர். சரியா?
இஜ்திஹாதுக்கான கதவு மூடப்பட்டு விட்டது என்று சொல்லப்படுவது சரியல்ல. உலமாக் (முஸ்லிம் மார்க்க அறிஞர்)களின் சரியான நிலைபாடும் அதுவாக இருக்க முடியாது. இல்லை., நான் இது பற்றி வெளியிட்ட இரு நூல்கள் “ஃபிக்ரே இஸ்லாமி - இஸ்லாமிய சிந்தனை அல்லது இஸ்லாமிய கோட்பாடு” மற்றும் “மஸாயிலே இஜ்திஹாத் - மார்க்கத்தில் ஒருமித்த நிலைப்பாடு” போன்றவையாகும். ஆகவே இது தவறான கருத்து. இஸ்லாமிய மார்க்க மேதைகளில் எவருமே இஜ்திஹாதுக்கான கதவு மூடப்பட்டது என ஒரு போதும் சொல்லவே இல்லை. அறவே இல்லை. இஜ்திஹாத் என்பது ஒரு தொடர் செயல்பாடு. மூத்த மார்க்க மேதைகளின் நிலைப்பாடும் இதுவே. அவர்களில் எவரும் இதற்கு எதிராக இல்லை. இது தொடர்பாக நான் எழுதியிருக்கும் நூலில் அவர்களின் கருத்துக்களை மேற்கோளாக பயன்படுத்தி இருக்கிறேன். மார்க்க மேதைகளின் சரியான பார்வையும் இதுவே. ஆனால் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழியை கற்றுத் தேர்ந்த மார்க்க மேதைகள் மட்டுமே இஜ்திஹாத் செய்ய தகுதியானவர்கள். முன் சென்ற மார்க்க மேதைகள் எழுதி வைத்த நூல்களை படித்தவர்களாக அவர்கள் இருக்க வேண்டும் என்பது முன் நிபந்தனை. இஜ்திஹாத் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை உள்ளவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். ஜாஹில் (அறியாமை நிறைந்தவர்)களால் ஒரு போதும் இஜ்திஹாத் செய்ய முடியாது. என்னுடைய இந்த நிலைப்பாட்டில் எந்த ஒரு மார்க்க மேதைக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை.
இஸ்லாமிய தீவிரவாத குழுக்களில் சில, புனிதப் போர் என்கிற பொருளில் ஜிஹாத் என்பதை தியாகத்துக்கான இஸ்லாமிய குறியீடு என்கிறனர். அது அவர்களை அதிகாரத்துக்கு இட்டுச் செல்லும் என நம்புகின்றனர். அதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள். இஸ்லாம் இன்று எதிர்க் கொள்ளும் சவால்களில் இது மிக முக்கியமானதல்லவா?
ஜிஹாத் என்றால் கடும் முயற்சி, கடின உழைப்பு என்பது அகராதிப் பொருள். ஜிஹாத் என்றால் அமைதியான பெரும் முயற்சி. ஜிஹாத் என்பதற்கும், ஃகிதால் என்பதற்கும் வேறுபாடு உண்டு. ஃகிதால் என்றால் மட்டும் தான் போர் எனப்படும். எல்லா மார்க்க மேதைகளும் கிதால் என்பதை சாதாரண பொது மக்களுக்கானது என கூறவில்லை. ஃகிதால் (போர்) என்பது அரசின் கடமை அது ஆட்சியாளர்களின் மீதுள்ள பொறுப்பு. அரசு சார்பற்ற, தன்னார்வ தொண்டு இயக்கங்கள், தனிப்பட்ட முறையில் கூடி இருக்கும் இயக்கவாதிகளுக்கு ஆயுதங்களை கையாள அனுமதியில்லை. இதுவே இஸ்லாத்தின் சரியான நிலைப்பாடு. இஸ்லாமிய சட்ட முறையான ஃபிக்ஹில் ஒரு விதியுண்டு. “அர் ரஹீலுல் இமாம்” அதாவது போரிடுதல் என்பது அரசின் கடமை என்பதாகும். ஆகவே இன்றைய கால கட்டத்தில் அரசை சாராமல் ஆளாளுக்கு ஜிஹாத் என்று கிளம்பி இருப்பதெல்லாம் இஸ்லாம் ஆகி விடாது. ஆயுதங்களை கையாள்வதன் உரிமையையும், பொறுப்பையும் இஸ்லாம் அரசுக்கு மட்டுமே அளித்துள்ளது, வேறு எவருக்கும் அல்ல.
பொது வெளியில் வைத்து சவுதி அரேபியாவில் தலை கொய்யப்பட்ட ரிஸானா நஃபீக் என்ற இலங்கைப் சிறுமியின் சோகக் கதையைப் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நம்புகின்றோம். மரண தண்டனையைப் பற்றி உங்களின் பார்வை என்ன?
மரண தண்டனை (ஹத்) என்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது என்பதாக உணர்கிறேன். ஆனால் திருக்குர்ஆனில் எந்தெந்த குற்றங்களுக்கெல்லாம் மரண தண்டனை வழங்கலாம் என்பதை கூறுகிறதோ அதற்கு மட்டுமே என்பதையும் சேர்த்து விளங்கிக் கொள்ள வேண்டும். எந்த ஒரு அரசும், மனிதனால் இயற்றப்பட்ட எந்த ஒரு சட்டமும் மரண தண்டனை வழங்க முடியாது, அதற்கான உரிமை அவர்களுக்கு இல்லை. அது இறைவனுக்கென்று உரிய அதிகாரம், அதை திருக்குர்ஆனில் இருந்து மட்டுமே புரிந்து கொள்ள முடியும். திருக்குர்ஆன் வகைப்படுத்தும் பிரிவுகளுக்குள் வராத எந்த ஒரு குற்ற வழக்கிலும் மரண தண்டனை அளிக்க கூடாது. குறைவான தண்டனை ஏதேனும் அளித்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, சாட்டையடி போன்ற குறைவான மாற்று தண்டனைகளை அளிக்கலாம் என்பதே என் கருத்து.
வஹாபிசம் பற்றி உங்களின் கருத்து என்ன? உண்மையிலேயே இஸ்லாமிய வளர்ச்சிப் போக்கில் இந்த பிரிவுக்கு இடம் இருக்கிறதா? காரணம் “சமாதான தூதர் - முஹம்மத்” என்கிற உலக அளவில் புகழ்பெற்ற உங்களின் நூலில் ஆளானப்பட்ட “இப்னு தைமிய்யா”வையே விமர்சனம் செய்துள்ளீர்களே…
நீங்கள் குறிப்பிடும் இடு பெயர் அவர்களின் சொந்தப் பெயரல்ல. வஹாபி என கூறப்படும் எவரும் அவ்வாறு தம்மை அழைத்துக் கொள்வதில்லை. அவ்வாறு எவரையும் நான் சந்தித்ததில்லை. வஹாபி என்பது தவறான பெயராகும். யாரும் தம் சொந்த விருப்பப்படி பிறரை பெயரிட்டு அழைக்க முடியாது. அந்த மக்கள் தம்மை வஹாபி என கூறிக் கொள்வதில்லை. அவர்கள் தம்மை “ஸலஃபி (முன் சென்ற மூத்த தலைமுறையை பின் தொடரும் முன்னணியாளர்)கள் என கூறலாம். ஆகவே அவர்களை அந்த பெயரில் குறிப்பிட்டு பேசுங்கள். அல்லது அஹ்ல ஹதீஸ் (நபிமொழி அடிப்படையிலான மார்க்க கோட்பாட்டாளர்)கள் என சொல்லுங்கள். நான் அறிந்து வஹாபி என அழைக்கப்படும் எவரும் தம்மை அவ்வாறு அழைப்பதை ஏற்றுக் கொள்வதில்லை. ஆகவே அவர்களை ஸலஃபி அளவீடுகளில் வைத்துப் பாருங்கள். வஹாபி அளவீடு தவறானது.
அடுத்து, நீங்கள் குறிப்பிடும் விஷயமான இப்னு தைமிய்யா மிகப்பெரும் அறிஞர். மார்க்கத்தை புரிந்துக் கொள்வதில் அறிஞர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு இருப்பது சர்வ சாதாரண விஷயம். இப்னு தைமிய்யாவுக்கும், இப்னு கய்யூமுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது, அதே போல் அபு ஹனீஃபாவுக்கும் இமாம் அஹ்மதுக்கும் இடையில் கூட கருத்து வேறுபாடு இருந்தது. ஆகவே கருத்து வேறுபாடு என்பது பொதுவான நடைமுறை. எவருமே இறைத்தூதரைப் போன்றவர்கள் அல்ல. கருத்து வேறுபாடு என்பது தடுக்கப்பட்டதும் அல்ல. இதை தவிர்த்து இப்னு தைமிய்யா ஒரு பேரறிஞர் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். அதற்காக அவரை மதிக்கவும் செய்கிறேன். அதே நேரத்தில் அவருடன் எனக்கு கருத்து வேறுபாடு இருக்கிறது. நான் மட்டுமே இப்னு தைமிய்யா அவர்களை விமர்சிக்கவில்லை. பலர் விமர்சித்திருக்கின்றார்கள். இது போன்ற வேறுபாடுகள் எல்லா இடங்களிலும் உள்ளன.
அறிவார்ந்த ரீதியாக, தாங்கள் மார்க்க அறிஞர்களில் மிக முற்போக்கானவர். மதத்தின் பிணைப்பு என்ன? இந்திய முஸ்லிம் மார்க்க அறிஞர்களின் பொதுப் புத்தியில் தங்களைப் பற்றி பா.ஜ.க. ஆதரவாளர் என்கிற கருத்து நிலவுகிறதே? அது உண்மையா? “ஹிந்துத்வா” பற்றி வெளிப்படையாக பேசுங்களேன்?
இது முழுக்க முழுக்க தவறானது. எனக்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வுக்கும் எந்த ஒரு தொடர்புமில்லை. கிடையவே கிடையாது. இந்த குற்றச்சாட்டு வெறும் அவதூறு, புரளி. நான் செய்வதெல்லாம் இஸ்லாமிய நூல்களை சமுகத்தின் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்க்கிறேன். குறிப்பாக திருக்குர்ஆன் மொழியாக்கத்தை இலட்சக் கணக்கில் வினியோகிக்கிறோம். நான் மற்றும் எனது சக தோழர்கள் எல்லா விதமான மாநாடுகள், கருத்தரங்குகளில் கலந்து கொண்டு அங்கு வரும் பார்வையாளர்களுக்கு திருக்குர்ஆனை பரிசாக அளிக்கிறோம். ஆகவே அவ்வாறான கூட்டங்களில் நாங்கள் கலந்துக் கொள்வது திருக்குர்ஆனை கொண்டுப் போய்ச் சேர்க்க வேண்டும் என்பதற்காக மட்டுமே. அது போலவே நாம் சில நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டிருக்கிறோம். அதை தவிர்த்து எனக்கும் நீங்கள் குறிப்பிடும் அமைப்புக்கும் எந்த ஒரு தொடர்புமில்லை. அதை யாராலும் நிருபிக்கவும் முடியாது. இது தவறு, முழுக்க முழுக்க தவறான பேச்சு.
சமூக அறிவியக்க செயல்பாடு, தீவிர இலக்கியம் போன்ற துறைகளில் ஈடுபாடு உள்ளவர்களின் தொடர்பில் இருக்கிறோம். எமது அவதானத்தில் கிறித்துவம், ஜைனர்கள், போன்ற மைய நீரோட்ட சமூகத்தில் வேலை வாய்ப்பு, வர்த்தகம், கல்வி, மருத்துவம் என்பவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். ஆசிய முழுவதும் பரவியுள்ள சமூகம் பொதுவாகவும், அவற்றில் முஸ்லிம்கள் குறிப்பாகவும் எப்பொழுதும் பாபரி மஸ்ஜித், காஷ்மீர், பாலஸ்தீனம், கிழக்கு ஐரோப்பிய கொசுவோ, மியான்மர் பர்மிய அராகன், பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ என பேசிக் கொண்டே கிடக்கின்றனர். ராமர் கோயில், பொதுச் சிவில் சட்டம், அகண்ட பாரதம் போன்ற பிரச்சனைகளை முன் வைத்து இந்துக்களின் இளைய தலைமுறையிடமும் இதே மாதிரியான மனப்பான்மை வளர்ந்து வருகிறது. பெருமித உணர்வு என்கிற பாசிஸமும், அடையாளம் பேணல் என்கிற குறுங்குழுவாதம் இவ்விரண்டில் ஏதேனும் பொருத்தப்பாட்டை காண்கின்றீர்களா? எது அவர்களை அவ்வாறு யோசிக்கவும், செயல்படவும் தூண்டுகிறது?
சுருக்கமாக சொன்னால் இது Ghetto mentality என ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. அதாவது குறுங்குழுவாதம் அடைப்பட்ட சீழ் பிடித்த மனோபாவம். இரு பெரும் சமூகங்கள் அதிலிருந்து விடுபட்டு கலந்துரையாடினால் தான் இப்பிரச்சனையை எளிதாக களைய முடியும். இல்லா விட்டால் முடிவில் அழிவைத் தவிர எஞ்சுவது எதுவும் இருக்காது
சமீப கால முஸ்லிம்கள் சதாம் ஹுசேன், கர்னல் கதாஃபி ஆகியோரை மாவீரர்களாக போற்றினர். ஒரு ஐம்பது ஆண்டு காலத்தை பின்னோக்கி பார்த்தால் கமால் அப்துல் நாசர், சுஹர்னோ, யாசர் அராஃபத் ஆகியோர் அவ்வாறாக அடுத்தடுத்து பேசப்பட்டனர். மலேசியாவின் மஹாதிர் முஹம்மதை தவிர்த்து மற்ற அனைவரும் எதிர்நிலையில் நின்று தம் நாட்டை வழிநடத்தினர் எனப்படுகிறது. இம்மாதிரியான குணாம்சம் பொருந்திய தலைவர்கள் அடிக்கடி ஏன் முஸ்லிம் சமுகத்தில் மட்டுமே உருவாகி வருகின்றனர்?
இந்த விஷயத்தில் நான் எந்த கருத்தும் கூறவில்லை. இதற்கென்று தனித்த, அபூர்வ கருத்தும் எதுவும் என்னிடம் இல்லை. வரலாற்றுப் போக்கில் தவறான முடிவுகளால் பல்வேறு நிகழ்வுகள் சம்பவித்துள்ளன. இது இன்றைய தலைவர்களை மட்டும் தொடர்புடைய விஷயமல்ல. வரலாற்றில் அவ்வாறான பல்வேறு உதாரணங்களை காணலாம். மக்கள் சிலரை தலைவர்களாக ஏற்றுக் கொண்டு இருந்து விட்டு, பிற்காலத்தில் அவர்கள் சரியான தலைவர்களாக பரிணமிக்காமல் போயுள்ளனர். ஆகவே பின்னோக்கி பார்ப்பதை விட்டு விட்டு, முன்னோக்கி பார்வையை திருப்பினால் நல்லது. கடந்த காலத்தில் நாம் எடுத்த முடிவுகள் தோற்றுப் போயிருக்கலாம். அவ்வாறான பட்சத்தில் மீண்டும் ஒரு முறை நன்கு திட்டமிடவும். மீள் கட்டுமானம் செய்யவும். தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, வேறு புதிய தந்திர உபாயத்தை கடைப்பிடிக்கவும். இதுவே இன்றைய தேவை.
வடக்கு முஸ்லிம்களின் தெற்கத்திய பார்வையில் இருந்து பெருமளவு மாறுபடும் தலைவர்களில் மிக முக்கியமானவராக தோற்றமளிக்கின்றீர்கள். அதற்கு காரணம் வட இந்தியா அமைதி முன்னெடுப்புகளை விட்டு வெகு தூரம் விலகிச் சென்று விட்டிருக்கிறது. ஆகவே தென்னிந்தியாவிடம் எதை கண்டீர்கள்? இங்கு இருக்கும் அற மதிப்பீடுகளை, சமூக இணக்கத்தை மேற்கொண்டு மெருகேற்ற வழி சொல்லுங்கள்?
ஆம், நான் நேர்மறையானவன். அது தென்னிந்தியாவையும் உள்ளடக்கிய முழு உலகம் குறித்தும், பூமி கோள் முழுவதின் மீதும் நன்னம்பிக்கை, நல்லெண்ணம் கொண்டிருக்கிறேன். நம் அனைவரையும் இறைவன் ஒருவன் தான் படைத்தான். அந்த இறைவனின் படைப்பில் எந்த வேறுபாடுமில்லை. ஆகவே நான் முழு உலகிற்கும் நன்மை மீதே நம்பிக்கை வைக்கின்றேன். “நசஹ் - நற்செய்தி அளிப்பவர்” தான் அழைப்பாளர் ஆவார். ஆகவே அதே யுத்தியை பயன்படுத்த வேண்டும். அதனால் நான் யாரையும் வெறுப்பதில்லை. எவர் மீதும் எனக்கு குறை இல்லை. தென்னிந்தியாவையும் உள்ளடக்கிய முழு உலகிற்கும், முழு மனித குலத்துக்கும் நற்செய்தியாளனாக இருக்கிறேன். இது திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டு இருக்கும் இறைத்தூதர்களின் நடைமுறையாகும்.
(அன்றி) என் இறைவனின் தூதையே நான் உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். அன்றி, நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய நல்லுரை செய்பவனாகவும் இருக்கிறேன் 07:68
ஆகவே இறைத்தூதர்களின் இந்த நடைமுறையில் நான் இருக்கிறேன். அந்த வகையில் எனது நற்செய்தி அனைவருக்கும் பொதுவானது. என்னால் யாரையும் வெறுக்க முடிவதில்லை. எனது ஒரே பணி, திருக்குர்ஆனை எல்லோரிடத்திலும் கொண்டு போய்ச் சேர்ப்பதும், இஸ்லாமிய கொள்கைகளை உலகம் எங்கும் பரப்புவது மட்டுமே.
“கியாமத்-கா-அலாரம்” மறுமை நாளில் முன்னறிவிப்புகள் என்ற நூலில் முஸ்லிம் பொது புத்தி கண்ணோட்டத்துக்கு நேரெதிரான கருத்தை முன் வைத்துள்ளீர்கள். அதேப் போல் தங்களின் அர்-ரிஸாலா மாத இதழின் சமீபத்திய இதழ் 447 எண்ணில் முழு இஸ்லாமிய வரலாற்றுப் பாரம்பரியத்தில் இப்னு கல்தூனை தவிர்த்து விட்டு பார்த்தால் சுய சிந்தனையாளர்கள் யாருமே தோன்றவில்லை என அதிரடியாக கூறி விட்டீர்களே… தீவிர பிரஞ்சையுடனும், பேசிய விஷயத்துக்கும் பொறுப்பேற்கின்றீர்களா?
ஆம், நாம் சுய சிந்தனை கொண்டவர்கள். அந்த கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமையும் பெற்றவர்கள். அவ்வாறு நான் மட்டுமில்லை, இன்ன பிற அறிஞர்களும் அவ்வாறு உள்ளனர். நான் சொன்னது / எழுதியதென்னவென்றால் சுயேச்சையான சிந்தனையாளர் இப்னு கல்தூன் மட்டுமே. அது ஒன்றும் நரகத்துக்கும் சொர்க்கத்துக்குமான விஷயமல்ல. அது கல்விபுலத்தின் அறிவார்ந்த விவாதத்திக்குரியது. மேலும் அவ்வாறான எனது கருத்தில் எந்த தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
கொந்தளிப்பான 1993-ம் ஆண்டுகளின் ஆரம்ப கட்டத்தில் தமிழகத்து காஞ்சி மற்றும் மைசூர் சிருங்கேரி மடத்துக்கும் சென்று வந்துள்ளீர். அதைப் பற்றிய உங்களின் பயண பதிவு நூலான “அஸ்ஃபாரே ஹிந்த் - தென்னிந்திய பயண அனுபவங்கள்” என்ற நூலை வாசித்து இருக்கிறோம். அதில் விடுப்பட்ட எதேனும் சுவையான சம்பவங்களை நினைவு கூற முடியுமா?
அவற்றை என்னால் இப்பொழுது நினைவு கூற முடியவில்லை. ஆனால் வழக்கமாக எல்லா இடங்களுக்கும் நான் சென்று வருகிறேன். இந்து, கிறிஸ்துவ, ஜைன நிறுவனங்கள் அனைத்திற்கும் போய் இருக்கிறேன். யாருக்கு எதிராகவும் ஒரு தலைப்பட்சமான, முன் முடிவுகள் கொண்ட விருப்பு வெறுப்பில்லை. ஆகவே எல்லா மடங்களுக்கும் எளிதாக சென்று வருகிறேன். இது எந்த லௌகீக உள் நோக்கமும் அற்ற (தாயி) இஸ்லாமிய அழைப்பாளன் என்கிற அளவிலும், பரஸ்பர மரியாதைக்குரிய சந்திப்பு மட்டுமே.
உங்களுக்கென்று தனித்த சிந்தனையைக் கொண்டவராக காணப்படுகின்றீர்கள். அது எப்படி வந்தது? அதை எப்படி உணர்கிறீர்கள்? கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அர்-ரிஸாலா என்ற மாத இதழை வெளியிட்டு வருகின்றீர்கள். இணையத்தில் கிடைக்கும் அதன் முழு தொகுப்பை பார்வையிட்டதிலும், உங்கள் சிந்தனைப் போக்கை பின் தொடர்ந்ததிலும் அவற்றை இரு கட்டங்களாக வகைப்படுத்துகிறோம். 1960 - 1990 என்ற முதல் பாதி முஸ்லிம் மைய நீரோட்டமாகவும், அதன் பிறகு கடந்த 25 ஆண்டுகளாக நீடித்து வரும் உங்களின் சொற்பொழிவு, எழுத்து என்று தொடரும் பிரச்சாரப் பயணம் பரந்த மனித குலத்தை நோக்கி பேசுவதாகவும் எண்ணுகிறோம். இதை பரிணாமம் என்பீர்களா அல்லது இதை வெறும் ஒரு திட்டமிடப்படாத தற்செயல் நிகழ்வாக கருதுகின்றீர்களா?
நீங்கள் குறிப்பிடும் இரு பகுதியிலும் என்னிடம் அடிப்படையில் எந்த ஒரு முரண்பாட்டையும் நீங்கள் காண முடியாது. நான் உத்திர பிரதேச மாநிலம் ஆஸம்கர் என்கிற ஊரில் 1924 ஆம் ஆண்டு பிறந்தேன். அந்த காலத்தில் நான் மஸ்ஜித், மத்ரஸா மற்றும் முஸ்லிம்களை சுற்றி வாழ்ந்து வந்தேன். ஆகவே இயற்கையாகவே நான் முஸ்லிம்களை நோக்கி பேசி இருக்கிறேன். காரணம் அப்பொழுது அவர்களை மட்டுமே என்னால் அடைய முடிந்தது. பிறகு என்ன நிகழந்தது என்றால், நான் ஆங்கிலம் கற்றுக் கொண்டேன். அதனால் மேற்கத்திய சிந்தனைகளை கொண்ட நூல்களை வாசித்தேன். படிப்படியாக எனது பணியாற்றும் இடத்தின் பரப்பு அதிகரித்தது. பல்வேறு மாநாடுகள், கருத்தரங்குகளில் இருந்து பேசச் சொல்லி எனக்கு அழைப்புகள் வர ஆரம்பித்தன. இவ்வகையான கருத்துப் பரிமாற்றங்களால் எனது அழைப்பு பணியின் வீச்சை அதிகரிக்கும் வாய்ப்புகளை பெற்றேன். ஆக, இதை முரண்பாடாக கொள்ள முடியாது. இது எனது களச் செயல்பாட்டின் இயல்பான பரிணாம வளர்ச்சி என்றே கொள்ள முடியும். இதுவே இயற்கையானதும் கூட. இதை பொதுமைப்படுத்தி பார்க்கவும்.
மேற்கத்தியர்கள் கடல் கடந்து அவர்கள் சென்ற இடங்களின் உள்ளூர் மொழியை கற்றுக் கொண்டனர் என்பதுடன் நிற்காமல் அதில் அபாரமான தேர்ச்சியும் பெற்று மிகப் பெரும் பங்களிப்பு செய்திருக்கின்றனர். அதற்கு காரணம் மொழிப்பயிற்சி என்பதை வாடிகனிய கிறிஸ்துவம் அடிப்படை நிபந்தனையாக ஊழியப் பணியாளர்களுக்கு வைத்திருந்ததை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதற்கு மாறாக முஸ்லிம் (தாயி) அழைப்பாளர்களின் உள்ளூர் மொழியாளுமை பலவீனம் என்று கூட சொல்ல முடியாத அளவுக்கு படுமோசமாக இருப்பதை காண்கிறோம். இதுவே முஸ்லிம் உலகின் எதார்த்தம். இருப்புக்கும், தேவைக்கும் இடையே உள்ள வெற்றிடத்தை எப்படி நிரப்புவது?
நீங்கள் சொல்வது சரியான கருத்து. இந்த உண்மையை அங்கீகரித்து நமது பழக்க வழக்கங்களில் உள்ள தீய அம்சத்தை சரி செய்ய வேண்டும். நாம் எல்லா மொழியையும் கற்க வேண்டும். காரணம் ஒவ்வொரு முஸ்லிமும் இறைவனின் நற்செய்தியாளன். ஆகவே அழைப்பாளன் அழைப்பு விடுக்கப்பட்ட மக்களின் மொழியை நிச்சயம் கற்க வேண்டும் அதில் பயிற்சி எடுக்க வேண்டும்.
மேலும் (நபியே! ஒவ்வொரு சமுகத்தாருக்கும்) அவர்களுக்கு (நம் தூதுத்துவத்தை) அவர் விளக்கி கூறுவதற்காக எந்த ஒரு தூதரையும் அவ(ரவ)ருடைய சமுகத்தாரின் மொழியைக் கொண்டேயல்லாது நாம் அனுப்பவில்லை திருக்குர்ஆன் 14:04
அந்தந்த பகுதியில் பேசப்படும் மொழியறியாமல் மக்களிடம் எப்படி பணியாற்ற முடியும்? முஸ்லிம்களிடம் தஃவா மனோபாவம் குறைந்து போய் விட்டதே இதற்கான காரணம். இது எதார்த்தம். முஸ்லிம்கள் உள்ளூர் மொழியில் ஆர்வம் காட்டுவதில்லை என்பது நானும் பதிவு செய்கிறேன். எனது ஆய்வின் படி முஸ்லிம்களிடம் தஃவா ஆர்வம் இல்லாமல் போனதே ஆகும்.
இஸ்லாமிய சூஃபி துறவிகளைப் போன்ற (சைவ) சமய சித்தர்கள் தென்னிந்தியாவில் சமாதானக் கொள்கையை பரப்பியவர்கள். ஆனால் எதெற்கெடுத்தாலும் வடக்கை நோக்கும் பழக்கம் இங்கு ஏற்பட்டு வருகிறது. இந்து, முஸ்லிம் என இரு பெரும் மனித பரப்பும் இந்த ஈர்ப்பில் மயங்கியுள்ளனர். எடுத்துக்காட்டாக கேரள பல்கலைக்கழக தேர்வு ஒன்றில், கேள்வி தாளை தயாரித்த போது இஸ்லாமிய தூதரை அவதூறு செய்து விட்டதாக எழுந்த சர்ச்சையின் போது மாணவர்களில் உள்ள சில தீவிர போக்கு உள்ளவர்கள் அந்த பேராசிரியரின் கை விரல்களை முறித்தும், முழுவதுமாக நசுக்கியும் விட்டனர். சகிப்புத்தன்மைக்கு பெயர் பெற்ற தென்னிந்தியாவில் இது நிச்சயம் மோசமான திருப்பம். இதை முறியடித்து அமைதி முயற்சிகளை எப்படி முன்னெடுப்பது?
இந்த துயர நிகழ்வை நானும் செய்தித் தாள்களில் பார்த்தேன். இந்த பிரச்சனையை அரசு மற்றும் நிர்வாக அமைப்பு தான் கையாள முடியும். இவ்வாறு மோசமாக செயல்படும் உரிமை யாருக்கும் இல்லை. இது ஒரு குற்றச்செயல். ஒரு சாதாரண இஸ்லாமிய அழைப்பாளன் என்கிற நிலையிலும், முறையிலும் இந்த விஷயத்தில் என்னால் ஒன்றும் செய்ய இயலாது. ஆகவே அரசு தலையிட்டு நீதியை நிலைநாட்டும் என நான் நம்புகிறேன். நியாயம் தீர்ப்பது எனது பணியுமல்ல, அது என்னால் ஆக கூடியதும் அல்ல. இது நிர்வாக அமைப்பின் கடமையில் உள்ளது. அதே நேரம் நடந்த சம்பவம் சரியானது அல்ல, மிக மிக தவறான மோசமான செயல் அது. வன்முறையை முன்னெடுத்துச் செல்ல எவருக்கும் உரிமையில்லை, அதை அனுமதிக்கவும் கூடாது.
இந்திய முஸ்லிம் அறிவு ஜீவிகள் சிலரின் கட்டுரை தொகுப்புகளை தனி நூல் வடிவிலும், அவ்வப்போது ஆங்கில நாளேடுகளிலும் வாசித்து வருகிறோம். அவற்றில் பரவலாக உங்களின் கருத்துக்களின் ஒரு பகுதியையோ அல்லது முழுமையாகவோ அப்படியே கையாளப்பட்டுள்ளது அல்லது உங்களின் கருத்துக்களை அவர்களின் நடையில் மீள் படைப்பாக்கம் செய்திருப்பதாக கண்டடைகிறோம். ஆனால் அது குறித்து அந்த நூல்களில் அடிக்குறிப்பு அல்லது பிற்சேர்க்கை என எங்குமே அவர்களால் உங்களைப் பற்றி கூறப்படவே இல்லை. ஆகவே முற்போக்கான ஆங்கில வாசகர்கள் மத்தியில் உங்களைப் போன்ற மார்க்க பின்னணியில் வந்தவர்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதை காண்கிறோம். உங்களின் அனைத்து நூல்களில் பெங்குயின் மற்றும் ரூபா பதிப்பகம் வெளியிட்ட இரண்டு நூல்களை தவிர்த்து இது வரை தாங்கள் வெளியிட்டுள்ள 200 உருது மற்றும் 25 ஆங்கில நூல்கள் அனைத்தின் பதிப்புரிமையை விட்டுக் கொடுத்திருப்பதும் ஒரு வகையில் காரணம் என்கிறேன். இந்த கோணத்தில் யோசித்திருக்கின்றீர்களா?
எல்லோரும் சுதந்திரமானவர்கள். யாருடைய சுதந்திரத்தையும் என்னால் பறித்து விட முடியாது, அது என்னால் ஆகக் கூடியதும் அல்ல. அனைவரும் அல்லாஹ்வுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். நீங்கள் குறிப்பிடும் எழுத்தாளர்களையும் நான் குறை கூற மாட்டேன். அவர்களை வெறுக்கவும் என்னால் முடியாது. அவர்களை நான் எதிர்க்கவும் மாட்டேன். அவர்கள் செய்ய நினைப்பதை செய்ய அவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. ஆனால் யார் சரி, யார் செய்தது தவறு என அல்லாஹ் தீர்மானிப்பான். ஆகவே அழைப்பு பணியில் என்னால் முடிந்த நேர்மறை அணுகுமுறையை கடைப்பிடிக்கிறேன். இதைப் பற்றியெல்லாம் யோசிக்க என்னிடம் நேரம் இல்லை. இக்கேள்விகளை விட்டு என் மனதை தூய்மையாகவும், காலியாகவும் வைத்திருக்கிறேன். ஆகவே நேர்மறை சிந்தனையுடன் இயங்குகிறேன், அதில் அதீத அக்கறை கொள்கிறேன்
No comments:
Post a Comment