காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Wednesday, December 14, 2011

புலம்பெயர் தமிழர்கள் பார்வையில் ரஜினிகாந்த்- வளைகுடாவை முன்வைத்து

(இந்தியாடுடே ரஜினி சிறப்பிதழுக்காக நான் எழுதிய கட்டுரை)

மொழியின் செயல்பாடுகள் அதன் எல்லையை நகர்த்தி செல்லும் போது மனித மனத்தை பாதிக்கின்றன. அது தொடர்புறும் ஒன்றாக மாறுகின்றது. ஊடகங்கள் இவ்வாறு தான் மனங்களில் ஊடுருவுகின்றன. திரையும் அவ்வாறே. சினிமா என்பது காட்சியின் மொழியே.மேலும் சினிமா பற்றிய சிந்தனையாளர்கள் அதை தத்துவகோட்பாடாக கருதினர். சினிமா என்பதே தத்துவத்திற்காக உருவாக்கப்படுகிறது என்றார் ஸ்டேன்லி கேவல். மேலும் அதன் தோற்றம், எதார்த்தம் பற்றிய தத்துவ கோட்பாட்டை அது வித்தியாசமான முறையில் வெளிச்சமிடுகிறது. அது கதாபாத்திரங்களையும், நடிகர்களையும் கூட இந்த கோட்பாட்டில் உள்ளடக்குகிறது. இந்த இடத்தில் திரையின் காட்சி பிரதிபலிப்பும் அதனை உள்வாங்கும் பார்வையாளர்களும் முக்கியமானவர்களாகிறார்கள். இதனால் தான் இவ்வுலகம் என்பது புகைப்பட காட்சி பிரதி போன்றதே என்றார் பிரபல மேற்கத்திய எழுத்தாளர் டோரிஸ் லெஸ்ஸிங். இருபதாம் நூற்றாண்டு மொழியியலாளரான விட்கென்ஸ்டீன் அடிக்கடி ஹாலிவுட் திரைப்படங்கள் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவருக்கு அது அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் கடும் அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கும், தன் மொழியியல் கோட்பாட்டை பொருத்தி பார்ப்பதற்குமான தளமாக இருந்தது. இவ்வாறான வகையில் திரைப்படங்கள் அது உருவாகிய காலம் முதல் தற்போது வரை காட்சியை மீறிய பல வித தளங்களில் செயலாற்றுகின்றன.தமிழ் வெகுஜன உளவியலை அல்லது அரசியலை கட்டமைப்பதில் திரைப்படங்கள் காலங்காலமாக மிக்க பங்கு வகிக்கின்றன. தியாகராஜபாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் தொடங்கி தற்போதைய தனுஷ் வரை தமிழ் வரலாறு சினிமா தாங்கிய தனிப்பக்கங்களாகவும் இருக்கிறது. அது மட்டுமே முதன்மை பக்கமாகவும் மாறி போனது தமிழ் வரலாற்றின் துயரமே. திரை அரங்கில் எம்.ஜி.ஆரின் படத்தை பார்த்து கொண்டிருந்த ஒருவர் படத்தில் ஒரு சண்டை காட்சியில் எம்.ஜி.ஆரின் கத்தி கீழே விழுந்தவுடன் , தன் இடுப்பில் வைத்திருந்த கத்தியை தூக்கி திரையை நோக்கி, இதோ பிடித்து கொள் என்று தூக்கி எறிந்தாராம். இது மாதிரியே தியாகராஜ பாகவதர் படத்திற்கும் ரசிகர்கள் குறித்த பல கதைகள் சொல்லப்படுவதுண்டு. திரைக்காட்சி வெளிக்கும் , நிஜ உலகிற்குமான இடைவெளியை திரையின் காட்சி பிம்பம் இல்லாமல் ஆக்க செய்வதன் விளைவே இது. இரண்டரை மணி நேரம் திரை அரங்கில் (தற்போதைய வீட்டு திரை அரங்கம் ஆனாலும்)படத்தை பார்க்கும் ரசிகர்கள் கனவுலகில் சஞ்சாரிக்கும் உணர்வை அடைகிறார்கள். ஒரு கட்டத்தில் இரு வழி உரையாடல் போன்ற உணர்வை அது அவர்களுக்கு அளிக்கிறது. விளைவு தங்களை அதன் கதாநாயகர்களின் விசிறிகளாகவும், ரசிகர்களாகவும் மாற்றுகிறது. இது கலைபடைப்பின் எல்லாவித வடிவங்களுக்கும் பொருந்தும். சினிமாவை பொறுத்தவரை மற்ற கலை படைப்புகளை விட சற்று முன்னால் நிற்கிறது. ரஜினிகாந்தை பொறுத்தவரை கர்நாடகத்தில் பிறந்து சினிமாவிற்காக தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்தவர். சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற இயற்பெயரை கொண்ட ரஜினிகாந்த் 1975 ல் பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தில் சிறிய வேடமொன்றில் அறிமுகமாகி படிப்படியாக பிரபலமானவர். அதற்கு அடுத்த ஆண்டில் வெளிவந்த பாரதிராஜாவின் 16 வயதினிலே என்ற படத்தில் பரட்டை வேடம் மூலம் கவனம் பெற்றார். அந்த படம் தான் தமிழின் இரு முன்னணி நடிகர்களான கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை முதன் முதலாக இணைத்த படம். கமலஹாசன் சப்பானியாக இருந்து ரஜினிகாந்திற்கு சவாலாக இருப்பார். அந்த படத்திலிருந்து தான் நாம் தமிழ் திரை ரசிக மனத்தின் உளவியலை ஆராய வேண்டும். நடிப்பை உள்ளார்ந்து எதார்த்தமாக நடிப்பதற்கும், வெறும் நடிப்பாக நடிப்பதற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. வெளியின் நான்காம் பரிமாணத்தை கண்டறிவதாக நிகழ்த்தப்படும் மேஜிக் போன்றதே இதுவும். சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி.ஆர் ஆகிய இருவரின் நடிப்பிற்கிடையேயான வித்தியாசத்தை நாம் இன்றையகட்டத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் ஆகிய இருவருடன் ஒப்பிட முடியும். உலகம் முழுவதும் அனைத்து ரசிக மனத்திற்கு பொதுவான ஒன்றாக நாம் சினிமா மற்றும் இசையை குறிப்பிடலாம். மொபைல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்காலத்தில் பேருந்து மற்றும் பிற வாகனங்களில் பயணிப்போர் காதுகளில் மைக்ரோ போன்களை வைத்து கொண்டு பாடல்கள் கேட்டு பயணிப்பது சகஜமும், தவிர்க்க இயலாததுமாகி விட்டது.

தமிழ் திரை மனம் புலம் பெயர்ந்தாலும் கெட்டியாக ஒட்டிக்கொண்டு தொடர்கிறது. குறிப்பாக புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில் மத்திய தர வாழ்க்கை முறையும், மனோபாவமும் நிலைகொண்டிருக்கும் வளைகுடா சூழலில் திரைப்படம் என்பது அவர்களின் பிழைப்பு தேடலின் ஒரு பகுதியாகி விட்டது. வளைகுடா நாடுகளில் பருவகாலங்களில் உதிர்ந்து விழும் பேரித்த பழங்களை பொறுக்க ஓடுவது மாதிரி பெரும்பாலானோர் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. தகுதி, திறமை என்பதை மீறி வாங்கும் சம்பளத்தை அடிப்படையாக வைத்தே ஒருவரின் அந்தஸ்து இங்கு தீர்மானிக்கப்படுகிறது. (தகுதியும், திறமையும் தானே வாங்கும் சம்பளத்தை தீர்மானிக்கும் என்ற விதி இங்கு நடைமுறையில் இல்லை). இந்த இடத்தில் தான் ரஜினிகாந்த் அவர்களுக்கு முக்கியமாக தென்படுகிறார். தமிழ்ச்சூழலின் எச்சம் அப்படியே பின்தொடர்கிறது. ஓடாய் உழைத்து தேயும் வாழ்க்கை, அன்றாடம் நிறுவனங்கள் கொடுக்கும் கடுமையான பணிநெருக்கடிக்குள் சுழன்று வரும் சராசரி வளைகுடா வாழ் தமிழனுக்கு திரைப்படங்கள் தான் வலி நிவாரணி போன்று செயல்படுகின்றன. பெரும்பாலானவர்களின் ரசனையே இசையும், திரைப்படமும் தான். வாசிப்பு என்பது மிகக்குறைவே. இங்கு பிரம்மச்சாரி நண்பர்களுக்கு இடையேயான உரையாடலே அதிகமும் திரைப்படம் மற்றும் கேசட் பரிமாற்றம் பற்றியதாக தான் இருக்கும். திரையரங்குகளை விட வி.சிடிகளே பிரபலம். (இது திருட்டு வி.சி.டியா அல்லது அசல் வி.சி.டியா என்பதை தயாரிப்பாளர் தான் சொல்ல வேண்டும்.)சவூதி அரேபியாவை தவிர மற்ற எல்லா நாடுகளிலும் திரைஅரங்குகள் இருக்கின்றன. இண்டர்நெட் அறிமுகமாவதற்கு முன்பு வீடியோக்களே இங்கு அதிகமும் பயன்பாட்டில் இருந்தன. எல்லா வணிகவளாகங்களிலும் வீடியோ கடைகள் நிரம்பியிருந்தன. தெருக்களை கூட அவை ஆக்கிரமித்திருந்தன. 90 களின் இறுதிவரை ரஜினிகாந்த் தான் இங்குள்ள தமிழர்களின் மனத்தை ஆக்கிரமித்திருந்தார். குறிப்பாக ரஜினியின் அருணாசலம், படையப்பா,சந்திரமுகி போன்ற திரைப்படங்கள் இங்குள்ள தமிழ் ரசிக மனங்களை அதிகமும் ஆக்கிரமித்திருந்தன. திரைப்படத்தின் பஞ்ச் வசனங்களை பேசித் திரியும் சிறுவர்கள் மாதிரி சந்திரமுகியில் லக லக லக என்று ரஜினி பேசுவது இங்குள்ளவர்கள் மத்தியில் வீதிகளில் நண்பர்களை கிண்டல் செய்யும் ஒன்றாக சில காலம் வழக்கில் இருந்தது. ஆக ரஜினி படத்தின் எல்லா பஞ்ச் டயலாக்குகளும் வளைகுடா தமிழர்களால் பாவனை செய்யப்படும் ஒன்றாக இருக்கின்றது. சிவாஜி , எந்திரன் ஆகிய திரைப்படங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் வசூலை அள்ளித்தந்தன. குறிப்பாக எந்திரன் திரை அரங்குகளுக்கு மிகப்பெரும் வெற்றியை பெற்றது. ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் எந்திரன் டிக்கெட் முன்பதிவு ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கியது. அது பட வெளியீட்டிலிருந்து மூன்று வாரங்களுக்கானதாக இருந்தது. இதில் கேரள ரசிகர்களும் உள்ளடங்குகிறார்கள். சமீபகாலமாக அவர்கள் தமிழ்த்திரைப்படங்கள் மற்றும் பாடல்களை அதிகம் விரும்பி கேட்கிறார்கள். வளைகுடாவை அதிகம் நிரப்பி இருக்கும் அவர்கள் எல்லா தமிழ் திரைப்படம் சார்ந்த நிகழ்வுகளுக்கும் செல்கிறார்கள். இன்று குறைந்த பட்சம் தமிழ்திரைப்பட பாடல்களை ஒளிபரப்பாத மலையாள தொலைக்காட்சியே இல்லை என்று கூறலாம். இருந்தும் தமிழ், தமிழர் குறித்த கேரளத்தவர்களின் இழிவு பார்வையை இதிலிருந்து பிரித்து பார்க்க முடியவில்லை. இன்றும் மலையாள திரைப்படங்களில் பிச்சைக்கார கதாபாத்திரம் தமிழாக தான் இருக்கிறது. ஆக கேரளாவை சேர்ந்தவர்களையே வியக்க வைக்கும் வண்ணம் இருந்தது எந்திரனுக்கான வரவேற்பு. மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மம்முட்டி போன்ற பிரபலங்களுக்கு கூட இல்லாத பதிலுறவு இது. தமிழ்நாட்டில் எந்திரன் ஏற்படுத்திய பாதிப்பை விட வளைகுடா போன்ற புலம்பெயர்ந்த சூழலில் அது ஏற்படுத்திய பாதிப்பு முக்கியமானது. (எந்திரனின் நதிமூலம், ரிஷிமூலம் ஆகியவற்றை தாண்டி) மிகத்துல்லியமான காரண-காரிய முடிவுகளுக்குள் வர இயலாத ஒன்று.ரஜினிக்காக ரசிகர் மன்றங்கள் இங்கு இல்லாவிட்டாலும் ரஜினிக்காக பரிந்து பேசும், அவரின் திரைப்படங்களை அதிகம் பார்க்கும் கணிசமான தமிழ் ரசிகர்கள் இங்கு உள்ளனர். அவர்களுக்கு காலையிலிருந்து மாலை வரையான கடினமான உடலுழைப்பு என்பது இரவு நேரத்தில் ரஜினி படத்தை பிளேயரில் இட்டு பார்ப்பதில் தணிகிறது. ஒரு வகையில் இது பதிலீடாகவும் இருக்கிறது. இங்குள்ள திரை அரங்குகள் தமிழ்நாட்டில் ரஜினி படம் வெளியாகும் போது மகிழ்ச்சியடைகின்றன. காரணம் தியேட்டர்கள் நிரம்புவது அக்காலத்தில் தான். மற்ற காலங்களில் அவை தமிழ், மலையாளம், இந்தி என தங்களை சமநிலைப்படுத்திக் கொள்கின்றன. வி.சி.டிக்கள் அதிகமாக புழங்கும் புலம்பெயர் வளைகுடா சூழலில் ரஜினி படத்தின் வி.சி.டிக்கள் மட்டும் விற்பனை குறைந்து அந்த வருமானம் திரை அரங்குகளை நோக்கி திரும்புவதில் ஆச்சரியமேதுமில்லை. ஏற்கனவே நனவிலி நிலையிலும், ஆழ்மன நிலையிலும் ஊடுருவியுள்ள காட்சி குறியீடுகளின் விளைவுகளே அவை.

ரஜினிகாந்த் நடிப்பில் இடைவெளி விட்டாலும் தொடர்ந்து ஒரு தலைமுறையை தக்க வைக்க காரணம் அவரின் "நடிப்பிற்கான நடிப்பு" (Act for act)செயல்பாடே. வன்முறையும், முத்தக்காட்சிகளும், பாலியல் வசனங்களும், வரிகளை விட இசையின் சத்தமே அதிகமிருக்கும் பாடல்களும் தமிழில் காலங்காலமாக வரவேற்பும், ஊடுபாவலும் கொண்டிருக்கும் நிலையில் சமீப காலத்திய திரைப்படங்களின் போக்கிலும் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. சில மாறுபட்ட படங்களின் வரவு வரவேற்கத்தக்கதே. அதுவும் மரபான மனங்களை உடைத்து விட்டு வெற்றி பெற்றது தமிழ் சினிமாவின் வரலாற்றை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு பெரிதும் உதவும் ஒன்றாகும். இதன் தொடர்ச்சியே மரபார்ந்த தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை மறு உருவாக்கம் செய்யும். ரஜினிகாந்த் இந்த வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட பக்கம் ஒன்றில் நிற்பார். திரைப்படங்கள் பார்ப்பதற்கு மட்டுமல்ல, வாழ வைக்கவும் செய்கின்றன என்று அகிரா குரோசவா சொன்னது இந்த சூழலுக்கு சரியாகவே பொருந்துகிறது.

No comments: