காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Monday, March 10, 2014

பாராளுமன்ற ஜனநாயகமும் இந்தியாவும்



ஜனநாயகம் என்ற சொல்லாடல் ஒரு நாட்டில் அல்லது தேசிய இனத்தில் மக்களை குறிப்பதாகும். மக்கள் தங்களின் பிரதிநிதிகளை தங்களை ஆள்வதற்காக தேர்ந்தெடுக்கிறார்கள். அதன் மூலம் அந்த பிரதிநிதிகள் மக்களை ஆள்கிறார்கள். ஒருவகையில் இது சுய ஆளுகை தான். இது குறிப்பிட்ட கால அளவில் மாறுபடுகிறது. மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள். இதன் தொடர்ச்சியில் பாராளுமன்ற ஜனநாயகம் என்பது ஒரு நாட்டின் ஜனநாயக அரசாங்கத்தை அதிகார வர்க்கம் ஜனநாயக வடிவத்தில் ஆளுகை செலுத்துவது. மேலும் அதிகாரவர்க்கமும், சட்டமியற்றும் சபையும் பின்னிபிணைந்திருக்கிறது. பாராளுமன்ற முறையில் அதிகாரவர்க்க தலைமை என்பது அரசாங்க தலைமையிலிருந்து வித்தியாசப்பட்டது. இது அதிபர் முறைக்கு மாறுபட்டது.  பாராளுமன்ற ஜனநாயகத்தில் அரசியல் சட்டம் மைய அதிகாரத்தை கொண்டது. இதில் அரசாங்க தலைமை என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டது. பெரும்பான்மை அடிப்படையில் ஆளும் வர்க்கம் தீர்மானிக்கப்படுகிறது. இந்நிலையில் அரசாங்க தலைமை என்பது அதிகார வர்க்க தலைமையே. இவை சட்டமியற்று சபைக்கு அல்லது பாராளுமன்றத்தின் கேள்விக்கு உட்பட்டது. அதற்கு பதில் சொல்லும் கடமை இந்த அரசாங்கத்திற்கு இருக்கிறது.

பிரதமர் பதவியை உட் கொண்ட பாராளுமன்ற ஜனநாயக அமைப்பின்   தொடக்கம் என்பது 18 ஆம் நூற்றாண்டின் பிரிட்டனாகும். கி.பி 1714 ல் ஜெர்மானிய இளவரசர் ஜார்ஜ் லுத்விக் பிரிட்டானிய மன்னரை தூக்கி எறிய ஒப்புக்கொண்டார். இந்நிலையில் அரசர் முதலாம் ஜார்ஜ் கேபினட்டிற்கு தலைமை வகித்தது மட்டுமல்லாமல் அமைச்சர்களையும் தேர்ந்தெடுத்தார். தொடக்கத்தில் அவர் ஆங்கிலம் கற்றுக்கொள்ளவில்லை. இதனால் மூத்த அமைச்சருக்கு பொறுப்புகளை அளித்தார். அவரின் ஆட்சிகாலத்தில் பாராளுமன்றம் அரசை கட்டுப்படுத்துவதில் தீர்மானகரமான பங்கை செலுத்தியது. அதன் பிந்தைய கட்டத்தில் ஜனநாயக அரசை உருவாக்குவதற்கான தேவை அதிகரித்தது. இந்த தேவையானது மக்களிடமிருந்து எழுந்தது. இந்நிலையில் அவரின் ஆட்சி முடிவு காலத்தில் ராபர்ட் வால்போல் பாராளுமன்ற ஜனநாயக அடிப்படையிலான முதல் பிரதமராக பதவியேற்றார். மேலும் பாராளுமன்றம் மற்றும் பிரபுக்கள் சபை ஆகியவை ஏற்படுத்தப்பட்டன. அதே காலத்தில் ஸ்வீடனிலும் இந்த முறை ஏற்படுத்தப்பட்டது. இதுவே பிற காலனி நாடுகளில்  பாராளுமன்ற ஜனநாயக முறை ஏற்பட காரணமாக அமைந்தது.



இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு அரசியல் நிர்ணய சபையானது பிரிட்டன் பாராளுமன்ற வடிவத்தை சில திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டது. அதே பாராளுமன்றம், அதே அரசு , அதே நிர்வாக அமைப்பு முறையை இந்தியா ஏற்றுக்கொண்டது. இதனை ஒட்டிய அரசியல் சட்டதிட்டங்கள் வரையறுக்கப்பட்டு 1950 ஜனவரி 26 ல் இந்த பணி நிறைவுற்றது.  பின்னர் 1952 ல் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்குச்சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பெரும்பாலான வாக்காளர்கள் எழுதபடிக்க தெரியாதவர்களாக இருந்ததால்  சின்னம் முறை அமல்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒவ்வொரு சின்னம் ஒதுக்கப்பட்டு அந்த கட்சியின் வேட்பாளர் பெயருக்கு நேரே அந்த சின்னம் பொறிக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு வாக்காளரும் தங்களுக்கு பிடித்தமான வேட்பாளரின் கட்சி சின்னத்தின் மேலே அல்லது பெயரின் மேலே ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் முத்திரை இட வேண்டும். அதிக ஓட்டுகளை பெற்ற வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவர். இப்படியாக ஒவ்வொரு தொகுதியிலும் அதிக இடத்தை பெற்ற கட்சிகள் பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு ஆட்சியமைக்க அழைக்கப்படுகின்றன. பின்னர் இந்த ஆட்சியின் மீது உறுப்பினர்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் அவர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரலாம். அதில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மை அடிப்படையில் அந்த ஆட்சி நீடிக்கவோ அல்லது கவிழவோ செய்யும். உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தின் பலம் என்பது மக்கள் தான். காரணம் ஐந்து ஆண்டுகளில் ஓர் ஆட்சியை பிடிக்காவிட்டால் அவர்களால் தூக்கி எறியமுடியும். இங்கு சர்வாதிகார நிலைக்கு இடமில்லை. 1975 ல் இந்திரா காந்தி எமர்ஜென்சியை அமல்படுத்திய போது கடும் அதிருப்தியுற்ற மக்கள் அடுத்த தேர்தலில் அவரை தோற்கடித்தார்கள். பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையின் பலத்தில் இதுவும் ஒன்று.

 இந்திய பாராளுமன்ற ஜனநாயகத்தின் இந்த முறையானது அரசியல் சட்ட உருவாக்கத்தின் ஆரம்ப காலத்திலேயே விமர்சனத்திற்குள்ளானது. அதனை வடிவமைத்த அம்பேத்கார் இந்த முறை சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித பலனையும் அளிக்காது என்று குறிப்பிட்டார். அவர் அவ்வாறு குறிப்பிட்டு ஐம்பது ஆண்டுகள் ஆகியும் இன்னும் தற்போதைய தேர்தல் முறை பெரும் பலவீனமாகவே இருக்கிறது. ஒரு பிரதேசத்தில் குறிப்பிட்ட வாக்கு வங்கியை கொண்டிருக்கும் கட்சிகள் இந்த பெரும்பான்மை ஓட்டு என்ற முறையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. காரணம் தற்போதைய தேர்தல் முறைப்படி ஒரு  வேட்பாளர் கூடுதலாக ஒரு ஓட்டு பெற்றாலும் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுவார். இப்படி ஒரு மாநிலம் முழுவதும் நடக்கும் போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகிறது. உதாரணமாக ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஒரு மாநிலத்தில் 10 சதவீத வாக்குவங்கி இருப்பதாக கணக்கில் கொண்டால் தற்போதைய பெரும்பான்மை முறையின் படி அவருக்கு குறைந்த பட்சம் ஒரு பிரதிநிதி கூட இல்லாமல் போகலாம். காரணம் பல இடங்களில் அந்த கட்சி குறைந்த வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்கும். ஆனால் இந்த முறையை மாற்றி விகிதாச்சார பிரதிநிதித்துவம் வரும் போது ஒவ்வொரு கட்சிக்கும் அவரவர்க்குரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதனால் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் அந்த கட்சிக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும். இந்த முறைப்படி ஒரு மாநிலத்தில் ஒரு கட்சி பெற்ற மொத்த ஓட்டுக்களின் அடிப்படையில் பதிவான வாக்குகளின் சதவீதம் கணக்கில் கொள்ளப்பட்டு குறிப்பிட்ட பிரதிநிதித்துவம் அவர்களுக்கு ஒதுக்கப்படும். மேலும் தற்போதைய தேர்தல் முறையில் கட்சிகளே பணத்தை வாரி இறைக்கின்றன. சில சமயம் பண பலம் உள்ள வேட்பாளர் வெற்றி பெறுகிறார். தேர்தலை சிறந்த முதலீடாக கருதும் அவர் குறிப்பிட்ட ஐந்தாண்டுகளில் அதனை இரட்டிப்பாக திருப்பி எடுத்துக்கொள்கிறார். இதுவும் ஊழலுக்கு வழிவகுக்கிறது. இதனை மாற்றி அரசே தேர்தல் செலவினங்களை எடுத்துக்கொண்டால் இது பெருமளவில் குறையும். ஊழலையும் ஓரளவு குறைக்க முடியும். ஆக இன்றைய இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயகம் வலுவானதாக இருக்கும் அதே சமயத்தில் பலவீனமாகவும் இருக்கிறது. மேற்கண்ட சீர்திருத்தங்கள் நிகழும் போது இந்த நூற்றாண்டில் இந்திய ஜனநாயகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும். எல்லா அரசியல் கட்சிகளும் தங்களை சுயவிமர்சனம் செய்து கொண்டு தேர்தல் சீர்திருத்தங்களை செய்ய முயல வேண்டும்.



No comments: