காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Monday, October 19, 2009

அதிகார பரப்பின் பயங்கரம் குறித்து - நோம் சாம்ஸ்கியுடன் ஒரு நேர்காணல்










நோம் சாம்ஸ்கி உலகளாவிய மார்க்சிய/ எதிர் ஏகாதிபத்திய சிந்தனையாளர். உலகம் முழுவதும் தனக்கான விரிந்த வாசக அறிவு பரப்பை கொண்டவர். அமெரிக்காவின் ஏகாதிபத்திய செயல்பாடுகளுக்கு தீவிர எதிர் உருவமாக செயல்படுபவர். பல்கலைகழக வட்டாரத்தில் மொழியியல் கோட்பாட்டாளராக தன் பணியை சாம்ஸ்கி தொடங்கினார். மனித இனம் பிறக்கும் போது மொழி உள்வாங்கலுக்கான இயற்கையான இயந்திர அணுகுமுறையை கொண்டிருக்கிறது என்றார் சாம்ஸ்கி. ஐம்பதுகளில் மேற்கின் மொழியியல் தடத்தில் புதிய உத்திகளை அறிமுகப்படுத்திய சாம்ஸ்கி அதன் அடிப்படையிலான ஆய்வுகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார். உக்ரேனிய யூத வம்சத்தை சார்ந்த சாம்ஸ்கி தன் பத்தாவது வயதிலேயே பாசிசம் மற்றும் ஸ்பெயின் உள்நாட்டுப்போர் குறித்த கட்டுரைகளை எழுதினார். மொழியியலில் இவரின் முக்கிய ஆய்வு முறை என்பது மொழி மற்றும் மனம் இவற்றுக்கிடையேயான உறவை ஆராய்ந்ததாகும். இது மொழி மற்றும் மனம் (Language and mind )என்ற பெயரில் பின்னர் நூலாக வெளிவந்தது. மிகேல் பக்தின் மற்றும் விட்கென்ஸ்டீன் ஆகியோரின் பின்தொடரலான சாம்ஸ்கியின் ஆய்வு மற்றும் சிந்தனைதளம் தொண்ணூறுகளில் அரசியல் கோட்பாடுகளை நோக்கி நகர்ந்தது. மார்க்சியம் , எதிர் ஏகாதிபத்தியம், காலனியம், தாராளமயம் போன்ற கோட்பாடுகளில் ஆர்வம் கொண்டு அது தொடர்பான ஆய்வுகளில் கவனம் செலுத்தினார். மார்க்சியம் பற்றிய ஆய்வுகளில் ரஷ்ய மார்க்சியரான தியோடர் ஷானினை தன் முன்னோடியாக கருதினார். வியட்நாம் போரின் போது அமெரிக்காவிற்கு எதிராக கடுமையாக எதிர்வினையாற்றினார். அதன் தொடர்ச்சியில் அறிவுஜீவிகளின் பொறுப்புணர்வு (Responsibility of intellectuals) என்ற நூல் சாம்ஸ்கியிடமிருந்து வெளிவந்தது. அநேகமாக இரண்டாயிரத்திற்கு பிறகு அவரின் சிந்தனை தளம் மொழியியலில் இருந்து விலகி அரசியல் கோட்பாடுகள் மீதே அதிகமும் மிதந்து வருகிறது. அமெரிக்க எதிர்ப்பு நிலைபாட்டை எடுக்கும் காரணத்தால் இவருக்கு பல தரப்பில் இருந்தும் கொலைமிரட்டல்கள் வந்தன. இதன் காரணமாக இவருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பல்வேறு கோட்பாட்டு விஷயங்களில் மேற்கின் பல அறிவுஜீவிகளோடு உரையாடல் நடத்தி இருக்கிறார். அதில் அறிவு மற்றும் அதிகாரம் குறித்து எழுபதுகளில் மிஷல் பூக்கோவுடன் அவர் நடத்திய விவாதம் முக்கியமானது. ஐம்பதுகளில் இருந்து தொடங்கி அறுபதுக்கும் மேற்பட்ட நூல்கள் இதுவரை சாம்ஸ்கியிடம் இருந்து வெளிவந்திருக்கின்றன. language and mind, logical structure of linguistic theory, Refelctions on language, human rights and american foreign policy, The soviet union vs Socialism, on power and ideology, Culture of terrorism, Classwarfare, Necessary illusions, What uncle sam really wants,Pirates and Emperors: Old and new போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை. தமிழ் உள்பட இந்திய அறிவுத்துறை வட்டாரங்களில் பிரபலமானவரான சாம்ஸ்கி வழக்கமாக கருத்தரங்கிற்கு அறிவுஜீவிகள் வருகை தரும் அரபுபல்கலைகழகத்திற்கு இஸ்ரேல்-தேசியம்-பாலஸ்தீன் குறித்த கருத்தரங்கிற்காக சில மாதங்களுக்கு முன்பு வருகை தந்திருந்தார். தாரிக் அலி, சமீர் அமீன், லென்னி பிரன்னர் வரிசையில் இவரோடு உரையாட வேண்டும் என்ற ஆர்வம் மனதிற்குள் அலையாக ததும்பி கொண்டிருந்தது. மற்ற அறிவுஜீவிகள் மாதிரி இவரை அணுகுவது கடினம் என்ற மனப்பிம்பத்தை வழக்கமாக என்னை ஆதரிக்கும் அரபு பல்கலைகழக பேராசிரியர் முனீர் ஹசன் உடைத்தெறிந்தார். அவரின் துணையில்லாமல் இது நடந்திருக்காது. கால அவகாசம் கருதி குறைந்த நேரமே சாம்ஸ்கியுடன் நேர்காண முடிந்தது. இருந்தாலும் அந்த உரையாடல் நுட்பமானதும், செறிவானதுமான அறிவுபரப்பை உள்வாங்கி வெளிவந்ததில் எனக்கு நானே திருப்தியடைகிறேன். அதுவே என்னை முன்னோக்கி நகர்த்துகிறது. உன்னதம் மாதஇதழில் வெளிவந்த இந்த நேர்காணலை வலைப்பதிவு வாசகர்களுக்காக இங்கு மீள்பதிவு செய்கிறேன்.

எச்.பீர்முஹம்மது:- சாம்ஸ்கி, நீங்கள் மொழியியல் அறிஞராக அறிவுத்துறையில் நுழைந்தாலும் அரசியல் கோட்பாட்டாளராகவே அதிகமும் அறியப்படுகிறீர்கள். செப்டம்பர் 11 நிகழ்வுக்கு பிறகு உலகம் முழுவதும் அறியப்படும் அறிவுஜீவி. மொழியியல் மற்றும் பிற அறிவுத்துறை பகுதிகள் இவற்றை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்? உங்கள் பின்னணியோடு தொடங்கலாம்.





சாம்ஸ்கி:- என் முதல் அறிவார்ந்த ஈடுபாடு மொழியியல் வழி தான் நிகழ்ந்தது. மொழியின் எல்லை மற்றும் அதன் சாத்தியபாடுகள் குறித்து ஆராய வேண்டும் என்று இளமைக்காலம் முதலே ஆர்வம் கொண்டிருந்தேன். மொழி மீதான மனித பிரக்ஞை எத்தகையது? அதன் எதார்த்த வெளிப்பாடு என்பது என்ன? மாதிரியான கேள்விகள் என்னை ஆக்கிரமித்து கொண்டன. என் பின்னணி உக்ரேனிய யூத வம்சத்தோடு தொடர்புடையது. என் தந்தை அங்கிருந்து வந்தவர். செமிடிக் மொழிக்குடும்ப கிளையான யத்திஷ் மற்றும் ஹிப்ரு ஆகியவற்றின் பின்னணியில் நான் வளர்க்கப்பட்டேன். இதன் இன்னொரு தொடர்புறு தளத்தில் ஆங்கிலம் ஆட்கொண்டிருந்தது. இளமையில் ஹிப்ரு மொழி மற்றும் அதன் இலக்கியம் ஆகியவற்றை அறிதலுக்கான நிர்பந்தத்தில் இருந்தேன். அதன் காரணமாக ஹிப்ரு மொழியின் கட்டமைப்பு குறித்து அதிகம் படிக்க தொடங்கினேன். இவற்றிலிருந்து நான் கண்டறிந்த முடிவு என்பது மொழி என்பது வெறுமனே உரையாடல் கருவி அல்ல. அது இதை தாண்டிய மனித இயல்போடு பதிவுறும் ஒன்றாகும். மொழியின் இலக்கண அமைப்பு முறைக்கும் மனித நடத்தையியலுக்குமான தொடர்பு, அதன் வெளிப்பாடுகள் என்பதான எல்லை வரை நீண்டது. என் கல்வித்துறை வாழ்க்கையின் ஏறத்தாழ 25 ஆண்டுகளை மொழியியல் எடுத்துக்கொண்டது. பிறக்கும் குழந்தையின் மொழி எவ்வாறு இருக்கும்? அதற்கும் புறநிலை சமூகத்திற்குமான உறவு என்ன என்பதை குறித்து ஆராய்ந்தேன். உளவியலில் மொழி ஒரு செயல்பாட்டு கருவி. அதுவே மிகுந்த சாத்தியபாட்டை ஏற்படுத்தும் ஒன்று. ஒரு தனிமனிதன் மொழியை படிக்கும் போது ஒரே நேரத்தில் அறிவையும் அடைகிறான். அவனின் சிந்தனை தளத்தை அது பிரதிபலிக்கும் காலத்தில் நடத்தையியலை வடிவமைப்பதிலும் மொழி முக்கியமான இடத்தை அடைகிறது. என் எழுத்துவாழ்க்கையில், சிந்தனையில் மொழியியல் ஒரு கட்டத்தில் முன்னோக்கி நின்றது. எழுபதுகளில் நடந்த வியட்நாம் போர் எனக்கு அரசியல் கோட்பாடுகள் மீதான ஆர்வத்திற்கு வழி ஏற்படுத்தியது. அமெரிக்காவிற்கு எதிரான மிகவும் கொதிநிலையான மனநிலையில் அப்போது இருந்தேன். அதை எழுத்துக்கும் மனித இயல்புக்குமான இடைவெளியை நேராக்கும் முயற்சி எனலாம். தனிமனிதன் தன்னை அறிந்து கொள்வதில் இருந்து தொடங்கும் ஒரு நடவடிக்கை என இதை புரிந்து கொள்ள முடியும்.





எச்.பீர்முஹம்மது:- உங்களின் மொழியியல் ரீதியான ஆய்வு முறைகள் இன்னொரு கட்டத்தில் அதிகாரம், மனித இருப்பு, உலக போக்குகள் குறித்த ஆய்வுபரப்பாக விரிவடைந்தது. இது குறித்த உங்களின் உரையாடல்கள், விவாதங்கள் முக்கியமானவை. அறிவுஜீவிகள் பலருடன் இது சார்பான விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறீர்கள். குறிப்பாக மிஷல் பூக்கோவுடன் எழுபதுகளில் நீங்கள் நடத்திய விவாதம் முக்கியமானது. அதில் நீங்கள் உங்கள் தரப்பாக முன்வைத்த தரவுகளை நடப்பு சூழலில் எவ்வாறு அணுகுறீர்கள்?தற்போது அறிவு என்பதையே அதிகாரம் எனக் கொள்ளலாமா?
சாம்ஸ்கி:- மனித இருப்பு அதன் இயல்பு மற்றும் மொழிக்கும் அதற்குமான உறவு என்பவற்றை குறித்து நான் அதிகம் சிந்தித்ததுண்டு. அது ஒரு வசந்த காலம். நானும் மிஷல் பூக்கோவும் நீதி, அதிகாரம் குறித்து விவாதித்த தருணங்கள். உலக வரலாற்றில் 17 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இயற்கையை அறிதல் என்பது மனித வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தி பார்க்கப்படவில்லை. இயற்கை இருப்பானது உயிருள்ளது உயிரற்றது என்ற வகைப்பாட்டிற்குள் மட்டுமே பார்க்கப்பட்டது. இயற்கை ஒரு விதமான வரிசைக்கிரமத்திற்குள் கொண்டுவரப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்கை அறிவியல் வெகுவாகவே மாறிவிட்டது. அதன் அளவுகோல்கள் விரிவடைந்து விட்டன. புதிய சொல்லாடல்கள் உருவாகி இருக்கின்றன. உதாரணமாக உயிரியலை எடுத்துக்கொள்ளுங்கள். மனித உடலமைப்பை விவரிக்கையில் திசுக்கள், செல்கள் என அது நீள்கிறது. செல்களின் கட்டமைப்பை பற்றி கூட விவரிக்கும். ஆனால் அவை அனைத்தையும் மனித இயல்போடு பொருத்தி பார்ப்பது சாத்தியமானதா? இல்லை என்பதே என் கருத்து. நியூட்டனின் புவிஈர்ப்பு விசையும், கார்ட்டீசிய விதியும் மனித இயல்போடு பொருந்தி வராதவை. இயற்பியலில் தனிமங்களின் சலனங்கள் வாழ்க்கை பற்றிய கருத்துருவத்தோடு சேர்த்து விளக்க முடியாதவை. உயிரியலும், இயற்பியலும் அதனதன் தனித்த கருதுகோள்களை கொண்டவை. அவை எவ்விதத்திலும் மனித இயல்பு மற்றும் வாழ்விற்கான கருதுகோள்களை உள்ளடக்கி இருக்கவில்லை. அவை இன்னொரு நெருக்கடியை நோக்கி நகரக்கூடும். மனித அறிவு என்பதை பொறுத்தவரை ஒருவர் தற்போது என்ன அறிந்திருக்கிறார்?. அதன் எல்லை என்ன? என்பதற்கும் இருபது வருடங்களுக்கு முன்னர் என்ன அறிந்திருந்தார் என்பதற்கும் இடைவெளி அதிகம். நான் பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு திரும்புகிறேன். தெகார்த்தே மற்றும் அவரை பின்தொடர்ந்தவர்களை எடுத்துக்கொள்ளுங்கள். தெகார்த்தே சிந்தனை மனம் உடலிலிருந்து தனித்து இயங்குவதாக நம்பினார். அவரளவில் அவரின் அன்றைய நிலைபாடு சரியானதாகவோ அல்லது தவறானதாகவோ இருந்திருக்கலாம். அன்றைய தருணத்தில் அது ஒரு விஷயமல்ல. ஆனால் இன்று இயற்கை அறிவியல் மாறி இருக்கிறது. மனம் பற்றிய கருதுகோள் மாறியிருக்கிறது. அறிவின் சலனம் ஒரு புள்ளியை நோக்கி நகர்கிறது. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அது அதிகாரம் என்ற சாரத்தை உள்ளடக்கி இருக்கிறது. அதன் பயன்மதிப்பு குறைந்து விட்டது. இந்நிலையில் அறிவார்ந்த சமூகத்திடம் இருவிதமான பணிகள் கோட்பாட்டளவிலும், செயல்நிலையிலும் காத்திருக்கின்றன. ஒன்று எதிர்கால நீதி சமூகத்தை அதற்கான மனித சமூக கோட்பாட்டு வடிவில் உருவாக்குவது. அதற்கான உறுதியான மனித கருத்துருவத்தை, சாரத்தை ஏற்படுத்துவது. இரண்டாவது பணி என்பது நம் சொந்த சமூகத்தில் அதிகாரத்தின் இயல்பை அதன் பயங்கரத்தை, அழிவை குறித்து தெளிவாக புரிந்து கொண்டு அதனை எதிர்கொள்வது. மேலும் அதிகார நிறுவனங்களை பற்றி அறிந்து கொள்வது.அது பொருளாதார, வணிக, மற்றும் நிதி நிறுவனங்கள் வடிவில் வெளிப்படும். பன்னாட்டு நிறுவன குழுமங்கள் (Multinational group of companies)இதன் சிறந்த பிரதிபலிப்பு. ஆக தற்போதைய சூழலிலும் அதிகாரத்தை அதன் அசலான தன்மையில் காண முடிகிறது.
எச்.பீர்முஹம்மது:- அதிகாரம் குறித்த உங்களின் பார்வை சார்பு நிலையாக இருப்பதாகவே நான் நினைக்கிறேன். மன்னிக்கவும். நீங்கள் இலங்கை விவகாரம் குறித்து லங்கா கார்டியன் பத்திரிகைக்கு நேர்காணல் அளித்திருந்தீர்கள். என்ன நிகழ்ந்தது என்றே தெரியவில்லை. அவர்கள் உங்களை வென்று விட்டார்கள். இலங்கை விவகாரம் பாலஸ்தீன் போன்றே இரு நூற்றாண்டுகளின் துயரம். அதற்கு மறுப்பாக என் நண்பர்கள் சிலர் (நாகர்ஜுனன், ஜமாலன், பெருந்தேவி) அறிவுத்துறையை சார்ந்த பலரின் கையெழுத்து அடங்கிய விளக்க அறிக்கை ஒன்றை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார்கள். நானும் அதில் கையெழுத்திட்டிருந்தேன். பாலஸ்தீன் குறித்த ஆழ்ந்த அனுதாபமும், அவதானமும் கொண்ட நீங்கள் ஏன் தெற்காசிய விவகாரங்களிலிருந்து உங்களை துண்டித்து கொள்கிறீர்கள்.? (Disconnect from south asian affairs)





சாம்ஸ்கி:- இலங்கை விவகாரம் குறித்து லங்கா கார்டியனுக்கு நான் அளித்த நேர்காணல் தவறாக பிரதியாக்கம் செய்யப்பட்டதாகவே கருதுகிறேன். எனக்கு அந்த விவகாரம் குறித்த விரிவான அகன்ற படிப்போ அல்லது பார்வையோ இல்லை. இதை நான் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலுக்கான பதிலிலும் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். நீங்கள் சொன்னது போன்றே அது ஒரு துயரம் தான். அது தீர்க்கப்பட வேண்டும். அங்குள்ள சிறுபான்மையினர் எல்லா வித சம உரிமைகளை பெற வேண்டும் என்பதே என் விருப்பம்.





எச்.பீர்முஹம்மது:- நான் இதற்கு முன் எல்லோரிடத்திலும் கேட்ட கேள்வியை தான் உங்களிடத்திலும் கேட்கிறேன். பாலஸ்தீன் விவகாரம் இந்த நூற்றாண்டிலும் தீர்க்கப்பட முடியாத நீண்டு விரிந்திருக்கும் ஒன்றாகவே இருக்கிறது. இது குறித்து நீங்கள் பல உரையாடல்கள் நடத்தியிருக்கிறீர்கள். மேலும் சில அறிவுஜீவிகள் இந்த விஷயத்தில் ஏன் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.? உங்கள் அதிகாரம், ஜனநாயக சமூகம் குறித்த பார்வைக்கு எவ்விதத்தில் இது பொருந்துகிறது? அங்கு தர மாற்றம் (qualitative change)சாத்தியமா?




சாம்ஸ்கி:- இஸ்ரேல்-பாலஸ்தீன் விவகாரம் இந்த பிராந்தியத்தில் ஒரு தொடர்கதை வடிவமாகவே இருக்கிறது. இங்கு தர மாற்றம் சாத்தியம் என்றே நான் கருதுகிறேன். ஒஸ்லோ சமாதான உடன்படிக்கைக்கு பிறகு இஸ்ரேலிய கல்வியாளரான சொல்மோ பென் அமி சொன்னார். " ஒஸ்லோ சமாதான உடன்படிக்கை நவகாலனிய வடிவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒருவரின் இயல்பான வாழ்க்கைக்கு மற்ற வரை சார்ந்திருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது." இதனால் தான் எட்வர்ட் செய்த் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தார். இஸ்ரேல் - எகிப்து இடையேயான ஒப்பந்தத்திற்கு சற்று முன்பு வரை காசா பகுதி பாலஸ்தீனியர்கள் 200 சிறுபகுதிகளாக துண்டாக்கப்பட்டு சிறைப்பட்டு கிடந்தார்கள். நீண்ட காலத்திற்கு பிறகே அவர்கள் இணைக்கப்பட்டார்கள்.இஸ்ரேல் விவகாரத்தின் கடந்து போன ஐம்பது ஆண்டுகளும் ஒரு துன்பியல் நாடகத்திற்கான முன்வடிவமே. பராக், பராஸ், ஷெரோன் என எல்லோருமே இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்காக போர்க்குற்றவாளிகளே. அமெரிக்காவின் அரவணைப்பு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கான மிகப்பெரும் காரணம். கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலான அதன் ராஜதந்திர ரீதியான உதவிகளும், நிதி உதவியும் இஸ்ரேலை குறிப்பிட்ட சட்டகத்திற்குள் வரும்படி செய்கின்றன. இஸ்ரேல் இந்த வரம்பிற்குள் நின்றே பாலஸ்தீனை எதிர்கொள்கிறது. அது சில தருணங்கள் தவிர மற்ற தருணங்களில் அதை மீறுவதே இல்லை. பாலஸ்தீன் சுயநிர்ணய உரிமை குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை பல தருணங்களில் அமெரிக்க வீட்டோ அதிகாரத்தின் மூலம் தோற்கடித்திருக்கிறது. மனித உரிமை அமைப்பில் கொண்டு வரப்பட்ட இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்களை கூட வாக்குரிமை மூலமும், அதிகார உத்தி வழியும் தோற்கடித்திருக்கிறது. அமெரிக்க என்பது உலகளாவிய அதிகார மையம். இஸ்ரேல் - பாலஸ்தீன் என்பது அதன் பக்க விளக்கே. அது மூன்றாம் உலக நாடுகளின் எரிசக்தி வளங்களை (Energy resources)கைப்பற்ற வேண்டும் என்ற தொலைதூர திட்டத்தின் பகுதியே. இஸ்ரேல் -அமெரிக்கா உறவு 1958 ல் இந்த அசாத்தியமான சூழலில் கூர்மையடைந்தது. இதே காலகட்டத்தில் அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் அப்போது வளர்ந்து வந்த அரபு தேசியவாதத்தை எதிர்கொள்வதற்கான தர்க்க ரீதியான பின்தொடரலை ஏற்படுத்தியது. இஸ்ரேல் மட்டுமே இந்த பிராந்தியத்தில் மேற்குலக சார்பு நாடு. அமெரிக்க - இஸ்ரேல் கூட்டணி 1967 ல் மிக சக்திவாய்ந்த ஒன்றாக மாறியது. இதன் காரணமாக அதன் எதிர் நிலையிலிருந்த மற்ற அரபு சக்திகளுக்கு மிக சவாலான ஒன்றாக மாறியது. இந்த நிலையான வரம்பமைப்பில் அமெரிக்கா இஸ்ரேலின்பாலஸ்தீன் மீதான தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு நிழல் ஆதரவு கொடுக்கிறது. இஸ்ரேல்,பாலஸ்தீன் பகுதியில் தொடர்ச்சியாகவும், சில தருணங்களில் இடைவெளி விட்டும், மனிதப்படுகொலைகளை, ஆக்கிரமிப்பை, நிர்ப்பந்தமான இடப்பெயர்வை எவ்வித ஆரவாரமின்றி நிசப்தமாக நிறைவேற்றி வருகிறது. 1971 எகிப்து -இஸ்ரேல் ஒப்பந்தம் கூட சினாய் மலைப்பகுதியை பற்றி மட்டுமே கவலைகொண்டது. தொண்ணூறுகளில் கிளிண்டன் அரசாங்கம் இஸ்ரேலின் பராக் அரசிற்கு ஆச்சரியமான நிதியளிப்பு திட்டத்தை அளித்தது. இதன் தொடர்ச்சியில் இஸ்ரேல் பாலஸ்தீன் பகுதியில் கட்டுமான திட்டங்களையும், யூதர்களுக்கான வீடுகளையும் நிர்மாணித்தது. இதற்கு முந்தைய கட்டத்தில் 1981 ல் சவூதி அரேபிய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட சமாதான திட்டத்தையும் இஸ்ரேல் அமெரிக்க துணையுடன் நிராகரித்தது. அந்த திட்டம் இஸ்ரேலின் இருப்பையே கேள்விக்குறியாக்கி விடும் என்றது. 2006 ல் ஹிஸ்புல்லா பெயரில் லெபனான் மீதான படையெடுப்பு, சமீப காலத்தில் ஹமாஸ் பெயரில் காசா மீதான கொடூர தாக்குதல் இவை எல்லாம் அதன் சர்வாதிகார, ஆக்கிரமிப்பு கொடூரங்களை வெளிப்படுத்த போதுமானவை. இந்த இடத்தில் தேசிய இருப்பிட கருத்தாக்கம் கூர்மையான அதிகார வடிவமடைகிறது. அது ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கான கருத்தாக்கமும் கூட என்ற அர்த்தத்தில் விரிவடைகிறது. நீங்கள் கேட்டது மாதிரி மேற்கத்திய அறிவுஜீவிகளில் சிலர் இவ்விஷயத்தில் இஸ்ரேல் சாய்வாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. அதற்கு பென்குரியனே சொன்னார். "யூத பிரச்சினையை அற அடிப்படையில் அணுகுபவன் எதார்த்த யூதனே அல்ல" பூக்கோ அவர்களில் ஒருவர். நான் சில தருணங்களில் அவருடன் விவாதித்திருக்கிறேன். இந்த இடத்தில் சொல்ல முடியாத வேறு பெயர்கள் கூட இருக்கின்றன. அது எனக்கு வேறொரு அனுபவம் கூட. அறிவின் அதிகார பரப்பு என்பது கூட இது தானா என்பது குறித்து சிந்திக்க வேண்டியதிருக்கிறது.





எச்.பீர்முஹம்மது:- பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட போது அது எவ்வித காயத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அது ஜெர்மனியின் புவி அரசியல் காட்சியை தலைகீழாக்கியது. இது மாதிரியே நியூயார்க் இரட்டை கோபுரங்கள் நிகழ்வையும் நாம் கருத முடியுமா?9/11 நிகழ்விற்கான அடிப்படை காரணங்களாக எதை கருதுகிறீர்கள்? சர்வதேச பயங்கரவாதம் என்ற சொல்லாடல் இதன் பிறகு தானே உருவானது?





சாம்ஸ்கி:- பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட போது அது அங்குள்ள புவி அரசியல் நிலைமைகள் மீது பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் எல்லோராலும் கருதப்பட்ட வழிகள் அல்ல என்பது என் கருத்து. கொடூரமான செப்டம்பர் 11 நிகழ்வு உலக விவகாரத்தில் முற்றிலும் புதியது. அது அளவுகோல் மற்றும் குணாதிசய அடிப்படையில் அல்ல. மாறாக இலக்கு அடிப்படையிலானது. செப்டம்பர் 11 ன் கதாநாயகர்கள் அமெரிக்கா மீதான வெறுப்பும், கோபமும் கொண்ட குழுக்களின் அனுதாபத்தையும், ஆதரவையும் உள்வாங்கிக் கொண்டார்கள்.அமெரிக்க வரலாற்றை பொறுத்தவரை 1812 க்கு பிறகு பெரும் பிராந்தியத்தின் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இது. அமெரிக்கா இருபதாம் நூற்றாண்டில் மெக்சிகோ மற்றும் ஹவாய் தீவுகள் மீது தாக்குதலை தொடுத்து ஏராளமான மக்களை இடம்பெயர வைத்தது. பிலிப்பைன்ஸில் ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டனர். இதன் நீட்சி உலகின் மற்ற பகுதிகள் மீதும் பரவியது. இப்போது முதன்முதலாக துப்பாக்கி குண்டுகள் வேறு வழியில் திரும்பியிருக்கின்றன. இது தீவிர மாற்றம் கூட. இன்னொரு நிலையில் ஐரோப்பாவும் உலக வரலாற்றில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் முன்னிலையில் இருக்கிறது. வரலாற்றில் ஐரோப்பா மூன்றாம் உலக நாடுகளை மிகக்கொடூரமான முறையில் வெற்றிக்கொண்டது. சில விதிவிலக்கான தருணங்கள் தவிர மற்றபடி அவை எந்த புறசக்திகளாலும் வெற்றிக்கொள்ளப்படவில்லை. ஆக ஐரோப்பா செப்டம்பர் தாக்குதலை கண்டு அதிர்ந்ததில் ஆச்சரியமில்லை. இப்போது பயங்கரவாதம் என்ற சொல்லாடல் உலக அரங்கில் முன்னிலை பெற்றிருக்கிறது. நான் பயங்கரவாதம் என்பதை பலமானவர்களுக்கும் பலவீனமானவர்களுக்கும் இடையேயான போராட்டமாகவே எப்போதும் பார்த்து வந்திருக்கிறேன். கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் எகிப்தை கைப்பற்றிய போது கடற்கொள்ளையன் ஒருவன் அவரிடத்தில் சிறைபட்டான். அப்போது அலெக்சாண்டர் " நீ எப்படி கடற்பரப்பு முழுவதையும் கைப்பற்றுகிறாய்" என்று அவனிடம் கோபமாக கேட்டார். அதற்கு அவன் "நீங்கள் எப்படி உலகம் முழுவதையும் கைப்பற்றினீர்கள்" என்று திருப்பி கேட்டான். நான் ஒரு கப்பலை மட்டுமே கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன். ஆகவே நான் கொள்ளையன் என்று அழைக்கப்படுகிறேன். ஆனால் நீங்கள் பெரும் படையையே வைத்திருக்கிறீர்கள். ஆக நீங்கள் பேரரசு என்றழைக்கப்படுகிறீர்கள். இந்த பழங்கதையில் கடற்கொள்ளையன் சொன்ன பதில் அறிவுபூர்வமானது. நுண்மையானது. இந்த ஒப்பீட்டை தான் அமெரிக்க விஷயத்திலும் கையாள வேண்டியதிருக்கிறது. பயங்கரவாதம் (terrorism)என்ற சொல்லாடல் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஏகாதிபத்திய அரசுகளால் வழக்கத்திற்கு வந்தது. அந்த அரசுகளின் மக்கள் மீதான அடக்குமுறை திணிப்பை குறித்தது. கால தொடர்ச்சியில் வெகுஜன திரளின் சிந்தனையையும், கருத்து வெளிப்பாட்டையும் கட்டுப்படுத்தும் அரசுகளின் செயல்பாட்டை குறிப்பதற்கான சொல்லாடலாக இது மாறியது. பின்னர் அது சர்வாதிகார அரசுகளை எதிர்க்கும் மாற்று அரசுகளை குறிப்பதற்கான சொல்லாக மாறியது. தொடர்ச்சியில் அரசுகளை எதிர்க்கும் சிறுகுழுக்களையும், சிவிலியன்களையும் குறிப்பதற்கான சொல்லாக பரிணாமமடைந்தது. ஆக பயங்கரவாத சொல்லாடல் அதிகார மற்றும் கருத்தியல் நிலைபாடுகளுக்கு ஏற்ப தகவமைக்கப்படுகிறது. அமெரிக்காவை பொறுத்தவரை 19 ஆம் நூற்றாண்டில் அது சிலுவையுத்தம் (Crusade) என்ற சொல்லை பயன்படுத்தியது. பின்னர் போர் மற்றும் மனிதாபிமான தலையீடு (humanitarian intervention)என்பதாக மாற்றிக்கொண்டது. 1991 ல் வளைகுடா இராணுவ நடவடிக்கையை அது போர் என்றது. செர்பிய மீதான யுத்தத்தை மனிதாபிமான தலையீடு என்றது. அதன் நியாயப்பாட்டிற்காக பலவீனமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதன் பிறகு அமெரிக்கா ஆப்கானிஸ்தான், ஈராக் என்ற இரு யுத்தங்களை நிறைவேற்றி இருக்கிறது. இங்கு குற்றம் (crime)என்பது மனித இனத்திற்கான குற்ற நடவடிக்கையாக பார்க்கப்பட வேண்டும். செப்டம்பர் 11 க்கு பிறகு அமெரிக்கா பயங்கரவாதம் என்பதை சர்வதேசம் என்ற எல்லை விரிவாக்கத்திற்கு பயன்படுத்திக்கொண்டது. அதனை எதிர்ப்பது என்பதே பயங்கரவாத நடவடிக்கை என்பதாக சுயமாக அந்த சொல்லாடலுக்கு அமெரிக்கா விளக்கம் அளிக்க தொடங்கியது. அமெரிக்காவின் கருத்து வெளி கூட கண்காணிப்பிற்கு உட்பட்டது. நான் கூட சில தருணங்களில் அடையாளம் காண முடியாதவர்களால் மிரட்டப்பட்டேன். இப்போது அமெரிக்கா பொருளாதார அமைப்பு தகர்ந்திருக்கிறது. அதன் முதுகெலும்பான நிதி நிறுவனங்கள் பல திவாலாகி இருக்கின்றன. ஆக பனிப்போர் காலகட்டத்திலேயே அமெரிக்காவை முதலாளித்துவ வெற்றி என கொண்டாடியவர்கள் இப்போது அதற்கான விளக்கம் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது ஒபாமா அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பதை மாற்றி விட்டு புதிய சொல்லாடலுக்கான மொழி சாத்தியங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வரலாற்றில் எந்த அதிகார கிடங்குகளும் நிலையானதல்ல என்பதற்கான உதாரணங்கள் நம் கண்முன் நிறைந்து கிடக்கின்றன.





பின் குறிப்புகள் (எச்.பீர்முஹம்மது)
1. டேவிட் முகாம் ஒப்பந்தம்: 1978 ல் இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையே சினாய் மலைப்பிரதேசத்தை திருப்பி கையளிப்பது தொடர்பாக ஏற்பட்ட ஒப்பந்தம்.
2. ஒஸ்லோ ஒப்பந்தம்:- பாலஸ்தீன் சுயாட்சி அமைப்பை ஏற்படுத்துவதற்காக 1993ல் நார்வே தலைநகர் ஒஸ்லோவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன் விடுதலை அமைப்பிற்கும் (PLO) இடையே ஏற்பட்ட ஒப்பந்தம்
3. இரண்டாம் உலகப்போருக்கு பின்பு ஜெர்மனி மேற்கு மற்றும் கிழக்கு என்ற இரு பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதில் மேற்கு ஜெர்மனி அமெரிக்க சார்பாகவும், கிழக்கு ஜெர்மனி சோவியத் சார்பாகவும் இருந்தது. இவற்றிற்கிடையேயான தடுப்பரணுக்காக பெரும் சுவர் ஒன்று எழுப்பப்பட்டது. இது தான் பெர்லின் சுவர் என்றழைக்கப்பட்டது. பின்னர் இரு அரசுகளுக்கிடையே ஏற்பட்ட இணைப்பு ஒப்பந்தம் காரணமாக 1989 இன் இறுதியில் இச்சுவர் இடிக்கப்பட்டது.

No comments: