காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Sunday, June 2, 2013

நகரமயமாக்கலும் தமிழ்நாடும் - சமூக நகர்வை அடிப்படையாக வைத்து



 தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு வாரியத்தின் தமிழ்நாட்டைப்பற்றிய புள்ளிவிபரம் அதிர்ச்சி கலந்த  எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அதாவது தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் நகரமயமாக்கல் அதிகரித்து 50 சதவீத மக்கள் நகர்புறங்களில் வாழ்வதாகவும் , விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அது தெரிவிக்கிறது. இதன் பின்னணி மற்றும் காரண காரியங்கள் விரிவாக அலசப்பட வேண்டியவை. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை வெளிவரும் வழக்கமான ஒன்று தான் இது என்று அரசுகளும் ,மக்களும் கவனிக்காமல் கடந்து விடுவதல்ல இது. இந்த பிரச்சினையின் ஆழ அகலங்கள் ஆராயப்பட வேண்டியவை.

மனித வாழ்க்கையின் நகர்வை வைத்து, அவனின் இருப்பை வைத்து நாடோடி மற்றும் நிரந்த குடியானவர் என்ற வகைபாடு உருவானது. நாடோடி மனிதர்கள் நிலங்களை பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு வாழ்வின் எல்லாமே தற்காலிகமானது தான். நாடோடியான மனிதன் நிரந்தர குடியானவனாக மாறும் போது தான் நிலவியல் ரீதியான பிளவு உருவாகிறது. நிலம் என்ற கட்டமைப்பே அவனை ஒரு சமூக மனிதனாக உருவாக்கம் செய்கிறது. நிலத்தை சார்ந்த செயல்பாடுகள் விவசாயமாக மாறும் போது அதனோடு இயைந்து நிரந்த தங்குமிடம் உருவாகிறது. வீடு என்பதன் உருவாக்கம் அது தான். தமிழ்நாட்டின் பல கிராமங்களில் விவசாய நிலங்கள் சார்ந்தே வீடுகள் உருவாக்கப்பட்டிருக்கும். அதுவே பிந்தைய கட்டத்தில் அவனின் வாழ்வாதாரமாக மாறி விடுகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை சுதந்திரத்திற்கு பிந்தைய காலகட்டம் அதாவது அறுபதுகள் வரை மற்ற மாநிலங்கள் போன்றே பெரும்பாலும் விவசாயமே உயிர்நாடியாக இருந்து வந்தது. தஞ்சை மண்டலம் தான் இதன் மையம். உயிர் நாடி. அங்கு தான் பெரும் நிலபிரபுக்கள் இருந்தனர். விவசாய கூலிகள் பெருமளவில் சுரண்டப்பட்டதும் அங்கு தான். அதற்காக இடதுசாரி கட்சிகள் பெரும்போராட்டங்களை நடத்தின. கூலி உயர்வுக்காக நடத்திய போராட்டங்கள் பெரும்பாலும் இந்த பிரபுக்களால் ஒடுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியில் அறுபதுகளின் இறுதியில் தஞ்சை மாவட்டம் கீழ் வெண்மணியில் விவசாயிகள் தங்கள் குடிசைகளோடு கொழுத்தப்பட்டனர். பலரின் வாழிடங்கள் அழிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து பெரும் போராட்டங்கள் மாற்றங்கள் அப்பகுதியில் ஏற்பட்டன. உழுபவனுக்கே நிலம் சொந்தம் (Land for tillers)என்ற முழக்கங்கள் முக்கியமாக முன்வைக்கப்பட்டன. அதன் காரணமாக தமிழக அரசு நிலஉச்சவரம்பு சட்டத்தை இயற்றியது. தஞ்சை பகுதியில் ஒரு பகுதி நிலங்கள் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. விவசாயத்தை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டை நான்கு விதமாக பிரிக்கலாம். நெற்களஞ்சியமாக இருக்கும் தஞ்சை மண்டலம். முந்திரி, பலாவிற்கு பெயர்போன தென்னாற்காடு மாவட்டங்கள், மாழ்பழம் மற்றும் காய்கறி பயிரிடுதலை பிரதானமாக கொண்ட சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள், திராட்சை மற்றும் மாம்பழம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட தேனி மாவட்டம் இவை தான் தமிழ்நாட்டின் விவசாய மையம். இதன் இயக்கத்திற்கு தான் தற்போது பாதிப்பு வந்திருக்கிறது. பொய்த்து வரும் பருவமழை, முறையான மழைநீர் சேகரிப்பு முறை இல்லாததால் ஏற்பட்டிருக்கும் நிலத்தடி நீர்மட்ட பிரச்சினை, ஆறுகளை முறையாக பராமரிக்காததால், பல நதிகளுக்கிடையே நீர் பங்கீட்டு முறை இல்லாததால், மணலை சட்டவிரோதமாக அள்ளுவதால் இயல்பாகவே அடுத்த மாநிலங்களில் நீருக்காக கையேந்தும் நிலை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டு விடுகிறது. விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டங்கள் போதுமான அளவில் இல்லாதது, அதனை கையாள்வதில் உள்ள பிரச்சினைகள், விவசாய பொருளுக்கான உரிய விலை கிடைக்காதது போன்றவை தமிழ்நாட்டில் விவசாயிகளை புலம் பெயரச் செய்கின்றன. அறுபதுகளின் இறுதியில் , எழுதுபதுகளின் தொடக்கத்தில் மத்திய அரசின் தொழிற்கொள்கை காரணமாக கோவை, திருப்பூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் சிறு தொழிற்சாலைகள் ஏற்பட்டன.  இது விவசாய தொழில்கள் அற்ற அம்மாவட்ட மக்களுக்கு தங்கள் வாழ்க்கை தேடலை அமைத்துக்கொள்ள வசதியாக இருந்தது. அவர்களின் அன்றாட பொருளீட்டு வாழ்க்கைக்கு அது பெரும் உதவியாக இருந்தது. தமிழ்நாட்டில் எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில்  பல கிராமங்கள் பிற கிராமங்களோடு இணைக்கப்பட்டன. பேருந்து மற்றும் மின்சார வசதி செய்யப்பட்டது. பல கிராம சாலைகள் பக்கத்தில் இருந்த நகரங்களோடு இணைக்கப்பட்டன.  உத்திரபிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட வட மாநிலங்கள் இன்னும் அடைய முடியாத வசதிகளை தமிழ்நாடு எண்பதுகளில் அடைந்து விட்டது. இது சமூக நகர்விற்கான (Social mobility)முதல் எத்தனிப்பு எனலாம்.

தமிழ்நாட்டில் பன்னாட்டுக்கம்பெனிகளின் வருகை என்பது 90 களின் இறுதியில் நடந்தேறியது. முதலில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னை மாமல்லபுரம் சாலையை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. முதலில் தரமணியில் ஐ.டி பார்க் அமைக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக பல பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வர ஆரம்பித்தன. அதன்பிறகு  பன்னாட்டு உற்பத்தி தொழிற்சாலையாக பிரபல கார் கம்பெனியான ஹுண்டாய் வர ஆரம்பித்தது. திருபெரும்புதூரில் தன் முதல் யூனிட்டை அது ஆரம்பித்தது. அதன் பிறகு ஓரகடம், இருங்காட்டு கோட்டை, மணலி, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் பிரபல தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தி பிரிவை ஆரம்பித்தன. பன்னாட்டு கம்பெனிகள் வருகை ஒருபுறம் சமூக வளர்ச்சியை, உள்வாங்கலை ஏற்படுத்தினாலும் மறுபுறம் மின் உறிஞ்சலையும் ஏற்படுத்த தவறவில்லை. இதன் காரணமாக வீட்டு பயன்பாடு மற்றும் சிறுதொழிற்சாலை பயன்பாட்டிற்கான மின்சாரம் முழுவதுமாக தடைபட்டது. ஆனால் இதில் கழக அரசுகளின் கையாலாகாத்தனமும் அடங்கியிருக்கிறது. தொழிற்சாலைகளுக்கான ஒப்பந்தம் போடப்படும் நேரத்தில் அதற்கான மின்தேவையும் அறிவியல் பூர்வமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ஆனால் அவை எடுத்துக்கொள்ளப்படாமல் அலட்சியமாக விடப்பட்டதன் விளைவு தான் இன்றைய மின்வெட்டு. விவசாயத்திற்காக இயல்பான , அசாதாரணமான பிரச்சினைகள், சிக்கல்கள் விவசாயிகளை நகரங்கள் நோக்கி இடம்பெயர வைத்தன. பல விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் பேர்வழிகளால் பிளாட்டுகளாக மாற்றப்பட்டன. பலர் தங்கள் விளைநிலங்களை விற்றுவிட்டு சென்னை போன்ற பெருநகரங்களுக்கு புலம் பெயர்ந்தனர். இதனால் தமிழ்நாட்டின் எல்லா மாவட்ட தலைநகரங்களும் இடநெருக்கடியால் திணறுகின்றன. மேலும் தலைநகரான சென்னையை நோக்கியே அனைத்து தொழிற்சாலைகளும், தொழிற்சார்ந்த நடவடிக்கைகளும் இருப்பதால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் அங்கு தன்னை நகர்த்திக்கொள்ள விரும்புகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் எவ்விதமான தொழிற்நடவடிக்கைகளும் இல்லாத காரணத்தால் பலர் சென்னையை நோக்கி படையெடுக்கும் அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு நகரம் என்பது அதன் இயல்பான பரப்பளவில் குறிப்பிட்ட அளவு மட்டுமே தாங்க முடியும். குடிநீர், மின்சாரம் மற்றும் உட்கட்டமைப்புகளில் அது குறிப்பிட்ட எல்லைக்கு மேல் தன்னை விரிவாக்கம் செய்ய முடியாது. இதன் காரணமாக மனித நடவடிக்கை மற்றும் வாழ்வியல் முறைகளில் மாற்றம் ஏற்படும். குற்றச்செயல்கள் பெருகும். மோசமான நடுத்தர வர்க்கத்தை அது ஏற்படுத்தும். இவைகளை ஓர் அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். ஆக தமிழ்நாட்டில் இந்த கணக்கெடுப்பின் படி நகரமயமாக்கல் குறைந்து , விவசாய எண்ணிக்கைகள் சமநிலையில் இருக்க அரசு விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதுடன், மண்டல வாரியாக தொழில் மையங்களை ஏற்படுத்த வேண்டும். சென்னையை நோக்கிய குவியம் என்பது மீண்டும் விவசாயத்தை பாழடிக்கும் ஒன்று. படித்த மத்தியதரவர்க்கத்தை உள்வாங்குவதற்கு, அதன் செயல்திறனை நடைமுறைப்படுத்துவதற்கு, அதன் வாழ்வாதாரத்திற்கு தொழிற்மயமாக்கல் முக்கியம். ஆனால் அவை குவிமயப்பட்ட ஒன்றாக மாறி விடக்கூடாது. இதுவே அடுத்த பத்தாண்டுகளில் கழக அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டியது. உடனடியாக அதிமுக்கியத்துவம் கொடுத்து கவனிக்கப்பட வேண்டியதும் கூட.

No comments: