காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Saturday, May 17, 2008

சிலுவை போர்கள் குறித்து

மாபெரும் சிலுவை போர்கள் குறித்து

- எச்.பீர்முஹம்மது ( உயிர்மை மார்ச் 2007)

உலகம் எதிர்ப்பாளர்கள் காரணமாக முன்னோக்கி நகர்கிறது.
-கேதே

மத்திய கிழக்கின் வரலாற்றில் சிலுவை போர்கள் என்பது
குறியிடத்தக்க ஒன்று. மாபெரும் இரு பிரதேசங்களிடையேயான போராக அது நடந்தது. 11 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரையிலான இடைப்பட்ட கட்டத்தில் நடந்த சிலுவை போர்கள் மத்திய கிழக்கு பிரதேசத்தில் பிரதிபலிக்கும் நிழலை ஏற்படுத்தி சென்றிருக்கின்றன.

இஸ்லாம் ஓர் அரசியல் இயக்கமாக உருவான பிறகு அதன்
தொடர்ச்சியான பிரதேசங்கள் அப்பாஸிட், உமய்யத் என்ற இரு பெரும் பிரிவுகளின் கட்டுப்பாட்டில் வந்தன. உமய்யத்கள் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர். அவர்களின் ஆட்சியதிகாரம்
மத்திய கிழக்கில் நிலையான உள் முரண்பாடுகளுக்கு காரணமானது. நபியின் மரணத்திற்கு பிறகு இஸ்லாமிய சமூக அமைப்பு
ஷியா, சுன்னி ஆகிய இரு பெரும் பிரிவுகளாக பிரிந்தது.
ஷியாக்கள் கெய்ரோவை ஆட்சி செய்தனர். இவர்கள் பாத்திமத் கலீபாக்கள் என அழைக்கப்பட்டனர். சுன்னிகள் ஸ்பெய்னின் அல்-அந்தலூசியா மற்றும் ஈரான், ஈராக் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்தனர். இறுதியாக இஸ்லாமிய அரசு என்பது மத்திய ஆசியா முதல் அட்லாண்டிக் கடற்கரை வரை பரவியிருந்தது. அரசின்
அதிகாரங்கள் கெய்ரோ, பாக்தாத், கார்டோபா ஆகிய இடங்களில் மையம் கொண்டிருந்தன. மத்திய கிழக்கு பகுதியில் பத்தாம்
நூற்றாண்டில் அரபு படையானது வலிமைமிக்கதாக இருந்தது. இவை ஒவ்வொன்றும் அதற்கான சுய பொருளாதார நலன்களை
கொண்டிருந்தன. பொருளாதார நலன்கள் பிரதேசம் தாண்டி வேறுபடுகின்றன. அங்கு நிலவும் சமூக முரண்களுக்கு இது
பொருந்தியாக வேண்டும். இஸ்லாமிய அரசுகளின் இந்த நலன்கள் இஸ்லாம் அல்லாத அரசுகளுடான நிலைபாடுகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தன.

ரோமசாம்ராஜ்யத்தை டையோக்ளசிஸ் என்பவர் கைப்பற்றினார்.
பிறகு அதிகாரத்தை நிலைப்படுத்துவதற்காகவும், அது தொடர்ந்து கைமாற்றி தரப்படுவதற்கு வழி வகுக்கவும் அதை இரண்டாக
பிரிக்க முடிவு செய்தார். மேற்கில் ரோமை தலைநகராக கொண்டு ஓர் அதிபருடைய தலைமையில் மேலை ரோமராஜ்யமும், தெற்கில் துருக்கியில் ஒரு நகரை கொண்டு கீழை ராஜ்யத்தில் ஓர்
அதிபருமாக (சீஸர்) கூட்டாக ஆள்வது என தீர்மானிக்கப்பட்டது. இவருக்கு பின் வந்த சீஸர்கள் கூட்டாக செயல்படமுடியவில்லை. ஒரு சீஸரின் மகனாகிய காண்ஸ்டான்டைன் கி.பி நான்காம் நூற்றாண்டில் பிரிந்து கிடந்த ரோமாபுரியை மறுபடியும் ஒன்றாக்கினார். துருக்கியில் தன்னுடைய பெயரை கொண்ட ஒரு நகரை உருவாக்கி அதை ரோமின் தலைநகராக்கினார். அது காண்ஸ்டாண்டி நோபில் (தற்போதைய இஸ்தான்புல்) என்றழக்கப்பட்டது. இவர் தான் ரோமின் முதல் கிறிஸ்தவ சக்கரவர்த்தி. இவர் அதிகாரமேற்றதும் கிறிஸ்தவத்தை ரோமின் அரச மதமாக அறிவித்தார்.
கிறிஸ்தவத்தில் பிரிந்து கிடந்த அணிகளை ஒன்றாக்கினார். அதன் மூலம் தனக்கான அதிகார தொடரலுக்கு வழி ஏற்படுத்தினார். இவர் விட்டுசென்ற வழிமுறைகள் இவரை பின் தொடர்ந்தவர்களுக்கு முன்மாதிரியாயின. இவருடைய காலத்தில் ரோமின் கிறிஸ்தவர்கள் ஜெருசலத்திற்கு புனித பயணம் மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. ஏழாம் நூற்றாண்டில் கலீபாக்களின் கட்டுப்பாட்டில் ஜெருசலம் வந்த பிறகு புனித பயணம் என்பது மோதல்களை ஏற்படுத்தியது. மேற்கிலிருந்து அதிக எண்ணிக்கையிலான யாத்தீரிகர்கள் வர தொடங்கிய பிறகு மோதல்கள் மேலும் நெகிழ்வடைய தொடங்கின. இந்த மோதலின் தொடர்ச்சி போர்கள் மூலம் ஆக்கிரமிப்பை பரிணமிப்பதில் கொண்டு சேர்த்தது. மேற்கின்
கிறிஸ்தவம் முதல் சிலுவை போருக்கான தயாரிப்பை எடுத்தது.

ஜெருசலத்தை மீட்பதற்காகவும், அங்குள்ள ஒட்டுமொத்த பொருளாதாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காகவும் மத்திய கிழக்கு மீது படையெடுக்க தீர்மானித்தனர். இதற்கிடையில் முஸ்லிம் உலகம் உள்நாட்டு சண்டைகளால் நிரப்பப்பட்டிருந்தது. முப்பது வருட கால ஷியா-சுன்னி யுத்தம் என்பது இரு பக்கத்திலும் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தியது. முக்கிய ஆட்சியாளர்கள், அலுவலர்கள், ராணுவ அதிகாரிகள் ஆகியோர் இறந்தனர்.
மத்திய கிழக்கு வரலாற்றாசிரியர் இப்னுதக்ரிபர்தி 1094 ஆம் வருடம் என்பது கலீபாக்களும், படைவீரர்களும் அதிக அளவில் மரணமடைந்த வருடம் என்கிறார். இந்த மரணங்கள் ஷியா-சுன்னி பிரிவினரிடையே மேலும் பிளவை அதிகரித்தன. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் இஸ்லாமிய விரோதிகளாக அறிவித்துக்
கொண்டனர். அன்றைய காலகட்டத்தில் திருச்சபை மேற்கில் அரச விதிகளை தீர்மானிப்பதாக இருந்தது. அன்றைய போப் இரண்டாம் அர்பன் ரோம பேரரசான அலெக்ஸசிடத்தில் சிலுவை போருக்கான தயாரிப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
அந்த போரின் நோக்கம் நீண்ட கால திட்டத்தை உட்கிரகிப்பதாக இருந்தது. இதற்காக போப் இரண்டாம் அர்பன் பிரான்சில் உள்ள கிளர்மென்ட் கவுன்சிலில் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கது." பிராங்கின் உயர்ந்த இனம் நம்முடைய கிழக்கத்திய கிறிஸ்தவத்திற்கு உதவ வேண்டும். அபாயகரமான துருக்கியர்கள் கிழக்கத்திய
கிறிஸ்தவ பகுதிகளில் முன்னேறி வருகிறார்கள். கிறிஸ்தவர்கள்
தாக்கப்படுகிறார்கள். அவர்களின் ஆலயங்களும், புனித இடங்களும் அழிக்கப்படுகின்றன. புனித ஜெருசலம் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. புனித சின்னம் அவர்களில்
கையிலிருந்து மசூதியாக உருமாறுகிறது. புனித யாத்ரீகர்கள் அலைகழிக்கப்பட்டு புனித இடத்தை தரிசிப்பதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள். ஆகவே மேற்கு, கிழக்கின் பாதுகாப்பிற்காக புனித பயணம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் போக வேண்டும். அங்கு சென்று அவர்களுக்கு எதிராக சரியான வழியில் போராட வேண்டும். கடவுள் உங்களை வழி நடத்துவார்.
கிறிஸ்துவிற்காக பணிபுரியும் போது உங்களின் பாவங்கள்
மன்னிக்கப்படுகின்றன. இங்கிருப்பவர்கள் ஏழைகளும் பாவத்தால் வருந்துபவர்களுமாவர். அங்குள்ளவர்கள் வசதிவாய்ப்பாகவும்,
மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள். ஆக தயக்கம் வேண்டாம். அடுத்த கோடைக்காலத்தில் புறப்படுங்கள். கடவுள் விருப்பம் இது." போப் இவ்வாறு உரையாற்றிய மறுநாள் கவுன்சிலானது படைவீரர்கள் புறப்படுவதற்கான எல்லா திட்டங்களையும்
தயாரிக்க தொடங்கியது. யாத்ரீகர்கள் உடலில் செஞ்சிலுவையை அணிய தொடங்கினர். அது தான் போர் குறியீடு. சிலுவை என்பது ஹிப்ருக்கள் காலகட்டத்து தண்டனை கருவி. ரோமின் பிஷப் அட்ஹிமர் தான் யாத்ரீகர்களுக்கு சிலுவையை தேர்ந்தெடுத்தார். ஒரு கோடைகால இரவில் அவர்கள் ஜெருசலம் நோக்கி புறப்பட்டனர். ஜெருசலம் அப்போது துருக்கியரின் கையில் இருந்தது. 1099 ல் நவம்பரில் ஜெருசலம் முற்றுகையிடப்பட்டது.
நாற்பது நாட்கள் முற்றுகைக்கு பிறகு சிலுவை போராளிகள் தங்கள் கனவான ஜெருசலத்தை கைப்பற்றினர். இந்த நாற்பது நாட்கள் முழுவதும் மரணங்களாகவே இருந்தன. முஸ்லிம் ஆண்கள், குழந்தைகள், பெண்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர்
கொல்லப்பட்டனர். இதில் முக்கிய விஷயமே இப்போரில் யூதர்களின் பங்களிப்பு தான். முஸ்லிம்களுடன் இணைந்து அவர்களும்
சிலுவை போராளிகளுக்கு எதிராக போராடினர். போரின் போது யூதர்கள் சிலுவை போராளிகளின் தாக்குதலால் அவர்களின் ஆலயங்களில் ஒழிந்து கொண்டனர். போரின் போது அவர்களின் ஆலயம் முற்றுகையிடப்பட்டது. யூதர்கள் வெளியில் வராதபடி
சிலுவை போராட்டகாரர்கள் பார்த்துக்கொண்டனர். சூழ்நிலையின் ஒருங்கிணைவில் ஆலயத்திற்கு தீ வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கில் யூதர்கள் எரித்து கொல்லப்பட்டனர். தீயிலிருந்து தப்பிக்க எவரும் வெளிவர முடியாத படி சிலுவை படையினர்
பார்த்துக்கொண்டனர். இது இன்னொரு நூற்றாண்டிற்கான இருண்ட மேகத்தை உருவாக்கியது. முதல் சிலுவை போரானது ராணுவ யுக்தியின் படி மிகுந்த வெற்றியாகும். வரலாற்றாளர் ரேமண்ட் அகிலஸ் முதல் சிலுவைப்போரின் விளைவாக ஜெருசலம் கைப்பற்றப்பட்டதை விவரிக்கிறார். "படைவீரர்கள் எதிரிகளின் தலைகளை வெட்டினர். மற்றவர்கள் மீது அம்புகள் பாய்ந்தன. இதனால் எதிரிகள் உயர்ந்த கோபுரங்களிலிருந்து கீழே விழுந்தனர். தப்பியோடியவர்கள் துரத்தப்பட்டு அவர்கள் மீது தீப்பந்தம்
வீசப்பட்டது. ஜெருசலத்தின் தெருக்கள் எதிரிகளின் கை, கால்கள், மற்றும் தலைகளால் நிரம்பியிருந்தன. குதிரைகள் அதன் மீது ஏறிசென்றன. இந்த விஷயங்களை ஒப்பிடும் போது சாலமனின் ஆலயத்தில் என்ன நிகழ்ந்தது.? உண்மையை சொல்வதென்றால் அது உங்களின் நம்பிக்கை ஆற்றலை மீறியதாக இருக்கும்.
சாலமனின் ஆலயமும், அவரின் படமும் இரத்தத்தால் மூழ்கியிருந்தது. வெட்டுப்பட்ட உடல்கள் ஆலயத்தினுள் சிதறிக்கிடந்ததால்
படைகள் அங்கு செல்ல முடியவில்லை."இவ்வாறாக முதல் சிலுவைப்போர் மிகக்கொடூரமாக இருந்தது.இதில் முன்னோக்கும் விஷயமென்பதே கிழக்கத்திய வைதீக
கிறிஸ்தவர்கள் மேற்கத்திய கிறிஸ்தவர்களுக்கு எதிராக திரும்பியதாகும். அவர்கள் மற்ற முஸ்லிம்களுடன் இணைந்து சிலுவை
போராளிகளுக்கு எதிராக போரிட்டனர். சிலுவை படைகள்
கிழக்கத்திய கிறிஸ்தவ அறிஞர்களின் நினைவிடங்களை தகர்த்தன. மேலும் ஆபிரகாமின் கல்லறை தகர்க்கப்பட்டது. இந்நிகழ்வு மேற்கத்திய கிறிஸ்தவத்திற்கு எதிராக யூத, முஸ்லிம், மற்றும் வைதீக கிறிஸ்தவர்களை இணைய வைத்தது. சிலுவைப்போரின் வரலாற்றில் இவ்விஷயம் பதிவு செய்யப்படாமல் லாவகமாக
தவிர்க்கப்பட்டது மிகப்பெரும் வரலாற்று மோசடியாகும். முதல் உலகப்போருக்கு பின்னர் தான் இது வெளிவந்தது. 1099 ல் ஏற்பட்ட முதல் வெற்றிக்கு பிறகு ஜெருசலத்தின் அரசராக காட்பிரே டி பவ்லின் பொறுப்பேற்றார். ஜெருசலத்தில் இப்போர்
நடைபெற்றுக்கொண்டிருந்த போது துருக்கிய கலீபாவான அல்-முஸ்தஹ்ஸிர் அவரின் அரண்மனையில் உறங்கி கொண்டிருந்தார். அந்த அரண்மனை விசாலமாக இருந்தது. ஜெருசலம் வீழ்ந்த சோகத்தில் அங்குள்ளவர்கள் இருந்தனர். இதன் தொடர்ச்சியாக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆறு பெரும்சிலுவை யுத்தங்கள் நடந்தன. ஆனால் முதல் சிலுவைப்போரின் முடிவுகள் எதிர்பார்த்ததை அளிக்கவில்லை. முதலாம் அலெக்ஸஸ் மத்திய கிழக்கு பகுதி முழுவதும் தன் கட்டுப்பாட்டில் வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அது வேறுவிதமான முடிவுகளை நோக்கி நகர்த்தியது. 1171 ல் குர்திஷ் படைத்தளபதியான சலாதீன் கெய்ரோவில் பாத்திமத் வம்சத்தை முடிவுக்கு
கொண்டு வந்தார். பின்னர் எகிப்தின் சுல்தானாக தன்னை
அறிவித்துக்கொண்டார். அதிகாரத்திலிருந்து படிப்படியாக மற்ற பகுதிகளை கைப்பற்றினார். இதன் பின்னர் சிரியா, எகிப்து ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்தார். சிலுவை படை அரசுகளை வெல்வதற்காக ஜெருசலம் நோக்கி நீண்ட அணிவகுப்பு
நடத்தினார். 1187 ல் ஜெருசல அரசனான லுசிக்னன் சலாதீன் படைகளிடம் தோல்வியடைந்தார். விளைவாக ஜெருசலம் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. இதன் பின்னர் சலாதீன் யூத ஆலயங்களை மறுகட்டுமானம் செய்ய மான்யங்கள் அளித்தார். கிறிஸ்தவ ஆலயங்கள் மீது எவ்வித தாக்குதலும் தொடுக்கப்படவில்லை. முன்னிருந்த நிலை பராமரிக்கப்பட்டது. சலாதீன் எல்லா மதத்தினரையும் சுதந்திரமாக வழிபட அனுமதித்தார். இந்நிலையில் போப் அர்பன் மீண்டும் ஜெருசலத்தை கைப்பற்ற படைகளை அனுப்பினார். ஜெனரல் டயர் என்பவர் இந்த இயக்கத்திற்கு
பொறுப்பேற்றார். இவரின் தலைமையிலான படை ஜெருசலத்தை நெருங்க முடியவில்லை. அதற்குள்ளாக முயற்சி முறியடிக்கப்பட்டது. அவர்களால் ஜெருசலத்திலிருந்து
வெகுதூரத்திலுள்ள acre பகுதியை மட்டுமே பிடிக்க முடிந்தது. அடுத்த 700 வருடங்களில் அவர்களின் கனவான ஜெருசலம் மீட்கப்படும் என்பது நிறைவேறவில்லை.

மத்திய கிழக்கு அரசுகளுக்கு எதிரான முதல் சிலுவை யுத்தமே மேற்கு-மத்திய கிழக்கு இடையேயான ஆழமான பிளவிற்கு
வழிவகுத்தது. போப் இரண்டாம் ஜான்பால் சிலுவை யுத்ததிற்காக மன்னிப்பு கோரியது வரலாற்றில் பெரும் திருப்பம்.1920 ல் முதல் உலகப்போருக்கு பிறகு பிரெஞ்சு ஜெனரல் ஹென்ரி கெளராத் சிரியாவை பிடித்தார். இவர் டமாஸ்கஸில் சலாதீனின் கல்லறை அருகில் நின்று கொண்டு சொன்னார். "சலாதீன்
நாங்கள் திரும்பி வந்திருக்கிறோம். எங்கள் புனித
சிலுவையை பிறைமீது வைப்பதற்காக". இருபதாம் நூற்றாண்டின்
இடைப்பகுதிகள் மத்திய கிழக்கை வெகுவாக மாற்றி விட்டன.
ஆதரவாளன் + எதிரி என்பது = ஆதரவாளனாக மாறி விட்டது.
அரசர் அம்மணமாக ஓடிக்கொண்டிருக்கிறார் என்பதை
அறியாமல் சொல்லவேண்டியதிருக்கிறது.

பின் குறிப்புகள்

1. God's war : A New History Of the Crusaders by Christopher tyer man Belknap Press 2006

2. The First Crusade : A New History : The Roots of conflict between christianity and islam by Thomas asbridge Oxford university Press 2005

3. The Clash of fundamentalism by Tariq ali Verso,London 2003

4. The Book of saladin : A novel By Tariq ali Verso London 1999

No comments: