காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Tuesday, December 25, 2012


தேசியம் -இனம்-சுய நிர்ணயம்குர்திஸ்தானின் துயரங்கள்
(குர்து தேசிய இனப்போராட்டம் ஓர் அறிமுகம் என் புத்தகத்திற்கு நான் எழுதிய முன்னுரை)



வரலாற்று ரீதியாக தேசியம் ஒரு துயர் மிகுந்த சொல்லாடலாகவே இருந்து வருகின்றது. அதன் தாக்கம் லௌகீக வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும், எல்லா பிரதேசங்களிலும் வியாபகமாகி இருக்கிறது. மனித பிறப்பின் பெயரிடலின் முக்கிய பகுதியாக இந்த தேசியம் மாறி இருக்கிறது. ஒரு மனிதன் பிறக்கும் போதே தேசிய அடையாளத்துடனும் தான் பிறக்கிறான். இந்த இடத்தில் வெற்றிடம் அல்லது சூன்ய பிளவு ஏதும் அவனுக்கு இல்லை. மொழிகள் உருவாக்கும் பிரக்ஞை மற்றும் ஊடல்தனம் எல்லாமே தேசிய உருவாக்கத்திலும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. தேசிய இன அடையாளத்தின் பகுதியாக சுயநிர்ணயம் என்பது இங்கிருந்து தான் ஆரம்பிக்கின்றது. அதாவது மனித சுயம் என்பதன் தர்க்க ரீதியான தொடர்ச்சி தான் இந்த நிர்ணயம் (Determination)இதற்காக தான் உலக வரலாற்றில் பெரும் போர்கள் மற்றும் உயிரிழப்புகள் நடைபெற்றிருக்கின்றன. தனிமனித காரணங்களை விட தன் தேசிய இன உரிமைக்காக உயிரிழந்தவர்கள் தான் உலக வரலாற்றில் அதிகம். நாம் அரசு என்பதிலிருந்து அரசுகள் என்ற கட்டமைப்பிற்குள்ளும் வாழ்ந்து வருகிறோம் என்பது இங்கு கவனிக்க வேண்டிய விஷயம். அரசு என்பதிலிருந்து அரசாங்கம் என்பது வேறுபடுகிறது. அரசு என்பது ஒரு நாட்டின் அல்லது அந்த பிராந்தியத்தின் இயக்கத்திற்கான உறுப்புகளை, அதிகார கட்டமைப்பை குறிக்கும். ஆனால் அரசாங்கம் என்பது அதனை இயக்குபவர்களை குறிக்கும். இங்கு அரசு என்பது நிரந்தரமானது. ஆனால் அரசாங்கம் என்பது மாறக்கூடியது. இதிலிருந்து தான் இன்றைய உலகின் மொத்த அரசியல் இயக்கமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனை நாம் பிரக்ஞைபூர்வமாகவும், அறிவார்ந்த ரீதியாகவும் அறிந்து கொள்வது அவசியம். வரலாறு இந்த அறிதல்களுக்கான வாயில்களை திறந்தே வைத்திருக்கிறது.

குர்துகள் மத்தியகிழக்கு வரலாற்றில் தவிர்க்க முடியாத இனமாக இருக்கின்றார்கள். வரலாறு, கலாசாரம் ,பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியான ஆக்கபூர்வமான பங்களிப்புகளை அவர்கள் செய்திருக்கிறார்கள். மத்தியகிழக்கின் மலைப்பிரதேச பழங்குடி மக்களாக காலங்காலமாக அவர்களின் இருப்பிடம் அந்த தன்மையோடு நகர்ந்து வருகின்றது. அவர்கள் இந்தோ ஆரிய வழிவகையை சேர்ந்தவர்கள், அதன் பரிணாம சங்கிலி தொடர்பை கொண்டவர்கள் என்ற வரலாற்றுக்குறிப்பு காணப்படுகிறது. ஒரு தேர்ந்த, தொடர்ச்சியற்ற வாழ்க்கை முறையியல் அவர்களுக்கு உண்டு. ஒரே மொழியின் பல கிளைகளாக குர்து மொழி இருந்தது. அந்த கிளைகள் ஒட்டுமொத்தமாக குர்து என பெயரிடப்பட்டன. அது மொழியியலின் எல்லாவித ஆழ அகலங்களையும், வீச்சையும் கொண்டது. இது தான் குர்துக்களை தேசிய இனமாக தெளிவாக வரையறுக்க முடியாமல், அந்த அடையாள கட்டமைப்பு தாமதமானதற்கு காரணம். இன்றைய நிலவரப்படி குர்துகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 45 மில்லியன். இவர்கள் பல்வேறு நாடுகளில் வியாபித்து இருக்கிறார்கள். இன்றைய உலகின் மிகப்பெரும் புலம்பெயர்ந்த மக்கள் குர்துக்கள் தான். உலகின் ஒரே நாடற்ற இனமும் குர்துகள் தான். இவர்களின்  தாயகம் குர்திஸ்தான். அதாவது குர்திஸ்தான் என்பது முழுமுதலான அரசமைப்போ அல்லது தேசமோ அல்ல. மாறாக பல தேசங்களின் குறிப்பிட நிலப்பரப்புகள் அடங்கிய புவியல் தொகுதி. அதாவது துருக்கி, ஈராக், ஈரான், சிரியா மற்றும் சோவியத் யூனியனின் அசர்பைஜான் மற்றும் அர்மேனியா போன்றவற்றை உள்ளடக்கியது. இவர்களை பற்றிய ஒரு தெளிவான வரலாற்றுச்சித்திரத்தை நான் இந்த நூலில் குறிப்பிட்டு இருக்கிறேன். குர்து வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு என்பது மத்தியகிழக்கின் மாபெரும் சிலுவைப்போர்களாகும். சிலுவைப்போர்கள் காலகட்டத்தில் குர்துகள் பிராந்திய பாதுகாப்பிற்கு முக்கிய பங்காற்றினர். அது இராணுவ ரீதியாக மிக வலுவாக இருந்தது. அந்த வலுவாக்கத்தின் பரிணாமத்தன்மை தான் அவர்களை மத்தியக்கிழக்கின் சில பகுதிகளை குறிப்பிட்ட காலம் வரை ஆள்வதற்கு வழிவகுத்தது. இதன் தொடர்ச்சியில் பிந்தைய கட்டத்தில்  மத்திய கிழக்கின் அரசுகளால் குர்துகள் பெரும் நெருக்கடிகளுக்கும், வன்மங்களுக்கும் ஆளானார்கள். இப்போதும் ஆகி வருகின்றார்கள். அதுவே பிந்தைய கட்டத்தில் அவர்களை தேசிய சுயநிர்ணயம் நோக்கி நகர்த்தியது. மேலும் சுமார் பத்தாண்டுகள் நடந்த ஈரான்ஈராக் போரானது குர்துகளின் இருப்பையே தகர்த்தது. அவர்களின் கிராமங்கள் பல சூறையாடப்பட்டன. வேதியியல் ஆயுதங்கள் பல உபயோகிக்கப்பட்டன. இதன் காரணமாக குர்துகள் தங்களின் தேசிய போராட்டத்தை நாடு கடந்த நிலையில் முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.அவர்களின்  வரலாற்று துயரம் எவ்வித எல்லைப்பாடுகளுக்குள்ளும் வரையறுக்க முடியாதது. சந்தேகமின்றி இன்றைய குர்துகள் தங்கள் தேசத்திற்காக போரிடுவது அவர்களின் சுயநிர்ணயம் தான் என்பதாக நாம் குறிப்பிட முடியும். மேலும் அரசியல் இஸ்லாம் என்பது தேசியவாதத்திற்கு எதிராகத் தான் இருந்து வருகிறது. இந்நிலையில் சுன்னிகளும் குர்துகளுடன் சில சந்தர்ப்பங்களில் இணைந்து செயல்பட்டனர். பிராந்திய முழுமைக்குமான இஸ்லாம் என்ற கருத்துரு பல தருணங்களில் குர்துகளை பாதித்தது. அந்த தருணத்தில் குர்துகள் தங்களின் சுயபிரக்ஞையை அதிகப்படுத்தியதோடு, போராட்டத்தையும் தீவிரப்படுத்தினர்.தங்கள் மொழி ,கலாசாரம் மற்றும் சமூக அடையாளத்தை நிறுவிகொள்ள, அவ்வாறு தங்களை இருத்திக்கொள்ள அவர்கள் போராட்டத்தை தொடர்கிறார்கள். இது வரலாற்று அடிப்படையில் அவசியமானதும்,அறிவார்ந்ததுமாகும். ஒரு சிறந்த இனம் ஒன்று தங்களை கடந்த கால வரலாற்றோடு அல்லது காலத்தோடு முன்நிறுத்தி கொள்கிறது என்றால் அது பெரும்பாலும் குர்து இனமாகத்தான் இருக்க முடியும்இந்த புரிதலோடு,பிரக்ஞையோடு இந்த நூல் வெளிக்கொணரப்படுகிறது. உலக வரலாற்றில் பிறகாரணங்களை விட தங்களின் தேசத்திற்காக உயிரிழந்தவர்கள் தான் அதிகம்.
 என் யவனவாழ்க்கையின் பத்தாண்டுகளை எடுத்துக்கொண்ட வளைகுடா வாழ்க்கையில் அரபு பல்கலைகழக பேராசிரியர் முனீர் ஹசன் மஹ்மூத் உடனான யதேச்சையான தொடர்பு குறிப்பிடத்தக்கது. மறக்க முடியாதது. என் எழுத்துக்களில், சிந்தனைப்போக்கில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய அவரின் பங்களிப்பு மறுக்க முடியாதது. அவர் காரணமாக தான் உலக புகழ்பெற்ற பல சிந்தனையாளர்களை குறிப்பாக தாரிக் அலி, சமீர் அமீன், லென்னி பிரன்னர் மற்றும் நோம் சாம்ஸ்கி போன்றவர்களை நேர்காணல் செய்ய முடிந்தது. அது அவரின் பல்கலைகழக கருத்தரங்கள் வாயிலாக  நிறைவேறியது. அந்த நேர்காணல்கள் அனைத்துமே என் முந்தைய நூலான கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம் என்பதில் இடம்பெற்றிருக்கின்றன. அறிவுஜீவிகளை புத்தகத்திலிருந்து நேரடியாக தரிசிக்கும் உணர்வை அப்போது பெற்றேன். இது தமிழில் மிக அபூர்வமாகவே நிகழ்ந்திருக்கிறது. அவரோடு ஒரு தருணத்தில் தனிப்பட்ட முறையில் உரையாடிக்கொண்டிருக்கும் போது மத்தியகிழக்கின் குர்து இனத்தை பற்றிய விஷயத்தை பேச்சின் இடையே குறிப்பிட்டார். அப்போது எனக்கு குர்துகள் பற்றிய சிறிய அறிமுகம் இருந்தது. அதாவது அவர்களின் தோற்றம் குறித்த வரலாற்று அறிவு எனக்கு இருந்தது. அதை அவர் குறிப்பிட்டு குர்துகள் பற்றி நீங்கள் மேலும் அதிகம் படிக்க வேண்டும் என்றும், அதனுள் கடந்து போக வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார். அன்று முதல் அவர்களைப்பற்றி விரிவாக தமிழுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் உருவானது. அது தமிழ்ச்சூழலை பொறுத்தவரை காலத்தின் தேவையாக இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டேன். ஏற்கனவே தமிழில் ஒரு சில மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அவை முழுமையானதாக இல்லை. மேலும் குர்துகள் குறித்த விரிந்த வரலாற்று பார்வை, அவர்களின் தேசிய இன போராட்டம் மற்றும் அதன் பரிணாமம்  போன்றவை குறித்து இன்னும் போதாமையே நிலவுகிறது. அந்த இடைவெளியை நிரப்பும் பொருட்டு தான் இந்த நூலை எழுதியிருக்கிறேன். முந்தைய நூலான கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம் என்பது கூட இம்மாதிரியான சூழல் ஒன்றின் அவசிய தேவையை முன்னிட்டு எழுந்ததாகும். அது வெளிவந்து தமிழ்ச்சூழலில் பரவலான கவனத்தையும், அதிர்வையும் ஏற்படுத்தியது. அதே மாதிரியான ஆழத்தையும், விரிவையும் தேடியே இந்த நூல் தமிழ்ச்சூழலில் வெளிவருகிறது.` இந்நூலில் குவியப்படுத்தும் ஒன்றாக குர்து தேசிய தலைவர், அறிவு ஜீவி, மற்றும் சிறந்தபோராளி போன்ற பன்முக அடையாளங்களை கொண்ட அப்துல்லா ஒசலான் பற்றிய விரிவான அறிமுகம் மற்றும் அவரின் நேர்காணல் (முனீர் ஹசன் மஹ்மூத் எடுத்தது) ஆகியவை உள்ளடக்கப்பட்டு இருக்கிறது. ஒசலான் பற்றிய வரலாறு குர்துகளின் தேசிய இன போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானதும், தனித்த ஒன்றுமாகும்.அவரின் சிறை வாழ்வு மிக துயரமானது. விசனகரமானது. பல உலகப்போராளிகளின் வாழ்வியல் அனுபவத்தோடு ஒப்பிட தகுந்தது.
 காலத்தோடும், புறச்சூழலோடும் போராட்டம் நடத்திய படி  ஒராண்டு காலமாக தொடர்ந்த இந்த புத்தகத்தை நிறைவு செய்யும் தருணத்தில் இயல்பான சூழல் காரணமாக பலரை நினைவு கூர்வது உசிதமானது. பொதுவாக கடந்து செல்லும் வஸ்துக்கள் எதுவுமே அதை நினைவுப்படுத்திக்கொள்வதில்லை. சாலைகள் கூட அப்படித்தான். ஆனால் இந்த புத்தகத்திற்கான என் தேடலில், முடிவுறா பயணத்தில் என்னோடு இருந்து வரும், எனக்கு தொடர்ந்த ஊக்கத்தையும், முன்தொடரலையும், மனத்திட்பத்தையும் கொடுத்து வரும் நண்பர்கள் முக்கியமானவர்கள். முந்தைய  நூலில் நான் குறிப்பிட்ட பல நண்பர்கள் இப்போதும் உதவியிருக்கிறார்கள். எப்போதும் என்னுடன் இருக்கும் நண்பர் ஜமாலன், கவிஞர் என்.டி ராஜ்குமார்,இலைகள் இலக்கிய அமைப்பின் நிறுவனரும், சிறுகதையாசிரியருமாகிய ஹசன் மைதீன், தனியார் பள்ளியின் முதல்வர் என்ற அடையாளத்துடன் என்னுடன்  தொடர்பில் இருக்கும்  நண்பர் பிரேம்தாஸ், பெங்களூர் நண்பர்கள் பாலசுப்ரமணியம்,   கார்த்திக்,

வெளி ரங்கராஜன், புது எழுத்து ஆசிரியர் மனோன்மணி மற்றும் கியூபர்ட் சதீஷ் (பஹ்ரைன்)தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர் இளங்கோ ,இந்நூல் உருவாக்கத்திற்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் பல வடிவங்களில் உதவி செய்த என் இனிய நண்பர் ஸ்டாலின் பெலிக்ஸ் (டிசிஎஸ் சாப்ட்வேர், சென்னை)ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி. மேலும் இந்நூலில் உள்ள சில கட்டுரைகளை வெளியிட்ட புது எழுத்து, உயிர் நிழல் (பிரான்சு), காக்கை சிறகினிலே, உன்னதம், வெயில் நதி போன்ற சிற்றிதழ்களுக்கும்,

எதுவரை, மலைகள்.காம் போன்ற இணைய இதழ்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த புத்தகத்தின் உருவாக்கத்திற்கு மிக முக்கிய தூண்டலாக இருந்து, என் ஆர்வத்தை அதன் இயல்பிலே தொடரச்செய்து, நான்  மடிக்கணிணியின் விசைப்பலகையில் விரல்கள் வலிக்க தட்டச்சு செய்ய காரணமாகவும்எழுத்து வாழ்க்கையில் நான் தொடர்ச்சியாகவும், முன்னோக்கி இயங்க பின்புலமாகவும் இருக்கும் என்  இனிய வாழ்க்கைத்தோழி ஜீனத் ஜாஸ்மின் மற்றும் நான் எழுதும் தருணத்தில் என் மடியில் தவழ்ந்து என்னோடு உறவாடும் என் செல்லக்குழந்தை தாரிக் பிலால் ஆகிய இருவருமே இத்தருணத்தில் முக்கியமானவர்கள். மேலும் முந்தைய நூலின் தாக்கம் காரணமாக இது போன்றதொரு நூலை வெளியிட தீர்மானித்து என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி, இதை வெளியிடும்  ஆழி பதிப்பக நண்பர் செந்தில்நாதனுக்கும் என் மனமார்ந்த நன்றி.


வெளியீடு


ஆழி பதிப்பகம்
1A, Thilagar Street
Sri Balaji Nagar, Thundalam
Ayyappan Thangal
Chennai 600077 Tamil Nadu India
91-99401 47473
91-44-26791474
senthil@aazhipublishers.com
http://www.aazhipublishers.com

No comments: