ராஜீவ் காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரணதண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மிக தாமதமாக தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் ராஜீவ் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்டு இவர்கள் 23 வருட காலம் சிறையில் கழித்து விட்டனர். கரும்பிலிருந்து உறிஞ்சப்படும் சாற்றைப்போல் சிறைவாசம் இவர்களின் உடலை உறிஞ்சி இருக்கிறது. இதில் மிச்சமிருப்பவை சக்கைகள் தான். சந்தேகத்தின் பேரில் குற்றத்தை மனிதர்கள் மீது சாத்தும் சட்ட அமைப்பு அகோரமானது.
ராஜீவ் காந்தி 1991 ல் மே 21 ல் ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். மத்திய சிறப்பு புலனாய்வு துறை இதனை விசாரணை செய்து விடுதலை நாளிதழில் வேலை செய்து கொண்டிருந்த பேரறிவாளனை விசாரணைக்காக சி.பி.ஐ அலுவலகத்தில் அழைத்து சென்றனர். பின்னர் இவரின் எலக்ட்ராணிக்ஸ் படிப்பை வைத்து நீதான் இந்த படுகொலைக்கு பேட்டரி வாங்கி கொடுத்தாய் என்பதாக குற்றம் சுமத்தி அவரை அடித்து கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினர். இந்த கட்டாய ஒப்புதல் வாக்குமூலம் காரணமாக இவரும் ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டார். இதன் பின்னர் சிறை, நீதிமன்றம் என இவர்களின் வாழ்க்கை 23 வருடங்களாக அல்லாடியது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் இவர்கள் மூவருக்கும் குற்றம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று கூறி இருபது ஆண்டுகளுக்கு முன்னர் மரண தண்டனை வழங்கியது. இதன் தொடர்ச்சியில் இத்தனை கால பல்வேறு தரப்பினரின் நீதி போராட்டங்களின் பயனாக இன்றக்கு இந்த மாற்று தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.
ராஜீவ் கொலையில் ஏற்பட்ட நியாயமான, பகீரத சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. உண்மையில் அவரை விடுதலைப்புலிகள் தான் கொன்றார்களா? அல்லது சர்வதேச கூட்டுச்சதியின் மூலம் விடுதலைப்புலிகளை சர்வதேச குழுக்கள் தான் பயன்படுத்திக்கொண்டதா? விடுதலைப்புலி இயக்கத்திலிருந்து வெளியேறியவர்களை வைத்து இந்த கொலை நடந்ததா? என்பது தான் அந்த கேள்வி. காரணம் கொலை நடந்த அன்று சுப்பிரமணிய சுவாமி மற்றும் சந்திராசாமி ஆகியோரின் செயல்பாடுகள், நடமாட்டம் ஆகியவை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தின. மேலும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சிலரின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் போன்றவையும் கேள்விக்குள்ளாகுகின்றன. ஆனால் சிபிஐ இவர்களை தகுந்த முறையில் விசாரிக்க தவறி விட்டது. இந்நிலையில் ஜெயின் கமிஷன் விசாரணையில் சுப்பிரமணிய சுவாமி திணறியதும், பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் நழுவியதும் இங்கு கவனிக்கத்தக்கது. ராஜீவ் படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்படும் முன்பு டெல்லியில் இருந்த சுப்பிரமணியசுவாமிக்கு இந்த படுகொலை செய்தி எப்படி தெரிந்தது என்பது தான் இதில் மிக முக்கிய கேள்வி..மேலும் சந்திராசாமி வீடு புரோக்கரான பெங்களூர் ரங்கராத்திடம் சிவராசன் மற்றும் சுபா ஆகியோர் தங்குவதற்கு வீடு ஏற்பாடு செய்ய சொன்னதும் இந்த வழக்கில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இவற்றை சிபிஐ மற்றும் பிற விசாரணை அமைப்புகள் கவனிக்க தவறின. அவர்களை கண்டுகொள்ளவில்லை. மாறாக ரங்கநாத் சந்திராசாமி பெயரை குறிப்பிட்ட போது அவரை அடித்து உதைத்து சாமியின் பெயரை குறிப்பிடக்கூடாது என்றனர் விசாரணை அதிகாரிகள். குறிப்பாக சந்திராசாமியிடம் போதிய விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. மொத்த கேள்விகளும், மர்மங்களும் இன்னும் ராஜீவின் ஆன்மாவை குறிப்படுத்துகின்றன. இந்நிலையில் அன்றைய காலகட்டத்திலேயே இம்மாதிரியான சந்தேகங்களையும், மர்ம முடிச்சுகளையும் வெளிக்கொணர்ந்த திருச்சி மா. வேலுச்சாமியை தமிழ்நாட்டு தலைவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. மாறாக நெடுமாறன் மற்றும் வைகோ போன்றவர்கள் தங்களின் புலி பிம்பத்தை உயர்த்திக்கொள்வதற்காக விடுதலைப்புலிகள் தான் இதை செய்தார்கள் என்று மீண்டும் மீண்டும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தனர். இந்த கொலை வழக்கில் மூவர் மீதான கறை அதிக நாட்கள் படிந்திருக்க இம்மாதிரியான பேச்சுகளும் ஒரு காரணம். உலகில் நடந்த அரசியல் படுகொலைகளில் விடைகாண இயலாத மர்மங்களாக இன்னும் ராஜீவ் படுகொலை இருக்கிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் காலங்கடந்து அவர்களின் மரணத்தை காப்பாற்றி இருப்பது ஆறுதலான ஒன்று.
மூன்று பேரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மரண தண்டனை குறித்த புரிதல் மற்றும் வரலாற்று ஆய்வில் நாம் கவனம் செலுத்த வேண்டியதிருக்கிறது. உலக வரலாற்றில் மனிதர்கள் தோன்றிய காலம் முதலே குற்றங்களும் தோன்றி விட்டன. புராதன கூட்டுக்குழுவாக வாழ்ந்த காலத்தில் மனிதர்கள் தங்களுக்குள் உணவுப்பங்கீட்டிற்காக சண்டையிட்டுக்கொண்டனர். பின்னர் அது பரிணாமம் கொண்டு வேட்டை, இருப்பிடம் இவற்றின் இயங்குதலுக்காக மாறிப்போனது. இந்நிலையில் மனிதர்கள் களம் மாறினார்கள். அவர்களுக்குள் உராய்வுகள், மோதல்கள் ஏற்பட்டன. புராணங்களும், தொன்மங்களும் பல மனித குற்றங்கள் குறித்து பேசுகின்றன. ஆபேல் காயின் மற்றும் கிரேக்க அரசர்களின் கதைகள் இவற்றின் குறிப்பிடத்தக்கவை.
மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சியில் குற்றங்கள் என்பவை அந்த சமூகத்திலிருந்து உருவாகும் சூழ்நிலை காரணி தான். காரணம் சூழ்நிலையின் கைதி தான் மனிதன். இவை பரஸ்பரம் சங்கிலித்தொடர் போன்ற பிணைப்பைக்கொண்டிருக்கின்றன. குற்றம் செய்பவனின் மீது உளவியல், சமூகவியல், மானுடவியல் போன்ற அனைத்துமே தாக்கம் செலுத்துகின்றன. இங்கு குற்றவாளிகள் என்பவர்கள் இயல்பாக உருவாவதில்லை. குறிப்பாக பிறப்பின் அடிப்படையில் அது நிகழ்வதில்லை. பிறக்கும் குழந்தைகள் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. மாறாக சமூகமும் அதனோடு இயைந்த சூழலும் தான் அவர்களை குற்றவாளி ஆக்குகிறது. மேலும் உளவியல் காரணியும் இதில் உள்ளடங்கி இருக்கிறது. உளவியல் என்பது சமூகத்தின் கூட்டு மனத்திலிருந்தோ, அல்லது பொது அறச்செயல்பாட்டிலிருந்தோ தொடக்கம் பெறுகிறது. ஆக இந்த அம்சங்கள் காரணமாக ஒருவர் குற்றச்செயலில் ஈடுபடும் போது அவரின் மீது இந்த குற்றம் என்ற அடையாளம் விழுந்து விடுகிறது. இன்றைய உலகில் குற்றங்கள் என்பதன் மீதான விசாரணைகள் அனைத்தும் புறவய சாட்சியங்கள் அடிப்படையிலே நடைபெறுகின்றன. இங்கு நிரூபணம், குற்றவாளி, நிரபராதி என்ற மூன்று சொல்லாடல்களும் ஒன்றை ஒன்று தொடர்பு கொண்டதாக மாறுகின்றன. பல்வேறு தருணங்களில் குற்றங்கள் மறைபொருளாக இருப்பதுண்டு.
குற்றவியலின் வரலாற்றில் மனிதனின் குற்றச்செயல்பாடுகள் நாடோடி சமூகத்திலிருந்து நிரந்த வசிப்பிடமாக சமூகம் உருவாகிய தருணத்தில் ஏற்பட்டன. முதலில் சிறைச்சாலைகள் இல்லை. அன்றைய சிறை முறையானது சக மனிதனின் கழிவு வெளியேற்ற தடை முறையில் இருந்தது. மலமும், ஜலமும் அவன் கழிக்க மறுக்கப்பட்டான் அல்லது ஒரே இடத்தில் நகர முடியாமல் கழிக்க அனுமதிக்கப்பட்டான். இன்றைய கால கட்டத்தில் கூட ஆட்சியாளர்களால் பழிவாங்கப்படும் அரசியல் கைதிகளுக்கு மேற்கண்ட விதமான தண்டனையை அதிகாரபூர்வமற்ற முறையில் காவல்துறை அளிக்கிறது. இதன் தொடர்ச்சியில் உலகில் ரோமானியர்கள் தான் முதல் சிறைச்சாலையை அமைத்திருக்கிறார்கள். வீடுகளே சிறைச்சாலைகளாக இருந்து சிறிய உலோக கூண்டுகளுக்குள் குற்றவாளிகள் அடைக்கப்பட்டார்கள். இது அரசு என்ற நிறுவனம் சமூக நிறுவனமாக உருவான தருணத்தில் ஏற்பட்டது. சமூகத்தின் ஒரு பகுதி குற்றவாளிகளாகவே இருந்தது. உலகில் மனித இனம் இயல்பான மற்றும் இயல்பற்ற, அசாதாரண முறைகளில் தன் இழப்பை தேடிக்கொள்கிறது. இந்நிலையில் குற்றச்செயல்பாடுகள் காரணமாக அவனின் உயிர் பறிக்கப்படும் போது தொடர்ச்சியான கட்டத்தில் மனித இனத்தின் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது. வன விலங்குகளின் பல்லுயிர் தன்மையை போன்றே மனித இனத்தின் பரவலாக்கத்திற்கும் மரண தண்டனை பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. சமூகத்தின் ஒழுக்கம் மற்றும் பிற அற மதிப்பீடுகள் சார்ந்த காரணிகள் இந்த தண்டனை முறையை நியாயப்படுத்துகின்றன. எல்லா மதிப்பீடுகளுமே ஒரு கட்டத்தில் மாற்றம் பெறுபவை தான். பழிவாங்கல் மனம் ஏற்படுத்தும் உச்சம் மரண தண்டனை சார்ந்த கருத்துக்கு வலுசேர்க்கிறது. சகமனிதனால் மற்றொரு மனிதனுக்கு ஏற்படும் பாதிப்பு அவனை இல்லாமல் செய்ய துடிக்கிறது. இங்கு பாதிப்பிற்கான நிவாரணமே குற்றவாளியின் மரணம் என்பதாகி விடுகிறது. இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று ஒரே இனத்தை சார்ந்த மிருகங்கள் மற்றொன்றை கொல்வதில்லை. உதாரணமாக ஒரு நாய் மற்றொரு நாயை கொல்வதில்லை. காகம் மற்றொரு காகத்தை கொல்வதில்லை. விதிவிலக்கான தருணங்களில் மட்டுமே இது நிகழ்கிறது. பிணந்திண்ணி கழுகுகளிலிருந்து மனிதன் பிணத்தை புதைக்கவோ அல்லது எரிக்கவோ கற்றுக்கொண்ட தருணத்திலிருந்து மரண தண்டனை என்பது சட்டவடிவம் பெற்று விட்டது.
இன்றைய உலகில் 110 நாடுகள் அதாவது உலகில் பெரும்பாலான நாடுகள் மரணதண்டனையை ஒழித்து விட்டன. அரபு நாடுகள் தவிர மீதமுள்ள நாடுகள் அது பற்றி பரிசீலித்து வருகின்றன. அவ்வாறு மரண தண்டனை இல்லாத நாடுகளில் எல்லாம் மற்ற நாடுகளை விட குற்றங்கள் அதிகரித்து விடவில்லை. அங்கெல்லாம் குற்றங்கள் இயல்பாகவும், இயல்பற்றும் இருக்கின்றன. இருக்கின்ற அமைப்பை மாற்றுவதற்கு , அதுவும் குறிப்பாக தொடர்ச்சியாக நிலபிரபுத்துவ மன்னராட்சி அமைப்பு மனோபாவத்துக்குள், அதன் எச்சங்களை கொண்ட இந்திய சமூகத்தில் மரண தண்டனை வேண்டும் என்பதே வெகுஜன உளவியலாக இருக்கிறது. இது மாறுவதற்கு இன்னும் சில காலங்கள் ஆகலாம். அதுவரை இது பற்றிய தொடர்ச்சியான உரையாடல்கள் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கான மாற்றுத்தண்டனை என்ன என்பதும் தெளிவாக முன்வைக்கப்பட வேண்டும். மேலும் மூவரின் தண்டனைக்குறைப்பு மகிழ்ச்சி அளிப்பதுடன் தமிழக அரசு அவர்களின் ஆயுள் தண்டனையை ரத்து செய்து அவர்களின் சிறை உடலை விடுவிக்க முன்வர வேண்டும். இதுவே தமிழ்நாட்டில் நடந்த நீதிப்போராட்டத்த கிடைத்த உண்மையான வெற்றியாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment