காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Thursday, January 23, 2014

வாசிப்பது எதற்காக

கடந்த இருவாரங்களாக நடந்து வந்த சென்னை புத்தக்கண்காட்சி  நிறைவு பெற்றிருக்கிறது. இந்தாண்டு சுமார் 500 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புதிய புத்தகங்கள் வெளிவந்தன. இது கடந்த சில ஆண்டுகளின் மந்தநிலைக்குப்பின் பதிப்புச்சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றம். வாசகர் கூட்டமும் கடந்த வருடத்தை விட அதிகமாக அலைமோதியது. லட்சக்கணக்கில் விற்பனை ஆகி இருக்கலாம். கடந்த பத்தாண்டுகளில் தான் சென்னை புத்தகக்கண்காட்சிக்கு உரிய கவனமும்,முக்கியத்துவமும் ஊடக அளவிலும், வாசக நிலையிலும் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு கண்காட்சியிலும் எம்மாதிரியான புத்தகங்கள் விற்பனை ஆகின்றன? வாங்கிய புத்தகங்களை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பதும் இங்கு முக்கியம். ஒரு சிறந்த புத்தகத்தை வாசிப்பதை காட்டிலும் அதனை காசு கொடுத்து வாங்குவது மேல் என்ற நிலையில் அதனுள் பயணம் செய்வதும் முக்கியம்.

தமிழ்நாட்டின் மக்கள்தொகை மற்றும் பரப்பளவை ஒப்பிடும் போது தற்போதைய வாசகர் எண்ணிக்கை என்பது குறைவு தான். இப்போதைய எண்ணிக்கை என்பது முந்தையை நிலைமையை ஒப்பிடும்போது ஓரளவிற்கு கூடியிருக்கிறது. காரணம் பெருந்திரளான வெகுஜன பரப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வாசகர் தளம் இருக்கும் சூழலே அதற்கு  ஆரோக்கியமானது.  அது மக்கள் தொகையின் விகிதாச்சார அடிப்படையில் இருந்தும் இன்னும் கூடுதல் பலம்.காரணம் அறிவார்ந்த சமூகம் நிலைகொள்ளாத எந்த நாடு முன்னேறாது. காரணம் அதனை ஆளத்தெரிந்ததும், அதனை இயக்குவதும் அந்த சமூகம் தான். இங்கு ஆளத்தெரிந்தது என்பதன் அர்த்தம் ஆட்சியதிகாரம் அல்ல. இங்கு வாசிப்பு என்பது ஒரு செயல்பாடு , ஓர் தொடர்ச்சியான இயக்கம். இதில் தடையே இல்லை. இடைவிடாது கடல் அலை போல் நிகழும் ஒன்று. வாசிப்பு ஒரு மனிதனில் எப்போது தொடங்குகிறது? சக மனிதனின் உளவியல் ஒன்றின் மீதான ஈர்ப்பாக அது சார்ந்து உருவாகும் ஈடுபாடாக உருமாறும் போதே வாசிப்பு தொடங்கி விடுகிறது. சுவர் மீது அமர்ந்து இரைக்காக நீண்ட நேரம் பூச்சியை அவதானிக்கும் ஒரு பல்லியை போன்று மனிதன் தன்னை சுற்றியிருப்பவற்றை அவதானிக்கும் போது வாசிப்பிற்கான தொடக்கம் ஏற்பட்டு விடுகிறது. அதன் மூலமே அது தான். சுதந்திரமான தேடல் தான் வாசிப்பின் அடிப்படை. இந்நிலையில் அன்றாட நிகழ்வை அறிய விரும்பும் மனநிலை ஒருவருக்கான தேடலின் முதல் கட்டம். அந்த நிகழ்வின் உள்ளடக்கம் மற்றும் விரிவாக்கம் தேடி அலையும் மனநிலை இதன் இரண்டாம் கட்டம். உதாரணமாக 15 பேருக்கான தூக்குத்தண்டனையை  உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்திருக்கிறது என்ற செய்தியை அறியும் ஒருவர் மரணதண்ட்னை குறித்தும், மனித உரிமைகள் குறித்தும் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவது. இந்நிலையில் ஒருவர் நாளிதழ் மற்றும் வார இதழ்களிலிருந்து தன் வாசிப்பைத்தொடங்குகிறார். இதன் பிறகு புத்தகங்களுக்கு தன்னை நகர்த்திக்கொள்கிறார். தற்போதைய உலகில் வாசிப்பில் புத்தகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் மிக முக்கியமானவை. புத்தகங்கள் என்பவை நமக்குள் உறைந்து போயிருக்கும் கடலை பிளக்கும் கோடரியாக இருக்க வேண்டும் என்றார் எழுத்தாளர் காப்ஃகா.  ஆனால் அது நமக்குள் கீறலை ஏற்படுத்தும் சிறு பிளேடாக இருந்தாலே பெரிய விஷயம். உலகில் அதிக அளவில் வாசகர்களை கொண்டவை நாவல்கள். இலக்கிய ஆக்கத்தின் மிக முக்கிய வடிவமான நாவல் வாசகனுக்குள் அவனின் மனவெளிக்குள் ஆழ்ந்த பயணத்தை மேற்கொள்கிறது. தேர்ந்த சுயவிவரணையை உருவாக்குகிறது. பின்னர் புனைவற்ற அம்சங்களான வரலாறு, அரசியல், தத்துவம் மற்றும் அறிவியல் புத்தகங்களும்  வாசிப்பில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இவை உலகில் வரிவடிவம் கொண்ட எல்லா மொழிகளுக்கும் உரிய ஒன்றாக இருக்கின்றன.

ஆங்கில புத்தகங்களுக்கான உலகளாவிய சந்தையில் இந்தியா இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடும் அதன் ஒரு சிறுபகுதி தான். இங்கு தமிழ் புத்தகங்கள் மீது ஆர்வம் இல்லாமல் மொத்தவாசிப்பையும் ஆங்கிலத்திலேயே வைத்துக்கொள்பவர்கள் பலர் இருக்கின்றார்கள். தமிழில் தற்போது ஏராளமான பதிப்பகங்கள் உருவாகி இருக்கின்றன. முற்றிலும் வணிக நோக்கத்தை கொண்ட பதிப்பகங்களை தவிர்த்து தீவிர இலக்கிய மற்றும் அறிவு சார் விஷயங்களை புத்தகமாக போடும் பதிப்பகங்கள் உருவாகி இருக்கின்றன. இவற்றில் சில பதிப்பகங்கள் தீவிர இலக்கிய தாகமும், அறிவுத்தேடலும் ,அர்ப்பணிப்பும் கொண்டு சொந்த முதலீட்டை நம்பி களத்தில் இறங்கி இருப்பவை. இவற்றிற்கு பெரிய வரவு நோக்கமாக இல்லை.  வணிக போட்டியில் தூக்கி வீசப்படும், சந்தையின் கோரத்தாக்குதலில் நிராகரிக்கப்படும் பல  படைப்பாளிகளின், எழுத்தாளர்களின் புத்தகங்களை இவை பதிப்பிக்கின்றன. மனோன்மணியின் புது எழுத்தும் அவற்றில் ஒன்று.  இவை வெளியிடும் புத்தகங்கள் ஒரே ஆண்டில் விற்று முடிந்து விடுவதில்லை. கட்டு கட்டாக சிதலரித்து அவற்றின் இடங்களில் சில சமயங்களில் தூங்கிக்கொண்டிருக்கும்.  பாரம்பரியமிக்க தமிழ்ச்சமூகம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஓர் அறிவார்ந்த சூழல் உருவாகி இருக்கும் நிலையில் தன் சமூக பொறுப்புணர்ச்சி அற்ற நிலையை, வறட்டு ரசனையை மாற்றி இதனோடு தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும். வாசிப்பை தன் வாழ்வின் பகுதியாக ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்நிலையில் தமிழ்நாட்டின் நகரங்களில் உள்ள சிறிய வீட்டிலும், கிராமங்களில் உள்ள பெரிய வீட்டிலும் வாசிப்பிற்கான ஓர் அறை இருப்பதில்லை. இதுவும் வாசிப்பிற்கான நெருக்கடி தான். வாசிப்பின் மூலம் சக மனிதன் ஓர் ஆன்மாவை, ஓர் அறிவார்ந்த நிகழ்மனத்தை அடைந்து கொள்கிறான். இதனை தவிர்க்கும் ஒருவருக்கு உடனடியாக இழப்பு ஏதும் இல்லாவிட்டாலும் பிந்தைய கட்டத்தில் வாழ்வின் மறைமுக இழப்பிற்கு ஆளாகிறார். உலகில் மாற்றங்கள் என்பவை அறிவுத்தேடல்கள் மூலமே சாத்தியமாயிருக்கின்றன. வரலாற்றில் புதிய மனிதர்கள் அதன் மூலம் மட்டுமே உருவாகி இருக்கிறார்கள். ஆக தமிழ்ச்சமூகம் இலக்கியத்தின் பால், தீவிர அறிவுத்தேடலின் பால் தன்னை தகவமைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்காக வாய்ப்புகள் நிறையவே உருவாகி இருக்கின்றன.


No comments: