காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Friday, January 31, 2014

காந்தி படுகொலை அல்லது பாகிஸ்தான் பிரிவினை
காந்தி ஏன் கொல்லப்பட்டார்? கோட்சேவிற்கு காந்தி மீது வெறுப்பு ஏற்பட என்ன காரணம்?  பாகிஸ்தான் ஏன் பிரிந்தது? இந்தியா என்பது இரு தேசங்களா? தேசியம் என்பது என்ன? போன்ற கேள்விகளோடு நாம் சுதந்திர இந்திய வரலாற்றை பார்க்க வேண்டியதிருக்கிறது. வரலாறு எப்போதும் விரலிடுக்குகளில் அல்லது வீங்கிய கைகளுடன் பயணம் செய்கிறது. வரலாறு என்பதே நாம் எவ்வாறு வரலாற்றை பார்க்கிறோம் அல்லது வரலாற்று காலத்தவர் எப்படி அவர்களின் முற்காலத்தை அணுகினார்கள் என்பதில் அடங்கியிருக்கிறது.

காந்தி இந்தியாவின் தவிர்க்க முடியாத மனிதர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஒட்டுமொத்த சுதந்திர போராட்ட வரலாறும் அவரிடத்தில் கொண்டு போய் முடிக்கப்படுவது அபத்தமானது. காந்திக்கு முந்தைய இந்தியாவில் பலர் இருந்தனர். அவ்வகையில் ஜின்னா காந்திக்கு முந்தைய மனிதர்.  நாம் காந்தியை இருவகையாக பார்க்கலாம். ஒன்று 1.தென்னாப்ரிக்காவில் காந்தி 2. இந்தியாவில் காந்தி. தென்னாப்ரிக்காவில் காந்தி உண்மையில் ஒரு சிறந்த மனிதராக இருந்தார். அன்று நிறவெறிக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் தன்னை இணைத்துக்கொண்டார். அதனால் ஒரு கட்டத்தில் அவரையும் கருப்பர்கள் பட்டியலில் வெள்ளையர்கள் சேர்த்தார்கள். நாம் இந்திய காந்தியைப் பற்றி தான் அதிகம் பேச வேண்டியதிருக்கிறது. இந்திய காந்தி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காங்கிரஸின் தலைமையை ஏற்கிறார். அவரின் தலைமையே மிகுந்த சவாலாக இருந்தது. எல்லாவற்றையும் சமாளித்த காந்தி விடுதலைப்போராட்டத்தை நோக்கி காங்கிரஸை திருப்புகிறார். ஆரம்பத்தில் டொமினியன் அந்தஸ்து கேட்ட காங்கிரஸ் பின்னர் தன் நிலைப்பாட்டை மாற்றி பூரண சுயராஜ்ஜியம் என்ற  கோரிக்கையை பிரிட்டிஷ் அரசிடம் முன்வைத்தது. முகலாய பேரரசு காலகட்டம் வரை இந்தியாவில் இந்து முஸ்லிம் என்ற பெரும் முரணோ, எல்லையோ இருக்கவில்லை. முகலாய கல்வி திட்டத்தில் அவர்கள் நடத்திய மதரசாக்களில் அனைவரும் படித்தனர். ராஜாராம் மோகன் ராய் கூட  மதரசா கல்வி கற்றவர் தான். இதன் தாக்கமே பிற்காலத்தில் ராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி போன்றவர்கள் ஆரிய சமாஜம் மற்றும் பிரம்ம சமாஜம் ஆகிய இயக்கங்களை  உருவாக்குவதற்கு காரணமாக இருந்தது.  மேலும் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷார் நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், ஜைனர்கள், சீக்கியர்கள் அல்லாதவர்களை இந்துக்களாக குறிப்பிட்டனர். இதன் மூலம் சாதி இந்துக்களை ஒருங்கிணைக்க வேண்டும். அவர்களுக்கு அடையாளம் தேவை என்ற சிந்தனை மேற்கண்ட தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டது. இந்து மகா சபையின் உருவாக்கம் இதற்கான கருத்தியல் ரீதியான அரசியலை அளித்தது. உண்மையில் வீரசாவக்கர் நாத்திகராக தான் இருந்தார் என்பதாக சில வரலாற்றுக்குறிப்புகள் காணப்படுகின்றன. அது பற்றிய தெளிவு இல்லை.

காந்தி மீது இந்து மகாசபைக்கு மிகுந்த அதிருப்தி ஏற்பட்டது. இந்த வெறுப்பு காந்தியின் முஸ்லிம் ஆதரவு அரசியல் காரணமாக ஏற்பட்டது. காந்தி அடிப்படையில் இந்துயிச வாதியாக இருந்த போதிலும் இந்து மகாசபைக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட காரணம் காந்தி ஒரு பரிபூரண இந்துவாக இருக்கவேண்டும். இந்து தேசியத்தை ஆதரிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். இதற்கு மாறாக காந்தி இருந்தது தான் அவர் மீதான முதல் கோபம். வீரசாவர்க்கர் இதனை அதிகாரபூர்வமற்ற உரையாடல்களில் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இந்தியாவில் புவியியல் ரீதியாக இந்து இஸ்லாம் ஆகிய இரு தேசங்கள் இருப்பதை அவர் தன் உரைகளில் அடிக்கடி குறிப்பிட்டார். இரண்டாவது இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதராக காந்தி உருவாகி இருந்த நிலையில் அவர் ஒட்டுமொத்த இந்தியாவின் அதிகாரபூர்வ நபராக மாறி விடுவார் என்று அவர்கள் பயந்தார்கள். கோட்சே வாக்குமூலத்தின் சாராம்சம் இது தான்.

வரலாற்றின் அடிப்படையில் பாகிஸ்தான் பிரிவினையை காந்தி ஆதரிக்கவில்லை. என் பிணத்தின் மீது தான் இந்திய பிரிவினை நடக்கும் என்றார். இறுதிகட்டத்தில் ஜின்னாவின் பிடிவாதத்தால் காந்தி அதனை ஏற்றுக்கொண்டார். இந்திய பிரிவினையில் நேருவின் பங்கும் மகத்தானது. ஜின்னாவை சமாதானப்படுத்தி ஒரே இந்தியாவை முஸ்லிம் லீக் ஏற்றுக்கொண்ட நிலையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் அதை கெடுத்தார். வரலாற்றின் சோகமான தருணங்கள் இவை. நீண்டகாலமாக தடைசெய்யப்பட்ட அபுல் கலாம் ஆசாத்தின் புத்தகம் மூலம் இது தெரியவந்தது. உண்மையில் இந்தியாவில் இருந்த பல முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுபட்ட இந்தியாவை தான் விரும்பினார்கள். ஆனால் அதனையும் மீறி தான் இந்திய பிரிவினை நடந்தது. உலக வரலாற்றில் மிக மோசமான துயரங்கள் நிரம்பிய தருணம் அது.

ஜின்னா மும்பையில் மிக உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில் திலகரின் மாணவர். பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும் அவநம்பிக்கை வாதி. எந்த சடங்குகளிலும் ஈடுபடாதவர்.  அவர் முஸ்லிம்லீக் கட்சியின் தலைமை பொறுப்புக்கு வந்தது வரலாற்று ஆச்சரியம். அன்றைய காங்கிரஸ் வலதுசாரி மற்றும் இடதுசாரி   ஆகிய இரு பெரும் பிரிவுகளை உள்ளடக்கி இருந்தது. நேரு, ஆசாத் போன்றோர் இடதுசாரிகளாகவும், பட்டேல், ராஜாஜி போன்றோர் வலதுசாரிகளாகவும் அறியப்பட்டனர். இந்த கருத்தியல் பிளவு இந்துத்துவவாதிகளுக்கு சாதகமாக போனது. இதனூடே இந்து முஸ்லிம் ஆகிய இரு தேசியங்கள் பற்றிய உணர்வும், பிரசாரமும் மக்கள் மத்தியில் அதிகமாயின. இதுவும் பாகிஸ்தான் கோரிக்கை வலுபெற ஒரு காரணம். மேலும் காங்கிரஸின் சில தலைவர்கள் அன்றைய மாகாண தேர்தல்களில் சிறுபான்மையினருக்கு செய்த அநீதிகள் போன்றவையும் இதனோடு சேர்ந்து கொண்டன. இந்த பிரிவினை அரசியலில் காந்தி பலிகடா ஆகிவிட்டார். காந்தி முஸ்லிம்களுக்கு ஆதரவாக டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீருக்கு பங்கு தொகை கொடுக்க வேண்டும் என்றார். பல தருணங்களில் அவர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்தார் என்றெல்லாம் அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். காந்தியை கொல்ல 1934 முதல் 1948 வரையிலான காலகட்டத்தில் ஆறுமுறை முயற்சி நடந்தது. ஆறாவது முறை அது வெற்றிபெற்றது. 1934 ல் பாகிஸ்தான் கோரிக்கை உச்சமடையாத போதும் மதசார்பற்ற சுதந்திர இந்தியா என்ற காந்தியின் பார்வை, கனவு அவர்களுக்கு மிகப்பெரும் சிக்கலாக இருந்தது. இப்படியான ஒட்டுமொத்த வரலாற்றின் சவால் மிகுந்த மனிதராக காந்தி இருந்தார். அவர் சமூக ஒற்றுமையை வலியுறுத்தினார். அதனை முன்னெடுக்க போராடினார். சுதந்திர போராட்ட காலகட்டத்தில் பிரிட்டிஷ் காலனிய அரசு பலரை கொன்ற போதும் காந்தியை கொல்லவில்லை. அவரை சிறையில் அடைத்து மெதுவாகவும் சாகடிக்கவில்லை. சக மனிதரால், சொந்த நாட்டு குடிமகனால் அவர் கொல்லப்பட்டார். காந்தியைப்பற்றிய அம்பேத்காரின் விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும் காந்தி இந்திய வரலாற்றில் சமூக ஜனநாயக போராளியாக இன்றும் நிற்கிறார்.
2 comments:

Nandhu pnk said...

ஆமாம் ஆமாம் அது அப்படித்தான் தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள் அது இதுதான் போல

Nandhu pnk said...

மருபடியும் மத வெறியை தூண்டுகிறிரா