காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Monday, October 5, 2009

இடம் பெயர்ந்த மனிதர்கள்- எட்வர்ட் செய்த்தும் ஓரியண்டலிசமும்


யார் தன் சொந்த நாட்டுக்கு திரும்பி செல்ல வாய்ப்பு மறுக்கப்படுகிறதோ அதுவே நாடுகடத்தல் என்பார் எட்வர்ட் செய்த். எதார்த்த வாழ்வில் நகர முடியாத மனிதன் புலம்பெயர நிர்பந்திக்கப்படுகிறான். அவன் மனம் ஒரு வலியின் அலையோட்டமாக மாறுகிறது.தன் இருப்பிடத்தின் எல்லா உணர்வுகளும் விடுபட்டு தண்ணீரிலிருந்து கரைஒதுங்கும் மீன்கள் மாதிரி அவனின் புலம் பெயர்தல் அமைகிறது. குணாம்சரீதியில் புலம்பெயர்தலை நான்காக வகைப்படுத்தலாம். 1.நாடுகடத்தப்பட்டவர் 2.குடிபெயர்ந்தோர் 3. அகதிகள் 4. தற்காலிக குடிபெயர்ந்தோர் அல்லது புகலிகள். இதில் நாடுகடத்தலும் தற்காலிக குடிப்பெயர்வும் தனி நபரை சார்ந்து அமைகிறது. உலக வரலாற்றில் பெரும்பாலும் அரசியல் கைதிகள், அறிவு ஜீவிகள் ஆகியோர் நாடுகடத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இது அவர்களின் உடல் மற்றும் மனம் ஆகியவற்றை சதுரமாக்கி சிறைப்படுத்துகிறது. கிராம்சி, அனா அரந்த், டிராஸ்கி ஆகியோர் இவ்வகைப்பாட்டிற்குள் வரக்கூடியவர்கள். ஒரு தனித்துவமான உலகம் அவர்களுக்குரியது. பெரும்பாலும் நாடுகடத்தல் அரசியல் காரணங்களுக்கானதாகவே வரலாறு நமக்கு தெரிவிக்கிறது. தற்காலிக குடிப்பெயர்வு பொருளாதார மற்றும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கானது. தன் சொந்த நாட்டின் காலநிலையும் அதற்கான ஒரு காரணி. முதல் உலகப்போருக்குப்பின் பிரான்சில் அமெரிக்கர்களின் வருகை மற்றும் ஐம்பதுகளுக்கு பிறகான சூழலில் கேரளாவில் பெரும் எண்ணிக்கையிலான மலையாளிகளின் வளைகுடா பெயர்வு மற்றும் ஜேம்ஸ் ஜாய்ஸ், பிரக்ட், கன்ராட் ஆகியோரின் பாரிஸ், பிரிட்டன், சுவிட்சர்லாந்து வருகை முதலானவற்றை குறிப்பிடலாம். குடிப்பெயர்வு என்பது காலனியத்தோடு தொடர்பு கொண்டது. இரு நூற்றாண்டுகளாக உலகை பிரிட்டன், பிரான்சு மற்றும் ஜெர்மனி பங்கு போட்டு கொண்டது இதனின் தொடர்ச்சி தான். இத்தகைய எல்லை விரிவாக்க செயல்தந்திரங்கள் மூலம் தான் காலனியம் ஒரு நாட்டை கையகப்படுத்துகிறது.. சுதேசிகளின் பொருளாதாரம் மற்றும் இறையாண்மை காலனிய பிடியில் வந்ததன் விளைவாக காலனிய நாடுகளுக்குள் இடம்பெயர்தல் நடந்தது. அல்ஜீரியர்களின் பிரான்சு குடியேற்றம், ஆப்ரிக்க, எகிப்திய, யூத மற்றும் இத்தாலியர்களின் அமெரிக்க குடியேற்றம், பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழர்களின் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், புருனே, பர்மா, மற்றும் மொரிசியஸ் நாடுகளுக்கான குடியேற்றம்,17 ஆம் நூற்றாண்டில் பிரான்சிலிருந்து ஹுகினஸ் இனத்தவரின் கட்டாய இடப்பெயர்வு போன்றவை அன்றைய மக்களின் தவிர்க்க முடியாத வாழ்நிலையாக இருந்தன. டெரி ஈகிள்டன் இதை ஸ்தாபிக்கப்பட்ட ஒழுங்கான வாழ்வின் நிலைகுலைவு என்பார். இருபதாம் நூற்றாண்டின் இடப்பெயர்வு வரலாற்றில் பெருங்கொடுமையானதாக இந்திய பாகிஸ்தான் பிரிவினை அமைந்தது. பீகார், மேற்குவங்கம், பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் காலனியம் ஏற்படுத்திய சமூக பிரிவினை கொடூரம் காரணமாக நேர் எதிரான திசையில் இடம்பெயர நிர்பந்திக்கப்பட்டனர். இந்தியாவின் எல்லா வரலாற்று நகர்வுகளுமே இதை தொட்டு விட்டு தான் செல்கின்றன. தாரிக் அலி இந்நிகழ்வை திருப்பியளிக்க முடியாத ஆன்மாவின் பெரும் துயரம் என்றார். அகதிகள் என்பவர்கள் மேற்கண்ட மூன்று வகையான பிரிவினர் அடையும் மனச்சலனத்தை விட அதிகபடியான சலனத்துக்கு உட்படுகிறார்கள். சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாத நிலையில் புதிய கலாசார வாழ்முறை திணித்தலின் எல்லையில் அடைபடுகிறார்கள். உலக வரலாற்றில் ரோம சாம்ராஜ்யம் ஏற்படுத்திய மிகப்பெரும் அகதித்தனத்தின் பெரும் பரிணாமமாக சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதி அமைந்தது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு நடவடிக்கை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான பாலஸ்தீனியர்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றார்கள். இதற்கு அறிவுத்துறையின் கரிசனமும் இருந்தது. ஹிட்லரின் யூதர்களுக்கு எதிரான இன ஒதுக்கல் நடவடிக்கையோடு இது ஒப்பிட்டு பேசப்பட்டது. இரண்டாவது மிகப்பெரும் அகதிகள் ஆப்கானியர்கள். ஆப்கானின் உள்முக சூழல் இதற்கு காரணம். அதற்கு அடுத்த நிலையில் சிங்கள பேரினவாதம் காரணமாக இலங்கை தமிழர்களின் புலப்பெயர்வு, இத்தாலிய பாசிசத்தின் விளைவான யூகோஸ்லேவியர்களின் இடப்பெயர்வு மற்றும் செர்பியர்கள், ஈராக்கியர்கள் ஆகியோரை குறிப்பிடலாம். புலம் பெயர்ந்தவர்களின் தன்னிலை என்பது அந்நியப்பட்ட கலாசாரத்திற்கும் அவர்களால் நிறுவப்பட்ட சொந்த கலாசாரத்திற்கும் இடையே பெரும் பாரதூர இடைவெளியை ஏற்படுத்துகிறது. இந்த அனுபவத்தை அனா அரந்த் இவ்வாறு பதிவு செய்கிறார். "நாம் நம் வீடுகளை இழந்தோம். அது தினசரி வாழ்வின் அர்த்த நேர்த்தியை வெளிப்படுத்துகிறது. தொழில்களை இழந்தோம். அது உலகத்தின் எங்காவது ஒரு பகுதியில் நாம் வைக்கும் நம்பிக்கையாகும். மொழியை இழந்தோம். அது நம் உணர்ச்சிகள், உடற்குறிகள், எதிர்வினைகள் ஆகியவற்றை சிதைக்கிறது." இவ்வாறு சொன்ன அனா புலம் பெயர்தலின் அனுபவ வலிகளைப் பற்றி விரிவாக ஆராய்ந்தார். ஹிட்லரின் நாடுகடத்தல் குறித்ததாக அது இருந்தது. புலம் பெயர்தலின் இப்படியான எல்லா அனுபவங்களுமே நம்முன் புதிய கலைச்சொற்களை கொண்டு வருகின்றன. உலகம் என்ற பெரிய கிராமத்தினுள் அவை எதிரும் புதிருமான திசையில் இடையறாது பயணிக்கின்றன. செய்த் இந்த இடம்பெயர்தல் குறித்து பல தருணங்களில் விரிவாக ஆராய்ந்தார். இதற்காகவே அவரின் Reflections of exile வெளிவந்தது. இஸ்ரேலை அடிப்படையாக வைத்து நாடுகடத்தலை ஆராய்ந்தார். பாலஸ்தீனியர்களின் பிரதேச அந்நியம் உலக இடம்பெயர்தல் வரலாற்றில் மிகுந்த துயரமாக இருக்கிறது. லௌகீக வாழ்வு அதன் சுய அர்த்தத்தை இழக்கும் போது வாழ்வின் இயக்கம் என்பது போராட்ட வடிவமாகவே இருக்கும். டயஸ்போரா என்ற கட்டாய இடப்பெயர்வை குறிக்கும் சொல் செய்த்திற்கு யூத ஆக்கிரமிப்பாளர்களின் பாலஸ்தீனியர்கள் மீதான ஒடுக்குமுறையை குறிக்க பயன்பட்டது. செய்த் அதை மாற்று அர்த்தத்தில் பார்த்தார். ஒடுக்குமுறை மற்றும் கட்டாய இடப்பெயர்வு ஆகியவற்றை குறிக்கும் சொற்கள் எல்லா சூழலிலும் அதிகார வர்க்கத்திற்கு ஒட்டுமை உடையதாக இருக்கக்கூடாது. மாறாக அவை அடித்தள மக்கள் சார்பாக திருப்பப்பட வேண்டும் என்றார். இதற்காக இவை சார்பான சொல்லாடல்களை அதிகம் உற்பத்தி செய்ய முயன்றார். இடம்பெயர்தல் மற்றும் அகதியாக்கப்படல் குறித்த எட்வர்ட் செய்த்தின் கோட்பாடுகள் ஓரியண்டலிசத்துடன் நீட்சியடைபவை. காரணம் உலக வரலாற்றில் கட்டாய இடப்பெயர்வுக்கு அதிகம் ஆளாக்கப்பட்டவர்கள் கீழைச் சமூகத்தவரே. இதனடிப்படையிலான கீழை வரலாறு சராசரி மனித வாழ்விலிருந்து அந்நியப்பட்டு போன தவிப்புகளையும், தொடர்ந்த வலிகளையும் உள்ளடக்கி இருக்கிறது. அவை வெறுமனே காலம் சார்ந்த ஒன்றாக இல்லை. மாறாக வெளி சார்ந்தும் இருக்கிறது. நெப்போலியன் காலந்தொட்டு தொடங்கிய மேற்கின் கிழக்கு மீதான ஆக்கிரமிப்பு தற்போது வளரும் கீழைநாடுகள் அல்லது மூன்றாம் உலக நாடுகளின் சமூக கட்டுமானத்தில் மிகப்பெரும் தகர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மூன்றாம் உலக மக்கள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்கள். கீழைச்சமூகத்தில் பிரான்சு மற்றும் பிரிட்டனின் தலையீடு என்பது வரலாற்று மற்றும் கலாசார ரீதியான அளவு மற்றும் தர மாறுபட்டை உட்கொண்டிருக்கின்றது.குறிப்பாக இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய கட்டத்தில் இந்த தலையீட்டின் எல்லை மிகவும் நீண்டது.கீழைச்சமூகத்தை பொறுத்தவரை இந்திய சமூகம், புராதன பைபிள் நிலங்கள், செமிட்டிய நாகரீகம், நறுமண வர்த்தகம், காலனிய இராணுவம், கீழை சமூக மதக்குழுக்கள், தத்துவங்கள், வரலாறு இவற்றின் கூட்டுத்தொகையாக இருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய சிந்தனையாளரான விக்கோ மனிதன் அவனுடைய வரலாற்றை தானே உருவாக்கிக் கொள்வதாக நம்பினார். அவர்களுக்கு எது தெரிய முடியுமோ அதை உருவாக்குகிறார்கள். அது புவியியல் ரீதியாகவும் நீள்கிறது. ஆக ஓரியண்டலிசம் என்பது வெறும் அரசியல் தன்னிலையோ அல்லது கலாசாரம், நிறுவனம், பிரதிகள் ஆகியவற்றின் தொகுப்போ அல்ல. மாறாக புவியரசியல் வெளிப்பாட்டின் பகிர்வே. இது அழகியல், பொருளாதார, சமூக, வரலாற்று, இலக்கிய தொகுப்புகளின் நீட்சியாகவும் இருக்கிறது. கிழக்கின் மீதான மேற்கின் ஆக்கிரமிப்பு என்பது பதினேழாம் நூற்றாண்டின் இறுதிபகுதியிலிருந்தே தொடங்கியது என்கிறார் செய்த். பிரிட்டனின் பொதுச்சபையில் 1910 ல் ஆர்தர் ஜேம்ஸ் பால்பரின் உரை முக்கியமானது." நாம் பிரச்சினைகளை எகிப்தில் இருந்து கையாள வேண்டும். அது மொத்ததில் வித்தியாசமான வகைப்பாட்டை சார்ந்தது. பால்பர் பிரிட்டன் பாராளுமன்றத்தில் நீண்டகாலம் உறுப்பினராக இருந்தவர். அயர்லாந்தின் முதன்மை செயலாளராக இருந்தவர். லார்டு சலிஸ்பரியின் செயலாளராக இருந்தவர். இந்தியா மீதான பிரிட்டனின் ஆக்கிரமிப்பு தருணத்தில் பால்பர் முக்கிய பங்காற்றினார். மேலும் 1882 ல் எகிப்து மீதான ஆக்கிரமிப்பு தருணத்திலும் அவரின் பங்களிப்பு தொடர்ந்தது. இவரின் பிரகடனம் அடிப்படையில் தான் பாலஸ்தீன் இரண்டாக பிரிக்கப்பட்டு இஸ்ரேல் உருவானது. எட்வர்ட் செய்த்தை பொறுத்தவரை ஓரியண்டலிசத்திற்கான தேர்வு என்பது நீண்டகாலத்தை சார்ந்தது. இந்த சொல்லாடல் சாசர், மாண்டிவெல்லி, ஷேக்ஸ்பியர், டிரைடன், மற்றும் பைரன் ஆகியோரால் பயன்படுத்தப்பட்டது. இது ஆசியா மற்றும் ஆப்ரிக்கா ஆகியவற்றின் பிரதேச, அற, கலாசாரம் இவற்றின் உள்ளடக்கத்தை கொண்டிருக்கிறது. பால்பர் எகிப்து விஷயத்தில் மிகுந்த ஆர்வமாக இருந்தார். அவரின் எகிப்து மீதான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தினார். எகிப்தை பற்றிய நம் அறிவானது இராணுவ மற்றும் பொருளாதார பலத்தை முதன்மையாக கொண்டதல்ல. மாறாக அது எகிப்திய நாகரீகத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. அது பற்றிய அறிவே நமக்கு முக்கியம் என்றார். இவை தன்னிலைக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்றார் பால்பர். மேலும் அந்த அறிவின் நோக்கம் என்பது ஓரியண்டல் பற்றிய உள்ளடங்கிய பரிசோதனையே. அவற்றின் பின் விளைவுகள் பற்றி பால்பர் இவ்வாறு குறிப்பிட்டார்." எல்லாவற்றுக்கும் மேலாக நாம் இந்த விஷயத்தில் எதார்த்தத்தை புரிந்து கொள்ள முயல வேண்டும். மேற்கத்திய தேசங்கள் வரலாற்றில் உருவான பிறகு அவற்றின் தொடக்கமே அவை ஒவ்வொன்றுக்குமான சுய - அரசுகள் தான். அது அவர்களின் நலனை சார்ந்தே இருந்தது. கிழக்கத்திய தேசங்களை பொறுத்தவரை அவற்றின் வரலாற்றில் சுய அரசுக்கான தடத்தை நாம் பார்க்கவே முடியாது. அவற்றின் பெரிய நூற்றாண்டுகள் இடைவெளியில் சர்வாதிகார அரசுகளாக அவை கடந்து சென்றிருக்கின்றன. அவற்றில் ஒரு வெற்றியாளர் மற்றொரு வெற்றியாளரை தொடர்ந்து சென்றிருக்கிறார். ஒருவர் மற்றொருவர் மீது ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார். ஆனால் நம்மை போன்ற சுய அரசை ஏற்படுத்துவதற்கான புரட்சிகர விதியோ , செயல்பாடோ அங்கு ஏற்பட்டதில்லை. " பால்பரின் இந்த கருத்தே தவறானது. காரணம் பலம் பொருந்திய ரோம பேரரசு பலவீனமான ஜெர்மானியர்களால் வெற்றிகொள்ளப்பட்டிருக்கிறது. கிழக்கத்திய சமூகத்தை சார்ந்த மூர்கள் முந்நூறு வருடங்கள் ஸ்பெயினை ஆண்டிருக்கிறார்கள். அதன் பிறகு ஐரோப்பிய சர்வாதிகார அரசுகளின் நீண்டகால திட்டத்தின் படி அவர்கள் அங்கிருந்து துரத்தப்பட்டார்கள். மேற்குலகு வரலாற்றை நான்காம் பரிமாணத்தில் கட்டமைக்கும் திறனை பெற்றிருப்பதே அதன் மிகப்பெரும் பலம்.
எட்வர்ட் செய்த்தை பொறுத்தவரை ஓரியண்டலிசம் என்பது ஓர் அரசியல் கோட்பாடு என்ற வகையில் மேற்குலகை விட பலவீனமாக இருக்கிறது. அது கலாசார கருவி என்ற நிலையில் முழுவதுமான செயல்பாடு, உண்மை விருப்புறுதி, அறிவுநிலை ஆகியவற்றை கொண்டிருக்கிறது. செய்த் தன் ஓரியண்டல் ஆய்வு முறையை மூன்றாக வகைப்படுத்தினார்.
1. ஓரியண்டலின் நோக்கம் 2.ஓரியண்டலிச கட்டுமானம் மற்றும் மறு கட்டுமானம் 3. தற்போதைய ஓரியண்டலிசம். முதற்பகுதியில் எட்வர்ட் செய்த் மேற்கில் கல்வி துறை சார்ந்த எல்லா சொல்லாடல்களும் ஓரியண்டலிச நோக்கத்தை கொண்டவையல்ல. மேலும் எல்லா கலாசாரங்களும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மற்ற கலாசாரங்களை அந்நியமானவையாகவே காண்கின்றன. கலாசார ஆதிக்கங்கள் இந்த இடத்தில் தான் உருவாகின்றன. மேலும் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய அறிவுஜீவிகள் பலர் பேச்சிலும் எழுத்திலும் கீழை கலாசாரத்தை அந்நியமானவையாகவும், தாழ்நிலையாகவும் கருதினர். பால்பர், ஷேக்ஸ்பியர்,பைரான், நெப்போலியன், டான்டே, சாசர் போன்றவர்கள் இதில் முக்கியமானவர்கள். இரண்டாம் பகுதியில் செய்த் எவ்வாறு ஓரியண்டலிச சொல்லாடல் ஒரு பிரதேசத்திலிருந்து மற்றொரு பிரதேசத்திற்கு, ஒரு அரசியல் தலைவரிடமிருந்து மற்றொரு நூலாசிரியருக்கு செல்லும் போது மாறுதலுக்குட்படுகிறது என்பதை ஆராய்ந்தார். இந்த சொல்லாடலே மேற்குலகால் மேற்கொள்ளப்படும் எல்லா ஆய்வுகளுக்கும் விரிந்த அடிப்படையை ஏற்படுத்தும் தரைக்கல். இதன் நீட்சி தான் கீழைச்சமூகத்தின் விரிவாக்கம், வரலாற்று எல்லை,வகைப்பாடு இவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. உதாரணமாக ஐரோப்பிய சிந்தனையாளரான எட்வர்ட் வில்லியம் லேனை செய்த் குறிப்பிடுகிறார். வில்லியம் லேன் எகிப்தில் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் மட்டுமே இருந்து விட்டு ஐரோப்பாவுக்கு திரும்பி வந்து "Manners and customs of modern Egypt " என்ற நூலை எழுதினார். அது ஐரோப்பாவில் மிகுந்த விற்பனையை எட்டியது. பிந்தைய எல்லா கீழைத்தேய பயணிகள் மற்றும் கல்வியாளர்களுக்கு இதுவே அடிப்படையாக இருந்தது. மூன்றாம் பகுதியான தற்போதைய ஓரியண்டலிசம் பகுதியில் செய்த் மொத்த பின்தொடரலாக கலாசாரங்களின் அந்நியமாதல் என்பது என்ன? கலாசார தகவமைப்பில் மதங்கள், மற்றும் நாகரீகங்களின் பங்கு என்ன? என்பதை குறித்து விரிவாக ஆராய்ந்தார். இவை செய்த்துக்கு ஓரியண்டல் பற்றிய சிந்தனை தொடர்ச்சியை அளித்தன. மேலும் புரட்சிகர சொல்லாடல் அரபுலகில் பன்மீய அர்த்தங்களை உற்பத்தி செய்வதாக எட்வர்ட் செய்த கண்டறிந்தார். அதாவது கலகம், உணர்ச்சி பாவம், சுதந்திர இறையாண்மை, போராட்டம் ஆகிய வெவ்வேறு வடிவங்களில் பல தருணங்களில் வெளிப்பட்டிருக்கிறது. பதினொன்றாம் நூற்றாண்டில் தொடங்கிய இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிபகுதி வரை நீண்டது. கீழைச்சமூகங்களின் மேற்கத்திய புலப்பெயர்வும், வாழ்நிலை நெருக்கடியும் ஓரியண்டலின் எல்லையோடு நெருங்கி தொட்டுக்கொள்பவை.ஓரியண்டலிசம் மற்றும் இடம்பெயர்தல் குறித்த செய்த்தின் கோட்பாடுகள், எழுத்துக்கள் கிழக்கு மற்றும் மேற்கு வரலாற்றில் ஒரு நிலையான இடத்தை அவருக்கு அளித்திருக்கிறது. கீழைச்சமூகத்தின் புராதன, வரலாற்று தரவுகளை, தடங்களை தேடுதல் என்பது ஓர் அறிவுஜீவி என்ற நிலையில் செய்த்திற்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது. வேறொரு வாக்கியத்தில் சொன்னால் "கீழைச்சிந்தனைகளின் உலகளாவிய பரப்பெல்லை செய்த்தின் ஓரியண்டலிசம் வழியே சாத்தியப்பட்டது எனலாம்."
(உயிரோசை)

No comments: