காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Wednesday, September 23, 2009

நவதந்தைவழி சமூகமும் அரபுலகமும்வரலாறு ஓரே நேரத்தில் விடுதலையாகவும், தேவையாகவும் இருக்கிறது என்றார் கிராம்சி. புராதன சமூகம் அதன்கூட்டுத்தன்மையிலிருந்து தனித்த அமைப்பாக மாறி மாபெரும் உழைப்பு பிரிவினையில் சிதிலமடைந்தது. குடும்பம் என்ற அமைப்பு திடமான பிறகு அங்கு ஆண் முதன்மையானவனாக மாறினான்.இதன் தர்க்க ரீதியான தொடர்ச்சியே தந்தை வழி சமூகத்தின் உருவாக்கம். பெண் இரண்டாம் வகைக்கு உட்பட்டாள். ஆணாதிக்க அடக்குமுறை அவள் மீது திணிக்கப்பட்டது. இது பேரியல் மற்றும் நுண்தளங்களின் இயங்கியல் ரீதியான உறவாக இருக்கிறது. பேரியல் தளம் என்பது சமூகம், அரசு, பொருளாதாரம் ஆகியவற்றை குறிக்கிறது. நுண்தளம் என்பது தனி மனிதன் மற்றும் குடும்பத்தை குறிக்கிறது. வரலாற்றின் தொடர்ச்சியில் இந்த அமைப்பு முறை பரிணாமமடைந்து பிரபஞ்சம் முழுமைக்குமாக விரவி பரந்தது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் வித்தியாசமான குண இயல்புகளை அடைந்தது. இது அரபு சமூகத்தில் அடைந்த மாற்றமே பின்னர் இஸ்லாமிய சமூக அமைப்பில் பிரதிபலித்தது. அடிப்படையில் ஓரிறைக்கொள்கை (Monotheism) என்பது தந்தைவழி சமூகத்தின் பிரதியாக்கமே. இதனை குறித்து அரபு சிந்தனையாளர் ஹிசாம் சரபி விரிவாக ஆராய்ந்தார். அவரின் Neopatriarchy: A theory of Distorted arab society இதனை குறித்து விரிவாக ஆராய்ந்தது. தந்தைவழி சமூகம் என்பது பரிணாமமடைந்து அரபு சமூகத்தில் நவ தந்தைவழி சமூகமாக உருமாற்றம் அடைந்தது. சரபி இதை ஐரோப்பிய நவீனத்துவத்தின் தாக்கம் என்கிறார்.

நவீனத்துவம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரபு சமூகத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அரபியில் இது நஹ்தா என்றழைக்கப்பட்டது. இது அன்றைய அரபு சமூகத்தில் உள்ளக மற்றும் தந்தைவழி சமூகத்தின் வடிவங்களில் மட்டும் மாறுதலை ஏற்படுத்தவில்லை. மாறாக நவீன சமூக கலாசார வடிவம் ஒன்றுக்கு வழி ஏற்படுத்தியது என்கிறார் ஹிசாம் சரபி. பொருளாதய நவீனமயமாக்கல் புதிய கலாசார ஒழுங்கிற்கு வடிவமளித்தது. அது கலாசாரம் மட்டுமின்றி சமூக, பொருளாதார அரங்கிலும் பிரதிபலித்தது. இதன் பரிணாம நீட்சியே நவ தந்தை வழி சமூகம். இது அக மற்றும் புற ஆகிய இரு வடிவங்களில் வெளிப்படுகிறது. இங்கு அடிப்படை கேள்வியே நவீனத்துவத்தின் பிரச்சினையை ஐரோப்பிய ஆதிக்க உலகில் எவ்வாறு எதிர்கொள்வது என்பதே? அது முதலாளித்துவத்துடன் இணைந்தே இருக்கிறது. மார்க்ஸ் முதலாளித்துவத்தின் எதிர் செயல்பாடாக புரட்சியை முன்னிறுத்தினார். மாக்ஸ் வெபர் இதனை அறிவுவாதத்தோடு தொடர்புபடுத்தினார். ஐரோப்பா அல்லாத சமூகங்களில் முதலாளித்துவம் பற்றிய நம்பிக்கை மேற்கண்ட இரு அம்சங்களும் இணைந்த ஒன்றாக இருந்தது. அரபுலகில் முதலாளித்துவம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் அறிமுகமானது. அக்காலத்தில் அது ஒரு சுதந்திர முதலாளித்துவத்தின் வளர்ச்சியை நோக்கியதாக இல்லாமல் சிதிலமடைந்த, சார்புநிலை முதலாளித்துவ சமூகத்தின் அரசியல் பொருளாதார நிலைமைகளை உற்பத்தி செய்வதாக அமைந்தது.

அரபு சமூகத்தில் ஐரோப்பிய அறிவொளிகால கட்டத்தின் எதிரொலி பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிபகுதியில் ஏற்பட்டது. அரபு அரசியல், சமூக வாழ்க்கை முறைமையில் மேற்கத்திய தாக்கம் முக்கியமானது. இது நவ தந்தை வழி சமூகத்திற்கு சரியான முன்தொடரலை ஏற்படுத்தியது. இந்த தொடரல் மூன்று கட்டங்களை சார்ந்து இருந்தது. ஒன்று துருக்கிய உதுமானிய ஆட்சி காலம். (இது முதல் உலகப்போருடன் முடிவுக்கு வந்தது)ஐரோப்பிய அரசியல் ஆதிக்கம் (இரு உலகப்போர் காலகட்டங்களுக்கு இடைப்பட்டது)இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய கட்டம் முதல் தற்போது வரை. நவ தந்தைவழி சமூகத்தை பொறுத்தவரை அரபுலகில் சார்புநிலையான, நவீனமல்லாத சமூக, பொருளாதார அமைப்பை கொண்ட வளர்ச்சியடையாத சமூகமாகவே இன்னும் இருக்கிறது என்கிறார் ஹிசாம் சரபி. இதன் மைய சமூக உளவியல் என்பது குடும்பம் மற்றும் தேசத்தின் மைய உறுப்பினராக தந்தையே (ஆண்)செயல்படுகிறார். இதனடிப்படையில் ஆட்சியாளர் -ஆளப்படுபவர், தந்தை -குழந்தை ஆகியயோர் செங்குத்தான உறவு நிலையின் கீழ் வருகின்றனர். இங்கு சமூகத்திற்குள்ளும், குடும்பத்திற்குள்ளும் தந்தையின் விருப்பமே ஒருமையானதாக திணிக்கப்படுகிறது. தந்தையின் விருப்பமே அரசு என்ற புறநிலை சமூகத்திற்குள்ளும் நீள்கிறது. இரு அரசு முறையானது எல்லா நவ தந்தைவழி சமூகத்திலும் வழக்கிலிருக்கிறது. இராணுவ எதேச்சதிகார அரசுகள் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவதோடு அதை கண்காணிக்கவும் செய்கின்றன. சிவில் மற்றும் அரசியல் இருத்தலில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இங்கு சாதாரண குடிமகன் அரசின் கண்காணிப்புக்குள்ளாகி விர்ச்சுவல் கைதியாக மாறுகிறான்.ஆக நவ தந்தை வழி சமூகத்தின் வெளிப்படையான வடிவம் என்பது பொருளாதய, சட்ட, கலாசார தளங்களில் வலுவாக இருப்பதுடன் அதன் உள்கட்டுமானமானது தந்தை வழி மதிப்பீடுகளை,மத மற்றும் இனக்குழு நலன்களை பிரதிநிதித்துவம் செய்வதாகவும் அமைகிறது.

குட்டி பூர்ஷ்வா வர்க்கமானது நவ தந்தை வழி சமூகம் மற்றும் அதன் கலாசாரத்தை வெளிப்படுத்துகிறது. இது அந்த சமூகத்தில் முரண்பாடான மதிப்பீடுகளையும், மனோபாவங்களையும் நனவான தீர்மானங்கள் ஏதும் இல்லாமல் செயல்படுத்த முயல்கிறது. வேறொரு வகையில் சொன்னால் குட்டி பூர்ஷ்வா வர்க்கமே நவ தந்தை வழி சமூகத்தின் சரியான பிரதிநிதி. எகிப்திய நாவலாசிரியான நகுப் மஹ்பூஸ் தன் நாவல்களில் இந்த குணாம்சங்களை பற்றி விவரிக்கிறார். " அவன் வாழ்க்கையின் நடப்புத்தன்மையோடு தன்னை தகவமைக்கிறான். அவன் சமூகத்தின் சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களை ஏற்றுக்கொண்டு, சமூக பொருளாதார நடவடிக்கைகளுக்கான சட்டகத்தில் செல்கிறான். ஒரு நாள் குர் ஆனை படித்து இறைப்பக்தியை அடைகிறான். அவனின் நம்பிக்கைகள், தொழுகை, நோன்பு போன்றவை அவனை புனித செயல்பாடுகள் நோக்கி மாற்றுகின்றன. அவனின் மற்றொரு பகுதி கேளிக்கைகளிலும், தெருக்களிலும், நீதிமன்றங்களிலும் செலவாகின்றன." இவ்வாறான சுழற்சியே குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தின் இருப்பாக மஹ்பூஸ் காண்கிறார். அரபு சமூகத்தில் குட்டி பூர்ஷ்வா எழுச்சியானது இரு பின் மாற்றங்களை ஏற்படுத்தியது. 1940 க்கும் 1950 க்கும் இடைப்பட்ட காலத்தில் இங்கு மக்கள் தொகை வெடிப்பு நிகழ்ந்தது. அதன் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இது நகர்புற குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தின் தரத்தை இன்னும் உயர்த்தியது. இவர்கள் அதே காலகட்டத்தில் அல்ஜீரியா, ஈராக், சிரியா, எகிப்து ஆகிய நாடுகளில் அதிகாரத்தை கைப்பற்றினர். ஆனால் அவை வலுவற்றதாக, அதிகாரம் மங்கியதாக, உள் முரண்பாடுகள் அதிகம் கொண்டதாக இருந்தன.மேலும் இவை பூர்ஷ்வா வர்க்கமாகவோ அல்லது புரட்சிகர பாட்டாளி வர்க்கமாகவோ மாற முடியாமல் முடங்கின. ஏகாதிபத்தியம் மற்றும் சார்பு நிலை பொருளாதார அமைப்பிற்குள் இவை அகப்பட்டு கொண்டதால் அவற்றிலிருந்து மீள முடியாமல் தவித்தன. குட்டி பூர்ஷ்வாக்களின் சமூக மேலாண்மை அரபு சமூக கட்டமைப்பில் புரட்சிகர மற்றும் ஒருங்கிணைவு தோல்வியை ஏற்படுத்தியது. இவை அரபு சமூகத்தின் அரசியல் வாழ்க்கையை சீர்குலைத்து எதிர்மறையான, ஒன்றுக்கொன்று முரண்பாடான அரசுகளை ஏற்படுத்தின. சமூக மாற்றத்திற்கோ அல்லது கட்டமைப்பின் வளர்ச்சிக்கோ செல்ல இயலாமல் முடங்கின. அவற்றில் இடத்தில் அரச முதலாளித்துவமும், நுகர்வியமும் ஆக்கிரமித்துக்கொண்டன. இந்த பிளவு அரபு சமூகத்தில் ஒரு கட்டத்தில் அதிகார மற்றும் அரசியல்மயப்படுத்தப்பட்ட அடிப்படைவாதத்தின் எழுச்சிக்கு வழி வகுத்தது.

நவ தந்தைவழி சமூகத்தை பற்றி குறிப்பிடுகையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் மதநீக்க நவீனத்துவம் ஆகிய இரு அம்சங்களை பற்றி ஹிசாம் சரபி குறிப்பிடுகிறார். அடிப்படையில் நவீனத்துவத்தின் மாறும் பரிணாம கட்டம் என்பது அறிவின் ஒரு கட்டத்திலிருந்து மற்றொரு வித்தியாச கட்டத்திற்கு பயணிக்கும் செயல்பாடாகும். மரபான சிந்தனைகள் மீது சிறிய கீறலை ஏற்படுத்தி புதிய விஞ்ஞான பூர்வ சிந்தனைகளை ஏற்படுத்துவது. அரபு சமூகத்தில் இந்த அனுபவம் மூன்று விதமான நடைமுறை பிரச்சினைகள் மீது இருக்கிறது. அடையாளம் சார்ந்த பிரச்சினை, வரலாற்று பூர்வ பிரச்சினை, மேற்குலகம் சார்ந்த பிரச்சினை. அரபு சமூகத்தின் எழுச்சிக்கு இதனடிப்படையில் பின் தொடரும் இரு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று மேற்கத்திய நாகரீகத்தின் உள் மற்றும் வெளி சார்ந்த மாதிரியை ஏற்றுகொள்வது பற்றியது. இரண்டாவது இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கூறுகளை முழுமையாக உள்வாங்குவது. இந்த இடத்தில் மதநீக்க (Secularism)கோட்பாடு என்பது தாராளவாதம், தேசியவாதம், சோசலிசம் போன்ற உள்கருதுகோள்களை உள்ளடக்கி இருக்கிறது. அடிப்படைவாதத்தை பொறுத்தவரை மதசீர்திருத்தம், தூய்மைவாதம், இராணுவ இஸ்லாம் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கிறது. இவை இரண்டும் அரபு சமூகத்தில் நவதந்தைவழி சமூக பிந்தைய கட்டத்தை பிரதிபலிக்கின்றன.
ஒரு வகையில் இவை உண்மையின் சமூக ஒழுங்காக (Regime of truth)இருக்கின்றன. அரபு இஸ்லாமிய சமூக போக்கில் அதாவது தூய்மைவாதம் மற்றும் இராணுவ இஸ்லாம் ஆகியவற்றின் போக்கில் வரலாறு மற்றும் மேற்குலகம் ஆகியவை கருத்தியல் ரீதியாக இஸ்லாத்தின் உண்மை என்ற அளவுகோலை அடிப்படையாக கொண்டே பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த காலம் பற்றிய வாசிப்பு என்பது சாத்தியமற்றது. 1980 களில் மேற்கண்ட இரு சொல்லாடல்களும் உச்சகட்ட நிலையை அடைந்தன.இஸ்லாமியம் துணைநிலையான அறிவுக்குழுக்களை கொண்டிருக்கவில்லை. ஆனால் மிகப்பெரும் வெகுஜன இயக்கத்தை கொண்டிருந்தது. மதநீக்க கோட்பாடு விமர்சன பூர்வ அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், தொழில் விற்பன்னர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரை உள்ளடக்கி இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை இதன் அறிவுஜீவிகள் மற்றும் கலாசார விவாதம் என்பது நகர்புறம் சார்ந்த கல்வி வட்டத்திற்குள் சுழன்று வந்தது. இறுதி கட்டத்தில் இதுவே சமூக விதியாகவும் மாறிப்போனது.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பொறுத்தவரை அது நவதந்தை வழி சமூகத்தின் ஸ்திரமற்ற தன்மைக்கான கூறுகளை கொண்டிருந்த போதும் அந்த சமூகத்தின் கட்டமைப்பை ஒழுங்குலைப்பதற்கான நடவடிக்கைகளை உள்கொண்டிருக்கவில்லை என்கிறார் ஹிசாம் சரபி. இந்த சூழலில் மத நீக்க கோட்பாடு என்பது அரசியல் மற்றும் கலாசார நிலையில் அடிப்படைவாதத்திற்கு எதிரான ஒன்றாக இருக்கிறது. மதநீக்க கோட்பாட்டின் விதிப்படியான பலவீனம் என்பது அடிப்படைவாதத்தை போலல்லாமல் வெகுஜனதொடர்பை விட்டு வெகுதூரம் விலகி இருக்கிறது. இது அரசியல் எல்லைக்குள் குறைந்த செல்வாக்கே செலுத்துகிறது. மேலும் அரசின் தணிக்கை விதிமுறை, கட்டுப்பாடு இவற்றிற்கு உட்பட்டதாக இருக்கிறது. மேலும் மதரீதியான கருத்துக்கு நேர் எதிர்நிலையில் இருப்பதால் வெகுஜன செல்வாக்கு இதற்கில்லை. பெரும்பாலும் கருவிலே திருவுடைய புத்திலக்கியவாதிகளை (avant garde)கொண்டிருப்பதும் இதன் மற்றொரு பலவீனம். மாறாக அடிப்படைவாதம் என்பது மதகருத்தாக்கத்தின் பிரதிபலிப்பாக இருப்பதுடன் வெகுஜனத்தை இயங்க வைப்பதிலும் முக்கிய பங்களிப்பை செலுத்துகிறது. இந்த இடத்தில் மதநீக்க கோட்பாட்டாளர்களின் பின்னடைவு என்பது அடிப்படைவாதிகளுடன் அறிவுபூர்வ விவாதத்திற்கோ அல்லது உரையாடல்களுக்கோ சாத்தியமற்ற சூழல் நிலவுவதாகும். இவர்களின் உரையாடல், கருத்தியல் என்பது சட்டபூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும் பின்னுக்கு தள்ளப்படுகிறது. ஆக அரபு வம்சத்தில் மதநீக்க விமர்சகர்கள் ஒடுக்கப்பட்டு, அவர்களின் கருத்துக்கள் சிறைப்படுத்தப்பட்டு தீண்டத்தகாத ஒன்றாக மாற்றப்படுகின்றன. அடிப்படைவாத ஆதரவாளர்கள் இங்கு தங்கள் கருத்தை சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் மட்டும் வெளிப்படுத்தவில்லை. மாறாக அரச அதிகார இயந்திரங்கள் மற்றும் ஊடகங்களின் நிலையான ஆதரவோடு தங்களின் காரியத்தை நிகழ்த்தினார்கள். இவ்வாறான நிலையில் அரபு சமூகத்தில் அடிப்படைவாதம் என்பது ஒடுக்குமுறை அரசுகளின் அதிகப்படியான பலத்தை உள்வாங்கியே வளர்ந்தது.

தந்தை வழி சமூகம் என்பது ஹிசாம் சரபியை பொறுத்தவரை தனிப்பட்டபொருளாதார நிறுவனங்களை அடிப்படையாக கொண்ட குறிப்பிட்ட வகையான சமூக அரசியல் கட்டமைப்பு, குறிப்பிட்ட ஒழுங்குமுறை, குறிப்பிட்ட சொல்லாடல் மற்றும் நடைமுறை வடிவமாகும். தந்தை வழி சமூகம் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகத்தில் நிலவிய வரலாற்றடிப்படையிலான மைய சமூக உறவு முறையாகும். அரபு சமூகத்தை பொறுத்தவரை தந்தைவழி சமூகம் குறிப்பிட்ட மற்றும் பிரத்யேக தன்மைகளை கொண்டிருக்கிறது. அரபு கலாசாரத்தை குறித்து பிரெஞ்சு வரலாற்றாசிரியர் பெர்ணான்ட் பிராடல் இவ்வாறு குறிப்பிடுகிறார். " அரபு நாகரீகம் அல்லது இஸ்லாமிய நாகரீகம் என்பது வெற்று வெளியின் விளிம்பிலும், பாலைவன ஓரத்திலும், ஆறுகள் மற்றும் கடல்கள் வழி வளர்ச்சி பெற்றது. அரபுலகின் சில பகுதிகள் தவிர மற்ற பகுதிகளை பாலைவனம் ஆக்கிரமிக்கிறது. மேற்கு அரேபியாவின் மலைத்தொடர்கள், சிரியாவின் அடுக்கு மலைத்தொடர், ஓமன் மற்று யமனின் டெல்டா பகுதிகள், நைல் மற்றும் யூப்ரடீஸ் நதிக்கரையோரங்கள் ஆகியவற்றால் அரபுலகம் சூழப்பட்டிருக்கிறது. வரலாற்று ரீதியாகவே அரபுலகில் நகரத்தார்களும், பதூயீன் நாடோடிகளும் அதன் சமூக, கலாசார அரங்கை (அரசியல் மற்றும் வர்த்தகம்)ஆக்கிரமித்துக்கொண்டனர். இவை விவசாய உற்பத்தியாளர்களை கீழ்மட்டத்திற்கு மாற்றின. இந்த உருவாக்கம் பிராந்தியத்தின் புவி அரசியல் நிலைமையை தலைகீழாக்கியதுடன் மனித இனத்தை ஐரோப்பாவிலிருந்து வடக்கு மற்றும் மேற்கிற்கும், ஆப்ரோ-ஆசியா தெற்கு மற்றும் கிழக்காகவும் பிரிவினை செய்தது. அரபுலகின் இவ்வாறான நீண்டதூர வர்த்தகம் மற்றும் அந்நிய படையெடுப்பு காரணமாக அதன் அரசியல் பொருளாதாரம் இன்னொரு கட்டத்திற்கு நகர்ந்தது. ஆக தந்தைவழி சமூகத்திற்கும், மரபார்ந்த சமூகத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது.தந்தை வழி சமூகம் குறிப்பிட்ட நிலையில் சமூக பொருளாதார கட்டமைப்பாக இருக்கிறது. மரபார்ந்த சமூகம் இதற்கு வெளியே புராதன இனக்குழு கூட்டமைப்பாக இருக்கிறது. மார்க்ஸ் இதனை தொழில் சமூகத்தின் வளர்ச்சிக்கு முந்தைய சமூக உருவாக்கம் என்கிறார். மேலும் நவீனத்துவ கருத்தாக்கம் வளர்ந்த நிலையில் அதற்கும் தந்தைவழி சமூகத்திற்குமான உறவு முறையை ஹிசாம் சரபி விவரிக்கிறார்.
வகை நவீனத்துவம் தந்தைவழி சமூகம்

1.அறிவு சிந்தனை/ காரியவாதம் தொன்மம்/நம்பிக்கை

2.எதார்த்தம் விஞ்ஞானம் மதம்

3.மொழி பகுப்பாய்வு வாய்மொழிகூறு

4.அரசாங்கம் ஜனநாயகம்/ சோசலிசம் நவதந்தைவழி
சுல்தானியம்

5.சமூக உறவு கிடைமட்ட நிலை செங்குத்தான நிலை

6.சமூக தராதரம் வர்க்கம் குடும்பம்/கோத்திரம்

ஆக நவீனத்துவத்தை ஐரோப்பாவின் மூலக்கூறாக காணும் சரபி தந்தைவழி சமூகத்தை அரபுலகின் வார்ப்பாக காண்கிறார். மேற்குலகம் நாகரீகத்தை சமூகங்களுக்கிடையேயான உறவு முறை, பலதரப்பட்ட கலாசாரங்களின் ஊடலாக பார்த்து வந்திருக்கிறது. இந்நிலையில் நவீன ஐரோப்பா தந்தைவழி அரபு சமூகத்தின் மீது காலனியாக்கம் செய்ததன் மறு விளைவே நவ தந்தைவழி சமூக உருவாக்கம் என்கிறார் சரபி. அது ஏகாதிபத்தியம் மற்றும் தந்தைவழி சமூகம் ஆகிய இரண்டும் இயைந்த ஒன்றாகும். ஆண் முன்னிலை பெறும் தற்போதைய அரபு சமூகத்தில் அவனே சமூக அதிகார மையமாகவும் இருக்கிறான். இதனை குறித்து ஆராய்ந்த சரபி அரபுலகின் மானுடவியலாளராக இருக்கிறார்.

5 comments:

maatrupirathi said...

இலக்கியம் ஒரு தனிவகையினமா? இலக்கியமற்றவை என வரலாற்றின் நெடிய பக்கங்களில் புறமொதுக்கப்பட்ட பிரதிகள் கலகம் செய்யும் காலமாக இன்றைய எழத்துக்களைப் பார்க்கிறேன்.
எழுத்துக்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டன எனஅறிவிப்பதும்,அதைக்கொண்டாடுவதுமான ஓரு எழுத்து இயக்கத்தை எம்மோடு பகிர்ந்து கொள்ளலாம்.
நவ தந்தைவழி சமூகம் உரையாடத் தூண்டும் இடம்.உலகம் ஆண்களால் மட்டுமேயானதாக கட்டமைக்கப்பட்டு கதையாடப்படுவதற்கு எதிராக போராடவேண்டியிருக்கிறது.
றியாஸ் குரானா. www.maatrupirathi.blogspot.com

maatrupirathi said...

இலக்கியம் ஒரு தனிவகையினமா? இலக்கியமற்றவை என வரலாற்றின் நெடிய பக்கங்களில் புறமொதுக்கப்பட்ட பிரதிகள் கலகம் செய்யும் காலமாக இன்றைய எழத்துக்களைப் பார்க்கிறேன்.
எழுத்துக்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டன எனஅறிவிப்பதும்,அதைக்கொண்டாடுவதுமான ஓரு எழுத்து இயக்கத்தை எம்மோடு பகிர்ந்து கொள்ளலாம்.
நவ தந்தைவழி சமூகம் உரையாடத் தூண்டும் இடம்.உலகம் ஆண்களால் மட்டுமேயானதாக கட்டமைக்கப்பட்டு கதையாடப்படுவதற்கு எதிராக போராடவேண்டியிருக்கிறது.
றியாஸ் குரானா. www.maatrupirathi.blogspot.com

maatrupirathi said...

இலக்கியம் ஒரு தனிவகையினமா? இலக்கியமற்றவை என வரலாற்றின் நெடிய பக்கங்களில் புறமொதுக்கப்பட்ட பிரதிகள் கலகம் செய்யும் காலமாக இன்றைய எழத்துக்களைப் பார்க்கிறேன்.
எழுத்துக்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டன எனஅறிவிப்பதும்,அதைக்கொண்டாடுவதுமான ஓரு எழுத்து இயக்கத்தை எம்மோடு பகிர்ந்து கொள்ளலாம்.
நவ தந்தைவழி சமூகம் உரையாடத் தூண்டும் இடம்.உலகம் ஆண்களால் மட்டுமேயானதாக கட்டமைக்கப்பட்டு கதையாடப்படுவதற்கு எதிராக போராடவேண்டியிருக்கிறது.
றியாஸ் குரானா. www.maatrupirathi.blogspot.com

றியாஸ் குரானா - மஜீத் said...

இலக்கியம் ஒரு தனிவகையினமா? இலக்கியமற்றவை என வரலாற்றின் நெடிய பக்கங்களில் புறமொதுக்கப்பட்ட பிரதிகள் கலகம் செய்யும் காலமாக இன்றைய எழத்துக்களைப் பார்க்கிறேன்.
எழுத்துக்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டன எனஅறிவிப்பதும்,அதைக்கொண்டாடுவதுமான ஓரு எழுத்து இயக்கத்தை எம்மோடு பகிர்ந்து கொள்ளலாம்.
நவ தந்தைவழி சமூகம் உரையாடத் தூண்டும் இடம்.உலகம் ஆண்களால் மட்டுமேயானதாக கட்டமைக்கப்பட்டு கதையாடப்படுவதற்கு எதிராக போராடவேண்டியிருக்கிறது.
றியாஸ் குரானா. www.maatrupirathi.blogspot.com

எச்.பீர்முஹம்மது said...

ரியாஸ் குரானா,

உலகம் நாகரீக காலகட்டத்திற்கு பிறகு தந்தைவழி சமூக கட்டமைப்பாகவே மாறி விட்டது. நவீனத்துவ காலகட்டத்தில் அது உருமாற்றம் அடைந்து நவதந்தை வழி சமூகமாக மாறி விட்டது. இதனை பற்றிய ஹிசாம் சரபியின் ஆய்வு முறையை இன்னும் பார்க்கலாம். புறமொதுக்கப்பட்ட எழுத்துக்களுக்கு உயிர் கொடுக்கும் முயற்சி இன்று தமிழில் நிறையவே நடந்து வருகிறது. அதற்கும் ஆதிக்க எழுத்துக்களுக்குமான போட்டியே இன்றைய தமிழ்ச்சூழல்.