காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Monday, May 12, 2014

தேர்தல் அரசியலும் வாக்காளர்களும்



உலகில் பாராளுமன்ற ஜனநாயக தேர்தல் முறைமையை கொண்ட இந்தியா தன் முதல் பொதுத்தேர்தலை 1951 மற்றும் 1952 ல் சந்தித்தது. குடியரசு அடைந்து 1 வருடம் கழித்து தான் முதல் பொதுத்தேர்தல் நடந்தது. காரணம் அதனடிப்படையிலான நாடாளுமன்றத்தை, தேர்தல் முறையை, அதற்கான அலுவலர்களை நியமிக்க அதற்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது. அன்றைய சூழலில் காங்கிரஸும் , கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே களத்தில் இருந்தன. அப்போது காங்கிரஸ் பெருவாரியான இடத்தில் வென்றது. அதாவது மொத்தமுள்ள 489 இடங்களில் 364 இடங்களை கைப்பற்றியது. டாங்கே தலைமையில் தேர்தலை சந்தித்த கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது தான் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீக்கப்பட்டு அது ஜனநாயக பாதைக்கு திரும்பி இருந்தது. மேலும் முதல் தேர்தலில் 61.2 சதவீத வாக்குகள் பதிவாயின. அன்றைய காலகட்டத்தில் 21 வயதில் தான் வாக்குரிமை அளிக்கப்பட்டது.

இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் தொடங்கிய காலத்திலேயே அரசியல் கட்சிகளின் பிறப்பும் தொடங்கி விட்டன. நேருவின் அமைச்சரவையில் இருந்த ஷியாமா பிரசாத் முகர்ஜி ஜனசங்கத்தை ஆரம்பித்தார். அதே நேரத்தில் அம்பேத்கார் தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் அதுவே குடியரசு கட்சியாக மாறியது. மேலும் ஆச்சாரிய கிருபாளினி கிஷான் மஸ்தூர் பிரஜா பரிஷத் என்ற கட்சியை தொடங்கினார். சோசலிச தலைவரான ராம் மனோகர் லோகியா சோசலிச கட்சியை தொடங்கினார். மேற்கண்ட கட்சிகளின் உருவாக்கம் அடுத்தடுத்து நிகழ்ந்தேறின. ஆனாலும் அன்றைய கட்டத்தில் பெரும்  பலம்வாய்ந்த கட்சியாக இருந்த காங்கிரஸை அசைத்து பார்ப்பது அவ்வளவு இலகுவான ஒன்றல்ல என்பதை இவை நன்கு அறிந்து வைத்திருந்தன. இந்தியாவில் எல்லோருமே ஜனநாயக அடிப்படையிலான அரசியல் கட்சிகளை தொடங்கலாம் என்ற விதி அன்றைய காலகட்டத்தில் சமூக அக்கறை கொண்ட தலைவர்களிடையே அதிக ஆர்வத்தையும், துடிப்பையும் கொண்ட ஒன்றாக இருந்தது. இதனால் பிந்தைய காலகட்டங்களில் வரிசையாக அரசியல் கட்சிகள் முளைக்க ஆரம்பித்தன. ஆரம்ப கால கட்டங்களில் காங்கிரஸ் உட்பட எல்லா கட்சிகளுக்குமே தேர்தலில் போட்டியிட்டு அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். அதன் மூலம் நாட்டை சரியான வழியில் நகர்த்த வேண்டும் என்ற பிரக்ஞையை கொண்டிருந்தன. அதன் படி நேருவின் தலைமையிலான காங்கிரஸ் அரசு அதனை செயல்படுத்த முயன்றது. சோவியத் யூனியனின் தாக்கம் மற்றும் சோசலிச பார்வையை கொண்டிருந்த நேரு இந்தியாவின் தொழிற்துறை வளர்ச்சிக்கு அடிப்படையாக நவரத்னா என்றழைக்கப்படும் 9 பொதுத்துறை நிறுவனங்களை அமைத்தார். அதன் மூலம் இந்தியாவில் சோசலிசத்திற்கான முதல் விதை தூவப்பட்டது. பின்னர் பல்வேறு அணைக்கட்டுகள், ஐந்தாண்டு திட்டம் போன்றவை நேருவால் செயல்படுத்தப்பட்டன. 

இந்தியாவில் இன்றைக்கு உச்சகட்ட நோயாக மாறி இருக்கும் ஊழல் சுதந்திர இந்தியாவின் தொடக்கத்திலேயே தனக்கான அடித்தளத்தை அமைத்துக்கொண்டது. இந்தியாவில் முதல் ஊழல் 1948 ல் நடந்தது. அதாவது ஜீப் ஊழல் என்றழைக்கப்பட்டது.  அன்றைக்கு இந்தியாவிற்கான பிரிட்டன் தூதராக இருந்த கிருஷ்ண மேனன்  விதிகளுக்கு மாறாக ராணுவ வாகனம் வாங்குவதற்கு ஒரு வெளிநாட்டு நிறுவனத்தோடு ரூபாய் 80 லட்சத்திற்கு ஒப்பந்தம் போட்டார். 4000 வாகனங்களுக்கு பதில் வெறும் 155 வாகனங்கள் மட்டுமே வந்தன. இது தான் பிந்தைய காலகட்டத்தில் பெரிய ஊழல்களுக்கு வழி வகுத்தது.  இது வெளிவந்து விசாரணை கமிஷன் வைக்கப்பட்டு பின்னர் ஓய்ந்து போனது. 1955 ல் நேரு இந்த வழக்கு முடிவுக்கு வருவதாக அறிவித்தார். அதன் பிறகு புகழ்பெற்ற முந்த்ரா ஊழல் வெளிவந்தது. அன்றைய நிதி அமைச்சராக இருந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆயுள் காப்பீடு நிறுவன பாலிசிகளை முறைகேடாக வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அதாவது 40 லட்சம் மதிப்புள்ள பாலிசிகளை குறைந்த விலைக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்து பின்னர் ஓய்ந்து போனது. பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஊழல்கள்  வெளிவந்து அரசமைப்பு முறையை நிலைகுலைய செய்தன. இந்திய பொருளாதாரத்திலும் இவை குறிப்பிடதக்க தாக்கத்தை செலுத்தின.

அரசியல் கட்சிகளை வாக்காளர்கள் அல்லது மக்கள் எவ்வாறு தேர்வு செய்கின்றனர்? அதன் எதார்த்த உளவியல் என்ன? ஒவ்வொரு தேர்தலிலும் எப்படி வெற்றி தோல்வி கணிக்கப்படுகிறது? மக்கள் உடனடியாக இன்னாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறார்களா? அல்லது முன்னரே முடிவெடுத்து விடுகிறார்களா? இம்மாதிரியான கேள்விகளுக்கு விடை காண வேண்டியதிருக்கிறது. 1951 மற்றும் 1952 ல் நடந்த முதல் பொதுத்தேர்தல்களின் போது இந்தியாவின் பெரும்பாலான மக்களுக்கு எழுத படிக்க தெரியாது. அதனால் தான் அரசியல் கட்சிகளுக்கு சின்னம் என்ற முறை அமல்படுத்தப்பட்டது. காரணம் வாக்குச்சீட்டில் வேட்பாளரின் பெயரை பார்த்து முத்திரை இட வேண்டும். ஆனால் வாசிக்க தெரியாத மக்களுக்கு அதில் பெரும் சிரமம் இருக்கும். ஆகவே சின்னம் முறை அமல்படுத்தப்பட்டது. பின்னாளில் இதுவே வாக்காளர் உளவியலில் ஆழப்பதிந்து அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஒன்றாக மாறியது. முதல் பொதுத்தேர்தலில் துடிப்பான, நேர்மையான ஆட்சிப்பணி அதிகாரி சுகுமார் சென் தேர்தல்  கமிஷனாக இருந்து தேர்தலை நடத்தினார். வாக்காளர் பெயர் சேர்த்தல், வாக்குச்சாவடிகளை அமைத்தல், வாக்குப்பதிவு அலுவலர்களை நியமித்தல் போன்ற பல சவாலான பணிகளை திறம்பட செய்தார். முதல் தேர்தலில் 61.2 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை அளித்தனர். சுதந்திர போராட்டம் நடந்து முதல் தேர்தலாக இருந்ததால் மக்கள் ஆர்வத்துடனும், தங்களின் வாழ்வு குறித்த எதிர்பார்ப்புடனும் வாக்களித்தனர். பிந்தைய தேர்தலில் 62.2 சதவீத வாக்குகள் பதிவாயின. இதுவரை நடந்த தேர்தலை நாம் அவதானிக்கும் போது பெரும்பாலான தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தான் வெற்றிபெற்றிருக்கிறது. காங்கிரஸ் மட்டுமே அன்றைக்கு பலம் பொருந்திய கட்சியாக இருந்ததால் மக்கள் காங்கிரஸை தேர்ந்தெடுத்தனர். அதாவது வாக்களர் உளவியலில்  பின்வரும் அம்சங்கள் ஊடுருவி இருக்கின்றன.

1. பெரிய கட்சி அல்லது செல்வாக்கான கட்சி

2. வெற்றி பெறும் கட்சி

3. ஆளத்தகுந்த கட்சி

4. அதிருப்தியான கட்சி

5. சிறிய கட்சி அல்லது வெற்றி பெற முடியாத கட்சி

6. தங்களை கவனிக்கும் கட்சி

மேற்கண்ட அம்சங்கள் ஊடுருவி இருப்பதன் மூலம் பணம் மற்றும் படை பலத்தைக்கொண்ட கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்றுவதில் அதிகம் முனைப்பு காட்டுகின்றன. தங்களின் இலட்சியத்தில் அப்படியே வெற்றியும் பெறுகின்றன. மேலும் ஆளுங்கட்சி மிதமிஞ்சிய சர்வாதிகாரம், அதிகார துஷ்பிரயோகம், அயோக்கியத்தனம், மோசமான ஆட்சி முறை இவற்றோடு இயங்கும் போது அந்த தேர்தலில் வாக்காளர்கள் மிகுந்த அதிருப்திக்கு ஆளாகி அதுவே ஆளுங்கட்சிக்கு எதிரான சீரான அதிருப்தி அலையை தோற்றுவிக்கின்றன. (Anti Incumbency factor)தொடர்ச்சியில் ஆளுங்கட்சி மிகப்பெரும் தோல்வியை சந்திக்கிறது. இந்தியாவில் எமர்ஜென்சிக்கு பிறகான இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸின் தோல்வி , போபர்ஸ் ஊழல் பிறகான ராஜீவ் காந்தியின் தோல்வி, நரசிம்மராவின் தோல்வி இவை மேற்கண்ட அலைக்கு சிறந்த உதாரணம். இவை இல்லாத தருணங்களில் நிச்சயமற்ற சூழலே நிலவுகிறது. பெரும்பாலான வாக்காளர்கள் அந்த குறிப்பிட்ட நேரத்தில் தான் முடிவெடுக்கின்றனர். முந்தைய காலத்தில் தங்களை யார் வாக்குசாவடிக்கு காரில் அழைத்து செல்கிறார்களோ அல்லது கவனிக்கிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்கும் முறை இருந்தது. இதன் தர்க்க ரீதியான தொடர்ச்சி தான் Inducement என்னும்  பணம் கொடுத்து ஓட்டு வாங்கும்  தற்போதைய நிலை. கடந்த 10 ஆண்டுகளாக இந்திய தேர்தலில் பணம் ஓட்டுகளை தீர்மானிக்கும் ஒரு கருவியாக மாறி போய் இருக்கிறது. இது இன்னும் நீட்சியடைந்து சாதாரண சூழலில் பணம் அதிகம் கொடுக்கும் வேட்பாளரே வெற்றி பெறும் நிலைமை உருவாகி இருக்கிறது. மேலும் எங்களுக்கு வாக்களிக்க இவ்வளவு தொகை வேண்டும் என்று மக்கள் உரிமையோடு கேட்கும் நிலையும் உருவாகி இருக்கிறது. இது இந்திய தேர்தல் அரசியலை பொறுத்தவரை மிகப்பெரும் அவலம்.


பன்னாட்டு கம்பெனிகள் இந்திய அதிகாரவர்க்கத்தில், அரசியல் கட்சிகளிடத்தில் செல்வாக்கு செலுத்தும் இந்த காலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் இந்த முறையும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தது. ஒவ்வொரு தேர்தலிலும் கார்ப்பரேட்டுகள் அளிக்கும் பணம் தான் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவாக மாறுகிறது. ஆக தேச நலன், இலட்சியம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த விஷயங்கள் அனைத்தும்  பின்னுக்கு தள்ளப்படுகின்றன. அம்மாதிரியான கட்சிகள் புறக்கணிக்கப்படுகின்றன. மேலும் மக்கள் போராளிகளாக இருக்கும் தனிநபர்களும் இந்த தேர்தல் ஆற்றை கடக்க முடியாதவர்களாக இருக்கின்றனர்.தேர்தல் அரசியல் குறித்து நிச்சயமற்ற மனநிலையோடு தங்களை தகவமைத்துக்கொள்ளும் மக்கள் இம்மாதிரியான பணம் சார்ந்த பெரும் துயரங்களில் விழுந்து விடுகிறார்கள். தேர்தல் சீர்திருத்தம் மற்றும் ஜனநாயக அமைப்பு முறை மாற்றம், படித்தவர்களின் அரசியல் சிந்தனை இவைகள் தான் இந்திய அரசியலை நேராக்கும். அதுவரை பணபலம் மட்டுமே தேர்தல் வெற்றியை, அதிகாரத்தை தீர்மானிக்கும் ஒன்றாக இருக்கும். தாராளமயமாக்கப்பட்ட இந்தியாவில் கார்ப்பரேட்டுகள் மற்றும் அதிகார வர்க்க கூட்டு ஒவ்வொரு தேர்தல்களின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக மாறி இருக்கிறது. இந்த தேர்தலில் பிஜேபிக்கு கிட்டதட்ட 3000 கோடி வரை கார்ப்பரேட்டுகள் நன்கொடை அளித்திருக்கின்றன. மோடி அலையை உருவாக்குகிற நோக்கமும் இதில் அடங்கும். இதில் மக்கள் வெறும் கருவியே. ஆக தேர்தல் அரசியல், அரசியல் கட்சிகளின் போக்கு, ஊழல், பிற நடவடிக்கைகள், அவர்களின் சமூக பிரக்ஞை ஆகிய அம்சங்கள் வாக்காளர்களின் உளவியலில் ஊடுருவ வேண்டும். வாக்குப்பதிவு சதவீதத்தை விட மேற்கண்ட உளவியல் அம்சங்களே மிகப்பெரும் தீர்மானிகளாகும், அது மட்டுமே வருங்கால இந்தியாவின் சீர்திருத்த ஜனநாயகத்திற்கு வழிவகுக்கும்.




1 comment:

Unknown said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்