கலாசாரத்தை காப்பது எப்படி? உண்மையில் அதனை காவல் காக்கும் போது மட்டுமே அது தொடர்ச்சியாக காப்பாற்றப்படுமா? இந்த சமூகத்தில் வெறும் பெண்கள் மட்டுமே காலாசார பாதுகாப்பின் அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது எதற்காக? என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை காண வேண்டியதிருக்கிறது. கலாசாரம் என்பது சமூக மனிதர்களின் கூட்டு செயல்கள், அனுபவங்கள் இவற்றின் அறம் சார்ந்த தொகுப்பு, அது தொடர்ச்சியாக தொடரப்படும் ஒரு செயல். இந்நிலையில் இதனை காப்பது என்பது அந்த சமூகத்தின் மேலாண்மை (Hegemony) சார்ந்த ஒரு செயல்பாடு.
உலகில் அதிகாரபூர்வமான கலாசார காவலர்களை கொண்ட நாடு சவூதி அரேபியா. அங்கு முத்தவா என்ற பெயரில் கலாசார காவலர்கள் செயல்படுகின்றனர். இவர்களின் பணி என்பது மசூதிக்கு தொழுகைக்கு செல்லாமல் வீதியில் சுற்றும் முஸ்லிம் இளைஞர்களை தொழுகைக்கு செல்லுமாறு அறிவுறுத்துவது, தாடி வைக்காத இளைஞர்களுக்கு அதனை வைக்க அறிவுரை கூறுவது, வீதியில் ஆண் துணையில்லாமல் செல்லும் பெண்களை கண்காணிப்பது போன்ற பல பணிகளை சவூதி அரசாங்கம் அவர்களுக்கு அளித்திருக்கிறது. அடிப்படையில் வஹ்ஹாபிய இஸ்லாமிய கொள்கையை கொண்ட நாடான சவூதியில் இது இயல்பான ஒன்று. மேலும் மலேசியா மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இம்மாதிரியான காவலர்கள் மிகக்குறைவான அளவில் அதிகாரபூர்வமற்ற முறையில் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்தியா என்பது பன்மய சமூகங்களை கொண்ட நாடு. இங்கு பல மதங்கள், சாதிகள், இனக்குழுக்கள் வாழும் ஒரு பெரும் ஜனநாயக நாடு. இதன் பலமே இந்த பன்மைத்துவம் தான். ஆனால் இந்து முஸ்லிம் என்ற பெரும் பிளவு ஏற்பட்ட பின், குறிப்பாக இந்துத்துவ சக்திகள் உயிர்பெற்ற இருபதாம் நூற்றாண்டில் இந்த கலாசாரத்தை காப்போம் என்ற கோஷம் வலுவாக முன்வைக்கப்பட்டது. பெண்கள் காலங்காலமாக ஒடுக்கப்பட்டு கிடந்த சாதிய சமூகத்தில் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், குறிப்பாக சுதந்திரத்திற்கு பிந்தைய கட்டத்தில் பெண்கள் கல்வியறிவு காரணமாக சமூக நகர்விற்குள்ளானார்கள். அவர்களின் நகர்வு இயல்பானதாக மாறியது. இந்நிலையில் சிறுபான்மை சமூகங்களை எதிர்நிலையாக நிறுத்தி அரசியல் செய்து பழக்கப்பட்டு போன இந்துத்துவ இயக்கங்களுக்கு கலாசாரத்தை குறிப்பாக பெண்களை பாதுகாப்பது என்ற பெயரில் கண்காணிப்பு அரசியல் செய்வது நிர்பந்தமான ஒன்றாக மாறியது.
பெண்கள் காதலிக்க கூடாது, காதலர் தினம் கொண்டாடக்கூடாது, பிற ஆண்களுடன் பேசக்கூடாது, அவர்கள் குடிக்க கூடாது, அவர்கள் வேலைபார்க்கக்கூடாது, அவர்கள் எந்த நிலையிலும் பிற மத ஆண்களுடன் பழகக்கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளைக்கொண்ட செயல்திட்டங்கள் இவர்களால் வகுக்கப்பட்டன. இதனடிப்படையில் தன் இயக்கத்தவர்களை கொண்ட படைகளை அமைத்து இவர்கள் கண்காணிக்கிறார்கள். அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வார்த்தை தான் லவ்ஜிஹாத். அதாவது இந்து பெண்களை முஸ்லிம் ஆண்கள் மயக்கி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். இதனை நாம் தடுக்க வேண்டும் என்பது தான் அது. அவர்களின் வாதப்படி பார்த்தால் இந்தியா முழுமைக்கும் சாதிய இந்து சமூகத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும். எதிரிடையாக முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் எதார்த்தம் அவ்வாறு இல்லை. இது ஒரு மதவாத அஜெண்டா என்பதை தவிர வேறில்லை. இம்மாதிரியான வெற்றுக்கருத்தியல் காரணமாக இந்தியாவில் பல இடங்களில் மோதல்கள் உருவாகி இருக்கின்றன. பல விவகாரங்கள் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்டன.
வட இந்தியாவில், கர்நாடகாவில், தமிழ்நாட்டில் இந்துத்துவ இயக்க கலாசார காவல் படையின் செயல்திட்டத்தை போன்றே மறு பக்கத்தில் முஸ்லிம் தளத்திலும் அது செயல்படத்தொடங்கியுள்ளது மிகப்பெரும் அவலம். நம் பெண்களை காப்போம் என்ற கோஷத்துடன் தமிழ்நாட்டில் வஹ்ஹாபிய இஸ்லாமிய இயக்கங்கள் சமீப காலமாக இந்த ஆயுதத்தை கையில் எடுத்திருக்கின்றன. தமிழ்நாட்டைப்பொறுத்தவரை முஸ்லிம் பெண்கள் காலங்காலமாக கல்வியறிவில் மிகவும் பின்தங்கி இருந்தனர். மற்ற சாதிய சமூகங்களில் பெண்கள் முன்னுக்கு வந்த பின்னரும் கூட உயர் கல்வியும், வேலைவாய்ப்பும் சொந்த சமூகத்திலிருந்து மறுக்கப்படும் சூழலே அவர்களிடம் இருந்தது. கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவும், இடஒதுக்கீடு காரணமாகவும் தமிழ்நாட்டு முஸ்லிம் பெண்கள் கல்வி கற்க நம்பிக்கையோடு வருகிறார்கள். அதுவும் தென்மாவட்டங்களில் மட்டுமே இந்நிலைமை அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண்களின் கல்வியை பாழடிக்க, அவர்களை தன்னம்பிக்கை அற்றவர்களாக மாற்ற , அவர்களை நோகடித்து எதிர்காலத்தை சீர்குலைக்க தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வஹ்ஹாபிய இயக்கங்களான தமுமுக, தவ்ஹீத் ஜமா அத் மற்றும் இந்திய (?)தவ்ஹீத் ஜமா அத் போன்ற இயக்கங்கள் தமிழ்நாடு முழுவதும் தன் இயக்கத்து ஆணாதிக்க வெறியர்களைக்கொண்ட படைகளை அமைத்து துப்பறியும் நிபுணர்கள் போன்று முஸ்லிம் பெண்களை கண்காணிக்கின்றன. ஏதாவது ஆண்களிடம் பெண்கள் பேசினால் கூட உடனே அந்த பெண் அவனை காதலிக்கிறாள் என்று கதைகளை பரப்புவது, அந்த ஆணிடம் தகராறு செய்வது, இருவரையுமே அடிப்பது போன்ற செயல்களை செய்து வருகின்றன. மேலும் முரண்நகையாக இதே இயக்கத்தவர்கள் முஸ்லிம் பெண்களை போராட்டக்களத்திற்கு கொண்டு வருகிறார்கள். இந்த அரசியலில் இது பெண்ணுரிமை சார்ந்த விஷயமல்ல. மாறாக கள போராட்டத்திற்கே உரிய பலத்தை காட்டும் நோக்கமே. இந்நிலையில் இவர்களின் பெண்கள் மீதான கண்காணிப்பு முழுக்க முழுக்க தனிநபர் உரிமையில் தலையிடுவதாகும். மேலும் குடும்பமாக கட்டமைக்கப்பட்டிருக்கிற இந்திய சமூகத்தில் குடும்பம் தான் ஆண் பெண் உறவை தீர்மானிக்கின்றது. உரிமையை கூட அது தான் தீர்மானிக்கிறது. அவ்வகையில் இது குடும்பத்தின் உரிமையில் மூன்றாவது சமூகம் தலையிடும் செயல்பாடும் கூட. மேலும் பெண்கள் தங்களை கவனிக்கவில்லை என்ற உளவியல் ஏக்கமும் இதற்கு ஒரு காரணம். எல்லா கலாசார காவலர்களும் பெண்களை குறிவைத்தே இயங்குகிறார்கள். அரசியல் செய்கிறார்கள். இரு மதங்கள் சார்ந்த இயக்கங்களில் எந்த கலாசார காவலரும் தன் இனத்தை சார்ந்த ஆண்களை கண்டுகொள்வதில்லை. மாறாக பாராட்டவே செய்கிறார்கள். இது முழுவதும் இந்திய சமூகத்தின் சாதிய ஆணாதிக்க மனோபாவமாகும். இந்திய சாதிய சமூகம் ஆணாதிக்க வெறியோடு தான் வரலாற்றில் கட்டமைக்கப்பட்டது. கல்வி ஆண்களுக்கானதாக மட்டுமே மாற்றப்பட்டது. மனுதர்மமும் அதைத்தான் வலியுறுத்தியது. இருபதாம் நூற்றாண்டில் தான் பெண்கள் தங்களின் சுயபிரக்ஞையை மீட்டெடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்தனர். அந்த போராட்டம் நீண்ட கால செயல்திட்டங்களை உள்ளடக்கி இருந்தது. அதன் விளைவு தான் தற்போதைய மாற்றங்கள்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் கலாசார காவலர்களின் செயல்பாடுகளும், ஆணாதிக்க வக்கிரர்களின் செயல்பாடும் நூலிழை வித்தியாசம் கொண்ட ஒன்று. அவர்கள் பெண்களை சதையாக கருதி வக்கிர செயல்களில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் புனிதமாக கருதி கலாசாரத்தை பாதுகாக்க முயல்கிறார்கள். மனித உடலை புனிதப்படுத்துவது ஓர் அதிகாரச்செயல்பாடே. அதுவும் பெண்ணின் உடலை புனிதப்படுத்துவது ஓர் எதேச்சதிகாரம். இந்நிலையில் சமீபகாலமாக இருதரப்பிலும் அதிகரித்து வரும் கலாசார காவல் செயல்பாடுகள் சமூகங்களிடையே தேவையற்ற மோதல்களையும், பதட்டத்தையும் உருவாக்குகின்றன. தர்மபுரி சம்பவம் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. மேற்கு வங்கத்தில் நடந்த கொடூரம் இந்தியா முழுமைக்குமான பாடமாக இருக்கும் தருணத்தில் தமிழ்நாட்டு ஜனநாயக சக்திகள், பெண்ணிய இயக்கங்கள் இதில் கவனம் செலுத்தி இம்மாதிரியான அவலங்களுக்கு முடிவு கட்ட வேண்டும். எதிர்காலத்தில் அதன் விளைவுகள் இன்னும் உக்கிரமாக போகலாம்.
No comments:
Post a Comment