காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Tuesday, January 28, 2014

கிழக்கும் மேற்கும் - முரண்களும் சிக்கல்களும்

பிரபஞ்சமே திசைகளால் உருவாக்கப்பட்டது தான்.  நான்கு திசைகளும் மனிதனை நிலவியல் ரீதியான பிரிப்பதோடு அதிலிருந்து உருவாகும் அடையாளங்களையும், முரண்களையும் உட்கொண்டிருக்கின்றன. இதன் நிலவியல் பிளவு வரலாற்று காலத்திலிருந்தே தொடங்கி விட்டது. வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டால் இது தத்துவார்த்த அடிப்படையும் கூட. புராதன காலத்திலிருந்தே இரு பெரும் கலாசார அரைக்கோளமாக  மேற்கும் கிழக்கும் இருந்து கொண்டிருக்கின்றது. அவற்றில் ஒன்று குறிப்பிட்ட புள்ளியிலிருந்து பிரபஞ்சம் நோக்கியும், மற்றொன்று பிரபஞ்சத்திலிருந்து குறிப்பிட்ட புள்ளியை நோக்கியும் இயங்கிக்கொண்டிருக்கின்றன.  இதன் தொடர்ச்சியில் இடைவிடாது மாறிக்கொண்டிருக்கும் இவ்வுலகில் இரு பெரும் பூகோள பிளவுகள் ஒன்றை ஒன்று உளவியலாகவும் மோதிக்கொண்டிருக்கின்றன. உலகமயமாக்கல் மற்றும் மெய்நிகர் (Virtual)போன்ற கருதுகோள்கள் எல்லாம் உலவினாலும் இவை இரண்டும் அவற்றின் சொந்த முரண்களோடு இயங்கிக்கொண்டிருக்கின்றன.

வரலாற்றின் தந்தை என அழைக்கப்படும் ஹிரோடோடஸ் கிமு நான்காம் நூற்றாண்டில்  முதன் முறையாக கிழக்கை பாரசீகர்களோடும், மேற்கை கிரேக்கர்களோடும் ஒப்பிட்டு இவ்விரு இனங்களும் நெடுங்காலமாக மோதிக்கொள்ளும் என்று குறிப்பிட்டார். வரலாற்றின் தொடர்ச்சியில் அவ்வாறே நிகழ்ந்தது. கிரேக்கம் சார்ந்த இனக்குழுக்கள் ஒருபக்கமும், ஆரியம் சார்ந்த இனக்குழுக்கள்  மற்றொரு பக்கமும் உருவாயின.  இந்து பள்ளத்தாக்கு பகுதியில் நிலைபெற்றிருந்த திராவிட இனக்குழு மரபை ஆரிய மரபு உள்வாங்கி கொண்டது. பின்னர் தங்களுக்கான அரசை ஏற்படுத்தின. இது கிமு 15 ஆம் நூற்றாண்டில் நடந்தேறியது. அவர்கள் தங்களுக்கான சொந்த கலாசாரத்தை ஏற்படுத்தி மேற்குலகை தங்களுக்கான முரணாக முன்வைத்தனர்.

உலக வரலாற்றின் நகர்வில் இரு பெரும் திசை மரபுகள் தொடர்ந்து வந்திருக்கின்றன. ஒன்று மேற்கு மையம் அல்லது ஐரோப்பிய மைய மரபு
(Euro Centrism) - கிமு  500 முதல் கி.பி 1950 வரை . மற்றொன்று ஆசிய மைய மரபு (Asia Centrism )கி.பி. 1950  முதல் தற்போது வரை. இவை இரண்டும் லௌகீக சுழற்சியாக அதன் அரசியல், பொருளாதார , புவியியல் நலன்களை நிர்ணயிக்கக்கூடிய ஒன்றாக பயணம் செய்திருக்கின்றன. ஐரோப்பிய மைய மரபை பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் தனித்தனி அம்சங்களாக பிளவுற்றிருக்கிறது. கிரேக்க மரபு (கிமு 500 முதல்  0 வரை)கிறிஸ்தவ மரபு ( 0 முதல் கி.பி 1500  வரை)வட அட்லாண்டிக் மரபு (கிபி 1500 முதல் 1950 வரை)ஐரோப்பாவை பொறுத்தவரை மேற்கண்ட மூன்று மரபுகளும் தொடர்ச்சியாக அதற்கான வடிவ வேறுபாட்டுடன் இருபதாம் நூற்றாண்டு வரை ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கின்றன. மேலும் கிழக்கை பொறுத்தவரை மத்தியகிழக்கு மற்றும் தூரகிழக்கு நாடுகள் குறிப்பாக சீனாவின் வளர்ச்சியும், அதன் ராணுவத்தன்மையும் ஆசிய மையமாக இருக்கின்றன. மேலும் சீனாவை பொறுத்தவரை வரலாற்று காலந்தொட்டு பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக இருந்திருக்கின்றது.  காகிதம் (கி.மு 220)துப்பாக்கிக்குண்டு (கி.பி 900),அச்சு இயந்திரம் (கி.பி 1040 )திசைகாட்டி (கி.பி 1100) போன்றவை சீனா உலகிற்கு அளித்த பெருங்கொடைகள். இதன் நீட்சியில் சீனாவின் ஆன்மீக மரபும் மேற்குலகை விட மேம்பட்டதாக இருந்திருக்கின்றது. கன்பூசியமும், தாவோயிசமும் அதன் உள்ளகமான இரு பெரும் ஆன்மீக மரபுகள். இந்த ஆன்மீக மரபுகள் அதன் அண்டை நாடுகளுக்கும் ஊடுபாய்ந்திருக்கின்றன.

மேற்கை பொறுத்தவரை அரசியல் பொருளாதார அம்சங்களில் கிழக்கை ஆதிக்கம் செலுத்தியே வந்திருக்கிறது. கிமு 4 ஆம் நூற்றாண்டில் சைரஸ் மன்னனுக்கு உதவியாக ஆயிரக்கணக்கான கிரேக்கர்கள் பாரசீகத்திற்கு புறப்பட்ட நிகழ்வு,  மகா அலெக்சாண்டர் (கிமு 356 -323)ரோம பேரரசு (கிமு 27 - கிபி 395)மாபெரும் சிலுவைப்போர்கள் ( கி.பி 11ஆம் நூற்றாண்டு முதல் 15 வரை)மத்திய தரைக்கடல் போர்கள் (கி.பி 15 ஆம் நூற்றாண்டு முதல் 16 வரை)கீழை நாடுகளை வேவு பார்த்தல் ( கி.பி 16 ஆம் நூற்றாண்டு முதல் 17 வரை) காலனிய அதிகாரங்கள் (கி.பி 16 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டு வரை)நாடு பிடிக்கும் செயல்பாடுகள் (கி.பி 15 ஆம் நூற்றாண்டு முதல் 16 வரை)அறிவியல் கண்டுபிடிப்புகள் (கி.பி 17 ஆம் நூற்றாண்டு)மற்றும் நடப்பு உலகின் உலகமயமாக்கல் என தொடரும் அனைத்துவித உலகின் போக்குகளுக்கும் மேற்கே காரணமாக அமைந்திருக்கிறது. மேற்கு எப்போதுமே கிழக்கை அல்லது மற்றவர்கள் மீது தன் செயல்பாட்டு திணிப்பை நிகழ்த்தியே தன்னை நகர்த்திக்கொண்டு வந்திருக்கிறது. புராதன கிரேக்கத்திலிருந்து தொடங்கி ரோமாபுரி வரை நீண்டு, இரு நூற்றாண்டுகளில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா என அதன் அரசியல் பொருளாதார ஆதிக்கம் தொடர்கிறது.

இருபதாம் நூற்றாண்டில் உலகம் சந்தித்த மாபெரும் இரு போர்கள், மற்றும் காலனிய அதிகாரத்தின் நிலை குலைவு, சோவியத் யூனியனின் தகர்வு போன்றவை கீழை நாடுகளை அதற்கான உயரத்தோடு எழச்செய்தன. குறிப்பாக 1950 க்கு பிறகு சீனா மற்றும் ஜப்பானின் எழுச்சியானது ஆசியாவை மேற்கிற்கு இணையாக உருமாற வைத்தது. அதாவது இந்த காலகட்டத்தை ஆசியமையவாதத்தின் (Asia Centrism)தொடக்கம் எனலாம்.  பல நாகரீகங்களையும், கலாசார கூறுகளையும் உள்ளார்ந்த ஒன்றாக வடிவமைந்திருக்கிற ஆசியா அல்லது கீழைத்தேய நாடுகள் தங்களின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்து கொள்வதற்கான சிறந்த சந்தர்ப்பமாக கடந்த நூற்றாண்டின் பிற்பகுதி அமைந்தது. வரலாற்றில் மேற்கு மற்றும் கிழக்கு ஆகியவை 9 நாகரீகங்களையும், நான்கு கலாசார மரபுகளையும் உட்கொண்டிருந்தன. அரபு - இஸ்லாம் , சீனா- கன்பூசியம், இந்து/பிராமணீயம் மற்றும் மேற்கு/கிறிஸ்தவம் போன்ற நான்கு முக்கிய கலாசார முறைமைகளில் முதல் மூன்றும் கீழைநாடுகளுக்கு உரியவை. கீழைத்தேய கோட்பாடு (Theory of Orientalism )முறைமையை வடிவமைப்பதில் மேற்கண்ட மூன்றும் மிக முக்கிய வரலாற்று பங்களிப்பை செய்திருக்கின்றன. எட்வர்ட் செய்த்தின் கீழைத்தேய கோட்பாட்டு ஆய்வு முறை பெரும்பாலும் இதனடிப்படையில் தான் இருந்தது. எதிரிடையாக  மேற்கின் கிறிஸ்தவம் கி.பி முதலாம் நூற்றாண்டில் ரோம அரசன் காண்ஸ்டான்டைன் அதனை அரச மதமாக அறிவித்ததிலிருந்து தொடங்குகிறது. இதன் தொடர்ச்சியில்  மேற்கின் கிறிஸ்தவ மரபிற்கும், கீழை கலாசார மரபிற்கும், குறிப்பாக கிழக்கின் அரபு இஸ்லாமிய மரபிற்கும் முரண்பாடும், மோதல்களும் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்தன. மத்திய கிழக்கின் வரலாற்றில் நான்கு நூற்றாண்டுகளாக நிகழ்ந்த மாபெரும் சிலுவை போர்கள் (Crusades)இதற்கு சிறந்த உதாரணம். இரு தரப்பிற்கும் வெற்றியும், தோல்வியும் அளித்த இந்த சிலுவைப்போர் நவீன உலகில் கலாசார மோதல்களை குறிக்கும் சொல்லாடலாக பயன்படுத்தப்படுகிறது.  கடந்து போன வரலாற்றின் நாகரீக அரசுகளில் இதன் உக்கிரம் மிகக்கொடூரமாக இருந்ததின் விளைவு தான் நவீன சொல்லாடலாக இது தொடர காரணம்.

மேற்கு மற்றும் கிழக்கு ஆகியவற்றை பொறுத்தவரை கோட்பாடுகளில் அனுமானித்தல் அல்லது உய்த்துணர்தல் (Deductive) மற்றும் தொகுத்துணர்தல் அல்லது ஒப்பீட்டு முறைமை  (Inductive)ஆகியவற்றைக்கொண்டிருக்கின்றன. இதை உலகின் பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். நாடுகளை தேடிய அதன் பயணம், கடல்வழி கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் கோட்பாடுகள் ஆகியவை மேற்கின் உய்த்துணர்தலுக்கு உதாரணங்கள். கிழக்கின் தனித்தன்மையான அதன் பெரும் ஆன்மீக மரபு இதன் தொகுத்துணர்தல் அல்லது ஒப்பீட்டு முறைமைக்கு உதாரணம். உய்த்துணர்தல் கோட்பாட்டை பொறுத்தவரை அரிஸ்டாடில், பிதாகொரஸ் மற்றும் பிற கிரேக்க தத்துவவாதிகள் முன்னகர்த்தினர். அரிஸ்டாடில் அடுத்த தலைமுறை ஆலிவ் காய்கள் எப்படி இருக்கும் என்பதை அனுமானித்தார். இதனடிப்படையில் பகுத்தறிவு பூர்வமான முடிவுகளை கண்டறிய வேண்டும் என்பது அவரின் கருத்து. உதாரணமாக எல்லா ஆப்பிள்களும் பழங்களாகும். எல்லா பழங்களும் மரங்களில் வளர்கின்றன. ஆக எல்லா ஆப்பிள்களும் மரங்களில் வளர்கின்றன. முதலில் அனுமானித்த ஒன்றிலிருந்து இறுதி முடிவை எட்டுவது இதன் நோக்கமாகும். அதாவது பிரபஞ்சத்தின் ஒரு கருதுகோளிலிருந்து அல்லது அனுமானத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட முடிவை கண்டறிதல். இதனை அடிப்படையாகக்கொண்டு தான் மேற்கின் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள், சாதனைகள் நிகழ்ந்தேறின. கிழக்கை பொறுத்தவரை தொகுத்துணர்தல் அல்லது ஒப்பீட்டு முறைமை அதன் தத்துவார்த்த அடிப்படையாகும். இது ஒரு குறிப்பிட்ட கருதுகோளிலிருந்து அல்லது அவற்றின் தொகுப்பிலிருந்து ஒரு முடிவை அல்லது உண்மையை கண்டறிதல்.  பனிக்கட்டி குளிர்ச்சியாக இருக்கிறது. ஆக எல்லா பனிக்கட்டிகளும் குளிர்ச்சியே. இங்கு குளிர்ச்சி என்ற கருதுகோள் ஒரு முடிவை கண்டறிய பயன்படுத்தப்படுகிறது. இதன் நீட்சியில் கிழக்கின் பெரும்பாலான ஆன்மீக மரபு இதைத்தான்  சுட்டுகிறது. கன்பூசியம் முதல் செமிடிக் மதங்கள் வரை ஓர் இறுதி உண்மையை (Ultimate Reality)தான் தேடுகின்றன. குறிப்பிட்ட கருதுகோளிலிருந்து பரம்பொருளை அடைவது அதன் நோக்கமாகும். உதாரணமாக மகாயான பௌத்தம் மனித உடலைபற்றி குறிப்பிடுகிறது. உடல் வெவ்வேறு உறுப்புகளால் ஆக்கப்பட்டிருக்கிறது என்றாலும் அவற்றை பிரிக்க முடியாது. நாம் அவற்றை பிரித்துணர்வதில்லை. அது போன்றே உலகமும் வெவ்வேறு தனிமங்களால் ஆனது. ஆனால் அவற்றை பிரித்துணரமுடியாது. அவை ஒன்றே. அதே நேரத்தில் இந்திய தத்துவமரபில் சாங்கியம், சார்வாகம் மற்றும் உலகாயத மரபுகள் மேற்கின் தத்துவ கோட்பாடுகளுக்கு இணையாக இருந்திருக்கின்றன. ஆனாலும் கிழக்கில் பெரும்பாலும் ஆன்மீக மரபு தான் தாக்கம் செலுத்தி வந்திருக்கின்றது. இந்த இடத்தில் தான் தத்துவார்த்த அடிப்படையில் கிழக்கும், மேற்கும் முரண்படுகின்றன. இதனடிப்படையில் சீனாவின் தாவோயிசம் மனித மனத்தை திறக்கும் போது இயற்கையை அறியலாம் என்றது. இயற்கையை  அறியும் போது சொர்க்கத்தை அறியலாம் என்றது. இதன் தொடர்ச்சியில் தாவோயிச சிந்தனையாளரான நிசிதான் கேய்ஜி மேற்கின் நவீனத்துவத்தை கிழக்கின் மத மனங்கள் வெற்றிக்கொள்ளும் என்றார். மேலும் சீனாவின் ஆன்மீக சிந்தனையாளரான ஜி சியான்லின் ஒருமுறை இவ்வாறு குறிப்பிட்டார். " நாம் உறுதியாக நம்புகிறோம். எவ்வளவு நாட்கள் என்பது பொருட்டல்ல. நமக்கான நாள் ஒன்று வரும். அப்போது உலகம் அமைதியாகும். மேலும் உலகம் ஒன்றே என்பது உண்மையாகும். இந்நிலையில் மேற்கை பொறுத்தவரை உலகமும், கடவுளும் வேறாகும். ஆனால் கிழக்கை பொறுத்தவரை உலகமும் கடவுளும் ஒன்றே. நாம் கடவுளல்ல. மாறாக கடவுளால் படைக்கப்பட்டோம். இதன் தொடர்ச்சியில் மேற்குலகிற்கும், கீழைநாடுகளுக்கும்  இந்த  பெரும் அம்சங்களில் வேறுபாடு இருக்கின்றன. ஆக மேற்கின் நாகரீகங்கள் பகுப்பாய்வு (Analysis)முறையை அடிப்படையாகக்கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் கீழை நாகரீகங்கள் ஒருங்கிணைந்த (Integrated)முறையை உட்கொண்டிருக்கின்றன.

இடைக்கால மேற்குலகம் கீழை நாடுகளை பல வடிவங்களில் ஆதிக்கம் செலுத்துவதற்கு பலவிதமான கோட்பாடுகளையும், கருதுகோள்களையும் உற்பத்தி செய்தது. 17 ஆம் நூற்றாண்டில் பிரிட்டன், பிரான்சு போன்றவற்றின் காலனிய கோட்பாடு அவற்றுள் முக்கியமானது. 18 ஆம் நூற்றாண்டில் இறுதிப்பகுதியில் இவ்விரண்டும் உலகின் மூன்றில் இருபகுதி நிலப்பரப்பை தங்கள் காலனிகளாக கொண்டிருந்தன. மேலும் 19 ஆம் நூற்றாண்டில் மேற்கில் உருவான டார்வினிய கோட்பாடு, ஹெகலியம், மார்க்சியம், நீட்சேயின் மனிதனின் அதிகார விருப்புறுதி (Will to Power) இவை எல்லாம் மேற்கின் அறிவு பரப்பிலும், அரசியல் பரப்பிலும் அதிக தாக்கம் செலுத்தின. ஹிட்லர் இதனை அடிப்படையாகக்கொண்டு தான் தூய ஜெர்மானிய இனம் என்பதை வடிவமைத்தார். அவரின் யூத படுகொலை கருத்தாக்கமும் இதன் தொடர்ச்சி தான். டார்வினிய கோட்பாட்டின் பெரும் போராட்டம் தேசிய இனங்களுக்கான வாழ்வியல் கூறாக இருந்தன. இவற்றின் அடிப்படையிலிருந்து, அதன் சாராம்சத்தை உள்வாங்கிய ஒன்றாக இன, கலாசார, நாகரீக ரீதியிலான உயர்வு மனப்பான்மை ஐரோப்பியர்கள் மத்தியில் ஏற்பட்டது. மேலும் வியட்நாம் மீதான அமெரிக்க யுத்தம், 1991-2006 வரையிலான மத்திய கிழக்கு நாடுகள் மீதான அமெரிக்க எண்ணெய் போர்கள் இவை எல்லாம் இருபதாம் நூற்றாண்டில் கீழை நாடுகளை பின் காலனிய (Post Colonialism) தன்மைக்கு உட்படுத்தின.  அவற்றை சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாசார ரீதியாக மேற்குலகம் ஆதிக்கம் செய்யும் நிலைக்கு கொண்டு சென்றன. மேலும் இருபதாம் நூற்றாண்டில் தொடங்கிய பல்வேறு தேசிய இனப்போராட்டங்களில் மடிந்து போனவர்கள், அகதிகளாக புலம்பெயர்ந்தவர்கள் பெரும்பாலும் கீழைநாடுகளை சார்ந்தவர்கள் தாம். பாலஸ்தீன், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்றவை அதற்கான உதாரணங்கள். மேற்கு நாடுகளில் இந்த எண்ணிக்கை மிகக்குறைவு.

வரலாறு மற்றும் கலாசார ரீதியாக  கீழை நாடுகள் மீதான பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் தன்மை என்பது தர மற்றும் அளவு (Qualitative and Quantitative)மாறுபாட்டு ரீதியிலானது. இது இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உருவாவது வரை நீடித்தது. கீழை நாடுகளின் நறுமணப்பொருட்களின் வர்த்தகம், ஜவுளி மற்றும் தோல்பொருட்கள் இவற்றின் உற்பத்தி இவை எல்லாம்  காலனியத்தின் பொருளாயத நலன்களை உறுதிசெய்தன. இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய ஐரோப்பிய யுகம் தலைகீழாக மாறியது. பிரிட்டனின் வல்லரசு தன்மை இழக்கப்பட்டு அமெரிக்கா வசம் மாறியது. இதன் தொடர்ச்சியில் அமெரிக்கா மற்றும் சோவியத் யுகமாக உலகம் மாறிப்போன பிறகு மேற்கு ஐரோப்பிய நாடுகள் அதற்கான அரசியல் மதிப்பை இழந்தன. 1945 க்கு பிறகு ஒவ்வொரு ஐரோப்பிய நாடும்  (கம்யூனிசம் அல்லது கம்யூனிசம் அல்லாதது என்ற வித்தியாசம் இல்லாமல்)கடந்த கால அனுபவங்கள் மற்றும் போருக்கு பிந்தைய அரசியல் தொன்மங்கள் அடிப்படையில் தங்களின் தேசிய பிம்பங்களை உருவாக்கிக்கொண்டன. இந்த கருத்தியல் இடைவெளி என்பது கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளிடையே அரசியல் தொன்மங்களை உருவாக்குவதில் மிக முக்கிய பங்காற்றின. இரு தரப்பினரும் தங்களுக்கிடையே இரும்புத்திரையை கடைபிடிக்க , தங்களின் கடந்த கால வரலாற்றை மீள்பரிசோதனை செய்ய உதவிகரமாக இருந்தன.

தற்போதைய உலக அரசுகளின் ஆட்சிமுறையில் மதசார்பின்மை(Secularism)என்ற கருத்தாக்கம் மேற்கின் கண்டுபிடிப்பு தான். இது நவீனத்துவத்தின் பின்விளைவு. அதாவது அரசுகள் எல்லா மதங்களையும் விட்டு விலகி இருக்க வேண்டும். அதே நேரத்தில் அந்த நாட்டு மக்களுக்கு மதத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம் வேண்டும் என்பது தான் அதன் அடிப்படை. மேலும் இந்தியா போன்ற நாடுகளில் மதசார்பின்மை என்பது எல்லா மதங்களையும் சமமாக மதிப்பது. அதே நேரத்தில் மேற்கில் மதசார்பின்மை என்பது எல்லா மதங்களையும் சமமாக நிராகரிப்பது.மேலும் மத்திய கிழக்கு நாடுகள் மத சார்புள்ள அரசுகளால் ஆளப்படுகின்றன. நவீன உலகில் பரஸ்பர சமாதானம் மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றிற்கு அரசுகள் மதத்தை விட்டு விலகி இருக்க வேண்டும். அரசிலிருந்து மதத்தை பிரிக்க வேண்டும் என்ற குரல் நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஒரு பிராந்தியம் பன்மயப்பட்ட மக்கள் தொகுதியினால் நிரம்பியிருந்தாலோ அல்லது ஒரே விதமான மக்கள் தொகுதியினால்  நிரம்பியிருந்தாலோ அதனை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசுகள் அவற்றை விட்டு விலகி மதசார்பின்மை கோட்பாட்டை கடைபிடிக்க வேண்டும் என்பதே இந்த குரலின் நீட்சி.

பிரபஞ்சத்தின் இயக்கத்தில் அரசு என்ற  நிறுவனம் உருவாக்கப்பட்ட பிறகு அது தொடர்ச்சியான போர்களால் தான் ஆளப்பட்டு வந்திருக்கிறது.  குறிப்பாக இடைக்கால உலகம் காலனியமயப்பட்ட பிறகு அதன் உக்கிரமான அழிவுப்போர்களால் கீழைநாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மில்லியன் கணக்கில் மக்கள் செத்து மடிவதற்கு இவை காரணமாகி இருக்கின்றன. இதன் தொடர்ச்சியில் இருபதாம் நூற்றாண்டில் தான்  வரலாற்றின் அழிவுபோர்கள் குறித்த நுண்ணுணர்வு சர்வதேச சமூகத்திற்கு ஏற்பட்டது. குறிப்பாக கீழைநாடுகளின் சிந்தனையாளர்கள், கலைஞர்கள், அரசியல் அறிஞர்கள் ஆகியோர் மத்தியில் இது குறித்த மாற்றுச்சிந்தனைகள், கருதுகோள்கள் ஏற்பட்டன. இருபதாம் நூற்றாண்டை பொறுத்தவரை அது உலக அரசியலின் பெருங்கதையாடல். அதாவது கடந்த காலத்தை கையாளுதல்  (Dealing with the past) குறித்த கருத்தாக்கம். நூற்றாண்டுகளில் கடந்து போன நினைவுகளிலிருந்து தற்காலத்தை நோக்கியதாக அது இருந்தது. கடந்து போன மனிதனின் சுவடுகள், வரலாறுகள், சாதனைகள், செயல்பாடுகள் போன்றவற்றை மீட்டுருவாக்கம் செய்து கொள்வது அதன் நோக்கமாக இருந்தது. மேலும் வரலாற்றின் வெற்றி தோல்விகள், படையெடுப்புகள், அழிவுகள், ஆதிக்கம், ஒடுக்குமுறை போன்றவற்றை ஆராய்தல், அதற்கான தீர்வுகளை கண்டறிதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல் போன்றவை இதன் முக்கிய அம்சங்கள். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பது இதன் அடிப்படையில் தான். கடந்த கால அடிப்படையில் அரசியல் அரங்கிலிருந்து இரத்தமும், பணமும் அடுத்த தலைமுறைக்கு மாற்றம் செய்யப்படக்கூடாது என்பது அதன் மற்றொரு நோக்கமாக இருந்தது. இதன் மூலம் தேசியஇனங்கள் மற்றும் பிற இனக்குழுக்களிடையே சுமூக உறவை மேம்படுத்த முடியும் என்று நம்பியது. மேலும் கிழக்கின் முந்தையை எதிரிகள் மற்றும் அவர்களின் வாரிசுகள் உலக சமூகத்தின் ஒவ்வொரு நிலையிலும் சிவில் ஒழுங்கை கட்டமைப்பதுடன், அவற்றை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. இதன் தொடர்ச்சியில் கீழை உலகம் தற்போது ஆசியா ஒரு முறையியல் (Asia as a method)என்ற சிந்தனைப்போக்கை கட்டமைத்து வருகிறது. இது தொடர்பான கருத்தியல் செயல்முறைகள் மற்றும் அவற்றின் நடைமுறை சாத்தியப்பாடுகள் குறித்து தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அறிவுலகம் பரிசீலித்து வருகிறது.

எண்பதுகளில் உலக வர்த்தக அமைப்பின் மூலம் முன்வைக்கப்பட்ட  உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் போன்ற பொருளாதார கோட்பாடுகளுக்கு பிறகு சமூக மற்றும் கலாசார அம்சங்களும் இதனோடு கீழை நாடுகள் மீது திணிக்கப்பட்டது பற்றி விரிவாக ஆராய வேண்டியதிருக்கிறது. இன்றளவும் விவாத பொருளாக இருப்பது இது தான். இதன் நீட்சியில் கீழை நாடுகளுக்கும், மேற்குலகிற்குமான தற்போதைய முரண்பாட்டில் கலாசாரம் முக்கிய இடத்தை வகிக்கிறது. கலாசாரம் என்ற சொல் முதன் முதலாக ரோமானிய அறிஞரான சீசரால் கையாளப்பட்டது. ஆன்மாவை  பயிரிடுதல் (cultivation of soul)என்பதாக அவர் குறிப்பிட்டார். இது தொடக்கத்தில் நிலம் சார்ந்த விவசாய சொல்லாக தான் இருந்திருக்கிறது. தமிழில் பண்பாடு என்றும் இதனை குறிப்பிடுகிறார்கள். நிலத்தை பண்படுத்துதல் என்பதிலிருந்து இது தொடங்குகிறது.  17 ஆம் நூற்றாண்டு அறிவொளிகால ஐரோப்பாவில் மறு அறிமுகம் செய்யப்பட்டு  விரிந்த அர்த்தத்தில் கையாளப்பட்டது. அதாவது பரிணாமமடைந்த மனித திறன். (Evolved Human Capacity )மேலும் மரபணு சாராத சமூக மனிதர்களின் நடவடிக்கைகள், செயல்பாடுகள், மொழி சார்ந்த உறவாடல்கள் போன்ற அனைத்துமே இந்த கலாசார விளக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் மானுடவியல் (Anthropology)ஆய்வுகளில்  கலாசாரம் (Culture)என்ற சொல் முக்கிய ஆய்வுகூறாக மாறியது. அமெரிக்க மானுடவியலாளர்கள் இதனை இரு அர்த்தங்களில் விளக்குகின்றனர்.

1.  பரிணாமமடைந்த மனித திறனானது அதன் அனுபவங்களை வகைப்படுத்துவது மற்றும் பிரதிநிதித்துவப்படுத்துவது. மேலும் கற்பனா மற்றும் படைப்பாக்க ரீதியாக செயல்படுத்துவது

2. வித்தியாசமாக வாழும் வேறுபட்ட மக்களின்  அனுபவங்களை வகைப்படுத்துவது அல்லது பிரதிநிதித்துவப்படுத்துவது. அதனை கற்பனா மற்றும் படைப்பாக்க ரீதியாக செயல்படுத்துவது.

மேற்கண்ட இரு அர்த்தங்களும் குறிப்பிட்ட காலகட்டம் வரை மேற்குலகில் கலாசாரம் குறித்த விளக்கமாக இருந்தன. இருபதாம் நூற்றாண்டில் இடைப்பகுதியில் உருவான குறியியல் (Semiotics) ஆய்வுகள் மற்றும் அமைப்பியல் முறைகள் கலாசாரம் குறித்த குறியீட்டு ரீதியான விளக்கத்தை அளித்தன. பிரதேசங்கள் கலாசார ரீதியாக வேறுபடுவது குறித்த விளக்கத்தை அவை அளித்தன. குறிப்பாக ஒரே மொழி கொண்ட பிரதேசங்களில் மொழியானது  வட்டார வழக்காறுகளாக கிளைவுற்று  அது சார்ந்த பல கலாசாரமாக வித்தியாசப்படுகிறது. இது மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கும் பொருந்தும்.  கலாசாரம் என்பது பிரதேச ரீதியாக வித்தியாசப்படும் சூழலில் ஒவ்வொரு பிரதேசங்களும் அவர்களுக்கான கலாசார விழுமியங்களை, கூறுகளை, நடைமுறைகளை தொடர்வது உசிதமானது தான். அந்த கலாசார கூறுகள் குறிப்பிட்ட கலாசார சமூகத்தின் சகமனிதர்களை ஒடுக்கும் கருவியாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அதனை தக்கவைப்பதே சிறந்தது. மேற்கு நாடுகளில் கருப்பர்களுக்கு எதிரான நிறவெறியும், இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் சாதிய ஒடுக்குமுறையும், சமூக கலாசார நடைமுறைகள் எப்படி ஒடுக்குமுறை கருவியாக மாறுகின்றன என்பதற்கான உதாரணங்கள். இந்நிலையில் மேற்கின் பரிணாமமடைந்த கலாசார கூறுகள் கீழை நாடுகளில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவற்றில் உணவு மற்றும் உடை சார்ந்த கலாசார அம்சங்கள் முக்கியமானவை. மேற்கின் குளிர்ந்த, கோடைகால தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்ற உடைகள், உணவு உட்கொள்ளலில் தட்ப வெப்பத்தின் அடிப்படையிலான நுண்கிருமிகள் சார்ந்த அறிவியல் முறையோடு இணைந்த அவர்களின் கரண்டி  கலாசாரம் (Spoon Culture) இவையெல்லாம் மேற்கின் தனித்துவமான கலாசார நடைமுறைகள். கீழை நாடுகள் தட்பவெப்ப அடிப்படையில் இவற்றிலிருந்து வித்தியாசப்படுகின்றன. இந்த சூழலில் உலகமயமாக்கல் என்ற பெயரில் உணவு, உடை சார்ந்த மனித நடைமுறைகளை நாம் உலகமயப்படுத்த முடியாது. ஆனால் இதை முதலாளித்துவ நடைமுறையாகவே  பார்க்க வேண்டியதிருக்கிறது. காரணம் தற்போதைய உலகமயமாக்கல் என்பது வெறும் பொருளாதாரம் என்பதை தாண்டி சமூக கலாசாரம் என்பதை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதையே மிகச்சரியான ஒன்றாக, புரட்சிகரமானதாக திணிக்க முயலுகிறது.  மேலும் மேற்கை பொறுத்தவரை உடை என்பது பெரும்பாலும் தட்பவெப்ப காரணிகளின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்படுகிறது. மாறாக கீழைநாடுகளில் அல்லது இந்தியா போன்ற நாடுகளில் உடை என்பது தட்பவெப்ப காரணிகள் என்பதை தாண்டி வாழ்க்கைபாங்கு மற்றும் வெளிப்படுத்தல் என்ற காரணிகளின் அடிப்படையில் தான் பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகின்றது. உச்சி பிளக்கும் வெயில் காலங்களில் ஜீன்ஸ் பேண்ட் அணிவதும், ஜவுளி கடைகளில் ஆடையை தேர்ந்தெடுக்க அதிக நேரம் செலவழிக்கப்படுவதையும் அவதானிக்கும் போது இந்த தேர்ந்தெடுப்பு காரணிகளை நாம் கண்டறிய முடியும்.

குடும்பம் என்ற சமூக நிறுவனம் மேற்கு நாடுகளை விட கீழை நாடுகளில் தான் அதுவும் இந்தியாவில் தான் மிக வலுவாக இருக்கிறது. இவை  வரலாற்று அடிப்படையிலான  நாகரீக காலகட்டத்தின் தொடர்ச்சி என்றாலும் மேற்குலகத்துடன் முழுமையாக இயைந்து விட முடியாது என்றே தோன்றுகிறது. அதற்கான சொந்த முரண்களை இது உள்ளடக்கி உள்ளது. புவிகலாசாரம் (Geo Culture)அதற்கான மற்றொரு முரணாக இருக்கிறது. குறிப்பாக ஆண்- பெண் திருமண உறவுகள், குடும்ப அமைப்பு முறை,  ஓரின திருமணங்கள் போன்ற குடும்பம் சார்ந்த சமூக கட்டமைப்புகளில் மேற்குலகிற்கும், கிழக்கிற்கும் அடிப்படையில் வேறுபாடு இருக்கிறது. இவை தற்போது இரு பிராந்தியங்களிலும் விவாதப்பொருளாக இருக்கின்றன. இது தொடர்பான உரையாடல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. கிழக்கின் குடும்ப அமைப்பு முறையை பொறுத்தவரை பலம் மற்றும் பலவீனம் ஆகிய இரண்டும் நிரம்பிய ஒன்றாக இருக்கிறது. சில கீழை நாடுகளில் அது பெரும் அதிகார நிறுவனமாக செயல்படுகிறது.

குடும்ப நிறுவனம் என்பதன் தொடர்ச்சியில் மதிப்புகள் (Values)என்ற கருதுகோள் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இன்னும் நிலைகொண்டிருக்கிறது.  ஒரு வகையில் இந்த சமூகங்களின் பெரும் பலமாகவும் அவை இருக்கின்றன. மதிப்பு என்பது வெறுமனே சமூகங்களின் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் அல்ல.  மேலும் அவை நம்பிக்கைகளோ அல்லது தீர்ப்புகளோ அல்ல. மாறாக ஒரு குறிப்பிட்ட சிந்தனைக்கு இடையில் ஊடாடும், நகரும் செயல்பாடுகள் தான். இம்மானுவேல் காண்ட் இதனை பின்வருமாறு குறிப்பிடுகிறார். "அறிவற்ற மதிப்பு என்பது குருட்டுத்தனமானது. உணர்ச்சியற்ற மதிப்பு என்பது வலுவற்றது. செயலற்ற மதிப்பு என்பது வெற்றிடமானது. இந்தியாவின் கிராமங்களில் இந்த மதிப்புகளின் எதார்த்த தன்மையை இன்றும் பார்க்க முடியும். இந்த மதிப்புகளின் அடிப்படையில் கிழக்கிற்கும், மேற்கிற்கும் முரண்பாடுகள் இருக்கின்றன. நிலங்களில் இருந்து தொடங்கி குடும்ப செயல்பாடுகள் வரை இது நீள்கிறது. கிழக்கின் விவசாயம் சார்ந்த மதிப்புகளில் கூட மேற்கிற்கு நிறைய முரண்பாடுகள் இருக்கின்றன. இந்தியாவின் விவசாய விளை பொருட்களை சில மேற்கு நாடுகள் வெறுப்பதன் பின்னணியை நாம் இதனோடு சேர்த்து புரிந்து கொள்ள முடியும்.

மேற்கு என்ற குடையில் கீழ் ஐரோப்பா, அமெரிக்கா , ஆஸ்திரேலியா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய பிராந்தியங்கள் வருகின்றன. கிழக்கு என்பதில் ஆசியா மற்றும் ஆப்ரிக்க பிராந்தியங்கள் உள்ளடங்குகின்றன. இவற்றின் பிராந்திய தன்மையின் முரண்களும், சிக்கல்களும் வரலாற்று காலம் தொட்டு தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஓருலகம், மெய்நிகர் உலகம் (Virtual World), உலக கிராமம் (Global Village)போன்ற கருத்தாக்கங்கள் உலவி வரும் இந்த சூழலில் இரண்டிற்குமான இயல்பான முரண்கள் மற்றும் அதன் பரஸ்பர உறவாடல்கள் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் மேற்கும், கிழக்கும் அதற்கான இயல்பான முரண்களோடும், அதே நேரத்தில் நீதியோடும், மனித மாண்புகளோடும் தங்களுக்கான பாதையில் நகர்வதே உலக இயக்கத்திற்கு அவசியமான ஒன்று.



No comments: