காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Monday, May 26, 2008

சூபி ஞானி பீர்முஹம்மது

சூபி ஞானி பீர்முஹம்மது - ஓர் அறிமுகம்
பீர் முஹம்மது

புதிய காற்று (ஆகஸ்ட் 2006)


பீர்முஹம்மது அப்பா பற்றிய வரலாறும் அதன் சார்பான புனை கதைகளும் நெடியது. நெகிழ்வுத் தன்மையுடையது. பெயர் என்பதே ஒரு குறியீடு சார்ந்தது. அருவமானது. தன்னை அறிய முடியாதது.

“ராமச்சந்திரனா என்றேன்
ராமச்சந்திரன் என்றான்
எந்த ராமச்சந்திரன் என்று அவன் கேட்கவுமில்லை
நான் கூறவுமில்லை”

என்ற நகுலனின் கவிதை வரிகள் தான் இவரைப் பற்றி அறிமுகப்படுத்தும் போது எனக்கு நினைவுக்கு வருகிறது. என் கழுத்து நிலைக்காத பருவத்தில் என் குடும்பத்தார் இவர் நினைவாக எனக்கு இப் பெயரைச் சூட்டியதாகச் சொன்னதுண்டு.

‘பீர்முஹம்மது அப்பா’என்றழைக்கப்படும் இஸ்லாமிய தமிழ் சித்தரின் காலத்தைப் பற்றிய சரியான தடயங்கள் இல்லை. கி.பி. 15ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி. 16ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதாக இருக்கலாம் என்று அனுமானிக்கிறார்கள்.

இந்திய வரலாற்றில் சித்தர்களின் காலத்தை இருவகையாக பிரிக்கலாம் - கி.பி.400க்கும் 700க்கும் இடைப்பட்ட காலம் - கி.பி. 700க்கும் 1200க்கும் இடைப்பட்ட காலம். முந்தையது ‘மந்திராயன காலம்’ எனவும், பிந்தையது வஜ்ராயன காலம் எனவும் அழைக்கப்படுகிறது. சித்தர்கள் அல்லது அனுபூத மந்திரர்கள் எப்பொழுதும் பர்வதத்துடன் தொடர்பு கொண்டவர்கள். பர்வதம் நாகர்ஜுனரின் இருப்பிடம். இவரை சமஸ்கிருத வைத்திய நூல்கள் நாகர்ஜுனர் என்றே குறிப்பிடுகின்றன. இத்தகைய சித்த மரபு பௌத்தத்தின் தாக்கத்தினால் பின் தொடர்ந்ததாகும். இதன் தாக்கம் சூபிகளிடத்திலும் இருந்தது. தமிழில் குணங்குடி மஸ்தான், சதக்கத்துல்லா அப்பா, உமறுப் புலவர், ஷேகனா புலவர், குஞ்சு மூசு லெப்பை, பீர்முஹம்மது அப்பா ஆகியோரிடத்திலும் இதற்கான தூண்டல்கள் இருந்தன. இவர்களின் நூல்களை நாம் வாசிக்கும் போது சித்த மரபு சார்ந்த பல்வேறு விஷயங்களை காணலாம்.

சூபிச மரபு இஸ்லாத்தின் பிற்காலத்தில் பரவல் பெறத் தொடங்கியது. அது ஒரு வகையில் இஸ்லாமிய கோட்பாட்டு உருவாக்கத்தின் நீட்சியே எனலாம். சூபி என்ற சொல்லுக்கு தூய்மை, முதல்வரிசை, ஒத்தகுணம் என்ற பல அறிதல்கள் இருந்தும் கம்பளி என்ற அர்த்தமே பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ‘கம்பளி’ என அர்த்தம் பெறும் ளரக என்ற சொல்லில் இருந்தே சூபி என்பது வந்ததாக பலரின் அபிப்ராயம். எகிப்தின் புகழ்பெற்ற ஜாமிஉல் - அஸ்கர் பல்கலைக்கழகம் வெளியிட்ட அரபி கலைக் களஞ்சியத்திலும் கம்பளி என்ற விளக்கமே காணப்படுகிறது. அபுபக்கர் அல் கல்பாதி என்பவர் ‘உலகத்தை துறத்தல், ஆன்மாவை உலகிருந்து திருப்புதல், நிலையான ஓரிடத்தில் இருப்பதை விட்டு விட்டு தொடர்ச்சியான பயணத்தை மேற்கொள்ளுதல், நடத்தையில் நேர்மை, தலைமை ஏற்கும் குணம் ஆகியவற்றை கம்பளி என்ற சொல் அர்த்தப்படுத்துவதாக கூறுகிறார்.

சூபிகளின் கருத்தியலில் முக்கியமானது படைப்புக்கும், படைப்போனுக்குமான உறவு நிலை. இரண்டுமே ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. கலீக் அல்லது படைக்கப்பட்ட பொருளானது அதன் இருப்பின் மூலம் பன்முகத் தன்மையிலானது. படைக்கப்பட்ட எல்லாப் பொருள்களும் உட்பொருட்களே. ஹக் அல்லது இருக்கும் ஒன்று அளவற்ற தன்மைகளை உடையது. இங்கு அறிபவருக்கும் அறியப்படும் பொருளுக்குமான வேறுபாடு துல்லியமானது. அந்த அறிவோனின் அல்லது இறைவனின் எதார்த்தத்தை பற்றி சூபிகள் புரிந்து கொள்ள முயன்றார்கள். அறிவு, அறியப்படும் பொருள், அறிவோன் இம்மூன்றிற்குமான வித்தியாசம் அதன் ஒருமையிலிருந்து பிரிக்க முடியாதது.

அறிவோனே புறத்தோற்றங்களுக்கும், தோன்றல்களுக்குமான தூண்டல். எல்லாவற்றுக்குமான எதார்த்தமாக அறிவோன் அல்லது இறைவன் மாறும் பொழுது உயிர், அறிவு, செயல்தன்மை, கேள்வி, காட்சி, பேச்சு ஆகியவை ஒருவருக்கே உரிய குணங்களாக மாறுகின்றன. அப்துல் கரீம் ஜில்லி என்பவர் இதனை விரிவாக விளக்குகின்றார். “இறைவனின் எதார்த்தத்தை சூபி அறியும் போது, அவரைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அந்நேரத்தில் சூபி கேட்பது இறைவன் கேட்பதாகவும், சூபி காண்பது இறைவன் காண்பதாகவும் ஆகிறது. அவரின் ஆற்றலே இறைவனின் ஆற்றலாக மாறுகிறது. மஹ்ரிபா நிலை என்பது இதுதான். ஹல்லாஜ் மன்சூரின் அனல் ஹக் (நானே உண்மை) என்பது இதன் பிரதிபலிப்பே. இது மாதிரியே

பீர்முஹம்மது அப்பாவின் “சொல்லத்தகுமோ இப்பொருளை சுருட்டி மறைக்கிறேன் சரகுக்காக” என்பதையும் இக்கோணத்தில் நாம் பார்க்க வேண்டியதிருக்கிறது. இதே விஷயம் புத்தருக்கும் சாரிபுத்திரருக்கும் இடையே நடந்த ‘தௌகிதில் - ஸிபாதி’ என்றழைக்கிறார்கள்.

பீர் முஹம்மது அப்பா அவர்களின் சொந்த இடம் தென்காசி. அவருடைய தந்தையார் சிறுமலுக்கர். தாயார் ஆமினா. இளமைக் காலத்தில் பீர்முஹம்மது அப்பா உலக நடப்புகள் எவற்றின் மீதும் ஆர்வம் காட்டாமல் அந்நியப்பாடான மனம் படைத்தவராக இருந்தார். அதுவே அச்சூழலுக்கு பொருத்தமான விஷயமாகக் கூட இருந்தது. ஒருவனின் சுயபடைப்புத் திறன் எதனைச் சார்ந்து இருக்கிறது என்பதற்கு அவன் காலத்திய சமூக இருப்பும் காரணமாகும். இவருக்கு எல்லாமே அனுபவம் சார்ந்ததாக இருந்தது. அனுபவம் என்பது வேறு. அனுபவித்தல் என்பது வேறு. அனுபவித்தல் நிகழ்காலம் சார்ந்தது. அனுபவம் நிகழ்காலத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. அது நிகழ்காலத்தின் மறுமொழியாக மட்டுமே உயிர் பெறுகிற இறந்தகால நினைவுகளின் தொகுப்பாக இருக்கிறது. இவைகளின் விளைவாக உருவெடுத்தவையே இவருடைய பாடல்கள். அக்காலத்தில் பாடல் என்பதும் கவிதை என்பதும் ஒன்றே.

அன்று தென்காசியில் சைவ சமயம் எழுச்சி பெற்று நின்றது. சைவ வெள்ளாளர்களும் பாளையப்பட்டு மறவர்களும் பட்டு நூல் நெசவாளர்களும் கலந்து வாழ்ந்த நகரில் இஸ்லாமியர்களும் இருந்தனர். அங்கு விசுவநாத சாமி கோவில் என்ற பிரம்மாண்ட கோவில் ஒன்று இருந்தது. அந்த கோயிலின் தர்மகர்த்தாவான வெங்கட்ராம சாஸ்திரி பீர்முஹம்மது அப்பாவின் தந்தை சிறுமலுக்கருக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். பீர்முஹம்மது அப்பாவும் சாஸ்திரி மகனும் தெருவில் விளையாடுவார்கள். சில சமயம் கோயிலின் தெப்பக்குளத்தில் குளிப்பார்கள். ஒரு நாள் சாஸ்திரி பீர்முஹம்மது அப்பா தெப்பக்குளத்தில் குளிப்பதை கண்டு விட்டார். சைவரைத் தவிர வேறு யாரும் தீண்டக்கூடாது என்றிருந்த தெப்பக் குளத்தில் குளித்தது அவர்களுக்குள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தியது. நண்பரின் ஒரே மகன். அவரது ஒரே மகனுக்கும் நண்பர். எப்படி அவரைக் கண்டிப்பது என்ற மாதிரியான தயக்கம். கோயில் நிர்வாகிகள் அறிந்தால் ஏதாவது ஆகிவிடுமோ என்றதொரு பதட்டம். பின்னர் தன் நண்பர் சிறுமலுக்கரிடம் பேசி அதை சரி செய்தார்.

அன்றைய நாட்களில் தக்கலையானது நெசவாளர்களை அதிகம் கொண்ட இடமாக செயல்பட்டது. (இன்றும் இவ்வூரில் இதன் எச்சங்களை காண முடிகிறது) பிறகு பீர்முஹம்மது அப்பா தான் பிறந்த ஊரிலிருந்து தக்கலைக்கு இடம் மாறினார். அங்கு மைதீன் பிள்ளை என்பவரின் வீட்டில் தங்கினார். அங்கிருந்தே தன் புகழ்பெற்ற நூலான ‘ஞானப் புகழ்ச்சியை’ இயற்றினார். அவரின் ஞானப் புகழ்ச்சியில் சைவ சமய தாக்கத்தை காணமுடிகிறது. (சிவனே, பித்தனே). சைவம் ஒரு தத்துவ தரிசனமாக அன்றைய தமிழ்ச் சூழலில் இருந்தது. இஸ்லாம் இந்தியாவில் பரவத் தொடங்கிய போது பல சைவர்கள் இஸ்லாத்திற்கு மாறினார்கள்.

பீர்முஹம்மது அப்பாவின் பரம்பரையும் அதனிலிருந்து வந்திருக்கலாம் என்று செவி வழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவரின் ஞானப் புகழ்ச்சியை நாம் வாசிக்கும்போது நமக்கு தத்துவ தரிசன வாசிப்பனுபவம் கிடைக்கிறது. மனமானது அதன் சுய-பிதுக்கத்தை அறிந்த ஒன்றையே வரவேற்க இயலும். சுவடுகளில் பதியும் நிழலே அதன் மறுமொழி.

இந்திய சூபிகளிடத்தில் இந்திய தத்துவ மரபின் தாக்கத்தை காண முடிகிறது. ஹாஜா முயினுத்தீன் ஜிஸ்தி முதல் பீர்முஹம்மது அப்பா வரை இது நீள்கிறது. மனம், சுயத்துவம், உயிர், உடல், அறிதல் ஆகிய அம்சங்களில் சூபிகள் மற்றவர்களோடு இணைந்தார்கள். மன இயக்கத்தை புரிந்து கொள்ளும் போது, நான் என்கிற நிலையை அடையும் போது தன்னிச்சையாக விழிப்பு கொள்கிறது. அநாந்திர தனிமையில் நாமிருக்கும் நிலையில் இதனை உணர்ந்து கொள்ள முடியும். சுயம் என்பது தன்னில் அறிதலாக, அறியும் போது ஒன்றை சார்ந்ததாக இருக்கிறது. இதன் மூலம் காலத்தை நாம் முன்னோக்கித் தள்ளுகிறோம். இங்கு இருப்பு என்பதே அறிதலாக உள்ளது. விலக்கப்பட்டகனியைத் தின்ற ஆதாமும், ஏவாளும் தாங்கள் நிர்வாணமாக நிற்பதை அறிகிறார்கள். ஒரு மரத்திற்கு மரமாக இருப்பது தவிர வேறில்லை. அகமானது எப்பொழுதுமே புறத்தின் மேலேறிச் செல்கிறது. நாம் யார் என்பதை புறத்தின் வழியே வெளிக்கொணர்கிறோம். இரண்டுமே ஒன்றுடன் ஒன்று உறவு கொண்டவை. சூபிகள் வாழ்க்கை என்பதை இந்த புறத்தின் வெறும் காட்சிப் படிமமாக மட்டும் பார்க்கவில்லை. மாறாக அதை முழுமையான இயக்கமாக பார்த்தார்கள்.

சூபிகளின் கோட்பாட்டில் முக்கியமானது பற்றுதல் மற்றும் விலக்குதல். பீர்முஹம்மது அப்பாவின் சிந்தனையும் இது சார்ந்தே அமைந்தது. இதன் மூலம் ஒன்றாக ஆக வேண்டும் என்ற வேட்கை நம்மை ஒன்றை செய்யவும் அல்லது உதறித் தள்ளவும் செய்கிறது. காலம் எல்லாவற்றையும் திருடிக் கொள்கிறது என நாம் சந்தேகிப்பதால் காலமற்ற நிலையை பற்றிக் கொள்ள விரும்புகிறோம். வாழ்க்கையின் இந்த போராட்டமானது நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருந்தாலும் அக/புறவய சேகரிப்புகள் மற்றும் அதன் முரண்பாடுகள் ஆகியவற்றை புரிந்து கொள்ளலே தன்னிச்சையான விடுதலை. இந்த பற்றுதல்/விலக்குதல் நோக்கியே அவரின் ஞானப்புகழ்ச்சியின் வரிகள் சில அமைந்திருக்கின்றன.

சூபிகளின் பல்வேறு பட்ட சிந்தனை முறைகள் அல்லது அனுபூதவியலை சிலர் புரிந்து கொள்ள சிரமப்படுகின்றனர். இஸ்லாத்தில் தூய்மை வாதிகள் அல்லது நஜ்திகள் எனப்படுவோர் மிகவும் சிக்கலான மனநிலையில் (இந்த இடத்தில் அப்துல் வஹ்யாபை ஞாபகப்படுத்துவதில் எனக்கு சில சிக்கல்கள் இருக்கின்றன) சூபிகள் பற்றி வசைகள் பொழிகிறார்கள். அதன் வேகம் ஜன்னலில் ஒங்கி அறையும் மழைத்துளிகளின் வேகத்தை விட அதிகமாக இருக்கிறது. ரியாத்தில் இப்னு சவூதின் அரண்மனை உச்சியில் ஏறி நின்று பாரசீக வளைகுடாவை பார்த்தால் அங்கு தெரிவது மகா சூன்யம் தான். தமிழில் தூய்மைவாதிகளால் அதிகமாக விமர்சிக்கப் பட்டவர்களில் பீர்முஹம்மது அப்பாவும் ஒருவர். இவருடைய நூல்களைப் படிக்காமல் எழுப்பப்பட்ட விமர்சனங்கள் ஏராளம். குறுகுறுப்பான ஆர்வம் புரிந்து கொள்ளலுக்கான வழி அல்ல. புரிந்து கொள்ளல் சுயஅறிவின் மூலம் பிறக்கிறது. யூகிக்க தூண்டும் அதன் உட்குறிப்போடு வெற்று ஆர்வமானது அமைதியற்ற மனத்தின் வெளிப்பாடுதான். அது எவ்வளவு தான் திறம் பெற்றிருந்த போதிலும் புரிந்து கொள்ளலையும், அறிவதையும் தடுக்கிறது. இவர்களில் சிலர் ஞானப்புகழ்ச்சிக்கு தெளிவுரை எழுதி அதை உயைனாவின் மணல் வெளியில் ஊதி விட்டார்கள். இதில் எஞ்சியது ஒன்றுமில்லை.

பீர்முஹம்மது அப்பா நிகழ்த்தியதாக சொல்லப்படும் பல அற்புதங்கள் அதன் வரலாற்று, சமூக பின்னணியையும், உள்ளார்ந்த அர்த்தங்களையும் கொண்டவை. இவை செவிவழி கதைகளாக புனைந்து இப்பகுதியில் வலம் வருகின்றன. தமிழ்ச் சித்தர்களின் மூச்சுக் கலையை அடிப்படையாக கொண்ட பல்வேறு வித புலன் செயல்பாடுகள் இவரிடத்திலும் உண்டு. சில தாந்திரீக கூறுகளையும் காண முடிகிறது. வரலாறு எப்படி தொன்மமாகிறது என்பதிலிருந்து மேற்கண்டவை நீள்கிறது. இவருடைய நூல்கள் ‘ஞானப்புகழ்ச்சி’, ‘ஞானப்பால்’, ‘ஞானப் பூட்டு’, ‘ஞான மணிமாலை’, ‘ஞானரத்தின குறவஞ்சி’, ‘ஞான ஆனந்தக் களிப்பு’என நீள்கின்றன.

தன்னுடைய வாழ்நாளின் பெரும் பகுதியை தக்கலையில் கழித்த இவர் நீண்ட காலம் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. தொன்மங்களும் / புனைவுகளும் மீண்டும் மீண்டும் உயிர் பெறுகின்றன.

5 comments:

myviewabouttheworld said...

hi peer!

salam to you! I am Abulkalam asath. I had read this article simply wonderful. I want the poetric lines of Peer muhammed appa. If you have send me.

Anonymous said...

I am Jahabar Sathik from Abu Dhabi.
I want know your more details. Could you send me your email address or mobile no.

I want to know more about sufism.

எச்.பீர்முஹம்மது said...

சாதிக்,

என் இமெயில் முகவரி வலைப்பதிவின் முகப்பில் இருப்பதை நீங்கள் காணலாம்.
mohammed.peer1@blogspot.com

எச்.பீர்முஹம்மது said...

சாதிக்,
தவறி விட்டது. இப்படி எடுத்துக்கொள்ளவும்

mohammed.peer1@gmail.com

haran said...

நல்லதொரு படைப்பு. சூபிகளைப் பற்றி அறியத் தந்தீர்கள். சம்பிரதாய இஸ்லாத்திலிருந்து, சூபிகள் எப்படி வித்தியாசப்படுகிறார்கள் என்பதை மிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள்.

'இறைவனை வணங்குவதற்காகவே படைக்கப் பட்டவன் மனிதன்' என இஸ்லாம் கூறுகிறது. இதில் இறைவன் வேறு, படைப்புகள் வேறு எனும் இருமைத் தத்துவம் (துவைதம்) வருகிறது. சூபிகள், இந்தத் தத்துவத்திலிருந்து தங்கள் தேடலைத் தொடங்கி, முழுமையை அடையும் வேட்கையில், எந்த வட்டத்திற்குள்ளும் தங்களை முடக்கிக் கொள்ளாமல், பயணத்தைத் தொடர்ந்து நடத்தி, இங்கு இறைவனைத் தவிர வேறெதுவும் இல்லை (லாஇலாஹா இல்லல்லாஹ்) எனும் ஒருமைத் தத்துவத்தில் (அத்வைதம்) முடிக்கிறார்கள். இதனை தங்களின் இந்த வரிகளில் காண முடிகிறது:


//சூபிகளின் கருத்தியலில் முக்கியமானது படைப்புக்கும், படைப்போனுக்குமான உறவு நிலை. இரண்டுமே ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. கலீக் அல்லது படைக்கப்பட்ட பொருளானது அதன் இருப்பின் மூலம் பன்முகத் தன்மையிலானது. படைக்கப்பட்ட எல்லாப் பொருள்களும் உட்பொருட்களே. ஹக் அல்லது இருக்கும் ஒன்று அளவற்ற தன்மைகளை உடையது. இங்கு அறிபவருக்கும் அறியப்படும் பொருளுக்குமான வேறுபாடு துல்லியமானது. அந்த அறிவோனின் அல்லது இறைவனின் எதார்த்தத்தை பற்றி சூபிகள் புரிந்து கொள்ள முயன்றார்கள். அறிவு, அறியப்படும் பொருள், அறிவோன் இம்மூன்றிற்குமான வித்தியாசம் அதன் ஒருமையிலிருந்து பிரிக்க முடியாதது.

அறிவோனே புறத்தோற்றங்களுக்கும், தோன்றல்களுக்குமான தூண்டல். எல்லாவற்றுக்குமான எதார்த்தமாக அறிவோன் அல்லது இறைவன் மாறும் பொழுது உயிர், அறிவு, செயல்தன்மை, கேள்வி, காட்சி, பேச்சு ஆகியவை ஒருவருக்கே உரிய குணங்களாக மாறுகின்றன. அப்துல் கரீம் ஜில்லி என்பவர் இதனை விரிவாக விளக்குகின்றார். “இறைவனின் எதார்த்தத்தை சூபி அறியும் போது, அவரைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அந்நேரத்தில் சூபி கேட்பது இறைவன் கேட்பதாகவும், சூபி காண்பது இறைவன் காண்பதாகவும் ஆகிறது. அவரின் ஆற்றலே இறைவனின் ஆற்றலாக மாறுகிறது. மஹ்ரிபா நிலை என்பது இதுதான். ஹல்லாஜ் மன்சூரின் அனல் ஹக் (நானே உண்மை) என்பது இதன் பிரதிபலிப்பே.//

குணங்குடி மஸ்தான் பற்றிய கூகுள் தேடலில், தங்களின் கட்டுரையைப் படிக்க முடிந்தது. மற்ற கட்டுரைகளையும் படித்துவிட்டு எனது கருத்துக்களைக் கூறுகின்றேன்.

முடிந்தால் தங்களின் தொலைபேசி எண்ணை எனது மின்னஞ்சலுக்கு (haran13@gmail.com) அனுப்பவும். நான் தற்சமயம் துபாயில் வசிக்கின்றேன்.

அன்புடன்,
ஜாஃபர் அலி