காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Monday, May 26, 2008

பார்சி மதத்தை பற்றிய குறிப்புகள்

வரலாற்றின் சலனத்தில் பாரசீகம் - பார்சி மதத்தை பற்றிய குறிப்புகள்
எச்.பீர்முஹம்மது


வரலாறு தன் போக்கில் காலம் என்ற வலைக்குள் சிக்கிக்கொள்கிறது. தொடர்ந்த போக்கில் நிகழ்காலத்தை பின்னுக்கு தள்ளி விடுகிறது. வரலாற்று அனுபவம் என்பதும் இதிலிருந்து தான் உருவாகிறது. மறைக்கப்படும் ஒன்றிலிருந்து உருவாகும் வரலாறு
நெகிழ்வுதன்மையுடையதும், பிரதிபலிப்பதுமாகும்.
மத்திய கிழக்கின் துவக்கமான பாரசீகம் அல்லது ஈரான் வரலாற்றின் போக்கில் நெடிய பின்னணி கொண்டது. விமானம் அதன் போக்கில் தாழ்வாக பறந்துசென்ற போது ஈரானின் மலைக்குன்றுகள் தென்பட்டன. அதன் கணிசமான பகுதிகள் மலைக்குன்றுகளால் ஆனவை. பல மதகோட்பாடுகள், கருத்தியல்கள் தோன்றிய பாரம்பரியம் ஈரானுக்குரியது.
இதன் பின் தொடரலில் உலகில் தற்போதுவழக்கொழிந்ததாக கருதப்படும் பார்சி அல்லது சராதுஷ்ட மதத்தைபற்றியகுறிப்புகளை நாம் முன்னோக்க வேண்டியதிருக்கிறது. பார்சி அல்லது சராதுஷ்டம் தான் உலக வரலாற்றில் முதன் முதலாக ஓரிறை கோட்பாட்டை போதித்தது. இதனை தொடங்கி வைத்தவர் ஷராதுஷ்டர். இவரின் காலம் கி.மு பதினெட்டாம் நூற்றாண்டாக அறியப்படுகிறது. வடமேற்கு ஈரானின் ஏதாவது ஒரு பகுதியில் இவர் பிறந்திருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. இவரின் கோட்பாடுகள் மூன்றாக சுருக்கப்படுகின்றன.
1. நற்சிந்தனை
2. நற்சொல்
3.நற்செயல்.
ஈரானில் அன்றைக்கு வழக்கிலிருந்த பல தெய்வ வழிபாட்டுக்கு மாறாக ஓரிறை கோட்பாட்டை பார்சி மதம் முன்வைத்தது. இது கி.மு ஆறாம் நூற்றாண்டில் ஈரான் முழுவதும் பரவியது. அதே நூற்றாண்டில் தான் அகெமெனிய அரசரான சைரஸ் பார்சி கோட்பாட்டை ஏற்றுக்கொண்டார்.
அதே காலத்தில் பாபிலோனை கைப்பற்றிய அவர் அங்கு பிணைக்கைதிகளாக, அடிமைகளாக இருந்தவர்களை விடுதலை செய்தார். பாபிலோனியர்களால் அழிக்கப்பட்ட கோயில்களை மறு நிர்மாணம் செய்தார். இவர் தான் தற்போதைய உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் சொல்லாடலான "மனித உரிமை" பிரகடனத்தை முன்வைத்தவர். இவருக்கு பின் வந்த தெரியஸ் மற்றும் ஆர்த்தசெரஸ் ஆகியோர் பார்சி மதக்கோட்பாட்டை வளர்த்தெடுத்தனர்.கி.மு மூன்றாம் நூற்றாண்டில் பார்த்தீனியர்கள் ஈரானை கைப்பற்றினார்கள். அதன் பிறகு சசானியர்கள் தொடர்ந்தார்கள். இரு வம்சமுமே பார்சி மதக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு அதை மக்கள் மதமாக பரவலாக்கம் செய்தனர். இவர்கள் தங்கள் புனித நூலாக சென் அவெஸ்தாவை பின்பற்றுகின்றனர்.சென் அவெஸ்தா மனித வாழ்வின் கூறுகளாக ஆறு விஷயங்களை குவியப்படுத்துகிறது.
1. வன்செயல்கள் மனித விரோதமானது. சராதுஸ்டரின் போதனைகளுக்கு எதிரானது.
2. சராதுஷ்டரின் போதனைகள் பின்தொடர எளிமையானவை.
3. கடவுளான அஹ¤ரமெஸ்தா தன் தூதருக்கு செய்திகளை தெரிவித்தார். அது மனித வாழ்வுக்கு உகந்தவை.
4.சராதுஸ்டிரர் வன்செயல்கள் மற்றும் நற்செயல்கள் இவை இரண்டையும் பிரித்தறிந்து மற்றவர்கள் அதை தொடர்வதற்கான வழியை உருவாக்கினார்.
5. தீ என்பது பார்சியின் வழிபாட்டு உபயமாகும். இது பிரகாசமான மனத்தை குறியீடாக்குகிறது.
6. புனித வார்த்தைகளால் சராதுஷ்டிரர் உலகுக்கு வழிகாட்ட வந்தார்.
பார்சி மதத்தின் லெளகீக கோட்பாடுகள் இந்த ஆறு விஷயத்திற்குள் வருகின்றன. பார்சி மதம் உடல் மற்றும் மன செயல்பாட்டின் முழுமைக்கு முன்னுரிமை கொடுத்தது. அதை ஓரு மனித தூண்டலாக பார்த்தது.
அன்றைய பாரசீகத்தில் ஈரானிய மற்றும் துரானிய ஆகிய இரு இனங்கள் இருந்தன. இவை ஒரே இனத்தின் வெவ்வேறு கிளைகள் என்ற கருத்தும் நிலவுகிறது. பார்சியர்களின் புனித நூலான சென் அவெஸ்தாவில் இதைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சென் அவெஸ்தா கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.
1. பாரசீக வம்சம் ஈரானிய மற்றும் துரானிய பிரிவுகளால் ஆனது.
2. அவர்கள் இருவரும் நெருக்கமாக வாழ்ந்தனர்.
3. இவர்கள் ஒரே தெய்வத்தை வழிபட்டனர்.
4. இவர்களிடையே அடிக்கடி குடும்ப சண்டைகள் நடந்தன.
5. இவை பார்சி மதத்தின் தோற்றத்திற்கு முன்பும் வழக்கில் இருந்தன.
உலக தோற்றம் பற்றி பார்சி மதம் விவரணப்படுத்துகிறது. ஸ்பெண்டா மென்யூ மற்றும் அங்கிரமென்யூ ஆகிய இரண்டுமே உலக படைப்பாக்கத்திற்கு காரணம். ஸ்பெண்டா மென்யூ நன்மைகளின் படைப்பாளர். அங்கிரமென்யூ மோசமானவற்றின் படைப்பாளர். செமிட்டிக் மதங்களின் சாத்தான் பற்றிய கருத்தாக்கம் இதனோடு ஒப்பிடதகுந்தது. இது பார்சி மொழியில் வெண்டிடாவாக அறியப்படுகிறது. பார்சி மதமானது ஓரிறை கொள்கையை வலியுறுத்துவதன் மூலம் செமிட்டிக் மதங்களுக்கு முன்தூண்டலானது. மேலும் அற அடிப்படையில் நன்மை, தீமை ஆகிய இரண்டையும் முன்மொழிகிறது. தீமை என்பதை நாம் முழுமுதல் அடிப்படையில் பார்க்க முடியாது என்கிறது. உலகில் அதிகம் தீமையே நிகழும் தருணத்தில் பார்சியின் இக்கோட்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. ஹெகல் சொன்னார் "மனிதர்கள் இயல்பாகவே இவன் நல்லவன் என்று கூறி தப்பித்துவிடுகின்றனர். இயல்பாகவே இவன் மோசமானவன் என்பது அதை விட எவ்வளவு ஆழமான விஷயம் என்பதை யோசிக்க தவறி விடுகிறார்கள்". மனித செயல்பாட்டில் அறவியல் இருமையை பார்சி போதித்தது. நோன்பு என்பதை உடல் உறுதிபாடாகவும், ஆன்மாவின் பிரதிபலிப்பாகவும் பார்த்தது. மேலும் இது ஜைனத்தின் சுய-வருத்தல் கோட்பாட்டோடு தொடர்பு கொண்டது.
மரணத்திற்கு பிந்தைய உலகத்தை பற்றி முதன்முதல் போதித்தது பார்சி மட்டுமே. இவ்வுலகில் சக மனிதன் அறவியல் செயல்பாடுகளின் விளைவு மறு உலகில் பிரதிபலிக்கும். மனித உடல் மனம் மற்றும் ஆன்மாவின் வாகனமாக விளங்குகிறது. இதன் பிரதிபலிப்பே மரணம். அங்கு அற இருமை அடிப்படையில் இருவிதமான தேவதைகள் வருவார்கள். அவர்கள் வகைப்பாட்டுக்கு ஏற்ப ஒவ்வொரு மனிதர்களையும் எடுத்துக்கொள்வார்கள். இஸ்லாமின் ஹ¤ர்லீன் பற்றிய கருத்துரு இதன் நீட்சியே. மரண பலன் நான்காவது நாள் வெளிப்படும் என்கிறது. செமிட்டிக் மதங்களான யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் போன்றவற்றின் ஓரிறைக்கோட்பாடிற்கான துவக்கப்புள்ளி பார்சி மதமே. இன்றைய உலகில் பார்சியர்களின் எண்ணிக்கை குறைவு. பல்வேறுவித தாக்குதல்கள், மாற்றங்கள் இவைகளுக்கு காரணமாக அமைந்தன. மணிச்சியம், மித்ராசியம் போன்றவை இதற்கு பிந்தைய
காலத்தில் ஈரானில் தோன்றிய மதங்கள். ஈரானிய திரைப்பட இயக்குநரின் வார்த்தை ஒன்று இதற்கு பொருத்தமாக இருக்கும். "சைரஸ் நீ தூங்கு. நாங்கள் விழித்துக்கொண்டிருக்கிறோம்".

No comments: