காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்

காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்
காலத்தை முன்னுக்கு தள்ளுகிறேன்.சுதந்திர சிந்தனை வெளியில் சமரசமற்ற எழுத்துமுறை எனக்கானது -------- எச்.பீர்முஹம்மது

Monday, March 3, 2014

சிறுபான்மை என்னும் அடையாள அரசியல்




சிறுபான்மை (minority)என்ற சொல்லாடல் ஒரு தேசத்தில் அல்லது பிராந்தியத்தில் வசிக்கும்,  குறைந்த அளவில் திரட்சி உடைய ஓர் இனக்குழு தொகுதியை அல்லது குறிப்பிட்ட அடையாளம் சார்ந்த மக்களை குறிப்பதாகும். இந்த அடையாள அரசியல் காலங்காலமாக இருந்து வந்திருக்கிறது. இதன் பரிணாம வளர்ச்சியை ஆராய்வது அவசியமாகும்.

உலகில் இனக்குழுக்கள் பரிணாமம் அடைந்த காலம் முதல் இந்த சிறுபான்மை அடையாளமும் சேர்ந்து வந்திருக்கிறது. இனக்குழு சமூக நிலையில் அது எண்ணிக்கை மற்றும் உடல்ரீதியான பலம் ஆகியவற்றைக்கொண்டு  மதிப்பிடப்பட்டது. தங்களுக்குள் பல்வேறு காரணங்களுக்காக முரண்பட்டு சண்டையிட்டுக்கொண்ட இனக்குழுக்கள் மாறி மாறி தங்களை அழிக்கத்தொடங்கின. இந்த அழித்தல் அதன் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி பெற்ற நிலையிலும் தொடர்ந்தது. இந்த இனக்குழு பரிணாமம் உலகம் முழுக்கவே வியாபித்திருக்கிறது. இந்தியாவில் இம்மாதிரியான இனக்குழுக்கள் பரிணாமம் அடைந்த நிலை தான் சாதிகளின் தோற்றம். சாதியம் இந்திய இனக்குழு சமூக கட்டமைப்பின் பரிணாமமே. இன்றைய இந்தியாவில் பல்லாயிரம் சாதிகள், உட்சாதிகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான சாதிகள் குறிப்பிட்ட பகுதியை, பிரதேசத்தை உள்ளடக்கியவை. அவற்றை தாண்டி வேறெங்கும் நாம் அந்த சாதிகளை பார்க்க முடியாது. நிறங்களோடு இணைந்த இனக்குழு கட்டமைப்பைக் கொண்ட ஆப்ரிக்காவில் கருப்பு நிறத்தோலை உடைய கருப்பர்கள் தங்களை தனி அடையாளமாக காண்கின்றனர். இந்த அடையாளம் அவர்களை வெள்ளைத்தோல் வர்க்கத்திடம் இருந்து காலங்காலமாக விலக்கி வைத்தது. கருப்புத்தோலை கொண்ட இனம் தான் உலகின் ஆதி இனம் என அறியப்படுகிறது. இந்த விலக்கல் முறை அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியில் உருவாகி இருக்க வேண்டும்.

வரலாற்றில் இனக்குழு மோதல்கள் எப்போதும் நடைபெற்று வந்திருக்கின்றன. இது அரசு உருவாகிய காலத்தில் அரசுகளின் மோதலாக வெளிப்பட்டது. குறுநில மன்னர்கள் மற்றும் நிலபிரபுக்கள் மோதிக்கொண்டார்கள். அவர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டன. இம்மாதிரியான சமூக சூழலில் எண்ணிக்கை என்பதை விட பலமே பெரும்பான்மை என்பதை தீர்மானித்தது. நிலபிரபுத்துவத்தின் ஒடுக்குமுறை என்பது பலத்தின் அடிப்படையில் தான். அடிமை சமூகம்  என்பது இதன் தொடர்ச்சி தான். பல நூற்றாண்டு காலமாக ஐரோப்பாவில் நடந்த விவசாய போராட்டங்கள் இனங்களிடையே பலத்தை தீர்மானிக்கும் ஒன்றாக இருந்தன. இதனடிப்படையில் காலப்போக்கில் இனங்களிடையே இயக்கவியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. இன அழிப்பு பரவலானது. பலம் பொருந்திய ரோமானிய அரசை கூட பலவீனமான ஜெர்மானியர்கள் வென்றனர். இந்தியாவில் ஆரிய- திராவிட முரண்கள் வழக்கில் இருந்தன.

இந்தியாவை பொறுத்தவரை யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் பார்சி ஆகிய மதங்கள் உள்நுழைந்தவை ஆகும். இவை எல்லாம் குறிப்பிட்ட நூற்றாண்டுகளில் இந்திய சாதிய சமூகங்களிடையே பெருந்தாக்கம் செலுத்தின. இதனிடையே சமணம் மற்றும் பௌத்தம் ஆகியவை இந்தியாவில் வைதீக சமயத்தவரால் அழிக்கப்பட்டன. பெருஞ் சமயங்களான சைவம் மற்றும் வைணவம் ஆகியவை தங்களுக்குள் முரண்பட்டுக்கொண்டன. இந்த முரண்பாட்டில், மோதல்களில் தங்களுக்கான சரியான வேர்களை, அடையாளங்களை தேட விரும்பிய நாட்டார் மரபினர் தங்களை இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்தோடு இணைத்துக்கொண்டனர். இந்தியாவில் கிறிஸ்தவம் மற்றும் யூதம் ஆகியவை பரவியதன் அடிப்படை வரலாறு இது தான். மேலும் ஆட்சியாளர்களின் மதம் எதுவென்று கண்டறிந்து அதனடிப்படையில் தங்களை அம்மதத்தோடு அடையாளப்படுத்திக்கொண்ட, தழுவிக்கொண்ட சமூக போக்கும் இந்தியாவில் இருந்தது. இந்தியாவில் சிதறிக்கிடந்த, பரவலாக இருந்த சாதிகளிடையே இந்த போக்கு அதிகமாக காணப்பட்டது. மேலும் சாதிய சமூகத்தின் விளிம்பு நிலையில் இருந்தவர்கள், பழங்குடியினர் ஆகியோர் தங்களை மண் மற்றும் பிறப்பு சார்ந்த கறைகளிலிருந்து விடுவித்துக்கொள்ள இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவத்திற்கு தங்களை மாற்றிக்கொண்டனர்.  இது பிரிட்டிஷார் காலம் வரை தொடர்ந்தது.


பிரிட்டிஷ் காலனிய ஆட்சிமுறை வெறும் ஆட்சியாக மட்டுமே இருக்கவில்லை. அது சமூக சீர்திருத்தமாக, சமூக முரண்களை Fine tuning செய்யும் ஒன்றாகவும் இருந்தது. குறிப்பாக சிதறிக்கிடந்த சாதிய வழிபாட்டு மக்களை ஒன்றிணைத்து இந்து என்ற ஒரே அடையாளத்தை கொடுத்தது. அது வரை செமிடிக் மதங்களை பின்பற்றிய மக்கள் வேலியற்று இருந்த போதும், அவர்களுக்குள் வேலிகளை ஏற்படுத்தி, முற்றிலுமான தீவுக்கூட்டத்தை உருவாக்கியது. இவை அனைத்தும் பிரிட்டனின் காலனியாதிக்க நுண்ணரசியல். ராஜாராம் மோகன்ராய் , தயானந்த சரஸ்வதி போன்றவர்களின் சீர்திருத்த இயக்கம், மத ஒருங்கிணைப்பு இயக்கம் இவற்றின் தொடர்ச்சியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வீரசாவர்க்கர் முதன்முதலாக இந்துத்துவத்தை முன்வைக்கிறார். இதன் பின்னர் இந்து - முஸ்லிம் அடையாள பிளவும், சமூகப்பிளவும் உயிர்பெறத்தொடங்கியது. இதன் தொடர்ச்சியில் சமூக காரணங்களுக்காக முஸ்லிம்கள் மத்தியில் நாங்கள் ஆண்ட பரம்பரை என்ற சிந்தனை வலுப்பெற்று பாகிஸ்தான் என்ற தனிநாடு கோரிக்கையும் எழுந்தது.
இந்திய சுதந்திரத்தின் பிரிவினை தருணம் மிக அகோரமானது. மிகப்பெரும் வரலாற்றுக்கறை. இருதரப்பிலும் நடந்த வன்முறைகளால் ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டனர். லட்சகணக்கில் மக்கள் அங்கும் இங்குமாக புலம்பெயர்ந்தனர். இன்னும் உருவாகாத ஒரு நாட்டிற்காக தேசிய இன சுய நிர்ணயத்தை தாண்டி வெறும் மத அடிப்படையில் இந்தியா பிளவுபட்டது. வடக்கிலும், தெற்கிலும் எஞ்சியிருந்த  முஸ்லிம் மக்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக மாறினர். இதன் பின்னரும் இரு தரப்பிலும் உராய்வுகள் அதிகப்பட்டன. வகுப்புவாத சிந்தனையைக்கொண்ட இந்துத்துவ சக்திகள் தற்போது பெரும்பான்மை அடையாளத்தை வைத்துக்கொண்டு சிறுபான்மை முஸ்லிம்கள் மீது வகுப்பு உணர்வை தூண்டும் விதத்தில் பலமுறை நட்ந்து கொண்டன. குஜராத் கலவரம் அதற்கு பெரும் சான்று.

ஒரு நாட்டில் அல்லது பிரதேசத்தில்  வாழும் சிறுபான்மையினர் மற்றும் விளிம்பு நிலை மக்களின் துயரங்களை, வலிகளை, ஒடுக்குமுறைகளை அவர்களின் பக்கமாக நின்று அதை பிரதிபலிப்பது என்பது ஜனநாயக , முற்போக்கு சக்திகளின் கடமை. அதன் முற்போக்குத்தன்மையான, புரட்சிகரமான சிந்தனை முறை என்பது சிறுபான்மையினர் ஆதரவு அரசியலாக தான் இருக்க முடியும். இதன் அடிப்படையில் இந்தியாவில் பிரச்சினைகளின் அடிப்படையில் சிறுபான்மை முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் பக்கம் நிற்கும் இடதுசாரிகள் மற்றும் பிற மத சார்பற்ற அமைப்புகள் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் சிறுபான்மை இந்து மற்றும் பௌத்தர்கள் பக்கம் நிற்கின்றனர். இது ஒருவகையில் புவி அரசியல் கூட. இந்த வகைமாதிரிக்குள் நின்று கொண்டு தான் இந்தியாவில் நாம் சிறுபான்மை அரசிய்லையும், அதன் விவகாரங்களையும் கவனிக்க வேண்டும்.

No comments: