புனிதப்பொருளாக
பெண்ணுடல் - பர்தா என்ற கருப்பு அங்கியும் தமிழ் முஸ்லிம் பெண்களும் - பகுதி 2
தமிழ்நாட்டில் பெரும்பான்மையான பெண்கள் தாங்கள் குடும்ப
ஆண்களின், சமூகத்தின் நிர்பந்தம் காரணமாக தான் அணிகிறோம் என்பதை ஆய்வில் வெளிப்படுத்தினர்.
இதில் பர்தா முறை வழக்கில் இல்லாத தென்மாவட்ட பெண்கள் தங்களை சமூகம் அதிகம் நிர்பந்திப்பதாக
குமுறினர். சில பகுதிகளில் கணவர் அணிய வேண்டாம் என்று சொன்னாலும் சமூக கட்டுப்பாடு
காரணமாக அவர்கள் அணியும் நிர்பந்தம் ஏற்படுகிறது. இங்கு பெண்ணின் உடையை கண்ணுக்கு தெரியாத
சக்திகள் தீர்மானிப்பது மிகப்பெரும் அவலம். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் துப்பட்டா
என்ற வெள்ளை அங்கி வழக்கில் இருக்கும் பிற மாவட்டங்களில் அங்குள்ள இளம் மற்றும் நடுத்தர
பெண்கள் புதிய மோஸ்தராக இருந்த காரணத்தால் பர்தாவை தேர்ந்தெடுத்தனர். துப்பட்டா முறையிலிருந்து
இயல்பான உடைக்கு அவர்கள் மாறும் தருணத்தில் இந்த பர்தா முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த பிரதேசத்தில் கூடுதலாக முகமூடி வழக்கில் இருக்கின்றது. இதற்கும் அவர்கள் புனிதப்பிரதிகளை
மேற்கோள் காட்டி முகமூடியை அணிய வைக்கின்றனர். அதற்கு கண்ணியம் என்ற முத்திரை குத்தப்படுகிறது.
மீறுவோர் தண்டிக்கப்படுவர் என்பது மாதிரி முகத்தை மறைக்காதவர்கள் கண்ணியமற்றவர்களாக
சித்தரிக்கப்படுகின்றனர். இதில் மற்றொரு கொடுமை என்பது இதை பெண்கள் எப்படி அமல்படுத்த
வேண்டும் என்கிற விஷயத்தில் இந்திய முல்லாக்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
ஒருவர் முகத்தை முழுமையாக மறைக்க வேண்டும் என்கிறார் (ஆப்கானிஸ்தான் மாதிரி) மற்றொருவர்
தபால் பெட்டி மாதிரி கண்கள் மட்டும் தெரியலாம் என்கிறார். இன்னொருவர் மூக்கு வரை துணியால்
மறைத்தால் போதும் என்கிறார். இந்த இடைவெளிக்குள் என்ன கவர்ச்சியை கண்டுபிடித்தார்கள்
என்று தெரியவில்லை. மேலும் இதனை கூட சிலர் நியாயப்படுத்துகின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களில்
தூசு மற்றும் ஆண் நண்பர்கள் காரணமாக பெண்களில் சிலர் நடக்கும் போதும், வாகனத்தில் செல்லும்
போதும் முகத்தை மறைத்துக்கொண்டு செல்லும் வழக்கம் இருக்கிறது. அதுவும் சென்னை போன்ற
பெருநகரங்களில் சமீபகாலமாக இது அதிகரித்து வருகிறது. சுழன்றடிக்கும் தூசுகள் அவர்களின்
முகத்தையும், மூக்கையும் சிதைக்கின்றன. இதனை தடுப்பதற்கே இந்த மூடல். ஆனால் மழைக்காலங்களில்
இந்நிலைமை தலைகீழாக இருப்பதை காணலாம். அதே நேரத்தில் இஸ்லாமிய பெண்கள் மூடுவது என்பது
முழுக்க முழுக்க மத காரணம் சார்ந்தது. வாழ்க்கையின் அனைத்து தருணத்திற்கும் அது பொருந்தும்.
இந்த பெண்கள் நடைமுறையில் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். சிக்கலான இடங்களில் நடப்பதற்கும்,
தண்ணீர் குடிப்பதற்கும், மூச்சு விடுவதற்கும் மிகுந்த சிரமப்படுகின்றனர். முகம் அதிகமாக
வியர்க்கிறது. முகத்திற்கு சூரிய ஒளி மூலம் இயல்பாக கிடைக்க வேண்டிய வைட்டமின் டி இதனால்
தடைபடுகிறது. இந்நிலையில் இவர்கள் முகமூடி காரணமாக தங்களுக்கு தடையாக இருக்கும் விஷயங்களை
வெற்றிகரமாக எதிர்கொண்டு சாகசம் செய்து காட்ட வேண்டும் என்று கூட அறிவுறுத்தப்படுகின்றனர்.
குறிப்பாக முகத்தை திறக்காமலே உண்பது, தண்ணீர் குடிப்பது போன்ற சாகசங்கள். முழுக்க
முழுக்க புனித பிரதியை தங்களுக்கு சாதகமாக வளைத்து இதனை பெண்கள் மீது திணித்ததில் பிற்போக்கு
முல்லாக்கள் வெற்றிகண்டு விட்டார்கள். அதே நேரத்தில் இந்தியாவில் கணிசமாக முஸ்லிம்கள்
வாழும் கேரளாவில் முகமூடி வழக்கில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தாங்கள் ஆண்களால்
எவ்வாறு அப்பாவித்தனமாக ஏமாற்றப்படுகிறோம் என்பதை இந்த பெண்கள் புரிந்து கொள்வதே இல்லை.
பல இடங்களில் இந்த முகமூடி தவறாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஆண்களின் குற்றச்செயல்களுக்கு
சிறந்த பாதுகாப்பு கருவியாக இருக்கிறது.
பர்தா அணிய நிர்பந்திக்கிறார்கள் என்று வெளிப்படுத்திய
பெண்கள் பர்தா வெயில் காலங்களில் தங்களை அதிகம் வாட்டுவதாக தெரிவித்தார்கள். அதுவும்
கருப்பு நிறமாக இருந்து வெப்பத்தை அதிக அளவில்
உமிழ்வதால் அவர்களுக்கு இன்னும் அதிகம் சிரமம் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக சிலர்
கீழ்பகுதியில் சன்னல் வைத்த பர்தாவை தேர்ந்தெடுக்கின்றனர். இது மிகப்பெரும் வேடிக்கையாக
மாறி உள்ளே அணிந்திருக்கும் உடை வெளியே தெளிவாக தெரிகிறது. மேலும் பர்தா மேல் அங்கியாக
இருப்பதால் ஓடுவதற்கும், இயல்பாக நடப்பதற்கும் சிரமமாக இருக்கிறது என்றார்கள் ஒரு பகுதியினர்.
தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான முஸ்லிம் கல்லூரிகள் முஸ்லிம் மாணவிகளை பர்தா
அணிந்து வர நிர்பந்தப்படுத்துகின்றன. சில கல்லூரிகள் சட்டமீறல் என்று தெரிந்தும் விளக்க
குறிப்பேட்டில் கூட அதை குறிப்பிடுகின்றன. இதில் மிகவும் வேடிக்கை என்னவென்றால் பெரும்பாலான
கல்லூரிகள் சீருடை முறையை அறிமுகப்படுத்தி அதில் முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் கருப்பு
சீருடையை அளிக்கின்றன. பெரும்பாலான கல்லூரிகளில் அரபி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகங்கள்
இதனை வலியுறுத்துகின்றன. பர்தாவை யாரும் திணிக்கவில்லை என்று தப்பித்தல்வாதம் செய்பவர்கள்
இதனை கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். மேலும் தென்மாவட்டம் ஒன்றில் உள்ள முஸ்லிம் கல்லூரியில்
சில முஸ்லிம் பெண்கள் கருத்து பதிவேட்டில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தனர். “இந்த
கல்லூரியில் மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமைகளை தாங்கமுடியவில்லை. எங்கள் வீட்டில்
கூட பர்தா அணிய யாரும் நிர்பந்திப்பதில்லை. ஆனால் இங்குள்ள அரபி பேராசிரியர்கள் எங்களை
நிர்பந்திக்கிறார்கள்.” இப்படியான குமுறல்கள் தான் பல இடங்களிலும் இருக்கின்றன. அதே
நேரத்தில் பெரும்பாலானோர் இதை இயல்பான கட்டாயமாக ஏற்றும் கொள்ளும் மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
காரணம் இங்கு திணிப்பு என்பதே விருப்பமாக இருப்பதால்.
கள ஆய்வில் வெளிப்பட்ட
மற்றொரு உண்மை விருப்பம் சார்ந்து பர்தாவை அணியும் பெண்கள் பற்றியது. பெரும்பாலான பெண்களுக்கு
உடல் அமைப்பு சார்ந்தும், உடை அமைப்பு சார்ந்தும் உடை உடுத்துவதற்கு ஆண்களை விட அதிக
நேரம் தேவைப்படும். சிலருக்கு அது உச்சகட்ட சோம்பலாக இருக்கும். சிலருக்கு அவசர வாழ்க்கையின்
இயக்கத்திற்கு தடையாக இருக்கும். இந்த பலவீனம் தான் பர்தா திணிப்பாளர்களுக்கு பலமாக
இருக்கிறது. பெண்கள் வெளியே செல்வதற்கு உடை மாற்றும் அவசியம் வேண்டியதில்லை. வெறுமனே
முகம் கழுவிக்கொண்டு வீட்டு உடையோடு இந்த பர்தாவை மேலங்கியாக அணிந்து வெளியே சென்று
வரலாம். காரணம் உள்ளே என்ன அணிந்திருக்கிறோம் என்று வெளியில் தெரிவதில்லை.பெரும்பாலும்
முஸ்லிம் பெண்கள் வீடு சார்ந்து கட்டமைக்கப்பட்டிருப்பதால் வெளியே செல்வதற்காக உடை
அணிய அவர்களுக்கு சோம்பல் உருவாகி விடுகிறது. அதனால் வீட்டு உடையோடு அவர்கள் பர்தாவை
தேர்ந்தெடுக்கின்றனர். மேலும் நகை அணிய வேண்டிய அவசியம் இல்லை. இதன் மூலம் பொதுவெளியில்
குறிப்பாக மருத்துவமனை, கடைவீதி போன்றவற்றில் இந்த பெண்கள் நடமாடும் போது மிக எளிதாக
அம்பலப்பட்டு விடுகிறார்கள். குறிப்பாக மருத்துவமனைகளில் இது மிக அதிகம். ஒரு சில மருத்துவர்கள்
இதனை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். மேலும் கல்லூரி மாணவிகளை கூட இது விட்டு வைக்கவில்லை.
குறிப்பாக விடுதிகளில் தங்கி படிக்கும் முஸ்லிம் மாணவிகள் மிக விரைவாக வகுப்பறைக்கு
செல்ல இந்த முறையை கையாள்கின்றனர். காரணம் சீருடை அணிய வேண்டிய அவசியம் இல்லை. விடுதியில்
காலையில் 8.40 மணிக்கு படுக்கையை விட்டு எழும்பும் பெண்ணுக்கு 9 மணிக்குள் வகுப்பறையில்
இருக்க இந்த முறை பெரிதும் உதவுகிறது. ஏற்கனவே புனிதம் சார்ந்து திணிக்கப்பட்டிருப்பதால்
இது மற்ற பெண்கள் இடத்திலும் மிக எளிதாக ஊடுருவி
விடுகிறது. ஆகவே அவர்கள் வெயிலை கூட பொருட்படுத்தாமல் இதனை அணிகின்றனர். இதன் மூலம்
தாங்கள் எப்படியான அபத்த மனநிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை அந்த பெண்கள் உணர்வதில்லை.
அவ்வாறு உணரவும் முடிவதில்லை என்பது தான் மிகவும் சோகம்.
அப்பட்டமான சவூதிய பெண்களின் கலாசார உடையை, அவர்களின் அடிப்படையான
உடையை தமிழ்நாட்டில் முழுக்க முழுக்க திணித்ததன் மூலம் மதவெறியர்கள் மனம் முழுக்க மகிழ்ச்சி
உணர்வால் நிரப்பப்பட்டிருக்கின்றனர். இயல்பான உடை வழக்கிலிருந்த தென்மாவட்டங்களில்
இதனை முழுவதுமாக அமல்படுத்த வேண்டும் என்பதே தங்களின் லட்சியம் என்பதாக முன்வைக்கின்றனர்.
மேலும் அடுத்த கட்டமாக இந்த பெண்களை முகமூடி அணிய வைக்க வேண்டும் என்பதே அவர்களின்
முடிவான லட்சியம். இதற்கான பல முயற்சிகள் மற்றும் பிரச்சாரங்கள் பலவகைகளிலும் நடந்து
வருகின்றன. மேலும் பெண் உடல் ஒடுக்குமுறையின் மற்றொரு வடிவமாக தமிழ்நாட்டில் சில பகுதிகளில்
பெண்களின் உடலில் எந்த பாகமும் தெரியக்கூடாது என்ற வகையில் அவர்களுக்கு கையுறை மற்றும்
காலுறை அணிவிக்கப்படுகிறது. இது சாக்குமூட்டை வடிவத்தில் நடமாடும் ஆப்கானிஸ்தான் பெண்களின்
நிலைமையை ஒத்தது. ஆண்கள் பெண்களை இவ்வாறான நிற, வடிவ, வகை சார்ந்த உடைக்குள் திணிக்கும்
போது எல்லா ஆண்களும் உடை விஷயத்தில் மிக எளிதாக தப்பித்து விடுகின்றனர். பர்தாவை போன்று
எந்த ஆணும் உடை அணிவதில்லை. குறிப்பாக பனியன் அணிந்து அதன் மேல் டி ஷர்ட் அணியும் ஆண்கள்
இருக்கமாட்டார்கள். மேலும் ஆண்கள் நவநாகரீகமாக உடை அணிந்து நடிகர்களை போல் தலைமுடியை
வைத்துக்கொண்டு வீதியில் வர முடிகிறது. இப்படி எல்லாவிஷயங்களிலும் சகஜமானவர்களாக இருக்கும்
ஆண்கள் இப்படியான கருப்பு சீருடையை பெண்கள் மீது திணிப்பதால் மிகப்பெரும் சமூக குற்றவாளியாக
மாறிவிடுகின்றனர். மேலும் இதனை அணியாத பெண்கள் எல்லாம் கண்ணியமற்றவர்கள் என்ற கருதுகோள்
முன்வைக்கப்படுவதால், இது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எல்லா பெண்களையும் குறிப்பதாக
மாறுகிறது. இது மிகப்பெரும் இனவெறி மனோபாவமே. மேலும் இந்தியா போன்ற பன்மய சமூகங்களில்
இந்த கருப்பு சீருடை சமூக துண்டிப்பையும், உளவியல் சிக்கலையும் ஏற்படுத்துகிறது. இதன்
நீட்சியில் கருப்பு என்பது எதிர்ப்பின் துக்கத்தின் குறியீடாகவும் இருக்கிறது. இந்தியாவில்
எல்லா இந்து பெண்களும் காவி உடை அணிய வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டால் அது எவ்வளவு
கொடூரமாக இருக்குமோ அது மாதிரி தான் இதுவும். மிகப்பெரும் பர்தா வியாபாரிகளை உள்ளடக்கிய
கேரளாவில் பர்தா திணிப்பு முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அங்கு குறைந்த சதவீத பெண்கள் மட்டுமே பர்தா அணிகின்றனர். மேலும் அங்குள்ள
கல்லூரி மாணவிகள் மத்தியிலும் இது குறைவாக இருக்கிறது. இந்தி பேசும் மாநிலங்களில் இது
கணிசமாக நடைமுறையில் இருக்கிறது. அதே நேரத்தில் வங்காளம், ஒடிசா, அசாம், திரிபுரா போன்ற
மாநிலங்களில் இது மிக குறைவு. மிக முக்கியமாக சுதந்திர காலகட்டம் முதல் தொடர்ந்து துயரங்களை
அனுபவித்து வரும் காஷ்மீர் பெண்கள் மத்தியில் இது மிகவும் குறைவு. பாகிஸ்தானில் தலிபான்
கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் இது நடைமுறையில் இல்லை. இந்நிலையில் அரபி
மொழி வார்த்தை திரிபுகள் சார்ந்து பர்தா என்பது தமிழ்நாட்டில் தற்போது வஹ்ஹாபிகளால்
ஹிஜாப் என்று மொழி திரிப்பு செய்யப்பட்டிருக்கிறது. உண்மையில் இதற்கு திரை, தலை மறைப்பு
துணி போன்ற பல அர்த்தங்கள் உண்டு. ஆனால் இது தான் ஹிஜாப் என்று பர்தாவையும் இதனையும்
போட்டு குழப்பி பெண்களின் மனங்களில் மேலும் அச்சத்தை அதிகரிக்க செய்கின்றனர். அரபு
நாட்டில் பெண்கள் தலையை மறைக்கும் துண்டிற்கு தான் ஹிஜாப் என்று அர்த்தம். இப்படி பெண்கள்
விஷயத்தில் என்னவிதமான தகிடுதத்தங்களையும் செய்யலாம் என்ற ஆதிக்க திமிர் இயல்பாக உருவாகி
விடுகிறது. இந்நிலையில் புனித பிராண்டாக இருப்பதால் பர்தா என்பது ஏழை மற்றும் நடுத்தர
மக்களை பொருளாதார ரீதியாக சுரண்டும் ஒன்றாக இருக்கிறது. ரூபாய் 1500 முதல் 25000 வரை
விலை வகைப்பாட்டில் சந்தையில் பர்தா கிடைக்கிறது. ஒரு சாதாரண குடும்ப ஆண் தன் குடும்பத்தினருக்கு
உடைகள் வாங்குவதற்காக ஜவுளி கடைக்கு செல்வதாக வைத்துக்கொள்வோம். பர்தா இல்லாத பட்சத்தில்
அவனுக்கு சராசரியாக 2000 முதல் 5000 வரை செலவாகிறது. அதே நேரத்தில் மனைவி மற்றும் பெண்
பிள்ளைக்கு பர்தா சேர்த்து எடுத்தால் கூடுதலாக 3000 முதல் 4000 வரை செலவாகிறது. இந்த
தொகையில் அவன் மேலும் ஒரு குடும்பத்திற்கு துணி எடுக்கலாம். ஆகவே இது தெள்ளத்தெளிவான
பொருளாதார ஒடுக்குமுறை. எதைப்பற்றியும் ஆழமாக யோசித்து பழகாத சமூகம் இந்த புனித சுரண்டலைப்பற்றி கவலைப்படுவதே இல்லை.
மேலும் பல்லாயிரம் கனவுகளோடு பிறக்கும் குழந்தைகளையும் இது விட்டுவைக்கவில்லை. அணிந்து
பழக வேண்டும் என்பதற்காக சிறு குழந்தை பருவத்திலேயே அவர்களுக்கு அணிவித்து விடுகின்றனர்.
இதன் காரணமாக அந்த குழந்தை மனம் படும் பாடு
அளவிட முடியாதது. இதற்காகவே தற்போது பர்தாவில் கூட ஜவுளி கடைகளில் அளவு என்ன? எத்தனை
வயது? என்று கேட்கும் நிலை உருவாகி இருக்கிறது. இது மிகவும் மோசமான குழந்தை உரிமைகளை
பறிக்கும் செயல். குழந்தைகளை குழந்தைகளாக வாழ விடாத சமூக மனநிலையின் வெளிப்பாடு.
இந்தியாவில் முதன்முதலாக இஸ்லாம் உருவானதாக கூறப்படும்
கேரளாவில் இன்னும் அது முழுமையாக ஊடுருவாத சூழலில் அதன் தாயகமான தமிழ்நாட்டில் அது
ஊடுருவி இருப்பதன் பின்னணி வேறுவிதமானது. கேரளாவில் இடதுசாரி மற்றும் பிற முற்போக்கு ஜனநாயக
இயக்கங்கள் காரணமாக அங்குள்ள முஸ்லிம்கள் கல்வியில் முன்னணியில் இருப்பதோடு சமூக போலித்தனங்கள் குறித்த விழிப்புணர்விலும் மிகுதியாக இருக்கின்றனர். குறிப்பாக பெண்களின் சமூக வளர்ச்சி இங்கிருப்பதை காட்டிலும் அதிகமாக இருக்கிறது.ஆனால் திராவிடஇயக்கம் வேரூன்றிய தமிழ்நாட்டில் பெரியார் மட்டுமே பெண்கள் பிரச்சினைகளை கையில் எடுத்தார். எல்லாமதங்கள் சார்ந்தும் அவர் பெண்கள் விவகாரத்தை அணுகினார். காரணம்
தமிழ்நாட்டை பொறுத்தவரை அன்றைய காலகட்டத்தில் எல்லா சமூக பெண்கள் மீதும் ஒடுக்குமுறை
நிகழ்ந்தது. இதன் தொடர்ச்சியில் பெரியார் தமிழ்நாட்டில் அன்றைய முஸ்லிம் பெண்கள் மத்தியில் வழக்கில் இருந்த கோஷாமுறையை எதிர்த்தார். அதற்கு பின் வந்த திராவிடக்கட்சிகள் அரசியலில் இறங்கி முழுமுற்றாக சமரச மனநிலைக்கு சென்றன . ஒட்டுக்குளை கவர வேண்டும் என்ற நோக்கத்தோடு சிறுபான்மை முஸ்லிம்கள் விஷயத்தில் எவ்வித சமூக, பொருளாதார வளர்ச்சி நடவடிக்கையையும் எடுக்கவில்லை .மேலும் இந்த கட்சிகளில் இருந்த சிறுபான்மையினர் கூட உச்சகட்ட அடிப்படைவாதிகளாக இருந்து ஜமாஅத்களில் அதிகாரம் செய்யும் நபர்களாக மாறிப் போனார்கள். இன்றும் அப்படிதான் இருக்கிறார்கள். (ஒரு சிலரை தவிர) மேலும் முஸ்லிம்களின் கட்சியாக அறியப்பட்ட முஸ்லிம்லீக் கூட இருக்கும் நிலைமையை தக்கவைக்க கூடிய மிக பிற்போக்கான கட்சியாகதான் இருந்தது. இதன் தொடர்ச்சியில் முஸ்லிம்கள் தரப்பில் எழுத்தாளர்களாக இருந்தவர்கள் கூட இறையருள் பெற்றவர்களாக இருந்தார்கள். அதாவது முல்லாக்களின் மேடைப்பேச்சுகளை கட்டுரையாக எழுத்தெரிந்தவர்களே எழுத்தாளர்களாக சமூகத்தில் அறியப்பட்டனர். கவிஞர்கள் என்பவர்கள் இறைவனை புகழ்ந்து மேடைகளில் கவிதை வாசிப்பவர்களாக, பாடகர்களுக்கு பாடல் எழுதிக்கொடுப்பவர்களாக இருந்தனர். அவர்களே சமூகத்தில் கவிஞர்களாக அறியப்பட்டனர். மையநீரோட்டம் குறித்து எவரும் அறிந்திருக்கவில்லை அல்லது அது மதவிரோதமானதாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் மையநீரோட்டவெளியில் எழுத வந்தவர்கள் கூட மிதமிஞ்சிய ஆணாதிக்கவாதிகளாக மாறிப்போனது மிகப்பெரும் துரதிஷ்டம். தமிழ்நாட்டு முஸ்லிம்பெண்களின் இந்நிலைமைக்கு இவர்களும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. கேரளாவில் இம்மாதிரியான எழுத்தாளர்கள் தான் பொதுஊடகங்களில் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்தார்கள். காலத்தொடர்ச்சியில் அங்கு அது பெரும்பலனை கொடுத்தது. ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை சிறுகதை எழுத்தாளர்களாக, நாவலாசிரியர்களாக, மொழிபெயர்ப்பாளர்களாக இருந்தவர்கள் எல்லாம் அடிப்படைவாதத்தை தக்கவைக்கும் முயற்சியில் தான் ஈடுபட்டார்கள். குறிப்பாக கவிதைகளின் அரசர் என்று பட்டம் வாங்கிய வானம்பாடிகள் கூட இந்த விஷயத்தில்
மிகப்பெரும் தந்திர மௌனவாதிகளாக கடந்து போனது பெரும் அவலம். இதன் தொடர்ச்சியில் பலர் சிறுபான்மை என்ற அடையாளத்தை வைத்து சலுகையோடு கூடிய அங்கீகாரத்தை தேடுபவர்களாக இருக்கிறார்கள். இன்னும் சிலர் மதவெறி அமைப்புகளோடு நேரடி அல்லது மறைமுக தொடர்பில் இருந்து கொண்டு ஆட்காட்டி வேலையில் ஈடுபடுபவர்களாக இருக்கின்றனர். உண்மையில் அடிப்படைவாதிகளை விட மிகவும் ஆபத்தானவர்கள் இவர்கள். எழுத்தாளனாக பொதுவெளியில் இயங்குவது என்பது இருக்கும் அமைப்பை, நிறுவனத்தை தக்கவைப்பதல்ல. மாறாக அதனை கேள்விக்குட்படுத்துவதும், மாற்றியமைப்பதும் முக்கியமாகும். இது எழுத்தாளனின், சமூக செயற்பாட்டாளனின் தார்மீக கடமையும் கூட. இதனை பலர் கவனிப்பதே
இல்லை.மேலும் சராசரி ஆணை விட தங்கள் மனைவிகளை மோசமாக நடத்தும் எழுத்தாளர்கள் பலர் இங்குண்டு.
மேலும் சிலர் பெண் விஷயம் குறித்து பேசினால் தங்களின் தலை வெட்டப்பட்டுவிடும் என்று
போலியான பீதியை கிளப்புகின்றனர். இது ஒருவகையில் தப்பித்தல்வாதமே. ரிசானா விவகாரத்தில்
கூட இது தான் நடந்தது. இந்தியா போன்ற ஜனநாயகநாட்டில் இது சாத்தியமில்லாதது. காரணம்
இங்கு தலிபான்கள் இல்லை. அவர்களின் அனுதாபிகளே இருக்கின்றனர். மேலும் மையநீரோட்ட வெளியில்
இடைத்தரகர் வேலை செய்யும் சிலர் ஊடகங்களில் பர்தாவை நியாயப்படுத்தி பேசுகின்றனர். அது
பெண்களின் வளர்ச்சிக்கு ஒருபோதும் தடை இல்லை என்கின்றனர். ஈரானில் பெண்கள் அதனை அணிந்து
கொண்டு கம்பீரமாக படம் எடுப்பதை இதற்காக மேற்கோள் காட்டுகின்றனர். மிகவும் அறியாமையில்
வெளிப்படும் சப்பைகள் இவை. ஈரானில் உடை என்பது சட்டரீதியானது. தண்டனைக்குரிய குற்றம்.
அதனால் அவர்கள் அணிகிறார்கள். சுருக்கமாக சொன்னால் “அவர்கள் அணிகிறார்கள். அதனால் இருக்கிறார்கள்.”
இங்கு கேள்வியே இந்தியா போன்ற பிரத்யேகமான, பன்முக பாரம்பரிய உடைகளை கொண்ட சமூக அமைப்பில் இதன் தேவை
என்ன என்பதை குறித்து தான். ஆகவே இங்கு
வளர்ச்சி பற்றிய கேள்வியே அர்த்தமில்லாதது. மேலும் இது குறித்த விமர்சனம் வரும் போதெல்லாம்
பலர் தப்பிக்க பயன்படுத்தும் வார்த்தை “இது பெண்களின் விருப்பம்” தமிழ்நாட்டை பொறுத்தவரை
பர்தா அணியாமல் இருக்கும் பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அவமானங்கள், அவதூறுகள் ஏராளம். இதனை
அணியாத பெண் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு முஸ்லிம் ஆணால் கண்ணியமற்றவள் என்ற
நடத்தை சார்ந்த கேள்விக்குள்ளாக்கப்படும் போதே இதன் எதார்த்தம் அம்பலப்பட்டு விடுகிறது.
ஆக பர்தாவை ஒரு பெண் விருப்பமாக அணிந்து கொண்டால் மற்றொரு பெண்ணிற்கு அதை அணியாமல்
இருக்கும் சுதந்திரம் வேண்டும். மாறாக அது கேள்விக்குள்ளாக்கப்பட்டால் அது திணிக்கப்படுகிறது
என்றே அர்த்தம். மேலும் பள்ளிகூடத்தில் சீருடை அணியாமல் வரும் மாணவியை பார்த்து ஆசிரியர்
சீருடை எங்கே என்று கேட்பது போல் தான் பெண்ணை நோக்கிய ஆணின் கேள்வியும் இருக்கிறது.எனக்கு
தெரிந்த பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கும் இந்நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஆக ஆண்கள்
வக்கிரத்தின் உச்சகட்டத்தில் இருக்கிறார்கள் என்பதை தான் மேற்கண்ட நிகழ்வு வெளிப்படுத்துகிறது.
மேலும் தென்மாவட்டங்களில் திருமணத்திற்கான முக்கிய தகுதியாக கல்வி என்பதை விட பர்தா
அணிதல் தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது பர்தா வேகமாக ஊடுருவி வருவதன் காரணம்
இதுதான். அதனால் தான் பொதுவெளியில் விவாதிக்க பயந்து விஜய்டிவியில் நடக்க இருந்த விவாதத்தை
ஒளிபரப்பாமல் தடுத்தார்கள். அவ்வாறு தடுத்த சக்திகளின் பின்னால் பெரும் வியாபாரிகள்
இருந்ததாக சொல்லப்படுகிறது. இஸ்லாமை பொறுத்தவரை தனிப்புத்தியே நாளடைவில் பொதுப்புத்தியே
மாறிவிடுவதால் எல்லா வித பிற்போக்குத்தனங்களும் சமூகத்தில் எளிதில் வேர்பிடித்து விடுகின்றன.
பர்தாவும் அந்த வகையில் தான் வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள மதவெறி அமைப்புகள்
இதனை நியாயப்படுத்த தங்கள் இயக்கங்களில் உள்ள பெண்களை பயன்படுத்திக்கொள்கின்றன. இவர்களும்
ஊடகங்களில் தோன்றி தமிழ்நாட்டில் முஸ்லிம் பெண்களின் முக்கிய பிரச்சினை என்பது பள்ளி
மற்றும் கல்லூரிகளில் பர்தா அணிய தடை இருப்பது என்கிறார்கள். கணவரிடமிருந்து பிரச்சினைகள்,
முத்தலாக்கு முறையால் அவள் சந்திக்கும் இடர்பாடுகள் இவற்றை விட பர்தா தான் இவர்களுக்கு
முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. வக்கிர ஆண்களை கொண்ட இயக்கங்களுக்கு கிளிப்பிள்ளைகளை
விட சிறந்த ஒப்புவிப்பாளர்கள் இந்த பெண்கள். இவர்கள் மேல் அனுதாபம் தான் ஏற்படுகிறது..
ஆரம்பகால இஸ்லாமில் எந்த பெண்ணுமே தற்போதைய பெண்கள் போல் அவமானத்துக்கு உட்படுத்தப்பட்டதில்லை.
குறிப்பாக உடை விஷயத்திற்காக எந்த பெண்ணுமே தண்டிக்கப்பட்டதில்லை. ஆனால் தற்போதைய அடிப்படைவாத
ஆணாதிக்க சமூகம் அவர்களை வாயால், நடத்தையால் தண்டிக்கிறது. 21ம் நூற்றாண்டு உலகின்
மிகப்பெரும் அவலம் இது. பர்தாவை பொறுத்தவரை இந்திய/தமிழ்ச்சூழலில் மாபெரும் உடை ஒடுக்குமுறை.
இதற்காக குரல்கொடுத்த பல பெண்களை சமூகம் ஒதுக்கியது. மதுரையை சார்ந்த பேராசிரியை நாஸ்னின்
அவர்களில் ஒருவர். பலரை அவமானப்படுத்தியது முதல் இன்னும் பலரை மதவிரோதிகளாக பார்த்தது
வரை இந்த அவலம் நீடித்தது. மேலும் தமிழ்நாட்டில் தங்களை பற்றிய சுயபிரக்ஞையோடு சிந்திக்கும்
திறன் படைத்த, எழுதும் திறன் படைத்த பல பெண்கள் இருக்கின்றனர். ஆனால் கடந்த 25 ஆண்டுகளில்
இலங்கையைபோல் இங்கு யாருமே உருவாக முடியவில்லை. உருவாக சமூகம் மிகப்பெரும் தடையாக இருக்கிறது.
இந்நிலையில் தற்போதைய ஊடக வளர்ச்சி காரணமாக அரபுகலாசாரம், பெண்ணுரிமை குறித்த பல விஷயங்கள்
விவாதத்திற்கு வருகின்றன.இன்றைய சூழலில் பெண்களின் பிரச்சினைகள் குறித்த விவாதம் மிகவும்
அவசியம். தமிழ்நாட்டை முழுமுற்றாக ஆப்கானிஸ்தானாக மாற்றும் முயற்சி நடந்து வருகிறது.இதனை
தடுப்பதும், அதுகுறித்த விமர்சனங்களை, மாற்றுகளை உள்ளிருந்தே முன்வைப்பதும் அவசியம்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை பர்தா என்பது பெண்களின் ஆறாவது கடமையாக, மிகவும் உணர்ச்சிமயப்பட்ட
ஒன்றாக மாற்றப்பட்டிருக்கும் சூழலில் வெறுமனே அடையாளங்களை வைத்து சலுகைகளை தேடாமல்
எழுத்துவெளியில் இருப்பவர்கள் இது குறித்த அறிவை தேடுவதோடு, ஆழ்ந்த அவதானங்களோடும்,
சிந்தனையோடும் தங்கள் பார்வைகளை விரிவுப்படுத்தி கொள்வது அவசியம். அதுவே அவர்களுக்கும்
தமிழ் சமூகத்திற்கும் நல்லது. இல்லாவிட்டால் காலம் அவர்களை இயல்பாகவே அம்பலப்படுத்திவிடும்.
(முடிந்தது).