காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Monday, February 17, 2014

குழந்தை உடலும் சமூக பண்பாடும் -குழந்தை திருமணங்களை முன்வைத்து




ஒரு குழந்தை எப்போது குழந்தையாக அறியப்படுகிறது? அது எப்போது தன்னை உணர்ந்து கொள்ள ஆரம்பிக்கிறது. அதன் உளவியல் என்ன? பிறக்கும் குழந்தையின் மீது அதன் அடையாளம் எப்போது வரையப்படுகிறது? அது இயல்பான ஒன்றா? அல்லது திணிக்கப்படும் ஒன்றா? குழந்தைக்கும், பருவமடைவதற்குமான இடைவெளியில் குழந்தையின் நடத்தை மற்றும் சிந்தனை எவ்வாறு ஒருங்கிணைகிறது? அந்த குறிப்பிட்ட இடைவெளியில் சிந்தனையின் பங்கு என்ன? உடல் கூறு என்பது அநாத்மமான ஒன்றா? உளவியலுக்கும் உடலியலுக்குமான தொடர்பு என்ன? என்பது போன்ற கேள்விகள் குழந்தை உடல்,உளவியல் மற்றும் சமூக பண்பாடு குறித்து ஆராயும் போது நம்முன் எழுகின்றன. மனித நாகரீகத்தின் உருவாக்கம் சார்ந்தே இதன் பரிணாமத்தை நாம் ஆராய வேண்டியதிருக்கிறது.

மனித சமூக உருவாக்கத்தின் தொடர்ச்சியில் புராதன கூட்டுக்குழு சமூகத்தில் குழந்தை என்பதற்கும், வயது வந்தோர் என்பதற்குமான இடைவெளி மிகக்குறுகியதாக இருந்திருக்கிறது. அதற்கு பிந்தைய காட்டுமிராண்டிகள் (Barbarian)காலகட்டத்தில் அதன் இடைவெளி சற்று அதிகரித்திருக்கிறது. அதற்கும் பிந்தைய சமூக வளர்ச்சி கட்டத்தில் அதன் இடைவெளியின் அகலம் சற்று விரிவடைந்திருக்கலாம். பின்னர் நகரும் இனக்குழுக்களாக (Mobile tribe) மேய்ச்சல் குழுக்களாக பரிணமித்த சமூகத்தில் குழந்தை குறித்த பார்வை, இருப்பு சற்று மாறியிருக்கிறது. அந்த கட்டத்தில் அப்படியான சமூகத்தில் குடும்பம் என்ற சமூக நிறுவனம் உருவாகி இருக்கவில்லை. சற்று பின்னர் இனக்குழு சமூகம் நிலையான இருப்பிடம் கொண்ட, நகரா இனக்குழுவாக உருவான காலத்தில் தான் மனித இனத்தின் கலாசாரம் , குடும்பம், இயற்கை சார்ந்த அச்ச உணர்வு போன்றவை உருவாயின.

மனித நாகரீக உருவாக்கத்தில் இனக்குழு வாழ்வியல் மிக முக்கியமானது.. அதன் இயங்கியலில் இருந்து தான் எல்லா கிளைவுறுதலும் (branch out)நடந்திருக்கின்றது. உலகில் எல்லா பிரதேசங்களிலும் இந்த இனக்குழு வாழ்க்கை முறை இருந்திருப்பதாக தான் வரலாறு குறிப்பிடுகிறது. ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளில் இந்த வாழ்வியல் முறை இருந்திருக்கிறது... அதில் ஆசியா மற்றும் ஆப்ரிக்கா இனக்குழுக்களின் வரலாறு பல பொருளியல் மற்றும் கலாசார கூறுகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது... இந்தியாவில் ஆரியமும் , திராவிடமும் அடிப்படையில் மேய்ச்சல் இனக்குழுக்கள் தான். இதில் ஆரியம் மத்திய ஆசியாவின் உயர்தர மேய்ச்சல் இனக்குழு வகைமையை சார்ந்தது. அன்றைய காலகட்டத்தில் நாடோடியாக இயங்கிய இனக்குழுக்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட தூரத்தில் தங்களை இருப்பிடப்படுத்திக்கொள்ள தீர்மானித்தன.. அதன் பின் அவை அந்த குறிப்பிட இடத்தை நோக்கி தான் தங்கள் மேய்ச்சல் வாழ்வை அமைத்துக்கொண்டன. அதற்கு பிறகு தான் எதார்த்த இனக்குழு வாழ்க்கை முறை தொடங்குகிறது எனலாம். இனக்குழுக்களின் வாழ்க்கை முறையில் பிரதான உழைப்பு பிரிவினை (Divison of Labor)ஏற்பட்ட பிறகு அது முற்றிலுமாக தந்தை வழி சமூகமாக மாற்றம் பெறுகிறது. தந்தை வழியாக ஆண் ஒரு குடும்பத்தில் முன்னிலைப்படும் போதே அங்கு பெண் இரண்டாம் நிலைக்கு உட்படுகிறாள்... வீடு சார்ந்த வாழ்க்கை முறையில் வீடு என்பது பெண்ணுக்கு நிரந்தர இருப்பிடமாக, உழைப்பு கூடமாக மாறுகிறது. ஆக பெண்ணை வீடு சார்ந்து கட்டமைப்பது குறிப்பிட்ட இனக்குழுவிற்கு இருப்பு சார்ந்த பிரச்சினையாக மாறுகிறது.. ஆக வீடு என்பது குடும்பமாக பரிணமிக்கும் போது வீடு என்ற கட்டமைப்பு தகர்க்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது.... வீடு என்கிற போது அதன் காவலாளியாக, அதன் காப்பாளராக பெண் இருக்கிறாள். அதுவே குடும்பம், சமூகம், இனம் என்பதாக பரிணாமம் கொள்கிறது. இந்த தொடர்ச்சியான பரிணாம கட்டமைப்பு பின்னோக்கி செல்வதையோ அல்லது தகர்வதையோ தந்தை வழி சமூகம் ஒருபோதும்  அனுமதிக்காது. ஆக மேற்கண்ட சமூக நிர்பந்தங்கள், குடும்ப கட்டமைப்புகள் பெண்ணை கட்டுப்பெட்டியாக, ஒடுக்கும் ஜீவியாக மாற்றுவதை அனுமதிக்கின்றன. அங்கீகரிக்கின்றன. அதன் உடல் மற்றும் உளவியல் ரீதியான வடிவமே பெண் பருவமடைவதற்கு முன்போ அல்லது பருவமடைந்த உடனோ திருமணம் செய்து வைப்பது. அம்மாதிரியான குடும்ப அமைப்பில் சமூக பொறுப்புணர்வு (Social commitment) என்பது கிடையாது. ஆனால் அக்கறை என்பது இருந்திருக்கலாம். குடும்பத்தை மையமாக கொண்ட பொறுப்புணர்வு என்பதன் நீட்சியே நவீன சமூக பொருளாதார வளர்ச்சி முறையின் அடிப்படை. இது முழுமையாக இல்லாவிட்டாலும் அதன் பகுதியாக குடும்பம் இருக்கிறது. இதன் தொடர்ச்சியில் பண்டைய இனக்குழு சமூகத்தின் எச்சம் மற்றும் மரபார்ந்த தொடர்ச்சி தற்காலத்திலும் நிலவுவது அது முந்தைய சமூக கட்டமைப்பை குலைக்க விரும்பவில்லை அல்லது தொடர விரும்புகிறது என்று அர்த்தம்.



குழந்தை குறித்த கருத்தாக்கம் அதன் திருமணம் குறித்து நாம் விவரிக்கும் முன் பண்பாடு அல்லது கலாசாரம் (Culture)என்ற சொல்லாடல் குறித்து நாம் பார்க்க வேண்டியதிருக்கிறது. இந்த சொல்லாடல் cultura என்ற லத்தீன் சொல்லிலிருந்து வந்தது. ஆரம்ப காலகட்டத்தில் இது விவசாயத்தை, நிலத்தை, உழுதலை குறித்தது.. இந்த சொல்லின் வேரிலிருந்து தான் விவசாயத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளும் culture என்ற பின்னொட்டை அடிப்படையாகக்கொண்டு பெயரிடப்பட்டன. இதன் தொடர்ச்சியும், பிரதிபலிப்பும் நிலத்தோடு தொடர்புடைய மனிதனோடும் இயைந்தது. காலத்தின் நகர்வில் இது மனித நடத்தைகள், சிந்தனைகள் அதன் அடிப்படையில் எழுந்த பழக்கங்கள், சமூக நடைமுறை ஆகியவற்றை குறிக்க பயன்படுத்தப்பட்டது. பிந்தைய கட்டத்தில் இது ஆன்மாவின் அல்லது மனதின் பண்படுத்தல் (Culture of soul or mind)என அறியப்பட்டது. மேலும் 18 ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவில் உருவாகிய  மறுமலர்ச்சிகால சிந்தனை மரபு culture என்ற சொல்லாடலை அதிகம் முன்னெடுத்தது. அதை சமூக மற்றும் அரசியல் தளங்களில் பிரதிநிதித்துவப்படுத்தியது. நிலத்தை உழுதல், பண்படுத்துதல் போன்ற விவசாய செயல்பாடுகள் மனிதனின் நேரடி செயல்முறைகளை பிரதிபலிக்கின்றன. இவை ஒவ்வொரு வட்டாரத்திற்கும் மாறுபடுகின்றன. எல்லா விவசாயமும் எல்லா பிரதேசங்களிலும் பொருந்துவதில்லை. அது மண் சார்ந்து வேறுபடுகிறது. ஆக மனித மனங்களும், சமூக நடவடிக்கைகளும் இதனை ஒட்டி மாறுபடுகின்றன. கலாசாரம் அல்லது பண்பாடு என்பது விவசாயம் மற்றும் மண் சார்ந்து பிரதிபலித்து உருவாகும் நிலையில் மனித நடவடிக்கைகளும் வட்டாரம் சார்ந்த ஒன்றாக மாறுகின்றன. 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய மறுமலர்ச்சி சிந்தனையாளர்கள் இதனை அதிகம் முன்னெடுத்தார்கள். குறிப்பாக இம்மானுவேல் காண்ட், ரூசோ போன்றவர்கள் கலாசாரம் மற்றும் பயிரிடுதல் ஆகியவற்றிற்கிடையேயான உறவுமுறையை வெளிப்படுத்தினர். ஆக பயிரிடும் முறை மற்றும் மண் சார்ந்த விவசாயம் மாறுபடும் நிலையில் அதன் கலாசாரமும் வேறுபடுகிறது. ஒரே மொழி சார்ந்த குறிப்பிட்ட தூர இடைவெளியிலான பிரதேசங்கள் கலாசார நடவடிக்கைகளில் மாறுபடும் தன்மையை நாம் மேற்கண்டவற்றின் அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டில் இம்மாதிரியான மாறுபட்ட கலாசார கூறுகள் அதிகம் இருக்கின்றன. ஒரே மாவட்டத்திற்குள்ளும் நாம் இதனை காண முடியும். ஆக மண் சார்ந்த கலாசாரமும் குழந்தையை, பெண்ணின் சமூக தகுதியை தீர்மானிப்பதில் முக்கிய இடத்தை வகிக்கின்றன.

கலாசாரம் அல்லது பண்பாடு மண்ணின் மீதான அடையாளமாக உருப்பெறும் தருணத்தில் அது குடும்ப கட்டமைப்பிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குடும்பம் என்ற நிறுவனம் பெண்ணின் இயக்கத்தை, உடல் கட்டமைப்பை தீர்மானிக்கும் பொழுது அதற்கு தன்னை இருப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய தேவையையும் அதன் மூலம் எடுத்துக்கொள்கிறது. குழந்தை என்ற கருத்தாக்கம் உடல்ரீதியான பருவமடைதல் (Physical maturity)மூலம் முடிவுக்கு வந்து விடுகிறது என்று சில கலாசார சமூகங்கள் நம்புகின்றன. உடல்ரீதியான பருவ கட்டமைப்புகள் உலகம் முழுவதும் ஒரே மாதிரி இல்லை. நாகரீகங்களை பொறுத்து, தேசங்களை பொறுத்து, கண்டங்களை தாண்டி இவை வேறுபடுகின்றன. இதனை மிக முக்கிய அடிப்படையாக வைத்து உலகில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு மாதிரியான சட்டப்படியான வயது வந்தோர் (Majority age)வரம்பை நிர்ணயித்து வைத்திருக்கின்றன. இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்த நாடுகளின் சமூக, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சியை பொறுத்து மாறி இருக்கின்றன. மாறிவரும் உணவு பண்பாட்டு பழக்கங்கள் மனித உடலை வெகுவிரைவாக பருவம் கொள்ள வைக்கின்றன. ஆனால் நவீன விஞ்ஞானம் உடல் வயது மற்றும் மன வயது என்று மனித நிலையை பிரித்தறிகிறது. ஒரு குழந்தை உடல்ரீதியாக பருவமடைந்தாலும் அதன் மனவயது உடனடியாக பருவமடைந்து விடுவதில்லை. அது காலத்தொடர்ச்சியிலும், சமூகத்தோடு அவன் கொள்ளும் உறவு முறையாலும் வளர்ச்சியடைகிறது. இந்நிலையில் இரண்டாம் உலகப்போருக்கு பிந்தையகால கட்டத்தில் காலனியத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகளில் குழந்தை, பெண் குறித்த புதிய புரிதல்கள் மற்றும் பார்வைகள் ஏற்பட்டன. அது  சார்பான மரபான உரையாடல்களை ஊடறுத்துக்கொண்டு அந்த கேள்விகள் எழுந்தன. ஆக குழந்தையை குழந்தையாக எப்படி நிர்ணயிப்பது? நாடுகளில் சட்டரீதியான வயதை எப்படி தீர்மானிப்பது? போன்ற கேள்விகள் அதனூடே எழுந்தன. குழந்தை விஷயத்தில் உலகம் பிரதேச வேறுபாடுகளை கொண்டிருந்த போது அறுபதுகளில் குழந்தையின் அல்லது குழந்தை பருவத்தை கடந்த ஒருவனின் எதார்த்த வயதை கண்டறியும் தடவியல் தொழில்நுட்பம் உருவானது.. இது அதுவரையிலான குழந்தை குறித்த லௌகீக சொற்மனங்களை கேள்விக்குள்ளாக்கியது... மேலும் இது குறித்த உரையாடலை, கேள்விகளை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தியது. இதன் தொடர்ச்சியில் உலகம் முழுவதும் குழந்தைகள் மீதான ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் குறித்த விழிப்பும், போராட்ட உணர்வும் மேலெழுந்தன. இதனைத்தொடர்ந்து ஐ.நா குழந்தைகள் உரிமை ஆணையம் குழந்தை குறித்த தெளிவான வரையறை, அவர்களுக்கான உரிமைகள் போன்றவற்றை வரையறை செய்து அறிவித்தது. இதை குழந்தைகள் உரிமைகள் சாசனம் என்பதாகவும் நிர்ணயம் செய்தது. இதில் உலகம் முழுவதும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் குழந்தைகளாக கருதப்பட்டு அவர்களுக்கான பாதுகாப்பு உரிமைகள் வரையறுக்கப்பட்டன. மொத்தம் 54 அம்சங்கள் அதில் சேர்க்கப்பட்டன. முக்கியமாக குழந்தைகளுக்கு வாழும் உரிமை, அவர்களுக்கு குடும்ப கட்டமைப்பில் , கலாசாரத்தில் நீடிக்கும் உரிமை போன்றவைகள் வழங்கப்பட்டன. மேலும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை தடைசெய்தல், அவர்கள் மீதான வன்முறைகள் மற்றும் அவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதை தடை செய்தல் போன்ற அம்சங்களும் சேர்க்கப்பட்டன. 1989 ல் வரையறுக்கப்பட்ட இந்த மரபு சாசனம் பெரும்பாலான நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஆனால் பெரும்பாலான நாடுகள் சில வரையறைகளை மீறி வருகின்றன. உதாரணமாக 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மரண தண்டனை அளிக்கக்கூடாது என்ற விதிமுறையை சில நாடுகள் மீறி வருகின்றன. மேலும்  சட்டப்படியான வயதை 18 ஆக சர்வதேச சமூகம் நிர்ணயிக்க சாதகமான கருத்தை எட்டிய அம்சம் என்பது கல்வி வயது (Age of education)தான். காரணம் உலகம் முழுவதும் பள்ளி இறுதி படிப்பிற்கான வயது என்பது 17 அல்லது 18 ஆக இருக்கிறது. தடவியல் தொழில்நுட்பத்தில் எந்த உலக மனிதனின் வயதையும் நாம் துல்லியமாக கணக்கிட இயலும்...இனக்குழு சமூக இயங்கியலில் இருந்து உலகம் நாகரீக சமவெளி சமூகமாக மாறி விட்டது. எப்போதுமே முந்தைய சமூக கட்டமைப்பிலிருந்து இன்னொரு கட்டமைப்பிற்கு மாறும் சமூகத்தில் அதன் முந்தைய கூறுகள் எச்சமாக தொடர்வது இயல்பே. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மரபுகள், எச்சங்கள் இன்னும் சில சமூகங்களில் தொடர்வது அதனை வரலாற்றுக்கு முந்தைய பயணத்தை நோக்கி நகர்த்துவது தான்... ஆப்ரிக்கா மற்றும் பின்தங்கிய ஆசிய நாடுகளில் இன்னும் அதன் தாக்கம் கடுமையாக இருக்கிறது.சமூகத்தை அதன் வளர்ச்சி நிலைகளை முன்னோக்கி நகர்த்துவதற்கான செயல்முறைகள் அவசியம்.

சாதிய சமூகமான கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்திய சமூகத்தில் சாதி என்பது இனக்குழு சமூகத்தின் பரிணாம வளர்ச்சியே என்கிறார் இந்திய வரலாற்றாசிரியர் டி.டி.கோசாம்பி. இனக்குழு சமூகங்கள் தொழில்பிரிவினைகளின்  படி சாதிய சமூகமாக கட்டமைக்கப்பட்ட இந்திய சமூகத்தில் சமூகத்தின் அலகுகள் மூன்றுவிதமாக இருந்திருக்கின்றன. 1. வர்ணம் 2. குலம் 3. கோத்ரா. இதில் வர்ணம் என்பது சாதியையும், குலம் என்பது குடும்பத்தையும், கோத்ரா என்பது குடும்ப பாரம்பரியத்தையும் குறிக்கிறது. இனக்குழுக்களின் எண்ணிக்கை பெருகி, அதுவே சிதறலாகி மற்றொரு சமூக கட்டமைப்பை ஏற்படுத்திய தருணத்தில் குழந்தை குறித்த கருத்தாக்கம் இன்னொரு வடிவத்தை எட்டியது. இங்கு பாரம்பரிய  சொத்துரிமை குறித்த பிரச்சினை எழுகிறது. சாதிய சமூகத்தில் பெண்களின் சொத்துரிமை மறுக்கப்பட்டது. ஆண் குழந்தைகள் மட்டுமே அதற்கு உரியதாக இருந்தன. இந்நிலையில் பண்டைய சாதிய சமூகங்களில் திருமணங்கள் சொத்துக்களின் பாத்தியதைக்காக நெருங்கிய உறவுகளில் அல்லது ஒரே கோத்திரத்தில் நடந்தேறின. மேலும் கோத்ர உறவு முறையை வலுவாக வைத்திருக்கவும், ஆண் இறப்பதற்கு முன் பேரக்குழந்தைகளை உருவாக்கவும் இளம்வயது திருமணங்கள் நடைபெற்றன. இந்த திருமண நடைமுறையில் சொத்துக்களின் பாரம்பரியம் காப்பற்றப்பட்டன. மேலும் பெண்குழந்தை பருவமடையும் முன்பு திருமணம் செய்து வைக்கப்படும் நடைமுறையும் இனக்குழு மற்றும் சாதிய சமூகங்களில் வழக்கில் இருந்தன. திருமணம் செய்து வைக்கப்படும் கட்டத்தில் அந்த பெண் பருவமடையும் வரை தாய்வீட்டிலே இருப்பாள். பருவமடைந்த கட்டத்தில் அவள் கணவனின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவாள். மேலும் திருமணத்திற்கு பிறகு பெண்கள் கருவுற்றால் அவர்கள் மீது தனிக்கவனம் செலுத்தப்பட்டது. வருங்கால குழந்தைக்கு விருந்தினர் அந்தஸ்து அளிக்கப்பட்டது. அவள் முழு ஓய்வுக்கு அனுப்பப்பட்டாள். அவளின் ஒவ்வொரு அசைவுகளுமே கவனமாக கண்காணிக்கப்பட்டன. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான சடங்குகள் செய்யப்பட்டன. இந்நிலையில் அன்றைய காலகட்டத்தில் இளவயது திருமணங்கள் சமூக சடங்குகளின் , தங்கள் குல தெய்வங்களின் பகுதியாக கூட பார்க்கப்பட்டன. இதன் தொடர்ச்சியில் இந்திய சமூகங்களில் சாதியம் சார்ந்த பல சடங்குகள், சம்பிரதாயங்கள் ஏற்பட்டன. இந்நிலையில் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியில் 1929 ல் குழந்தை திருமண தடைச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும் இனக்குழு மற்றும் பண்டைய சாதிய சமூக மரபுகள் இன்னும் பல மாநிலங்களில் தொடர்கின்றன. ஹரியானா, பீகார், உத்திரபிரதேசம், ஆந்திரா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்கள் இதில் முன்னணியில் இருக்கின்றன. ஐ.நாவின் யுனிசெப் புள்ளிவிபரப்படி இந்தியாவில் 47 சதவீத பேர் குழந்தை திருமணத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலும் பெண் குழந்தைகள் இவ்வகையான திருமண நிர்பந்தங்களுக்கு ஆளாகின்றனர். அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மேலும் இந்திய மரபு சார்ந்த எச்சங்களாலும், மத அடிப்படை சார்ந்த பரம்பரை பார்வையாலும் இந்திய முஸ்லிம் பெண்களும் குழந்தை திருமணத்தால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவர்களின் இளவயது திருமணம் இயல்பான கல்வி உரிமையை மறுக்கிறது. இன்றைய இந்தியாவில் முஸ்லிம் பெண்களின் கல்வியறிவு மிக பலவீனமாக இருப்பதாக நிறைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அரபு நாட்டு பெண்களை விட மிகவும் பின்தங்கி இருக்கின்றனர். ஆக தொடர்ச்சியான சமூக பொருளாதார வளர்ச்சியே இதனை மாற்ற உதவும். ஆக குழந்தைகளை அவர்களின் இயல்பான போக்கில் அவர்களுக்கான பருவகால வாழ்க்கை சுதந்திரம் வேண்டும். இதுவே நவீன வாழ்க்கை முறையும், மாறி வரும் சமூக பொருளாயத கட்டமைப்பும் எதிர்கொள்ளும் சவால்.  இதனை தாண்டுவது மிகவும் அவசியம்.

No comments: