காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Sunday, September 15, 2013

நரேந்திர மோடி என்ற மீடியா குழந்தையும், இந்தியாவின் எதிர்காலமும்



நரேந்திரமோடி என்ற பெயருடன் கூடிய சொல்லாடல் இந்திய  ஊடகங்களிடையே  சமீப ஆண்டுகளாக பலமுறை உச்சரிக்கப்படுகின்றன. அதன் அரசியல் மிகவும் நுண்மையானது. சுதந்திர இந்திய வரலாற்றில் மோடி அளவிற்கு மீடியா விளம்பரம் வேறு எந்த மாநில முதலமைச்சருக்காவது கிடைத்திருக்கிறதா என்பது சந்தேகம். இன்னும் குறிப்பிட்டால் வாஜ்பாய் மற்றும் அத்வானிக்காவது கிடைத்திருக்கிறதா என்பது கேள்விக்குரியது. இப்படியான நரேந்திரமோடியை எங்கிருந்து தொடங்குவது? நானாக இருந்தால் 2001 ஆம் ஆண்டிலிருந்து தொடங்குவேன். அது ஒரு காரணம் அது குஜராத்தின் போதா காலம்.  கேசுபாய் பட்டேலின் ஆட்சியின் கீழ் குஜராத் அவ்வளவான துயரங்களை அனுபவித்த காலம். மேலும் குஜராத் வரலாற்றில் பெரும் பூகம்பம் அப்போது தான் ஏற்பட்டது.  இந்நிலையில் அந்த கால கட்டத்தில் குஜராத்தில் நடந்த இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா மோசமான தோல்வியை சந்தித்தது. இதனை ஒட்டி அப்போதைய முதலமைச்சர் கேசுபாய்பட்டேல் ராஜினாமா செய்தார். அப்போது தான் நரேந்திரமோடியின் சகாப்தம் தொடங்குகிறது. அதுவரை ஆர்.எஸ்.எஸ் இன் தீவிர ஊழியராக இருந்த நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவர் பதவியேற்ற தருணத்தில் தான் குஜராத்  பூகம்பத்தை கடந்திருந்தது. பூகம்ப பாதிப்புகளை தன்னால் முடிந்த அளவு நிவர்த்தியாக்க முயற்சித்தார் மோடி. இதன் தொடர்ச்சியில் தான் பதவியேற்று ஒரு வருடத்திற்குள்ளாகவே உலக புகழ்பெற்ற, மிகவும் துயரமான குஜராத் இனப்படுகொலை நடந்தேறியது.


2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ம் தேதி அது. அயோத்திக்கு சென்று விட்டு திரும்பிய கரசேவர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கோத்ராவில் சில வன்முறையாளர்களால் கொளுத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக, ஏற்கனவே கடுமையான தயாரிப்புகளோடு இருந்த இந்துத்வ சக்திகள் பெரும் வன்முறையில் இறங்கினார்கள். இதில் முதலமைச்சர் என்ற வகையில் நரேந்திரமோடியின் மிக முக்கிய பங்கு தான் துக்ககரமானது. சோகமானது. இந்திய வரலாற்றில் கருப்பு பக்கங்களால் ஆனது இந்த கறை.  காவல்துறைக்கு முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து நேரடியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதன் காரணமாக கலவரம் நடந்த பகுதிகளில் காவல்துறையால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. இதனை மிகவும் சாதுரியமாகவும்,  வசதியாகவும் பயன்படுத்திக்கொண்ட வகுப்புவாத சக்திகள் இன்னும் தீவிரத்தோடும், வெறியின் உக்கிரத்தோடும் பலரை கொன்று குவித்தார்கள். பல சிறுபான்மை இஸ்லாமிய பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டார்கள். கொடூரமாக கொல்லப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் படுகொலைகளில் தாராளவாதம் கடைபிடிக்கப்பட்டது. முஸ்லிம் என்ற பெயரை கொண்டிருந்தாலே கொல்லப்பட்டனர்.  இதனோடு  சேர்த்து சில கிறிஸ்தவர்களும் கொல்லப்பட்டனர் என்பது தான் ஆச்சரியமற்ற எதார்த்தம். ஹிட்லரின்  நாசிச ஆட்சியில் பல லட்சம் யூதர்கள் தேடித்தேடி கொல்லப்பட்டனர். அவர்கள் சொத்துக்கள்  அனைத்துமே சூறையாடப்பட்டன. இதனை மிகச்சரியாக பிரதிபலிக்கும் நிகழ்வே குஜராத்தில் நடைபெற்றது. குஜராத்தில் அதுவரை கோலோச்சிய மதவெறி இதில்  அப்பட்டமாக  வெளிப்பட்டது. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது இருதரப்பிலும் நடந்த உக்கிரமான படுகொலைகளை இது நினைவூட்டியது. இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம்  வெளிப்படுத்தும் மதசார்பின்மை, சோசலிசம், சமத்துவ கோட்பாடுகளுக்கு இது மிகவும்  சவாலாக  இருந்தது. அதுவும் ஒரு முதலமைச்சரே தன் தார்மீக ஆதரவை குற்றவாளிகளுக்கு தெரிவிப்பது இந்திய அரசியலமைப்பின் ஆணிவேரையே அசைக்கக்கூடியது. மத்திய துணை ராணுவப்படை  வந்த பிறகும் கூட நிலைமையை  உடனடியாக கட்டுக்குள்  கொண்டு வர முடியவில்லை. காரணம் அம்மாநில காவல்துறையின் ஒத்துழைப்பு  இல்லாததே. புயல்மழை பிரதேசத்தை கவ்விக்கொண்டு சென்று  ஓய்ந்து விடுவதை போல இனப்படுகொலைகளுக்கு பிறகு குஜராத்தில் மயான அமைதி நிலவியது. இஸ்லாமியர்களின் வீடுகள், சொத்துக்கள் சூறையாடப்பட்டன. 5000 க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட  பலருக்கும் உரிய நிவாரணமோ , இழப்பீடோ இன்னும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் குஜராத்திற்கு தேர்தல் நெருங்கியது. அப்போது தேர்தலுக்கான சூழல் அங்கு நிலவவில்லை. ஏராளமான மக்கள் இன்னும்  முகாம்களிலேயே அடைக்கப்பட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து அப்போதைய தேர்தல் ஆணையர்  ஜே.எம் .லிங்டோ குஜராத்  தேர்தலை ஒத்தி வைத்தார். இதனை அப்போதைய மத்திய பிஜேபி அரசானது எதிர்த்தது. ஜனாதிபதியின் முறையீட்டை கோரியது. இந்த சர்ச்சைகள் இருக்கும் பட்சத்தில் நரேந்திர மோடி ஜே.எம் லிங்டோவை  கிறிஸ்தவர் என்று விமர்சித்தார். ஒரு முதலமைச்சர்  என்ற தகுதியையும் மீறி அரசியலமைப்பில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒருவரை அவர் அவ்வாறு கருத்து தெரிவித்தது அரசியலமைப்பின் அடிப்படை தத்துவத்தை கேள்விக்குள்ளாக்குவதாகும்.

குஜராத் படுகொலைகளைத்தொடர்ந்து பல விஷேச புலனாய்வு  குழுக்கள்  மத்திய அரசாலும், உச்சநீதிமன்றத்தாலும் அமைக்கப்பட்டன. அவற்றில் சில குழுக்கள் நரேந்திர மோடியை குற்றஞ்சாட்டின. உச்சநீதிமன்றம் கூட ஒரு தடவை நீரோ மன்னனோடு ஒப்பிட்டு நரேந்திர மோடியை குற்றஞ்சாட்டியது. இந்நிலையில் குஜராத்தில் சில  வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்ட நரேந்திர மோடி இந்துத்துவ துணையோடு அதற்கு மீடியா குவியத்தை தேடத்தொடங்கினார். பார்ப்பண, பெரும் கார்ப்பரேட் ஊடகங்கள் நரேந்திர மோடியை வளர்ச்சி என்ற போலி பிம்பத்தோடு அடையாளப்படுத்தின. அவரின் முழு உருவத்தை எப்போதும் தன் செய்திகளில் காட்டின. அவரின் உரைகள் தொலைக்காட்சி செய்திகளில் அதிக நிமிடத்தை எடுத்துக்கொண்டன. யூத இனச்சுத்திகரிப்பிற்கு பிறகு  ஹிட்லர் உலக புகழ்பெற்றது மாதிரி இந்த ஊடக பிம்ப பெருக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால் குஜராத்தின் எதார்த்தமோ பலரும் அறியாதது.  மொழிவாரி மாகாண சீர்திருத்தத்திற்கு பிறகு மகாராஷ்டிராவிலிருந்து பிரிக்கப்பட்ட குஜராத் தொடர்ந்து அதற்கான தேசிய , மொழி அடையாளத்தை தக்க வைத்துக்கொண்டு தான் இருக்கிறது. அது இயல்பாகவே மிகப்பெரும் பெரு வணிகர்களையும், முதலாளிகளையும் உள்ளடக்கி இருக்கிறது. இன்றைய இந்தியாவின் கருப்புப்பணத்தில் பெரும் பகுதி அவர்களிடத்தில் தான் இருக்கிறது. ஜவுளி மற்றும் பிற உற்பத்தித்துறைகளில் முன்னணியில் நிற்கும் அவர்களின் மாநிலம் வளர்ச்சி என்ற மோஸ்தரை நோக்கி தன்னை வெளிக்காட்டுவது இயல்பே.. ஆனால் குஜராத்தின் பெரும்பகுதி இதற்கு நேர்மாறாக தான் இருக்கிறது. குறிப்பாக ஒரு பிரதேசத்தின் வளர்ச்சி என்பதே அப்பிரதேச மக்களின் மனித வள வளர்ச்சியை பொறுத்தே முடிவு செய்யப்படுகிறது. அதாவது அம்மக்களின் எழுத்தறிவு, கல்வியறிவு,  தொழில்நுட்பத்திறன் ,திறன்பெற்ற தொழிலாளர்கள் (Skilled labours)சமூக நகர்வு (Social mobility)ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தீர்மானிக்கப்படுகிறது. இதனடிப்படையில் மனிதவள குறியீட்டில் தமிழ்நாட்டிற்கு பல இடங்கள்  அடுத்தப்படியாக  தான் குஜராத் இருக்கிறது.மேலும் குடிநீர் பிரச்சினை, வேலைவாய்ப்பு,இருப்பிட கோளாறுகள் போன்றவையும் இன்றும்  குஜராத்தில்  சிக்கலான ஒன்றாக தான் இருக்கின்றன. அதே நேரத்தில் அதிக மின் உற்பத்தி  செய்யப்படுவதால் அங்கு தமிழ்நாட்டைப்போன்று மின்தடை இல்லை. மரபுசாரா  எரிசக்திக்கான பல முனைப்பான திட்டங்கள் அங்கு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக மின்வெட்டு பிரச்சினை  அங்கு இல்லை. ஆனால் வளர்ச்சி என்ற அளவுகோலின் படி ஒரு பிராந்தியத்தில் சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச்சி இருக்க வேண்டும். குஜராத்தை பொறுத்தவரை முன் கட்டமைப்பு காரணமாக பகுதியான பொருளாதார வளர்ச்சி மட்டுமே காணப்படுகிறது.  அதுவும் அங்குள்ள  பெருமுதலாளிகளான பார்ப்பன, பனியாக்களால் தான்.

இந்திய ஊடகங்கள் அரசாங்கங்களின் ஊழல்களை குறித்து அம்பலப்படுத்தும் நிலையில் அவர்களின் ஊழல்கள் குறித்து வெளியே அறியப்படுவதில்லை. கட்டண செய்திகள் (Paid News)மற்றும் கவர் ஜர்னலிசம் ஆகியவை இந்திய ஊடகங்களின் முக்கிய ஊழல் உபாயங்களாக இருக்கின்றன. இந்தியாவின் கார்ப்பரேட் நிறுவனங்களின் பல மக்கள் விரோத நடவடிக்கைகள்  வெளியில் அறியப்படாததற்கு காரணம் ஊடகங்களின் கட்டண செய்தி முறைகள் தான். வேறுவகையில் சொன்னால் அவர்களின் வாழ்வாதாரமே இதில் தான் அடங்கியிருக்கிறது. சமீபகாலமாக நரேந்திரமோடி ஊடகங்களில் zooming ஆவதற்கு இந்த கட்டண செய்தி முறை தான் காரணம். மிகப்பெரும் தொலைநோக்கு திட்டத்தை இந்துத்வ சக்திகளும், பெரு நிறுவனங்களும் வெற்றிகரமாக  நிறைவேற்றி விட்டன. மேலும் அத்வானி, சுஷ்மா சுவராஜ், முரளிமனோகர்  ஜோஷி போன்ற  மூத்த தலைவர்களை விட்டு விட்டு நரேந்திரமோடியை ஆர்.எஸ்.எஸ் தேர்வு செய்ய காரணம் இவர் இந்தியாவில் முந்தையவர்களை விட இந்துத்வ கோட்பாட்டை மிக நம்பிக்கையோடு செயல்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பே. அது நிறைவேறும் பொருட்டு பாராளுமன்ற தேர்தலை நோக்கி கனவு  கண்டு கொண்டிருக்கிறார்கள். அது நிறைவேறுவது என்பது காங்கிரஸ் அல்லாத  கட்சிகளின் ஆதரவைப்பொறுத்து  தான் அமையும். மீண்டும் 1999 நிலைமை இந்தியாவில் திரும்பும் என்று மிகுந்த திருப்திகரமான  மனநிலையோடு எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் பிரதமர் என்ற பதவி மாநிலத்தின் முதலமைச்சர் என்ற  பதவியை விட அதிக பொறுப்பும், திறமையும், மதசார்பற்ற சிந்தனையும், விசாலமான மனமும்  தேவைப்படும் ஒன்று. இந்த அடிப்படையில் அவர் இன்னும் நிறைய தூரங்களை கடக்க வேண்டியதிருக்கிறது. தன் இந்துத்வ சிந்தனை மற்றும் செயல்பாடுகளால் மத சார்பற்ற இந்திய சமூகத்தின் முன்பும், உலக  சமூகத்தின் முன்பும் களங்கப்பட்டு விட்ட, மதிப்பிழந்து விட்ட நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக முன்னிறுத்தப்படுவது எதிர்கால இந்தியாவின் மிகப்பெரும் துயரம். ஒரு துன்பியல் நாடகத்தின் பெரும் கதாபாத்திரம். மதசார்பற்ற இந்தியா எப்போதும் அரசியலமைப்பு சட்டப்படியான மதசார்பற்ற, சோசலிச, சமத்துவ குடியரசாகத்தான் இருக்க வேண்டும். அதுவே  உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவின் நீண்டகால நலன்களுக்கு நல்லது.


No comments: