காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Saturday, September 7, 2013

காபூல் வணிகரின் வங்காள மனைவி - சுஷ்மிதா பானர்ஜியின் படுகொலை



ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் சுட்டுக்கொல்லப்பட்ட  இந்திய எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி கல்கத்தாவை சேர்ந்தவர். 1964 ஆம் ஆண்டு கல்கத்தாவில் ஒரு நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்தவர் சுஷ்மிதா பானர்ஜி. ஆப்கானிய வணிகரான ஜான்பாஸ் கான்  வணிக ரீதியாக கல்கத்தாவில் குடியேறிய தருணத்தில் அவருடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறி அவரை திருமணம் செய்து கொண்டார். இஸ்லாமுக்கு மாறிய அவர் திருமண வாழ்க்கை காரணமாக 1989 ல் ஆப்கானிற்கு குடியேறிய சுஷ்மிதா பானர்ஜி அங்கு 1995 வரை இருந்தார். ஆப்கானின் பக்திதா மாநிலத்தில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் தன் கணவருடன் வாழ்ந்து வந்தார். அங்கு இருந்த காலத்தில் அவர் வாழ்ந்த கிராமம் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி மிகவும் துயரத்திற்குள்ளாகி இருந்தது. குறிப்பாக மருத்துவ வசதிகள் எதுவுமின்றி அம்மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதன் காரணமாக சுஷ்மிதா பானர்ஜி அம்மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய முடிவு செய்தார். தன் வீட்டில் சின்னதாக மருந்தகம் ஒன்றை ஆரம்பித்தார். இதனால் அவர் வாழ்ந்த கிராம மக்கள் பலர் பலன் பெற்றனர். மேலும் அம்மக்களிடையே கல்வி குறித்த விழிப்புணர்வையும் ஊட்டி வந்தார். மேலும் தன் ஆப்கானிய கணவருடான காதல் மற்றும் திருமண வாழ்க்கை, கிராம மனிதர்களின் துயரம், அவர்களின் வாழ்க்கை ஓட்டம் குறித்த தன் புத்தகத்தை காபூல்வாசியின் வங்காள மனைவி என்ற பெயரில் 1994 ல் வெளியிட்டார். இது பின்னர் Escape from Taliban என்ற ஹாலிவுட் படத்தில் பயன்படுத்தப்பட்டது.மேலும் இந்த புத்தகம் ஆப்கானில் அப்போது ஆட்சிபுரிந்த தலிபான்களுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. அவரின் வீட்டுக்கு வந்து அவரை எச்சரித்திருக்கிறார்கள். மேலும் பெண்கள் வணிக நிறுவனத்தை நடத்த கூடாது என்று சுஷ்மிதாவிடம் கூறியிருக்கிறார்கள். அவர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடத்தி வந்தார். இதனால் அவரை ஒழுக்கங்கெட்ட பெண் என்று வர்ணித்த தலிபான்கள் அவரின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினார். இதன் காரணமாக ஆப்கானில் இருந்து வெளியேறி இந்தியா திரும்ப முடிவு செய்த அவர் வீட்டிலிருந்து வெளியேறி பின்பக்க சுவர் வழியாக ஏறி குதித்து மிகுந்த கவனத்துடன் தப்பி காபூல் நகருக்கு வந்திருக்கிறார். காபூல் நகரில் அவரை கைது செய்த தலிபான்கள் சிறிது நாட்கள் வீட்டுக்காவலில் வைத்தனர். பின்னர் விடுவித்தனர். இந்தியா திரும்பிய சுஷ்மிதா அதன் பிறகு பல வருடங்களில் கல்கத்தாவில் வாழ்ந்து வந்தார். பின்னர் ஆப்கானில் ஹமீது ஹர்சாய் ஆட்சிக்கு பிறகு நிலைமை சீரடைந்ததாக உணர்ந்த சுஷ்மிதா மீண்டும் ஆப்கான் திரும்பினார். ஆப்கான் வாழ்க்கையில் தலிபான்களால் தான் பட்ட துயரங்கள் குறித்த பிரக்ஞையை பல தருணங்களில் எழுத்தாக பதிவு செய்தார். அந்த வாழ்க்கை தனக்கு எவ்வாறு பெரும் சவாலாக இருந்தது பற்றிய பதிவுகள் அவரிடமிருந்து வந்திருக்கின்றன. பல பத்திரிகை நேர்காணல்களிலும் இதனை விரிவாக தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் நீண்டகாலமாக அவரை குறிவைத்திருந்த தலிபான்கள் கடந்த 5 ஆம் தேதி அவரின் வீடு புகுந்து வெளியே இழுத்து வந்து சரமாரியாக சுட்டுக்கொன்றனர். அவரின் உடலும் சிதைக்கப்பட்டது. ரா (RAW) அமைப்பை போன்றே ஆப்கானிய பெண்களின் மிகுந்த லட்சிய ஆதரவாளராக இருந்த சுஷ்மிதா பயங்கரவாத தலிபான்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். தலிபான்கள் அவரை கொன்ற போதும் அவரின் எழுத்துக்களும் , ஆப்கான் குறித்த அக்கறையும், கரிசனமும் எப்போதும் அங்குள்ள பெண்களிடம் இருந்து கொண்டே இருக்கும். சுஷ்மிதா எப்போதும் அவர்களுடன் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்.

1998 ல் தலிபான்களுடனான அவரின் அனுபவங்கள் குறித்து அவுட்லுக் பத்திரிகைக்கு அவர் அளித்த நேர்காணலின் ஒரு பகுதி....

நான் குடியிருந்த கிராமத்தில் மருத்துவ வசதிகளோ அல்லது மருந்துகளோ இல்லை. ஆகவே நான் என் வீட்டில் சிறிய அளவில் மருந்தகம் நடத்தி வந்தேன். இது அங்குள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. நான் தகுதியான மருத்துவர் இல்லை. ஆனால் மருத்துவ வசதி இல்லாத அந்த கிராமத்தில் சில களிம்புகள் மற்றும் மாத்திரைகளின் தன்மை குறித்த அறிவு எனக்கிருந்தது. அதன் மூலம் அக்கம்பக்கத்தினருக்கு மருத்துவம் செய்தேன். நானே தனியாக எல்லாவற்றையும் செய்தேன். இந்நிலையில் ஒருநாள் திடீரென்று தலிபான் கூட்டம் ஒன்று என் வீட்டில் நுழைந்தது. மிகுந்த கோபத்தில் அவர்கள் என்னிடம் " நீ ஒரு பெண். நீ தனியாக வியாபார நிறுவனம் நடத்தக்கூடாது. இதனை உடனே மூடி விட வேண்டும் என்றார்கள். மேலும் என்னை ஒழுக்கங்குறைந்த பெண் என்றார்கள். செய்யகூடியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்த பட்டியலை வெளியிட்டார். பர்தா கண்டிப்பாக்கப்பட்டது. ரேடியோ மற்றும் டேப் ரிக்கார்டர் உபயோகிப்பது மற்றும் கேட்பது தடை செய்யப்பட்டது. பெண்கள் தனியே கடைக்கு செல்ல அனுமதி இல்லை. கணவர் இல்லாமல் வீட்டில் தனியாக இருக்க பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் எல்லா பெண்களும் தங்கள் இடது கையில் தங்களின் கணவர்களின் பெயர்களை பச்சைகுத்த வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருந்தது.

நான் இங்கு முக்கியமான ஒரு நிகழ்வைப்பற்றி குறிப்பிட வேண்டும். எங்கள் கிராமத்தில் ஒரு பெண்ணின் மகனுக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்து இருந்தது. உடனே அவள் தன் மகனுக்கு ஓதிபார்ப்பதற்காக (வஹ்ஹாபிகள் இதை ஏற்றுக்கொள்வதில்லை)அப்பகுதியிலுள்ள மதகுருவை அழைத்தார். அந்த அழைப்பை ஏற்று அவர் அந்த வீட்டிற்குள் நுழைந்தார். இதனை பார்த்து விட்ட சில தலிபான்கள் அந்த வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் இருவரையும் உள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள சதுக்கத்திற்கு கொண்டு சென்று பொதுமக்கள் முன்னிலையில் இருவரையும் சுட்டுக்கொன்றனர். இந்நிகழ்வால் எங்கள் முழுக்கிராமமே கொந்தளித்தது.எங்கள் கிராமத்தில் உள்ள பழங்குடி தலைவர்களை தலிபான் இயக்கத்தினர் சந்திப்பது வழக்கம். அங்கு அவர்கள் தங்களுக்கு உணவை கேட்பார்கள். இப்படியாக என் வீட்டிற்கு 50 முறை வந்திருக்கிறார்கள். நான் அவர்களுக்காக சமைத்து உணவளித்திருக்கிறேன். 50 பேர்களாக வருவார்கள். சில சமயங்களில் கிராமத்து வீடுகள் ஆயுதங்களுக்காக தேடுதல் நடத்தப்படும் எங்களிடத்தில் இரு ஏ.கே 47 இருந்தன. உண்மையில் ஒவ்வொரு வீடும் அதற்கான சொந்த ஆயுதங்களை கொண்டிருந்தன. இது சுற்றிலும் பயங்கரம் நிலவி இருந்ததை காட்டியது.

1994 என்று நினைக்கிறேன். தேதி சரியாக ஞாபகமில்லை. காரணம் கிராமப்புற ஆப்கானில் நாட்காட்டிகளே கிடையாது. அங்குள்ள மக்கள் பிறையை பார்த்தே நாட்களை கணக்கிட்டு வந்தனர். எனக்கு எப்படியாவது அங்கிருந்து தப்பியாக வேண்டும். என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரின் உதவியை கேட்டேன். அவர் என் கணவர் மாதிரி நடிக்க ஒப்புக்கொண்டார். என்னை அங்கிருந்து பாகிஸ்தான் எல்லை வரை கடத்தி விட ஒப்புக்கொண்டார். ஆனால் இஸ்லாமாபாத்தில் இந்திய தூதரகம் என்னை அனுமதிக்காது. காரணம் என்னிடம் பாஸ்போர்ட்டோ அல்லது விசாவோ இருக்கவில்லை. இதனை அறிந்து என் கணவனின் சகோதரர்கள் என்னை வழியில் கண்டுபிடித்து மீண்டும் பழைய இடத்திற்கு கொண்டுவந்தனர். அவர்கள் என்னை இந்தியாவிற்கு அனுப்ப உறுதியளித்தனர். ஆனால் அந்த உறுதிமொழிக்கு மாறாக அவர்கள் என்னை வீட்டுக்காவலில் வைத்தனர். என்னை ஒழுக்கங்கெட்டவள் என்று முத்திரை குத்தினர். மேலும் தலிபான்கள் எனக்கு பாடம் கற்பிப்போம் என்று மிரட்டினர். ஆனாலும் நான் அங்கிருந்து தப்பிப்பது குறித்து அறிந்திருந்தேன். ஒரு நாள் இரவு நான் சுவர் ஏறி குதித்து சகதிகளுக்கிடையே கஷ்டப்பட்டு நடந்து அங்கிருந்து தப்பித்தேன். பின்னர் காபூலில் தலிபான்கள் என்னை அடையாளம் கண்டு கைது செய்தனர். சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தலிபான்கள் என்னிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். அவர்களிடம் நான் ஓர் இந்திய பிரஜை என்பதை மீண்டும் மீண்டும் கூறினேன். ஒருவழியாக நான் சொன்னவற்றை நம்பிய அவர்கள் பின்னர் என்னை இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்தனர். ஒருவழியாக நான் திரும்பி கல்கத்தா வந்து சேர்ந்தேன்.   நான் கல்கத்தாவிற்கு திரும்பிய போது மேற்கண்ட அனுபவங்களை வைத்து புத்தகம் ஒன்று எழுத முடிவு செய்தேன். அது தான் ஆப்கான் கணவரின் வங்காள மனைவி என்ற பெயரில் வெளிவந்தது. என்னைப்போன்றே ஆப்கானில் ஏராளமான இந்திய பெண்கள் தலிபான்களின் பிடியில் இருக்கிறார்கள். அவர்களை மீட்பதற்கு சிலர் உதவுவார்கள் என்று நம்புகிறேன்.

No comments: