இந்திய அறிவுத்துறை சமூகம் மேற்கத்திய அறிவுத்துறை மற்றும் அரசியல் வட்டாரம் போன்று நிறைய ஆளுமைகளை உருவாக்கம் செய்திருக்கிறது. அந்த ஆளுமைகளின் சிந்தனா முறையும் இந்திய சமூக அமைப்பின் சாரம் குறித்தே முன்னிலையாக இருக்கிறது. காயத்ரி ஸ்பிவக், வந்தனா சிவா, இஜாஸ் அஹ்மத், ஹோமி பாபா, டி.டி.கோசாம்பி, ரணஜித் குஹா போன்றோர் வரிசையில் இக்பால் அஹ்மத் முக்கியமானவர். இக்பாலின் பூர்வீகம் பீகார் மாநிலம். பீகாரின் இர்க்கி என்ற கிராமத்தில் 1933 ஆம் ஆண்டு பிறந்தார் இக்பால் அஹ்மத். சுதந்திரத்திற்கு முந்தைய கட்டத்தில் பீகார் மற்றும் வங்காள மாகாணங்கள் மதரீதியான பதட்ட பிரதேசங்களாக இருந்தன. பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தின் காலனி விரிவாக்க செயல்தந்திர கூறுகளாக அந்த பதட்டமும், இனங்களுக்கிடையேயான கசப்புணர்வும் இருந்தன. இதன் தொடர்ச்சியில் 1947 இந்திய சுதந்திர காலகட்ட பிரிவினையின் போது இக்பால் அஹ்மத் குடும்பம் தவிர்க்க முடியாமல் பாகிஸ்தானின் லாகூருக்கு இடம்பெயர நேர்ந்தது. இக்பால் அஹ்மதின் இளவயதில் அவரின் தந்தை நிலத்தகராறு காரணமாக கொல்லப்பட்டார். லாகூருக்கு இடம்பெயர்ந்த பிறகு அவரின் பள்ளிப்படிப்பு மற்றும் கல்லூரி படிப்பு அங்கு நிகழ்ந்தது. பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு படித்த இக்பால் அஹ்மத் மேற்படிப்பிற்காக அமெரிக்காவின் கலிபோர்னியா சென்றார்.அங்குள்ள பல்கலைகழகம் ஒன்றில் அரசியல் அறிவியல் மற்றும் மத்தியகிழக்கு விவகாரங்களில் பட்டமேற்படிப்பு பயின்றார். பின்னர் அதே பிரிவில் ஆய்வுபட்டமும் பெற்றார். அது அறுபதுகள் கட்டமாக இருந்தது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இடையேயான விவகாரம் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் உச்சகட்டமாக இருந்த தருணம் அது. இக்பால் அஹ்மத் வட ஆப்ரிக்கா சென்று அங்கு அல்ஜீரிய விடுதலை இயக்கத்தில் இணைந்து தீவிரமாக செயல்பட்டார்.அங்கு பிரான்ஸ் பனான் உடன் இணைந்து செயல்பட்டார். பின்னர் அல்ஜீரியாவின் விடுதலைக்கு பிறகு அங்கு அமைந்த முதல் சுதந்திர அரசில் பணியாற்றுமாறு இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதை மறுத்த இக்பால் அஹ்மத் தான் ஒரு சுதந்திர அறிவுஜீவியாகவே இருக்க விரும்புவதாக கூறினார். அதன் பிறகு அமெரிக்கா சென்ற அவர் சிகாகோ பல்கலைகழகத்தில் பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தார். அக்காலகட்டத்தில் அவர் அமெரிக்காவின் வியட்நாம் மற்றும் கம்போடியா நிலைபாட்டுக்கு எதிராக கடும் எதிர்வினையாற்றினார். மேற்கத்திய அறிவுத்துறை வட்டாரங்களில் இவர் மட்டுமே இந்த விவகாரத்தில் முன்னோடி. 1971 ல் அமெரிக்கா வெளியுறவு துறை செயலரான ஹென்றி கிஷின்கரை கடத்த முயன்றதாக இவர் உட்பட நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டார். 1982 ல் மசாசூட்டில் உள்ள கேம்ப்ஸ்பையர் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறை விரிவுரையாளராக இணைந்தார். அந்த காலகட்டத்தில் அரசியல் கோட்பாடு, கலாசாரம் குறித்த இவரின் கட்டுரைகள் அமெரிக்காவின் பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்தன. அவை அவரின் படிநிலையை மேலும் உயர்த்தின. அவரின் பல்கலை அனுபவம், அல்ஜீரிய போராட்ட வாழ்க்கை, பாகிஸ்தான் போன்ற ராணுவ சர்வாதிகார நாட்டின் நெருக்கடிக்குள்ளிருந்து தப்பித்தல், அந்நியமான உள்ளுணர்வு போன்றவை அவரை கிழக்கத்திய அறிவுஜீவி என்ற தகுதியை அடையச் செய்தன.
கீழைச்சமூகம்,உலக பரப்பில் மேற்கத்திய ஆதிக்கம், ஏகாதிபத்தியம், மூன்றாம் உலக நாடுகள் குறித்த இக்பால் அஹ்மதின் பார்வையும், நுண்ணறிவும் ஆழமானது. விரிந்த பரப்பை கொண்டது. குறிப்பாக மேற்கத்திய சமூகம் எவ்வாறு சில நூற்றாண்டு காலத்தில் கீழை நாடுகளை அடிமைப்படுத்தியது என்பது குறித்து விரிவாக ஆராய்ந்தார். இக்பாலை பொறுத்தவரை இந்த ஆதிக்க செயல்பாடு கொலம்பஸின் அமெரிக்க கடல்வழி பயண கண்டுபிடிப்போடு தொடங்குகிறது. இதன் தொடர்ச்சியில் புகழ்பெற்ற அசடெக்,இன்கா, மாயா போன்ற நாகரீகங்கள் அழிந்தன. அமெரிக்க பூர்வீகர்களான செவ்விந்தியர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். அவர்களின் நிலமும், உழைப்பும் பண்டமாக்கப்பட்டு முதலாளித்துவ உலகம் என்ற சொல்லாடலுக்குள் கொண்டுவரப்பட்டன. அங்குள்ள மக்கள் கடத்தப்பட்டு, வாங்கப்பட்டு, விலைக்கு விற்கப்பட்டு மற்ற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர்.கண்டங்களின் நிறங்கள் எல்லாம் வெள்ளையினத்தவரை கொண்டு நிரப்பப்பட்டன.அங்கிருந்த கறுப்பினத்தவர் எல்லாம் பிற பிரதேசங்களுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். உலகின் சமனற்ற அரசியல், சமூக மற்றும் கலாசார முறைமையானது புதிய தொழில்நுட்பத்தை உற்பத்தி செய்து கொண்டது. தொழில்புரட்சி காலகட்டத்தில் ஆசியா மற்றும் ஆப்ரிக்காவின் பெரும்பகுதிகள் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டன. இருபதாம் நூற்றாண்டு வாக்கில் உலகின் பெரும்பாலான மேற்கை சாராத மக்கள் மேற்கத்திய ஆதிக்கத்திற்குள் கொண்டுவரப்பட்டனர். மேலும் பொருளாதார வரையறைக்குள் வராத சமத்துவமற்ற கட்டமைப்பிற்குள் அவர்களின் வாழ்க்கையமைப்பு தள்ளப்பட்டது. அவர்களின் வரலாறு, பாரம்பரிய மரபு போன்றவை இருண்மைக்குள்ளாக்கபட்டு ஒதுக்கப்பட்டன. இந்த இடங்களில் மேற்கத்திய வரலாறு,கலாசாரம் போன்றவை குவியமாக்கப்பட்டன. மேற்கத்திய சமூகத்தால் வெற்றிகொள்ளப்பட்ட இப்பூமியில் பலதரப்பட்ட, வித்தியாசமான, சிக்கலான வாழ்க்கை முறைக்குள் இருப்பவர்கள், தங்களை விட தட்டையான மூக்கை கொண்ட இனத்தினர் போன்றவர்களை மிக அதிகமாக மேட்டுக்குடியினர் கூர்ந்து அவதானிக்கும் போது அவர்கள் அழகற்றவர்கள் என்பதாக தான் தோன்றும் என்றார் ஜோசப் கன்ராட். ஆனால் சமூகம் கலாசார விஷயத்தில் சார்பு நிலையானதாகவே இருக்கிறது. அழகு என்பது அருவ புள்ளியே. மேற்கத்திய சமூகம் கிழக்கின் மீது அதன் ஆதிக்கத்தை செயல் தந்திரபூர்வமாகவே செய்தது. இதன் தந்திர வரலாறு தெளிவாகவே இருக்கிறது.கிழக்கின் சமூகங்களுக்கிடையேயான இணக்கம் இதன் எல்லை வரையறை காரணமாக தகர்வை நோக்கி சென்றது. மேற்கத்திய பேரரசுகளின் அறிவுஜீவிகள் கீழை சமூகங்கள் பற்றிய நுண்ணோக்கம், மக்கட்தொகுதி, வரலாறு, கலாசார தகவமைப்பு குறித்து அவதானித்தனர். இக்பால் அஹ்மத் மேற்கின் இந்த தகிடுகள் பற்றி கடுமையாக விமர்சித்தார். இதன் காரணமாக அவர் பல அறிவார்ந்த தருணங்களை தர்க்க பூர்வமாக எதிர்கொள்ள நேர்ந்தது. மேலும் ஆங்கிலேயர்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் ஆகியோர் இனரீதியாக வித்தியாசமாக இல்லாவிட்டாலும் சமூக ரீதியாக ஒருங்கிணைந்திருப்பதை அறிந்து வியந்தனர். இதை குறித்து தன் பல ஆய்வு முறைகளில் இக்பால் அஹ்மத் வெளிப்படுத்தினார். மேலும் மூன்றாம் உலக நாடுகள் குறித்த இக்பால் அஹ்மதின் ஆய்வுமுறை முக்கியமானது. குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்காவின் தலையீட்டை தன் எழுத்துகளில் கடுமையாக விமர்சித்தார். பனாமா, பிரேசில், அர்ஜென்டினா, சிலி போன்ற நாடுகளில் அமெரிக்கா தன் ஒற்றர் படையை வைத்து தனக்கு சாதகம் இல்லாத அந்நாடுகளின் ஜனநாயக அரசுகளை பல நேரங்களில் கவிழ்த்து இருக்கிறது. குறிப்பாக சிலியின் அதிபர் சல்வடோர் அலேண்டேயின் ஆட்சி கவிழ்ப்பு வரலாற்றில் குறிக்கத்தகுந்தது. அந்த தருணத்தில் அமெரிக்க வெளியுறவு செயலரான ஹென்ரி கிசிங்கர் சொன்னார். " சிலி மக்களின் பொறுப்பற்ற தன்மையிலிருந்து அம்மக்களை நாம் காப்பாற்ற வேண்டும்". அவர் இவ்வாறு சொன்ன சில வருடங்களில் சல்வடோர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டார். இதை அமெரிக்க உளவுத்துறையே முன்னின்று நடத்தியது. இதை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே மார்க்ஸ் சொன்னார் " அவர்கள் அவர்களை பிரதிநிதித்துவம் செய்யமாட்டார்கள். மாறாக அவர்கள் பிரநிதித்துவம் செய்யப்படுவார்கள்." மூன்றாம் உலக சர்வாதிகாரிகள் பல நேரங்களில் தங்கள் சர்வாதிகாரத்தை நியாயப்படுத்துவதற்காக இம்மேற்கோளை உள்ளிழுத்துக்கொண்டார்கள். தன் சிந்தனை முறையின் அடிப்படையில் மார்க்சிய சாய்வை கொண்டிருந்த இக்பால் அஹ்மத் சோவியத் ரஷ்ய தகர்வை உலகின் பெரும் வலி என்று மதிப்பிட்டார். பெர்லின் சுவர் தகர்ந்த சமயத்திலேயே பனிப்போர் முடிந்து சோவியத் யூனியன் தகர்வை நோக்கி நகர்ந்து செல்வதை சரியாகவே இக்பால் அஹ்மத் கணித்தார். பனிப்போர் காலகட்டத்தில் இரு பேரரசுகளுக்கிடையே இருவிதமான துருவ ரீதியான முரண்பாடுகள் இருந்தன. அமெரிக்க பக்கம் ராணுவ தளவாடங்கள், ராணுவகூட்டு நடவடிக்கை, மூன்றாம் உலக நாடுகளில் அநியாவச தலையீடு, மற்ற நாடுகள் மீது போர்தொடுத்தல் போன்றவை இருந்தன. சோவியத் பக்கம் நாடுகளுக்கிடையே இணக்கம், உள்நாட்டு சமூக, வரலாற்று மற்றும் கலாசார பாதுகாப்பு. எல்லைகளை மதித்தல் ஆகிய குணாதிசயங்கள் இருந்தன. இதனடிப்படையில் பனிப்போரின் முடிவு என்பது உலகளாவிய நிலையில் பதட்டத்தை சிறிது தணித்திருக்கிறது. ஆனால் சர்வதேச உறவு முறையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அதே நேரத்தில் பனிப்போர் இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் உலகின் ஆதிக்கம் என்ற கருத்தியலை ஒழுங்கமைப்பதற்கான சிறந்த கருவியாக இருந்தது. ஏகாதிபத்தியத்தின் தற்போதைய காலநிலையானது பத்தொன்பதாம் நூற்றாண்டின் நெப்போலிய சர்வாதிகாரத்தை பிரதிபலிக்கிறது. ஏகாதிபத்தியம் கீழை சமூகங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை குறித்தும் இக்பால் அஹ்மத் ஆராய்ந்தார். தெற்காசியா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு போன்ற பிராந்தியங்கள் இந்த கருத்தியலின் கொடூர தாக்கத்திற்கு ஆட்பட்டிருக்கின்றன என்றார் இக்பால் அஹ்மத். எண்பதுகளின் இறுதிப்பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அமெரிக்க சாய்வு நிலையை விமர்சித்த இக்பால் அஹ்மத் ஒரு நூற்றாண்டு கால இடைவெளியில் இது இரு நாடுகளையும் மிகப்பெரும் அழிவுக்கு இட்டு செல்லும் என்றார்.
இக்பால் அஹ்மதின் எழுத்துக்கள் மற்றும் நேர்முகங்கள் தொகுக்கப்பட்டு கொலம்பியா பல்கலைகழகத்தால் "Selected Writings'' என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது.இவரின் நேர்முகங்கள் அமெரிக்க எழுத்தாளரான டேவிட் பராஸ்மனால் தொகுக்கப்பட்டு நூலாக வெளி வந்திருக்கிறது. இக்பால் அஹ்மத் எட்வர்ட் செய்த்திற்கு நெருக்கமான நண்பராக இருந்தார். எட்வர்ட் செய்த் இவரை இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய முக்கியமான எதிர் ஏகாதிபத்திய, மேற்கிற்கும், ஆசிய மற்றும் ஆப்ரிக்க பின் காலனிய அரசுகளுக்கும் இடையே இயக்க ரீதியான சிந்தனையாளர் என்றார். தேர்ந்த சிந்தனையாளரான இக்பால் அஹ்மத் ஈரான், ஈராக், லெபனான், சிரியா, மொராக்கோ, இலங்கை மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதிகளுக்கு பயணம் செய்தார். இவரின் சிந்தனை மையம் என்பது அரசியலாக இருந்த போதும் இலக்கிய படைப்பாக்கங்கள் மீது அதிக ஆர்வம் செலுத்தினார். அவற்றை வாசிப்பதிலும், அவதானிப்பதிலும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. குறிப்பாக பய்ஸ் அஹ்மத் பய்ஸ், ஆகா சாஹித் அலி, எலியாஸ் கவுரி, மஹ்மூத் தர்வீஷ், கிரேஸ் பலே போன்றவர்களை உள்ளார்வத்தோடு வாசித்தார். மேலும் புரட்சியும் எதிர்புரட்சியும் பற்றிய அவரின் ஆய்வு முறை முக்கியமானது.இக்பாலை பொறுத்தவரை வரலாறு புரட்சிகர போராட்ட மனித காரணியின் இறைமையை உறுதி செய்கிறது. பிரிட்டனின் உதாரணத்தோடு தொடங்கும் இக்பால் அஹ்மத் பிரிட்டனின் இந்திய , மலேயா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் காலனியாதிக்கத்தை பற்றி விவரிக்கிறார். அங்கு நடந்த விடுதலை போராட்டங்கள் புரட்சிகர தன்மையின் வரலாற்று பிரதிபலிப்பே. சமூக முரண்களின் சாத்தியப்பாடுகளே அதன் புரட்சிகர தன்மைக்கு வடிவம் கொடுக்கின்றன. இதன் அடிப்படையில் இக்பால் அஹ்மத் மூன்றாம் உலக நாடுகள் குறித்து அதிகம் ஆராய்ந்தார். ஏகாதிபத்தியம் மூன்றாம் உலக நாடுகளை தன் கண்காணிப்பில் கொண்டு வருவது பற்றியும் , அதன் நிகழ்தகவுகள் பற்றியும் விரிவாக ஆராய்ந்தார். தன் இறுதிகாலத்தில் பாகிஸ்தான் வந்த இக்பால் அஹ்மத் அங்கிருந்து வெளிவரும் Dawn ஆங்கில பத்திரிகையில் தொடர்ந்து எழுதி கொண்டிருந்தார். பெனாசிர் பூட்டோ ஆட்சிகாலத்தில் லாகூரில் அரசியல் அறிவியல் பல்கலைகழகம் தொடங்குவதற்காக இவரிடம் நிலம் ஒப்படைக்கப்பட்டது.பின்னர் அந்த முயற்சி நிறைவேறவில்லை. இக்பால் அஹ்மதின் அறிவுஜீவி நட்பு வட்டாரம் மிகப்பெரியது.எட்வர்ட் செய்த், இப்ராஹிம் அபுலுஹத், மாக்சிம் ரேடின்சன், பிரட் ஹாலிடே, நோம் சாம்ஸ்கி போன்றவர்களுடன் உரையாடல் நடத்தி இருக்கிறார். நோம் சாம்ஸ்கி இவரை "இருபதாம் நூற்றாண்டு ஓரியண்டல் சிந்தனையாளர்களில் தவிர்க்க முடியாதவர்" என்றார். இந்திய ஆங்கில எழுத்தாளரான அருந்ததிராய் " இக்பால் அஹ்மதின் பார்வை மிக ஆழமானது. உள்ளூட்ட தன்மை கொண்டது. சம காலத்திற்கு தேவையானது. மிகப்பெரும் குறையே தேவைப்படும் இந்த தருணத்தில் அவர் நம்மிடையே இல்லாதது தான்." உலகின் பெரும்பாலான அறிவுஜீவிகள் போலவே தன் இறுதிகாலத்தில் புற்றுநோயால் அவதிப்பட்ட இக்பால் அஹ்மத் 1999 ல் பாகிஸ்தானின் மருத்துவமனை ஒன்றில் மரணமடைந்தார். அடிப்படையில் இந்திய சமூகத்தை சார்ந்த இக்பால் அஹ்மத் முன்னாள் பிரதமர்களான மொராஜி தேசாய், வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால் ஆகியோரின் நண்பராக இருந்தார். கிழக்கத்திய சிந்தனை வரலாற்றில் இக்பால் அஹ்மத் தனித்த கோட்டை வரையக்கூடியவர். அவருக்கான வரலாற்று இடம் இன்றும் நிலையானது.
No comments:
Post a Comment