காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Thursday, May 15, 2008

எர்னஸ்ட் மண்டேல்

ஒர் அசட்டுத்தன இளமையின் அதிர்ஷ்டம்

(எர்னஸ்ட் மண்டேலுடன் தாரிக் அலி நேர்முகம்)

மொழிபெயர்ப்பும், குறிப்பும் :- எச்.பீர்முஹம்மது
(புதியகாற்று ஜனவரி 2007)



எர்னஸ்ட் மண்டேல் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஜெர்மனியில் உருவான மார்க்சிய சிந்தனையாளர். டிராஸ்கிஸ்ட். மார்க்சிய அரசியல் பொருளாதாரம் குறித்து அதிகமாக ஆராய்ந்தவர். பிந்தைய முதலாளித்துவ (Late capitalism)
கருத்தாக்கத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர். பிரடரிக் ஜேம்சன் இவரிடமிருந்து தான் அதை வளர்த்தெடுத்தார். தன் விமர்சன கோட்பாட்டுப் பார்வைக்கு எர்னஸ்ட் ஒரு குவிமயமாக இருந்தார்என்றார் ஜேம்சன். 1923 ல் பெல்ஜியத்தில் உள்ள அன்வெர்பில்
பிறந்த எர்னஸ்ட் இளமைக்காலத்தில் டிராஸ்கிய சிந்தனைகளின்
தாக்கத்தில் இருந்தார். அவரின் தந்தை ரோசா லக்சம்பர்க்கின் இயக்கத்தில் இருந்தவர். ஸ்டாலினிய சகாப்தத்தின் துயரங்கள் மீதான அவநம்பிக்கை மண்டேலிடம் இருந்தது. அதிகாரத்திற்கு எதிரான செயல்பாட்டின் மெளனங்கள் மீது வலிப்பை ஏற்படுத்தியவர். அதுவே ஒரு அரசியல் செயற்பாடாக இருக்க முடியும் என்று நம்பியவர். ஜெர்மனியில் ஹிட்லரின் இனசுத்திகரிப்பின் போது அதிகம் பாதிப்புக்குள்ளானார். இருமுறை கைது செய்யப்படலும், தப்பித்தலுமான நிகழ்வின் எல்லையை தாண்டினார். 1946 ல் இல் நான்காம் அகிலத்தின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்டாலினிய கருதுகோள்களுக்கு மாறானவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தினார். ஸ்டாலினை வரலாற்றின் பெரும் இழப்பு என
விமர்சித்தார். எழுபதுகளில் சோவியத் யூனியனுக்கு பயணம் செய்த மண்டேல் அங்கு தாராள மற்றும் ஜனநாயக சோசலிசம் பற்றி வெளிப்படுத்தினார். இவரின் சிந்தனை களம் ஸ்டாலினியத்திற்கும் கோர்பசேவ் வரையிலான பனிபோர் காலகட்டத்திற்கும் இடையில் உலக முதலாளித்துவம் அடைந்த மாற்றத்தை அடிப்படையாக கொண்டிருந்தது. ஒரு அர்த்தத்தில் டிராஸ்கியின் மரணத்தின் தாக்கத்திலிருந்து தன்னை நகர்த்தி கொண்டவர் என்று சொல்ல முடியும். தன்னுடைய நாட்டில் டிராஸ்கிய அமைப்பை தோற்றுவித்து அதை ஐரோப்பா முழுவதும் விரிவுபடுத்தினார். நீண்டகாலம் வெளியிடப்படாமல் இருந்த Peter Wesis ன் "Trotsky in Exile" என்ற நூலை வெகுவாக பாராட்டினார். தாரிக் அலியை ஆசிரியராக
கொண்ட New Left Review குழுவின் பெரு மூளையாகவும்
இருந்திருக்கிறார். இந்த நேர்முகம் அவரின் மரணகாலத்திற்கு முன்பாக 1989 ல் லண்டனில் வைத்து தாரிக் அலியால் எடுக்கப்பட்டது.



தாரிக் அலி: எர்னஸ்ட், ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரத்துக்கு வந்த போது உங்களுக்கு வயது பத்து. இரண்டாம் உலகப்போர்
காலகட்டத்தில் உங்களுக்கு வயது பதினாறு. ஒரு யூத பின்புலத்தில் உங்களை போன்ற ஒருவருக்கு அன்றைய இளமை என்பது
விசனகரமான ஒன்று. அன்றைய காலகட்டத்தில் உங்களின் முதல்
நினைவுகள் என்பது என்ன?

எர்னஸ்ட் மண்டேல் :- நன்றாக, முற்றிலும் வித்தியாசமாக ஒரு
பிரத்யேக மனோ நிலையுடன் அது சம்பந்தப்பட்டது. அந்த
காலகட்டத்தைப்பற்றி எனக்கு மோசமான நினைவுகள் இல்லை.
மாறாக எனக்கு பதட்டமான, உணர்ச்சி பூர்வமான, தூண்டலுடன் கூடிய நினைவுகளாக இருக்கிறது. அவநம்பிக்கையானதாக அல்ல.
இது சம்பந்தபட்ட வகையில் நாங்கள் ஒர் உயர் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

தாரிக் அலி:- உங்கள் தந்தை அரசியல் செயற்பாட்டாளரா?

எர்னஸ்ட மண்டேல் :- அந்த நேரத்தில் அவர் அரசியல்
செயற்பாட்டாளர் அல்ல. ஜெர்மன் புரட்சி காலகட்டத்தில் அவர் அப்படி இருந்தார். முதல் உலகப்போர் காலத்தில் அவர் பெல்ஜியத்தில் இருந்து ஹாலந்துக்கு குடிபெயர்ந்தார். தன் ராணுவ பணியை விரும்பாததே காரணம். அவர் ஏற்கனவே இடது சாரிய,
சோசலிஸ்டாக இருந்தார். மேலும் பிந்தைய கட்டத்தில் ஜெர்மன் ஜனநாயக குடியரசின் தலைவராக இருந்த வில்லியம் பிக்கை சந்தித்திருந்தார். இருவரும் ஜெர்மன் புரட்சி தோன்றிய காலகட்டத்தில் பெர்லின் வந்தார்கள். மேலும் அவர் பெர்லினில் உள்ள சோவியத் அரசின் பத்திரிகை அலுவலகத்தில் சில ஆண்டுகள் பணி புரிந்தார். அதன் மூலம்அவருக்கு ராடக்குடன் அறிமுகம் கிடைத்தது. மேலும் பல மனிதர்களை சந்தித்தார். அங்குள்ள நூலகத்தில் நான் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், டிராஸ்கி மற்றும் சோவியத் இலக்கியங்கள் குறித்த நூல்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1923 ல் என் தந்தை அரசியலை கைவிட்டார். அவர் வாழ்க்கை முழுவதும் உலக புரட்சியின் ஏற்ற இறக்கங்களுடன் இயைந்திருந்தது. ஜெர்மனியில் ஹிட்லர் பதவிக்கு வந்த போது அவர் வெகுவாகவே அதிர்ந்தார். அப்போது உலகம் என்பதன் அர்த்தம் பற்றிய
பிரக்ஞையோடு இருந்தார். நான் நினைக்கிறேன். இது தான் ஒருவேளை என்னுடைய முதல் அரசியல் நினைவாக இருக்கும். 1932 ல் எனக்கு வயது 9. அந்த நேரத்தில் தான் பிரஷ்யாவின் பாபன் புச் தலைமையிலான அரசு அகற்றப்பட்டது. அது ராணுவ புரட்சி மூலமாக நடந்தது. ஒரு லெப்டினன்ட் மற்றும் இரு படை
வீரர்கள் அவரின் அலுவலகத்தில் நுழைந்து அரசை கைப்பற்றினார்கள். இந்த செய்தி ஆன்வெர்பின் சமூக ஜனநாயகம் தினசரியில் வெளியானது.என் தந்தை இதைப்பற்றிய கருத்துக்களை வெளியிட்டார். அவர் இதன் முடிவு மோசமானதாக இருக்கும்
என்றார். இது அதன் தொடக்கம். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஹிட்லர் அதிகாரத்துக்கு வந்த சமயத்தில் எங்கள் வீட்டுக்கு
சிலர் அகதிகளாக வரத்தொடங்கினார்கள். அதில் எங்கள்
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இருந்தனர்.1933-1935 ன் இடைப்பட்ட காலங்கள் பெல்ஜிய வரலாற்றின் கொடூரங்கள் நிரம்பிய கட்டம். மக்கள் பட்டினியாலும், ஆழ்ந்த துயரங்களாலும்
அவதிப்பட்டனர். நிச்சயமாக இன்றைய நாளை விட அன்றைய
நிலைமை மோசமாக இருந்தது. அன்றைய நாளில் பெல்ஜிய அரசு வேலை இல்லாமல் வறுமையில் வாடியவர்களுக்கு ரொட்டிகளை விநியோகித்தது. எங்கள் வீட்டுக்கு அகதிகளாக வந்தவர்கள் சொன்னார்கள். "ஜெர்மனியில் நிலைமை இயல்பானதாக இருந்தும் நாங்கள் ரொட்டிக்காக எங்கள் படுக்கைகளை விற்றோம். பின்னர் தரையில் படுத்துக்கொண்டோம்". அது மிகவும் வேதனையான காலகட்டம். என் தந்தை கூட சில தருணங்களில் அப்படியான கட்டத்திற்கு சென்றார்.ஆனால் முற்றிலுமாக இல்லை. நாங்கள் பட்டினி நிலைமைக்கு செல்லவில்லை. ஆனாலும் எங்களின் வாழ்க்கை தரம் நாளுக்கு நாள் கீழிறங்கி வருவதை அறிய முடிந்தது. 1934, 1935 களில் நாங்கள் கொஞ்சம் அரசியல்
நிலைபாட்டில் இருந்தோம்.

தாரிக் அலி:- உங்கள் அரசியல் பிரவேசம் உலகப்போர்
கட்டத்தில் ஆரம்பித்தது?

எர்னஸ்ட் மண்டேல்:- 1936 க்கு முந்தைய கட்டம் எனலாம். அது என் வாழ்வின் திருப்பு முனை. அந்த தருணத்தில் இரு
விஷயங்கள் எங்கள் முன் வந்தன. ஒன்று ஸ்பெயின் உள் நாட்டு போர். மற்றொன்று மாஸ்கோ விசாரணைகள். அந்த நிகழ்வுகள் எங்கள் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. அன்வெர்ப் மற்றும் பெல்ஜிய உழைக்கும் வர்க்கங்கள் இதில் முக்கிய பங்கு வகித்தன. ஸ்பெயின் உள்நாட்டு போர் அவர்களிடையே பிரமாண்ட
ஒருங்கிணைவு அலையை ஏற்படுத்தியது. எனக்கு 1937 மே1 பெல்ஜிய மக்கள் பேரணியை பற்றி நன்றாக நினைவிருக்கிறது.
சுமார் ஒரு லட்சம் மக்கள் வீதிக்கு வந்தார்கள். வியட்நாம்
எழுச்சிக்கு முந்தியது என்ற வகையில் இது மிக முக்கியமானதும் என்னை விட்டு அகலாததுமாகும். அதன் பிறகு மாஸ்கோ
விசாரணைகள். அது என் தந்தை மீது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாஸ்கோ முதல் விசாரணையின் பிரதிவாதிகள்
சிலரை என் தந்தை தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தார். அவர்கள் கம்யூனிஸ்ட் அகிலத்தின் உறுப்பினர்களாக இருந்தார்கள்.
ராடக் அவர்களில் ஒருவர். அவரை விசாரிப்பது என் தந்தைக்கு
மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. அதே காலகட்டத்தில் அவர்
மாஸ்கோ பிரதிவாதிகளுக்கான ஒருங்கிணைப்பு குழு ஒன்றை ஏற்படுத்தினார். அதன் மூலம் அவருக்கு அன்வெர்பில் சில டிராஸ்கிஸ்டுகளுடன் அறிமுகம் ஏற்பட்டது. அப்போது எனக்கு வயது பதிமூன்று. அதே கால கட்டத்தில் தான் நான் டிராஸ்கிய அனுதாபியாக மாறினேன். டிராஸ்கிஸ்டுகளின் கூட்டங்களில் கலந்து கொண்டேன். ஒரு இளைஞனாக இருந்து கூட்டங்களை கவனித்ததால் அவர்கள் என்னை எதிர்க்கவில்லை. ஒரு வகையில் அது ஒரு சுவாரஸ்யமான தருணம். அது நான்காம் அகிலத்தின்
மாநாடு நடந்த காலத்தை ஒட்டியதாக இருந்தது.

தாரிக் அலி:- அது எப்பொழுது?

எர்னஸ்ட் மண்டேல்:- 1938 அமெரிக்காவின் இளம் சோசலிச லீக் மற்றும் ஸ்பெயின் இளைஞர் இயக்கம் ஆகியவை நான்காம்
அகிலத்தின் மாநாடு குறித்து எங்களிடம் விவாதிப்பதற்காக நட்டி கெளட் என்பவரை அனுப்பியது. இன்றும் அவரை நான் என் கண் முன்னால் காண்கிறேன். அவர் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கும் சென்று நான்காம் அகிலத்தின் செயல்திட்டங்கள் குறித்து விவாதித்தார். எங்களிடத்தில் வந்த போது நான் அவருடைய கூட்டங்களில் கலந்து கொண்டேன். ஒருவேளை அதுவே என் முறைப்படியான பங்களிப்பு எனலாம். அதன் பிறகு ஒரு வெற்றிடம் ஏற்பட்டு விட்டது. 1939 ல் எல்லோருமே உலகப்போர் உருவாகும் என்ற
நிச்சய மனோபாவத்தில் இருந்தார்கள். நாங்கள்
தனிமைப்படுத்தப்பட்டோம். அப்போது அன்வெர்பின் வீதிகளில்
நாங்கள் துண்டு பிரசுரங்களை விநியோகித்தோம். ஆனால்
சூழ்நிலை காரணமாக அது அறிவு பூர்வமான வழியாக
இருக்கவில்லை.

தாரிக் அலி:- அந்த துண்டு பிரசுரம் என்ன சொன்னது?

எர்னஸ்ட் மண்டேல்:- அது இரண்டாம் உலகப்போருக்கு
எதிரான வாசகங்களை உள்ளடக்கி இருந்தது. போர் வருகிறது. ஆனால் இது நமக்கான போரல்ல. ஆனால் அதன் வாசகங்கள் நன்றாக வரவில்லை. மாறாக அரூப மற்றும் பிரசார தொனியில் இருந்தன. நான் எழுதவில்லை. அதற்கான எந்த பொறுப்பையும் ஏற்கவில்லை.

தாரிக் அலி:- ஆனால் நீங்கள் தானே விநியோகித்தீர்கள்?

எர்னஸ்ட் மண்டேல்:- ஆம். வெளிப்படையாகவே நான் தான்
விநியோகித்தேன்.

தாரிக் அலி:- உங்களுக்கு பதினைந்து வயதாக இருந்தபோது
நீங்கள் முதல் துண்டுபிரசுரத்தை விநியோகித்திருக்கிறீர்கள்?

எர்னஸ்ட் மண்டேல்:- எனக்கு அப்போது பதினாறுக்கு பக்கத்தில் இருக்கும். அது மிகவும் இக்கட்டான தருணம். பெல்ஜியத்தில் எங்கள் அமைப்பு இரு பிரிவுகளாக இருந்தது. ஒருபிரிவானது நிலக்கரி சுரங்கங்கள் உள்ள மாவட்டம் ஒன்றில் இயங்கியது. அதில் சுரங்க தொழிலாளர்கள் சுமார் அறுநூறு பேர் இருந்தார்கள்.
மற்றொரு அமைப்பு நிலக்கரி சுரங்கங்களை கொண்ட வேறொரு மாவட்டத்தில் இயங்கியது. அது சுரங்க தொழிலாளர்களை அதிகம் கொண்ட பெரும்பான்மை பெற்ற அமைப்பாக இருந்தது. அதன் விளைவாக சுரங்க முதலாளிகள் குழிகளை மூடினார்கள். அதன்
பிறகு திறக்கவேயில்லை. அவர்கள் எங்கள் இயக்கத்திற்கு ஆதரவாக
வாக்களித்தார்கள். அதன் காரணமாக பல்வேறு நெருக்கடிக்கு
உள்ளானார்கள். போருக்கு முன்பும், போரின் போதும், போருக்கு
பிறகும் அவர்கள் சுரங்கங்களில் நியமிக்கப்படவில்லை. தோழர்
ஸ்கார்ஜில் இதை அங்கீகரித்தார்.

தாரிக் அலி:- நீங்கள் எப்போது போராட்டத்தில் இணைந்தீர்கள்?

எர்னஸ்ட் மண்டேல்:- எங்கள் இயக்கம் அப்போது தொடர்ச்சியற்று கீழ்நோக்கி சென்று கொண்டிருந்தது. அதன் தலைவர்களில் ஒருவர் ஹிட்லருடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற போலியான குற்றச்சாட்டிற்காக ஸ்டாலினிஸ்டுகளால் கொல்லப்பட்டார். அதில் எந்த அளவிற்கு உண்மை என்றே தெரியவில்லை. ஆனால் அவர் டிராஸ்கிஸ்டாக இருக்கவில்லை. அந்த குற்றச்சாட்டே அற்பதனமானது. இதன் தொடர்ச்சியில் மேலும் பலர் கொல்லப்பட்டனர். இவ்வாறான மிகுதியான மக்களின் இழப்பினால் எங்கள் ஸ்தாபனம் கீழ்நிலையை அடைந்தது. 1939-1940 களில் எங்கள் அமைப்பில் வெறும் 12 பேர் இருந்தனர். இந்த காலகட்டம் ஜெர்மன் ஆக்கிரமிப்புக்கு சிறிது முந்தைய கட்டமாக இருந்தது. அப்போது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஜெர்மானிய படை எங்கள் நாட்டை மே 1 ம் தேதி ஆக்கிரமித்தது. இதன் விளைவாக எங்கள் நாடு அவர்களால் சிதைவுக்குள்ளானது. ஹென்ரி டி மென் என்ற சோசலிச கட்சியின்தலைவர் துணை பிரதமராக தொடர்ந்தார். இவர்
நாசிகளுடன் சமரசம் செய்தார். சில தொழிற்சங்க கருவிகள் அவருக்கு துணையாக இருந்தன. அந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சட்ட தினசரி ஒன்றை வெளியிட்டு கொண்டிருந்தது. அதில் உள்ள செய்திகள் நாசிகளின் தணிக்கைக்குட்பட்டு வெளி வந்தன. அதற்கு காரணம் ஸ்டாலின் - ஹிட்லர் ஒப்பந்தம். (இது ஸ்டாலின் செய்த மிகப்பெரிய வரலாற்று தவறுகளில் ஒன்று என்று பிந்தைய மார்க்சியர்கள் வெளிப்படுத்தினார்கள்- எச்.பீர்முஹம்மது). இது
மாதிரியான நிகழ்வுகள் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கின.
அப்போது நாங்கள் மிகபலவீனமானவர்களாக இருந்தோம். அதன் பிறகு டிராஸ்கி நாடு கடத்தப்பட்டு ஸ்டாலினிஸ்டுகளால்
கொல்லப்பட்டார். இந்த செய்தி பெல்ஜிய தினசரியில் வெளியானது.
இதன் பிறகு பெல்ஜிய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்தவரும், பிற்காலத்தில் டிராஸ்கிஸ்டாக மாறியவருமான தோழர் போக் எங்கள் வீட்டுக்கு வந்தார். டிராஸ்கி கொல்லப்பட்ட செய்தியை சொல்லி அழுது கொண்டிருந்தார். அவர் டிராஸ்கியை தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தார். மற்றவர்கள் அவருடன் வந்திருந்தார்கள். இந்த படுகொலைக்கு ஒரே தீர்வு செயலிழந்து போன அமைப்பை பலப்படுத்துவது தான். இதன் மூலம் இந்த
மோசமான படுகொலைக்கு தீர்வு ஏற்படுத்துவது. படுகொலைகள் எங்களின் எதிர்ப்புணர்வையோ அல்லது கருத்துக்களையோ ஒடுக்க முடியாது என்று அவருக்கு (ஸ்டாலினுக்கு) காட்ட முடிவு செய்தோம். இதற்காக அமைப்பை மறுகட்டுமானம் செய்து மற்ற நாடுகளுக்கு அதை விரிவுபடுத்த தீர்மானித்தோம்.

தாரிக் அலி:- இதை நீங்கள் மிக இரகசியமாக தான் செய்தீர்களா?

எர்னஸ்ட் மண்டேல்:- மொத்தத்தில் இது மிக இரகசியமாகவே
நடந்தது. பிரசல்சில் உள்ள தோழர்களும் இதே வழியில்
சிந்தித்தார்கள். நாங்கள் தீர்மானித்த இரு வாரங்களில் எங்கள் அமைப்பு வலுவானதாக மாறியது. 1940 ன் இறுதியில் நாங்கள் சட்ட விரோதமாக செய்தித்தாள் ஒன்றை ஆரம்பித்தோம். அதற்காக சட்டவிரோத அச்சகம் ஒன்றையும் துவங்கினோம். இதன் பிறகு எங்கள் அமைப்பு இன்னும் பரவியது. பல தொழிலாள
முகாம்களில் இருந்து எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி இதில் எதிலுமே தன்னை
அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. ஆனால் சமூக ஜனநாயக கட்சியினர் எங்களுடன் இணைந்து கொண்டிருந்தார்கள். இருந்தும் எங்கள் அமைப்பு அவ்வளவு பிரபலம் அடையவில்லை. அநேகம் மக்கள் போரில் ஜெர்மன் வெற்றி பெறும் என்று நினைத்துக்
கொண்டிருந்தார்கள்.

தாரிக் அலி:- நீங்கள் இன்னும் தனிமைப்படுத்தப்பட்டீர்களா?

எர்னஸ்ட்மண்டேல்:- குளிர்காலத்திற்கு பிறகு இவை அனைத்துமே மாறி விட்டன. போரில் ஜெர்மனியின் தோல்வி எங்களை சில
விசயங்களை நோக்கி நகர்த்தியது. குளிர்காலத்தில் பெல்ஜியத்தில் உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால்
தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. இதன் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. அந்த மாற்றத்திற்காக அவர்கள் சோவியத் யூனியன் மீது ஜெர்மனி தாக்குதல் தொடுக்கும் வரை காத்திருந்தார்கள் என்பது உண்மையல்ல. அதற்கு முன்பே பிற மக்கள் இயக்கங்களின் எழுச்சியை அவர்கள் கண்டார்கள். இதன் மூலம் வெகுமக்களிடம் இருந்து நாம் துண்டிக்கப்பட்டு விடுவோம் என்ற எச்சரிக்கை உணர்வு அவர்களிடம் இருந்தது. அவர்கள் எங்கள்இயக்கம் ஏகபோகமாக மாறி விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள். நான் போரில் ஜெர்மன் தோற்கடிக்கப்படும் என்று அவநம்பிக்கை கொண்டிருக்கவில்லை. நிச்சயமாக என்னை நானே சமரசத்துக்குட்பட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். இதுவே என்னை அசட்டுத்தனமான காரியங்களில் ஈடுபட தூண்டியது.

தாரிக் அலி:- நீங்கள் சிறை அதிகாரிகளுக்கு துண்டுபிரசுரம்
விநியோகித்தீர்களா?

எர்னஸ்ட் மண்டேல்:- ஆம். ஆனால் அது பெரிய அசட்டுத்தனமான
காரியமாக எனக்கு தெரியவில்லை. நான் முதன்முதலாக சிறைச்சென்ற போது அங்கிருந்து தப்பிப்பதற்கு முயற்சித்தேன். இரண்டாம் முறையாக சிறை சென்ற போது அங்கிருந்து தப்பித்தேன். மூன்றாம் முறையாக கைது செய்யப்பட்டு ஜெர்மனி கொண்டுவரப்பட்டேன்.
நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். காரணம் 99.9 சதம் நான்
கொல்லப்படாமல் இருப்பேன் என்று நினைக்கவில்லை.

தாரிக் அலி:- ஏனெனில் நீங்கள் ஒரு யூதராகவும், மார்க்சியராகவும் இருக்கிறீர்கள்?

எர்னஸ்ட் மண்டேல்:- ஒரு யூதர், மார்க்ஸிஸ்ட், டிராஸ்கிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய நான்கு காரணங்களுக்காக பலர் அன்று கொல்லப்பட்டனர். நான் ஜெர்மனிக்கு நாடு கடத்தப்பட்ட போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். காரணம் ஜெர்மனி புரட்சியின் மையத்தில் இருந்தது. நான் சாதாரணமாக சொல்லிக்கொண்டிருந்தேன் " நான் எங்கு தேவையோ அங்கு வந்து விட்டேன்.

தாரிக் அலி:- நீங்கள் சிறையிலிருந்து மீண்டும் தப்பிக்க
முயற்சித்தீர்களா?

எர்னஸ்ட் மண்டேல்:- அந்த கதை ஒரு முட்டாள்தனமானது. நான் இப்போதும் உயிரோடு இருக்கிறேன் என்பதேவிதிவிலக்கான காரியம்.
ஒரு குறிப்பிட்ட வகையில் என் புறநோக்கு எனக்கு முழு உதவியாக இருந்தது. நான் அதை மிகைப்படுத்தவில்லை. அது ஒரு அதிர்ஷ்டம்.
சில அடிப்படையான பிரச்சினைகளில் என்னுடைய அரசியல் நடத்தை மற்றும் சிந்தனை தூண்டலாக இருந்தது. இதன் மூலம் எனக்கு சிறை அதிகாரிகளுடன் நல்ல உறவு முறை ஏற்படுத்தி கொள்ள முடிந்தது. மேலும் பெல்ஜியம், பிரான்சு நாட்டை சேர்ந்த ஜெர்மனிக்கு எதிரான உணர்வு கொண்டவர்களுடன் நான் எந்த உறவையும் வைத்து கொள்ளவில்லை. நான் அரசியல் தயை கொண்டவர்களை தேடிச் சென்று அவர்களிடம் நல்ல தொடர்பு வைத்துக்கொண்டேன். அதுவே என் சுய-பாதுகாப்பு என்பதை சார்ந்துஅறிவுபூர்வமான செயல். அவ்வகையில் சில ஜெர்மானியர்கள் கிடைத்தார்கள். அவர்களிடமிருந்து அரசியல் தீர்வுகளை கற்றுக்கொண்டேன். மேலும் ஜெர்மன் சமூக ஜனநாயகவாதிகள், சில கம்யூனிஸ்ட்கள் ஆகியோர்களையும் நான் கண்டறிந்தேன்.

தாரிக் அலி:- வதை முகாம்களில் உள்ள
கண்காணிப்பாளர்களுக்கிடையிலுமா?

எர்னஸ்ட் மண்டேல்:- ஆம்.கண்காணிப்பாளர்களுக்கிடையிலும் தான். அது வதை முகாம் அல்ல. மாறாக சிறை முகாமாக இருந்தது. அங்கு தண்டனை பெற்ற சில சமூக ஜனநாயக வாதிகளை கண்டறிந்தேன். அவர்கள் பெல்ஜிய அரசில் அமைச்சர்களாக இருந்தவர்கள். அவர்களுக்கிடையே இளம் ஜெர்மானியர்களும் இருந்தார்கள். அவர்கள் இடதுசாரிகளாகவும், போர் எதிர்ப்பு கருத்து கொண்டவர்களாகவும் விளங்கினார்கள். அவர்களில் ஒருவர் ஆயுள் தண்டனை பெற்றவர். அவரின் தந்தை இரயில்வே பணியாளராக இருந்தார். அவர் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். என்னை அதிகமாக நேசித்தார். அவர் தந்தை மற்றும் அவரின் நண்பர்களின் முகவரியை கொடுத்து நீங்கள் எப்போது இங்கிருந்து
தப்பிக்கிறீர்களோ அப்போது அவரை தொடர்பு கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு தேவையான உதவியை செய்வார். அதன் மூலம் நீங்கள் உங்கள் நாட்டிற்கு திரும்பி செல்ல முடியும்.
ஆக நான் என்னுடைய திட்டத்தை வளர்த்தெடுக்க தொடங்கினேன். ஆனால் அந்த திட்டமே அசட்டுத்தனமானது. சிறையில் நான் வேலைபார்த்த இடம் மறக்கமுடியாதது. அது ஒரு உலை கூட.

தாரிக் அலி:- அங்கு நீங்கள் எதை உற்பத்தி செய்கிறீர்கள்?

எர்னஸ்ட் மண்டேல்:- கசோலின். அது கார் மற்றும் விமானங்களுக்கான எரிபொருள். அது ஒருவகையில் ஐரோப்பாவின் உயிரோட்டமாக இருந்தது. அந்த கூடத்தில் ருஷ்ய போர் கைதிகள், அரசியல் கைதிகள், வதை கூடங்களிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள், ஜெர்மானியர்கள் ஆகியோர் இருந்தார்கள்.
மொத்தம் அறுபதாயிரம் பேர் இருந்தார்கள். அவர்களில் சிலர் என்னுடைய சொந்த நகரத்தை சார்ந்தவர்கள். நான் அவர்களிடத்தில் நண்பனாக பழகி அவர்களின் உடையை தருமாறு கேட்டேன். அவர்களில் ஒருவர் தந்தார். ஆக என் சிறை சீருடையை மாற்றிக்கொள்ள முடிந்தது. பின்னர் ஒரு நாள் அதிகாலையில் அந்த சிறை சுவரின்
மின்சார வேலியின் மீது ஏறி அதை தாண்டி வெளியே குதித்தேன். சில தருணங்களில் மின்சார வேலியின் மீதுள்ள மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கும். அது எனக்கு மிக உதவிகரமாக இருந்தது. ஆனால் உண்மையில் அது ஒரு அசட்டுத்தனம். அசட்டுத்தனம்.

தாரிக் அலி:- ஆக அசட்டுத்தன செயல்களே உங்கள் உயிரை
காப்பாற்றியிருக்கிறது?

எர்னஸ்ட் மண்டேல்:- ஒரு தீர்மானகர தருணத்தில். அது கடும் இடர்பாடாக இருந்தது. ஒரு வேளை நான் பிடிபட்டு கொல்லப்படுவேன் என்ற நிலை. துரதிஷ்டவசமாக நான்
பிடிக்கப்பட்டேன். மூன்று நாட்கள் நான் மிக மகிழ்ச்சியாக இருந்தேன். சிறையில் இருந்த அந்த நேரத்தில் ஒரு ஜெர்மானிய பெண் பழங்களை எனக்கு சாப்பிட தந்தார். மேலும் நான் ஆசனின் எல்லையை அறிந்திருந்தேன். மூன்றாம் நாளில் நான் தப்பிசெல்ல முயன்று
பிடிபட்ட போது அவரிடம் சொன்னேன். " நீங்கள் தினப்பத்திரிகைகளை பார்த்தீர்களா? அதில் எங்கள் தோழர்கள் பிரஸ்ஸில்ஸில் நிற்கிறார்கள். விரைவில் அவர்கள் ஆசனை நெருங்குவார்கள். நீங்கள் என்னை சுட்டுக்கொன்றால் உங்களுக்கு அதனால் மிகப்பெரும்
தொல்லைகள் ஏற்படும். ஆகவே என்னை சிறையில் அடையுங்கள். அவர் அதை ஏற்றுக்கொண்டு சிறையில் அடைத்தார். இரண்டாம் முறையாக இது பெரும் அதிர்ஷ்டம்.

தாரிக் அலி:- நீங்கள் அப்போதும் கூட தாஜா செய்பவர்? எர்னஸ்ட்

எர்னஸ்ட் மண்டேல்:- நீங்கள் அப்படி இட்டுக்கொண்டால் சரி. நான் சிறையில் என் சரியான பெயரை கொடுக்கவில்லை. நான் தப்பி சென்ற பிறகு என்னை அவர்கள் சரியாக அடையாளம் கண்டார்கள். ஆகவே நான் பிடிபட்ட பிறகு என்னை வேறொரு சிறைக்கு மாற்றினார்கள். அது இருள் சிறையாக இருந்தது. அங்கு நிலைமை மிக மோசமாக இருந்தது. சிறை கண்காணிப்பாளர் சொன்னார்." நீங்கள் ஒரு
அரிதான பறவை. உங்களுக்கு தெரியுமா? நீங்கள் இன்னொரு முறை பிடிபட்டு கொண்டு வரப்பட்டால் தூக்கிலிடப்படுவீர்கள்." அப்படி
சொல்லி விட்டு என்னை ஆச்சரியத்தோடு பார்த்தார். ஆனால் அந்த சிறையில் நான் தூக்கிலிப்படவில்லை. நான் ஏற்கனவே தண்டனை அனுபவித்திருந்தேன். 1944 அக்டோபர் முதல் 1945 மார்ச் வரை இங்கு இருந்தேன். பின்னர் வேறொரு முகாமிற்கு மாற்றப்பட்டு அம்மாத இறுதியில் விடுதலை செய்யப்பட்டேன்.

No comments: