காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Thursday, August 20, 2009

ஓரியண்டலிசம், அரபு அறிவுஜீவிகள், மார்க்சியம் மற்றும் பாலஸ்தீன் வரலாற்று தொன்மம்


எட்வர்ட் செய்த்துடன் நூரி ஜரா நேர்காணல்

கேள்வி:- உங்கள் புத்தகம் ஒன்றின் முன் அட்டைப்படம் ஹமாஸின் சுவர் வாசகத்தை வெளிப்படுத்தும். அதாவது ஹமாஸ் போரட்ட வடிவம் அல்லது அது மாதிரி என்பதாக அதன் அர்த்தம். அந்த படத்தை நீங்கள் தானா தேர்ந்தெடுத்தீர்கள்?
எட்வர்ட் செய்த்:- இல்லை. பதிப்பாளரே அந்த புத்தகத்தின் வடிவத்தை தேர்ந்தெடுத்தார்.
கேள்வி:- உங்களுக்கு இதில் மாறுபட்ட பார்வை உண்டா?
எட்வர்ட் செய்த்:- இல்லை.இந்த விவகாரத்தில் நான் அதிகமாக சம்பந்தப்படவில்லை. மேலும் நான் இதற்கு எதிரானவன் அல்ல. ஏனென்றால் இது வெறும் வடிவம் மட்டுமே. எனக்கு அதில் முக்கியமாக படுவது அதன் உள்ளடக்கமே.
கேள்வி:- உங்களின் சிறந்த வாசகர்களாகிய அறிவுஜீவிகள் எல்லாம் நவ இஸ்லாமிய குழுக்களை சார்ந்தவர்கள். அவர்களின் ஆய்வுகளில் உங்கள் கருத்துக்களை, எழுத்துக்களை மேற்கோள் காட்டுவது அதிகரித்து வருகிறதே?
எட்வர்ட் செய்த்:- நிச்சயமாக இந்த விஷயம் பற்றி நான் அடிக்கடி வெளிப்படுத்தி இருக்கிறேன். அதில் என்னுடைய கருத்துக்கள் பல தவறாக வியாக்கியானம் செய்யப்படுவதை கண்டிருக்கிறேன். குறிப்பாக அவர்கள் இஸ்லாமிய இயக்கங்களை விமர்சிக்கும் விஷயத்தில். முதலாவதாக நான் மதசார்பற்றவன். இரண்டாவதாக நான் மத இயக்கங்கள் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. மூன்றாவதாக அந்த இயக்கங்களின் முறைமை, வழிகள், பகுப்பாய்வு, மதிப்பீடுகள், பார்வைகள் இவற்றின் மீது எனக்கு உடன்பாடில்லை. ஒரு குறிப்பிட்ட விளக்கத்தின் படி ஒர் ஆசிரியனின் நூலை வாசிக்கும் போது அது அடிக்கடி நிகழ்ந்தால் தவறான புரிதல் ஏற்பட சாத்தியப்பாடு அதிகம். என் ஓரியண்டலிச நூலின் புதிய பதிப்பில் நான் இந்த விஷயம் குறித்து அறிவுறுத்தி இருக்கிறேன். அதில் எனக்கும், இஸ்லாமிய வாசிப்பிற்குமான மிகப்பெரும் வித்தியாசத்தை குறிப்பிட்டிருக்கிறேன். நான் இஸ்லாம் பற்றி பேசவில்லை. மாறாக மேற்கில் இஸ்லாம் பற்றிய சித்திரமும், அதன் அடிப்படை மீதான அவர்களின் விமர்சனமும் பற்றிய பார்வையே அது.
கேள்வி:- தற்போதைய அரபு மொழி எழுத்துக்களின் வாசிப்பு போக்கானது ஓரியண்டலிசம் இந்தியா, லத்தீன் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும், அரபு மொழி வாசிப்பு என்பது மற்ற மொழிகளை விட முக்கியமானது என்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
எட்வர்ட் செய்த்:- இந்த கேள்விக்கு நான் முன்னர் பயன்படுத்திய உதாரணங்களை தான் குறிப்பிடுகிறேன். இந்தியா, ஜப்பான், அல்லது தென்னாப்ரிக்கா ஆகியவற்றின் ஆய்வுகள் எனக்கு அரபுலகை விட ஆழமாக தெரிகின்றன. குறிப்பாக இந்திய வரலாற்று புலத்தில் அடித்தள மக்கள் பற்றிய ஆய்வானது மூன்றாம் உலக சிந்தனை பள்ளிகளில் முக்கியமானதும், அது எழுத்தில் பின்காலனிய சிந்தனையை உற்பத்தி செய்வது மற்றும் தீவிர வரலாற்று பகுப்பாய்வுமாகும். இந்த சிந்தனைப்பள்ளியானது ஓரியண்டலிசத்தில் மிகுந்த செல்வாக்கு செலுத்துவதுடன், எந்த அமெரிக்க பல்கலைகழகமும் இந்த சிந்தனை பற்றிய பிரதிநிதிகள் இல்லாமல் இல்லை. உண்மையில் இதற்கு இணையாக சிந்தனைப்பள்ளிகள் அரபு மற்றும் இஸ்லாமிய உலகில் இல்லை. அடித்தள மக்கள் பற்றிய ஆய்வானது அமெரிக்க வரலாற்றை எழுதுவதிலும் தாக்கம் செலுத்துகிறது. அது மாதிரியே மற்ற உலக பல்கலைகழகங்களிலும் தாக்கம் செலுத்துகிறது. என்னை பொறுத்தவரை ஓரியண்டலிசம் அரபுலகை விட மற்ற பகுதிகளில் அதிகமாக கவனிக்கப்படுகிறது.
கேள்வி:- இதற்கு என்ன காரணம்?
எட்வர்ட் செய்த்:- காரணம் ஓரியண்டலிசம் என்பது அடிப்படையில் அரபுலகினரால் கருத்துக்கள் அடிப்படையிலான பகுப்பாய்வு சிந்தனையின் வளர்ச்சியாக பார்க்கப்படாமல் வெறும் முரண்பாட்டு வழிமுறையாக பார்க்கப்பட்டது. இதன் காரணமாக ஓரியண்டலிசம் என்பது அவமானகரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. நீங்கள் ஒருவரை அவமதிக்க வேண்டுமென்றால் அவரை ஓரியண்டலிஸ்ட் என்று அழைத்தால் போதும். இதுவே என் புத்தகத்தின் மிகைப்படுத்தப்பட்ட வாசிப்பின் எதிர்மறையான விளைவுகள்.
கேள்வி:- உங்கள் புத்தகத்தில் நீங்கள் இந்த சொல் பற்றிய விசனகரமான உதாரணங்களை அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறீர்களே?
எட்வர்ட் செய்த்:- ஒரு வேளை. ஆனால் ஓரியண்டலிசமும் அதன் சூழலும் அவமதிக்கப்பட்டதின் எல்லையை விட மிக விரிந்த சூழலில். ஓர் ஆசிரியன் என்ற முறையில் நான் அதற்கு சார்பானவன் என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் மிக முக்கியமான விஷயம் என்பது அந்த புத்தகம் என்பது பகுப்பாய்வு முறை, ஒழுங்கமைக்கப்பட்ட கோட்பாட்டு சட்டகம் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. அது எவ்வகையிலும் இந்த ஓரியண்டலிஸ்ட் என் எதிரி என்றோ, இது எனக்கு எதிரானது என்றோ, இதை நான்விரும்புகிறேன் அல்லது இதை வெறுக்கிறேன் என்றோ குறிப்பிடவில்லை. மேலும் அரபு சமூகத்தில் அந்த முறைமையின் அடிப்படையில் நாங்கள் சிறைக்கைதிகள், நாங்கள் கடந்த கால இருளிலிருந்து விடுபட்டு ஒன்றை வளர்த்தெடுக்க இயலாதவர்களாக இருக்கிறோம் என்பதையே இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
கேள்வி:- உங்கள் வாசகர்களில் பலர் உங்கள் கோட்பாடுகளுக்கு எழுத்து வடிவில் எதிர்வினையாற்றுவதில்லை. அவர்கள் உங்கள் புத்தகத்தில் நீங்கள் முன்வைக்கும் சூழலின் அடிப்படையில் கருத்துக்களை எடுத்துக்கொள்கிறார்கள். இங்கு வித்தியாசம் என்னவென்றால் வாசிப்பு என்பது எழுத்தாக மாறவில்லை.
எட்வர்ட் செய்த்:- இது வெறும் வாசிப்பை அடிப்படையாக கொண்டது. அது எழுத்தாகவோ அல்லது விவாதமாகவோ மாறவில்லை. நான் ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஓரியண்டலிசம் 1978 ல் வெளிவந்தது. கடந்த இருபது ஆண்டுகளாக சுமார் பத்து புத்தகங்களை எழுதியிருக்கிறேன். கலாசாரம் மற்றும் ஏகாதிபத்தியம் (Culture and imperialism)உட்பட. இந்த புத்தகங்கள் எல்லாம் இலக்கிய விமர்சனம், தத்துவம் மற்றும் பிற விஷயங்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
கேள்வி:- நீங்கள் உங்கள் புத்தகத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபட விரும்புகிறீர்களா?
எட்வர்ட் செய்த்:- ஓர் ஆசிரியன் புதிய ஒன்றை அளிப்பதற்கு தொடர்ந்து முயல வேண்டும். அது அவனின் எழுத்தாக்கம் குறைவதை தடுக்கும். எல்லோர்களின் அறிவானது அவர்களின் வித்தியாசமான எழுத்துக்கள் மூலம் புதிய சிந்தனையை வளர்த்தெடுக்கும். இது மக்கள் என் புத்தகத்தை வாசிக்கும் போது எனக்கு முக்கியமாக படுகிறது. என்னுடைய முக்கிய ஆர்வமே தொடர்ந்த எழுத்தின் மீதான கவனம் அன்றி, ஏற்கனவே எழுதியதை திருப்புவது அல்ல. அதாவது எனக்கு இன்னும் கொஞ்சம் தூரம் கடக்க வேண்டியதிருக்கிறது.

கேள்வி:- அரபுலகின் தற்போதைய நிகழ்வுகளின் போக்கானது அறிவுஜீவிகளின் கருத்துக்கள், பகுப்பாய்வு, ஆராய்ச்சி இவற்றில் மிக போதுமான அளவு பிரதிபலிக்கவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இவர்கள் உண்மைகளை கண்டு அதிர்வதுடன், வலுவான சிந்தனையை உற்பத்தி செய்வதற்கு பதில் எதிர்வினைகளையே அதிகம் உற்பத்தி செய்கிறார்கள்.
எட்வர்ட் செய்த்:- இது அரபுலகில் குறிப்பிட்ட எல்லை வரை சரியான விஷயம். என்னுடைய தனிப்பட்ட பிரச்சினையானது நான் இந்த பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டு இருக்கிறேன். மேலும் என்னுடைய தினசரி, வாராந்திர, மாத, வருட வேலை என்பது நான் வாழும் மேற்குலகம் சார்ந்ததாக இருக்கிறது. இரு அமெரிக்க பல்கலைகழங்களை தவிர (கெய்ரோ, பெய்ரூட்)மற்றபடி எனக்கு எந்த அரபு பல்கலைகழகத்தோடும் உறவில்லை. அதனால் அங்குள்ள பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள் மற்றும் அரபு அறிவுஜீவிகள் ஆகியோரைப்பற்றி தெரிய வாய்ப்பில்லை. ஆக நிலைமையின் போதாமை குறித்தவனாக நான் இருக்கிறேன். ஆனால் கிடைக்கும் விவரங்களை வைத்து எனக்கு உங்கள் உள்வாங்கலை மிக வேகமாக புரிந்து கொள்ள முடிகிறது.
கேள்வி:- நீங்கள் இன்னும் புனர் மார்க்சியத்தை எதிர் சொல்லாடலாக பார்க்கிறீர்களா? உங்களின் முந்தைய குறிப்புகள் அடிப்படையில் நான் புரிந்து கொண்டது நீங்கள் இது சாத்தியமா அல்லது சாத்தியமில்லையா என்பது குறித்த கேள்வியில் இருக்கிறீர்கள். இந்த கேள்வி மிக தீவிரமானதும், வெளிப்படையானதுமாக நமக்கு தெரிகிறது. தற்போதைய உலக நெருக்கடியில் புனர் மார்க்சியம் நம்பிக்கை தரும் தடமாக இருக்க முடியும் என்று நான் நினைக்கலாமா?
எட்வர்ட் செய்த்:- மார்க்சிய விவகாரம் குறித்து நான் விவாதிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அதன் சொற்கள் பற்றிய சர்ச்சைக்குள் நான் உள்ளாக விரும்பவில்லை. இங்கு கேள்வியே மார்க்சியம் என்பது என்ன? நான் மார்க்சியனா அல்லது மார்க்சியன் இல்லையா என்பதல்ல. நான் இதை முற்றிலும் வித்தியாசமாக பார்க்கிறேன். ஒரு தாராள மற்றும் சுதந்திர அறிவுஜீவி என்ற நிலையில் அவை மார்க்சியமோ அல்லது வேறொன்றோ நான் கோஷங்களுக்கு குறைந்த அளவே முக்கியத்துவம் கொடுக்கிறேன். மார்க்சிய பகுப்பாய்வு முறை அல்லது பொருளாதய பகுப்பு முறை , அதன் பாடங்களும், கூறுகளும் தற்போது நாம் வாழும் முறைமை பற்றிய புரிதலுக்கு மிகவும் உதவுகின்றன. இங்கு மார்க்சிய ஆய்வுமுறையாக நான் குறிப்பிடுவது கிராம்சி மற்றும் லூக்காஸ் ஆகியோரின் பங்களிப்புகளை தான். இதன் வழி நாம் மார்க்ஸ் எதை சிந்திக்கவில்லை. தற்போதைய சூழலுக்கு நாம் எதை பயன்படுத்த முடியும் என்பதை பற்றி பகுப்பாய்வு செய்ய முடியும். நமக்கு தேவை மரபார்ந்த மார்க்சியத்தை மறு உற்பத்தி செய்வதோ அல்லது கோஷங்களை உயிர்ப்பிப்பதோ அல்ல. மாறாக தற்போதைய சூழலுக்கு ஏற்ப புதிய சொல்லாடல்களை உற்பத்தி செய்வதும், புதிய கண்ணோட்டத்தோடு கூறுகளை கண்டறிந்து அவற்றை செயல்படுத்தலுமே.

கேள்வி:- ழாக் தெரிதாவின் நிரந்தர நாடுகடத்தல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இது மாதிரியே பாலஸ்தீனியர்களையும் நாம் கருதலாமா?
எட்வர்ட் செய்த்:- ஒரு வேளை
கேள்வி:- பிறகு இரு நிலைமைகளுக்கும் இடையே என்ன வித்தியாசத்தை காண்கிறீர்கள்?
எட்வர்ட் செய்த்:- வித்தியாசம் என்னவென்றால் யூதர்கள் பாலஸ்தீன் பிரதேசத்துடனான தங்களின் உறவு 3000 ஆண்டுகள் முந்தையது என்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் நாடுகடத்தப்பட்டு 2500 ஆண்டுகளுக்கு முன்பு இடப்பெயர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆனால் பாலஸ்தீனியர்களின் கட்டாய புலப்பெயர்வு நேற்று தான் ஆரம்பமானது. இன்னும் நாம் யூதர்களின் அதிகாரபூர்வ வரலாறு என்பது டயஸ்போராவினாலும், நிரந்தர நாடுகடத்தல் கருத்தாலும் உருவாக்கப்பட்டது என்பதை மறக்க வேண்டாம். இந்த வரலாறு நிறைய தொன்மங்களுக்கு பயன்படுகிறது. பாலஸ்தீனியர்களாகிய நாம் இந்த தொன்மங்களை தவிர்த்து விட வேண்டுமென்று நான் நினைக்கிறேன். மேலும் அறிவுஜீவிகளாகிய நாம் வரலாற்று மற்றும் பருண்மையான உண்மைகள் மீது அதிக கவனம் செலுத்தி , தொன்ம பரிமாணங்கள் பயன்படுத்தப்படுவதை நிராகரிக்க வேண்டும். பாலஸ்தீனிய அகதி எப்போதுமே பாலஸ்தீன் அகதியாக தான் இருக்க வேண்டும் என்ற கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அகதிகளாக இருக்கும் பாலஸ்தீனியர்களின் தற்போதைய நிலைமையை கையாளாத வரை பாலஸ்தீன் பிரச்சினைக்கு எதார்த்த தீர்வு ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. ஆக கேள்வியே நாம் கடந்த காலத்திலிருந்து விடுபட்டு 1948 க்கு முந்தைய வரலாற்றுக்கு திரும்ப முடியுமா? என்பதே. நான் சந்தேகம் கொள்கிறேன். நாம் இழப்புகளால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். நம் மக்கள் போராட்டத்தில் தற்காலிகமாக தோல்வியுற்றிருக்கிறார்கள். இது எதுவரை? தற்போது இதற்கு யாரிடத்திலும் இறுதி விடை இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. நாம் இப்போது செய்ய வேண்டியது இந்த இழப்புகளை மட்டுப்படுத்துவது தான்.
கேள்வி:- யூதர்கள் டயஸ்போரா என்ற சொல்லை புராதன இடத்தை குறிக்கும் கூட்டு பழைமை ஏக்கமாக கருதுகிறார்கள். சில பாலஸ்தீனியர்கள் இந்த சொல்லை பாலஸ்தீன் பிரதேசத்திலிருந்து அவர்களின் அந்நியமாதலை குறிக்க பயன்படுத்துகிறார்கள். பாலஸ்தீனியர்கள் இந்த சொல்லை வேறு அர்த்தத்தை குறிக்க பயன்படுத்த முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? குறிப்பாக பாலஸ்தீனிலிருந்து நாடுகடத்தப்பட்டவர் அவர்களின் எதார்த்த இடத்தை குறிக்கவும், அவர்கள் வீட்டு சாவியை இன்னும் வைத்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தவும் பயன்படுத்தலாமா? பாலஸ்தீனியர்கள் பயன்படுத்த டயஸ்போராவுக்கு மாற்றான வேறு சொல் இருக்கிறதா?
எட்வர்ட் செய்த்:- அரபியில் நான் சாதத்(பரவலாக்கம்) என்ற சொல்லை பயன்படுத்துகிறேன். தொன்ம கற்பனை அடிப்படையிலான பல சொற்கள் மீதான என் விமர்சனம் மற்றும் எச்சரிக்கை தொடர்ந்த போதும் இதனை பயன்படுத்தி வருகிறேன். இயல்பாக நான் "டயஸ்போரா" என்ற சொல்லை நிராகரித்து வந்திருக்கிறேன். ஆனால் அதை பயன்படுத்துவதை தடுப்பதற்கு ஒன்றுமில்லை. யூதர்கள் தங்கள் சொந்த கற்பனையை நிறைவு செய்வதற்கு இதனை பயன்படுத்துகிறார்கள். ஆனால் நாம் பாலஸ்தீனியர்களின் வித்தியாசமான நிலைமையைப் பற்றி உரையாடிக்கொண்டிருக்கிறோம். பாலஸ்தீன் நிலைமை மற்றும் பாலஸ்தீனிய சமூக விருப்பம் இவை அந்த தேசத்திற்கு விநோதமானது.
(எட்வர்ட் செய்த்தின் Power, Politics and culture என்ற நூலிலிருந்து)
(உயிரோசை)

No comments: