காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Saturday, May 31, 2008

பலதார மணம் பற்றிய குறிப்புகள்

நீண்ட சுவர்களின் வெளியே - பலதார மணம் பற்றிய
குறிப்புகள்

எச். பீர்முஹம்மது

புதிய காற்று (ஜுலை 2007)

உலக வரலாற்றில் தேவைகள் அவற்றை உருவாக்கும் புற சக்திகளால் உருவாக்கப்படுகின்றன. உலக வரலாறு என்பது சுதந்திரம் பற்றிய பிரக்ஞையின் வரலாறே அன்றி வேறில்லை.

(ஹெகலின் Philosophy of history என்ற நூலிலிருந்து)


மனித சமூகம் ஆண்- பெண் என்ற எதிரிணைக்குள் இருக்கும் போது
மோதல்களும் தவிர்க்க இயலாமல் எழுகின்றன. புராதன மனிதனுக்கு
திருமணம் குணாதிசயங்கள் அற்ற பிரக்ஞையாக இருந்த போது எவ்வித வகைதெரிவும் உருவாகவில்லை. திருமணம் ஒரு சமூக பிரக்ஞையாக உருவானது நாகரீக காலகட்டத்தில் தான். அக்காலகட்டத்தில் ஆண் சமூக
முன்னோடி ஆகிறான்.பெண் இரண்டாம் நிலைக்கு வருகிறாள். முரண்பாடு
இங்கு தான் உருவானது. தீவிர சமூக உயிரியலாளர்கள் மனித
நடத்தைக்கு மரபணுக்களே காரணம் என்கின்றனர். எல்லா விஷயங்களுமே நமக்குள் கணினி புரோகிராம் மாதிரி எழுதி வைக்கப்படவில்லை தான். ஆனால் நடத்தையோடு கலாசாரமும் இணைந்து கொள்கிறது. மரபணுக்கள் தீர்மானித்தது போக மற்றவை கலாசாரங்கள் வழி தான் உருவாகின்றன. இந்த பரிணாமமும், உயிரியலும் ஒரு சில அடிப்படை நியமங்களை மட்டுமே ஏற்படுத்தி தருகின்றன.

குடும்பம் என்ற சமூக நிறுவன உருவாக்கத்திற்கு திருமணமே காரணம். பண்டைய சீனாவில் திருமணங்கள் அரசியல் ஸ்திரத்தன்மையை பாதித்திருக்கின்றன.ஹன் வம்ச அரசர்கள் மற்ற இன பெண்களை திருமணம் செய்தனர். இதற்கு வெளியே சீனர்களிடத்தில் சகோதர திருமணம் வழக்கில் இருந்தது. நுவாவுக்கும் பு-சி க்கும் இடையேயான திருமணம் இதற்கு
உதாரணம். சகோதர முறையிலான இவர்கள் திருமணத்தின் போது முகத்தை மூடிக்கொண்டனர். கன்பூசிய மதம் சீனாவில் பரவத்தொடங்கிய காலகட்டத்தில் இந்நடைமுறை முடிவுக்கு வந்தது. சீனாவில் முதன்
முதலாக ஒரு தாரமணத்தை அறிமுகப்படுத்தியது கன்பூசியம் தான். அது குடும்ப உறுப்பினர்களை அடையாளப்படுத்தியது மட்டுமல்லாமல் அவர்களின் பாலியல் உறவு முறையையும் ஒழுங்குப்படுத்தியது. இதன் மூலம் குடும்ப அலகுகளை உற்பத்தி செய்தது. இதன் நீட்சியாக கிழக்கில் ஒருதார மணம் அறிமுகம் ஆனது. ஆனால் அதே காலகட்டத்தில் சீன பேரரசர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்தனர். கி.பி ஆறாம் நூற்றாண்டு ரோமின் சீசர்கள் பலதார மணத்திற்கு உட்பட்டு இருந்தனர். ஒரு சீசரான கான்ஸ்டாண்டைன் மூன்று திருமணங்கள் செய்தார். அன்றைய மன்னர்களுக்கு அது கெளரவ குறியீடாக இருந்தது.

மத்திய கிழக்கை பொறுத்தவரை பலதாரமணம் வரலாற்று அடிப்படையிலான நடைமுறையாக இருக்கிறது. பாபிலோனியர்களும், அசிரியர்களும் இந்த ஒழுங்கு முறைக்கு உட்பட்டு இருந்தனர். எகிப்திய, ஈராக்கிய தடயங்கள் நமக்கு அதை வெளிப்படுத்துகின்றன. செமிட்டிக் மதமாக யூதம் உருவான நிலையில் வரலாற்று யூதர்களும் இதை பின்தொடர்ந்தனர். யூத பிரதிகளின் பகுதிகள் பலதார மணம் பற்றிய கதைகளோடு வாசிப்பை நகர்த்துகின்றன அதனிலிருந்து சீர்திருத்த இயக்கமாக கிறிஸ்தவம் உருவான பிறகு இந்த வழக்கம் பிரதேசங்களை தாண்டியது. விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இது பற்றிய பதிவுகளை நிறையவே காணலாம். இஸ்லாத்துக்கு முந்தைய அரேபியா பாலைவன பழங்குடி இனங்களை உள்ளடக்கி இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட இனக்குழுக்களாக அவர்கள் சிதறிக் கிடந்தனர். பாலுறவு என்பது விகசனத்துக்கு வெளியில் இருந்தது. பெண் தெய்வங்கள் பெருகி கிடந்தனர்.ஆண்- பெண் கடவுள்கள் மொத்தம் 360 பேர் இருந்தனர்.பெண் வழிபாட்டு பொருளாக இருந்ததால் பலதாரமணம் ஒரு துணைக்கருவியாக இருந்தது. இதில் முன்னெடுக்கும் விஷயமாக அன்றைய பழங்குடி சமூகத்தில் ஒரு பெண் பல ஆண்களை
திருமணம் செய்யும் பலபுருஷ திருமணம் (Polyandry) வழக்கிலிருந்தது. அநாகரீக காலகட்டம் தொடங்கி நாகரீக காலகட்டம் வரை அது நீடித்தது. ஒரே குடும்பத்தை சார்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட சகோதர்களை திருமணம் செய்யும் பலபுருஷ முறை அதன் இன்னொரு வடிவம். மகாபாரத பஞ்சபாண்டவர்கள் இதற்கு உதாரணம். கிரேக்க புராணங்களிலும்
இதற்கான தடயங்கள் நிறையவே இருக்கிறது. ஹெலன் என்ற
பெண்ணுக்காக இரு அரசர்களிடையே நடைபெற்ற டிரோஜன் யுத்தத்தைப் பற்றி குறிப்பிடலாம். இது ஹோமரின் இலியட் மற்றும் ஒடிசியஸில் காணக்கிடைக்கிறது. அந்த யுத்தம் நடந்த காலம் கி.மு 12 அல்லது 13 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று அனுமானிக்கிறார்கள்.

திருமணம் என்ற சொல்லாடல் இரு பாலின ஒப்பந்த நடைமுறையாக (contract) உருவானது மத்திய கிழக்கில் தான். செமிடிக் மதமான யூதம் முதன் முதலாக திருமணத்தை ஒப்பந்தம் என்றது. மேலும் ஆன்மாவாக ஒப்பீடாக்கியது. திருமணம் செய்யாத ஆணின் ஆன்மா முழுமையடையாது என்றது. அரேபிய சூழலில் இஸ்லாம் உருவான நிலையில் திருமணத்திற்கு அது சட்ட வடிவத்தை கொடுத்தது.அன்றைய இனக்குழு சமூகத்தில் திருமணம் என்பது படோகாரமாக இருந்திருக்காது தான். சிறிய எண்ணிக்கையிலான மக்கள் தொகையை கொண்ட குழுவிற்கு திருமணம் நெருங்கிய உறவுமுறையை நோக்கியே செல்லும். இஸ்லாத்தில் தந்தை/தாய் வழி சகோதரர்களை திருமணம் செய்யும் முறை இதன் மூலம் தான் தொடக்கம் பெற்றது. அதே காலகட்டத்திலும், இடைக்கால கிறிஸ்தவத்திலும் சகோதர திருமண முறை வழக்கில் இருந்தது. 16 ஆம் நூற்றாண்டு கிறிஸ்தவம் அதை தடை செய்தது. புராதன இந்திய பிராமணர்கள் ஒரே கோத்திர
திருமணத்திற்கு அப்பால் இருந்தனர். குரு-சீடர் கட்டமைப்பில் சீடர்கள் குருக்களின் குடும்பத்தில் திருமணம் செய்வது விலக்கப்பட்டிருந்தது.
விலக்காக மகாபாரதத்தில் அர்ஜுனனின் மகனான அபிமன்யு தந்தையின்
நடன மாணவியான உத்தரையை திருமணம் செய்து கொண்டார்.
இஸ்லாமிய சகோதர திருமணங்கள் இந்தியாவில் உத்திர பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் வங்க தேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் குறைந்த அளவில் இன்னும் வழக்கில் இருக்கின்றன. இஸ்லாமின் தொடக்க காலங்களில் பாலுறவு வரன்முறையற்ற ஒன்றாக மாறி இருந்த நிலையில் ஓர் ஒழுங்கிற்கான தேவை உருவாகியது. விபசாரம், கள்ள உறவு (Fornication, adultery) போன்ற கருத்துருவங்கள் தோற்றுவிக்கப்பட்டு அதற்கான தண்டனை முறைகளும் உருவாக்கப்பட்டன. ஆனால் அதன் எச்சமான முஅத்தா என்ற தற்காலிக திருமண முறை மட்டும் பின் தொடர்ந்தது. அதாவது தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு பின்னர் விட்டு விடுவதாகும். இது பல்வேறு சிக்கல்களை தோற்றுவித்த நிலையில் கலீபா உமர் காலத்தில் தடை செய்யப்பட்டது. (இதற்கு மாறாக ஷியா பிரிவினர் இதை இன்னும் நம்புகிறார்கள். வஹ்ஹாபிய தந்தையான அப்துல் வஹ்ஹாப் தற்காலிக
திருமணம் செய்ததாக வரலாறு வெளிப்படுத்துகிறது.)

இஸ்லாத்தில் பலதாரமண முறை அக்காலத்தில் எழுந்த சமூக சிக்கல் ஒன்றிற்கு தீர்வாக எழுந்ததாக சொல்லப்பட்டாலும் அன்றைய சமூக வெளிப்பாடாகவே நாம் கருத முடியும். நான்கு பெண்கள் என்ற கட்டுப்பாடு இதன்
பிரதிபலிப்பு தான். ஆண்-பெண் விகிதாசாரம் அதிகமாக இருக்கும்
நிலையில் பலதாரமணமே அதற்கான தீர்வுகளை உருவாக்கும் என்பது
நடப்பு காலகட்டத்தில் சாத்தியமில்லாத ஒன்றாக மாறிவிட்டதாக
மானுடவியலாளர்கள் கருதுகிறார்கள். இருபதாம் நூற்றாண்டு கால நாசி ஜெர்மனியில் இனப்படுகொலை காரணமாக ஆண்கள் குறைந்து பெண்கள் அதிகப்பட்ட நிலையில் பலதாரமணத்தை சட்டபூர்வமாக்குவதின் சாத்தியத்தைப் பற்றி ஜெர்மனி சிந்தித்தது. ஆனால் இது மிதமிஞ்சிய ஆண் மக்கள் தொகையையே தோற்றுவிக்கும். சவூதி அரேபியாவில் ஆண் பெண் விகிதாசாரம் 125-100 ஆக இருக்கிறது. இது உலகிலேயே மிக அதிகமான விகிதப்பிரிவு. இதன் விளைவு ஆண்களை சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களாக மாற்றும். இதே நிலை தான் பெண் சிசு கொலை மூலம் ஆண் குழந்தை தேர்வு. உலகின் சில நாடுகளில் இன்னமும் வழக்கில் இருக்க கூடிய இந்த நடைமுறை சமூகத்தை வெறும் ஆண்கள் மட்டுமே நிரப்பப்பட்டதாக மாற்றும். மொட்டையான கிளைகள்: ஆசியாவின் மிதமிஞ்சிய ஆண்கள் மக்கள்தொகை (Bare branches. The security implications of asia's surplus male population) என்ற நூலின் ஆசிரியர்களான ஆன்டிரியா போவர், வேலரி எம் ஹட்சன் ஆகியோர் பெற்றோர் செய்த பெண் சிசு கொலை இன்று 100 பெண்களுக்கு 120 ஆண்கள் என்ற நிலையாக உருவாகியிருக்கிறது என்கிறார்கள். மேலும் தன்ஒரு குழந்தை கொள்கை மூலம் சீனா வெகு விரைவில் இப்படியான பிரச்சினையை எதிர்கொள்ளும் என்று எச்சரிக்கிறார்கள். இது வேறு
வழியின்றி இனவாத வன்முறைக்கு இட்டு செல்லும்.

பலதாரமணம் ஆண்களை மேலும் கீழிறங்கி பெண்கள் பருவமடையும் முன்பே அல்லது பருவமடைந்த தருணத்தில் திருமணம் செய்யும் நிலைக்கு கொண்டு செல்கிறது.(இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் கேரளம், தென்தமிழகம் போன்றவற்றில் இஸ்லாமியரிடையே பெண்களின் பருவ வயதுக்கு சற்று முன் திருமணம் செய்யும் வழக்கம் இருந்தது.) இஸ்லாம் ஆண், பெண்ணின் பருவ வயது குறித்த கால வரையறை எதையும் வைக்கவில்லை. அது வெளிப்படையாக தெரியும் பருவ மாற்றங்கள் என்கிறது. இதுவே மரபார்ந்த நிலையில் உலகமயத்துக்கு உட்படுமாறு நிர்பந்திக்கப்படுகிறது. தற்போது அரேபிய சூழலில் பெண்ணின் சராசரி பருவ வயது 9 ஆக இருக்கிறது. இதன் சம காலமாகவோ அல்லது சற்று தாமதமாகவோ இஸ்லாமிய கால அரேபிய இருந்திருக்க வேண்டும். ஆண் பெண் பருவ மாற்றங்கள் உலகம் முழுவதும் ஒரே சீராக இருக்க வாய்ப்பில்லை என்பதை உளபகுப்பாளர்களும், உயிரியலாளர்களும் நிரூபித்திருக்கிறார்கள். அது பிரதேசம் தாண்டி வேறுபடுகிறது. இதனால் தான் பல்வேறு நாடுகளில் சட்டப்படியான திருமண வயது வரம்பு வித்தியாசப்படுகிறது.பலதார மணம் உலகிலேயே மிக அதிகமாக மேற்கு ஆப்ரிக்கா மற்றும் சகாரா பாலைவனப்பகுதிகளில் (அல்ஜீரியா, நைஜீரியா, மாலி, செனிகல்) தான் நடைமுறையில் இருக்கிறது. அரபு நாடுகளில் பலதார மணம் கடந்த இருபது ஆண்டுகளில் வெகுவாக குறைந்திருக்கிறது. தற்போது மிகக் குறைந்த ஆண்களே பலதார மணத்திற்கு உட்படுகிறார்கள். ஆனால் ஆப்ரிக்கா மற்றும் சகாரா பாலைவனப்பகுதிகளில் ஆண்கள் வரைமுறையற்ற எண்ணிக்கைக்கு உட்பட்டிருக்கிறார்கள். கிறிஸ்தவ
திருச்சபையானது சகாரா பாலைவன கிறிஸ்தவர்களுக்கு பலதார மணம் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறது. மேலும் இவர்களில் ஒரு கூட்டம் பிரான்சுக்கு குடி பெயர்ந்து கொண்டிருக்கிறது. பிரான்சு அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு பலதார மண தம்பதிகளுக்கு விசா மறுத்தது. பின்னர் அதை தளர்த்தியது. 2005 ஆண்டு வரை பிரான்சில் சுமார் 30000 பலதார மணம் புரிந்த குடும்பங்கள் இருந்தன. உலக பெண்கள் அமைப்பின் கருத்துப்படி பலதார மணத்திற்கு உள்ளான பெண்களில் 60 சதவீதம் பேர் தங்கள் கணவனால் பாதிப்புக்கும், பாரபட்சத்திற்கும் உள்ளாகியிருக்கிறார்கள். அவர்கள் ஒரு வித பயத்துடனே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது வீட்டு வன்முறைக்கு ஒப்பானது. இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் அரசியல் வாதிகள் பலதாரமணத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள். இதனை ஆட்சேபித்து பெண்ணிய வாதிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தினார்கள். இதற்கு வெளியே இந்தோனேசியாவில் பலதாரமணம் பரவலாக இருக்கிறது. மஹர் என்ற பரிசப்பணம் பலதார சமூகத்தின் அடையாளமாக இருக்கும் பட்சத்தில் வரதட்சிணை என்பது ஒருதார சமூகத்தின் அடையாளமாக இருக்கிறது. (பலதாரமணம் புரியும் ஆப்ரிக்கா பகுதி முஸ்லிம் அல்லாதவர்கள் பரிசப்பணத்தை வேறொரு வடிவில் தருகிறார்கள். ) இரண்டையுமே பெண்ணியவாதிகள் எதிர்க்கிறார்கள். இரண்டுமே ஆணாதிக்கத்தின் குறியீடு என்பது அவர்களின் வாதம். பரிசப்பணம் என்பது பழங்குடி சமூகத்திலிருந்த பணக்கார விவசாயிகள் தங்கள் விவசாய விளைபொருட்களை கொடுத்து பெண்களை விலைக்கு வாங்கியதன் தர்க்க ரீதியான தொடர்ச்சி. வரதட்சிணை என்பது வைதீக மேலாதிக்க சமூகத்தில் ஆணாதிக்கத்தின் தூய வடிவம். வைதீக சமூகங்கள் பெண்களை எவ்வித வேர்களுமற்ற கும்பல்களாகவே அறிமுகப்படுத்துகின்றன. ஸ்மிருதிகளை நாம் படிக்கும் போது இதை தெளிவாக அறிந்து
கொள்ள முடியும். பலதார மணம் எவ்வாறு இளம் பெண்களை (13-14 வயதுக்குட்பட்டவர்கள்) திருமணம் செய்வதில் சென்றடைகிறது என்பதை சித்தரிக்கும் நைஜீரிய எழுத்தாளரான புசி எம்னெதா வின் பரிசப்பணம் (bride price) நாவல் முக்கியமானது. ஆப்ரிக்க வட்டாரங்களில் அதிகம் பேசப்பட்டது இந்நாவல். நைஜீரிய கிராமமொன்றில் இளம் பெண்ணை மூன்றாம் மனைவியாக திருமணம் செய்யும் ஒரு ஆணின் கதை அது. ஆப்கானிஸ்தானில் தன் குழந்தை வயதை ஒத்த பெண்ணை இரண்டாவதாக அல்லது மூன்றாவதாக திருமணம் செய்யும் வழக்கம் பரவலாக இருக்கிறது. இந்தியாவில் கேரளத்தின் சில மாவட்டங்கள் (மலப்புரம், கண்ணூர், கோழிக்கோடு) உத்திர பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் முந்தைய குழந்தை திருமணத்தின் எச்சமாக இது வழக்கில் இருக்கிறது. (இங்கெல்லாம் முஸ்லிம் பெண்ணின் சராசரி திருமண வயது 15 ஆக இருக்கிறது.)

சில இஸ்லாமிய சிந்தனையாளர்கள் பலதார மணம் தற்போது அதன் உபயோகத்தை இழந்து விட்டதாக கருதுகிறார்கள். மேலும் சிலர் இமாம் ஷாபி மற்றும் பைஹகீயின் விளக்கத்தைக் மேற்கோள் காட்டி ஒரு தார மணமே சிறந்தது என்கின்றனர். பதினான்காம் நூற்றாண்டில் குர் ஆனை பன்முக வாசிப்புக்குட்படுத்திய சிலர் (குர்தூபி போன்றவர்கள்) பலதார மணம் குறித்த வசனமான இரண்டு இரண்டாகவோ, மூன்று மூன்றாகவோ, நான்கு நான்காகவோ என்பதை 2+3+4 ஒன்பதாகவும், வேறுசிலர் 2+2, 3+3, 4+4 பதினெட்டாகவும் கருதினர். ஆக இஸ்லாத்தில் பதினெட்டு பெண்கள் வரை திருமணம் செய்து கொள்ள முடியும் என்றனர். இம்மாதிரியான எல்லா வேடிக்கைகளும் ஆரம்பம் முதல் தற்காலம் வரை தொடர்கின்றன. பலதார மணம் தற்போதைய உலகில் சமன்பாடுகளை தாண்டி செல்கிறது. தீவிர பெண்ணியவாதிகள் ஒரு தார மணத்தையே விரும்புகின்றனர். இஸ்லாமிய உலகில் பலதார மணம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் அதன் அர்த்தமிழப்பின் பாதை நிச்சயம் செல்லத்தக்கது.

No comments: