காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Saturday, May 17, 2008

ஜிப்சிகள்

வரலாற்றின் இருண்மை:
ஜிப்சிகள்- மத்தியகிழக்கு- பாசிசம்

உயிர்மை (பிப்ரவரி 2007)

- எச்.பீர்முஹம்மது


மனிதன் வரலாற்றிலிருந்து எதையும் கற்றுக்கொள்ள முடியாதவற்றையே வரலாறு நமக்கு சொல்லித்தருகிறது என்றார் ஹெகல். வரலாறு ஒரு கணக்கீட்டு இயந்திரம் அல்ல. மாறாக சமூக, பொருளாதார, கலாசார கூறுகளின் மையமாக இருக்கிறது
என்றார் டேவிட்சன்.அனோயதமான சூழலில் வரலாற்றின் கொடூர பக்கங்களில் மறைந்து போன ஜிப்சிகள் அல்லது ரொமானிகள் குறித்த பரவலான வரலாறு நம் பார்வையை விட்டு வெகுதூரம் சென்று விட்டது. நாசி இனப்படுகொலைகளில் யூதர்களின் சம அளவாக கொல்லப்பட்ட ஜிப்சிகளின் தோற்றம் இந்தியாவை
சார்ந்திருக்கிறது.

ரோமா என்றழைக்கப்படும் ஜிப்சி இனத்தவர்கள் கி.பி மூன்றாம் நூற்றாண்டில் வட இந்திய பகுதிகளில் நாடோடிகளாக வாழ்ந்தவர்கள். இவர்களில் கைவினை பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் இசைவாணர்கள் ஆகியோர் இருந்தனர். குஜராத் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாகாணங்களே இவர்களின் இருப்பிடம்.கி.பி நான்காம் நூற்றாண்டில் பாரசீக மன்னரான பெஹ்ரம் குர் இங்கிருந்து இசைவாணர்களையும்,
நாட்டியகாரர்களையும் பாரசீகத்திற்கு கொண்டு வந்தார். இவர்களை அரபு வரலாற்றாசிரியரான ஹம்சா சாட் என்று அழைத்தார். இவர்கள் அரபு மொழியில் நவாரி அல்லது தொமாரி என்ற பெயரில் அழைக்கப்பட்டார்கள்.மத்திய ஐரோப்பாவில் இவர்கள் லொமாரிகள் எனவும், மேற்கு ஐரோப்பாவில் ரொமானிகள் எனவும் அழைக்கப்பட்டார்கள். இவர்கள் நான்கு பெரும் பிரிவுகளாக பிரிந்தனர்.இவை மேலும் பத்து இனக்குழுக்களாக பிரிந்தன. கி.பி ஏழாம் நூற்றான்டில் கலீபா முஆவியா சில சாட் குடும்பங்களை பஸ்ராவிலிருந்து அந்தியோக்கிற்கு கொண்டு வந்தார். இது அன்றைய அரபு எதேச்சதிகாரத்தின் பிரதிபலிப்பாக இருந்தது.இவர்களை பின் தொடர்ந்தவர்கள் ஈராக்,சிரியா,
எகிப்து, சைப்ரஸ் போன்ற மத்திய கிழக்கின் பல பகுதிகளுக்கும்
நகர்ந்தனர். இவர்களில் ஈராக்கில் வாழ்ந்த சாட் அல்லது ஜிப்சிகள் டைகிரிஸ் நதியோரத்தில் தங்கள் குடியிருப்புகளை ஏற்படுத்தினர். பின்னர் சுமார் 27000 ஜிப்சிகள் அங்கிருந்து முஆவியாக்களால் சிறைபிடிக்கப்பட்டு பாக்தாத் கொண்டுவரப்பட்டனர்.
பாக்தாத்தில் முஆவியா மன்னர்களால் மிகுந்த சித்திரவதைக்கு
உள்ளானார்கள். இதன் பிறகு ஜிப்சிகளின் ஒரு கூட்டம்
காண்ஸ்டாண்டி நோபிளை நோக்கி நகர்ந்தது. அதில் பலதரப்பட்ட தொழில் கூறுகளை கொண்டவர்கள் இருந்தார்கள். ஜிப்சிகளின் ஐரோப்பிய இணைப்பிற்கு காண்ஸ்டாண்டி நோபிள் தான் துவக்க புள்ளி. இஸ்லாம் இவர்களின் வாழ்வில் பெரும்
தாக்கத்தை செலுத்தியது. இவர்கள் இஸ்லாமுக்கு மாறிய போது அல்லது மாற்றப்பட்ட போது, நாடோடிகளிலிருந்து நிலையான மனிதர்களாக மாறினார்கள். சிரியா,எகிப்து, லெபனான் மற்றும் சைப்ரஸ் ஆகிய மத்திய கிழக்கின் மூலைகள் இவர்களுக்கான
வாழிடங்களாயின. குதிரை மற்றும் ஒட்டகங்கள் இவர்களுக்கான வாகனங்களாக மாறின. இன்றும் மத்திய கிழக்கின் பல பகுதிகளில் ஒட்டக மேய்ப்பாளர்களாக ஜிப்சி இனத்தவர்கள் உள்ளனர்.

ஜிப்சிகளின் ஐரோப்பிய நுழைவு என்பது கி.பி ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து துவங்குகிறது. அந்த கால கட்டத்தில் அன்சர்பாவிலிருந்து ஏதென்ஸ் நகருக்கு கொண்டு வரப்பட்டனர். இவர்கள் குறி சொல்பவர்களாக, உலோக தொழில் செய்பவர்களாக, இசை மற்றும் நாட்டியகாரர்களாக இருந்தனர். அங்கிருந்து அர்மேனியா மற்றும் ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் நகர்த்தப்பட்டனர். 14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளில் இவர்களில் பலர் மேற்கு ஐரோப்பாவிற்கு கடத்தப்பட்டனர். ஐரோப்பிய நாடுகளில் இவர்கள்
விளிம்பு நிலை இனங்களாக மாறினார்கள்.இவர்களுக்கான
வாழ்க்கை தரஉயர்வாக்க நடவடிக்கைகள் எந்த ஐரோப்பிய அரசுகளாலும் எடுக்கப்படவில்லை. கல்வி மறுக்கப்பட்டது. நாடோடிகளாக இருந்ததால் அவர்களுக்கு நிலையான இருப்பிடம் குறித்த பிரக்ஞை எழவில்லை. எதனையோ தேடும்
விலங்குகளாக இருந்தனர். எந்த நாடுகளும் இதை குறித்து கவலைப்படவில்லை.

உலகில் அதிகம் தகர்க்கப்பட்ட இனங்களில் ஜிப்சிகளும் ஒன்று. இவர்களை பற்றிய பல போலியான தொன்மங்கள் வரையப்பட்டன. "இவர்கள் சாத்தானின் பாலியல் தூண்டலால் உருவானார்கள். அதன் காரணமாகவே கருப்பு நிற தோலும், கருப்பு கண்களையும் உடையவர்களாக இருக்கிறார்கள்." இது போன்ற தொன்மங்கள் ஜிப்சிகளுக்கு எதிரான இன வன்முறையாக மாறின. ஐரோப்பிய வரலாற்றின் மறுமலர்ச்சி கால கட்டத்தில் அதன் மன்னர்களால் ஜிப்சிகள் அதிகஅளவில் சிறைபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். விச்சின் சிறைச்சாலைகள் வரலாற்று போக்கில் நமக்கு அதை உணர்த்துகின்றன. நீதிமன்றங்கள் கூட இவர்களுக்கு பதிலளிக்கவில்லை. கி.பி 1721 ல் ஜெர்மானிய பேரரசரான ஆறாம் கார்ல் "ஜிப்சி வேட்டை" (Gibsy hunt) என்ற
பிரகடனத்தை அறிவித்தார். இதன் தொடர்ச்சியில் அவர்கள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டனர். 1749 ல் ஸ்பெயினில் வாழ்ந்த ஜிப்சிகள் சமூகத்தின் அபாயமாக அறிவிக்கப்பட்டார்கள். தொடர்ந்து சுமார் 15 வருடங்கள் இருள் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளானார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் என்பது ஜிப்சிகளின் வாழ்வில் கொடூரங்களை வரைந்த தருணம். பாசிசம் அதன் போக்கில் தன்னை ஜிப்சிகள் மீது வெளிப்படுத்திக்
கொண்டது.இனப்படுகொலைகளில் யூதர்களுக்கு சம அளவாக அல்லது அதை விட அதிகமாக ஜிப்சிகள் பாதிக்கப்பட்டார்கள். வரலாற்றாசிரியரான பிங்கல்ஸ்டீன் " நாசிகள் திட்டமிட்டு அரை மில்லியன் ஜிப்சிகளை கொலை செய்தார்கள். இது விகிதாசார அளவில் யூதர்களுக்கு சமமாக இருந்தது." என்றார்.வீமர் குடியரசு ஜெர்மனியில் ஜிப்சிகள் பொது இடங்களில் நடமாட அனுமதிக்கப்படவில்லை. எல்லா ஜிப்சிகளும் அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டார்கள். பின்னர் பாதுகாப்பு காரணங்கள் என்பதற்காக வதை
முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள். நாசிகள் ஜெர்மனியின் அதிகாரத்தை கைப்பற்றிய போது தொடர்ச்சியான இன வன்முறைக்கு ஆளானார்கள். 1937 ல் இயற்றப்பட்ட ஜெர்மானிய இனத்தூய்மைக்கான நியூரம்பர்க் சட்டம் ஜிப்சிகளை சமூகத்தின் இரண்டாம் மனிதர்களாக கருதியது. பின்னர் ஹென்ரிட்ச் ஹிம்லர் ஜிப்சிகளுக்கு எதிரான
போராட்டத்தை அறிவித்தார். இதனை தொடர்ந்து ஜெர்மானிய போலீசால் ஜிப்சிகள் கண்காணிப்புக்குள்ளானார்கள். நாசிகளால் ஜிப்சிகள் பற்றிய இனவரைவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1936 ல் ராபர்ட் ரிட்டர் மற்றும் அவரது உதவியாளரான ஈவா ஜஸ்டின் ஆகியோரால் இது மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் ஜிப்சி குழந்தைகளை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டார்கள். முடிவாக குழந்தைகள் ஆஷ்விச் முகாமிற்கு அனுப்பப்பட்டு கொல்லப்பட்டார்கள். ராபர்ட் ரிட்டர் தன்னுடைய இன ஆய்வின் முடிவில்
பின்வரும் கருதுகோளுக்கு வந்தார்." எதற்கும் பயன்படாத, சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஜிப்சிகளின் இரத்த கலப்பு என்பது பெரும்துயரத்தின் குறியீடு. இவர்களின் இனப்பெருக்க முடிவு அழித்தொழிப்பதன் மூலமே சாத்தியப்படும். இதன் பிறகு தான் ஜிப்சிவிவகாரம் முடிவுக்கு வரும்." இதன் எதிரொலியாக ஹிம்லர் 1938 ல் இன இயல்பின் அடிப்படையில் ஜிப்சி விவகாரங்களை முடிவுக்கு கொண்டு வருதல் என்ற விதியை கொண்டு வந்தார். இது ஜிப்சிகள் எல்லோரையும் நிர்மூலமாக்குவதை உள்ளடக்கியிருந்தது. 1939 ல் ஜொஹன்னஸ்பர்க் நாசி அலுவலகம் சுற்றறிக்கை ஒன்றை எல்லா இடங்களுக்கும் அனுப்பியது. அதில் எல்லா ஜிப்சிகளும் மரபார்ந்த நிலையில் தொற்று வியாதிகளே. ஒரே
தீர்வு கொல்லப்படுவது. அது எவ்வித தயக்கமில்லாமல்
நிறைவேற்றப்பட வேண்டும் என்றது. இதன் பின் தொடர்ச்சியில் 1939 க்கும் 1945 க்கும் இடைப்பட்ட காலம் இரண்டாம் உலகப்போரை விட கொடூரமாக இருந்தது. சுமார் 25,000
ஜிப்சிகள் போலந்துக்கு அனுப்பப்பட்டு சாகும் வரை வேலைசெய்ய நிர்பந்திக்கப்பட்டனர். இனச்சுத்திகரிப்பின் மையமாக விளங்கிய ஆஷ்விச் முகாமில் ஜிப்சிகளுக்கான தனி கூடங்கள் இருந்தன. அங்கு மிகக்கொடூர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் அவர்களுக்கான தனித்த அடையாளங்கள் உருவாக்கப்பட்டன. விலக்கப்பட்டோர் என்பதை குறிக்கும் வகையில் இடது முழங்கையில் "Z" அடையாளம் குறிக்கப்பட்டது. அசமூக வாதிகள் என்பதற்காக அவர்களின் ஆடையில் கருப்பு முக்கோண சின்னம் வரையப்பட்டது. கடும் சித்திரவதைகளின் பின்தொடர்ச்சியில் 19,000 ஜிப்சிகள் இறந்தனர். இது ருமேனியா, அல்பேனியா ஹங்கேரி, போலந்து மற்றும் நெதர்லாந்து பகுதிகளிலும் பரவியது. இந்த நாடுகளில் ஜிப்சிகள், யூதர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்களுடன் சேர்த்து கொல்லப்பட்டனர். பிரான்சில் இது 1941 ல் முதல் தொடக்கம் பெற்றது. இதற்காக மொபைல் படைப்பிரிவுகள் செயல்பட்டன. கொராட்டியாவின் பாசிஸ்டுகள் ஜெர்மானிய நாசிகளுடன் சேர்ந்து ஜிப்சிகளை கொலை செய்தனர். இறுதியான இனப்படுகொலைகளின் முடிவில் சுமார் பத்து லட்சம் ஜிப்சிகளின் ஆன்மா இருக்கிறது. ஹிட்லரின் அதிகாரயேற்புக்கு பின் அவர்கள் அசமூக மனிதர்களாக மாறினார்கள். ஹிட்லர் அவர்களை சமூகத்தின் மிகப்பெரும் வியாதியாக அறிவித்தார். யூதர்களுடன் சேர்த்து இவர்களையும் முடிவுக்கு கொண்டு வருவது மூலமே ஜெர்மானிய இனம் தூய்மைப்படும்என்றார்.இவ்வாறாக பாசிச ஜெர்மனி மற்றும் ஹங்கேரியில் 90 சதவீதம் ஜிப்சிகள் கொல்லப்பட்டார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் கால ஓடை என்பது இனப்படுகொலைகளின் கலவையாகவே இருக்கிறது. இனம் என்ற கருத்தாக்கம் இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பாவில் டெல்யூஷின் "அங்கங்களற்ற உடலை" பிரதிபலித்தது. 19 ம் நூற்றண்டின் இடைப்பகுதியில் ஏற்பட்ட இந்த மனித உணர்வுகள் இனச்சுத்திகரிப்பில் போய் முடிந்தன. யூத இன வெறுப்பாக தொடங்கிய இது ஜிப்சிகள், ஓரின பாலுறவாளர்கள் போன்றவர்களை நிர்மூலமாக்கியது. ரஷ்ய புரட்சியின் போது போல்ஸ்விக் கட்சியில் யூதர்களின் பிரசன்னம்
அதிகமாக இருந்ததென்றும் ரஷ்யாவில் நிகழ்ந்த கம்யூனிச அழிவுகளுக்கு யூதர்கள் துணைபோனார்கள் என்றும் நாவலாசிரியரான போல்செனிஸ்தென் குறிப்பிடுகிறார். ஆதாரமாக யூதரான டிராட்ஸ்கி போல்ஸ்விக் கட்சியில் அதிகம் யூதர்கள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டுமென்று சொன்னது குறிப்பிடப்படுகிறது. ஆனால் போல்ஸ்விக்குகளின் அணுகுமுறையோடு ஜெர்மானிய யூத இன வெறியை ஒப்பிட முடியாது. அது வர்க்க கண்ணோட்ட அடிப்படையிலானது. (ஸ்டாலினையும் ஹிட்லரையும் சிலர் ஒப்பிட்ட கொடூரம் இதன் வழி தான் அரங்கேறியது)இன்றைய சூழலில் வரலாறு யூத இன அழிப்பை மட்டுமே முன் வைக்கிறது. ஜிப்சி இன சுத்திகரிப்பு வரலாற்றின் முடிவுறா பக்கங்களில் இருண்மையாக இருக்கிறது. ஜுலியா கட்ஜு என்ற ஹங்கேரிய ஜிப்சி தலைவர் இப்படி குறிப்பிட்டார்."நாங்கள் மற்ற ஜிப்சிகளுடன் குறைந்த அளவே தொடர்பு வைத்திருக்கிறோம்.எங்கள் கலாசாரம் கடந்த
காலங்களில் பேசப்படாதநிலையில் எங்களுக்கானவரலாறு எழுதப்படவில்லை. இதன் தொடர்ச்சியில் கடந்த இருபதாண்டுகள் வரை ஜிப்சி என்ற சொல்லே வெளியாகவில்லை". வதை முகாம்களின் அடுப்புகளில் மற்றவர்களுடன் ஜிப்சிகளின் சாம்பலும் கலந்திருக்கிறது. வரலாற்றாசிரியர் ஜேக்கப் நிஸ்னர் சொன்னார் " இனப்படுகொலைக்குள்ளானவர்களின் உரிமை எல்லோருக்கும் சீராக சென்றடைய வேண்டும். ஆனால் அது அறிவுஜீவி தடையாக மாறி விட்டது. யூதர்கள் மட்டுமே இனச்சுத்திகரிப்புக்குள்ளானார்கள் என்பது வரலாற்றின் மிகப்பெரும் மோசடி." சில பின்நவீனத்துவ அறிவு ஜீவிகளின் இஸ்ரேல் ஆதரவு நிலைபாடு இதன் பிரதிபலிப்பு தான். ஐரோப்பிய இனப்படுகொலைகளில் ஜிப்சிகள் நீக்கப்பட்டதன் மூலம் நாம் வரலாற்றின் அர்த்தத்தை திருடி கொண்டோம்.

பின் குறிப்புகள்

1. Daniel Jonah Goldhagen, Hitler's Willing Executioners: Ordinary Germans and the Holocaust, Vintage 1996

2.Norman G.Finkelstein, The Holocaust Industry: Refelctions on the Exploitation of Jewish Suffering, Verso 1992

3. Shiri Gibert, Music in the Holocaust: Confronting Life in the Nazi Ghettos and Camps, Oxford University Press 2006

4.Ian Hancock, The Pariah Syndrome: An Account Of Gypsy Slavery and Persecution, Karoma press 1987

5. "Third Class Attention for Third Class Genocide Victims
www.erionet.org/genocide.htm

No comments: