காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Monday, January 18, 2016

புனிதப்பொருளாக பெண்ணுடல் - பர்தா என்ற கருப்பு அங்கியும் தமிழ் முஸ்லிம் பெண்களும் - பகுதி 1


உலக வரலாற்றில் உடை என்பது மனிதன் பழங்குடி சமூக நிலையிலிருந்து அடுத்த கட்டத்திற்கு மாறிய போது உருவான ஒன்று. அதாவது காட்டுமிராண்டி காலகட்டத்திலிருந்து அநாகரீக காலகட்டத்திற்கு திரும்பிய போது மனித உடலை சார்ந்த இந்த மாற்றம் நிகழ்ந்தது. மிருகங்களிலிருந்து மாறுபட்ட மனித நடைமுறை இயற்கையின் அடிப்படையில் பார்த்தால் விநோதமான ஒன்று. ஆனால் காலப்போக்கில் அதுவே சமூக அடையாளமாகவும் மாறிப்போனது. காலத்தின் நகர்வில் உடை உருவாகிய தருணத்தில் ஏற்கனவே உருவாகி இருந்த தந்தைவழி சமூகம் பெண்களை உடை ரீதியாகவும் அடிமைப்படுத்த தொடங்கியது. உடை உருவாகியதன் வரலாற்றை கூர்ந்து அவதானித்தால் இதனை புரிந்து கொள்ள முடியும். மனிதனின் பாலியல்  உறுப்புகளை பாதுகாக்கவே ஆரம்பத்தில் உடை தேவைப்பட்டது. அந்த உறுப்புகள் இனப்பெருக்கத்திற்கும், பாலியல் இன்பத்திற்கும் அவசியமாக இருந்தன. ஆக அதனை இயற்கையின் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பது மனிதனுக்கு முக்கியமான ஒன்று. உள்ளாடைகள் என்பவை இங்கிருந்து தான் தொடங்கின. இவ்வாறாக உடை என்பது இங்கிருந்து தொடங்கி உலகில் பல்வேறு பிரதேசங்களில் நிலவியல் சார்ந்தும், காலநிலை சார்ந்தும் எவ்வாறு பரிணமித்தது என்பதையும் கவனிக்க வேண்டும்.

இந்திய அளவில் கணிசமாக அல்லது தமிழ்நாட்டு சூழலில் பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா என்ற கருப்பு அங்கி அரபு நாட்டின் இறக்குமதியாகும். அபயா என்று அரபியில் அழைக்கப்படும் இது பாரசீகத்தில் பர்தா என்றும் உருது மொழியில் புர்கா என்றும் அழைக்கப்படுகிறது. உலகமயமாக்கலில் பெயரால் வளரும் நாடுகளில் மேற்கத்திய கலாசாரம் ஊடுருவும் அல்லது அறிமுகமாகும் நிலையில், சவூதி அரேபியாவை மையப்படுத்தி அதன் கலாசாரம் மற்றும் சிந்தனைகள் உலகம் முழுக்க திணிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 19 ஆம் நூற்றாண்டில் சவூதி அரேபியாவில் உருவான வஹ்ஹாபிய தூய்மைவாத கோட்பாட்டிற்கு பிறகு இது மேலும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. அதாவது சவூதி அரேபியாவில் மழைபெய்தால் இங்கு குடைபிடிப்பது. சவூதி அரேபியாவின் நிலவியல் கட்டமைப்பிற்கும், காலநிலைக்கும் அதனை ஒட்டிய  கலாசார நடவடிக்கைகளுக்கும் ஒத்த விஷயங்களை மற்றொரு நிலப்பகுதியில் திணிப்பது இது மாதிரியான செயல்பாடு என்பது மிகப்பெரும்  கலாசார அழிப்பு நடவடிக்கை. இதன் நீட்சியில் சவூதி அரேபியா மற்றும் ஈரானில் தற்போது  நடைமுறையில் இருக்கும் உடை ஒழுங்கின் வரலாற்றை நாம் ஆராய்வது அவசியம்.




1400 ஆண்டுகளுக்கு முந்தைய சவூதி அரேபியா என்பது  இனக்குழு சமூக அமைப்பை சார்ந்திருந்தது. அந்த காலகட்டத்தில் அதாவது இஸ்லாம் தோன்றியதாக அறியப்படும் ஏழாம் நூற்றாண்டு காலத்தில் இனக்குழு ஆண்களும், பெண்களும் இடுப்புக்கு கீழே அந்தரங்க உறுப்பை மட்டுமே மறைக்கும் வகையில் உடை அணிந்திருந்தனர். அதே காலகட்டத்தில் உலகின் பல்வேறு சமூகங்களிலும் இந்த நடைமுறை இருந்தது. மேலும் கடும் கோடை காலத்தில் முழு நிர்வாணமாக நடந்தனர். காரணம் உச்சியை பிளக்கும் அன்றைய பாலைவன வெயிலுக்கு அவர்களுக்கு நிர்வாணம் தான் நிவாரணம் அளித்தது. இன்றைய அதி நவீன நாகரீக காலகட்டத்தில் கூட சில இனக்குழுக்கள் மத்தியில் இம்மாதிரியான உடை அமைப்பை நாம் பார்க்க முடியும். அன்றைய கட்டத்தில் அது அவர்களின் சமூக எதார்த்தமும், சமூக இயக்கமுமாகும். இங்கு கவனிக்க வேண்டியது தைக்கப்பட்ட உடை அறிமுகமாகாத அன்றைய காலகட்டத்தில் ஆண்களும் பெண்களும் மறைப்பதற்கு பயன்படுத்தியது தோல் மற்றும் இலை தழைகள் தான். மேலும் அன்றைய காலகட்டத்தில் இனக்குழு பெண்களிடையே மார்பகத்தை மறைக்கும் பழக்கம் இல்லை. உலக வரலாற்றில் பெண்ணின் மார்பகம் என்பது நீண்டகாலமாக காம குறியீடாக பார்க்கப்படவில்லை. மறைபொருளான மார்பகம் என்பது நாகரீக சமூகத்தின் அடையாளம். பெண்ணின் பால்சுரக்கும் மார்பகத்தை மறைக்கும் பொருளாக சமூகம் பாவிக்க தொடங்கியது பிந்தைய நாகரீக காலகட்டத்தில் தான். இந்நிலையில் அன்றைய உயர்குடி அரபு பெண்கள் மார்பகத்தை மறைக்கும் நடைமுறையை மேற்கொண்டிருந்தனர். அதே நேரத்தில் பெரும்பாலான அரபு பழங்குடி பெண்கள் உடைவிஷயத்தில் தங்கள் இனக்குழு கலாசாரத்தை தான் கடைபிடித்தனர். தான் சார்ந்த சமூக மதிப்பீடுகளை பழங்குடி மக்களுக்கு அறிமுகம் செய்து அவர்களை நாகரீக காலகட்டத்திற்கு மாறுதல் அடைய செய்யும் முயற்சி தான்  இஸ்லாமிய பிரதிகளில் உடை குறித்த விஷயங்களின் வெளிப்பாடு. ஆனால் அந்த பிரதிகளின்  நூற்றாண்டு வரலாற்று சமூக சூழலை, அதன் இயக்கத்தை புரிந்து கொள்ளாமல் இயந்திரத்தனமாக புரிந்து கொண்டதன் விளைவு தான் தற்போது இஸ்லாமிய சமூகத்தில் உடை பற்றிய இத்தனை குழப்பத்திற்கும் திரிபுவாதத்திற்கும் முக்கிய காரணமாக இருக்கிறது. அதுவும் பெண் உடை குறித்து மட்டுமே இப்படியான அதீத குழப்பம் எழும் போது தவிர்க்க முடியாமல் அதற்கு பின்னால் மிதமிஞ்சிய, தீவிர ஆணாதிக்கம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. மேற்கண்ட வரலாற்று, சமூக எதார்த்த சூழலோடு குர் ஆன் மற்றும் ஹதீஸ் பிரதிகளை நாம் புரிந்து கொள்ளும் போது அவை சாதாரணமாக அன்றைய சமூக சூழலை வெளிப்படுத்துவதை நாம் காணலாம். குர் ஆனின் வசனங்களான “நீங்கள் உங்களின் முந்தானைகளை தாழ்த்திக்கொள்ளுங்கள், வெட்கத்தலங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்” போன்றவை இவற்றை தெளிவாக வலியுறுத்துகின்றன. ஆனால் இன்றைய நாகரீக சூழலில் மார்பகமும், அந்தரங்க உறுப்பும் மறைந்தே உடை அமைப்பு இருக்கிறது. அதற்கு மாறானவை அனைத்தும் போர்னோகிராபியில் வருகின்றன. மதப்பிரதிகளின் வரலாற்று பரிணாமத்தை புரிந்து கொள்ளாமல் இருக்கும் தருணத்தில் உருவாகும் சிக்கல் இது. இந்நிலையில் மதப்பிரதிகளுக்கு விளக்கம் அளிக்கும் முல்லாக்கள் இவற்றை கவனத்தில் கொள்வதில்லை. செவ்வியல் அரபு மொழி சார்ந்த பிரதிகளுக்கு தவறான, பொருந்தாத வார்த்தைகளை, விளக்கத்தை கொடுப்பது மிக சாதாரணமாக இருக்கிறது. அதுவும் பெண்கள் சார்ந்த விஷயங்களில் இப்படியான குளறுபடிகள்  மிக அதிகம். ஒரே வசனத்தை ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற படி அல்லது தெரிந்த படி மொழிபெயர்ப்பது, விளக்கம் சொல்வது நடந்து வருகிறது. மேலும் மேலே குறிப்பிட்ட பெண் உடல் சார்ந்த வசனங்களை ஒவ்வொருவரும் தாறுமாறாக மொழிபெயர்க்கின்றனர். ஒருவர் கற்பு என்கிறார். மற்றொருவர் மானம் என்கிறார். இன்னொருவர் வெட்கத்தலம் என்கிறார். அது மாதிரியே மார்பகத்தை மறைத்தலை ஒருவர் முந்தானை என்கிறார். மற்றொருவர் தலை முந்தானை என்கிறார். இன்னொருவர் முக்காடு என்கிறார். இவ்வாறாக பெண்கள் இப்படியான ஆண்களின் முன்னால் கால்பந்தாக மாற்றப்படுகின்றனர். இதில் சிக்கி ஒவ்வொவருக்கும் ஏற்ற கோலாக மாறுகின்றனர். பெண்களை பொறுத்தவரை ஆண்கள் எம்மாதிரியான அற மற்றும் ஒழுக்க மதிப்பீடுகளை அவர்கள் மீது திணித்தாலும் கட்டாய சமூக எதார்த்தம் காரணமாக அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். இது எல்லா சமூகங்களுக்கும் பொருந்தும். இந்தியாவை பொறுத்தவரை இஸ்லாமிய சமூகத்தில் இது தான் நடந்து வருகிறது. தங்கள் மீதான கடந்த கால, நிகழ்கால, எதிர்கால என எல்லா காலகட்டம் சார்ந்த திணிப்பு மதிப்பீடுகளை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் அதனை நடைமுறைப்படுத்தும் மனிதர்களாக கூட மாறி விடுகின்றனர்.

ஏழாம் நூற்றாண்டில் பெண்கள் இயல்பாகவே இருந்திருக்கின்றனர். இதற்கு மாறாக அந்த காலகட்டத்தில் பெண்கள் மறைபொருளாக இருந்தனர் என்று முல்லாக்களும், அவர்களை வழிபடும் ஆண்களும் குறிப்பிடும் மூலப்பிரதி கட்டுப்பாடுகள் அனைத்துமே மொழிதிரிபும், தவறான வியாக்யானப்படுத்தலுமாகும். தீவிரவாதம் குறித்த குர் ஆன் வசனங்கள் மற்றும் நபிமொழிகள் பயங்கரவாத அமைப்புகளால் தவறாக பிரயோகிக்கப்படும் போது அதற்கு சூழல் சார்ந்த வரலாற்று விளக்கத்தை அளிக்கும் முல்லாக்கள் பெண்கள் விஷயத்தில் மட்டும் இயந்திரத்தனமான விளக்கத்தை அளிக்கின்றனர். இதன் மூலம் ஆணாதிக்க வெறி அப்பட்டமாக தெரிகிறது. கி.பி 13 ஆம் நூற்றாண்டில் அரபு பிராந்தியத்தில் அப்பாஸிய மன்னர்களின் ஆட்சி வீழ்ந்து மங்கோலியர்கள் அரபு பிரதேசத்தை தங்கள் வசப்படுத்தியதை தொடர்ந்து முல்லாக்களின் கையில் மத அதிகாரம்  வந்தது. அன்று முதல் பெண்களுக்கான எல்லா கட்டுப்பாடுகளும் நடைமுறைக்கு வந்தன. பெண்கள் வீட்டின் சமையலறைக்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டனர். அவள் மீது தற்போது தூக்கி சுமக்கப்பட்டு நகர்ந்து கொண்டிருக்கும் கண்ணியம் என்ற முத்திரை குத்தப்பட்டது. இதனை மீறுவோர் நடத்தை சார்ந்த குணாம்ச  கொலைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டுமானால் ஆண் துணை இல்லாமல் வெளியே வர முடியாது. அவ்வாறு தனியாக வெளியே வந்தால் அவள் தண்டிக்கப்பட்டாள். இதன் தொடர்ச்சியில் ஒரு பெண் பருவமடைந்தால் அப்பெண்ணிற்கான கல்வி மறுக்கப்பட்டது. மேலும் சிறு குழந்தையாக இருந்தாலும், பெண்குழந்தை  என்றால் அவளுக்கு வீட்டிலேயே கல்வி அளிக்கப்பட வேண்டும். அதுவே உசிதமானது என்று பிரசாரம் செய்யப்பட்டது. ஒவ்வொரு நாட்டிலும் இருந்த இஸ்லாமிய அரசுகள் இதனை அமல்படுத்தின. மேலும் இஸ்லாம் அல்லாத நாடுகளில் முல்லாக்களின் ஆதரவாளர்கள் இதனை அமல்படுத்தினர். இதனை நியாயப்படுத்தும் பத்வாக்கள் என்ற கருத்துரைகள் மற்றும் தீர்ப்புகள்  அவ்வப்போது அளிக்கப்பட்டன.முல்லாக்களின் பத்வாக்களை கடவுளின் நேரடியான கட்டளையாக அன்றைய முஸ்லிம்கள் பார்த்தனர். இந்தியாவை பொறுத்தவரை இருபதாம் நூற்றாண்டில் இடைப்பகுதி வரை இந்நிலைமை இருந்தது. சுதந்திரத்திற்கு பின்னர் தொழில்மயமான சூழலில் தான் இது படிப்படியாக மாறியது. அதே நேரத்தில் வட இந்தியாவில் இன்னும் இதன் தாக்கம் இருக்கிறது.



தற்போது நடைமுறையில் இருக்கும் பர்தா என்ற கருப்பு அங்கி 19 ஆம் நூற்றாண்டின்  இறுதி பகுதியில் அரபு நாட்டில் அறிமுகமானது. (இதன் மூலவடிவத்தை ஈரானின் பார்சி மதத்தினர் தான் முதன் முதலாக கடைபிடித்தனர் என்ற வரலாற்றுக்குறிப்பு காணப்படுகிறது.) ஐரோப்பிய காலனியாதிக்கத்திற்கு அரபு நாடுகள் உட்படுத்தப்பட்ட போது அங்கிருந்து இந்த உடை வடிவப்படுத்தப்பட்டது. தைக்கப்பட்ட உடை அறிமுகப்படுத்தப்பட்டதன் தொடர்ச்சி இது. அதாவது தையல் அறிமுகமான காலத்தில் கருப்பு நிறத்தில் கழுத்து முதல் கால்வரை பெண்களின் இரவு உடை போன்று வடிவமைக்கப்பட்டது. வஹ்ஹாபிய கொள்கை கொண்ட சவூதி அரேபியாவில் தான் இது முதன் முதலாக அறிமுகமானது. பின்னர் ஷியா கொள்கை கொண்ட ஈரான் இதனை ஏற்றுக்கொண்டது. இந்த இரு நாடுகளும் தான் உலகில் உடை ஒழுங்கை சட்டபூர்வமாக்கி இருக்கின்றன. அதாவது சவூதி அரேபியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் வாழும் அல்லது நுழையும் எந்த பெண்ணும் பர்தா என்ற கருப்பு அங்கியை அணிய வேண்டும். முஸ்லிம் அல்லாத பெண்களாக இருந்தால் அவர்கள் தலையை மறைக்க வேண்டியதில்லை. கழுத்து வரை மட்டும் மறைத்து இருந்தால் போதும். அவர்களுக்கு மட்டும் தலையை மறைப்பதிலிருந்து விதிவிலக்கு அளித்திருக்கும் மர்மம் என்னவென்று புரியவில்லை. 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இது அரபு நாட்டு பெண்களிடம் வேகமாக ஊடுருவியது. முல்லாக்கள் மற்றும் மதஅடிப்படை வாத அமைப்புகள் இதன் தீவிர பிரச்சாரகர்களாக இருந்தனர். மத்தியகிழக்கில் நாகரீகம் பெற்ற மனித வள குறியீட்டை அதிகம் கொண்ட எகிப்தும் இதில் ஒன்று. அதே நேரத்தில் அங்கு எதிர்ப்பும் இணைந்தே இருந்தது. இதன் போலித்தனங்களுக்கும், கலாச்சார கட்டமைப்பிற்கும் எதிராக 19 மற்றும் இருபதாம் நூற்றாண்டில் எகிப்தின் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர்களாக இருந்த காசிம் அமீன், காலித் அப்துல் கரீம், இப்னு தோரா, அல் அஸ்வாமி போன்றவர்கள் பிரசாரம் செய்தனர்.  இதனை கடுமையாக எதிர்த்து இஸ்லாமிய மதத்தில் பெண்களின் உடை என்பது என்ன? என்ற உண்மையை அம்பலப்படுத்தினர். இதற்காக இது குறித்த நூல்கள் அவர்களால் எழுதப்பட்டன.  மேலும் இஸ்லாமிய மூல பிரதிகளிலிருந்தே அவர்கள் மேற்கோள் காட்டி அதற்கான வரலாற்று ரீதியான விளக்கத்தை கொடுத்தனர். இஸ்லாமிய உலகம் இன்று எதிர்கொள்ளும் முக்கிய சிக்கல்களில் கலாசாரம் மற்றும் பழக்க வழக்கங்கள் பற்றிய பார்வை முக்கியமானது. அடிப்படைவாதம் வேர்கொள்ளும் இடம் இதுவே. செருப்பு அணிவதில் தொடங்கி நடப்பது மற்றும் படுப்பது வரை இஸ்லாமாக இருக்க வேண்டும் என்று அடிப்படைவாதிகள் முன்வைக்கின்றனர். ஆனால் இதனை மறுத்த மேற்கண்ட அறிஞர்கள் இஸ்லாம் என்பது ஐந்து கடமைகள் மற்றும் சில வாழ்வியல் விதிகளை உள்ளடக்கியது. மாறாக கலாசாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் (Culture and Customs) குறித்ததல்ல. கலாசாரம் மற்றும் பழக்க வழக்கங்கள் என்பவை ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தகுந்த படி வேறுபடும். அரபு நாடுகளிடையே கூட கலாசாரம் மற்றும் பழக்க வழக்கங்களில் வித்தியாசங்கள் இருக்கின்றன. வளைகுடா நாடுகளில் ஆண்கள் அணியும் தோப் என்னும் உடையை அதற்கு வெளியே யாரும் அணிவதில்லை. மேலும் அவர்கள் அணியும் தலைவட்டை ஒவ்வொரு நாட்டிற்கும் வித்தியாசப்படுகிறது. பழக்கவழக்கங்களில் கூட நுண்மய வித்தியாசம் நிலவுகிறது. இந்நிலையில் உலகம் முழுக்க ஒரே கலாசாரம், ஒரே பழக்கவழக்கம் என்பது சாத்தியமற்றது. அவ்வாறு முழங்குவதே போலித்தனமானது. இங்கு பர்தாவின் பெயரில் சவூதி அரேபிய கலாசாரத்தை உலகம் முழுக்க வாழும் முஸ்லிம் பெண்களின் மீது திணிக்கிறார்கள். திணிப்பும் விருப்பமும் இந்த ஆணாதிக்கவாதிகளின் அகராதியில் ஒரே அர்த்தத்தை கொண்டவை அல்லது ஒரே அர்த்தத்தை கொண்ட இரு வேறு சொற்கள். இதன் தொடர்ச்சியில் எகிப்தின் இஸ்லாமிய அறிஞர் காசிம் அமீன் தன் பெண் விடுதலை என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“பர்தா (கருப்பு அங்கி) மற்றும் நிகாப் (முகமூடி) திட்டவட்டமாக இஸ்லாமிய கட்டளையோ, வழிபாடோ சமூக விதியோ இல்லை. மாறாக அது குழப்பவாதத்தின் தோற்றம். பர்தா என்பது பெண்களை வீட்டில் அடைத்து வைத்து அவர்களை வெளியில் விடாமல், மற்ற ஆண்களுடன் கலக்காமல் இருக்க ஆண்கள் கண்டுபிடித்த ஒன்றே. மேலும் இந்த மரபு என்பது ஏழாம் நூற்றாண்டில் நபியின் மனைவிகளுக்கு சொல்லப்பட்ட ஒரு விதிமுறையாகும்.” இதற்காக அவர் குர் ஆனிலிருந்தும், நபியின் சொற்களிலிருந்தும் மேற்கோள் காட்டுகிறார். மேலும் குர் ஆனின் விரிவுரை விளக்கத்திலிருந்து இதன் வரலாற்று தேவையை உணர்த்துகிறார். மேலும் ஆண்கள் பர்தாவை பெண்களின் நடத்தையோடு சம்பந்தப்படுத்தி பேசுவதையும் கண்டிக்கிறார். பர்தா அணிந்து கொள்ளும் போது அல்லது முகத்தை மூடும் போது இனம் புரியாத அதிக கற்பனைக்கு அந்த பெண் உட்படுத்தப்படுகிறாள். மறைபொருளை பார்க்க வேண்டும் என்ற உந்துதல் வக்கிர ஆண்களுக்கு இயல்பாகவே ஏற்படுகிறது. பெண் கற்பு மற்றும் கண்ணியத்தின் பெயரால் பாதுகாப்பு பெட்டகத்தின் பின்னால், உயர்ந்த மதில் சுவர்களின் பின்னால் அடைக்கப்படும் போது எப்படி ஒருவர் அதனை மார்தட்டி கொள்ள முடியும்? மேலும் தன் எழுத்துகள் எகிப்தின் இளம்பெண்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பினார். அதன் மூலம் அவர்கள் படிப்படியாக புதிய விடுதலையை நோக்கி நகர்வதோடு, கண்ணியமும், ஒழுக்கமும் இயற்கையானவை. மனித மனம் சார்ந்த உள்ளார்ந்த தரங்கள் என்பதை புரிந்து கொள்வார்கள் என்றார். மற்றொரு அறிஞரான காலித் அப்துல் கரீம் இதனை குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறார் “இஸ்லாமிய பெண் அவள் விரும்பும் எந்த உடையையும் அணியலாம். ,மேலும் நபியின் காலத்தில் பெண்கள் வெவ்வேறு உடைகளை அணிந்தனர். மேலும் அன்றைய காலகட்டத்தில் உடை என்பது சமூக மற்றும் செல்வத்தின் அடையாளமாக இருந்தது.” மேலும் இந்த விஷயத்தில் இஸ்லாமிய மூலப்பிரதிகள் அனைத்துமே தவறாக விளக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சமூகத்தின் சிறந்த வளர்ச்சிக்கு அந்த சமூகத்தின் தனிநபர்களின் வளர்ச்சியும் அவசியம். தனிநபர்களான சமூக மனிதர்களின் வளர்ச்சி தான் ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சி. அந்த சமூக மனிதர்களில் பெண்களும் அடங்குவர். மேலும் எகிப்திய உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவரும், சிறந்த இஸ்லாமிய அறிஞருமான அல் அஸ்மவி “ பர்தா என்பது  பழக்கவழக்கம் மற்றும் மரபு சார்ந்த வெளிப்படையான ஒன்று. அதற்கும் இஸ்லாத்திற்கும், அதன் சட்டதிட்டத்திற்கும் சம்பந்தமே இல்லை என்றார்.  மேலும் பர்தா என்பது ஓர் அரசியல் குறியீடு. இது தன் செல்வாக்கை தன் பகுதியில் நிலைநிறுத்த விரும்பும் மதகுழுக்களால் செயல்படுத்தப்படுகிறது.

பர்தா குறித்த உண்மைகளை, தெளிவுகளை இவ்வாறான பல அறிஞர்கள் பல்வேறு நாடுகளிலும் வெளிப்படுத்தி இருக்கின்றனர். இந்தியாவில் வஹீதுத்தீன் கான் போன்றவர்கள் இதனை தெளிவாக விளக்கி இருக்கின்றனர். மேலும் இரு நூற்றாண்டுகளாக அரபு நாடுகளில் குறிப்பாக சவூதி மற்றும் ஈரானில் ஊடுருவி இருக்கிற பர்தாவானது அரபு பெண்களின் அடிப்படை உடை. பாலைவன சூழலுக்கு ஏற்ற உடை அது. அவர்களிடம் உள்ளாடைகள் கூட மிக தாமதமாக தான் அறிமுகமாயின. அறுபதுகளில் அரபு நாடுகள் காலனியாதிக்கத்திடம் இருந்து விடுதலை பெற்று பெட்ரோலிய வளத்தின் காரணமாக அங்கு பணப்பெருக்கம் ஏற்பட்ட தருணத்தில் தான் அவர்களின் உடை கலாசாரத்தில் மேற்கத்திய ஊடுருவல் ஏற்பட்டது. ஜீன்ஸ் பேண்ட் டாப் மற்றும் பனியன்கள் அணிந்து அதன் மேல் பர்தாவை அணிந்து கொண்டனர். (இன்றும் கூட மேற்கண்ட இரு நாடுகளில் வயதான பெண்கள் வெறும் பர்தாவை மட்டுமே தங்கள் உடையாக அணிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.) இந்த மேற்கத்திய தாக்கம் 60 மற்றும் 70 களில் நிகழ்ந்தது. மேலும் அங்குள்ள பெண்கள் தங்களின் விருப்பம் சார்ந்து ஜீன்ஸ் பேண்ட், முறைசார் பேண்ட் மற்றும் டாப் அணிந்தனர். இது எகிப்து, சிரியா, லெபனான், துனிஷியா , குவைத், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் போன்ற நாடுகளில் வழக்கத்தில் இருந்தது. இதற்காக அங்குள்ள பெண்களை யாரும் கேள்வி கேட்கவில்லை. அவர்களுக்கான சுதந்திரத்தை அவர்கள் எடுத்துக்கொண்டனர். மேலும் இந்த நாடுகளில் பர்தா அணியும் பழக்கம் உள்ள பெண்கள் கூட வெளிநாடுகளுக்கு செல்லும் போது பர்தாவை கழற்றி விடும் வழக்கத்தை கடைபிடிக்கின்றனர். மேலும் ஆண்களின் பாரம்பரிய உடையான தோப் என்பது இன்றைய அரபு இளைஞர்களிடம் விலகி அவர்கள் வெகுவாக பேண்ட் சர்ட்டிற்கு மாறி வருகின்றனர். அதே நேரத்தில் சவூதி அரேபியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் பெண்களுக்கான இந்த உடை அமைப்பை சட்டபூர்வமாக்கி இருக்கின்றன. சவூதி அரேபியாவில் இதனையும் தாண்டி பெண்கள் மீதான பல கட்டுப்பாடுகள் உண்டு. 60 கள் வரை அங்கு பெண்கள் உயர்கல்வி கற்க அனுமதி இல்லை. பின்னர் தான் பெண்களுக்கு தனியாக உயர்கல்வி கற்கும் முறையை சவூதி அறிமுகப்படுத்தியது. உலகிலேயே பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்காத ஒரே நாடு சவூதி அரேபியா. மேலும் பெண்கள் ஆண்கள் துணையில்லாமல் வெளியே செல்ல முடியாது. அவ்வாறு சென்றால் தண்டிக்கப்படுவர். மேலும் சவூதி அரேபிய பெண் வெளிநாட்டினரை மணந்தால் அந்த பெண்ணின் வாரிசிற்கு சவூதிய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு வெளிநாட்டினரை மணந்த பல பெண்களின் குழந்தைகள் சவூதி அரேபியாவில் தற்போது வெளிநாட்டினரை போல் வசிக்கின்றனர். இது போன்ற பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை மாற்றுவதற்காக அங்குள்ள பெண்கள் அமைப்பினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும் கருப்பு நிற பர்தாவிற்கு பதிலாக எங்களுக்கு நீல நிற பர்தா அணியும் உரிமை வேண்டும் என்றும் போராடி வருகின்றனர். மேலும்  சவூதி மற்றும் ஈரானிய பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்றால் பெரும்பாலானோர் கழற்றி  விடுகின்றனர். இது தெளிவான அவதானம். மேலும் முகமூடியும் இந்த இருநாடுகளில் வழக்கத்தில் இருக்கிறது. அதனை விருப்பமாக மாற்றி இருக்கின்றனர். ஆனால் இதுவும் விருப்பத்தின் அகராதி அர்த்தமே.

இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளின் நிலவியல் மற்றும் காலநிலை என்பது வேறு. சாதியமயமான இந்திய சமூகத்தில் உடை என்பது ஆதிக்க வடிவமாக இருந்தது. இங்கு சாதி சார்ந்து உடை அமைப்பு இருந்தது. மேற்சாதி பெண்கள் அணியும் உடையை கீழ்சாதி பெண்கள் அணிய சுதந்திரமில்லை. இப்படியான காலகட்டத்தில் முகலாய மன்னர்களின் ஆட்சியில் இஸ்லாமிய பெண்களிடையே பிரதேசம் சார்ந்து முழுநீள குப்பாயம், ஈரானிய வெள்ளை துப்பட்டி போன்ற உடைகள் வழக்கத்தில் இருந்தன. தமிழ்நாட்டை பொறுத்தவரை உருது முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் துப்பட்டா என்ற வெள்ளை மேலங்கி நடைமுறையில் இருந்தது. அதே நேரத்தில் கிழக்கு கடற்கரை சாலை மாவட்டங்களில் (கல்பாக்கம் முதல் காயல்பட்டினம் வரை) வசிக்கும் முஸ்லிம் பெண்கள் மத்தியிலும் இந்த துப்பட்டா முறை நடைமுறையில் இருந்தது. மேலும் உள்மாவட்டங்களான திருச்சி, திண்டுக்கல், கரூர் போன்ற மாவட்டங்களிலும் இந்த முறை உண்டு. அதே நேரத்தில் தென்மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தேனி, தூத்துக்குடி (காயல்பட்டினம் தவிர) திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி, கொங்கு மாவட்டங்களான கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தமிழ் கலாசாரம் சார்ந்த சேலை, தாவணி போன்ற உடைகளோடு இயல்பான முறையில் தலையில் முக்காடு அணியும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டு முஸ்லிம் இளைஞர்கள் பிழைப்பு தேடி அரபு நாட்டுக்கு சென்ற போது அங்கிருந்த பெண்களின் உடை அடிமை மனோபாவம் மற்றும் அரபு மோகம் காரணமாக இங்கு ஊடுருவியது. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் எல்லாம் அங்கிருந்து திரும்பும் போது தங்களின் குடும்ப பெண்களுக்கு, மனைவிகளுக்கு இந்த பர்தாவை வாங்கி வரத்தொடங்கினர். வாசனைதிரவியம் சார்ந்த மனோபாவம் பெண்ணின் உடை வரை நீண்டது. துப்பட்டா முறை வழக்கில் இல்லாத, இயல்பான உடைகள் வழக்கில் இருந்த தென் மற்றும் கொங்கு மாவட்டங்களில் மேட்டுக்குடி வர்க்க முஸ்லிம் பெண்களிடம் இந்த முறை முதலில் ஊடுருவியது. இது 90 களின் தொடக்கத்தில் நிகழ்ந்தது. இதனை மற்ற பெண்கள் எல்லோரும் வித்தியாசமாக பார்த்தனர். உயர்குல பெண்களின் அடையாளமாக மற்றவர்கள் கருதினர். பின்னர் படிப்படியாக இங்கு ஊடுருவியது. புனிதம் சார்ந்த பிராண்ட் வகையாக இருப்பதால் பர்தாவை உள்ளூர் வியாபாரிகள் பலர் அரபுநாட்டிலிருந்து கொள்முதல் செய்து கொள்ளைவிலைக்கு விற்றனர். பின்னர் உள்ளூர் ஜவுளி தயாரிப்பாளர்கள் இந்த புனித ரகசியத்தை அறிந்து கொண்ட காரணத்தால் உள்ளூர் தயாரிப்புகளில் இறங்கினர். ஒரு சேலையை விற்பதை விட மிக எளிதாக அவர்களால் இங்கு பர்தாவை விற்க முடிகிறது. குறிப்பாக ஆடித்தள்ளுபடிகள் செய்யாத வேலையை பர்தா இலகுவாக செய்து விடுகிறது.காரணம் பர்தா என்பது நிர்பந்தம் சார்ந்த புனித குறியீடாக இருப்பதால். இதன் தொடர்ச்சியில் வெள்ளை துப்பட்டா அணியும் வழக்கமுள்ள பகுதிகளை சார்ந்த பெண்கள் எல்லோரும் படிப்படியாக இதற்கு மாறினர் அல்லது மாறுவதற்காக மறைமுகமாக நிர்பந்திக்கப்பட்டனர். இதனால் ஜவுளி கடைகளுக்கு விற்பனை பல மடங்கானது. மேலும் சேலையை விட உற்பத்தி செலவு குறைவாக இருந்த போதும் புனித பிராண்டாக இருப்பதால் அதிக விலைக்கு இதனை விற்க முடிகிறது. இந்தியாவில் காவி உடை கூட எல்லா கடைகளிலும் கிடைப்பதில்லை. ஆனால் பர்தா எல்லா கடைகளிலும் கிடைக்கிறது. கடைக்குள் முஸ்லிம் பெண்கள் நுழைந்தாலே முதலில் பர்தா பிரிவிற்கு அழைத்து செல்லும் விநோதங்கள் பல இடங்களில் நடக்கின்றன.இதன் மூலம் கருப்பு நுகர்வு முஸ்லிம் மக்களிடையே எவ்வளவு தூரம் ஊடுருவி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இதன் தொடர்ச்சியில் பர்தா பழக்கமில்லாத தென்மாவட்ட பெண்கள் எல்லாம் இதற்கு மாற நிர்பந்திக்கப்பட்டனர். அவர்கள் மற்றும் கடந்து போன தலைமுறை சார்ந்த பெண்கள் எல்லாம் இதனை அணிந்து கொள்ளாத காரணத்தால் மிகப்பெரும் பாவச்செயலை செய்ததாக பிரச்சாரம் செய்யப்பட்டது. முல்லாக்களும், மதவெறி அமைப்புகளை சார்ந்த ஆண்களும் இதன் பிரதான விளம்பரதாரர்களாக மாறினர். ஆதிகாலத்திலேயே இந்த கருப்பு உடை வழக்கில் இருப்பதாக போலியான விளம்பரம் சமூக மனங்களில் புகுத்தப்பட்டது. மேலும் வளைகுடா நாடுகளில் மூளைச்சலவை செய்யப்படும் இளைஞர்களும் பர்தா சலவை செய்யப்பட்டு அவர்களின் பெண்களை இதனை கடைபிடிக்க வலியுறுத்தினர். இதன் காரணமாக தென்மாவட்டங்களில் குமரிமாவட்டம் தவிர்த்து பிற மாவட்டங்கள் எல்லாம் 90 சதவீதம் இதற்கு மாறி விட்டன. கருப்பு நிற மேலங்கியை பெண்களின் நடத்தை விதியாக மாற்றிவிட்டதால், இதனை அணியாவிட்டால் மோசமான நடத்தை கொண்டவள் என்ற பொதுப்புத்தியை உருவாக்கி விட்டதால் அவர்கள் இதனை அணியும் கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டனர். இயல்பாகவே நடத்தை சார்ந்த குணாம்ச கொலைக்கு பெண்கள் ஆளாகி இருப்பதால் அவர்களுக்கு இதனை அணிவதை தவிர வேறு வழி இல்லை. அதே நேரத்தில் மதவெறி பிடித்த ஆண்கள் சமூக வெளியில், அறிவுலகில் இது குறித்த விமர்சனம் வரும்போது அது பெண்களின் விருப்பம் என்ற அப்பட்டமான பொய்யை திருப்பி திருப்பி மொழிகின்றனர். ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லும் போது, அதுவும் இறுகிய வட்டத்தில் இருந்து வெளிப்படுத்தும் போது அதனை உண்மையாக்கி விடலாம் என்ற எண்ணமே அதற்கு காரணம். இது குறித்து உண்மையான நிலவரத்தை அறிய கள ஆய்வை நான் மேற்கொண்டேன். பல்வேறு நண்பர்கள், பெண்கள், மற்றும் அமைப்புகள் வழியாக இந்த ஆய்வு தமிழ்நாட்டில் கடந்த மூன்று வருட காலமாக நடத்தப்பட்டது.

(தொடரும்)
கடந்த ஆண்டு உயிர்மையில் வெளிவந்த என் கட்டுரை

பர்தா என்ற கருப்பு அங்கியும் தமிழ்நாடும் - பாகம் 2

No comments: