காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Saturday, May 17, 2008

தாரிக் அலி நேர்முகம்


தாரிக் அலியுடன் ஓர் நேர்முகம்
எச். பீர்முஹம்மது
புதிய காற்று (டிசம்பர் 2006)

தாரிக் அலி உலகளாவிய மார்க்சிய சிந்தனையாளர்கள் வரிசையில் வரக்கூடியவர். அவரின் எழுத்துக்கள் தற்போது பரவலாக கவனம் பெற்று வருகின்றன. “The clash of fundamentalism”, Conversations with Edward Said, Bush in babylon, Rough music, pirates of the Caribbean: Axis of Hope போன்ற இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். திரைப்படத் தயாரிப்பு, நாவல், அரசியல் சிந்தனை போன்ற பல துறைகளில் இயங்கி வருபவர். ஏகாதிபத்திய எதிர்ப்பு சிந்தனையாளர். பின்காலனீய சிந்தனையாளரான மறைந்த எட்வர்ட் செய்த்தின் நெருங்கிய நண்பர். மேற்கின் பின் நவீனத்துவ அறிவு ஜீவிகளுடன் பல உரையாடல்களை நடத்தி இருக்கிறார். லண்டனிலிருந்து வெளிவரும் New left Review மாத இதழின் ஆசிரியர்.

தற்போது லண்டனில் வசிக்கும் தாரிக் அலி சில மாதங்களுக்கு முன்பு நான் பணிபுரியும் அரபு நாட்டின் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு எட்வர்த் செய்த் நினைவு கருத்தரங்கிற்காக வருகை தந்திருந்தார். பல்கலைக்கழக பேராசிரியரான அரபு நண்பர் ஒருவர் வழியாக அவரை மிகுந்த சிரமத்திற்கிடையே சந்திக்க முடிந்தது. என்னை தாரிக் அலியிடம் அவர் அறிமுகப்படுத்திய போது என் எதிர்பார்ப்புக்கு மாறாக நன்றாகவே உரையாடினார். ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் நடந்த உரையாடல் எனக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது.

உங்களுடன் விரிவாக உரையாட வேண்டும் என்று நான் சொன்ன போது தன் காலப் போதாமையை சொன்ன அவர் தன் இமெயில் முகவரியை கொடுத்து அதில் உங்களுக்கான கேள்விகளை கேளுங்கள். நான் பதிலளிக்கிறேன் என்றார். அதன் பிறகு பல நினைவூட்டல்களின் பலனாக தன் பணி நெருக்கடிக் கிடையிலும் பதில் அனுப்பினார். அரேபிய வளைகுடாவின் மணல்வெளியை தொடாத சிற்றலைகள் அதைத் தாண்டி பல்கலைக்கழகச் சுவர்களைச் தொட்ட மாதிரியான உணர்வில் லயித்தேன். இமெயில் நேர்முகம் ஆனதால் இது தொடர்ச்சியற்றதாகவும் அதே நேரத்தில் தொடர்ச்சியானதாகவும் இருக்கும்.

கேள்வி: ஒரு சூழலில் நாம் ஒரே நாட்டில் பிறந்திருக்கிறோம். நீங்கள் பாகிஸ்தானில் அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்தீர்கள். இன்று வரையிலான பாகிஸ்தானின் வரலாற்றில் அது ஜனநாயகம், ராணுவ சர்வாதிகாரம் என்ற முரண்பாடுகளின் உருவமாக நகர்ந்து வந்திருக்கிறது. பாகிஸ்தானியாக லண்டனுக்கு புலம் பெயர்ந்த நீங்கள் எவ்வாறு சுய-கரைத்தழித்தல் செய்ய முடிந்தது? உங்கள் இளமையின் பின்புலம் தான் என்ன?

பதில்: நான் பிறந்தது பாகிஸ்தானின் லாகூரில். வளைகுடா நாடுகளைப் போன்றே Cosmopolitan கலாச்சாரத்திற்கு உட்பட்டது லாகூர். எங்கள் குடும்பம் வசதியான, நிலபிரபுத்துவ பின்னணி கொண்டது. இதில் பிறந்தபோதும் கூட என் தந்தை இளமை காலம் முதலே இடதுசாரி சிந்தனையின் தாக்கத்தில் இருந்தார். அவர் என் தாயை சந்தித்தது ஒரு தற்செயலான நிகழ்வு. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். என் பாட்டனார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஒரு கம்யூனிஸ்ட்டுக்கு என் மகளை திருமணம் செய்து கொடுக்க மாட்டேன் என்றார். சில தொடரல்களுக்குப் பிறகு அவர் ஒரு நிபந்தனை விதித்தார். நான் என் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டுமென்றால் நீங்கள் இராணுவத்தில் சேர வேண்டும். இராணுவம் என்பது அன்றைய பிரிட்டிஷ் இந்திய ராணுவம். பின்னர் ஒரு கனவொன்றின் தூண்டலுக்காக என் தந்தை அவரின் நிபந்தனையை ஏற்று இராணுவத்தில் சேர்ந்தார். அன்றைய நாட்களில் ஹிட்லரால் சோவியத் யூனியன் ஆக்கிரமிப்புக்குள்ளாகி விடும் என்ற கவலை உலகம் முழுவதுமுள்ள எல்லா மார்க்சியர்களுக்கும் இருந்தது. இதுவும் என் தந்தையோடு ஒட்டிச் சேர்ந்து கொண்டது. அவருடைய திருமணப் புகைப்படமே இராணுவ உடையில் அவர் நிற்பது மாதிரி இருக்கும்.

சிறிதுகாலம் இராணுவத்தில் இருந்த அவர், தேசிய விடுதலைப் போராட்டத்திலும் பங்கேற்றார் அவரின் இந்த வளர் பின்னணி என் முன்னகர்வுக்கான சானலாக இருந்தது. நான் வளர்ந்த சூழலில் கல்விக்கான வாய்ப்புகள் குறுகிய தேர்ந்தெடுப்புக் குள்ளாகவே இருந்தன. ஒரு வகையான உயர்தர வகுப்பினர் பள்ளி ஒன்று இருந்தது. அதில் படிக்கிற எல்லோருமே பணக்கார, அதிகார மட்டத்தினரின் பிள்ளைகள். என்னை என் குடும்பத்தார் நீ அங்கு செல்ல வேண்டாம். உன் அழிவின் தொடக்கம் அது என்றார்கள். பின்னர் அயர்லாந்து கத்தோலிக்க மிசினரியால் நடத்தப்படும் பள்ளியில் சேர்ந்தேன். அது முன்னை விட ஜனநாயக ரீதியிலானதும், சமூக நோக்கிலானதுமானது. பல்வேறு பட்ட வகுப்பினர் அங்குப் படித்தார்கள். அதன் மூலம் எனக்கு தரமான கல்வியும், கிறிஸ்தவம் பற்றிய அறிவும் கிடைத்தது. ஆனால் சூழல் முஸ்லிம் நாடாக இருந்தது.

நான் உயர்கல்விக்காக ஆக்ஸ்போர்டு செல்வதற்கு முன்பு பாகிஸ்தான் பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்ந்தேன். அது என் எதிர்பார்ப்புக்கு மாறாக வித்தியாசமாக இருந்தது. அதன் முதல்வர் சமூக சிந்தனையாளர். நான் கல்லூரியில் நுழைந்த தருணத்தில் என்னிடத்தில் சொன்னார், “இக்கல்லூரியின் நான்கு சுவர்களுக்குள் நீ எதை சிந்திக்க நினைக்கிறாயோ அதை சிந்திக்கலாம். நீ எதை செய்ய நினைக்கிறாயோ அதை செய்யலாம். நீ எதை வாசிக்க நினைக்கிறாயோ அதை வாசிக்கலாம். நான் இவற்றை ஒருங்கிணைப்பதற்காக உன்னோடு இருப்பேன்”. அவர் சொன்ன இந்த வார்த்தைகள் என் ஆழ்மனத் தூண்டலாக இருந்தன. இந்தத் தூண்டலின் தொடர்ச்சியாக நான் அரசியல், தத்துவார்த்த சிந்தனைக்கு உட்பட்டேன்.

அந்தக் கல்லூரி சூழலே நெகிழ்வூட்டக் கூடியதாக இருந்தது. நாங்கள் அங்கு மார்க்சியம், இஸ்லாமியம், பெண்ணியம் போன்ற பல விஷயங்கள் குறித்து விவாதிப்போம். இது ஒருவகையில் சிறந்த பயிற்சியாக இருந்தது. என் கல்லூரிப் படிப்பின் நிறைவில் நான் அரசியல் மனத்திற்குட்பட்டிருந்தேன். என் பேச்சுகள் கல்லூரியில் கூட தடை செய்யப்பட்டன. இராணுவ ஆட்சியின் கொடுமை அது. இதைக் கண்டு கல்லூரி முதல்வர் கூட அதிர்ச்சிக்குள்ளானார். என் குடும்பத்தார் தொடர்ந்து என்னை பாகிஸ்தானில் இருக்க அனுமதிக்கவில்லை. ஆனாலும் எனக்கு பாகிஸ்தானை விட்டு வெளியேற மனமில்லை.

தொடர்ந்த நெருக்கடியின் விளைவாக நான் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி லண்டன் சென்றேன். லண்டன் எனக்கு லௌகீக உலகின் இன்னொரு உலகமாக இருந்தது. ஆக்ஸ்போர்டு பல்கலையில் மேலும் படிப்பதற்காகச் சேர்ந்த போது இழந்தவற்றை அனைத்தையும் மீட்டேன். அங்கு வலுவான இடதுசாரி மாணவர் வட்டாரம் இருந்தது. அவர்களோடு கருத்தியல் ரீதியான பலவிஷயங்கள் குறித்து விவாதித்தேன். அது எனக்கு நல்ல நகர்வாக இருந்தது. தேர்வில் அன்று நான் அளித்த பதில்கள் இன்றும் எனக்கு வேடிக்கையாகத் தோன்றுகின்றன. ஒரு தடவை பொருளாதார பாடத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

உலகின் மானியப் போக்குவரத்தின் மிக மலிவான வடிவம் எது? அதற்கு நான் எழுதினேன் “உலகின் மானியப் போக்குவரத்தின் மிக மலிவான வடிவம் என்பது ஹெலிகாப்டர். காரணம் இங்கிலாந்தின் சைகானிலிருந்து ஹெலிகாப்டர் பயணமாக புறப்பட்ட எவருமே திரும்பி வந்ததில்லை”.

நான் ஆக்ஸ்போர்டு பல்கலையில் படித்த இறுதி நாட்கள் முழுவதும் வியட்நாம் போரின் எதிரொலிக்குட்பட்டிருந்தேன். என் சக நண்பர்கள் மத்தியில் அதை குறித்தே விவாதம் நடந்து வந்தது. எனக்கு அதன் மீதான சவால்கள் ஏற்பட்டன. அதை எதிர்கொள்வதற்கான மனோபாவமும் உருவானது. வியட்நாம் போரை ஒட்டி 1967ல் பெர்டிணான்ட் ரஸ்ஸல், ழீன் பால் சார்த்தர் ஆகியோர் சர்வதேச போர்க்குற்ற குழு ஒன்றை அமைத்தார்கள். அதன் பணி வியட்நாமுக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்க வேண்டும். இதன் மூலம் அமெரிக்காவை போர்க் குற்றவாளியாக பிரகடனப்படுத்த வேண்டும். அக் குழுவில் நானும் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

நான் அப்போது தான் பல்கலையின் இறுதியாண்டை நிறைவு செய்திருந்தேன். அக்குழுவில் ஒருவனாக நான் வியட்நாமைச் சென்றடைந்தேன். அப்போது அமெரிக்கா வியட்நாம் மீது குண்டுகளை வீசிக் கொண்டிருக்கிறது. அதன் எல்லா வித கொடூரங்களையும் நேரில் கண்டேன். பின்னர் திரும்பி வந்து நாங்கள் சார்த்தர் தலைமையிலான குழுவிடம் அறிக்கை அளித்தோம். இதன் பிறகு வியட்நாம் போருக்கு எதிராக உலகம் முழுவதும் அணிதிரளல் ஏற்பட்டது. இங்கிலாந்தின் தெருக்கள் இதற்காகவே ஆரவார மாயின. இறுதியில் அமெரிக்கா கற்ற பாடம் நாங்கள் ஆக்ஸ்போர்டில் விவாதித்ததை பிரதிபலிப்பதாக இருந்தது.

கேள்வி: 1947 ஒரு அர்த்தத்தில் நம் இருவருக்குமே சோகமான தருணம். பிரிவினை தவிர்க்க முடியாத கட்டத்தில் நம்மை இருவேறு பாதையாக நகர்த்தி விட்டது. இந்தியாவின் இன்றைய இந்துத்துவ நிலைப்புக்கான துவக்கம் இது எனலாம். நிலவியல், கலாச்சார பின்னணி சார்ந்த காரணிகள் மதமாக உருவெடுத்ததன் விளைவாக நீங்கள் இதை எடுத்துக் கொள்கிறீர்களா? அல்லது இஸ்லாமிய பேரியல் திரட்சி (macro mass)யாக காண்கிறீர்களா?

பதில்: இரண்டையுமே நான் எடுத்துக் கொள்கிறேன். இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் போது எனக்கு வயது நான்கு. என் அறிவுக் கெட்டா பருவம் அது. இருதரப்பிலுமே சுமார் இரண்டு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர். இப்போதும் கூட அது என் சிந்தனை ஓட்டத்தை கடந்து செல்வதுண்டு. அந்த நேரத்தில் நாங்கள் லாகூரின் தெருக்கள் வழியாக காரில் பயணம் செய்தோம். என் தந்தை காரை ஓட்டினார். நான் காரின் பின் இருக்கையில் உட்கார்ந்திருந்த ஞாபகம். அப்போது ஒரு காட்சி. ஒருவர் கையில் வாளோடு கடும் கூக்குரல் எழுப்பி கொண்டு “இங்கே முஸ்லிம்களை தவிர எவரும் இருக்கக் கூடாது”.

கண்ணில் படுவோரையெல்லாம் அடையாளம் காண முயற்சித்துக் கொண்டிருந்தார். இந்துத்துவ சக்திகள் இதன் மூலம் மிகுதியான பலன் அடைந்த போதிலும், ஒரு இடதுசாரியாக எனக்கு முஸ்லிம் லீக் மீதே குற்றம் படுகிறது. அன்றைய சூழலில் ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக்கின் குணாதிசயங்கள் அனைத்துமே நிலப் பிரபுத்துவ தன்மை கொண்டவை. ஜின்னா பாகிஸ்தானின் மிகப்பெரிய பண்ணை குடும்பத்தைச் சேர்ந்தவர். அதில் இருந்த பெரும்பாலான தலைவர்களின் மனவோட்டம் இஸ்லாமிய அடிப்படைவாத நவீன அரசு என்பதாகவே இருந்தது.

சமீர்கான், அபுல் கலாம் ஆசாத், கபார் கான் போன்றவர்கள் எதிர்நிலைப் பாட்டை கொண்டிருந்த போதும் இவர்களே வெற்றி பெற முடிந்தது. அன்றைய காங்கிரசின் வகுப்பு கண்ணோட்டம் கொண்ட தலைவர்கள் பாகிஸ்தான் உருவாவதையே அதிகம் விரும்பினர். நீங்கள் சொன்னது மாதிரி நிலவியல், கலாச்சாரப் பின்னணி ஒருவகையில் இதன் நீட்சி எனலாம். பாகிஸ்தான் என்பது பஞ்சாப், ஆப்கான், காஷ்மீர், பலுசிஸ்தான் என்பதன் சுருக்கம் தான். இதுவும் முஸ்லிம் லீக்கின் நுண்ணிய மூளைகள் கண்டுபிடித்த சொல்தான். கலாச்சார நேர்கோட்டில் மொழி வகிக்கும் பங்கு குறித்து நான் நிறையவே விவாதித்திருக்கிறேன். இதன் தொடர்ச்சியில் பிரிவினைக்கு உருதுமொழி முக்கிய பங்கு வகித்தது என்பதை நான் இப்போதும் நம்புகிறேன்.

இன்னொரு திசையில் சமஸ்கிருதம் அதன் கிளையான ஹிந்தி ஆகியவற்றின் பாதிப்பும் அதிகம். இவை எல்லாம் நிலவியல் சார்ந்த திரட்சிக்கு இருசாராரையும் உட்படுத்தின. உங்கள் இந்தியாவில் கூட உருது பேசும் முஸ்லிம்கள் தான் அதிகம் என்று நினைக்கிறேன். இது தான் எழுபதுகளில் வங்கதேசப் புரட்சிக்கு காரணம். அங்குள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து முஸ்லிமாக மாறிவர்கள் தான். இறுதியில் இந்திராவின் தலையீட்டாலே அதன் விடுதலை சாத்தியமா னது. பிரிவினையின் போது குலாம் சர்வர் அங்கு செய்த கொடூரங்கள் இன்னும் மறுஎழுத்து (Rewriting) செய்யப்பட வேண்டியவை. என்னைப் போலவே இடதுசாரியாக பாகிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள், பாகிஸ்தானில் வாழ்பவர்கள் அனைவருமே பிரிவினையை துயரமாக நினைக்கிறார்கள். ஜவகர்லால் நேரு போன்ற தலைவர்கள் பாகிஸ்தான் அரசியலில் உருவாகா மல் போனது மிகப்பெரும் வெற்றிடம்.

கேள்வி: உங்கள் நூல்களில் நான் படித்த ஒரு சிலவற்றில் என்னை அதிகம் பாதித்தது “Clash of Fundamentalism”. அதில் நீங்கள் ஒரு முஸ்லிம் இளைஞனுக்கு கடிதம் என்ற மாதிரியான பகுதியை எழுதியிருப்பீர்கள். மத்திய கிழக்கின் ஒரு மூலையிலிருந்து நான் அதை அணுகும் விதம், என் பார்வை சர்வதேசத்தன்மை வாய்ந்ததாக இருக்க முடியுமா? அடிப்படைவாதம் வெறும் இஸ்லாமிய அடையாள குறிப்புக்கே பயன்படுத்தப்படுகிறது.

பதில்: Clash of Fundamentalism நான் குறுகிய காலத்தில் எழுதி வெளியிட்டது. நடப்பு உலகில் அதிகம் உலவும் சொல்லாடல் அடிப்படை வாதம். 9/11க்கு பிறகு என் சிந்தனை முழுவதும் இது தொடர்பாகவே இருந்தது. ஏன் இஸ்லாம் மற்ற செமிட்டிக் மதங்களைப் போன்று வளரவில்லை? ஐரோப்பிய வீதிகளில் நான் உலவும் போது இந்தக் கேள்வி என்னிடமிருந்து எழுந்து அப்படியே காற்றில் கலப்பது உண்டு. நான் இதற்கான வேர்களை காணும் முயற்சியாக ஐரோப்பாவில் ஐந்து நூற்றாண்டுகளாக இஸ்லாமிய ஆட்சி நடைபெற்ற ஸ்பெயினுக்கு பயணம் செய்தேன். சில மாதங்கள் அங்கு தங்கியிருந்து அதன் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றேன். அதன் பல்வேறு முனைகளில் வரலாற்று சிதிலங்கள் தென்பட்டன. அந்த யுகம் இஸ்லாமிய வரலாற்றின் பவளம் என்று யூதர்களாலே அழைக்கப்பட்டது. இஸ்லாமிய வரலாற்றின் புகழ்பெற்ற தத்துவவாதிகள் இங்கு தான் உருவானார்கள். கட்டிடக் கலையை ஓர் அறிவியலாக வளர்த்தெடுத்த பெருமை ஸ்பெயின் யுக முஸ்லிம்களுக்கு உண்டு. ஆனால் இறுதிக் கட்டத்தில் அதன் ஆட்சியாளர்கள் இதை முன்னெடுக்கத் தவறிவிட்டார்கள். விளைவு போர்ச்சு கீசியர்களாலும், டச்சுக்காரர்களாலும் அதிகார பறிகொடுத்தலுக்கு ஆளானார்கள். சிறிது காலத்திற்கு பிறகு முஸ்லிம்களும் யூதர்களும் அங்கிருந்து விரட்டப்பட்டனர். தேய்ந்துபோன வரலாற்று எச்சங்களை நான் ஸ்பெயினை சுற்றி வந்தபோது அறிய முடிந்தது.

இன்னொரு முக்கியக் காரணம் துருக்கிய உதுமானிய பேரரசு. 13ஆம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு தொடக்கம் வரை மத்திய கிழக்கு முழுவதையும் ஆட்சி செய்த அவர்களால் அதை ஒரு நவீன அரசாக நகர்த்த முடிய வில்லை. இதில் மத புரோகிதர்களின் பங்கு முக்கியமானது. ஐரோப்பாவில் அச்சு இயந்திரங்கள் அறிமுகமாகி அச்சகங்கள் உருவான சமயம். அப்போது துருக்கியில் ஒரு சீர்திருத்தவாத சுல்தான் ஆட்சிக்கு வந்தார். அவர் ஐரோப்பாவை போன்று இங்கும் அச்சு இயந்திரங்கள் மூலம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட வேண்டும் என்று சொன்னபோது அதை மத புரோகிதர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.

“உங்களுக்குத் தெரியுமா? இந்த இயந்திரத்தின் வழி புத்தகம் அச்சடித்து தான் ஐரோப்பாவில் மார்டின் லூதர் கிங் கிறிஸ்தவத்தை எதிர்த்தார். அது மாதிரி நீங்களும் ஆக வேண்டுமா?” உடனே சுல்தான் அதை திரும்பப் பெற்றார். இது மாதிரி பல நிகழ்வுகள் நடைபெற்றன. ஷவரில் குளிப்பது கூட ஹராம், மக்ரூஹ் போன்ற பல பத்வாக்கள் வழங்கப்பட்டன. கடிகாரத்தை கூட அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சமீப காலங்கள் வரை லௌகீக உலகின் வளர்ச்சிப் போக்குகள் மீது இஸ்லாமிய உலகம் அவநம்பிக்கையே கொண்டிருந்தது. உயிரியல் இன்று அரபுலகின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் பாடமாக இல்லை. இவை எல்லாம் சின்ன உதாரணங்கள். நான் ஸ்பெயினிலிருந்து திரும்பி வந்து அந்த அனுபவ பதிவுகளை நாவலாக எழுதினேன். எனக்கு வரலாற்று நூலைவிட கதைக்குள் கதை அனுபவமே மேலானதாக பட்டது. அது தான் Shadows of Pomegranate Tree என்ற நாவல்.

அடிப்படைவாதம் என்ற சொல்லாடல் மதத்தை மட்டும் குறிப்பதல்ல. அது லௌகீக உலகின் எல்லாவித போக்குகளையும் குறிப்பது. ஒன்றின் அடிப்படைகளை உள்வாங்கி அதன் நுணிமங்கள் மீது தொங்கிக் கொண்டிருப்பது. இதன்வழி வரலாற்றின் வளர்ச்சி போக்குகள் மீது எவ்வித நம்பிக்கைகள் அற்று இருப்பது. மார்க்சியர்களிலும் இத்தகைய சிந்தனவாதிகள் உண்டு. கிறிஸ்தவத்தை பொறுத்தவரை குறிப்பிட்ட காலம் வரை அது, இத்தகைய அடிப்படைவாத நிலையிலேயே இருந்தது. தென்னாப்பிரிக்கா கருக்கலைப்பு மருத்துவமனைகள் மீது நடந்த தாக்குதல்கள், பார்த்தலோமிய தின படுகொலைகள், நீதியின் தோமிய கோட்பாடு ஆகியவற்றை குறிப்பிடலாம். அமெரிக்காவில் கூட தற்காலத்தில் நீங்கள் குறிப்பிட்ட அளவு கிறிஸ்தவ அடிப்படைவாதிகளைப் பார்க்க முடியும். ஆனால் புரட்டஸ்டண்ட் இயக்கம் கிறிஸ்தவத்தை வெகுவாக மாற்றி விட்டது. அது லௌகீக உலகின் இயல்பான வளர்ச்சி போக்குகள் மீது தன்னை கரைத்துக் கொண்டதாகவே நான் கருது கிறேன். ஆனால் இஸ்லாமிய உலகம் இன்னும் வெகுதூரம் விலகி இருக்கிறது. இதன் நீட்சியில் 19ம் நூற்றாண்டில் சவூதியில் அப்துல் வஹ்ஹாப் தலைமையில் உருவான இயக்கம் இன்னும் அடிப்படை வாதத்தை நிலைக்கச் செய்தது. அதுதான் இன்றைய எல்லா பயங்கரவாத இயக்கத்திற்கும் கருத்தியல் நேர் கோடு. மத்தியகிழக்கின் அனுபவத்திலிருந்து நான் இதை தான் உணர் கிறேன். அரசு - மதம் என்ற இரு நிறுவனங்கள் வேறாகும் போதே இதிலிருந்து விடுபட முடியும். அது வளைகுடாவை பொறுத்தவரை சாத்தியமாகுமா? கேள்வியும் பதிலும் எனக்குள் சுழன்று கொண்டே இருக்கிறது. நான் ஸ்பெயின் பயணத்தை முடித்து Pomegranate Tree நாவல் வெளிவந்த சமயத்தில் எட்வர்த் செய்த் என்னிடத்தில் சொன்னார். “அலி நீங்கள் ஸ்பெயி னோடு நிறுத்த முடியாது. இன்னும் எல்லாவற்றிலும் தேடிக் கொள்ளுங்கள். அதிலிருந்து கிடைப்பவையே உங்கள் அனுபவம்”. அவர் அன்று சொன்னது இன்றும் எனக்கு சரியாகப் படுகிறது.

கேள்வி: மத்திய கிழக்கு குறித்து அதிகம் சிந்தித்தவர்களில் எட்வர்ட் செய்த் முக்கியமானவர். அவரின் நினைவு கருத்தரங்க அனுபவம் உங்களுக்கு எம்மாதிரியாக இருந்தது? அவரின் சிந்தனை போக்குகள் உங்கள் எழுத்துக்கள் சிலவற்றை கடந்து சென்றிருப்பதை நான் கவனித்திருக்கிறேன். தாரிக் அலி சில தருணங்களில் எட்வர்ட் செய்த்தின் Alter ego.

பதில்: நான் எட்வர்ட் செய்த்தை முதன் முதலாக சந்தித்தது 1972ல் நியூயார்க்கில் ஒரு கருத்தரங்கில். அவருடனான முதல் சந்திப்பு என் சிந்தனை போக்குகள் மீதான அனுபவப் பதிவாக இருந்தது. பாலஸ்தீனில் பிறந்த ஓர் அகதியாக எகிப்து சென்றவர் அவர். அதனாலேயே அவரின் சிந்தனை ஒருங்கிணைவு மத்திய கிழக்கு சார்ந்து இருந்தது. பின் காலனீய கோட்பாட்டின் துவக்கப் புள்ளியும் அவரே. அவரின் Orientalism என்னை வலுவாக தாக்கிய நூல்களில் ஒன்று. நானும் கிழக்கின் சூழலோடு புலம் பெயர்ந்தவன் என்பதால் அது சாத்தியமானது. விமர்சகர்கள் மத்தியில் அந்த நூல் சலனத்தை ஏற்படுத்தியது. வரலாற்றாசிரியர் எர்னெஸ்ட் கெல்னர் ஓரியண்டலிசம் செய்த்தின் முரண்களில் ஒன்று. அதில் மேற்கு மத்திய கிழக்கை இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தியது என்கிறார். ஆனால் மத்திய கிழக்கின் உதுமானிய பேரரசு பதினெட்டாம் நூற்றாண்டு வரை மேற்குலகிற்கு பெரும் சவாலாகவே இருந்தது. அதன் பிறகே அது பிரிட்டனின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. சிரிய தத்துவவாதியான சாதிக் ஜலால் அல் ஆஸம் இந்நூல் செய்த்தின் சறுக்கல்களில் ஒன்று என்றார். வேறொரு அர்த்தத்தில் நான் இதை சாதகமாகவே எடுத்துக் கொள்கிறேன். கலாச்சாரத் தளத்தில் மேற்கு, கிழக்கை குறிப்பாக மத்திய கிழக்கின் மீது எவ்வாறு தாக்குதல் நிகழ்த்தியது? அதன் மறுபிரதிபலிப்பு என்ன? தொடர்ச்சிகள் சார்ந்து இதை நம்மால் சிந்திக்க முடியும். உடை அரசியல் இதனோடு இயைந்திருக்கிறது.

நீங்கள் எகிப்திலிருந்து இதனைத் தொடங்க முடியும். செய்த்தின் மற்றொரு முக்கிய நூலாக நான் கருதுவது “Question of Palestine”. பெரும் துயரின் வெளிப்பாடாக அது ஓடிக்கொண்டிருக்கும். பாலஸ்தீன் தற்கால உலகின் அறவியல் காரணி. இது தொழில் சம்பந்தபட்டதோ அல்லது பண்டமாற்றோ அல்ல. மாறாக பாலஸ்தீனியர்கள் மீண்டும் தங்கள் நிலத்தை அடைந்து அதில் நிலைக்க வேண்டும் என்பதன் ஆன்மாவின் தொடர்ச்சி. அரேபிய கலாச்சாரத்தை பற்றிய மேற்கின் வறட்டுப் பார்வை குறித்து செய்த் விமர்சித்தார். அமெரிக்காவும், ஐரோப்பாவும் அரபுலகை எண்ணெய் விற்பனையாளர்களாக, நிலையான பயங்கரவாதிகளாக பார்க்கிறது. அதற்கு மேல் அவற்றுக்கான சிந்தனாகளம் எதுவுமில்லை. ஆனால் செய்த் பாலஸ்தீன் போராளியாக விரும்பினார். பின்னர் அதை யூத-அரபு என்பதாக மாற்றிக் கொண்டார். பாலஸ்தீன் தேசிய கவுன்சிலில் உறுப்பினராக இருந்த செய்த் குவைத் மீதான ஆக்கிரமிப்பில் பி.எல்.ஓ. சதாம் உசேனை ஆதரித்த காரணத்தால் அதிலிருந்து விலகினார். இருநாட்டுக் கொள்கைத் தீர்மானத்தை அடிப்படையாக வைத்து வாக்களித் திருக்கிறார். “என் வாழ்நாளின் பெரும்பகுதியாக கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக என் உழைப்பு முழுவதும் பாலஸ்தீன் / இஸ்ரேல் சார்ந்தே இருக்கின்றது. அதே சமயத்தில் என் கவனம் யூதமக்களின் எதார்த்தத்தை, வாழ்நிலையை வெளிக் கொணர்வதிலும் இருந்தது. நான் யூத / அரபு மனித இலக்கை நோக்கிய செயல்பாட்டின் கணங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்” இந்த விஷயங்கள் குறித்து நான் அவரிடம் நிறையவே விவாதிக்கிறேன். அரபுலகம் குறிப்பாக அடிப்படைவாத உலகம் அவரை அதிகம் புரிந்துக்கொள்ள முயலாதது குறித்து அவருக்கு மனவருத்தம் இருந்தது. செப்டம்பர் 25, 2003ல் அவரின் மரணச் செய்தி என்னை வந்து எட்டிய போது நான் லண்டனில் இருந்தேன். அக்கணத்தில் வெகுவாகவே அதிர்ந்து போனேன். அப்போது கப்ரேல் மிர்சலின் கவிதை ஒன்றை படித்துக் கொண்டிருந்தேன். அதுவும் மரணத்தைப் பற்றியதுதான். அந்தச் சந்திப்பின் கணம் என்னை அப்படியே கலைத்துப் போட்டது. என்னுடைய எழுத்துக்களில் எட்வர்ட் செய்த் சில சமயங்களில் அப்படியே நகர்வார். Alter ego என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். எட்வர்ட் செய்த் குறித்த மேற்சொன்ன விஷயங்கள் நான் பல்கலையில் ஆற்றிய உரையிலும் குறிப்பிட்டிருக்கிறேன். அதை நீங்கள் (பீர்முஹம் மது) கவனித்திருக்கலாம்.

கேள்வி: இஸ்லாம் பற்றிய விமர்சனங் களில் “பெண்” முக்கியமானது. ஒருவேளை இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற நிறுவலே இதன் மூலம் தான் உருவானதென்ற அவநம்பிக்கை என்னிடத்தில் இருக்கிறது. பெண்ணிய ஒடுக்குமுறை உலகம் முழுவதும் சமூக மட்டத்தில் பரவலான நிலையில் உங்களுக்கு எம்மாதிரியான பிரக்ஞை இருக்கிறது?

பதில்: உலகம் முழுவதுமான பெண்ணிய ஒடுக்குமுறை பரவலான செயல்பாடாக மாறிவிட்டது. கருணைக் கொலை (Mercy killing) உலகம் முழுவதுமே ஒரு வாழ்க்கை முறையியலாக மாறிவிட்ட சூழலில் அது பெண்ணை பிரதிநிதித்துவப் படுத்துகிறது. மனிதம் என்ற நிலையில் சமூக, பொருளாதார வளர்ச்சிப் போக்கில் பெண் முன்னால் நகரக் கூடியவள் தான். மார்க்சிய வரலாற்றுப் போக்கில் அநாகரீக கட்டத்திலிருந்து நாகரீக நிலைக்கு சமூகம் மாறக் கூடிய நிலையில் கலாச்சார தகவமைவுகளும் மாறுகின்றன. இதில் மனிதனின் முழு உருவமைப்புமே மாறுகிறது. பெண் இந்த இடத்தில் தான் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். நீங்கள் எகிப்தின் தொன்மக் கதைகளை படிக்கும் போது உங்களுக்குத் தெரியும். அதில் ஒரு பெண் கணவனின் உடல் மீது ஆதிக்கம் செய்வாள். அதிகாரமே அன்று சார்பியல் விஷயமாக இருந்தது. நாகரீக கட்டத்துக்கு சமூகம் மாறிய போது தான் பெண் இரண்டாம் இடத்திற்கு வருகிறாள். அன்றைய அரபுச் சூழல் முழுவதுமே இனக்குழு வாழ்க்கை நிலைக்கு உட்பட்டிருந்தது. இனக் குழு வாழ்நிலையில் சமூகமானது ஒத்தி வைத்தலுக்குட்படாதது. அதுக்கு எல்லாமே உடனடி செயல்கள் தான். இஸ்லாம் துவக்கத்தின் அரபுச் சூழலானது காட்டு மிராண்டி, அநாகரீகக் கட்டத்திலிருந்து நாகரீக கட்டத்திற்கு மாறிய, மாறிக் கொண்டிருந்த கட்டம். அச்சமூகத்தில் தாராள பாலுறவு (Free sex) நிலவில் இருந்தது. அதே எச்சங்கள் தான் இன்று அரபுலகில் எதிரொலிக்கின்றன. இதன் தொடர்ச்சியில் இஸ்லாம் ஒரு மதமாக உருவெடுத்த நிலையில் சமூக கட்டமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்று விரும்பியது. ஆனால் நாகரீக சமூகத்தின் இயல்பான குணாதிசயங்களுக்குள் அது விழுந்து விட்ட படியால் பெண் விஷயத்தில் மற்ற செமிடிக் ஆன்மாக்களைப் போன்றதாக மாறிவிட்டது. நான் இதில் எல்லா சமூகங்களையும் ஒரே அளவுகோலாகத் தான் பார்க்கிறேன். ஒரே வித்தியாசம் மற்றவை நிறுவனத் தன்மையை மீறிவிட்டன. இஸ்லாம் நிறுவனமாக இருக்கிறது. மனித இனத்தில் ஆண்-பெண் இருவருக்குமே உரிமை, மதிப்பு., வெகுகுணம், பாலியல் அதீதம் போன்றவைகள் இருக்கின்றன. இன்றைய உலகில் இவை மீறப்படும் போது தான் மோதல்கள் உருவாகின்றன. பிரதிகளிலிருந்து அதற்கான நியாயப் பாட்டை உருவாக்கல் என்பது ஒரு விஷயம். மற்றது அது சமூக எதார்த்தமாதல். நான் இஸ்லாம் பெண்ணுக்கு உரிமை அளித்திருக்கிறது என்ற மதவாதிகளின் தர்க்கத்திற்குள் முழுமையாக நுழைய விரும்பவில்லை. ஆனால் அவர்கள் மதிப்பு, வெகுகுணம் என்பதை உரிமையாகப் புரிந்து கொள்கிறார்கள்.

கதீஜாவைப் போன்ற சுய - பொருளாதார தளத்திற்குள் நின்ற பெண்ணை இஸ்லாமிய வரலாற்றில் இதுவரையிலும் பார்க்க முடியவில்லை. இஸ்லாமிய அடிப்படைகளின் படி நரகத்தில் நீங்கள் அதிகம் பெண்களையே பார்க்க முடியும். படுக்கை அறை அரசியல் கூட சார்பு நிலையிலேயே இருக்கிறது. தர்ப் என்ற அரபிச் சொல் பற்றிய விவாதங்கள் பரவலாக தற்போது நடந்து வருகின்றன. அது beating என்பதாகவே இருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளில் மனைவியை அடிக்கும் கணவர்கள் தங்களுக்கான போர்வையாக இதைத் தான் எடுத்துக் கொள்கிறார்கள். ஆப்கானில் தலிபான் ஆட்சியின் போது அது ஒரு சட்ட நடைமுறையாகவே இருந்தது. சமீபத்தில் ஈரானின் நீதிமன்றத்தில் ஒரு முஸ்லிம் பெண் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தாள். அவள் நீதிபதியிடம் என் கணவரை வாரத்தில் ஒருமுறை என்னை அடிக்க உத்தரவிடுங்கள் என்றார். வளைகுடா நாடுகளில் பெண்ணுக்கான வாக்குரிமை நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வந்தது. பின்னர் தான் ஒருசில நாடுகளில் அது அளிக்கப் பட்டது. குவைத்தில் பெண் வாக்குரிமை நீண்ட போராட்டத்திற்குப் பிறகே நடைமுறைக்கு வந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஒரு பெண் பிரதிநிதி கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. இஸ்லாமிய அரசியல் உலகிலும் பெண் பங்களிப்பு குறைவாக இருக்கிறது. கலகங்களில் இனக்குழு மோதல்களில் பெண்கள் உடல் ரீதியான வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படுவது அநாகரீக காலம் தொட்டே நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆப்கானிலும், சூடானிலும் நமக்கு நிறையப் படிப்பினைகள் இருக்கின்றன. கடந்த வருடம் அமெரிக்காவின் நியூயார்க்கில் பெண்ணியவாதியான ஆமினா வதூத் தலைமையில் தொழுகை நடந்த போது அவர்கள் மீதான இஸ்லாமிஸ்ட்களின் விமர்சனம் பாலியல் வன்முறைக்கு ஒப்பானதாகும். அடையாளச் சடங்காக இது நடந்தாலும் நடப்பு உலகின் அனார்கிச நடவடிக்கையாகவே நான் இதைப் பார்க்கிறேன். Dress Code இஸ்லாமிய பெண்ணிய உலகிற்கு இன்னொரு சவாலாக இருந்து கொண்டிருக்கிறது. அதன் மீதான மரபார்ந்த விமர்சனங்கள் மீது எனக்கு நம்பிக்கையில்லை. பின் காலனீய உலகில் உலகமயமாக் கலானது பெண்ணுக்கான ஆடையை Virtual மதிப்பீட்டுக்குள்ளாக்குகிறது. நீங்கள் அதற்குள்ளாகவே நிற்க வேண்டுமென்ற நிர்பந்தச் சூழலுக்கு ஆட்படுகிறீர்கள். மேற்கிலிருந்து வரும் இந்த தாக்குதல் மத்திய கிழக்குக்கு மாறுதலாகி அது இஸ்லாமிய உலகம் முழுவதுக்குமானதாக மாறிவிட்டது. Branded பனியன்கள் மீது தான் இன்று பர்தா. ஈரானில் கூட நான் இதையே காண்கிறேன். ஆப்கானில் தலிபான் ஆட்சியின் போது பாலியல் புகாருக்கு ஆளான பெண் உடல் முழுவதும் பர்தாவால் போர்த்தப் பட்ட நிலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுவதை ஒரு வேளை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். (இக்காட்சி இணைய தளத்தில் காணக் கிடைக்கிறது - பீர் முஹம்மது) இந்த இரண்டிற்குமான கூர்மையான வித்தியாசத்தை நீங்கள் பார்க்க வேண்டும். முந்தையது பின் காலனீயம் சம்பந்தப்பட்டது. மற்றது அடிப்படைவாத அதிகாரத்தனம்.

கேள்வி: மத்திய கிழக்கில் இன்று இஸ்ரேல் - பாலஸ்தீன் எதிரிணை ஒரு பெரும் துன்பியல் நிகழ்வாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இஸ்ரேலின் பேராதிக்க மனோபாவம் பிராந்தியத்தில் பெரும் உயிர் பலிகளுக்கு காரணமாவது ஒரு வேளை இதன் தொடர்ச்சியாகலாம். சில பின் நவீனத்துவ அறிவு ஜீவிகள் கூட இதில் இஸ்ரேல் சார்பு நிலைப்பாட்டையே மேற்கொண்டனர். ஓர் இடது சாரியாக மேற்கொள்ளும் நிலைபாடு. . .

பதில்: இஸ்ரேல் இன்றைய உலகில் ஒரு பெரும் பிகராக முன்னிலைப் படுத்தப்படுகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீன் என்பதில் நான் எதிரிணைகளின் வழி நகர்தலே உலகம். பாலஸ்தீனை பொறுத்தவரை அது பெரும் துயரம். நான் எழுபதுகளில் அரபு - இஸ்ரேல் போருக்கு பிந்தைய காலகட்டத்தில் பாலஸ்தீனுக்கு பயணம் செய்திருக்கிறேன். அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டிருக்கிறேன். உலகில் மிகுதியாக அகதியாக வாழ்க்கைக்கு உள்ளானவர்கள் பாலஸ்தீனியர்கள் சுய - இருப்பிட மற்றுப் போதல் என்பது உலக வரலாற்றை பொறுத்தவரை கிரேக்க புராணிக காலம் தொட்டே நடைமுறை நிகழ்வு. யூத இனத்தின் தோற்றமே மத்திய கிழக்கு என்பதில் லௌகீக சமூகம் எந்த சந்தேகமும் கொள்ள அவசியமில்லை. அவர்களின் தோற்றம் பற்றிய தொன்மங்கள் காகிதங்களில் நிறைந்திருக்கின்றன. அவர்களை ஆண்ட சிற்றரசுகள், அவர்களின் அரசமைப்பு முறை போன்றவற்றை அறிவுஜீவி சமூகம் இன்னமும் நோக்குகிறது. மேற்கு என்றைக்குமே ஒரு தனி அடுக்காக கால இயந்திரத்தில் அசைந்து வந்திருக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்தே ஐரோப் பாவில் யூத - யூதரல்லாத இனங்களின் மோதல் துவங்கி விட்டது. கரீபியன் பிரதேசத்திலிருந்து தொடங்கி ஸெகான் வரை இது பரவியது. யூதர்களுக்கே இயல்பாக உள்ள குணாதிசயங்கள், அதிலிருந்து வெளிப்பட்ட அவர்களின் சமூக உறவு முறைகள், கலாச்சார தர்க்கவியல் போன்றவை மற்ற இனங்களுக்கு ஒரு சவாலாக விளங்கின. ஹிட்லரின் சகாப்தம் இதன் அரசியலை மேலும் முடக்க மாக்கியது. ஜெர்மனியில் குறுகிய காலத்தில் ஆட்சிக்கு வந்த ஹிட்லர் தன் கருத்தியல் மூளைக்கான தரவுகளை நீட்சேயிடமிருந்து எடுத்துக் கொண்டார். நீட்சேயின் அதிகார விருப்புறுதி, பேரியல் அறிவு, பேராண்மை ஒழுக்கம் ஆகியவை ஹிட்லரின் நாசி வடிவமைப்புக்கு பெரிதும் உதவின. இனத்தூய்மை என்ற கோட்பாடு ஹிட்லருக்கு மேற்கண்ட விஷயத்திலிருந்து தான் துவக்கம் பெற்றது. அதன் பிறகு ஹிட்லர் ஜிப்சிகள் மற்றும் யூதர்களை இனச்சுத்திகரிப்பு செய்து அவர்களை அழித்தொழித்தது. உலகம் முழுவதுமே யூதர்கள் மீதான கரிசன பார்வைக்கு காரணமாகி விட்டது. ஹிட்லரின் வதை முகாமுக்கு பயந்து தப்பியோடிய யூதப் பெண்ணான ஆண் பிராங்கின் டைரிக் குறிப்பை நீங்கள் படித்தால் அறியலாம். சியோனிச எழுச்சிக்கு பிறகு வரலாறு வெகுவாகவே மாறிவிட்டது. இன அரசியல், வரலாற்றில் சார்பியல் அளவையுடையதால் (Relative Quantity) இன்று பாலஸ்தீன் விடுதலைக்கான களமாகிறது. இன்று அதன் நிலப்பகுதியில் 70% இஸ்ரேல் வசம் இருக்கிறது. இரு சுதந்திர அரசு என்ற தீர்வும் ஏற்றுக் கொள்ளப்படாமல் இரு தரப்புமே போரின் உச்சக் கட்டத்தில் இருக்கின்றன.

மேற்குலகம் தங்கள் வானவில் புரட்சிக்கான ஆர்வத்திற்கு தடையேற்பட்ட பிறகு அது அடைந்தது வானவில்லின் வெறும் பச்சை நிறம் மட்டுமே. பாலஸ்தீன் அதிகார கவுன்சில் தேர்தலில் ஹமாஸ் இயக்கம் பெரும் வெற்றி பெற்றது பாலஸ்தீனில் தவிர்க்க முடியா கட்டத்தில் எழுகிற அடிப்படைவாத எழுச்சி எனலாம். 9/11 நிகழ்வுக்கு பிறகு அமெரிக்காவின் Remapping கொள்கை இஸ்லாமிய உலகின் மறுகோட்பாட்டு உயிராக்கம், செப்டம்பர் நிகழ்வின் கதாநாயகர்களான ஜாராவும், முகமது அட்டாவும் லெபனானின் கல்லூரி மாணவர்கள், பொறியியல் பட்டதாரிகள். அவர்கள் மத்திய தரவர்க்கத்தின் எல்லாவித நடத்தைகளையும் அதன் இயல்புகளையும் கொண்டவர்கள். இஸ்லாமின் உயிரோட்டமுள்ள எந்த பிடிப்பும் அவர்களிடத்தில் இல்லை. இவர்களில் ஜாரா தன் காதலியுடன் நியூயார்க் கபேகளில் ஜமாய்த்தவர் தான். இவ்விதமான எல்லைகளுக்கு வெளியே அவர்களைத் தூண்டிய காரணி எது? விடை மிக சமீபத்திலேயே இருக்கிறது. அது மத்திய கிழக்கிற்கும், அமெரிக்காவுக்குமான நேரடி உறவைச் சார்ந்தது. சோவியத் யூனியனுக்கு எதிராக ஆப்கானில் முஜாஹிதீன்களை உற்பத்தி செய்த அமெரிக்கா அதற்கான பெட்ரோ - டாலரை கொடுத்து விட்டது. இஸ்ரேல் அதன் ஒரு உபாயமே. லெபனான் மீதான தாக்குதல்கள் Remappingன் தொடர்ச்சி. ஐம்பதுகள் காலத்தை நாம் நினைவுப்படுத்தும் போது பாக்தாத், சிரிய, கெய்ரோ வானொலி நிலையங்கள்அரபுலகின் எழுச்சிக்கான பிரச்சார ஊடகங்களாக, அரபுலகின் ஒருங்கிணைவுக்கான தூண்டுகோல்களாக இருந்தன. ஆனால் அரபு - இஸ்ரேலிய போருக்குப் பிறகு 17அரபுலகம் வளைகுடாவாக மாறிவிட்டது. அரபுலகின் இலக்கே அங்குள்ள அறிவு ஜீவிகளையும், ஜனநாயகவாதிகளையும் ஒழிப்பது தான். சிரியாவின் ரபீக் ஹரிரி இதற்கு உதாரணம். இராணுவ வீரர்கள் சிறை பிடிக்கப்பட்டதை தொடர்ந்த லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல், இஸ்ரேலின் பாலஸ்தீன் அரசியல் கைதிகள் 9000 பேருக்கு பதிலீடாக இல்லை. இதுமாதிரியான தெடர்ச்சியான நடவடிக்கைகள் அதன் ராணுவ மேலாதிக்க மனோபாவத்தின் விழிப்பு நிலை.

பின்நவீனத்துவ அறிவுஜீவி களான பூக்கோ, லியோதர்த், லாகன் மற்றும் சார்த்ர் (இருத்தலியவாதி) போன்றவர்கள் இஸ்ரேல் சார்பு சிந்தனை கொண்டவர்கள். இவர்களில் லியோதர்த் பின்நவீனத்துவ சிந்தனை போக்கை குறியிட்டு சென்றவர். அவரின் இறுதி காலத்திற்கு முன்பாக 1990ல் நானும் எட்வர்ட் செய்த்தும் கலிபோர்னியாவில் வைத்து அவரிடம் இது பற்றி விரிவாகவே விவாதித்து கொண்டோம். இனங்களின் அதிகாரம் நிலம் மீதான அதிகாரமாக மாறுதலடைவதையும், அதன் வழி அரசு உருவாவது குறித்தாக இருந்தது எங்கள் விவாதப் புள்ளி. ஹிட்லரின் பெரும் கொடூரங்களுக்கு பலியான யூத ஆன்மாக்களை குறித்த அனுதாபம் உலகம் முழுவதும் எல்லா அறிவுஜீவிகளுக்கும் இருந்தது. ஆனால் அது இன்னொரு சூழலில் ஹிட்லரை மறுஉயிர்ப்பு செய்வது குறித்து தான் பிரச்சினையே. பூக்கோவை பொறுத்தவரை தன் இறுதிகாலத்தில் மனப்பிறழ்வுக்கு ஆளானவர். அவருடைய சிந்தனைகள் என்னை மிகுதியாகப் பாதித்ததில்லை. ழீன் போதிலாரின் “Forget Foucault” என்பதே தற்போதைய ஞாபகம். பிரடரிக்ஜேம்சன் இது பற்றி “New left Review”ல் விரிவாகவே எழுதியிருக்கிறார்.

கேள்வி: இஸ்லாமிய உலகில் அல்லது மத்திய கிழக்கில் மதம் என்ற நிறுவனம் அரசு என்பதிலிருந்து பிரிவது அவற்றின் சுதந்திர சூழலுக்கு வழிகோலுமா அல்லது அவை மேற்குலகம் மீதான அனுசரணை தன்மை கொள்ள வேண்டுமா? இது பற்றி நீங்கள் கேம்பிரிட்ஜ் பல்கலையில் ஆற்றிய உரையின் வீடியோ தொகுப்பை நான் இணைய தளம் மூலம் கண்டிருக்கிறேன்.

பதில்: இது இரண்டின் கலவையாக இருக்கலாம். மேற்கு, மத்திய கிழக்கு இரண்டுமே பேரரசுகள். விமர்சன அணுகுமுறையில் ஒன்று மற்றொன்றை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் வேறுபட்ட வழிகளில் செயல் திட்டங்களை வகுக்கும் போது இலக்கை அடையலாம். இது சமூக, புவி - பொருளாதார அரசியலை குறிக்கும். ஆனால் அதற்கு சாத்தியமான சூழல் அருகிவிட்டது. ஐம்பதுகளின் பிற்பகுதியில் அரபுலகில் சிரியா, எகிப்து, ஈராக் ஆகியவை இணைந்த வானொலி கூட்டணி (Radio aliance) காணப்பட்டது. அரபு தேசிய உருவாக்கத்திற்கு பெரிதும் காரணமான அவற்றால் அதை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. 1958ல் ஈராக் ஆட்சியாளரான அப்துல் கெரிம் காசிம் அரபு தேசிய புரட்சிக்கான கருத்துருவத்தை வளர்த்தார். ஆனால் அரபு இஸ்ரேலிய போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. மத்திய கிழக்கைப் பொறுத்தவரை அடுத்த பத்து அல்லது இருபது ஆண்டுகளில் அதனுடைய தாண்டல் என்ன என்பதை நாம் கணக்கிட முடியாது. அதன் உள்முரண்பாடுகள் அதற்குள்ளாகவே இருக்கின்றன. ஈராக் விஷயத்திலும் நாம் அதையே பார்க்க முடிந்தது. ஐரோப்பியர்கள் ஈராக் மீதான அமெரிக்கப் போரை எதிர்த்தார்கள். அதே நேரத்தில் அந்த எதிர்ப்புணர்வு சோவியத் யூனியனின் தகர்வு சமயத்தில் அமெரிக்கா மீது வெளிப்படவில்லை. வியட்நாம் போரை பிரான்ஸ் கடுமையாக எதிர்த்தது. அதே நேரத்தில் எந்த ஐரோப்பிய நாடும் வியட்நாம் போரில் பங்கு கொள்ளவில்லை. ஐரோப்பாவைப் போன்ற ஒரு கூட்டமைவுக்குள் மத்திய கிழக்கு வரும் நிலையில் அதற்கான விலையை அது அடையும். அந்தோணிய கிராம்சி சொன்னது போன்று “Pessimism of the intellect and optimism of the will” என்பதாகவே நான் நினைத்துக் கொள்கிறேன்.

Mr.Tariq, thank you very much for your informative reply and sharing this account of your great intellectual journey.

Mohammed, Thank you very much for your E-interview and your best impression from south corner of India. Thank you.

No comments: