காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Sunday, June 30, 2013

அரபு கவிதையியல் - அரபுக் கவிஞர் அதோனிஸ் ஓர் அறிமுகம்





கவிதை என்ற மிகச்சிறந்த  இலக்கியவடிவத்தின் சிறந்த பங்களிப்பையும், ஆளுமைகளையும் அரபுலகம் வரலாறு நெடுகிலும்  உருவாக்கி விட்டிருக்கிறது. அரபு பழங்குடியினர் சிறந்த செவ்வியல் கவிஞர்களாகவும்வரலாற்றாசிரியர்களாகவும் கடந்து சென்றிருக்கின்றனர். ஒரு தேர்ந்த கவிதை மனத்திற்கான, உன்னதத்திற்கான குறியீடாகவும் அரபுலக கவிதைகள் இருந்திருக்கின்றன. கவிதைக்கான எல்லாவித சாத்தியப்பாடுகளை தாண்டியும் அரபுலகம் நகர்ந்திருக்கின்றது. இருபதாம் நூற்றாண்டில் அதன் வேகம் இன்னும் அதிகரித்தது. அதற்கு காரணமான ஒருவராக அதோனிஸ் இருக்கிறார். அதோனிஸின் வேகம் அரபுக்கவிதைகளை மற்றொரு நிலைக்கும், தளத்திற்கும் எடுத்துச்சென்றிருக்கின்றது.

கலைஞர்களையும், சிறந்த எழுத்து ஆளுமைகளையும் உருவாக்கிய சிரியாவில் அதோனிஸ் 1930 ல் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். வறுமைப்பின்னணியை சார்ந்த குடும்ப உறுப்பினரான அதோனிஸ் இளம்வயதிலேயே கவிதைகளில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். இதன் காரணமாக தன் 19 ம் வயதில் கிரேக்க புராண கடவுளான  அதோனிஸ் பெயரை தனக்கு சூட்டிக்கொண்டார்இந்த பெயரிலேயே கவிதைகளை எழுதத்தொடங்கினார். விவசாய பின்னணியில் இவரின் குடும்பம் இருந்ததால் பள்ளிக்கு  செல்ல முடியவில்லை. இதன் காரணமாக வயல் வெளிகளில் வேலைபார்க்கும் நிர்பந்தத்திற்கு ஆளானார். அங்கும் இவரின் தந்தை இவருக்கு கவிதைகளை கற்றுக்கொடுத்தார். மேலும் குர் ஆனையும்ம் கற்றுக்கொடுத்தார். தன் 14 ஆம் வயதில் தன் பகுதிக்கு வருகை தந்த சிரிய அதிபர் சுக்ரி அல் குவைத்தியின் முன்னிலையில் அதோனிஸ் கவிதைகளை படித்துக்காட்டினார். இதனைக்கண்டு வியந்த சிரிய அதிபர் இவரை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றும், மேலும் உயர்கல்வியை வரை சென்று மிகப்பெரும் ஆளுமையாக இவர் உருவாக வேண்டும் என்றும் தன் விருப்பத்தை தெரிவித்தார். மேலும் அதற்கான செலவை தானே ஏற்பதாக அவர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து இவர் புகழ்பெற்ற பிரெஞ்சு பள்ளி ஒன்றிற்கு கல்விக்காக அனுப்பப்பட்டார். மேலும் டமாஸ்கஸ் பல்கலைகழகத்தில் தத்துவக்கல்வியை பயின்றார் அதோனிஸ்அதன் மூலம் தன் ஆளுமைத்திறனையும், தத்துவ அறிவையும் விரிவுப்படுத்திக்கொண்டார் அதோனிஸ். அவரின் கவித்துவ மனமும் விரிவார்ந்த தளத்தை நோக்கிச் சென்றது.

1956 ல் அதோனிஸின் வாழ்வில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. சிரியா சார்ந்த அரசியல் விவகாரங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதற்கு முந்தைய கட்டத்தில் அரசியல் போராட்டங்களுக்காக பல ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டியதிருந்தது. 1956 ல் லெபனான் தலைநகர் பெய்ரூட்டிற்கு புலம்பெயர்ந்தார். அங்கு புலம்பெயர்ந்தவர்கள், படைப்பாளிகள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஆகியோருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. அங்கு கவிதைக்கான சிர் மற்றும் முவாஹப் போன்ற இதழ்களை நடத்தினார். இதன் மூலம் அரபுக்கவிதைகளை மற்றொரு தளத்திற்கும், கட்டத்திற்கும் எடுத்துச்சென்றார். அதுவரை இருந்த மரபான வடிவத்தை உடைத்து, இன்னொரு வித்தியாச படிமத்திற்கு எடுத்துச்சென்றார் அதோனிஸ். மேலும் சூபிச தாக்கமும் அவரின் கவிதைகளில் இருந்தது. இதன் தொடர்ச்சியில் 1973 ல் பெய்ரூட் புனித ஜோசப் பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார் அதோனிஸ். இந்நிலையில் 1970 லிருந்து 1985 வரை லெபனான் பல்கலைகழகத்தில் பேராசிரியராக அதோனிஸ் பணிபுரிந்தார். மேலும் 1985 ல் லெபனான் உள்நாட்டுப்போர் காரணமாக பிரான்சுக்கு சென்ற அதோனிஸ் அங்கும் தன் கவிதைகளை தொடர்ந்தார். இதனிடையில் பிரான்சு சோபோன் பல்கலைகழகத்தில் சிறிதுகாலம் பேராசிரியராக பணிபுரிந்தார். பிரெஞ்சு கவிதைகளின் தாக்கம் அவரின் அரபு கவிதைகளை மேலும் கூர்மைப்படுத்தத் தொடங்கியது. சிறந்த கவிதைகளை எழுதியதன் விளைவாக 1997 ல் அவருக்கு ஜெர்மனியின் கோதே விருது வழங்கப்பட்டது. இதனைப்பெற்ற முதல் அரபுக்கவிஞர் அதோனிஸ் தான்.  1964 ல் அவரின் முதல் தொகுதி வெளியானது. செவ்வியல் அரபுக்கவிதைகள் பற்றிய நூலாக அது இருந்தது. பின்னர் 1973 ல் இரண்டாம் தொகுதி Al-Thabit wa al-Mutahawwil ( The fixed and changing)என்ற பெயரில் வெளியானது. இது சமகால மற்றும் அரபு செவ்வியல் கவிதைகள் குறித்த விரிவான பதிவாக இருந்தது. இதன் மூலம் அதோனிஸ் அரபு கவிதை மொழியை மறுகட்டமைப்பு மற்றும் மறு உருவாக்கம் செய்ய முயன்றார்.

அதோனிஸின் கவிதை அரபு வெளியில் தொடர்ச்சியான தாக்கத்தை எற்படுத்தியது. குறிப்பாக புலம்பெயர்ந்தவர்கள், அரசியல் காரணங்களுக்கான நாடு கடத்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான குரலாக இருந்தது. இந்நிலையில் அதோனிஸின் அடுத்த தொகுதியாக The Songs of Mihyar of Damascus வெளியானது. இது முற்றிலும் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் குறித்த தொகுதியாக இருந்தது. இதன் மொழி அந்த சாரத்தை பிரதிபலித்தது. அதன் நெடுமங்களோடு தன் பயணத்தை தொடர்ந்தது. உக்கிரமும், வலியும், துக்கமும், மனித துயரங்கள் அதன் நெடிமையாக இருந்தன.

அதோனிஸின் கவிதை இயக்க வெளியில் மிக முக்கிய ஆக்கம் என்பது 1980 ல் வெளிவந்த A time between Ashes and Roses தொகுப்புஇதில் இடம்பெற்ற மூன்று நீண்ட கவிதைகள் அரபு - இஸ்ரேல் ஆறு நாள் போரைப்பற்றியதாக இருந்தது. அரசியல் குறித்த நுண் தள பிரக்ஞையை வாசக மனங்களில் ஏற்படுத்தியதுமேலும் சமகால அரபுக்கவிதைகளை இது மற்றொரு தளத்திற்கு நகர்த்தியது. அதுவரை கவிதைகள் என அறியப்பட்ட மரபார்ந்த வடிவம் தகர்க்கப்பட்டு புதிய வடிவத்தை நோக்கிச் சென்றது.

அதோனிஸின் எழுத்து வாழ்க்கையின் மிக குறிப்பிடத்தக்க விஷயம் என்பது அவரின் அரபு செவ்வியல் மற்றும் இடைக்கால கவிதைகள் குறித்த ஆய்வாகும். மேலும் குர் ஆனின் உள்ளடக்கம் அதன் மொழி பிரக்ஞை குறித்தும் அதிகம் ஆராய்ந்தார். அரபு இலக்கிய வரலாற்றில் அதோனிஸின் செவ்வியல் கவிதை குறித்த ஆய்வு மிக முக்கியமானது. ஜாஹிலிய்யா என்று அறியப்பட்ட அறியாமை காலகட்டத்தின் வாய்மொழி வரலாற்றுக் கவிதைகளை அதோனிஸ் சிலாகித்தார். அதனடிப்படையில் வாய்மொழி என்பதை மூன்று வித தன்மையோடு அணுகினார். அறியாமை கால கவிதைகளின் வேர்கள் மற்றும் அது வாய்மொழியாக வளர்ந்து ஒலி குரல் கலாசாரமாக பரிணமித்தது, இரண்டாவதாக இது எழுத்து வடிவம் பெறாமல் அது மனித நினைவகங்களில் பதிந்து வாய்மொழி பரிமாற்றமாக மாறியது, மூன்றாவதாக இதன் குணாம்சம் மற்றும் பிந்தைய எழுத்து வடிவ அரபு படைப்புகளில் இதன் தாக்கம் எவ்வாறு  அழகியலாக உருவெடுத்தது என்பதைப்பற்றிய பன்முக ஆய்வாக அமைந்தது.

இஸ்லாமுக்கு முந்தைய கவிதை என்பது பாடலின் வடிவமாக பிறந்தது. இது கேள்வியின்  அடிப்படையாக வளர்ந்தது. வாசிக்கவோ அல்லது எழுதவோ செய்யப்படவில்லை. இந்த வாய்மொழி கவிதையில் குரலானது உயிர் மூச்சாக இருக்கிறது. அதாவது உடலின் இசையாக இருக்கிறது. இது பேச்சாகவும் அதற்கு அப்பாற்பட்ட பேச்சு வடிவமாகவும் இருக்கிறது. குரலுக்கும் , பேச்சிற்குமான இந்த உறவுமுறை சிக்கலானதாகவும், செழுமையாகவும் இருக்கிறது. மேலும் கவிதையின் தனித்துவத்தையும், அதன் இயங்குதன்மையையும் இது வெளிப்படுத்துகிறது. நாம் பாடலின் வடிவில் ஒரு பேச்சை கேட்கும் போது ஒரு தனிப்பட்ட வார்த்தைகளை மட்டும் கேட்காமல் அதன் ஆன்மாவை கேட்கிறோம். அரபியில் பாடல் என்பது நஸித் என்றழைக்கப்படுகிறது. இதன் வேரை தேடிச்சென்றால் அது குரல் என்பதை குறிக்கிறது. குரலை உயர்த்துதல் மற்றும் கவிதையை பாடுதல் என்பதான அர்த்தப்பாடுகளை உருவாக்குகிறது. இஸ்லாமுக்கு முந்தைய அரபுக்கவிதையின் இரு அடிப்படை கோட்பாடு என்பது சத்தமாக பாடுதல் மற்றும் கவிஞர் அவரின் சொந்த கவிதையை பாடுதல் என்பதாகும். கவிதையின் குரல் அதன் கோர்வையை விட சிறந்ததாக இருக்க வேண்டும். மேலும் கவிஞர் தன் சொந்த கவிதையை பாடுவதற்கான திறமையை பெற்றிருக்க வேண்டும். அது கேட்பவர்களை ஈர்க்கக்கூடியதாக, சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். கவிதையை பாடுதல் என்பது பாடலின் வடிவமே. அரபு இலக்கிய மரபு என்பது முழுவதும் இதன் அறிகுறியை தான் குறிக்கிறது. இஸ்லாமுக்கு முந்தைய அரபுக்கவிதை குறித்து ஆராய்ந்த அதோனிஸ்  ஆரம்ப காலகட்டத்தில் பாடலே கவிதையின் முன்னணி வடிவமாக இருந்திருக்கிறது என்றார். மேலும் நபியின் தோழரான ஹஸ்ஸான் இப்னு தாபித் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"நீ கோர்க்கும் ஒவ்வொரு கவிதையையும் பாடு

அந்த பாடல் கவிதையின் எல்லையாகிறது"

மேற்கண்ட உதாரணங்கள் இஸ்லாமுக்கு முந்தைய அரபுக்கவிதைக்கும் பாடலுக்கும் இடையே உள்ள உயிர்த்தொடர்பை குறிக்கின்றன. இவை ஆரம்பகால அரபுகள் கவிதைகளை பாடலாக பார்க்கப்பட்ட விதத்தை குறிக்கின்றன. ஆக கவிதை மனம் என்பது பாடலை பாடும் குரலின் லயத்தோடு ஒத்துப்போனது. அதன் ரீங்காரத்தோடும், அளவையோடும் இயைந்தது. அதோனிஸின் ஆரம்பகால கவிதைகள் குறித்த இந்த ஆய்வுகள் சிறந்த முன்மாதிரியை உருவாக்குகின்றன. புகழ்பெற்ற இஸ்லாமிய வரலாற்றாசிரியரான இப்னு கல்தூன்  பின்வருமாறு குறிப்பிட்டார்.
" முந்தைய காலத்தில் பாடுதல் என்பது இலக்கிய கலை வகைமையின் ஒரு வடிவமாக பார்க்கப்பட்டது. காரணம் அது கவிதையை சார்ந்து இருந்தது. கவிதையை வடிவமைத்தல் என்பது  இசையாக பரிணமித்தது. அப்பாஸிய அரசின் இலக்கிய மற்றும் அறிவுஜீவி வகுப்பினர் எல்லாம் இதனுள் ஆக்கிரமிக்கப்பட்டு  கவிதை நடை பற்றிய அறிவுத்தேடலும், கவிதையின் வகைமை குறித்த புரிதலை நோக்கியும் தங்களை செலுத்தினார்கள்."

ஆக இஸ்லாமுக்கு முந்தைய கவிதையின் மூலமாக பாடலும் அது சார்ந்த குரலிசையும் இருந்திருக்கிறது. அந்த குரல் மிக வலுவாக ஒலிக்கும் நிலையில் அவனுக்கு கவிஞனுக்கான அங்கீகாரம் கிடைக்கிறது. அவர்கள் வேறொரு வடிவத்தில் சிறந்த வரலாற்றாசிரியர்களாகவும் விளங்கினர். தங்களின் முந்தைய வரலாற்றை கவிதையாக பாடுவது அவர்களின் மரபாக இருந்தது.   இந்நிலையில் இஸ்லாமுக்கு முந்தைய புகழ்பெற்ற அரபு கவிஞராக அறியப்பட்டவர் அல் அஹ்ஸா. இவர் அரபுகளின் கைத்தளம் என்று அழைக்கப்பட்டார். இவரின் கவிதை இசைநயத்தோடும் , அதன் லயத்தோடும் இயைந்திருந்தது. அதன் ராகம், தாளம், லயனம் போன்றவற்றோடு இவரின் கவிதைகள் ஒருங்கிணைந்தன. குரலை நீட்டி தன் வார்த்தைகளை எழுதிக்கொண்டதன் மூலம் ஆரம்பகால அரபு கவிதை ரசிகர்கள் மத்தியில் பெருங்கவனத்தைப்பெற்றார்.

ஆரம்பகால அரபு கவிதைகளை அதோனிஸ் ஆராய்ந்ததன் மூலம் அதன் வேர்க்கிளைகள் குறித்தும் பெரும் எத்தனிப்பை செலுத்தினார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்பது அரபுகளின் வாய்வழி கவிதை என்பது மரபையும், அதன் ஒழுங்கார்ந்த வடிவமைப்பையும் கொண்டிருந்தது. இது அரபுகள் மற்றும் அரபுகள் அல்லாதவர்களுக்குமான உறவுநிலையை குறித்தது. அவர்களின் சமூக மற்றும் கலாசார உறவு முறைகள் ஆகியவற்றின் உறவாடலையும் வெளிப்படுத்தியது. குறிப்பாக சுமேரிய மற்றும் மெசபடோமிய கலாசாரத்துடன் இவர்களின் உறவு குறிப்பிடத்தக்கது. இது பற்றி எகிப்திய சிந்தனையாளர் தாஹா உசேன் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

" தூய அரபு கலாசாரம் என்பது குர் ஆனுடனும், மத அறிவியலுடனும் சம்பந்தப்பட்டதுமேலும் இதனோடு தொடர்புடைய கவிதை , இலக்கணம் மற்றும் சொல்லியல் போன்றவற்றுடன் அது நீள்கிறதுகிரேக்க கலாசாரம் மருத்துவம் மற்றும் தத்துவம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. மேலும் ஓரியண்டல் கலாசாரம் பாரசீகத்தோடும், இந்தியாவோடும், ஈராக்கின் செமிடிக் மக்களோடும் தொடர்பு கொண்டிருக்கிறது. "

அதோனிஸின் படைப்பு வாழ்க்கையில் முக்கிய கூறு என்பது அவரின் அரபு மொழி குறித்த தோற்ற ஆய்வு தான். அரபு மொழியின்  வேர்களை கண்டறிதல் மற்றும் அதன் தோற்ற, பரிணாம வளர்ச்சி குறித்தும் அதிகம் ஆராய்ந்தார். அரபு மொழியின் நுண்மை, அதன் உச்சரிப்பு துல்லியம் மற்றும் சூழல் சார்ந்த அர்த்தப்பாடு ஆகிய கூறுகள் குறித்து விரிவாக ஆராய்ந்தார். அதன் வேர்கள் எங்கிருந்து தொடங்குகின்றன என்பதும் அவரின் ஆய்வில் முக்கிய அம்சமாக இருந்தது. மேலும் அரபி மொழிக்கு முறைப்படியான இலக்கணத்தை அமைத்தவர் அபுல் அஸ்வத் அல் துஆலி. ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தவரான இவர் அரபு மொழியை அடுத்த கட்டத்திற்கும், அதன் எழுத்துரு உருவாவதற்கும் மிகுந்த பங்களிப்பை செலுத்தினார். அவரின் சிறந்த தொடக்கம் தான் அரபு மொழியின் பரிணாமத்தன்மைக்கு காரணமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

அதோனிஸின் அரபுக்கவிதையியல் மற்றும் சிந்தனை மூன்றுவித காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. ஒன்று அரபு இலக்கிய விமர்சனம். இரண்டாவது அரபு இஸ்லாமிய மொழியியல் மற்றும் மத அறிவியலின் தோற்றம் குறித்த அறிவுத்தேடலை நிகழ்த்துவது... மூன்றாவதாக முழுக்கவும் தத்துவ முறைமை. இந்த மூன்றும்  அதோனிஸின் அரபுக்கவிதையியல் பற்றிய ஆய்வில் இடம்பெற்றன. இந்த அடிப்படைகளுடன் அதோனிஸ் கவிதை பற்றிய தன் ஆய்வு எல்லையை விரிவுபடுத்தினார். அதோனிஸின் கவிதை அரபு சமூகத்தின் அல்லது சிரியா மற்றும் லெபனானின் போர்ச்சூழலை பிரதிபலிப்பவை. அதன் தாக்கத்திலிருந்து மீட்டுருவாக்கம் செய்பவை. போர் சார்ந்த வெளியின் பிரக்ஞைபூர்வ தளத்தில் பயணிப்பவை. மேலும் அதோனிஸ் இந்த படிமங்கள் மற்றும் குறியீடுகள் இவை சார்ந்த கவிதைகளை தொடர்ந்து எழுதினார். அவை அதிகார மட்டத்தில் மிகுந்த அதிர்வை ஏற்படுத்தின.

அரபு கவிதை உலகில் அதோனிஸ் சிறந்த ஆளுமையாக திகழ்கிறார். வேறு வார்த்தைகளில் சொன்னால் அதோனிஸ் தான் அரபுக் கவிதையின் முன்னோடி. அவரின் எழுத்துக்கள் பல தருணங்களில் சிரியாவின் ஆளும் வர்க்கத்திற்கு மிகப்பெரும் சவாலாக இருந்தனஅதோனிஸை பொறுத்தவரை அரபுக்கவிதைகள் என்பது ஒற்றைத்தன்மை கொண்டதல்ல. மாறாக சுயமுரண்பாட்டுடன் கூடிய பன்முகதளத்திலானது. அதே நேரத்தில் புரட்சிகரமானதும் கூட. இதனடிப்படையில் அரபு வெளியில் அதோனிஸ் தொடர்ந்து பயணிக்கிறார். அதிகார வர்க்கத்தை கேள்விக்குட்படுத்தும் அதோனிஸ் 2011 ல் சிரியா அதிபர் பஷருல் ஆசாத் பதவி விலக வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து வலியுறுத்தினார். மேலும் பல சர்வதேச விருதுகளை பெற்றிருக்கிறார். நோபல் பரிசின் தேர்வு பட்டியலில் இவரும் இடம்பெற்றிருந்தார். இயல்பான நோபல் அரசியல் காரணமாக இவருக்கான வாய்ப்பு கடைசி நேரத்தில் பறிபோனது. இவரின் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.மேலும் தொடர்ந்து மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.

தேர்ந்தெடுத்த படைப்புகள்

              Dalila, 1950
Qalat alard, 1952
Qasaid ula, 1957
Idha qulta ya Suriyya, 1958
Awraq fi al-rih, 1958
Aghani Mihyar al-Dimashqi, 1961
ed.: Diwan al-shi'r al-'arabi, 1964-68
Waqt bayn al-ramad wa al-ward, 1970
Qabr min ajl New York, 1971
Muqaddimah li-al-sh'r al-'Arabi, 1971
The Blood of Adonis, 1971 (trans. by S. Hazo) Zaman al Shi'r, 1972
Al-Thabit wa 'l-mutahawwil, 1974
Mufrad fi sighat al-jam, 1975
Mirrors, 1976
Fatihah li-nihayat al-qarn, 1980
Kitab al-qasa'id al-khams, 1980
Transformations of the Lover, 1983
Victims of a Map, 1984 (trans. by A. al-Udhari)
Shahwah tataqaddam di khara'it al-maddah, 1987
Ihtifa' bi-al-ashya' al-wadihah al-ghamidah, 1988
Kalam al-bayidat, 1989
Siyasat al-shir, 1992
Al-Nizam wa-al-kalam, 1993
Ha anta, ayyuha alwaqt, 1993
Abjadiyyah thaniyyah, 1994
If Only the Sea Could Sleep (trans. by Susan Einbinder); The Pages of Day and Night, 1994 (trans. by Samuel Hazo)
Amitié, temps et lumière, 2002 (with Dimitri T. Analis)

                         An Introduction to Arab Poetics. (trans. Catherine Cobham .) Saqi Books                                         London, 1990.
                        "Language, Culture, Reality." The View From Within: Writers and Critics on Contemporary               Arabic Literature: A Selection from Alif Journal of Contemporary Poetics ed. Ferial J.                                     Ghazoul and Barbara Harlow. The American University in Cairo Press, 1994.
                        Sufism and Surrealism. (trans. ) Saqi Books: London, 2005.
                        Transformations of the Lover. (trans. Samuel Hazo.) International Poetry Series, Volume                        7. Ohio University Press: Athens, Ohio, 1982.
                        Victims of A Map: A Bilingual Anthology of Arabic Poetry.(trans. .) Saqi Books: London,                   1984. A Time Between Ashes and Roses (trans.

No comments: