காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Saturday, December 31, 2011

கழகங்களும் திராவிட மடமும் - 1969 தொடங்கி



எந்த ஒரு இயக்கமும் வரலாற்றை மறு உருவாக்கம் செய்வது, மாற்றி அமைப்பது, கட்டுடைப்பது முதலானவற்றின் தொடர்நிகழ்வாகவே இருக்கும். அதன் நோக்கம் பரிணாம அடிப்படையிலான செயல்திறனை வைத்தே மதிப்பிடப்படும். தமிழ் வரலாற்றில் திராவிட இயக்கமும் இதன் பிரதிபலிப்பு தான். சமூக சீர்திருத்தத்திற்கான நெகிழ்வான இயக்கமாக தொடங்கபட்ட திராவிட இயக்கம் இன்று அதன் எல்லா நெகிழ்வையும் சிதைத்து இறுக்கமான ஒன்றாக மாறி விட்டது. வலுவான பசை போன்றதாக இருக்கிறது அதன் பரிணாம வளர்ச்சி. வீரமணியாச்சாரியாரின் தலைமையை தொடர்ந்து மடாலயத்திற்கான எல்லா கூறுகளையும் உள்ளடக்கி மீட்சிமைக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் ஆகி விட்டது. இதை இன்னொரு தளத்தில் நாம் அதன் தேர்தல் அரசியல் இயக்கமாக பரிணமைந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும் விரிக்க வேண்டியதிருக்கிறது. இன்றைய தேர்தல் தோல்வியிலிருந்து அதன் தலைமையையும், வளர்ச்சிப்போக்கையும் பின்னோக்கி பார்ப்பது அவசியம்.

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இந்திய நிலப்பரப்பு என்பது பிராமணிய ஆதிக்கத்தை நிரப்பிக்கொண்டதாக இருந்தது. பிரிட்டன் அதிகாரிகளுக்கு அடுத்தப்படியாக எல்லா அதிகார மையங்களும் அவர்களாலேயே நிரப்பப்பட்டிருந்தது. பல துறைகளில் பிராமணர் அல்லாதவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. இதன் நீட்சியில் அன்றைய சென்னை மாகாணமும் அப்படியே. அரசின் மேல் மட்ட நிலையிலிருந்து சாதாரண உள்ளாட்சி அமைப்பு வரை அவர்களின் ஆதிக்கமே. பிராமணர் அல்லாதவர்களின் வணிக செயல்பாடுகள் கூட கேள்விக்குரியதாக இருந்தன. இந்நிலையில் 1912 ஆம் ஆண்டு சமூக சீர்திருத்த ஆர்வம் கொண்ட சில பார்ப்பணர் அல்லாத தலைவர்களால் சென்னை மாகாண திராவிடம் சங்கம் ஏற்படுத்தப்பட்டது. இதன் நோக்கம் சென்னை மாகாணத்தில் பார்ப்பணர் அல்லாதவர்கள் நலனை முன்னிறுத்துவது. அதன் தொடர்ச்சியில் 1917 ஆம் ஆண்டு சர்.பி.டி தியாகராயர், டி.எம் நாயர், நடேச முதலியார் போன்றவர்களால் தென்னிந்திய நல உரிமை சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இது அ-பார்ப்பணர்களின் சுதந்திர வணிக நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியில் பிரிட்டிஷ் அரசின் அரசியல் சீர்திருத்தங்கள் காரணமாக 1920 ஆம் ஆண்டு நடந்த சென்னை மாகாண தேர்தலில் தென்னிந்திய நல உரிமை சங்கம் நீதிக்கட்சியாக மாறி அதன் ஆட்சியை பிடித்தது. சுப்பராயன் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார். நீதிக்கட்சியின் ஆட்சியில் பல்வேறு விதமான சீர்திருத்தங்களுக்கான முனைப்பு காட்டப்பட்டது.குறிப்பாக அ-பிராமணர்களுக்கான இட ஒதுக்கீடு முன்னெடுக்கப்பட்டது. அப்போது பெரியார் காங்கிரஸில் இருந்து கொண்டே நீதிக்கட்சியின் புற-கண்காணிப்பாளராக இருந்தார். இந்நிலையில் 1926 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியுற்றது. நீதிக்கட்சியிலிருந்து கட்சி மாறி தனிக்கட்சி தொடங்கிய சுப்பராயன் தலைமையில் ஆட்சி அமைந்தது. இந்தியாவில் முதன் முதலாக கட்சி தாவலுக்கு உட்பட்டவர் சுப்பராயனே. இது அக்கால நீதிக்கட்சி தலைவர்களின் வர்க்க நலன்களின் பிரதிபலிப்பே. இக்காலகட்டத்தில் காங்கிரஸின் வைதீக, பார்ப்பண சார்பு நிலையை எதிர்த்து பெரியார் காங்கிரஸிலிருந்து வெளியேறினார். 1925 ஆம் ஆண்டின் இறுதியில் காஞ்சிபுரத்தில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநாட்டில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக தான் கொண்டு வந்த தீர்மானங்கள் பிராமண ஆதரவு தலைவர்களால் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக பெரியார் காங்கிரஸிலிருந்து விலகினார். அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் பெரியார் குடி அரசு இதழை ஆரம்பித்தார். காங்கிரஸில் இருந்த போதும் கூட பிராமணர் அல்லாத மற்ற சமூக மக்கள் மற்றும் பெண்களின் நலனை முன்னெடுத்தார். பகுத்தறிவு சார்ந்த கருத்தியல் பிரச்சாரத்தை வலுப்படுத்தினார்.காங்கிரஸிலிருந்து வெளியேறுவதற்கு முந்தைய வருடத்தில் தான் கேரள மாநிலம் வைக்கத்தில் நடந்த கோவில் நுழைவு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைச்சென்றார். இதன் பின்னர் சுய மரியாதை இயக்கத்தை தொடங்கினார். அப்போது நீதிக்கட்சி பல்வேறு சிக்கல்களாலும், நிலைபாட்டு குளறுபடியாலும் , அதிகார போட்டியாலும் நெருக்கடிக்கு ஆளாகியிருந்தது. பெரியார் இதை கடுமையாக விமர்சனம் செய்து கொண்டே அதனை ஆதரித்தார். குறிப்பாக சுப்பராயனின் கட்சித்தாவலை கடுமையாக விமர்சித்து பத்திரிகையில் எழுதினார். அதன் பின்னர் 1937 ல் இராஜாஜி கொண்டு வந்த இந்திமொழி திட்டத்தை எதிர்த்து கடுமையாக போராடினார். அதில் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோர் இறந்தனர்.போராட்டம் அன்றைய சுதந்திர போராட்ட நீரோட்டத்திலிருந்து விலகியதாக இருந்தது. அது தான் தமிழ் வரலாற்றில் முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம். அவரின் இந்த போராட்டம் ஆங்கிலத்தை முன்னெடுப்பதற்கானது என்று பின்னாளில் பெரியார் விளக்கினார். எதார்த்தமான முறையில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பது நீதிக்கட்சியிடமிருந்து விலகி தான் இருந்தது. இதன் தொடர்ச்சியில் சாதி எதிர்ப்பு மற்றும் பகுத்தறிவுக்கான பல்வேறு கட்ட செயல்பாடுகளுக்குப் பிறகு பெரியார் 1944 ல் திராவிடர் கழகத்தை ஆரம்பித்தார். தொடக்கத்தில் சமூக சீர்திருத்தத்திற்கான மிகுந்த முன்னெடுப்பை அது செலுத்தியது. ராமநாதன், அண்ணாதுரை, கருணாநிதி, சி.பி.சிற்றரசு, என்.வி நடராசன், நெடுஞ்செழியன், சம்பத்,மதியழகன்போன்றோர் அதன் தொடக்க கால உறுப்பினர்கள். இதன் பிந்தைய வருடங்களில் இந்தியா காலனியாதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் சார்ந்த விஷயங்களில் அண்ணாதுரைக்கும், பெரியாருக்குமிடையே பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டன. அண்ணாதுரை சுதந்திர நாளை இன்ப நாள் என்றார். மாறாக பெரியார் அதை துக்க நாளாக கடைபிடிக்க வேண்டும் என்றார். காரணம் இந்திய சுதந்திரம் என்பது ஆங்கிலேயர்களின் கையிலிருந்து பார்ப்பண-பனியாக்களின் கைக்குள் வந்திருக்கிறது என்பது தான். மேலும் சீர்திருத்தம் , பெண்ணுரிமை பேசிய பெரியார் தன்னை விட அதிக வயது வித்தியாசமுள்ள மணியம்மையை இரண்டாவதாக திருமணம் செய்த விஷயத்திலும் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த விஷயத்தில் ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டார் என்று பெரியார் மீது அண்ணாத்துரை குற்றஞ்சாட்டினார்.மணியம்மை விஷயம் தான் அண்ணாதுரை பிரிந்ததற்கு முதன்மை காரணம் என்பாரும் உண்டு. ஆனால் முரண்பாடு குறித்த சரியான வரலாற்று தெளிவு இல்லை. மணியம்மையை பெரியார் திருமணம் செய்ததால் தான் அவரின் நீண்டகால இருப்பு சாத்தியமானது என்றொரு தகவலும் இருக்கிறது

இன்றைய தி.மு.க என்பது அண்ணாதுரை பெரியாரிடமிருந்து பிரிந்து 1949 ல் ஏற்படுத்திய இயக்கம். வட சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் அண்ணாதுரை திராவிட முன்னேற்ற கழகத்தை ஏற்படுத்திய போது கருணாநிதி அந்த இயக்கத்தில் இல்லை. அப்போது அவர் பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்தார். "ஆணையிடுகிறார் பெரியார். ஊளையிடுகிறார் அண்ணா என்று அன்று குடி அரசில் எழுதியவர் தான் கருணாநிதி.அதிகார பசியும், பொருளீட்டும் நிர்ப்பந்தமும் அவரை பின்னாளில் அண்ணாதுரை பக்கம் சாய்த்தது. அண்ணாதுரையை (பல்கலைகழகம் காலாவதியாகிவிட்டதால் பேரரறிஞர் பட்டம் தவிர்க்கப்படுகிறது) பொறுத்தவரையில் அன்றைய கட்டத்தில் அவர் இயக்கத்தை அரசியல்மயப்படுத்த விரும்பினார். அவரின் இயக்கம் முழுவதும் கண்ணதாசன், ஈ.வெ.கி. சம்பத், ஆசைத்தம்பி, எஸ்.எஸ்.தென்னரசு,நெடுஞ்செழியன், கே.மதியழகன், என்.வி.நடராஜன்,சி.பி.சிற்றரசு, தில்லை மணாளன்,டி.கே வேலன் போன்ற பலவிதமான ஆளுமைகளால் நிரப்பப்பட்டிருந்தது. இவர்கள் பேச்சிலும் எழுத்திலும் கருணாநிதியை விட முன்வரிசையில் இருந்தனர். ஓரளவு ஜனநாயகபூர்வமாகவும், நாகரீகமாகவும் இருந்தது அன்றைய தி.மு.க. 1965 ல் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாபெரும் இந்தி எதிர்ப்பு கிளர்ச்சியை தன் அரசியல் அதிகார தளத்திற்கான சாதக கருவியாக மாற்றியது தி.மு.க. அதன் நலன்கள் இந்த போராட்டத்தில் பிரதிபலித்தன. மாணவர்கள் பலர் தூண்டப்பட்டனர். கட்சித்தொண்டர்களும் போராட்ட களத்தில் இறக்கப்பட்டனர். பக்தவச்சலம் அரசின் மோசமான நிர்வாகத்தால் வெறுப்புற்றிருந்த மக்களிடம் இந்த எழுச்சியும் சேர்ந்து கொண்டதால் தி.மு.க அதிகாரத்தை எளிதில் கைப்பற்ற முடிந்தது. தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இந்த உணர்ச்சியை அன்று உள்வாங்க தவறி இருந்தன. அன்று அந்த விஷயத்தை மட்டும் கையில் எடுத்திருந்தால் இன்று தமிழ் அரசியலே திசை மாறியிருக்கும்.அதன் அரசியல் பற்றிய மாறுபட்ட கருத்துக்களும், நடைமுறை செயல்பாடுகளும், சோவியத் புராணமும், வழக்கமாக உச்சஸ்தமாக பாடும் நாம் - நாம் பாட்டுகளும்(நாம் இருந்தோம். நாம் கூட்டணி சேர்ந்தோம். நாம் தவறு செய்தோம். சரி. இரண்டு வடை, ஒரு சமோசா, ஒரு பிஸ்ஸா. முடிந்தது)அவற்றை தமிழ் அரசியல் களத்தில் இருந்து மாறுபட வைத்தன. இதன் விளைவாக திராவிட இயக்கங்கள் அவற்றை கடலின் உள்வாங்கல் போன்று உள்வாங்கின. வேறொரு வகையில் சொன்னால் தமிழ்நாட்டில் திராவிட கழகங்களின் பெரும் வெற்றியே இடதுசாரிகளின் இந்த தேங்கிய பலவீனம் தான்.

திமுகவில் கருணாநிதியின் (துணைவேந்தர் பதவியின் மூன்றாண்டு காலம் முடிந்து விட்டதால் கலைஞர் பட்டம் தவிர்க்கப்படுகிறது.)வருகை தற்செயலான விபத்தே. அண்ணாதுரையின் காலகட்டத்திலேயே அந்த விபத்திற்கான அறிகுறிகள் தென்பட்டன. உட்கட்சி குழப்பங்கள் அதிகரித்தன. குறிப்பாக அன்றைய திமுகவின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவரான ஈ.வே.கி சம்பத் பல விஷயங்களில் அண்ணாத்துரையுடன் முரண்பட்டார். இதற்கு கருணாநிதியின் அடிகுத்தல்களும் ஒரு காரணமாக இருந்தன என்பதை அக்காலத்திய கழக முன்னோடிகள் வெளிப்படுத்துகிறார்கள். இவரை பற்றிய பல புகார்கள் அண்ணாத்துரைக்கு சென்றன. ஆனால் அவற்றை அதிகம் பொருட்படுத்தாமல் ஒத்துபோகுமாறு கருணாநிதியிடம் சொன்னார் அண்ணாதுரை. (இத்தகைய உட்கட்சி குழப்பங்கள் பற்றி அண்ணாத்துரை தன் கடைசி காலத்தில் பி.ராமமூர்த்தியிடம் வருத்தத்துடன் சொன்னதாக தன் நூல் ஒன்றில் பி.ராமமூர்த்தி குறிப்பிடுகிறார்.) இது அன்றைய கட்டத்தில் கருணாநிதிக்கு பெரும் சாதக அம்சமாக மாறியது. இந்நிலையில் 1969 ஆம் ஆண்டு அண்ணாத்துரை இறக்கிறார். அப்போது தான் கருணாநிதியின் சுய ரூபம் வெளிப்பட்டது. தி.மு.க முன்னணியினர் எல்லோரும் தங்களின் தலைவர் இறந்த துக்கத்தில் இருக்க , கருணாநிதி மட்டுமே அன்றைய கட்டத்தில் எம்.எல்.ஏக்கள் எல்லோரையும் தனித்தனியாக சந்தித்து பேச தொடங்கினார். அண்ணாத்துரைக்கு பிறகு முதலமைச்சர் பதவிக்கு நெடுஞ்செழியன் முன் வரிசையில் இருந்தார். ஆனால் அன்றைய கட்டத்தில் தமிழ் இனத்தின் தேங்கி போன இயல்பான பலவீனமாக இருந்த திரைமோகம் காரணமாக நட்சத்திரமாக ஜொலித்த எம்.ஜி.ஆரின் வலுவான ஆதரவு கருணாநிதிக்கு இருந்தது. அவர் இவருக்காக பரிந்துரையில் இறங்கிய காரணத்தால் தான் கருணாநிதியால் முதலமைச்சர் பதவிக்கு வர முடிந்தது. இந்நிலையில் அண்ணாத்துரை பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டியதிருக்கிறது. அண்ணாத்துரை போன்ற பண்பட்ட, நாகரீகமான அரசியல்வாதி 1967 ல் முதலமைச்சராக வந்த போது செய்த முதல் சீர்திருத்தமே அதுவரை சென்னை மாகாணமாக அறியப்பட்ட தமிழ்நாட்டை "தமிழ்நாடு" என்று பெயர் மாற்றம் செய்தது தான். ஆனால் அதற்கான குரல்கள் இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலேயே ஒலிக்க தொடங்கி விட்டன. அதற்காக காமராஜர் காலத்தில் சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து இறந்து போனார். சில நிர்பந்தங்கள் காரணமாக காமராஜர் அதை தட்டிக் கழித்தார். அண்ணாதுரை ஆட்சிக்கு வந்த பிறகு தான் அது நிறைவேற தொடங்கியது. ஆனால் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் சுவரில் ஒட்டப்படும் காகித ஒட்டி மாதிரி உயிர்ப்பற்றது இருந்தது என்பதை அது ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும். மிக முக்கியமாக அண்ணாத்துரை சென்னை மாகாணம் என்பதிலிருந்து தமிழ் என்பதை பிரித்து பார்த்தார். பெயர் மாற்றத்தையும் தமிழ் மொழியையும் இணைத்து பார்க்கவில்லை. அதன் உயிரோட்டம் பற்றிய தொலைநோக்கு திறன் இல்லாமல் இருந்தார்.தமிழ் என்பது இன்றும் ஆங்கிலத்தில் Tamil என்றே அழைக்கப்படுகிறது. இதன் உளவியல் தாக்கம் ஒரு வர்க்கத்தை அப்படியே பாதிக்கிறது என்பதை திராவிட மடங்கள் புரிந்து கொள்ள தவறின. (இன்றைய மொழி அழிப்பின் தொடக்கமே இதில் தான் இருக்கிறது) விளைவாக இன்று தமிழ்நாட்டின் உயர்மத்தியதரவர்க்கமும், ஆங்கில படித்த மத்தியதரவர்க்கமும் தமிழை "றமில்" என்றே உச்சரிக்கின்றது. இந்தியாவின் பெரும்பான்மையான மொழிகள் அனைத்துமே ஆங்கிலத்திலும் அதே உச்சரிப்பில் தான் உச்சரிக்கப்படுகின்றன. உதாரணமாக ஹிந்தி Hindi என்றும், மராத்தி maraathi என்றும், பஞ்சாபி panjabi என்றே அழைக்கப்படுகின்றன. இதை "thamizh" என்று மாற்றுவது ஒன்றும் மலையை புரட்டும் காரியமல்ல. தமிழ்நாடு என்ற பெயர் மாற்றிய கட்டத்தில் இதை செய்திருக்கலாம். அண்ணாத்துரை இதை செய்யத் தவறினார். இதில் வேடிக்கை என்னவென்றால் இன்றும் அரசின் உத்தரவுகள், ஆவணங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருப்பதால் "றமில்நாடு" என்றே வழக்கில் இருக்கிறது. அண்ணாத்துரை செய்ய தவறிய மற்றொன்று தமிழ்நாட்டின் நகரங்களின் பெயர்கள் அனைத்தும் தமிழில் ஒன்றும், ஆங்கிலத்தில் மற்றொன்றுமாக வழங்கப்பட்டு வந்த நிலை. உதாரணமாக சென்னை மெட்ராஸ், (இதில் சென்னை தற்போது ஒரே பெயராக மாற்றம் செய்யப்பட்டு விட்டது)வேலூர் - வெல்லூர் , தூத்துக்குடி - டியூடிகுரின், ஓசூர் - ஹோசூர், தஞ்சாவூர் - தஞ்சூர், திருச்சி - டிரிச்சி, உதகமண்டலம் -ஊட்டி, கன்னியாகுமரி -கேப்கமரின் என்பதாக வழங்கப்படுகின்ற நிலை. இதை தமிழ்நாடு என்று பெயர் மாற்றிய தருணத்தில் செய்திருந்தால் மிக புரட்சிகரமாக இருந்திருக்கும். தாங்கள் நடத்திய மொழிப்போராட்டங்கள் உயிர்ப்பான அர்த்தம் பெற்றிருக்கும். இவற்றை செய்யாமல் தமிழ் சீர்திருத்தம் என்ற மாயையை அவை ஏற்படுத்தின. இதில் விநோதம் என்னவென்றால் ''றமில்" நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வர்க்கங்கள் கூட வெல்லூர் என்று சொன்னால் தான் புரிந்து கொள்கின்றன. அவ்வாறே உச்சரிக்கின்றன. வேலூர் என்று உச்சரிப்பதை பேருந்து என்று உச்சரிப்பதை போன்ற மனோபாவமாக பார்க்கின்றன. மேலும் பெரிய கொடுமை என்னவென்றால் தமிழ்நாட்டில் பெரும்பாலானோருக்கு உதகமண்டலம் என்றால் தெரியாது. ஊட்டி என்றால் தான் தெரியும். ஒருவேளை அதையே தமிழ் பெயராக அறிவிக்கலாம். அரசனை புகழ்ந்து பாடி பரிசில் பெறும் புலவர்கள் கூட வெறும் அல்லக்கைகளாகவும், மொண்டுகூவிகளாகவும் மாறி போனது தமிழ்நாட்டின் பெரும் துயரம். அவர் இன்னும் உயிரோடு இருந்திருந்தால் இந்த மாற்றங்களை அமல்படுத்தி இருப்பார் என்பதாக சில அல்லக்கைகள் கூறலாம் என்பதை மீறியே அண்ணாதுரை மீதான என் விமர்சனம் இருக்கிறது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

முத்தமிழ் அறிஞர் என்று மொண்டு கூவிகளாலும், அல்லக்கை ஊடகங்களாலும், கவிதை என்று எதையோ எழுதி கிறுக்கும் சொம்புகளாலும் அழைக்கப்படுகின்ற (இடதுசாரி அறிவுஜீவிகள் சிலரிடத்திலும் இந்த நோய் உண்டு)கருணாநிதி முதலமைச்சராக பதவியேற்ற காலத்தில் தான் தமிழ்நாட்டு அரசியல் களம் கறை படியத்தொடங்கியது என்பதை அவரின் சீர்திருத்த மாயையை நன்கு அறிந்த வரலாற்றாளர்கள் எவருமே மறுக்க மாட்டார்கள். வரலாறு சிலசமயங்களில் நம் உள்ளங்கையிலிருந்து நழுவி விடுகிறது. அதை நம் கைவிரல்களின் கட்டுக்குள் வைப்பதில் தான் வெற்றியே அடங்கியிருக்கிறது. சில தருணங்களில் வளைந்தும், நெளிந்தும் செல்வதுண்டு. கருணாநிதி விஷயத்தில் இது தான் நடந்தேறியிருக்கிறது. நவீன காலத்தில், பிந்தைய முதலாளித்துவ காலகட்ட உலகில் தமிழ்நாடும் அதன் ஒரு பகுதியே. அதன் எல்லா பாதிப்புகளும் இங்கும் உண்டு. இந்நிலையில் கணங்கள் தோறும் குவிந்து வரும் செய்திகள், தகவல்கள் வெகுஜன உளவியலை கட்டமைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. மின்சாரம் நின்று விட்டால் தகவல்கள் அழிந்து விடும் கணிப்பொறியின் முதன்மை நினைவகம் மாதிரி தமிழ் மனமும் செய்திகளையும், அது ஏற்படுத்தும் தாக்கங்களையும் உடனடியாக மறந்து விடுகின்றது. இன்னும் ஐந்து வருடம் கழித்து ஸ்பெக்ட்ரம் ஊழலைப்பற்றி கேட்டால் யாருக்கும் தெரியாது. தமிழ் சமூகத்தின் இந்த அதீத மறதியே கழகங்களை அரசியல் களத்தில் மாறி மாறி நிலைக்க வைக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்களோடு கூட்டணி சேரும் இடதுசாரிகளையும் இந்த மறதி நோய் பீடித்திருப்பது தான். கண்டுபிடிப்புகளுக்கு பெயர் போன அமெரிக்காவில் தற்போது மறதியை அடிப்படையாக வைத்து அல்ஸீமர் என்ற நோயை கண்டுபிடித்திருக்கிறார்கள். இது முக்கியமான விஷயங்களையும், சமீபத்தில் நடந்த விஷயத்தையும் மறந்து விடும் போக்கை அடிப்படையாக கொண்ட நோய். அமெரிக்காவை பீடித்திருக்கும் இந்நோய் விரைவில் தமிழ்நாட்டு இடதுசாரிகளையும் பீடிக்கலாம். அதற்கு சோசலிச அல்ஸீமர் என்று பெயர் கூட வைக்கலாம். 1969 ல் முதலமைச்சராக பதவியேற்ற கருணாநிதி செய்த முதல் வேலை தான் ஆட்சிக்கு வர காரணமாக இருந்த எம்.ஜி.ஆரின் முக்கியத்துவத்தை குறைக்கும் வேலையில் இறங்கியது தான். எம்.ஜி.ஆருக்கு இணையாக தன் மகன் மு.க. முத்துவை முன்னிறுத்தும் வேலையில் இறங்கினார்.(பின்னாளில் மு.க.முத்துவே இவரை விட்டு பிரிய நேர்ந்தது)கட்சித்தொண்டர்களை தூண்டி விட்டு அவருக்கு ரசிகர்மன்றங்கள் அமைக்கும் வேலையில் இறங்கினார். அது வெற்றி பெற முடியாமல் போனதால் கட்சியில் அவரில் முக்கியத்துவத்தை குறைக்கும் வேலையில் இறங்கினார். இதனால் இருவருக்குமிடையே உரசல்கள் அதிகமாயின. இந்த உரசல் பொதுக்குழுவில் எதிரொலித்தது. தன்னையும் , குடும்பத்தையும் வளப்படுத்துவதற்காக கருணாநிதி தொடங்கி வைத்த சுரண்டலும், சுருட்டலும் கட்சியை கூட விட்டுவைக்கவில்லை. கட்சிக்கு நன்கொடையாக வந்த பணங்கள், மற்றும் செலவு செய்த பணம் போன்றவற்றிற்கு முறையான கணக்குகள் பராமரிக்கப்படவில்லை. இந்த பிரச்சினையோடு ஏற்கனவே இருந்த உரசல்கள் சேர்ந்து கொண்டு 1972 பொதுக்குழுவில் எதிரொலித்தது. அப்போது பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் இதற்கு கணக்கு கேட்டார். விளைவாக கருணாநிதியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அன்றைய சூழலில் கருணாநிதியின் நிர்ப்பந்தம் காரணமாக நெடுஞ்செழியன் இதற்கு ஒத்துக்கொண்டார்.(பின்னர் நெடுஞ்செழியனுக்கே கருணாநிதி துரோகம் செய்தார்)இதனால் தன்னை பின்தொடர்ந்த மிகப்பெரும் வினை முடிந்து விட்டது என்று கருணாநிதி நினைத்தார். ஆனால் சிறிது நாட்கள் கூட நீடிக்கவில்லை என்பதை அதே ஆண்டில் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தல் நிரூபித்தது. அதில் எம்.ஜி.ஆரின் அதிமுக வெற்றிபெற்றது.

எம்.ஜி.ஆரை பொறுத்தவரை நாடகங்கள், அதன் பின்னர் திரைப்படங்கள் என்ற பரிணாமத்தில் வளர்ந்தவர்.1936 ல் வெளிவந்த சதிலீலாவதி திரைப்படம் மூலம் திரைப்பட உலகிற்கு அறிமுகமான எம்.ஜி.ஆர் அதன் பின்னர் வெளிவந்த ராஜகுமாரி படத்தின் மூலம் பெரும் நடிகராக கவனம் பெற்றார். தமிழ் திரை ரசனை உலகம் ஏற்கனவே ஆகர்சிக்கும் மயக்க உணர்வை அளிக்கும் நடிப்பின் காரணமாக எதார்த்த, தீவிர நடிகரான சிவாஜிகணேசனை பின்தள்ளி விட்டு திரை உலகில் முன்னணி நடிகராக வந்தார். சமகாலத்தில் தமிழ் திரை உலகில் கமலஹாசனுக்கும், ரஜினிக்குமான வித்தியாசம் தான் அன்றைய எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி.திரைப்படங்கள் மற்றும் நாடகங்கள் மூலமாக அண்ணாத்துரையுடன் ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் தி.மு.க வில் இணைந்தார். அடிப்படையில் அவருக்கு பகுத்தறிவு கோட்பாடு மீதெல்லாம் அவ்வளவாக கரிசனம் இல்லை. அண்ணாத்துரை மீதான தொடர்பே அவரை கரை வேட்டியாக அடையாளம் காண செய்தது. சுதந்திர போராட்டம் நடைபெற்ற காலத்தில் தமிழ்நாட்டில் பெரியார் தலைமையில் பகுத்தறிவு போராட்டங்கள் நடைபெற்றன. அன்றைய கட்டத்தில் தீவிர எழுத்தை விட ஆவேசமான மேடைப்பேச்சே திராவிடங்களுக்கு பிரதான புரட்சிகர ஊடகமாக இருந்தது. நல்ல குரல் வளத்தில் அதிக ஒலியுடன் அடுக்குமொழி, வார்த்தை ஜாலம், வர்ணிப்பு, சொல்விளையாட்டு போன்றவைகளுடன் மேடைகளில் அலறும் போது அதை கேட்பவர்கள் பூரித்து உணர்ச்சிவயப்பட்டனர். இதன் காரணமாக அக்கால பார்வையாளர்களுக்கு பேச்சாளரின் வாக்கே பிரதானமாக தென்பட்டது. இவை தொடர்ச்சியாக திராவிட கழகங்களுக்கு பலனளித்ததன் விளைவே தமிழ்நாட்டில் இன்று வரையிலான அவர்களின் ஆழமான வேர்பிடிப்பு. இன்றும் 0, 1 போன்று திமுக அல்லது அதிமுக என்று தமிழ் வாக்காளர்களின் தேர்ந்தெடுக்கும் கட்டாய மனநிலைக்கு மேற்கண்ட மேடைத்தந்திரங்களே காரணம் என்பதை திராவிடங்களின் ஐம்பதாண்டு கால வரலாற்றை பார்வையாளர்களாக கூர்ந்து கவனித்து வரும் எவருமே மறுக்க முடியாது. அதற்கு இரு வித செயல்தந்திரங்கள் தான். ஒன்று மேடை தந்திரம் மற்றொன்று திரைத்தந்திரம். தற்போது வரை அது தொடர்கிறது. இதன் தொடர்ச்சியில் கருணாநிதி 1969 ல் ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு தான் அண்ணா கால தி.மு.க வின் ஜனநாயக அமைப்பு முறை சீர்குலைய தொடங்கியது. அதிகாரம் கையில் வந்தவுடன் ஆட்டம் போட ஆரம்பித்தார். அது ஜெயலலிதாவின் 1991-1996 மற்றும் 2001- 2004 கால ஆட்டத்தை ஒத்திருந்தது. குறிப்பான சம்பவம் ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டும். கருணாநிதியின் மூத்த மனைவி இறந்தவுடன் அவருக்கு தயாளு அம்மாளை இரண்டாவதாக திருமணம் செய்து வைப்பதில் கருணாநிதியின் அக்கால நண்பரான டி.கே .சுப்ரமணியம் பெரும் உதவி செய்தார். சிறந்த பத்திரிகையாளரான இவர் ஜவகரிஸ்ட் என்ற பத்திரிகையை அக்காலத்தில் நடத்தி வந்தார். இந்த பத்திரிகையில் 1969 ஆம் ஆண்டு கனிமொழி பிறப்பை பற்றி கீழ்கண்ட பெட்டி செய்தியை வெளியிட்டார்." குறிப்பிட்ட தேதியில் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் இராஜாத்தி அம்மாள் என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. மருத்துவமனை பதிவேடுகளில் அந்த குழந்தையின் தந்தை பெயர் கருணாநிதி என்றிருக்கிறது. யார் அந்த கருணாநிதி? " என்ற கேள்விக்குறியோடு முடிகிறது அந்த செய்தி. இதை பார்த்த கருணாநிதி பொங்கி எழுந்தார். எனக்கு அப்படி ஒரு குழந்தை பிறக்கவில்லை. இராஜாத்தி அம்மாள் யாரென்றே எனக்கு தெரியாது என்றார். பின்னர் சுப்ரமணியத்தை நீதிமன்றத்திற்கு இழுத்து அவரை சில காலம் சிறையில் வைத்தார். இதில் அவர் வெறும் யார் அந்த கருணாநிதி? என்று மட்டுமே எழுதியிருந்தார். இருந்தும் திராவிட மடத்து ஆச்சாரியரான கருணாநிதியின் மடியில் கனம் இருந்ததால் எழுந்த பயம் காரணமாக நண்பராக இருந்தும் அந்த பத்திரிகையாளரை அன்று தண்டித்தார். அதன் மூலம் அவரின் திராவிட பற்றுணர்வும், நேர்மையும் அன்று கேள்விக்குரியதாக இருந்தது. அவர் நேர்மையாளராக இருந்தால் "ஆம். அந்த பெண் குழந்தை என்னுடைய குழந்தை தான். இதில் ஒளிவும் இல்லை. மறைவும் இல்லை" என்பதாக துணிந்து சொல்லியிருக்கலாம். மாறாக சராசரியான சாதிய சமூக மனோநிலையில் இருந்தார். அதன் காரணமாக தான் அதை பலகாலம் அவரால் மறைக்க வேண்டியதிருந்தது. அதன் பிந்தைய கட்டத்தில் சட்டமன்றத்தில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மழுப்பலான பதிலையே தந்தார். பலதடவை பதில் சொல்வதை தவிர்த்தார். இந்த விபரங்கள் எல்லாம் வரலாற்றில் மறைக்கப்பட்டு விட்டன. சமீபத்தில் தான் வெளிவந்தது. இதை எல்லாம் மறைத்த மொண்டுகூவிகளும், அல்லக்கைகளும் மிக்க தந்திரமானவர்கள். காரணம் அவ்வாறு வெளிக்கொணர்ந்தால் தாங்கள் அவரை துதித்து, புகழ்ந்து பெறும் பரிசல்கள் நின்று விடும் என்ற எண்ணம் தான். தமிழ் வெகுஜன உளவியல் வெறும் வறட்டு ரசனையும், பிழைப்புவாதத்தையும் கொண்டதாக மாறி இருக்கும் நிலைக்கு இந்த மொண்டு கூவித்தனமே முக்கிய காரணம். இதில் தீவிர அறிவுஜீவிகள் என்பவர்கள் கூட பணம் மற்றும் பிற சலுகைகளுக்காக தங்களை முற்றிலும் சமரசப்படுத்திக்கொண்டது மிகப்பெரும் துயரம்.
அவர்களை பற்றியும் நாம் விமர்சிக்க வேண்டியதிருக்கிறது. சென்னை சங்கமத்தில் கவிதை வாசிப்பதையும், செம்மொழி மாநாட்டில் கட்டுரை வாசித்ததையும் ஏழாவது சொர்க்கத்திற்கு இணையாக நினைத்து சுய மகிழ்ச்சி அடைந்தவர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களில் சிலர் இடதுசாரிகளாக இருந்தது தான் ஆச்சரியமற்ற கொடூரம்.

- தொடரும்

No comments: