காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Monday, February 28, 2011

சலாதீனின் கல்லறையிலிருந்து- குர்து இனத்தவரின் தோற்றமும் பரிணாமமும்

கிழக்கில் அமைந்திருந்த, அமைந்திருக்கிற கலாசாரங்கள், தேசியங்கள் இவற்றின் வரலாறுகள், வாழ்க்கை முறைகள், வழக்கங்கள் இவற்றின் எதார்த்தமானது மேற்கில் சொல்லப்பட்டதை விடவும் மிகப்பெரியதாக இருக்கிறது.

-எட்வர்ட் செய்த்

மத்திய கிழக்கின் பெரிய இனங்களான துருக்கியர்கள், அராபியர்கள், பாரசீகர்கள் போன்றே குர்துக்களும் அதன் வரிசையில் வரக்கூடியவர்கள். இவர்களின் வாழிடங்கள் ஈராக்கின் வடபகுதியிலும், ஈரானின் வட மேற்கு பகுதியிலும் சிரியா மற்றும் துருக்கியின் குறிப்பிட்ட திசைகளிலும் இருக்கின்றன. எவ்வித வேர்களற்றநிலையிலும் அவர்களின் வாழ்க்கை முறை நகர்ந்து கொண்டிருக்கிறது. குர்துக்களின் வரலாறு அதன் இயக்கப்போக்கில் பல பரிணாமங்களை கொண்டிருக்கிறது. குர்த்துகள் கி.மு ஆறாயிரம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கர்டூச்சி இனக்குழுவின் தொடர்ச்சியில் வந்தவர்கள். பிந்தைய வரலாற்றாய்வுகள் அவர்கள் கிரேக்க இனத்திற்கு முந்தையவர்கள் என்பதாக குறிப்பிடுகிறது. கி.மு மூன்றாம் நூற்றாண்டில் கஸைன்கள், மன்னை மற்றும் முஸ்கு போன்ற இனக்குழுக்கள் அசிரிய பகுதியில் வாழ்ந்தன.இவர்களுக்கான வாழ்க்கை முறைகள் இனக்குழுக்களுக்கான கலாசார ஒருமை கூறுகளை கொண்டிருந்தன. இவர்களின் பின் தொடரல் குர்துக்களின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. மேலும் சாலமன் அரசன் ரோமிலிருந்து பெண்களை கொண்டு வருவதற்கு தன் படைகளுக்கு கட்டளையிட்டதாகவும் அதன்படி அவர்கள் ரோமாபுரி சென்று ஆயிரம் பெண்களை கொண்டு வந்த தருணத்தில் சாலமன் அரசர் இறந்து விட்டதாகவும் பின்னர் அவர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டு அதன் இனப்பெருக்கமே குர்துக்கள் எனவும் ஒரு தொன்மம் நிலவுகிறது.

அசிரிய ஆவணங்களில் குர்து என்ற பெயர் கி.மு ஆயிரம் ஆண்டிலிருந்து காணப்படுகிறது. அசிரியர்கள் இவர்களை குர்தி என்பதாக பெயரிட்டனர். சிரியா மற்றும் ஆசிய மைனரின் மலைப்பகுதிகளில் இவர்கள் வாழ்ந்தனர். பிற்காலத்தில் இவர்களில் ஒரு பகுதியினர் ஆப்கானின் பலுசிஸ்தான் பகுதியில் குடியேறினர். இவர்கள் மீண்டும் அந்த பகுதிக்கு திரும்பவில்லை. இவர்களின் பரிணாமமே பலூச்சிகள். பலூச்சி மொழிக்கும் குர்து மொழிக்குமான உறவு என்பது இந்த வரலாற்றின் நேரிடையாக இருக்கிறது. பார்சி மன்னன் சைரஸ் குர்துக்களை ஒடுக்கினார். இந்த ஒடுக்கு முறையை குர்துக்கள் எதிர்கொண்டனர். மேலும் அகேமிய, சசானிய, பார்த்தாணிய அரசுகளின் அடக்குமுறைக்கும் ஆளாயினர். சசானிய அரசர் முதலாம் அர்தாசிருக்கும் குர்து அரசருக்கும் இடையே நடந்த போர் பற்றிய வரலாறு Books of the deeds of ardashir son of Babak என்ற நூலில் காணப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான குர்துக்களை முதலாம் அர்தாசிர் கொன்று குவித்தார். அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் கொல்லப்பட்டனர். பாரசீக கவிஞரான பிர்தவ்ஸியும் இந்த சம்பவம் பற்றி தன்னுடைய சஹ்னாமாவில் குறிப்பிடுகிறார். பிந்தைய காலகட்டத்தில் சசானியர்களால் குர்துக்கள் அதிக எண்ணிக்கையில் நாடு கடத்தப்பட்டனர்.

கலிபாக்களின் ஆட்சி காலம் குர்துக்களின் நகர்வில் இன்னொரு பரிணாமம். அர்மேனியாவின் சஹாதிகள், அசர்பைஜாவின் ராவான்டிஸ்கள், அனடோலியாவின் ஹஸன்வாயட்கள் போன்றவர்கள் அக்காலகட்டத்தின் குர்து வம்ச அரசுகள். மேலும் அக்காலத்தின் குர்து வம்ச விஞ்ஞானியான அல்-தினாவரி அறிவியலில் குறிப்பிடதக்க பங்களிப்புகளை செய்தார். குர்து இனத்தை பற்றிய வரலாற்றை விரிவாக வெளிக்கொணர்ந்தார். கி.பி 837ல் குர்து வம்சத்தின் ரோசிக் வேன் ஏரிக்கரையில் அக்லாத் என்ற நகரத்தை நிறுவினார். இதன் பின்தொடர்ச்சியை கொண்டு குர்து வம்சம் மத்திய கிழக்கில் தங்களுக்கென குர்திஸ்தான் பகுதியை நிறுவியது. கி.பி பதினொன்றாம் நூற்றாண்டு வாக்கில் செலூசிய துருக்கியர்கள் ஈரானை கைப்பற்றியதுடன் பாக்தாத் நகரையும் கைப்பற்றினர். பின்னர் குர்திஸ்தான் பகுதியை தங்களுடன் இணைத்துக்கொண்டனர். யாத்ரீகரான மார்கோ போலோ மொஸல் பகுதியில் குர்துக்களை சந்தித்தார். அவர்களுடைய வாழ்க்கை முறைபாடுகளை பற்றி தன்னுடைய நூல்களில் பதிவு செய்திருக்கிறார். இத்தாலிய குர்திஸ்டான மெர்ரே கலட்டி மார்கோ போலோவின் நூல்களை குர்து மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார்.

பதிமூன்றாம் நூற்றாண்டு குர்துக்களின் துயரமாக இருந்தது. மங்கோலியர்களால் குர்துக்கள் பெரும் கொடூரங்களுக்கு ஆளானார்கள். பதினான்காம் நூற்றாண்டில் தைமூர் குர்துக்களின் நிலப்பகுதியில் பெரும் பகுதியை நாசப்படுத்தினார். இதன் முடிவில் குர்துக்கள் பெரும் இடப்பெயர்வுக்கு உள்ளாக நேர்ந்தது. மங்கோலிய காலத்திற்கு பிறகு இவர்கள் விமோசனமாக அர்தலான், பதினான், பல்திஸ் மற்றும் சோரன் ஆகிய பகுதிகளில் சுதந்திர அரசுகளை நிறுவினர். இந்த நான்கு அரசுகளை பற்றிய குறிப்புகள் ஷரபுதீன் பில்ஸி எழுதிய ஷரப்நாமாவில் காணப்படுகின்றன.

சபாவித் வம்சம் குர்துக்களை மேலும் ஒடுக்கியது. நூற்றுக்கணக்கான குர்துக்கள் அர்மேனிய, அசிரியா, அசர்பைஜான் ஆகிய பகுதிகளிலிருந்து விரட்டப்பட்டு பாரசீகத்தில் தஞ்சம் புக செய்யப்பட்டனர். அவர்களுக்கான தேசிய இனத்தகுதி சிதைக்கப்பட்டது. இதன் நீட்சி இன்னொரு செயல்பாட்டை நோக்கி அவர்களை நகர்த்தியது.

இடைக்கால மத்திய கிழக்கு என்பது குர்துக்களின் பொற்காலமாகும். குர்து படைத்தலைவரான சலாதீன் அய்யூப் மத்திய கிழக்கில் சிலுவை போராளிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை அவர்களிடமிருந்து மீட்டு அவர்களை ஜெருசலத்திற்குள் நுழையாமல் பார்த்துக் கொண்டார். எகிப்தை தலைமையிடமாக கொண்டு அவர் நடத்திய ஆட்சியமைப்பானது மேற்கத்திய வரலாற்றாசிரியர்களால் இன்றும் குறிக்கப்படுகிறது. அவரின் எல்லையானது அன்டோலியாவிலிருந்து இராக் வரை விரிந்திருந்தது.மேற்கத்திய வரலாற்றாசியர்களான லெஸ்ஸிங் மற்றும் வால்டர் ஸ்காட் ஆகியோர் இவரை நபியின் அடுத்த ஆளுமையாக குறிக்கின்றனர்.பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதிபகுதியில் துருக்கிய உதுமானிய அரசுக்கும் குர்துக்களுக்கும் அதிகார பகிர்வு குறித்த உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி குர்து படைத்தலைவரான ஹகிம் இத்ரிஸ் உதுமானிய அரசோடு சேர்ந்து ஈரானின் சபாவித் வம்ச அரசுக்கு எதிராக போரிட்டார். இதன் விளைவாக பாரசீக பகுதி முழுமையும் கைப்பற்றப்பட்டு துருக்கி - ஈரானின் எல்லை வடிவமைப்புக்கு அது உதவியது.

ஈராக் குர்துகளின் பெரும் நிலமாகும். ஈராக்கின் வடபகுதியில் தனித்துவமாக வாழ்கிறார்கள். முதல் உலகப்போருக்கு பின் அவர்களின் தேசிய இன உணர்வு வலுப்பெற்றது. தாங்கள் நேரடியான/ மறைமுகமான காலனிய சூழலுக்குள் உட்படுகிறோம் என்பதை அப்போது தான் பிரக்ஞையுற்றார்கள். காலனிகளில் வன்முறையானது அடிமைப்படுத்தப்பட்ட மனிதர்களை எட்ட நிற்க வைப்பதை மட்டுமே தன் நோக்கமாக கருதுகிறது. அது அவர்களை மனித தன்மையற்றவர்களாக்க முனைகிறது. அவர்களது மரபுகள் மற்றும் மொழியை அழித்து தன்னுடைய மொழி மற்றும் கலாசாரத்தை நுழைக்க அது முயலும். இதை குர்துக்கள் பகுதியாக உணர்ந்து வைத்திருந்தார்கள்.1961 மற்றும் 1975 காலகட்டத்தில் ஈரானின் இராணுவ துணையை வைத்து ஈராக் அரசுக்கு எதிராக போரிட்டனர். இருந்தும் அது குறுகிய காலத்தோடு முடங்கி போனது. சதாம் அதிகாரத்துக்கு வந்த எழுபதுகள் காலகட்டத்தில் குர்து பகுதிகளில் கண்காணிப்பு தீவிரமானது. அவர்களின் சுதந்திரமான உரிமைகள் நுண்மையான முறையில் பறிக்கப்பட்டன. அப்பகுதியில் அரபு மொழியின் ஆதிக்கம் திணிக்கப்பட்டது. வாழ்க்கையை சுயமாக தீர்மானித்து கொள்ள முடியாத மனிதர்களாக அவர்கள் மாறிப்போனார்கள். ஒரு சுயம் சார் சமூக தேடலுக்கான அவசியம் அவர்களுக்குள் ஏற்பட்டது. இதன் நீட்சி தான் தனி குர்திஸ்தான் அமைய வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை. இது ஈராக் பிரிட்டிஷ் காலனியிடமிருந்து பிரிந்து தனி அரசாக பிரகடனப்படுத்திய இருபதுகள்
காலகட்டத்திலிருந்தே தொடங்கியது.இதன் விளைவாக அன்றைய ஐ.நா சபை (League of nations) ஈராக் மீது இரு நிபந்தனைகளை விதித்தது. ஒன்று பிரிட்டனின் ஆட்சி அங்கு மேலும் இருபத்தைந்தாண்டுகள் நீடிக்க வேண்டும். இரண்டாவது ஈராக் குர்துக்களின் தனித்தன்மையையும், அவர்களின் மொழியையும் அங்கீகரிக்க வேண்டும். இதற்கான பொறுப்பை பிரிட்டன் ஏற்றுக்கொண்டது. ஆனால் பிரிட்டன் குறுகிய காலத்திற்குள் பின்வாங்க தொடங்கியது. இந்நிலையில் 1926ல் ஈராக்கில் குர்து மொழியை ஆட்சி மொழியாக அங்கீகரிக்கும் சட்டம் இயற்றப்பட்டது. இது சில காலத்திற்கு தொடர்ந்தது. ஆனால் பின்தொடர்ந்த காலகட்டங்களில் நிலைமை எதிர்மாறானது. ஆட்சி மொழி எழுத்தளவில் முடங்கி போனது. தொடர்ச்சியாக பல ஆயுத போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் 1974ல் ஆட்சி மொழி சட்டம் மீண்டும் இயற்றப்பட்டது. மேலும் கல்வியில் குர்து மொழி அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் அது சரியான நடைமுறைக்கு வரவில்லை.

ஈராக்கிய பாத் அரசானது குர்துக்களை கடுமையாக நடத்த தொடங்கியது. குர்து பகுதிகளை அரபு மையமாக்க கருதி அவர்களின் சுயாட்சி பகுதியின் எல்லையை சுருக்கி கொண்டது. அவைகள் ஒருங்கிணைந்த அரபு பிராந்தியத்திற்குள் வர வேண்டும் என்று கருதியது. 1971ல் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குர்துக்களை ஈரானுக்கு நாடு கடத்த தொடங்கியது. இரு ஆண்டுகளுக்குப் பின் குர்துக்கள் அதிகமாக வசிக்கும் ஈராக்கின் கிராமமான கிர்கிக்கிலிருந்து ஈராக்கின் இராணுவம் அவர்களை வெளியேற்றியது. 1971க்கும்1973 க்கும் இடைப்பட்ட காலத்தில் ராணுவம் குர்து தலைவரான முஸ்தபா பர்சானியை கொல்ல முயற்சித்தது. 1975ல் சதாம் உசேனுடனான உடன்பாட்டிற்கு பின் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குர்துக்கள் சந்தேக நடவடிக்கையின் பேரில் கைது செய்யப்பட்டனர். ஈரானுடனான ஈராக்கின் போர் குர்துக்களை பக்கவாட்டில் ஒடுக்க தொடங்கியது. ஈரானுடன் போர் நெருங்கி வந்த சூழலில் ஈராக் குர்துக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தருணம் இது தான் என்று கருதியது. 1987 ல் ஷேக் வசன் கிராமத்தில் உள்ள எல்லா குர்துக்களும் இராக் அரசின் விஷ வாயுவால் கொல்லப்பட்டனர். அதற்கு அடுத்த வருடத்தில் ஈராக் ஹலப்ஜா நகரத்தில் குர்து பகுதியில் வெடித்த குண்டால் பெரும்பான்மையான குர்துக்கள் இறந்தனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 1985க்கு பிறகு ஈராக் அரசானது குர்துக்களை தொகை இறக்கம் செய்தது. அவர்களின் கிராமங்கள் காலி செய்வதற்கு நிர்பந்திக்கப்பட்டன. 1987க்கு பிறகு அநேக குர்து கிராமங்கள் மட்டமாக்கப்பட்டன. புலம் பெயர்தலுக்கு அவர்கள் உள்ளாக்கப்பட்டனர். அரசின் இத்தகைய ஒடுக்குமுறை நடவடிக்கைகள் குர்துக்களை இயக்கம் சார்ந்த திரட்சிக்கு உட்படுத்தியது. 1974 ல் பல்கலைகழக மாணவரான ஷேக் அப்துல்லா ஒசலான் குர்து தொழிலாளர் கட்சியை ஆரம்பித்தார். இது சுதந்திர குர்துஸ்தானுக்காக போராட தொடங்கியது. இது துருக்கியின் கிழக்கு பகுதியில் இருந்து தன் போர் நடவடிக்கைகளை தொடங்கியது. இந்நிலையில் 1999 ல் ஒசலான் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து இவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. குர்துக்களின் இந்த சுய நிர்ணய போராட்டம் வடமேற்கு ஈரானிலும் நீண்டது. இரண்டாம் உலக போருக்கு பிந்தைய காலத்தில் குர்துக்கள் வடமேற்கு ஈரானின் மஹாபத் பகுதியில் சோவியத் யூனியனின் துணையுடன் சுதந்திர அரசை நிறுவினர். இது 1947 ல் சோவியத் படையின் பின் வாங்கலோடு உடைந்தது. குர்துக்கள் இந்த தோல்வி இரு ஒடுக்குமுறை அரசுகளுக்கான பலமானது. உலகம் முழுவதும் தேசிய இனபோராட்டங்கள் தீவிரமடைந்து வரும் இக்காலத்தில் மத்திய கிழக்கில் அவர்களின் போராட்டமானது ஆற்று நீரின் ஒட்டமாக சலனமடைந்து வருகிறது. குர்திஸ்தான் உரிமைக்காக ஈராக், ஈரான் துருக்கி மற்றும் சிரியா ஆகிய பகுதிகளில் அந்த நீரோட்டம் விரிவடைகிறது. இருபதாம் நூற்றாண்டில் நடுப்பகுதி வரை காலனியம் வேர்கொண்ட சூழலில் ஒரு நூறாண்டு தாண்டியும் அதன் எச்சம் தொடர்ந்து வருவது நாகரீக மோதலின் இன்னொரு தொடர்ச்சியாகும்.

No comments: